modi and jaishankarஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்த விதமும், வேகமும் அனைவரையும் ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் தோல்வி என்ற ரீதியில் அலசப்படும் பார்வைகளுக்கு நடுவில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான தோல்வி அதிக கவனத்தை ஈர்க்கவில்லை.

ஆப்கான் விவகாரத்தில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிக மோசமான தோல்வியை இந்தியா பெற்றுள்ளது. சொல்லப் போனால், 2014-இல் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல் சந்தித்து வரும் தொடர்-வெளியுறவுக் கொள்கை தோல்வியின் உச்சம், ஆப்கானிஸ்தான் எனலாம். இந்தியாவின் இந்தத் தோல்வியினால், காஷ்மீர் விவகாரம் முதற்கொண்டு பல சர்வதேசப் பிரச்சனைகளை மோடி அரசு சந்திக்கப்போவது தவிர்க்க இயலாத ஒன்று.

செப்டெம்பர் 11, 2001 அமெரிக்காவின் இரட்டைகோபுரம் தகர்ப்பு சம்பவத்திற்குப் பின், பயங்கரவாதத்தின் மீதான போர் என்று அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் படையெடுத்தது. அப்போது அங்கு ஆட்சியிலிருந்த தாலிபான்கள் தலைமையிலான அரசை தூக்கியெறிந்த அமெரிக்கா, தனக்கு சாதகமான ஹமீத் கர்சாய் என்பவரை இடைக்கால அதிபராக ஆட்சியில் அமர்த்தியது. அன்று முதல் சில நாட்கள் முன்பு வரை தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்ற அமெரிக்க இராணுவத்துடன் சண்டையிட்டு வந்தனர். இடையே, இரட்டைக் கோபுரம் தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல்-கொய்தா முற்றிலும் அழித்தொழிக்கப்பட்ட பின்னரும், அமெரிக்கா ஆப்கானை விட்டு வெளியேறவில்லை.

அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் என்பது இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியப் பகுதி. ஈரான், ஈராக், பாகிஸ்தான், இந்தியா, சீனா, மத்திய ஆசிய நாடுகள் என ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும், அமெரிக்கா தனது வல்லாதிக்கத்தை நிறுவ முயற்சித்து வருகின்றது. இதனாலேயே தாலிபான்களின் அச்சுறுத்தல், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரச் சூழல் போன்றவற்றைக் காரணம் காட்டி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறாமல் இருந்தது.

அமெரிக்கா - சீனா என உலகில் இரு துருவ அதிகார மையங்கள் உருவான சூழலில், மத்திய மற்றும் தெற்காசியப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் மிகச் சிறந்த தளமாக விளங்கியது. இதே காலகட்டத்தில் தான், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அது, அமெரிக்காவுடன் அணி சேர்வது என்பது. ஆப்கானுக்கான ராணுவப் பாதுகாப்பு மற்றும் நிதியுதவியைப் பார்த்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டை கட்டியெழுப்புவதற்கும், தனக்குச் சாதகமான சூழலை ஆப்கானில் கட்டிக் காத்திடவும் இந்தியாவையே பெருமளவில் நம்பியது.

தெற்காசியப் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளின் உள்கட்டமைப்பை சீனா கட்டியெழுப்பியது போன்ற ஒரு செயல்திட்டம் இந்தியாவிற்கு கிடைத்தது. மேலும், காஷ்மீர் - பாகிஸ்தானை மையமாகக் கொண்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், ஆப்கானிஸ்தான் இந்தியாவின் முதன்மை நட்பு சக்தியாக மாறுவது பாகிஸ்தானை புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தி நெருக்கடிக்குள்ளாக்க முடியும் என்ற எண்ணத்தில் துணிந்து இறங்கியது. பின்பு, மத்திய ஆசியாவை நோக்கிய சீனாவின் புவிசார் அரசியலுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் இந்தியா மாற்றுத் திட்டத்தை முன்வைத்து இயங்குவதற்கும் ஆப்கானிஸ்தான் மிக முக்கிய பகுதியாக இருக்கும் என்று பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தது.

modi and gani(ஆப்கான் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் மோடி-கனி)

அதனடிப்படையில், ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை கட்டுமானங்களை ஆப்கானிஸ்தானில் உருவாக்கத் தேவையான முதலீடுகளை, வணிக ஒப்பந்தங்களை இந்தியா முன்னெடுத்தது. சாலைகள், அணைகள், மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய மின்தகடுகள் பொருத்துவது, மின்சாரப் பாதைகள், இருப்புப் பாதைகள், தொலைத்தொடர்பு வசதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என 34 மாகாணங்களில் 400-க்கும் அதிகமான திட்டங்களில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (கிட்டத்த 23,000 கோடி) அதிகமான முதலீடுகளை இந்தியா ஆப்கானிஸ்தானில் செய்துள்ளது. இதில், சுமார் 300 மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்டு, 2015-ம் ஆண்டு மோடியினால் திறந்து வைக்கப்பட்ட ஆப்கான் நாடாளுமன்றம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தைக் கணக்கில் கொண்டு 2011-ம் ஆண்டு இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே ஒரு வணிக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், வணிகம் மற்றும் பொருளாதாரத்தை விரிவாக்கும் வகையில், இருதரப்பு உறவை வலுப்படுத்துவதும், பொருளாதார, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றை இருநாட்டுப் பிரதிநிதிகள் ஒத்துழைப்போடு ஊக்குவித்துக் கொள்வது என உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்தியாவின் சந்தையை தீர்வைகளின்றி (duty-free) பயன்படுத்திக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் அனுமதித்தது. 2019-20 ஆண்டு வரை இருநாடுகள் இடையேயான வர்த்தகம் 1 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானுக்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் இந்தியா வழங்கியது.

china silk route(சீனாவின் பட்டுசாலை திட்டம்)

ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளை சீனா தனது பொருளாதார வழித்தடத்தில் இணைக்கும் வகையில் 2013ம் ஆண்டு சீனா முன்னெடுத்த 'பட்டை ஒன்று பாதை ஒன்று (One Belt One Road)' என்னும் பட்டுச்சாலை திட்டம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது, அதில், மத்திய ஆசிய நாடுகளை பொருளாதார வழித்தடத்தில் இணைக்கும் சீனாவின் திட்டத்திற்கு போட்டியாக இந்தியாவும் ஒரு திட்டத்தை உருவாக்கியது. அதில், ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பு மிக முக்கிய பங்கு வகிக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக, அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, ஈரான் நாட்டின் சபஹார் துறைமுகம் (Chabahar Port) மற்றும் தொழிற்சாலைகள் உள்ளடக்கிய சிறப்பு பொருளாதார மண்டலத்தை சுமார் $8 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இந்தியா உருவாக்கியுள்ளது. 2018 முதல் இந்தியா இதனை இயக்கி வருகிறது.

afgan chabahar route(இந்தியாவின் சபஹார்-ஆப்கான் வழித்தடம்)

ஈரானின் சபஹார் துறைமுகத்தில் துவங்கும் இந்தியாவின் பொருளாதார வழித்தடம் சாலை வழியாகவும், இருப்புப்பாதை வழியாகவும் ஆப்கானிஸ்தான் செல்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய ஆசிய நாடுகளை இணைக்கும் இந்த வழித்தடத்தில், 218 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சாரஞ்ச்-டெலரம் (Zaranj-Delaram) தேசிய நெடுஞ்சாலையை சுமார் $150 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியா உருவாக்கியுள்ளது. அதே போல், 42 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்பு அணை எனப்படும் சல்மா அணையை (Salma Dam) 2016-இல் கட்டி முடித்துள்ளது. இது விவசாயம் மேற்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. அதே போல், காபூல் மாவட்டத்தில் 20 லட்சம் பேருக்கான குடிநீருக்காக ஷடூட் (Shatoot) அணை கட்டுமானத் திட்டத்திற்கும், $80 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய 100 சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கும் சமீபத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

தற்போது ஆப்கனிஸ்தான் முழுமையாக தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ள நிலையில் இந்தியாவின் முதலீடுகள் அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளன. ஆப்கனிஸ்தானில் அமெரிக்க-இந்திய ஆதரவு அரசு நீடிக்கும், அதன் மூலம் சீனாவுடன் போட்டியிடக்கூடிய தனது புவிசார் அரசியல் நலன் திட்டங்களை நிறைவேற்றி விடலாம் என்ற நோக்கத்தில் ஆப்கானில் இந்தியா மேற்கொண்ட உள்கட்டமைப்பு முதலீடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு பலனளிக்காத வகையில் தோல்வியில் முடிக்கின்ற சூழல் உருவாகியுள்ளது. அனைத்தும் அமெரிக்காவை நம்பி முன்னெடுக்கப்பட்டவை. இதற்காக இந்தியா அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வந்தது, இந்தியாவின் பங்களிப்பு குறித்து சமீபத்தில் கருத்து கூறிய பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, பயிற்சிகள் அளிப்பது, உள்கட்டமைப்பு மேம்பாடு என்ற வகையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயலாற்றிருக்கிறது என்று கூறினார்.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு படிப்படியாக வெளியேறும் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் கூறினாலும், அதற்கான முன்னெடுப்புகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே துவங்கியது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி எனக் கருதப்படும், ஆப்கானிஸ்தானில் உள்கட்டமைப்பை மேம்படுத்திய இந்தியா இந்த பேச்சுவார்த்தைகளில் இணைத்துக் கொள்ளப்படவே இல்லை. இதிலிருந்தே அமெரிக்கா இந்தியாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள இயலும். தாலிபான்கள் இந்தியாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எத்தனை பலவீனமானதாக இருந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

அமெரிக்கா தனது சுயநல நோக்கில் ஆப்கானை விட்டு வெளியேறுகிறோம் என்று சொல்லத் துவங்கியதும் அமெரிக்காவை நம்பி ஆப்கானில் இந்தியா முன்னெடுத்த திட்டங்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆப்கான் அரசிற்கும் தாலிபான்களுக்கும் இடையே ரசியா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா வெறும் பார்வையாளராக மட்டுமே பங்கேற்றது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தை அமெரிக்க ஆதரவு சவுதி அரேபியா நாட்டிலிருந்து கத்தார் நாட்டிற்கு மாற்றும் அளவிற்கு தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். 1990-களில் தாலிபான்களின் ஆட்சியை இந்தியா அங்கீகரிக்காத நிலையில், தாலிபான்கள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதில்லை என்பது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தைகளில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனையே, ஆப்கானில் இனி இந்தியாவிற்கு இடமில்லை என்று நேட்டோ அதிகாரி அலிஜண்டாரோ அல்வர்கான்சாலேஸ் (NATO official Alejandro Alvargonzález) கடந்த 2019 ஜனவரியில் வெளிப்படையாகவே கூறினார்.

தாலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இந்தியாவை இணைக்காமல் கைவிட்ட நிலையில், இந்தியா ஆப்கானில் உள்ள தனது முதலீடுகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகளையும் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டது. தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள தாலிபான்கள் அலுவலகத்தை வெளியுலகிற்குத் தெரியாமல் இந்திய வெளியுறவுத்துறை பிரதிநிதிகள் அணுகியதாக கத்தாரின் மூத்த அரசு அதிகாரி கடந்த ஜூன் 21 அன்று கூறியிருக்கிறார். இதன் மூலம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை இந்தியா முன்னரே உணர்ந்துள்ளது தெரிகிறது. இன்று அதே போல், தாலிபான்கள் அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர்.

indian dam in afgan

(இந்தியா-ஆப்கான் நட்பு அணை)

ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் அரசை பாகிஸ்தான், சீனா, ரஷியா போன்ற நாடுகள் ஆதரிக்க முன்வந்துள்ள நிலையில், இந்தியா இது குறித்து வெளிப்படையாக கருத்து கூறாமல் உள்ளது. ஆப்கானில் உள்ள இந்தியாவின் முதலீடுகள் இனி இந்தியாவிற்கு எந்த விதத்திலும் பலனளிக்கப் போவதில்லை என்பதை இந்தியா இன்று உணர்ந்திருக்கும். அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதலீடுகள் அனைத்தும் தாலிபான் மற்றும் தாலிபான் ஆதரவு நாடுகளுக்கே பலனளிக்கப் போகிறது. இது இந்தியா பரிசாக வழங்கிய 400 பேருந்துகள், 200 மினி பேருந்துகள், 105 நகர்ப்புற பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள், விமானங்கள், 285 ராணுவ வாகனங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. தாலிபான்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரி நாடுகள் எனக் கருதப்படும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் ஆப்கானில் உள்ள இந்தியாவின் கட்டமைப்பு மற்றும் முதலீடுகளைப் பயன்படுத்தி புவிசார் அரசியலில் கோலோச்சுவதற்கான வழிவகை தற்போது ஏற்பட்டுள்ளது. இது இந்திய வரலாற்றில் மிக மோசமான வெளியுறவுக் கொள்கை தோல்வியாகும்.

தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக அமெரிக்காவின் துணையுடன் இந்தியா சில முயற்சிகளைக் மேற்கொண்டிருந்தது. அதன்படி, இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் என இந்தியாவின் ஆதரவுத் தளங்கள் விரிந்திருந்தன. ஆனால், இந்தியாவின் பெரியண்ணன் அணுகுமுறை மற்றும் மோடி அரசின் மோசமான வெளியுறவுக் கொள்கை காரணமாக மாலத்தீவு தவிர்த்த அனைத்து நாடுகளும் சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விட்டன. குறிப்பாக, இலங்கையில் அமெரிக்க-இந்திய ஆதரவு சிறிசேனா ஆட்சி நீக்கப்பட்டு, இனப்படுகொலையாளன் ராஜபக்சே ஆட்சி சீனாவிற்கு கொழும்பு துறைமுக நகரை அளித்துள்ளது. இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்படுகிறார்கள் என்றால், அதற்கு இந்தியாவின் தான்தோன்றித்தானமான வெளியுறவுக் கொள்கையே காரணம்.

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததால் இந்தியா பொருளாதார ரீதியாக இழந்ததை விட, இனி சந்திக்கப் போகும் பிரச்சனைகள் ஏராளம். அமெரிக்க ஆதரவு நிலை எடுத்த காரணத்தினால், இந்தியா சீனா மற்றும் ரசியாவுடன் நேரடியாக மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே பாகிஸ்தானை எதிரியாகக் கொண்ட இந்தியா இன்று சீனா மற்றும் ரசியாவிற்கு எதிரியாகும் நிலை. தாலிபான் அரசை ஆதரிப்பதாக தற்போது இந்த மூன்று நாடுகள் தான் வெளிப்படையாக அறிவித்துள்ளன. அப்படியென்றால், ரஷியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளை நட்பாக கொண்ட தாலிபான்களுக்கு இந்தியா எதிரியாகவே இருக்கும்.

அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ரசியா தாலிபான்களை ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை. தாலிபான்கள் காபூலை நெருங்கும் போதே, அவர்களுக்கான ஆதரவை அளிக்க ரஷியா முன்வந்தது. இத்தனைக்கும் தாலிபான் அமைப்பு ரசியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. இருந்தும், முந்தைய அஷ்ரப் கனி ஆட்சியை விட தாலிபான்களின் ஆட்சி சிறப்பாகவே இருக்கும் ரசியாவின் தூதர் டிமிட்ரி ஜிர்னோவ் கூறுகிறார்.

1980-களில் தன்னுடைய ஆதிக்கத்தை மத்திய ஆசியாவில் விரிவாக்கம் செய்வதற்காக ஆப்கானிஸ்தானில் ரசியா ஆதிக்கம் செலுத்தியது. அப்போது அவர்களை எதிர்கொள்ள அமெரிக்கா உருவாக்கியதே தலிபான்கள் அமைப்பு. தலிபான்கள் அமெரிக்கா உதவியுடன் ரசியாவை விரட்டிவிட்டு ஆப்கானில் 1990-களில் ஆட்சி அமைத்தனர். அமெரிக்காவின் கைப்பாவையாக தாலிபான்கள் இல்லாத காரணத்தினாலேயே இரட்டைக் கோபுரத் தாக்குதலை முன்வைத்து தாலிபான்கள் ஆட்சியை அமெரிக்கா அகற்றியது. கடந்த 20 ஆண்டுகளில் நிலைமை தலைகீழ் ஆகியுள்ளது. அமெரிக்காவின் வெளியேற்றம், மத்திய ஆசிய நாடுகள் மீதான தனது புவிசார் நலனை நிலைநாட்டக் கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறது.

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவை சரியாகக் கையாண்ட ரசியா, ஆப்கான் விவகாரம் மூலம் இப்பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும். அதற்கு தாலிபான்கள் ஆதரவு தேவைப்படுமெனில், ரசியா இந்தியாவை விலக்கி வைக்கவே விரும்பும். ஆப்கானிஸ்தான், ரசியா உதவியுடன் மத்திய ஆசிய நாடுகளில் தனது புவிசார் அரசியல் நலனை நீட்டிக்க விரும்பிய இந்தியாவின் திட்டம் இதன்மூலம் தவிடு பொடியாகியுள்ளது.

அதேவேளை, ரசியாவின் ஆதரவுடன் மத்திய ஆசிய நாடுகள் மட்டுமல்லாது, கிழக்கு ஐரோப்பா வரை தனது பொருளாதார வழித்தட திட்டத்தை சீனா ஏற்கனவே கட்டமைத்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறும்போது முழு பலனை அனுபவிக்கப்போவது சீனா தான். எனவே தான், தாலிபான்கள் ஆப்கானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முன்னரே சீனா பேச்சுவார்த்தை மேற்கொண்டது. தாலிபானின் மூத்த தலைவர் அப்துல் கனி பரதர், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் லி'ஐ கடந்த ஜூலை மாதம் சந்தித்து உரையாடியுள்ளார். காபூலைக் கைப்பற்றிய பின்னர் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்த நாடுகளில் சீனாவும் ஒன்று.

ஆப்கான் சீனாவுடன் 76 கிமீ எல்லையை மட்டுமே பகிர்கிறது. இணைப்பு சாலைகள் ஏதும் இல்லை. தனது One Belt One Road திட்டத்தின் ஒரு பகுதியான CPEC (China-Pakistan Economic Corridor) திட்டத்தை பாகிஸ்தானின் வழியாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தெற்காசியா, கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் தனது பொருளாதார நலனை விரிவாக்கம் செய்தது. தற்போது ஆப்கான் சீனாவின் நட்பு சக்தியான தாலிபான்கள் வசம் வந்துள்ளது, மத்திய ஆசியா மற்றும் அரபு நாடுகளை நோக்கி தனது திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான சூழல் உண்டாக்கியுள்ளது.

அதேவேளை, ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதி மாகாணமான ஜின் ஜியாங் பகுதியில் தான் உய்குர் முஸ்லீம்கள் சீனாவினால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தாலிபான்கள் அதிகாரத்திற்கு வரும் நிலையில், ஜின் ஜியாங் மாகாணம் மற்றொரு காஷ்மீராக மாறுவதை சீனா விரும்பவில்லை. அப்படியான சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்யவே தாலிபானுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தியது. தாலிபான்களும் உய்குர் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவது குறித்து இது வரை வாய் திறக்கவில்லை.

காஷ்மீரில் லடாக், சிக்கிம் பகுதியில் இந்திய ராணுவத்துடன் அவ்வப்போது மோதிக் கொள்ளும் சீனா, காஷ்மீர் பிரச்சனையை சர்வதேசப் பிரச்சனையாக மாற்றவே முயற்சிக்கிறது. ஆர்டிகிள் 370-ஐ இந்தியா நீக்கிய பிறகு சீனாவுடனான மோதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 2020 இல் சீனா-இந்தியா இராணுவத்தினர் கைமோதலில் எடுபட்டனர். இது, இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளதால், அத்தகைய ஆக்கிரமிப்பை சீனாவும் மேற்கொள்கிறது என்பதையே காட்டுகிறது. தற்போது தாலிபான்கள் நட்பு கிடைத்ததால், தாலிபான்கள் மூலம் காஷ்மீரில் அதிக பிரச்சனைகளை உண்டாக்க முயலும். காஷ்மீரைச் சுற்றியுள்ள நாடுகளான சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகளுமே இந்தியாவை எதிரியாகக் கருதுகின்றன. காஷ்மீரை 2 ஆண்டுகளாக சிறைப்படுத்தி வைத்திருக்கும் இந்தியா, காஷ்மீரை முன்வைத்து இனி சந்திக்கப் போகும் பிரச்சனைகள் அதிகமானதாக இருக்கும்.

தாலிபான்களுடன் நெடுங்காலமாகவே பாகிஸ்தான் நெருக்கமாக உள்ளது. தாலிபான்கள் பஷ்தூன் இன மக்கள். இந்த பஷ்தூன் இன மக்கள் ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, பாகிஸ்தானின் வடக்கு பகுதி முழுவதும் காஷ்மீர் வரை பரவியுள்ளனர். (1947-இல் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்த போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா படையை எதிர்கொண்டு விரட்டியவர்கள் தான் இந்த பஷ்தூன் வீரர்கள். அவர்கள் பிடித்த காஷ்மீர் பகுதி தான் இன்றளவும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது.) எனவே, தாலிபான்களைப் பகைப்பது பாகிஸ்தான் அரசியலில் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கும். இரு நாட்டின் வடக்கு எல்லை எப்போதும் திறந்தே இருக்கும். இந்நிலையில், தாலிபான் அரசிற்கான பாகிஸ்தானின் ஆதரவு இயல்பானதே. மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவை விரட்டுவது பாகிஸ்தான் முனைப்போடு செய்யக்கூடிய செயல். இதனை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான வெற்றியாகவே கருதும்.

தாலிபான்களினால் இந்தியா மிகப்பெரிய சிக்கலை சந்திக்கப் போவது காஷ்மீரில் தான். தாலிபான்கள் பாகிஸ்தான் நட்புறவோடு இருக்கின்ற சூழலில், பாகிஸ்தானில் ஆயுதம் தாங்கிய போராளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அவர்களின் பயிற்சிக்கூடங்கள் பாகிஸ்தானில் அதிகரிக்கும். அப்படியான சூழலில், காஷ்மீரில் அவர்களின் தாக்குதல்களும் அதிகரிக்கும். தாலிபான், பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியா ராணுவத்திற்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்கும் போது, காஷ்மீரில் அரசியல் தன்மையில் மாற்றம் ஏற்படும். அது இந்தியா விரும்பாத ஒன்று. அதோடு, இந்தியா காஷ்மீரில் அரசியலில் இதுவரை உண்டாக்கிய மாற்றங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கக் கூடும்.

காஷ்மீரை இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்திருந்தது, காஷ்மீர் ராஜா ஹரிசிங் கொடுத்த இணைப்பு கடித்தத்தின் அடிப்படையிலான அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 370 மட்டுமே. அதனை கடந்த 2019 அக்டோபர் 31 அன்று மோடி அரசு நீக்கியதால், காஷ்மீர் பகுதியுடனான இந்தியாவின் சட்டப்பூர்வமான பிணைப்பு முறிந்தது. இன்று காஷ்மீர் இந்தியாவின் ஆக்கிரமிப்புப் பகுதியே. இதனை காஷ்மீர் பிரதிநிதிகள், இந்தியா அரசு, உச்சநீதிமன்றம் போன்றவை மறுக்கலாம். ஆனால், சர்வதேச நடைமுறைகளின் படி, இந்தியா காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்றே அறியப்படும். இந்த நிலையில், தாலிபான்கள் மூலம் காஷ்மீர் மீண்டும் ஒரு சர்வதேசப் பிரச்சனையாக உருவெடுப்பதை இந்தியா நிச்சயம் விரும்பாது.

இதன் காரணமாகத் தான், ஆர்டிக்கிள் 370-ஐ நீக்கியது முதல் வீட்டுச் சிறையில் வைத்திருந்த காஷ்மீர் அரசியல் தலைவர்களை கடந்த ஜூன் 26 அன்று மோடி மற்றும் அமித்சா டில்லியில் நேரடியாக வரவழைத்துப் பேசியுள்ளனர். அதில், காஷ்மீர் தலைவர்களை சமாதானப்படுத்தும் விதமாக அவர்களது கோரிக்கைகளைப் பெற்றுள்ளனர். இதன் பின்னணியில் தாலிபான்கள் ஆதிக்கம் உள்ளது என்பதை மோடி காஷ்மீர் தலைவர்களை சந்தித்த அன்றே மே 17 இயக்கக் குரல் இணையதளத்தில் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். சர்வதேச அளவில் அமெரிக்க ஆதரவே இந்தியாவின் ஆதரவுத்தளமாக உள்ளது. தாலிபான் அரசை ஒருவேளை அமெரிக்க ஆதரிக்குமானால், காஷ்மீர் பிரச்சனையில் சர்வதேச அளவில் இந்தியாவிற்கான ஆதரவு என்று ஒரு நாடும் இருக்கப் போவாதில்லை. காஷ்மீரை மையமாகக் கொண்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முடிவு பூஜ்ஜியம் எனில், இதைவிட மோசமான வெளியுறவுக் கொள்கை வேறென்ன இருக்க முடியும்?

புவிசார் அரசியலை அடிப்படையாகக் கொண்டு இந்தியா எடுத்த தவறான வெளியுறவுக் கொள்கைகளே இந்த மோசமான நிலைக்கு காரணம். சீனா அமெரிக்காவுடன் போட்டியில் ஈடுபடுகிறது என்றால், இந்தியா சீனாவுடன் போட்டியிட முனைகிறது. சீனா-அமெரிக்கா போட்டியில், அணிசேராக் கொள்கையை கொண்ட இந்தியா அமெரிக்க ஆதரவு நிலை எடுக்க, அதுவே இன்று சர்வதேச மட்டத்தில் இந்தியாவை தனிமைப்படுத்தியுள்ளது. அமெரிக்காவை நம்பிய இந்தியா இன்று நட்டாற்றில் விடப்பட்டுள்ளது. இனி தனக்கான செல்வாக்கை உருவாக்குவது இயலாத காரியம். கிட்டதட்ட அமெரிக்காவின் அடிமை போல் செயலாற்ற வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளை முதன்மை நட்பு சக்தியாக இந்தியா கருதும் என்று தனது பதவியேற்பு விழாவிற்கு அண்டை நாட்டுத் தலைவர்களை அழைத்து உறவை துவங்கிய மோதி அரசு, பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயன்று, இன்று இந்தியா தனிமைப்பட்டுள்ளது. நெடுங்காலமாக இந்தியாவின் மாநிலங்களைப் போல் இருந்த அண்டை நாடுகளே இன்று இந்தியாவின் பகை நாடுகளாக மாறுமளவிற்கு இந்திய வெளியுறவுக் கொள்கை மிக மோசமான சூழலை எட்டியுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் மாநில அரசுகளின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டுமென்று மே பதினேழு இயக்கம் நீண்ட காலமாகவே கூறி வருகிறது. இந்தியாவிற்கென தனியாக நிலப்பரப்போ, மக்களோ கிடையாது. எனில் இந்தியாவிற்கென தனிப்பட்ட இறையாண்மை இருக்க முடியாது. இறையாண்மை மக்களைச் சார்ந்தது. மக்கள் தனித்தனி தேசிய இனங்களாக உள்ளனர். எனில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்புடைய மக்களின் மாநிலங்களை கலந்தாலோசித்தே முடிவு செய்யப்பட வேண்டும். இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையை முடிவு செய்வதில் தமிழ்நாடு, புதுச்சேரி பங்கு வகிக்க வேண்டும். வங்க தேசத்திற்கான வெளியுறவுக் கொள்கையை முடிவு செய்வதில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்கள் பங்கு வகிக்க வேண்டும். அதேபோல், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கான வெளியுறவுக் கொள்கையை முடிவு செய்வதில் காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பங்கு வகிக்க வேண்டும். அப்படியான ஒரு நிலை இருந்திருந்தால், ஆப்கான் விவகாரத்தில் இன்று இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள தோல்வி இத்தனை மோசமானதாக இருந்திருக்காது.

- மே பதினேழு இயக்கம்