Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

             கண்ணன்- என் சீடன்

யானே யாகி என்னலாற் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மாயக் கண்ணன்,
என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்,
என்னைத் துணைக்கொண்டு, என்னுடைய முயற்சியால்          5

என்னடை பழகலால் என்மொழி கேட்டலால்
மேம்பா டெய்த வேண்டினோன் போலவும்,
யான்சொலுங் கவிதை என்மதி யளவை
இவற்றினைப் பெருமை யிலங்கின வென்று
கருதுவான் போலவும், கண்ணக் கள்வன்          10

சீடனா வந்தெனைச் சேர்ந்தவன், தெய்வமே!
பேதையேன் அவ்வலைப் பின்னலின் வீழ்ந்து
பட்டன தொல்லை பலபெரும் பாரதம்;
உளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும்,
தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும்          15

சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்,
தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ள
மாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி
இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத்          20

தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு,
மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து,
புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்,
பலவகை யால்அகப் பற்றுறச் செய்தான்;
வெறும்வாய் மெல்லுங் கிழவிக் கிஃதோர்          25

அவலாய் மூண்டது; யானுமங் கவனை
உயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய்,
"இன்னது செய்திடேல், இவரொடு பழகேல்,
இவ்வகை மொழிந்திடேல், இனையன விரும்பேல்,
இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய்,          30

இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்?
எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி,
ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன்
கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம்
எதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டும்          35

நெறியினுக் கெல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பா னாயினன். நானிலத் தவர்தம்
மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமாகக் கொண்ட சிறுமதி யுடையேன்,
கண்ணனாஞ் சீடன், யான் காட்டிய வழியெலாம்          40

விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்,
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும்
தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும்
இகழுமிக் கவனாய், என்மனம் வருந்த
நடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக்          45

கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர்
கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை
இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும்
நிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத்          50

தோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாது
முத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன்
பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென்
நெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும்          55

சொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன்.
தேவ நிலையிலே சேர்த்திடா விடினும்,
மானுடன் தவறி மடிவுறா வண்ணம்,
கண்ணளை நானும் காத்திட விரும்பித்
தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும்,          60

சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,
கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும்
எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக்
கொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றிலை
கண்ணன் பித்ததனாய்க் காட்டா ளாகி,          65

எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய்,
எவ்வகைப் பயனிலுங் கருத்திழந்தவனாய்,
குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்
யாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான்.
இதனால், 70

அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற;
யான்கடுஞ் சினமுற்று 'எவ்வகை யானும்
கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்'
எனப்பெருந் தாபம் எய்தினே னாகி
'எவ்வா றேனும் இவனையோர் தொழிலில்          75

ஓரிடந் தன்னில் ஒருவழி வலிய
நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்'
என்றுளத் தெண்ணி இசைந்திடுஞ் சமயங்
காத்திருந் திட்டேன், ஒருநாள் கண்ணனைத்
தனியே எனது வீட்டினிற் கொண்டு,          80

"மகனே, என்பால் வரம்பிலா நேசமும்
அன்பும்நீ யுடையை; அதனையான் நம்பி,
நின்னிட மொன்று கேட்பேன்; நீயது
செய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியே
மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய்.          85

சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்
மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோ ர் தமையே அருகினிற் கொண்டு
பொருளினுக் கலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி          90

இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்;
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன்.
ஆதலால்,
என்பயன் கருதி, எனக்கொரு துணையாய்          95

என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை
வேண்டி நிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தே
என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே,
இவ்வுரைக் கிணங்குவாய்" என்றேன். கண்ணனும்,
"அங்ஙனே புரிவேன். ஆயின் நின்னிடத்தே          100

தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது?
காரிய மொன்று காட்டுவை யாயின்,
இருப்பேன்" என்றான். இவனுடை இயல்பையும்
திறனையுங் கருதி, "என் செய்யுளை யெல்லாம்
நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக்          105

கொடுத்திடுந் தொழிலினைக் கொள்ளுதி" என்றேன்.
நன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்;
"செல்வேன்" என்றான்; சினத்தோடு நானும்
பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன்
கையினிற் கொடுத்துக் "கவினுற இதனை          110

எழுதுக" என்றேன்; இணங்குவான் போன்றதைக்
கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான்;
"செல்வேன்" என்றான். சினந்தீ யாகிநான்
"ஏதடா, சொன்ன சொல் அழித்துரைக் கின்றாய்;
பித்த஦ன்ன றுன்னை உலகினர் சொல்வது          115

பிழையிலை போலும்" என்றேன், அதற்கு,
"நாளைவந் திவ்வினை நடத்துவேன்" என்றான்
"இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச்
செய்கின் றனையா? செய்குவ தில்லையா?
ஓருரை சொல்" என் றுறுமினேன். கண்ணனும்          120

"இல்லை" யென் றொருசொல் இமைக்குமுன் கூறினான்.
வெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக்
கண்சிவந் திதழ்கள் துடித்திடக் கனன்றுநான்
"சீச்சி, பேயே! சிறிதுபோழ் தேனும்
இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே;          125

என்றுமிவ் வுலகில் என்னிடத் தினிநீ
போந்திடல் வேண்டா, போ, போ, போ" என்று
இடியுறச் சொன்னேன். கண்ணனும் எழுந்து
செல்குவ னாயினன். விழிநீர் சேர்ந்திட
"மகனே! போகுதி வாழ்கநீ, நின்னைத்          130

தேவர் காத்திடுக! நின்தனைச் செம்மை
செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்.
தோற்றுவிட் டேனடா! சூழ்ச்சிகள் அறிந்தேன்.
மறந்தினி வாராய், செல்லுதி வாழி நீ!"
எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன்.          135

சென்றனன் கண்ணன் திரும்பியோர் கணத்தே
எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்;
காட்டிய பகுதியைக் கவினுறு வரைந்தான்;
"ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்வேன்.
தொழில்பல புரிவேன். துன்பமிங் கென்றும்,          140

இனிநினக் கென்னால், எய்திடா" தெனப்பல
நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான்.
மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்
"மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல்          145

அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்;
தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெலாம்
ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ" என்றான். வாழ்கமற்ற றவனே!          150


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com