Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

                தமிழகச் சாந்தி
          

Bharathi
(இப்பாடல் சிதவுற்ற கைப் பிரதி மூலமே சேகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பமும் முடிவும் தெரிய வில்லை.அவர் கொடுத்த தலைப்பு ‘இருதலைக் கொள்ளியினிடையே’ என்பதாம்.)

...எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே, விதியே, தமிழச் சாதியை 5

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்நின் அருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ? 10

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? 15

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே, தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய்’ என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்,
“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும், 20

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச் 25

சாதியை அமரத் தன்மை வாய்ந்தது” என்று
உறுதிகொண் டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன். 30

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவியிவ் வெளிய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும் 35

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம் 40

நாட்டினைப் பிரிந்த நலிவினால் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்;
‘தெய்வம் மறவார், செயுங்கடன் பிழையார்,
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்’ 45

என்பதென் னுளத்து வேரகழ்ந் திருத்தலால்.
எனினும்,
இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு
கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும்
செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்: 50

ஊனமற் றெவைதாம் உறினுமே பொறுத்து,
வானம் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,
தானமுந் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து
ஞானம் பொய்க்க நசிக்குமோர் சாதி.
சாத்திரங் கண்டாய் சாதியின் உயி£¢த்தலம்; 55

சாத்திர மின்றேற் சாதியில்லை.
பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்
பொய்ம்மை யாகிப் புழுவென மடிவர்.
நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில்,
அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் - 60

மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும்-
இவர்தாம் -
உடலும் உள்ளமும் தன்வச மிலராய்
நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும்,
பெரிதிலை; பின்னும் மருந்திதற் குண்டு. 65

செய்கையுஞ் சீலமுஙம் குன்றிய பின்னரும்
உய்வகைக் குரிய வழிசில உளவாம்.
மற்றிவர்,
சாத்திரம் - (அதாவது, மதியிலே தழுவிய
கொள்கை, கருத்து, குளிர்ந்திடு நோக்கம்) - 70

ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்
மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை.
இந்தநாள் எமது தமிழ்நாட் டிடையே
அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார்
தம்மிலே இருவகை தலைப்படக் கண்டேன்: 75

ஒருசார்,
‘மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை
யவற்றினுஞ் சிறந்தன; ஆதலின் அவற்றை 80

முழுதுமே தழுவி மூழ்கிடி னல்லால்,
தமிழச் சாதி தரணிமீ திராது.
பொய்த்தழி வெய்தல் முடி’ பெனப் புகலும்.
நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை
வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ, 85

‘ஏ ஏ! அஃதுமக் கிசையா’ தென்பர்.
‘உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்துநீர்
தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந்தடை
பல, அவை நீங்கும் பான்மைய வல்ல’
என்றருள் புரிவர். இதன்பொருள் ‘சீமை 90

மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச்
சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர்’
என்பதே யாகும். இஃதொரு சார்பாம்.
பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரொடு
‘நமதுமூ தாதையர் (நாற்பதிற் றாண்டின் 95

முன்னிருந் தவரோ, முந்நூற் றாண்டிற்கு
அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ, ஆயிரம்
ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ?
பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத்
தவரோ? புராண மாக்கிய காலமோ? 100

சைவரோ? வைணவ சமயத் தாரோ?
இந்திரன் தானே தனிமுதற் கடவுள்
என்றுநம் முன்னோர் ஏத்திய வைதிகக்
காலத் தவரோ? கருத்திலா தவர்தாம்
எமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்? 105

நமதுமூ தாதையர் நயமுறக் காட்டிய
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்
ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே
தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு.
எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் 110

கலிதடை புரிவன். கலியின் வலியை
வெல்லலா காதென விளம்புகின் றனரால்.
நாசங் கூறும் ‘நாட்டு வயித்தியர்’
இவராம். இங்கிவ் விருதலைக் கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர்? 115

விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செய்க் கருதி யிருக்கின் றாயடா?


விதி

மேலேநீ கூறிய விநாசப் புலவரை
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்
எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும் 120

மற்றவை தழுவி வாழ்வீ ராயின்,
அச்சமொன்று இல்லை. ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும்............... 123




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com