Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

             பாரத மாதா நவரத்தின மாலை
             [ராகம் -- ஹிந்துஸ்தானி தோடி]

Bharathi

              காப்பு

வீரமுப் பத்திரண்டு கோடி விளைவித்த
பாரதமா தாவின் பதமலர்க்கே - சீரார்
நவரத்ன மாலையிங்கு நான்சூட்டக் காப்பாம்
சிவரத்ன மைந்தன் திறம்.

             வெண்பா

திறமிக்க நல்வயிரச் சீர்திகழும் மேனி
அறமிக்க சிந்தை அறிவு - பிறநலங்கள்
எண்ணற் றனபெறுவார் ‘இந்தியா’ என்றநின்றன்
கண்ணொத்த பேருரைத்தக் கால். 1

             கட்டளைக் கலித்துறை

காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக்
கும்பிட்டுக் கம்பனமுற்
றோலமிட்டோடி மறைந்தொழி
வான்; பகை யொன்றுளதோ?
நீலக் கடலொத்த கோலத்தி
னாள்மூன்று நேத்திரத்தாள்
காலக் கடலுக்கோர் பாலமிட்
டாள் அன்னை காற்படினே. 2

             எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்

அன்னையே, அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்றமணி மொழிக ளாலே
பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்,
பரவுபுகழ்ப் புராணங்கள், இதிஹா ஸங்கள்;
இன்னும்பல் நூல்களிலே இசைத்த ஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்
மின்னுகின்ற பேரொளி காண்! காலங்கொன்ற
விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே. 3

             ஆசிரியப்பா

வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
கற்றவ ராலே உலகுகாப் புற்றது
உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம்
இற்றை நாள் வரையினும், அறமிலா மறவர்,

குற்றமே தமது மகுடமாக் கொண்டோர்
மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே
முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்;
பற்றை அரசர் பழிபடு படையுடன்
சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்.
இவற்றை நாள்;

பாரிலுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
உற்றதிங் கிந்நாள் -- உலகெலாம் புகழ
இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்
கவீந்திரனாகிய ரவீந்திர நாதன்

சொற்றது கேளீர்: -- “புவிமிசை யின்று
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்,
தர்மமே உருவாம், மோஹன தாஸ
கர்ம சந்திர காந்தி” யென் றுரைத்தான்.
அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
அரசிய லதனிலும், பிறஇய லனைத்திலும்
வெற்றி தருமென வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள். இதனால் படஞர் தம்

செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் -- விரைவிலே.
(வெற்றி கூறுமின்; வெண்சங் கூதுமின்!) 4


             தரவுகொச்சகக் கலிப்பா

ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்!
ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!
தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோம்;
வேதனைகள் இனி வேண்டா; விடுதலையோ திண்ணமே. 5

             வஞ்சி விருத்தம்

திண்ணங் காணீர் பச்சை
வண்ணன் பாதத் தாணை;
எண்ணம் கெடுதல் வேண்டா!
திண்ணம், விடுதலை திண்ணம். 6

             கலிப்பா

“விடுத லைபெறு வீர் விர வா நீர்!
வெற்றி கொள்வீர் என்றுரைத் தெங்கும்
கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்
கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்,
“சுடுத லும்குளி ரும் உயிர்க் கில்லை;
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை;
எடுமி னோஅறப் போரினை” என்றான்
எங்கோ மேதகம் ஏந்திய காந்தி! 7


             அறுசீர் விருத்தம்

காந்திசேர் பதுமராகக் கடிமலர் வாழ்ஸ்ரீ தேவி,
போந்துநிற்கின்றாள் இன்று பாரதப் பொன்னாடெங்கும்.
மாந்தரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்து விட்டார்;
காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே 8

             எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்

கணமெனு மென்றன் கண்முனே வருவாய்,
பாரத தேவியே, கனல்கால்
இணைவிழி வால வாயமாஞ் சிங்க
முதுகினில் ஏறிவீற் றிருந்தே.
துணைநினை வேண்டும் நாட்டினார்க் கெல்லாம்
துயர்கெட விடுதலை யருளி
மணிநகை புரிந்து திகழ்திருக் கோலம்
கண்டு நான் மகிழ்ந்திடு மாறே. 9

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com