Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஏப்ரல் 2009
அவனுகல்லாம் வக்கீலாகிட்டானுகனா இந்தத் தொழில் நாசமாப் போயிடும்...
வழக்குரைஞர் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் யார்?
கலைவேலு

பள்ளிப் படிப்பை முடித்து நான் கல்லூரிக்குள் நுழைந்த புதிதில் என் அப்பா ஒரு செய்தியை என்னிடம் திரும்பத் திரும்ப நினைவு கூர்வார். கடன் வழக்கு ஒன்று தொடர்பாக அப்பொழுது அவர் தாராபுரம் வழக்குமன்றத்திற்கு அடிக்கடி சென்றுவர வேண்டியிருந்தது. அவ்வழக்கிற்காக, தாராபுரத்தில் அந்நாளில் மிகவும் பெயர் பெற்றிருந்த வழக்குரைஞர்களில் ஒருவரான ஓர் ... ‘அய்யர்’ வழக்குரைஞரையே அவர் அணுகியிருந்தார். ‘அய்யரின்’ மகனும் ஒரு வழக்குரைஞரே. அச்சமயம் தாராபுரத் தின் முன்னணி வழக்குரைஞர்கள் அனைவரும் பார்ப்பனரே! அவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் வழக்குரைஞர் தொழிலையே தம் குலத் தொழிலாகத் தொடர்ந்தனர். தாராபுரத்தில் மட்டுமின்றித் தமிழகத்தின் பொத்தம்பொதுவான நிலையே அன்று அதுதான்.

என் தந்தையார் சொன்ன செய்தியின் சாரம் இதுதான்: எங்கள் குடும்பப் பின்னணி குறித்து வழக்குரைஞர் வினவிய பொழுது, என் தந்தையார் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதைக் கேட்டு விட்டு அந்த அய்யர் வழக்குரைஞர் சொன்னாராம்: “ஏண்டா உம் பயனுக்கெல்லா படிப்பு எதுக்கு? அவ(ன்) படிச்சிட்டு என்ன செய்யப் போறா(ன்)? வக்கீலு ஆகப் போறானா? ஆமா ஆமா அவனுக எல்லா வக்கீலா கிட்டானுகனா இந்தத் தொழில் நாசமாப் போயிடும்.” அந்தக் கடன் வழக்கு முடியும் வரை என் தந்தையைப் பார்க்கும் பொழுதெல்லாம் என் படிப்புப் பற்றி உசாவுவதையும் பின்னர் வசைபாடுவதையும் வாடிக்கையாகவே கொண்டிருந்திருக்கிறார் அய்யர் வழக்குரைஞர். என் தந்தையை அவர் எப்பொழுதுமே ‘வாடா’ ‘போடா’ என்று ஒருமையில்தான் அழைப்பாராம். அதையும் என்னிடம் சொல்லிப் பல முறை வருத்தப்பட்டிருக்கிறார்.

பிப்ரவரி 19 கொடு நிகழ்வைத் தொடர்ந்து பார்ப்பனரும், உயர்சாதி யினரும், பார்ப்பன உயர்சாதி ஊடகங்களும் வழக்குரைஞர் கள் மீது வெளிப்படுத்தும் வன்மம் நாற்பதாண்டுகளுக்கு முன் என் தந்தையாரின் மீது தாராபுரம் அய்யர் வழக்குரை ஞர் கொட்டிய பொறாமைச் சுடுநெருப்பிற்குக் கொஞ்சமும் குறைந்ததன்று. சூத்திரனும் பஞ்சமனும் படிக்கிறார்கள். படித்ததோடு நில்லாமல் ஈ, ஈசல் கூட இது வரை நுழைய முடியாமலிருந்த தங்கள் ஆதிக்கக் கோட்டைக்குள் நுழைகிறார்கள்; நுழைந்த தோடு நில்லாமல் தங்கள் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடவும் செய்கிறார்கள். தாங்கள் கட்டிக் காத்த அமைப்பு தகர்ந்து விடும் போலிருக்கிறதே! தங்களின் ஆட்சி அதிகாரத்திற்கு முடிவு வந்து விடும் போல் தெரிகிறதே! ஆமாம், இதுதான். இந்த ஆதங்கம்தான், அன்று என் தந்தை யார் மீது வயிற்றெரிச்சலாக வெளிப்பட்டிருக்கிறது. இன்று அவர்களுக்கு முடிவு நெருங்கிக் கொண் டிருப்பதால் வழக்குரைஞர்கள் மீது குண்டாந்தடி களாக இறங்கியிருக்கிறது; சிறீகிருஷ்ணா அறிக்கை யாகத் தாக்கியிருக்கிறது; சுப்பிரமணிய சுவாமி, விஜயன், தினமணி "இந்து'க்களாகக் கடித்துக் குதறு கிறது.

பிப்ரவரி 19 சென்னை உயர் நீதிமன்றத்தில் அரங் கேறிய அந்தக் கோரத் தாண்டவம் கொடுமை யிலும் கொடுமையானது. தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சிகளைப் பார்த்த எவருக்கும், அவர் கல் நெஞ்சக்காரராகவே இருந்திருந்தாலும், மனம் பதறிப் போயிருக்கும்; கல் நெஞ்சமும் உருகிக் கரைந்திருக்கும். காவல்துறையினரா, காட்டு விலங் காண்டிகளா எனக் கட்டுக்கடங்காக் கடுஞ்சினம் வெளிப்பட்டிருக்கும். காரண காரியங்களை ஆய்ந்து கொண்டிராமல் காவல்துறையினரைச் சாடியிருக்கும்; சபித்திருக்கும்.

அவ்வாறு உடனுக்குடன் எதிர்வினையாற்றிய ஒரே ஒருவர் தொண்ணூறு அகவையும் கடந்த கிருஷ்ண அய்யர் மட்டுமே “எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தச் செவியும் கேட்டிராத, எந்த மனமும் நினைத்திராத கொடுமை இது” என மிகச் சரியாகச் சாடியவர் அவர்தாம். அவர் சொற்கள் நம் எல்லாருடைய உணர்வுகளையும் எதிரொலிக் கும் சொற்கள். பிப்ரவரி 19 கொடுமையை வர்ணிக்க இவற்றைவிட வேறு சொற்கள் கிடையா. கிருஷ்ண அய்யர் மாமனிதர். அவருடைய பெயரில் மட்டும்தான் ‘அய்யர்’ உள்ளது. உண்மையில் ‘அய்யர்’ என்ற தமிழ்ச் சொல் லின் பொருளே உயர்ந்தவர் என்பதுதானே? ஆனால் மற்ற ‘அய்யர்கள்’ சாதி அய்யர் களாக, தங்கள் உயர்சாதி மேலாதிக்கத்தைச் கட்டிக் காப்பவர்களாக, அதை விட்டுக் கொடுக்க மறுப் பவர் களாக, அதைக் காப்பாற்ற அனைத்து வகை சாம, பேத, தான, தண்டங்களையும் பயன்படுத்தும் பார்ப்பனர் களாகவே அல்லவா உள்ளார்கள்?

பிப்ரவரி 19 வன் கொடுமைக்கு மூலகாரண மானவரான சுப்பிரமணிய சாமியின் எதிர்வினை என்ன தெரியுமா? “சட்டத்தை நிலை நாட்டத் தடியடி தேவைதான்” - அவர் உதிர்த்த சொற்கள் இவை. இப்படியெல்லாம் நடைபெற வேண்டும் என்று எண்ணி நன்கு திட்டமிட்டுத் தம் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பதையே அவர் சொற்கள் காட்டுகின்றன. வழக்குரைஞர்கள் பற்றிய அவரது வசைமொழிகளும் அவர் உள்ளக் கிடக்கையை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்து கின்றன. “வழக்குரைஞர்களே அல்ல; தரகர்கள்”, “தொழில் இல்லாத வழக்குரைஞர்கள்”, “இடஒதுக்கீட்டில் வந்தவர்கள்”, (வழக்குரைஞர் களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி - தோழர் மருதையன் - வினவு வினைசெய் இணையதளம்)

உண்மையில் வழக்குரைஞர்கள் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் அவருக்குத் தாம் மிகவும் சரியாகப் பொருந்தக் கூடியவை. அவர் அரசியல் தரகர் என்பதையும், அவர் யார் நலனுக் காக இத்தரகு வேலையைச் செய்கிறார் என்பதை யும் விவரம் தெரிந்த அனைவரும் அறிவர். அரசியல் தரகுத் தொழிலைத் தவிர வேறு தொழில் அற்றவர் என்பதையும் அறிவர். இந்திய, தமிழ்நாட்டு அரசியலில் மக்கள் செல்வாக்குக் கிஞ்சித்தும் இல்லாதவர் என்ற போதிலும் இந்து, தினமணி போன்ற பார்ப்பன ஊடகங்களின் இடஒதுக் கீட்டினாலேயே உலா வந்து கொண்டிருப்பவர் என்பதை உலகமே அறியும். ஆனால் இவை சுப்பிரமணியசாமி என்ற தனி யாளின் வெளிப்பாடுகள் அல்ல. ஒட்டுமொத்த பார்ப்பன, உயர்சாதியினரின் கருத்துகள் இவையே! இதை இந்துவும் தினமணியும் உறுதிப் படுத்துகின்றன; நம்மைத் தெளிவுபடுத்துகின்றன. பிப்ரவரி 19 நிகழ்வை நாம் வழக்குரைஞர்களின் மீதான கொடுந்தாக்குதல் என்கிறோம்.

மனித நேயம் உள்ள எவரும் அப்படித்தான் அழைப்பர். கிருஷ்ண அய்யர் குறிப்பிட்டதை மேலே பார்த்தோம். அவரது அந்த அறிக்கையை வெளி யிட்ட அதே இந்து கொடுத்த தலைப்பைப் பாருங் கள். ‘சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரை ஞரும் காவலரும் நேருக்கு நேர் கைகலப்பு’ (Lawyers Police Fight battles in Madras High Court), ‘காவல் நிலையத்திற்குத் தீ, வாகனங்கள் உடைக்கப் பட்டன’. ‘பல வழக்குரைஞர்களுக்கும் காவலர் களுக்கும் காயம்’ எனத் தொடர்கின்றன. அதன் துணைத் தலைப்புகள். என்னமோ போர்க் களத்தில் இரு படைவீரர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதைப் போன்ற தோற்றத்தை அல்லவா இத்தலைப்பு உருவாக்குகிறது?

இச்செய்தி வெளியான அன்றே இந்து தலையங்கமும் தீட்டி உள்ளது. தலையங்கத்தின் தலைப்பு ‘தங்களுக்குத் தாங்களே சட்டமாதல்’ (A Law unto themselves). தலைப்பே இந்துவின் பார்வையைப் புரிய வைத்து விடுகிறது. ‘வழக்குரைஞர்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்வது ஒன்றும் புதிய நிகழ்வன்று’ எனத் தொடங்கும் அத்தலையங்கம், இது வரை அவர்கள் தண்டிக்கப்படாததாலேயே, அச்சமின்றி சட்டத்தின் வரம்பைத் தாண்டிச் செயல்படு கிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறது. காவல் நிலையத்திற்குத் தீ வைத்ததும் கல்லெறிந்ததும் வழக்குரைஞர்களே எனக் குறிப்பிடும் இந்து, வழக்குரைஞர்களுக்கு இணையாகக் காவலரும் சட்டத்தை மதியாமல் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது என்கிறது (Sadly, the police matched the lawyers in their lawlessness). காவல்துறை மீதான இந்துவின் ஆகக் கூடுதலான திறனாய்வு இதுதான்.

“நீதித் துறையோடு வழக் குரைஞர் சமுதாயத்திற்கிருந்த நெருக்கம் காரணமாக இது நாள் வரை அவர்களிடம் காவல்துறை மென்மையாக நடந்து கொண்டது. இப்பொழுது தொல்லை தருவோருக்கு எதிராக உறுதியுடன் செயல்பட்டு அவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்பதைப் புரிய வைக்க வேண்டுமெனில் நீதித்துறையின் முழு ஒத்துழைப்பும் காவல்துறைக்குத் தேவைப்படுகிறது. இந்த வன்முறை மோதல் பற்றி ஒருதலைப்பக்கமான பார்வை மோசமான தவறாகி விடும்.”

(All these days, the police have tended to treat the lawyer community with kid glones because of its proximity to judiciary. Now if they are to act firmly against trouble makers and make them realise that they are not above law, the police would surely need the fullest cooperation from the judiciary. Taking a one side view of the violent clash would be a seniour mistake.”)

இந்து மட்டுமா வழக்குரைஞர்களுக்கு எதிராக எழுதியது, தினமணி அதனினும் மேலாகச் சென்று “அடி விழுந்தால் வலிக்கும்” என எழுதியது. “வரம்பு மீறும் வழக்குரைஞர்களால் நீதித்துறைக்கே களங்கம்” எனக் குறிப்பிடும் தினமணியின் பாண்டியனின் பிரம்படித் தலையங்கம், இக்களங்கம் நீங்க குற்றம் புரிந்த வழக்குரைஞர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது. வன்முறை வழக்குரைஞர்களை எதிர்க்க மற்ற வழக்குரைஞர்கள் தயங்குவதாகவும், அவ்வாறு செய்தால் தாங்கள் “தாக்கப்படுவோம்” என அஞ்சுவதாகவும் குறிப்பிடும் தினமணி, இவ்வச்சம் நடந்த “மோதலைக் காட்டிலும் மிகமிக மோச மானது” என்கிறது. இவ்வாறு நீதிபதிகளும் அஞ்சத் தொடங்கினால், “அச்சத்தால் நீதியின் தராசு ஒருபக்கமாகச் சாய்ந்து விட்டால், அது நீதி யாகுமா?” என்று ‘பத்திரிகைத் தர்மத்தின்’ ஆவேசத் தோடு வினவுகிறது. இந்து சொன்ன ‘ஒருதலைப் பக்கமான பார்வை’ என்பதையே தினமணி நீதியின் தராசு ஒரு பக்கமாகச் சாய்வது எனக் குறிப்பிடுகிறது. இவர் களின் நடுவுநிலைமை நமக்கு நன்கு விளங்குகிறது. இவர் களின் நீதி மனுநீதி என்பதும் தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.

தினமணி தலையங்கத் தோடு நின்று விடவில்லை. விஜயன் என்ற நச்சுப் பாம்பை யும் துணைக்கழைத்து நஞ்சை யும் கக்கியுள்ளது. “இந்திய உணர்வு என்பது தமிழ் உணர்வைவிட மேலானது” எனக் கூறி இந்தியத்திற்கும் பார்ப்பனத்திற்கும் சோரம் போவதில் பெருமை கொள்ப வர் இந்த விஜயன். பார்ப் பனர்களுக்கும் மேலான உயர் சாதித் திமிர் கொண்டவர். தினமணியில் வெளியாகி யுள்ள இவரது கட்டுரையின் தலைப்பு ‘சத்யமேவ ஜெயதே’ இவர்களது ‘சத்யம்’ எது என்பதைக் கட்டுரை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. கட்டுரை முழுக்க பொய்யும், புனைவும் வஞ்சமும் வன்மமு மாய் நிரம்பி வழிகிறது.

“தமிழகத்தில் வன் கொடுமைக்குள்ளாகும் ஒரே ஜாதி பிராமணர் ஜாதிதான்” - கட்டுரையில் விஜயன் முன் வைக்கும் முதன்மையான சத்யம் இது. அவர் தொடர் கிறார்: “பிராமணரைத் திட்டு வது போல் வேறு யாரையும் எந்த ஜாதியினரையும் திட்டுவதில்லை. அவர் களுக்குத்தான் நிஜமாகப் பாதுகாப்புத் தர வேண்டும். தமிழகத்தில் இருக்கும் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களைச் சாதி பெயர் சொல்லித் திட்டியதாக சமீப வரலாறு இல்லை.... வன்கொடுமைச் சட்டத்துக்கு முதலில் திருத்தம் வேண்டும்.” சத்யமான உண்மை. சாதிப் பெயர் சொல்லித் திட்டுவதில்லை என்பது உண்மையிலும் உண்மை. மாறாக, மலத்தை உணவாகவும், சிறுநீரைக் குடிநீராகவும் வழங்கி நம் உடல்நலம் பேணுகிறார் கள். தனித் தேநீர்க் குவளை வழங்கி மதிப்பளிக் கிறார்கள். ஊருக்கு வெளியே தனிக் குடியிருப்பு களை உருவாக்கிக் குடியமர்த்திப் பெருமை செய்கிறார்கள். நமக்கெனத் தனிக் கடவுள்கள் கூட. இன்னும் இவற்றைப் போல எத்துணை எத்துணை தனிச்சிறப்புகளை விஜயனின் உயர் சாதியினர் நமக்காக வாரி வழங்கி உள்ளார்கள். சத்யமேவ ஜெயதே!

விஜயனின் சத்ய உணர்வு மேலும் பொங்கி வழிந்து இப்படி எழுதுகிறது. “போலிஸ்காரர்களின் ஒருநாள் சட்ட அத்துமீறல் வழக்குரைஞர்களின் பலநாள் அத்துமீறல்களை நியாயப்படுத்த முடி யாது.” விஜயனின் கூற்றுப்படி பிப்ரவரி 19க்கு முன் காவல்துறையினர் எந்தத் தவறுமே செய்ததில்லை. அவர்கள் கண்ணியவான்கள். வழக்குரைஞர்கள் தாம் தொடர்ந்து அத்துமீறுபவர்கள்; அரம்பர்கள்.

ஆனால் அத்துமீறும் அரம்பர்களின் மண்டை உடைபடவில்லையாம். அப்பாவி வழக்குரைஞர் கள்தாம் அடிபட்டு விட்டார்களாம். விஜயனின் சத்யம் அவரை ஆவேசம் கொள்ளச் செய்கிறது. கொதித்துப் போய் எழுதுகிறார்... “வன்முறை செய்த வழக்கறிஞர்களோ அல்லது அதைத் தூண்டிய தலைவர்களோ அடிவாங்கவில்லை. சம்பந்தமில்லாத அப்பாவி வழக்கறிஞர்களும், அவர் களின் கார்களும், சில நீதிபதி கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட்டவர்களும் அடி வாங்கினார்கள்.”

விஜயனின் சத்யமான உள்ளம் பால்கனகராசு, பிரபாகரன், காந்தி, வைகை, சாந்தகுமாரி போன்ற வழக்குரைஞர்களும், சந்த்ரு, பானுமதி, அசோக்குமார் போன்ற அறவாணர்களும் அடிபடவில்லை, மண்டை உடைபடவில்லை என்று வருந்துகிறது. அடிப்பட்ட அப்பாவி வழக்குரைஞர்கள் தாங்கள் அடிபடக் காரண மான மேற்காணும் வழக் குரைஞர்கள் மீது “கோபப்பட வேண்டும்” என்றும் குரல் கொடுக்கிறது.

விஜயனுக்கு வழக்குரைஞர் ஒற்றுமை பற்றியெல்லாம் கவலை இல்லையாம். ஏனென்றால் அவர் “ஒட்டுமொத்த மனிதகுல ஒற்றுமையை” விரும்புகின்றவர்; “அதற்கு ஆக்கப் பூர்வமான” சர்வதேசச் சூழலை உருவாக்க உழைப்பவர். “இச்சூழல் வழக்கறிஞர்கள் மூலம் உருவாக வேண்டும்” என்பதே அவரது அவா. இப்பொழுது ஒன்று எந்தக் குழப்பமும் அய்யமும் இன்றி தெளிவாகிறது - அவர் முன்பு ஒருமுறை ஏன் தாக்கப்பட்டார் என்று. அதே சமயம் இன்னொன் றும் புரிகிறது. இப்பொழுது போராடும் வழக்குரை ஞர் தலைமை கண்ணியமும் கட்டுப்பாடும் உடையதென்று.

சுப்பிரமணிய சாமி சொன்னதையே இந்து சொல்கிறது; இந்து சொன்னதையே தினமணியின் தலையங்கமும், விஜயனின் கட்டுரையும் வழிமொழிகின்றன. இவர்களெல்லாம் சொன்னதையே சிறீகிருஷ்ணா அறிக்கையாக உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கினார். அதனால்தான் அவ்வறிக்கையை நடந்ததை நடந்தவாறு கூறும் அறிக்கை என இந்து வரவேற்றுப் புகழ்கிறது.

இவர்கள் எல்லோருக்குமே போராடும் இளம் வழக்குரைஞர்கள் மீதுதான் ஆத்திரம். இவர் களைக் காவல்துறைகூட ‘கோட்டாப் பேர்வழிகள்’ என நையாண்டி செய்ததாக உண்மை அறியும் குழு அறிக்கை குறிப்பிடுகிறது. இவர்கள்தாம் வன்முறையாளர்கள். நீதித்துறையின் புனிதத்தைக் கெடுப்பவர்கள்; இதுவரைக் கட்டிக் காத்துவந்த ‘ஒழுங்கை’ச் சிதைப்பவர்கள். இவர்களை இந்து தமிழின வெறியர்கள் என்றும் இடது தீவிரவாதிகள் என்றும் அடையாளம் காட்டுகிறது. விஜயன் “தொழில் இல்லாத” தமிழ் இன உணர்வாளர்கள் என்கிறார். பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார் களோ அதற்கு நேர் எதிராய் பொருள் கொள்ள வேண்டும் என்பது பெரியாரியம். ஆக நம் இளம் வழக்குரைஞர்கள் சரியான திசையில் பயணிக்கிறார் கள் என்பதே உண்மை. அதிகாரப் பீடங்களைத் தகர்த்தெறியாமல் அவர்கள் போராட்டம் ஓயப் போவதில்லை என்பதும் உண்மை.

நாற்பதாண்டுகளுக்கு முன் என் தந்தை கூறியதை அப்பொழுது நான் முழுமையாக உள் வாங்கிக் கொண்டேனா எனத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது எனக்கு அவரின் ஏக்கம் புரிகிறது; என்னிடம் அவர் எதை எதிர்நோக்கி னார் என்பது விளங்குகிறது. என் அன்பிற்குரிய தந்தையே! உங்களை அவமதித்த ஆணவக்காரர் களின் கோட்டை சரியப் போகிறது. இதோ இன்று உங்கள் மகன்கள் மட்டுமல்ல, உங்களின் பேரன்கள், பேத்திகள் அணிஅணியாகப் புறப்பட்டு விட்டார்கள். அனைவரும் சமம் என்கிற சமூக நீதித் தேசம் காண்கின்ற வரை இப்படை ஓயப் போவதில்லை. வெற்றி உங்கள் பிள்ளைகளுக்கும், பேரன்களுக்கும் பேத்திகளுக்குமே.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com