தேர்வலம் போல ஊர்வலம் போகும்
தென்றலில் ஆடும் தாவரமே! - நான்
தேன் கவி பாடதா, வரமே.

விண்ணக நீரால், மண்ணக வேரால்
உன்னதம் பெறுவாய் தரு வாய் நீ - தினம்
உண்ணவும் கனிகள் தருவாய் நீ.

பைங்கனி வண்ணம் செந்நிற மேனும்
பசுமையை அணிவாய் சீருடையாய் - நீ
பாவலர் புகழும் சீர் உடையாய்.

அழகிய பறவை அகம் பெறு முவகை
பழகிய குரலால் பண்பாடும் - அதன்
ஒழுங்கினில் வளரும் பண்பாடும்.

நிழலெனும் போர்வை ஒளியிழை நெய்யும்
நிலமகள் உந்தன் கவிகைக்குள் - நீ
நிதம் தரு கின்றாய் கவி, கைக்குள்.

கொஞ்சிடும் காற்றில் குலுங்கும் பொழுதில்
கொலுசுக ளே உன் இலையென்பேன் - இங்கு
கவலைகள் எனக்கு இலையென்பேன்.

தன்னிழல் யாவும் தண்ணிழ லாகி
பொன்னிள வேனில் மண்ணாளும் - நான்
உன்னெழில் புகழ்வேன் எந்நாளும்.

Pin It