தேர்தல் இறுதிக்கட்டத்தின்போது அதிமுக தலைவி ஜெயலலிதாவின் மீது மக்கள் வெறுப்படைய வேண்டும் என்பதற்காக... கலைஞர் தொலைக்காட்சியில், ஜெயலலிதா ஆட்சியின்போது கலைஞர், முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட காட்சிகள், ராணிமேரி கல்லூரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்ட காட்சி, நெசவாளர்களுக்கு கஞ்சித் தொட்டி திறந்தது போன்ற காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டன.

ஜெயலலிதா ஆட்சியின் அராஜகங்களாக விரிந்தன அந்தக் காட்சிகள். இது கலைஞரின் தேர்தல் நேர பிரச்சார யுக்தி என்று ஒப் புக் கொண்டாலும் - அந்தக் காட்சிகளினூடே காஞ்சிபுரம் சங்கர ராமன் கொலை வழக்கில் ஜெயந்திரர் கைது செய்யப்பட்டு காவல் துறையினரால் அழைத்து வரப்படும் காட்சியும் சேர்த்தே ஒளிபரப்பானது. அப்படியென்றால், ஜெயந்திரர் கைது செய்யப்பட்டது அராஜகம் என்று சொல்கிறது கலைஞர் தொலைக்காட்சி. ஜெயந்திரரின் கைது அராஜகம், அநியாயம் என்றால்... அவர் மீதான வழக்கை கலைஞர் அரசு ஏன் வாபஸ் வாங்கவில்லை? ஜெயலலிதாவின் மீதான லண்டல் பிளசன்ட்ஸ்டே ஹோட்டல் வழக்கை வாபஸ் வாங்கியதைப் போலவே இதையும் வாபஸ் வாங்கி இருக்கலாமே! ஆனால் இது கலைஞரின் மூளையில் உதித்த விஷயம்.

3 சதவீதம் உள்ள பிராமணர்களின் ஓட்டுக்காக தர்மத்தை அதர்மமாக காட்ட முயற்சிக்கிறார் கலைஞர். ஆனால், ஜெயந்திரர் கைது காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பியதன் மூலம் - ஜனாதிபதியே மண்டியிடும் அளவிற்கு அரசியல் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த சங்கராச்சாரி தவறு செய்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சட்டத்தின் இரும்புக்கரத்தை பாய்ச் சியவர் ஜெயலலிதா என்கிற எண்ணத்தைத்தான் தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்தியது கலைஞர் டி.வி. அந்த வகையில் ஜெயலலிதாவிற்கு வாக்குகளை சேகரித்துத் தரும் பணியைத்தான் கலைஞர் டி.வி. செய்தது.

- ஃபைஸல் அப்பாஸ்

Pin It