மறைந்த தோழர் பாலகோபாலைப் பற்றி நவம்பர் இதழிலும், வேலிறையன் கட்டுரை திசம்பர் இதழிலும் படித்தேன். அக்கட்டுரையையொட்டி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் கண்ணோட்டம் பற்றி Ram_001எழுதியுள்ளேன். கருத்துப் பரிமாற்றம் நடந்து தெளிவு பிறக்கட்டுமே.

“ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கங்களை எழுப்புவது கடினமானது அல்ல் நம் சொந்த ஊரில் நடைபெறும் தீமைகளை எதிர்த்துப் போராடுவதுதான் கடினமானது” என்று எழுதியுள்ளார் 20ஆம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளரும் எத்தாளருமான ழான் பவுல் சார்த்தர். அவர் கூறியது போல் தமிழ்நாட்டில் சிலர் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுவர்; பிரிட்டிஷ் பிரதமர் கோர்டான் பிரௌனுக்குச் சவால் விடுவர்; ஆனால் தமிழகத்தில் நிலவும் சர்ச்சைக்குரிய விசயங்களைப் பற்றி பேசாமல் ஒதுங்கி தமக்குப் பாதுகாப்பைத் தேடும் மனோபாவம் கொண்டுள்ளனர். அதனால் அடியேன் தற்போதுள்ள தலைவர்களும், பிரபல எழுத்தாளர்களும் பேசாப் பொருளைப் பற்றி எழுதத் துணிந்துள்ளேன். (அந்தநாள் தலைவர்கள் பேசியுள்ளனர்)

பல்லாண்டு, பல்லாண்டுகளாகத் தமிழ்நாட்டில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற கருத்தோட்டம் நிலவி வருகிறது. பார்ப்பனிய மனப்பான்மையே இல்லை என்பது உண்மையல்ல. இன்றும், சில பார்ப்பனர்கள் தனியாகப் பேசும் போது “வர்ணாச்ரம தர்மத்தை நாம் கைவிட்டதால்தான் நாடு நாசமாப் போச்சு; நாம் பிராமணாள்தான் உயர்ந்தவா” என்றே பேசுகின்றனர். பார்ப்பனரல்லாதாரில் சிலரும் “முற்போக்கு வாதியாக இருந்தாலும் பார்ப்பனராகப் பிறந்தோரைச் சேர்க்காதே உடம்பிலே ப+ணூல் இல்லை என்றாலும் அவன் நரம்பெல்லாம் ப+ணூல்தான்” என்று கூறுகின்றனர்.

இவ்வித இரண்டு மனப்பான்மைகளும் தவறானவை. தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்தை முன்னிட்டு இவ்விரு சாராரும் தங்களுடைய தவறான கண்ணோட்டத்தைக் கைவிட்டுத் தமிழ், தமிழ்நாடு முன்னேற்றத் திற்கு ஒருங்கிணைந்து பாடுபட முன்வர வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை.

பார்ப்பனரல்லாதார் வெகுண்டு எழுந்ததற்கு வர்ண வேறுபாடும், மனு நீதியும், பார்ப்பனர் ஆதிக்கமும்தான் காரணி என்பதைப் பார்ப்பனர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அன்று சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர்கட்குத் தனி சாப்பாட்டு அறை என ஒதுக்கியதே பெரியார் வெகுண்டு எழுந்ததற்குக் காரணம்.

“தேசாபிமானிகளென்றும், தேசத் தலைவர்கள் என்றும் சொல்லப்படும் பிராமணர்களிற் சிலர் தமது பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும், நடத்தைகளிலும், பிராமணர் - பிராமணரல்லாதார் சண்டைகள் இங்கு இல்லாதது போலக் காட்டிக் கொண்டு வருகின்றனர். இவர்கள் இவ்வாறு செய்வதின் நோக்கம் இவர் ஜாதியருக்கும், மற்ற ஜாதியருக்கும் உள்ள சண்டைகளைப் பிற மாகாண தேசாபிமானிகளும், தேசத் தலைவர்களும் அறிவார்களாயின் நம்மை மதிக்க மாட்டார்கள் என்ற நினைப்போ அல்லது அச்சண்டைக்குரிய காரணங்களை விசாரித்து நீக்கத் தலைப்படுவார்களாயின் தம் ஜாதியார்களே இச்சண்டைகளுக்குக் காரணஸ்தர்கள் என்பதை அறிந்து கொள்வார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை. இவர் நோக்கம் ஏதாயினும் ஆகுக. நமது தேச ஒற்றுமைக்கு ஒரு பெரு நோயாய்த் தோன்றியுள்ள பிராமணர் - பிராமணரல்லாதார் சண்டைகளை ஒழிப்பதற்குரிய வழிகளை நாம் சிந்திப்போமாக” என்று 05.11.1927 இலேயே கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சி பேசியுள்ளார். அவருடைய கருத்துப்படி பெருநோயாய்த் தோன்றியுள்ள பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் சண்டைகளை ஒழிப்பதற்குரிய வழிகளை நாம் சிந்திப்போம்.

“எனது சுயமரியாதைத் திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து என்னவென்றால் ஒரு பார்ப்பான் கூட “மேல் சாதி”யான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தவிர பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. மேல்ஜாதித் தன்மை மனித சமுதாயத்திற்குக் கேடானதாகும், குற்றமுடையதாகும்”; என்றே பெரியாரும் 09.11.1946 குடியரசு இதழில் எழுதியுள்ளார்.

06.01.1953இல் மயிலாப்ப+ர் இளைஞர் சங்கம் என்ற பார்ப்பனர் அதிகம் சார்ந்த அரங்கத்திலேயே “பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவும் இல்லை. தவிரவும் பிராமணர்கட்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை. அவர்கள் அனுசரிக்கும் சில பழக்க வழக்கங்களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்வது பிரமாதமான காரியம் அல்ல. ஆகவே பேதங்கள் மாறி நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற் காகத்தான் பாடுபடுகிறேன். நம்மிடையே பேத உணர்ச்சி வளரக்கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு” என்றே பெரியார் பேசியுள்ளார். பார்ப்பனர்களைப் பிராமணர் என்று அழைக்கக் கூடாது என்று கூறிய பெரியாரே மயிலாப்ப+ர் இளைஞர் சங்கத்தில் “பிராமணர்” என்றே பேசியுள்ளார். பெரியாரின் அப்பேச்சுகட்குப் பார்ப்பனர்கள் செவி சாய்க்காமல் நடந்ததால்தான் பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி வளர்ந்தது. இப்போதாவது பார்ப்பனர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பேதம் வளரக் கூடாது என்றே நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளையவர்களும் 1945இல் கவிஞன் குரல் என்னும் நூலில் “பிராமணர் - பிராமணரல்லாதார்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களும் தமது இறுதிக் கட்டுரையில் (செந்தமிழ்ச் செல்வி, டிசம்பர் 1980) “நக்கீரர், பரிதிமாற் கலைஞர், ஸ்ரீநிவாச ஐயங்கார், கிருட்டிணசாமி ஐயங்கார் முதலிய பிராமணர் பலர் வையாபுரி பிள்ளையினும் தெ.பொ.மீ.யினும் சிறந்த தமிழரே. ஆதலால் இனிமேல் பிராமணர் அனைவரும் பிணக்கின்றித் தமிழரோடு பிணைந்து வாழ்ந்து தமிழ்நாட்டரசிலும் தலைமை தாங்கித் தமிழையே பேணித் தமிழராகவே விளங்குவாராக” என்றே எழுதியுள்ளார்.

பாவாணர் பகன்றது போல் பார்ப்பனர்களும் தமிழரோடு பிணைந்து வாழ்ந்து தமிழையே பேணித் தமிழராகவே விளங்குவாராக.

பிரபல எழுத்தாளர் அமரர் வல்லிக் கண்ணன் அவர்களும் தமது நண்பர்க்கு எழுதிய இறுதிக் கடிதத்தில் எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களைத் தாக்கி எழுதும் போக்கைக் கண்டித்தே எழுதியுள்ளார். (ஆதாரம் - தாமரை இதழ்)

மூத்த பொதுவுடைமைத் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களும். “எல்லாப் பிராமணர்களும் மோசம் என்று பேசுவது சரியல்ல” என்றே பேசியுள்ளார். (18.1.2003இல் சென்னை வள்ளலார் பேரவை சார்பில் நடைபெற்ற காஞ்சிமட எதிர்ப்பு மாநாட்டில்)

மார்க்சிய சிந்தனையாளர் கோவை ஞானி அவர்களும் “பார்ப்பனர்கள் என்று சொல்லி எதிரணிக்குத் தள்ளி எதிரியைப் பலப்படுத்துவதைக் காட்டிலும் ஆரோக்கியமான முறையில் விவாதிப்பதன் மூலம் அவர்களை நம் அணிக்குக் கொண்டு வருவதே மக்கள் விடுதலையை நம்பக் கூடியவர்கள் செய்கிற காரியமாக இருக்க முடியும். தி.சு. செல்லப்பா, க.நா.சு. வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி போன்றோர்களின் அனைத்துப் போக்கையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அவர்களும் தமிழ் இலக்கியக் கர்த்தாக்கள் தமிழ்த் திறனாய்வுப் பரப்புகளைப் பெருமளவு விரித்தவர்கள். இவர்களின் பங்களிப்புகளும் முக்கியமானவை. இவர்கள் பிறப்பால் பார்ப்பனர்களென்ற காரணத்தால் இவர்களை விமர்சிப்பது இலக்கிய விமர்சனங்களுக்குக் கேவலம் என்றே ஆகஸ்டு 1995 “சுபமங்களா” இதழ் நேர்காணலில் கூறியுள்ளார்.

அண்மையில் காலமான ஆந்திர மனித உரிமைச் சங்கத் தலைவர் கே. பாலகோபால் அவர்களும் “நானும் கூடப் பிறப்பால் பார்ப்பனர்தான். ஆனால் பார்ப்பனியத்துக்கு எதிராகப் போரிடும் உரிமை எனக்கு உண்டு என நினைப்பவன். இந்த உரிமையை நான் எடுத்துக் கொள்ளாவிட்டால் எனக்குரிய சமூகப் பங்கை, பணியை என்னால் நிறைவேற்ற முடியாது. இந்த உரிமை பார்ப்பனர்களுக்கு மறுக்கப்பட்டால் அது வேறொரு வகையில் சாதியமைப்பை நியாயப்படுத்துவதில்தான் முடியும்” என்று கூறியுள்ளார்.

இதே கருத்தைத்தான் நவம்பர் 2009 புகழ்ச்செல்வி என்ற இதழில் “பிராமணியத்தைப் பிராமணர்களே உடைக்க வேண்டும” என்று தமிழரசு என்பவரும் எழுதியுள்ளார்.

“பார்ப்பனர்களிலிருந்தும் சமூகப் புரட்சியாளர்கள் தோன்றுவார்கள் என்பதை மறுப்பது சமூக இயங்கியலுக்கு எதிரானது” என்ற கருத்தை டிசம்பர் 2009 சமூக நீதித் தமிழ்த்தேசம் இதழில் வேலிறையன் எழுதியுள்ளார்.

தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கும் சாதி ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடிய Srinivasarao.j_00பி.சீனிவாசராவ் முதல் சீகாகுளம் மலைவாழ் பழங்குடியினருடன் இணைந்து போராடி மடிந்த ஆதிபத்ல கைலாசம் வரை இந்தியாவின் மாபெரும் மார்க்சியச் சிந்தனையாளர் டி.டி.கோசம்பி முதல் தமிழகத்தில் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பிய பொதுவுடைமைத் தொழிற் சங்கத் தலைவர் ஏ.எஸ்.கே. வரை பார்ப்பனர்கள் பலர் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தையும், பார்ப்பனியத்தையும் எதிர்ப்பதில் யாருக்கும் சளைத்தவர்களாக இருக்கவில்லை. இந்தியாவில் வைதீகப் பார்ப்பனத் தத்துவத்திற்கு எதிராக நாத்திகத்தையும், பொருள்முதல்வாதக் கருத்துக்களையும் பரப்பி வந்த பார்ப்பனர்களும் இருந்தனர். பார்ப்பனீயத்திற்கு எதிராகப் போராடும் உரிமை பார்ப்பனராய் பிறந்து விட்டவர்களுக்கும் உண்டு என்பதை அம்பேத்கரும் வலியுறுத்தியுள்ளார். அம்பேத்கரோடு சேர்ந்து மனு சாத்திரத்தைத் தீயிட்டுக் கொளுத்தியவர் சகஸ்ர புத்தே என்ற பார்ப்பனர். பார்ப்பனியம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற உணர்வின் மறுப்பு என்பதாகும் என்றே அம்பேத்;கர் கூறியுள்ளார்.

“பிறப்பால் பார்ப்பனர் என்ற காரணத்திற்காக வருணாசிரம அதர்மத்தை அழிக்கும் போராட்டத்தில் முற்போக்கு உள்ளங் கொண்ட பிராமணர்களைச் சேர்க்காமல் விடக் கூடாது. பிராமணர்கள் உள்ளிட்ட உயர் சாதியினரில் உள்ள முற்போக்கு உள்ளங்களை யும் இணைத்துக் கொண்டால் தான் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் வெற்றி பெற முடியும்” என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தலைவர் அருணன் அவர்களும் மே 2007 ‘செம்மலரில்’ கூறியுள்ளார்.

தமிழகத்தில் பேதங்கள் நீங்க ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் வாழ்;ந்து தமிழை வளர்க்கும் போராட்டத்தில் பார்ப்பனர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடையவர்களின் கருத்துக்களைக் கண்டோம். இனி தற்காலத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் மேல்ஜாதித் தன்மையை விடுத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் வழியில் நடந்து தமிழ், தமிழ்நாட்டு வளர்ச்சியில் பங்குபெற வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறேன்.

பண்டைக்கால வாழ்க்கை முறை இன்று இல்லை. காலத்தால் பழக்க வழக்கங்களும் பண்புகளும் வாழ்க்கை முறைகளும் மாறுபட்டு வருகின்றன. முதுகுடுமி மாறி புதிய கிராப் வைத்துள்ளீர். பஞ்சகச்சம் விடுத்து வட்டுடை அணிந்துள்ளீர். அன்றைக்கிருந்த வர்ணாசிரம முறை இன்றைக்கு நடைமுறையில் இல்லை. குடுமியின்றி கிராப் வைத்து வட்டுடை(Pயவெ) அணிந்து மாறி இருக்கும் நீங்கள் உங்கள் பழைய மனப்பான்மையிலிருந்தும் மாறுங்கள். வர்ணாசிரம முறைதான் சிறந்தது என்று எண்ணாதீர். புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றிய குலம், அதனால் உயர்ந்தவன் என்று ஆணவ எண்ணம் கொள்ளாதீர். சமத்துவ சமுதாயம் அமைய ஒத்துழைப்பு நல்குவீர். வர்ணரீதியான பிராமணரை ‘சோ’ தன் கற்பனைக் கதையில்தான் கொண்டுவர முடியும்.

சில தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தாங்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்றும், தங்களுக்குத் தாய்மொழி சமஸ்கிருதம் என்றும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். எல்லா பிராமணர்களும் ஆரியர்கள் அல்லர் என்பதை உணருங்கள். ஆரிய இனத்தில் பிராமணர்கள் இருந்தது போல் தமிழனத்திலும் பார்ப்பனர்கள் இருந்துள்ளனர். ஆரியப் பார்ப்பனர் வேறு, தமிழ்ப் பார்ப்பனர் வேறு என்றே தேவநேயப் பாவாணரும் “பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்” என்ற நூலில் எழுதியுள்ளார். ஆய்வாளர் இரா. மதிவாணன் எம்.ஏ.பி.எட் என்பவர் ‘சாதிகளின் பொய்த் தோற்றம’; என்ற தம் நூலில் அறக்களத்து அந்தணர் என்பது தமிழ்ப் பார்ப்பார்க்குரிய சிறப்புப் பெயர் என்றே எழுதியுள்ளார். சங்க காலத்திலேயே ஏறத்தாழ 25 பார்ப்பனப் புலவர்கள் இருந்ததாகப் பேராசிரியர் மா. ராசமாணிக்கனார் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். உங்கள் முன்னோர்களில் பலர் (பி.டி. சீனிவாச ஐயங்கார், இராமச்சந்திர தீட்சிதர், பரிதிமாற் கலைஞர், உ.வே.சா., வ.ரா, பாரதியார், பி. ராமமூர்த்தி, ஏ. பாலசுப்பிரமணியன் போன்றோர்) தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பாடுபட்டுள்ளனர் என்பதை உணர்ந்து நீங்களும் தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் பணிபுரியச் சூளுரைத்துச் செயல்படுங்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாகவும், கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாகவும், நீpதிமன்றங்களில் வழங்கு மொழியாகவும், கோவில்களில் வழிபாட்டு மொழியாகவும் தமிழ் வளர்வதற்கு ஆதரவு அளியுங்கள்.

தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு நாளாகவும், தமிழர் திருநாளாகவும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டுவந்ததை எதிர்க்காமல் ஆதரித்தது போல், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தையும் எதிர்க்காதீர். கைம்பெண்கள் திருமணம், காதல், கலப்புத் திருமணங்களை எதிர்க்காதீர்.

காலங்காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரிவினர் கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னேறுவதற்கு வாய்ப்பாக இடஒதுக்கீடு செய்வது இன்றைய தர்மம் என்பதை உணர்ந்து அச்செயல்களை மனதார ஆதரியுங்கள்.

ஈழப் பார்ப்பனர்கள் தங்களை ஈழத் தமிழர்கள் என்றே கருதுவர். அது போல் தாய்த் தமிழகத்தில் வாழும் நீங்களும், உங்களைத் தமிழ்ப் பார்ப்பனர்கள் என்று உணருங்கள்.

பார்ப்பனர்களிலும், ஜாபாலி, கோரா, ஏ.எஸ்.கே.பி. ராமமூர்த்தி, ஆந்திர பாலகோபால், நோபல் பரிசு பெற்ற சென்னை சந்திரசேகர், மணலூர் மணியம்மை, எம்.பி.சீனிவாசன் (இசை), என்.கே. கிருஷ்ணன், டி.ஆர். விசுவநாதன் போன்ற பல பகுத்தறி வாளர்கள் வாழ்ந்துள்ளனர். இன்றும் மூத்த தோழர் சி.எஸ். சுப்பிரமணியம், எஸ்.என். நாகராஜன், வ.கீதா, ச.சீ.ராஜகோபால், சின்னக் குத்தூசி, தீம் திரிகிட ஞாநி, சுதாங்கன் போன்ற பகுத்தறிவாளர்கள் உள்ளனர். இவர்களைப் போல் இறை மறுப்பாளர்களாக இல்லாவிடினும் வ.ரா.அ.மாதவய்யா போன்ற பொதுநல முற்போக்கு சிந்தனையாளராக வாழ முயற்சி செய்யுங்கள். புரட்சிகரச் சிந்தனைகள் மலரவும், தமிழ்த்தேசிய உணர்வு வளரவும் அனைவரும் சிந்திப்போம், செயல்படுவோம்.

-நா.திருமலை

.