factory adaniஇந்தியாவின் கிழக்கு கடற்கரையோரங்கள், வளகுடாவின் பிற நாடுகளான பங்களாதேசம், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் துறைமுகங்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. இந்த துறைமுகங்கள் அந்தந்த  நாட்டினாலோ அல்லது சீனாவினாலோ கட்டி எழுப்பப்படுகின்றன.

இந்த இடங்களில் இந்தியாவின் குஜராத்தி பனியா மார்வாடி முதலாளிகள் குறிப்பாக அதானி போன்றோரின் நிறுவனங்கள் போட்டி போட்டு தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த துடிக்கின்றன.

வளைகுடா பகுதியில் நடக்கும் நிலக்கரி, அனல் மின்நிலைய தொழிற்சாலை வணிக போட்டியில் அதானிக்கு இந்தியப் பெருங்கடலில் இருக்கும் பெரும்பான்மையான துறைமுகங்கள் தாரை வார்கப்படுகின்றன சமீபத்தில் அதானி நிறுவனம் மியான்மரின் யாங்கூன் துறைமுகத்தில் பர்மாவின் இராணுவத்தோடு ஒப்பந்தம் போட்டு ரூ.2000 கோடி அளவில் துறைமுகம் நிர்மாணிக்கிறது. அதானியின் இந்த வியாபார தொழில் விரிவாக்கத்துக்கு  தமிழ்நாட்டின் கடற்கரையோரமும் துறைமுகங்கள் சிறிதும், பெரிதுமாக தேவைப்படுகிறது.

காவிரி டெல்டா மண்டலத்தில் இயற்கையாக கிடைக்கும் பெட்ரோலிய மற்றும் எரிகாற்று உற்பத்தியை சுத்திகரித்து ஏற்றுமதி செய்யவும், மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்வதுமான வணிகத்திற்கு துறைமுகம் மிக அவசியமானதாகிறது. இந்த பின்னனியில் தான் காவிரி டெல்டா மண்டலத்தின் மிகப்பெரும் துறைமுகமாக காரைக்கால் துறைமுகத்தை உருவாக்க அதானி விரும்புகிறது.

தமிழ்நாட்டில் தற்போது உருவாகி வரும் எரிபொருள் சார்ந்த வர்த்தக திட்டங்களும், அதனோடு இணைந்து உருவாகி வளரும் தொழில்களை தொகுத்து கவனித்தால் காரைக்கால் துறைமுகத்தின் முக்கியத்துவம் உணர முடியும்.

தமிழ்நாட்டில் குவியும் பெட்ரோ கெமிக்கல் முதலீடுகள்:

எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் 45 கிராமங்கள் பெட்ரோ கெமிக்கல் மண்டலாமாக (PCPIR) அறிவிக்கபட்டது. மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பு மற்றும் நெருங்கிவந்த தேர்தல் போன்ற காரணங்களால் 23, பிப். 2020 அன்று அது திரும்பப் பெறப்பட்டது.

அதில் கவனமாக இரண்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு திட்டமிட்டு திரும்பப் பெறப்பட்டது. அவை கடலூரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹால்தியா நிறுவனத்தின் 58320 கோடி முதலீடு மற்றும் நாகப்படினத்தில் சி.பி.சி.எல் இன் 28000 கோடி முதலீடு.

ஹால்தியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துடன் 58320 கோடி முதலீடு:

ஆந்திராவைச் சேர்ந்த நாகர்ஜுனா ஆயில் ரிபைனரி லிமிடெட், கடலூரில் நாகர்ஜுனா ஆயில் கார்பரேசன் லிமிடெட் என்ற பெயரில் 3500 கோடி செலவில், 2002 இல் திட்டமிடப்பட்டு, 18000 கோடி அளவு பணம் முதலீடு செய்யபட்டும் முடிக்க முடியாமல் 2016 இல் அரசாங்கத்தை அணுக, அந்த ரிபைனரியை விற்க National company law tribunal, 2018 இல் அனுமதி கொடுத்தது.

2002 இல் தொடங்கி 2012 இல் முடிக்கப் படவேண்டிய இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வராததால், இதை நம்பி 2009 இல் கட்டி முடிக்கப்பட்ட காரைக்கால் துறைமுகமும் நட்டத்தில் மூழ்கியது. அதாவது  அதானி வாங்கப்போகும் காரைக்கால் துறைமுகம் நட்டத்தில் இருந்து மீளவேண்டும் என்றால் கடலூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் செயல்பட தொடங்க வேண்டும்.

18000 கோடி முதலீட்டில் கட்டப்பட்டிருக்கும் நாகர்ஜுனா ஆயில் கார்பரேசன் லிமிடெட் (NOCL)-இன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை எடப்பாடி அரசுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி மொத்தமாக 58230 கோடி ரூபாய் முதலீடு செய்து மீள்கட்டமைத்து 2024 இல் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் ஹால்தியா நிறுவனம்.

இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விடயம், 18000 கோடி மதிப்புள்ள நாகர்ஜுனா ஆயில் கார்பரேசன் லிமிடெட்(NOCL) நிறுவனத்தை வெறும் 600 கோடி கொடுத்து வாங்க National company law tribunal மார்ச் 21, 2021 அன்று அனுமதி கொடுத்துள்ளது.

இதன் மூலம் 15 பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார் 7500 கோடி அளவுக்கு வராக்கடனாக மாறியுள்ளது. அதாவது 7500 கோடி அளவுக்கு மக்கள் பணம் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

கடலூரில் மொத்தமாக 58320 கோடியை கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம், காயல்பட்டு பஞ்சாயத்துகளில் உள்ள திருச்சோபுரம், காயல்பட்டு, கம்பளிமேடு, அந்தர் முல்லிபள்ளம் ஆகிய கிராமங்களில் 2186 ஹெக்டர் அளவிலான நிலத்தில் பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ், ரிபைனரிக்கான முதலீட்டை மேற்கொள்ளும் அந்நிறுவனம்.

சி.பி.சி.எல் ன் 28000 கோடி முதலீடு:

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து வெறும் 6 கி.மீ தூரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், பணன்குடி கிராமத்தில் வருடத்திற்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் ஐ.ஒ.சி யின் சி,பி,சி,எல் க்கு சொந்தமான ஆலையை இடித்து விட்டு அங்கு 28000 கோடி செலவில் 9 மில்லியன் டன் அளவுக்கு கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் புதிய ஆலை கட்டுவதற்காக மோடி பிப்.18, 2021 அன்று அடிக்கல் நாட்டினார்.

இது 2024 இல் முற்று பெற்று பயன்பாட்டுக்கு வரும்.  கடலூர் மற்றும் நாகபட்டினத்தில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் அமைந்தால் அதன் மூலம் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் பற்றி மே 17 இயக்கம் பலமுறை சொல்லியுள்ளது.

ஏற்கனவே நாகப்பட்டிணத்தில் இயங்கி வரும் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தும் சுகாதாரகேடு மற்றும் மாசு ஆகியவையை கண்டித்து SDPI கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் மே 17 இயக்கமும் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதானியின் முதலீடு:

காரைக்கால் துறைமுகத்தின் கொள்ளளவு 18000 கோடி மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் மூலப் பொருட்களை கையாளுவதர்க்காகத் தான் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அதைவிட 3 அல்லது 4 மடங்கு விரிவாக்கப் பணிகள் நடக்கும் போது அங்குள்ள தொழிற் சாலைகளில் நடக்கும் போது துறைமுகமும் விரிவாக்கமடைய வேண்டும்.

அடுத்த 4 ஆண்டுகளில் சரக்கு ரயில் மற்றும் சாலை வசதிகள், துறைமுகத்திலிருந்து தொழிற்சாலைகளுக்கு குழாய்கள் அமைதல் என்று காரைக்காலை சுற்றியுள்ள பகுதிகளில் 5000 கோடி அளவுக்கு முதலீடு குவியும்.

இவை மூன்றும் சேர்த்து கிட்டத்தட்ட 90000 கோடி அளவுக்கு காவிரி டெல்டா மண்டலமான கடலூர், நாகப்பட்டினத்தையும், காரைக்கால் துறைமுகத்தையும் நம்பி முதலீடு போடப் படுகிறது.

இது எதுவுமே வளர்சிக்கான முதலீடு அல்ல. நிலம், காற்று, நீர் என்று கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் சுற்றியுள்ள பகுதிகளின் வளங்கள் பாதிக்கப்படும். மக்கள் வாழ்வாதாரங்கள் குறிப்பாக மீனவர்களின் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்படும்.

பெயருக்கு வேளாண் மண்டலம் என்று அறிவித்துவிட்டு அங்கு சுற்றுச்சூழலை, விவசாயத்தை பாதிக்கும் முதலீடுகளை அனுமதிப்பது, பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என்பதை திரும்பப் பெருகிறோம் என்று சொல்லிவிட்டு சில நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகிறது.

மீத்தேன், 8 வழிச்சாலை, உப்பூர் அனல் மின்நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் என்று இயற்கை வளங்களை அழிக்கும் முதலீடுகளை அனுமதிக்க கூடாது என்பதை அரசு கொள்கை முடிவாக எடுக்கு வேண்டும் என்பதை மக்கள் கோரிக்கையாக மாறினால் தான் தமிழ்நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்படும்.

இந்த முதலீடுகளால் காவிரி டெல்டா பகுதி மக்களுக்கு எவ்வகையிலும் வேலைவாய்ப்பு வளராது. மாறாக விவசாய நிலங்களும், கடல் வளங்களும் சிதைவுக்குள்ளாகும். இங்குள்ள நிலம் மற்றும் கடற்கரையிலிருந்து  தமிழர்கள் வெளியேறுவது வாடிக்கையாகி விடும்.

உழவு பொருளாதாரம் அழிந்தால் காவிரி டெல்டாவின் சிறுவணிக தொழில்களும் முடங்கிப் போய்விடும். இந்த திட்டங்கள் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்கள் அல்ல. மாறாக ஏழை எளிய மக்களின் நிலங்கள், கடல் வளங்களை லாபத்திற்குரிய பொருட்களாக முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதாகும். அதிலும் குறிப்பாக குஜராத்தி மார்வாடி - பனியா வணிக கொள்ளையர்கள் கையில் தமிழர் வாழ்நிலத்தை ஒப்படைக்கும் அரசியல்.

புதுச்சேரியின் அதிகாரம் பாஜகவின் கையில் சென்று விட்டதால் ஏற்படும் இழப்புகளின் ஒரு சில விகிதமே மேற்சொன்ன விளைவுகள். இந்த பாசிச பாஜகவின் ஆட்சி அதிகாரத்தை அன்றாடம் எதிர்த்து நிற்காமல் இயற்கை வளங்களை காக்க முடியாது.

புதுச்சேரியின் அரசியலில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி இந்துத்துவ - பனியா கூட்டத்தின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதன் மூலமாகவே தமிழர்களின் கடற்கரை பாதுகாக்கப்படும்.

- மே பதினேழு இயக்கம்