gautam navlakha and Anand Teltumbteஏப்ரல் 14 - உலகம் முழுவதும் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி அவரின் சிந்தனைகளை உயர்த்தி பிடித்துக்கொண்டிருந்த அதேவேளையில் இந்தியாவில் அம்பேத்கரின் பேரனும் (Grandson-in-law) தலித் ஆராய்ச்சியாளருமான திரு.ஆனந்த் டெல்டும்டே பீமா கொரேகன் வழக்கு எனப்படும் பொய் வழக்கின் கீழ் உச்சநீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்டு தேசிய புலனாய்வு முகமையிடம் (National Investigation Agency) சரணடைந்தார். அவர் மட்டுமல்ல அவருடன் சேர்த்து மனித உரிமைப்போராளியான திரு.கௌதம் நவ்லாகா அவர்களும் NIA- விடம் சரணடைந்தார். சமூகத்தின் அடித்தட்டு, விளிம்புநிலை மக்களுக்காக போராடும் அறிவுசீவிகள் கைது செய்யப்பட்ட இந்நிகழ்வு இந்தியாவின் "தேசிய அவமானமாக " (National Shame) உலக நாடுகளால் பார்க்கப்பட்டது.

ஏற்கனவே இந்த பீமா கொரேகன் வழக்கில் இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் 9 பேர் கடந்த 2018 ஆம் ஆண்டே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்படத்தக்கதாகும்.

அறிவற்றவர்களின் ஆட்சியில் அறிவுசீவிகள் ஒடுக்கப்படுவதும்; முட்டாள்களின் ஆட்சியில் படித்தவர்கள் நசுக்கப்படுவதும் உலகம் முழுக்க நடக்கிற நிகழ்வாகவே உள்ளது. அதிலும் இந்தியாவில் அறிவற்ற முட்டாள்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் வேளையில் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

மோடி அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து அரசுக்கு எதிராக சனநாயக வழியில் குரல் எழுப்பி மக்களை ஒன்றுதிரட்டி போராடும் சமூகப் போராளிகளையும்; மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளையும், திட்டங்களையும் மக்களிடம் அம்பலப்படுத்தி அரசுக்கு அழுத்தத்தை ஏற்ப்படுத்தும் அறிவுசீவிகள் மட்டத்திலான ஆட்களையும் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வைத்திருக்கவே முயல்கிறது.

அந்த வகையில் இந்தியாவின் முக்கியமான அறிவுசீவிகள் பலரையும் கடந்த 2018 சனவரி 1 அன்று பீமா கொரேகனில் தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்முறையை அடுத்து பல்வேறு பொய் வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

”பீமா கொரோகன்” மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு சிறு கிராமம் ஆகும். 1 சனவரி 1818 ஆம் ஆண்டு இந்த இடத்தில் தான் வெறும் 800 மகர்கள் மற்றும் பழங்குடியின (MAHAR-DALITS) படை வீரர்களை கொண்ட பிரிட்டிஷ் படையணியானது, 20,000 க்கும் மேற்பட்ட படைவீரர்களை கொண்ட மராட்டிய - பேஷ்வா படையிணை எதிர்த்து தீரமிக்க போரினை நடத்தி வெற்றி பெற்றனர். இந்த போரில் இறந்த மகர் படைவீரர்களை கௌரவிக்கும் விதமாக பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கு ஒரு நினைவுத்தூணை (VIJAY STAMBH) நிறுவியது. தங்களை ஆண்டாண்டு காலமாக சாதிய அடிப்படையில் அடக்கி ஒடுக்கிய பார்ப்பனிய – பேஷ்வா படையணியை எதிர்த்து ”மகர்கள்” பெற்ற இந்த வெற்றியானது பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வெற்றியாகவே வரலாற்றில் நினைவுகூறப்பட்டு வருகிறது. 1928 ஆம் ஆண்டு முதன்முதலில் டாக்டர்.அம்பேத்கர் பீமா கொரேகனில் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்தார். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் சனவரி 1 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான தலித்துகள், பழங்குடிகள், கிருத்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பீமா கொரோகனில் ஒன்றுகூடி பார்பனிய-பேஷ்வா சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து வெற்றி பெற்ற நிகழ்வை நினைவுகூர்ந்தும், அப்போரில் இறந்தவர்ளுக்கு நினைவஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்நிகழ்வின் 200 ஆவது ஆண்டு விழாவாகும். இதனையொட்டி பீமா கொரோகனில் பல்லாயிரக் கணக்காணோர் கலந்து கொள்ளும் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் திட்டமிட்டு இந்துத்துவ வெறியர்கள் ஏற்படுத்திய கலவரத்தில் பல நூறு பேர் படுகாயமும் ஒருவர் உயிரிழக்கவும் நேரிட்டது.

இவ்வாறு பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்வில் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்திய இந்துத்துவவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அன்றைக்கு மகாராஷ்டிரத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தேவிந்திரபட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் பக்கமே வழக்கு நடவடிக்கையினை திருப்பி விட்டது. அரசின் கூற்றுப்படி சனவரி 1,2018 அன்று பீமா கொரோகனில் நிகழ்ந்த வன்முறைக்கு காரணம் அதற்கு முந்தய நாள் 31/12/2017 அன்று புனே, ஷானிவர் வடே (shaniwarwade, pune) என்னுமிடத்தில் நடந்த கருத்தரங்கமும் (கருத்தரங்க தலைப்பு – Elgar Parishad) அதில் பேசப்பட்ட வன்முறையை தூண்டும் கருத்துக்களும் தான் என்ற அடிப்படையில் அந்த கருத்தரங்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள்; பங்கேற்றவர்கள் சிலரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது (FIR NO: 4/2018). இதில் குற்றம் சாட்டபட்டவர்களிடம் நடத்திய விசாரனை மற்றும் அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியாவின் பல்வேற் நகரங்களில் வசிக்கும் முக்கியமான அறிவுசீவிகளான,

 1) வரவரராவ்-ஹைதராபாத் (VARA VARA RAO - HYDERABAD)

 2) அருண் பெரிஃரா- தானே (ARUN FERRIERA - THANE)

 3) வெர்ணன் கான்சல்வ்ஸ்-மும்பை (VERNON GONSALVES-MUMBAI)

 4) சுதா பரத்வாஜ்-ஃபரிதாபாத் (SUDHA BHARADWAJ - FARIDABAD)

 5) கவுதம் நவ்லாகா -டெல்லி (GAUTAM NAVLAKHA-DELHI)

ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் அதில் கைப்பற்றப்பட்ட கணிணிகள், கடிதங்கள், அடிப்படையில் இவர்களுக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு [communist party of india (maoist)] இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் இவர்கள் அனைவரும் சேர்ந்து பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுருப்பதாக எந்தவித ஆதாரமும் அற்ற ஒரு பொய் குற்றச்சாட்டினை தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான BJP அரசாங்கம் கூறியது. இந்த குற்றச்சாட்டின் மீதான நடவடிக்கையாகவே இன்றைக்கு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவர் மீதும் இந்தியாவின் மோசமான கருப்புசட்டமான உஃபா(unlawful activities(prevention) act) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கானது தேசிய புலனாய்வு முகமையால் (NIA) விசாரிக்கப்பட்டு வருகிறது.

எந்தவித அடிப்படை ஆதாரமும் அற்ற இந்த வழக்கின் விபரங்களை ஆராயும் போது அரசு திட்டமிட்டு இவர்கள் அனைவர் மீதும் பொய் வழக்கு புனைந்திருப்பதும்; மோடி அரசு தனது இந்துத்துவ அரசியலுக்கு எதிரான அரசியல் பார்வை கொண்ட அறிஞர்களையும், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக போராடும் சமுக போராளிகளையும் ஒடுக்கும் விதமாகவும்; அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் இந்த வழக்கினை பயன்படுத்தியுள்ளதும் தெரியவரும்.

முதலில் இந்த வழக்கில் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட 5 பேரும் இந்தியாவின் முக்கியமான, மனித உரிமை தளத்தில் செயல்படக்கூடிய செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் ஆவர். முக்கியமாக இவர்கள் அனைவரும் இன்றைக்கு ஆட்சிப்பொறுப்பில் இருக்கிற இந்துத்துவ ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக தீவிரமான எதிர்கருத்துக்களை கொண்டிருந்தவர்கள் ஆவார்கள்.

1) வரவரராவ் - ஆங்கிலம் மற்றும் தெலுங்கு பேராசியர்; அரசியல் செயல்பாட்டாளர்; கவிஞர்.

2) அருண் பெரிஃரோ - வழக்கறிஞர்; மனித உரிமை செயல்பாட்டாளர்.

3) வெர்ணன் கான்சல்வ்ஸ் - மகராஷ்டிர கல்லூரியின் விரிவுரையாளர்; மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

4) சுதா பரத்வாஜ் - வழக்கறிஞர்; தேசிய சட்ட ‌பல்கலைக்கழகம் - டெல்லியின் ஆசிரியர் (NATIONAL LAW UNIVERSITY- DELHI)

5) கவுதம் நவ்லாகா - மனித உரிமை செயல்பாட்டாளர்; இதழியலாளர்(JOURNALIST); EPW - ன் ஆசிரியர் குழுவில் ஒருவர்.

இரண்டாவதாக பீமா கொரேகனில் சனவரி 1, 2018 அன்று நிகழ்ந்த வன்முறை தொடர்பாக முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR NO: 2/2018) அனிதா சவாலே (Anitha R Sawale) என்பவரால் புகார் கொடுக்கப்பட்டு பிம்ஃபிரி (PIMPRI POLICE STATION) காவல் நிலையத்தில் ஜனவரி 2, 2018 அன்று பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால் ஜனவரி 1 அன்று தலித்துகள் மீதான வன்முறையை பீமாகொரேகனில் வாள், இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயுதங்களுடன் வந்த கூட்டம் கட்டவிழ்த்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அனைவரும் காவி கொடிகளுடன் வந்த கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டதன் விளைவாகவே கலவரம் உருவானதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இக்கலவரத்திற்கான சதிசெயல் செய்த குற்றவாளிகள் என இருவரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR NO: 2/2018) பதிவு செய்துள்ளனர். அவர்கள்,

1) மிலாந்த் எக்போட் - தலைவர், இந்து பொது விழிப்புணர்வு குழு. (ACCUSED NO:1(A1))

MILAND EKBOTE -CHIEF, HINDU JANJAGARAN SAMITI.

2) சம்பாஜி ஃபிடே - தலைவர், சிவாஜிநகர் அறக்கட்டளை. (ACCUSED NO:2 (A2)).

SAMBHAJI BHIDE - HEAD, SHIVAJINAGAR PRATISHTHAN.

இவ்வாறு திட்டமிட்டு கலவரத்தை ஏற்ப்படுத்திய வலதுசாரி இந்துத்துவவாதிகள் மீது உஃபா (UAPA) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் படவில்லை. இவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (INDIAN PENAL CODE); ஆயுதங்கள் சட்டம் (ARMS ACT); மற்றும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைச்சட்டம்(SC/ST ATROCITIES ACT) போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் மிலாந்த் எக்போட் கைது செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள்ளாகவே பிணையில் விடுவிக்கப்பட்டார். சம்பாஜி பிஃடே இதுவரை கைது செய்யப்படவே இல்லை.

இவ்வாறு சனவரி 2, 2018 அன்றே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR NO: 2/2018) குற்றம் சாட்டப்பட்ட வலதுசாரி இந்துத்துவவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அன்றைய பா.ஜ.க தலைமையிலான மகராஷ்டிர அரசு மற்றொரு பொய் வழக்கினை தயார் செய்யும் பணியில் இறங்கியது. அதன்படி சனவரி 8, 2018 அன்று விசாரம்ஃபா காவல் நிலையத்தில் (VISHARAMBAGH POLICE STATION) திரு. துசார் ரமேஷ் தம்குடே (TUSHAR RAMESH DAMGUDE) அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை எண் 4/2018 (FIR NO: 4/2018) பதிவு செய்யப்பட்டது.

இந்த துசார் ரமேஷ் தம்குடே என்பவர் பீமா கொரேகன் வழக்கு தொடர்பாக ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ள திரு. சம்பாஜி ஃபிடே (A2 IN FIR NO: 2/2018) என்பவரை பின்பற்றுபவரும் அவருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பவரும் ஆவார். இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இந்த FIR NO: 4/2018 பதிவு செய்யப்பட்ட்து என்பது குறிப்படத்தக்கது ஆகும்.

இந்த துசார் ரமேஷ் தம்குடே கொடுத்த புகார் என்னவென்றால் 1 சனவரி 2018 அன்று பீமா கொரேகனில் நடந்த வன்முறைக்கு காரணம் அதற்கு முந்தைய நாள் அதாவது 31 டிசம்பர் 2017 அன்று புனேயில் சானிவர் வாடே (Shaniwar Wade, Pune) என்னுமிடத்தில் எல்கர் பரிசாட் (ELGAR PARISHAD) என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம் என்றும், அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் வன்முறையை தூண்டும் விதமான விஷம பேச்சுக்களை வன்முறைக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த கருத்தரங்கு இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கும் நோக்கத்துடன் மாவோயிஸ்டுகளின் ஆதரவுடனும் அவர்களின் நிதி பங்களிப்புடன் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த 31 டிசம்பர் 2017 அன்று புனேயில் நிகழ்ந்த" ELGAR PARISHAD" கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்கள் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி justice P.B. சாவந்த் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி Justice B.G. கோல்ஸ் பட்டீல் அவர்களும் ஆவர். இந்த நிகழ்விற்கான நிதி உதவி வேறு எங்கிருந்தும் பெறப்படவில்லை என்பதை அவர்களே தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த கருத்தரங்கின் நோக்கம் "இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும்; இந்தியாவையும் பாதுகாப்பது" என்றும் கூறியுள்ளனர்.

உண்மை நிலைமை இவ்வாறு இருக்க இந்த ELGAR PARISHAD கருத்தரங்கு இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கும் நோக்கத்துடனும் மாவோயிஸ்டுகளின் ஆதரவுடனும் அவர்களின் நிதி உதவியுடனும் நடத்தப்பட்டதாக பொய்யான தகவலின் அடிப்படையிலேயே இந்த புகார் (FIR NO: 4/2018) பதிவு செய்யப்பட்டது.

உண்மையிலேயே இந்தியாவின் சனநாயகக் கட்டமைப்பை சிதைப்பவர்கள் அதற்கு எதிரானவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியுடன் கலந்து கொண்ட பீமா கொரேகன் நிகழ்வில் ஆயுதங்களுடன் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு கலவரத்தை தூண்டிய இந்துத்துவ பயங்கரவாதிகளே ஆவர்.

மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், இந்தப்புகாருடன் சம்பந்தப்பட்ட (FIR NO: 4/2018) 31 டிசம்பர் 2017 அன்று புனேயில் நடைபெற்ற ELGAR PARISHAD கருத்தரங்கிலோ;1 சனவரி 2018 அன்று பீமா கொரேகனில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்விலோ மேற்குறிப்பிட்ட 5 நபர்களான வரவரராவ், அருண் பெரிரா, வெர்னண் கான்சல்வ்ஸ், சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லாகா ஆகியோர் யாருமே பங்கேற்கவில்லை என்பது குறிப்படத்தக்கதாகும். மேலும் இந்த FIR NO: 4/2018 -ல் இவர்கள் 5 பேர் பெயர்களுமே இல்லை என்பதும் முக்கியமானதாகும்‌.

இவ்வாறு சம்பந்தப்பட்ட‌ எந்த நிகழ்விலும் பங்கெடுக்காத; முதல் தகவல் அறிக்கையிலும் பெயர் இல்லாத நபர்களையே அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும்; இந்துத்துவ அரசுக்கு எதிரான தத்துவார்த்த எதிர்கருத்துக்களை ஒடுக்கும் விதமாகவும் இவர்கள் மீது உஃபா சட்டம் போன்ற கருப்பு சட்டங்களை போட்டும்; தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் ஈடுபடுத்தியும் இந்திய அரசு திட்டமிட்டு ஒடுக்கி வருகிறது.

இந்த வழக்கில் மற்றுமொரு முக்கியமான விசயம் என்னவென்றால், FIR NO: 4/2018 என்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட சமூகப்போராளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட கணிணி மற்றும் அதிலுள்ள மின்னனு கடிதங்களின் அடிப்படையிலேயே இவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக இவர்களின் கணிணியில் இருந்து கைப்பற்றப்பட்டதாக 13 கடிதங்கள் இதுவரை மகாராஷ்டிர போலீசாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா அரசின் ADDITIONAL DIRECTOR GENERAL OF POLICE (LAW AND ORDER) பரம்பீர் சிங் (PARAMBIR SINGH) 1 செப்டம்பர் 2018 அன்று NDTV நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது "இந்த கடிதங்களின் உண்மைத்தன்மையை இனிமேல் தான் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.

உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாத கடிதங்களை அடிப்படையாக வைத்தே இவர்கள் அனைவரும் மவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்து பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும்; இவர்கள் மாவோயிஸ்ட் தொடர்பாளர்கள் எனவும் திட்டமிட்ட பரப்புரை ஊடகங்களின் வழியே மகாராஷ்டிர காவல்துறை உயர் அதிகாரிகளாலயே பரப்பப்பட்டது; உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாத கடிதங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டு அரசின் பொய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன. மேலும் மின்னணு வடிவில் இருக்கும் எந்தக் கடிதத்திலும் கையொப்பமோ, தலைப்போ, E-Mail முகவரியோ கூட குறிப்பிடப்படவில்லை.

மேலும் ஊடகங்களில் போலீசாரால் வெளியிடப்பட்ட 13 கடிதங்களில் ஏழு கடிதங்கள் காம்ரேட்.பிரகாஷ் (COMRADE PRAKASH) என்பவராலோ அல்லது அவருக்கோ எழுதப்பட்டுள்ளது. 7 மார்ச் 2017 அன்று மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி அமர்வு நீதிமன்றம் (GADCHIROLI SEASIONS COURT) செசன்ஸ் வழக்கு எண் 13/2014-ல் வழங்கிய தீர்ப்பில் பேராசிரியர்G.N. சாய்பாபா என்பவர்தான் அவர் எழுதிய கடிதங்களில் காம்ரேட்.பிரகாஷ் என்ற புனைப் பெயரை பயன்படுத்தியதாக குறிப்பிட்டு அந்த வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்துள்ளது. அவர் மார்ச்சு 7 2017 முதல் நாக்பூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே தற்போது 2018ல் மகாராஷ்டிர மாநில போலீசார் வெளியிட்டுள்ள காம்ரேட்.பிரகாஷ் என்பவர் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ள கடிதங்கள் திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டவையே என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த விவரங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்ற நீதிபதி D.Y சந்திரசூட் 2018ஆம் ஆண்டு தான் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

2017இல் சிறை சென்றவர் எப்படி 2018 கடிதங்களை எழுதி இருக்க முடியும்? இதுவே இக்கடிதங்கள் அரசு மற்றும் போலீசாரால் திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டவை என்பதை காட்டுகின்றன.

இவ்வாறு பொய்யாக புனையப்பட்ட வழக்கின் அடிப்படையிலும் (FIR NO: 4/2018) ஜோடிக்கப்பட்ட மின்கடிதங்களின் அடிப்படையிலுமே இந்த தலைசிறந்த இடதுசாரி அறிவுசீவிகள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இறுதியாக இந்த வழக்கின்(FIR NO: 4/2018) குற்றப்பத்திரிகை நவம்பர் 2018 மற்றும் பிப்ரவரி 2019-ல் புனே போலிசாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப் பத்திரிக்கையில் 1) வரவரராவ் 2) அருண் பெரிஃரோ, 3)வெர்ணன் கான்சல்வ்ஸ் 4) சுதா பரத்வாஜ், 5) சுதிர் தவாலே 6) ரோனா வில்சன் 7) சுரேந்திர காட்லிங் 8) மகேஷ் ராவ்ட் 9) சோமா சென் உள்ளிட்ட இடதுசாரி செயல்பாட்டாளர்கள்‌மீதும் மற்றும் தலைமறைவு மாவோயிஸ்ட் தலைவர்கள் உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த புனே போலிசார் பதிவு செய்த குற்றப்பத்திரிக்கையிலும் கவுதம் நவ்லாகா மற்றும் ஆனந்த் டெல்டும்டே ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் 2019 நவம்பர் தேர்தலுக்கு பிறகு மகராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு பதவி விலகி உத்தவ் தாக்கரே தலைமையிலான (சிவசேனா - தேசியவாத காங்கரஸ் கூட்டணி) அரசு பதவியேற்றது. இந்தப்புதிய அரசு பதவியேற்றவுடன் பீமாகொரேகன் வழக்கு தொடர்பாகவும், அதில் காவல்துறையினரின் புலனாய்வு தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் அரசுதரப்பில் இருந்து எழுப்பப்பட்டன. மேலும் இவ்வழக்கில் விசாரணை நடத்தப்பட்ட விதம் குறித்தும் ஆராயப்போவதாக அறிவித்தது.

இதனால் பதறிப்போன மோடி அரசு அவசர அவசரமாக ஜனவரி 24 2020 இல் பீமாகோரேகான் வழக்கினை தேசிய புலனாய்வு முகமை (NIA) எடுத்து நடத்த உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த உத்தவ்தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசாங்கம் பின்னர் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தின் காரணமாக இதற்கு அனுமதி அளித்தது.

தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ஏற்கனவே சிறையில் உள்ள 9 செயல்பாட்டளர்கள் உட்பட கவுதம் நவ்லாகா மற்றும் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 11 பேர் மீது IPC மற்றும் UAPA சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஜோடிக்கப்பட்ட கடிதங்களில் காம்ரேட்.ஆனந்த் என்று பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் அந்த காம்ரேட்.ஆனந்த் என்று குறிப்பிடப்படுபவர் திரு.ஆனந்த் டெல்டும்டே தான் என்றும் குறிப்பிட்டு அவரை தற்போது தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. நம்பகத் தன்மையே இல்லாத கடிதங்களின் அடிப்படையிலும் வழக்கின் அடிப்படையிலுமே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்பிறகு 15 பிப்ரவரி 2020 அன்று ஆனந்த் டெல்டும்டே மற்றும் கௌதம் நாவ்லாகா மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் 16/3/2020 அன்று நிராகரிக்கப்பட்டு அவர்கள் தேசிய புலனாய்வு முகமையிடம் 3 வாரத்திற்குள் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா நோய்த்தொற்று சமயத்தில் தாங்கள் சரணடைந்து சிறைக்கு செல்வது ”தற்கொலைக்குச் சமமாகும்” என்று இவர்கள் தரப்பில் சரணடைய கேட்கப்பட்ட காலநீட்டிப்பும் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு அவர்கள் இருவரும் ஏப்ரல் 14 அன்று தேசிய புலனாய்வு முகமை இடம் சரணடைந்தனர்.

ஒட்டுமொத்தமாக இந்த வழக்கு நடவடிக்கைகளை ஆராயும்போது ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லாகா, வரவர ராவ் உட்பட இந்த 11 ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் மீதான குற்றச்சாட்டு எவ்வித முகாந்திரமும் மற்ற அரசியல் வெறுப்புணர்வு அடிப்படையிலும்; இந்துத்துவ கருத்துக்கு எதிர் கருத்து கொண்டு அடித்தட்டு ஏழை மக்களுக்காக போராடுகிற சமூகப் போராளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தவுமே திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தெரியவரும். இயல்பாகவே பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு உள்ள இடதுசாரிகள் வெறுப்பு மனநிலை மற்றும் எதிர்க்கருத்து கொண்டோரை ஒடுக்கும் பாசிச மனநிலை ஆகியவை இவ்வழக்கு நடவடிக்கையில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

 இத்தகைய ஓர் அரசியல் ஒடுக்குமுறையை நிகழ்த்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி தேர்ந்தெடுத்த நிகழ்வான பீமா கொரேகன் ஒன்றுகூடல் நிகழ்வு சங்பரிவாரத்தின் பார்ப்பனிய-சாதிய மனநிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பீமா கொரேகன் பார்ப்பனர்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான குறியீடு ஆகும்.இன்றைக்கு அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடிய மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களின் இலட்சியமே மனுதர்ம அடிப்படையிலான மராட்டிய பேஷ்வா ஆட்சியை மீள் கட்டமைப்பு செய்வதேயாகும்.இத்தகைய மனுதர்ம ஆட்சிக்கு எதிரான குறியீடான பீமா கோரேகான் நிகழ்வினை அரசியல் ஒடுக்குமுறைகள் தேர்ந்தெடுத்திருப்து பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மனுதர்ம மனோநிலையை எடுத்துக் காட்டுகிறது. இப்படி தான் பாபர் மசூதியை இடிப்பதற்காக அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பெர் 6 ஆம் தேதி தேர்ந்தெடுக்கபட்டது.

 ஒரு பக்கம் அம்பேத்கரின் படத்தை தூக்கி பிடித்துக்கொண்டு தலித்துகளின் ஓட்டுகளை கவர முயற்சிப்பதும் மறுபக்கம் அவர்கள் பங்குபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் சாதிய மனநிலையுடன் கலவரம் செய்து, அதில் பொய் வழக்கும் போட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதும் பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பலின் பாரம்பரிய இரட்டை நிலைப்பாட்டின் வெளிப்பாடாக உள்ளது.

இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையிலும் நீதித்துறையின் செயல்பாடு தான் மிகவும் வருத்தம் தரத்தக்க ஒன்றாக உள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு காவல்துறை ஒத்தழைப்பதும் தனக்கு எதிர் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் மீது அரசு திட்டமிட்ட ஒடுக்குமுறையை நிகழ்த்துவதும் இந்தியாவில் தினந்தோறும் நடைபெறும் நிகழ்வாகவே உள்ளது. ஆனால் இத்தகைய நிர்வாக சீர் கேடுகளை களைய வேண்டிய பெரிய பொறுப்பு நீதித்துறைக்கு தான் இருக்கிறது. இந்திய சனநாயகத்தின் உயரிய பண்பாக சுதந்திரமான நீதித்துறையே இன்றளவும் சுட்டிக்காட்ப்படுகிறது. ஆனால் இவ்வழக்கில் நீதித்துறை தனது சுயத்தை இழந்து அரசின் நோக்கங்களுக்கு எல்லாம் ஏற்ப செயல்படுவதாகவே செயல்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு இந்த வழக்கில் பொய்யான புகாரின் அடிப்படையில் செயல்பாட்டாளர்கள் வரவரராவ், கவுதம் நவ்லாகா உட்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட உடனேயே இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியான ரொமிலா தாப்பர் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் 5 பேர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அன்றைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அந்த மனுவினை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கல்வித்தகுதியும் அவர்களும் மனித உரிமை சார்ந்த செயல்பாடுகளும் நீதிமன்றத்திற்கு தெரியாமல் இல்லை.

அருண் பெரிரா மீது ஏற்கனவே போடப்பட்ட 11 வழக்குகளிலுமே இவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார், வரவரராவ் மீதான 20 வழக்குகளிலுமே இவர் நீதிமன்றத்தால் விடுதலையே செய்யப்பட்டுள்ளார், வெர்ணன் கான்சல்வ்ஸ் மீதான 19 வழக்குகளில் 11 வழக்குகளில் அவர் நிரபராதி என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார், மீதமுள்ள இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்வாறு இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 நபர்கள் ஏற்கனவே இந்திய‌தண்டனைச்சட்டம், உஃபா சட்டம் போன்ற சட்டங்களின் அடிப்படையில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்தசெல்லப்பட்டும் அதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

அரசுக்கும் அரசின் அங்கமான நீதித்துறைக்கும் ஒரு மெல்லிய கோடு அளவிலான இடைவெளியே எப்போதும் இருக்கும் தற்போது அது முற்றிலும் மறைந்து அரசின் ஆளும் வர்க்கத்தின் அங்கமாகவே நீதித்துறை செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் சுதந்திரமான நீதித்துறை என்ற முறை முடிவுக்கு வந்துவிட்டதையே இது போன்ற வழக்குகள் நமக்கு தொளிவாக காட்டுகின்றன.

கடந்த மார்ச் மாதம் ஆனந்த் டெல்டும்டே மற்றும் கவுதம் நவ்லாகா ஆகியோரின் முன்ஜாமின் மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவர்களில் இருவர் மீதான வழக்கு நடவடிக்கைக்கும் போதுமான அடிப்படை இருக்கிறது (PRIMA FACIA) என்று கூறி இவர்களின் முன்ஜாமீன் மனுவை தள்ளபடி செய்தது. ஆனால் ஜாமின் என்பது போதுமான முகாந்திரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்த்து வழங்கப்படுவது அல்ல. இவர் வெளியில் இருந்தால் வழக்கின் நடிவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பார், சாட்சிகளை கலைப்பார் அல்லது தலைமறைவாகி விடுவார்; போன்ற முகாந்திரங்களின் அடிப்படையில் அடிப்படையில் வழங்கப்படுவது ஆகும். இவர்கள் இரண்டு ஆண்டுகள் வழக்கு நடைபெறும் போது எங்கேயும் தலைமறைவாகி விடவில்லை மேலும் இவர்களுக்கு எதிரான சாட்சியம் என்பது கணிணியில் கைப்பற்றப்பட்ட மின்னணு கடிதங்களே எனும் போது அவற்றை கலைப்பதற்க்கும் வாய்ப்பில்லை இவ்வளவு சாதகமான முகாந்திரங்கள் இருந்தும் உச்சநீதிமன்றம் இவர்களின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.

இவ்வாறு குற்றமற்றவர்களுக்கு ஜாமின் மறுத்த இதே உச்சநீதிமன்றம் தான் கடந்த 28.01.2020 அன்று குஜராத்தில் சர்தார்புரா படுகொலை என்ற இரத்தத்தை சில்லிட வைக்கும் முறையில் கொடூரமாக மின்சாரம் பாய்ச்சியும், அமிலத்தை வீசியும் ஒரு வீட்டில் அடைக்கலம் புகுந்த 31 இஸ்லாமியரில் 29 பேர்களை படு கொலை செய்து விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தண்டனை உறுதி செய்யப்பட்ட 17 குற்றவாளிகளுக்கு பிணை வழங்கி அவர்களை மத்திய பிரதேசத்தில் சமூக சேவை செய்யச் சொல்லியது.அவ்வாறே ஒடே என்ற கிராமத்தில் 26 இஸ்லாமியர் எரித்து கொல்லப்பட்ட வழக்கிலும் 14 குற்றவாளிகளுக்கு பிணை வழங்கியது.

கீழமை நீதிமன்றங்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்ட இவர்களுக்கு பிணை வழங்கிய உச்சநீதிமன்றம் தான் குற்றமற்ற அறிவாளிகளுக்கு பிணை வழங்க மறுத்துள்ளது.

இவ்வாறு நீதித்துறை முழுவதும் ஆளும் அரசின் அங்கமாக செயல்படுவதும் அவர்களுக்கு வேண்டிய தீர்புகளை வேண்டிய முறையில் அளிப்பதும் இயல்பகாவே சனநாயக நடைமுறையின் அடித்தளத்தையே தகர்ப்பதாகும். BJP, RSS கும்பல் ஆட்சிபொறுப்பேற்ற நாளில் இருந்து தங்களது இந்துத்துவ சித்தாந்தத்தில் மூழ்கியவர்களையே அரசின் எல்லா உயர்பதவிகளிலும் நிரப்பி வருகிறது. அதிலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பலரும் இந்துத்துவ மனநிலையில் இருந்து கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சேவை செய்யும் ஆட்களாக மாறியுள்ளதையே இது போன்ற நீதிமன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்தியாவில் சுதந்திரமான நீதித்துறை என்ற நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டதை இந்நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு உலகிற்கு நிருபிக்கின்றன.

- மே 17 இயக்கக் குரல்