Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம் : சிதைந்த கனவு
4. நாவுக்கரசர்

ஏகாம்பரேசுவரர் கோயில் சந்நிதியில் இருந்த சைவத் திருமடத்திலும் அன்று மிக்க கலகலப்பாக இருந்தது. திருநாவுக்கரசர் பெருமான் சில நாளாக அந்த மடத்தில் எழுந்தருளியிருந்தார். அப்பெரியாரின் இசைப்பாடல்களை மாணாக்கர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக நாவுக்கரசர் அப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஆயனச் சிற்பியின் கண்களும் கசிவுற்றிருந்தன.

ஏகாம்பரேசுவரர் கோயிலில் உச்சிக் கால பூஜைக்குரிய மணி அடித்தது. பேரிகை முழக்கமும் கேட்டது. மாணாக்கர்கள் பதிகம் பாடுவதை நிறுத்தி உணவு கொள்வதற்காகச் சென்றார்கள்.

நாவுக்கரசரும் ஆயனரும் மட்டும் தனித்திருந்தார்கள். "சிற்பியாரே! பத்து வருஷத்துக்கு முன்னால் இதே இடத்தில் உம்முடைய புதல்வி அபிநயம் பிடித்தாள். அந்தக் காட்சி என் கண் முன்னால் இன்னமும் அப்படியே நிற்கிறது. 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்' என்று மாணாக்கர்கள் சற்றுமுன் பாடியபோது உம் புதல்வியை எண்ணிக் கொண்டேன். என்னை அறியாமல் உடனே கண்ணீர் பெருகிவிட்டது" என்றார்.

"அடிகளே! எனக்கும் அந்த நினைவு வந்தது. அன்றைக்கு நாங்கள் புறப்படும் போது என்னைப் பின்னால் நிறுத்தித் தாங்கள் எச்சரித்தபடியே நடந்துவிட்டது."

"ஆம், ஆயனரே! எனக்கும் அது ஞாபகம் வருகிறது. 'இப்பேர்ப்பட்ட தெய்வீக கலைத்திறமை பொருந்திய பெண்ணுக்கு உலக வாழ்க்கையில் கஷ்டம் ஒன்றும் வராமல் இருக்க வேண்டுமே!' என்ற கவலை ஏற்பட்டது, அதைத்தான் உம்மிடம் சொன்னேன்."

"சுவாமி, தங்களுடைய திரு உள்ளத்தில் உதயமான எண்ணம் எவ்வளவு உண்மையாய்ப் போய்விட்டது! சிவகாமிக்கு வந்த கஷ்டம் சொற்பமானதா? கனவிலும் எண்ணாத பேரிடியாக அல்லவா என் தலையில் விழுந்து விட்டது? பச்சைக் குழந்தையாகத் தொட்டிலில் கிடந்தபோதே அவளை என்னிடம் ஒப்புவித்துவிட்டு அவள் தாயார் கண்ணை மூடிவிட்டாள். அது முதல் பதினெட்டு வயது வரையில் என் கண்ணின் மணியைப் போல் அவளைப் பாதுகாத்தேன். ஒரு நாளாவது நாங்கள் ஒருவரையொருவர் பிரிந்து இருந்ததில்லை. அப்படி வளர்த்த குழந்தையைப் பிரிந்து இன்றைக்கு ஒன்பது வருஷமாயிற்று. இன்னமும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன். அடிகளே! ஒரு பாவமும் அறியாத எங்களைக் கருணைக் கடலான பெருமான் ஏன் இத்தகைய சோதனைக்கு ஆளாக்கினார்? நாங்கள் இறைவனுக்கு என்ன அபசாரம் இழைத்தோம்?" என்று ஆயனர் கேட்ட போது, அவருடைய கண்களிலிருந்து கலகலவென்று கண்ணீர் பொழிந்தது.

"ஆயனரே! வருந்த வேண்டாம். இறைவனுடைய திருவுள்ளத்தின் இரகசியங்களை மானிடர் அறிவது கடினம். அடியேனும் என் மனமறிந்து இந்தப் பூவுலகில் யாருக்கும் எந்தத் தீமையும் செய்ததில்லை. ஆயினும் இந்தச் சட உடலும் எத்தனையோ துன்பங்களை அனுபவித்தது. சிற்பியாரே! அடியேன் கண்ட உண்மையை உமக்குச் சொல்கிறேன். நாம் துன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பம் அல்ல! இன்பம் என்று கருதுவது உண்மையில் இன்பம் அல்ல. இன்ப துன்ப உணர்ச்சியானது உலக பாசத்தினால் ஏற்படுகிறது. இந்தப் பாசத்தைத்தான் பெரியோர் மாயை என்கிறார்கள். மாயை நம்மைவிட்டு அகலும் போது இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை என்பதை அறிவோம். அந்த இறைவனுடைய திருவருளாகிய பேரின்பம் ஒன்றுதான் மிஞ்சி நிற்கக் காண்போம்."

"சுவாமி! தங்களுடைய அமுத மொழிகளில் அடங்கிய உண்மையை நான் உணர்கிறேன். ஆயினும், என்னைவிட்டுப் பாசம் அகலவில்லையே? என்ன செய்வேன்?"

"பாசம் அகலுவதற்கு வழி இறைவனை இறைஞ்சி மன்றாடுவதுதான்!" என்றார் நாவுக்கரசர்.

"நான் மன்றாடவில்லையா? மன்றாடியை எண்ணி, இடைவிடாமல் மன்றாடிக் கொண்டுதானிருக்கிறேன். ஆயினும் என் மகள் மேல் உள்ள பாசம் விடவில்லையே! ஈசனைப் பிரார்த்திக்க நினைக்கும் போதெல்லாம் தூர தேசத்திலே, பகைவர்களின் கோட்டையிலே சிறையிருக்கும் என் மகளின் நினைவுதானே வருகிறது? 'இறைவா! என் மகளைக் காப்பாற்று, என் வாழ்நாள் முடிவதற்குள்ளாகச் சிவகாமியை இந்தக் கண்கள் பார்க்கும்படி கருணை செய்!' என்றுதானே வரங்கேட்கத் தோன்றுகிறது! என்ன செய்வேன்!" என்று ஆயனர் கூறி விம்மினார்.

"வேண்டாம், ஆயனரே! வருந்த வேண்டாம்!" என்று அவருக்கு ஆறுதல் கூறினார், உழவாரப்படை தரித்த உத்தமர். மேலும், "உமது மனோரதந்தான் நிறை வேறப் போகிறதே. மாமல்ல சக்கரவர்த்தி வாதாபி படையெடுப்புக்குப் பெரும் படை திரட்டியிருக்கிறாரே? இறைவன் அருளால் உம் மகள் திரும்பி வந்து சேருவாள், கவலைப்பட வேண்டாம். அதுவரையில் நீர் என்னுடன் இந்த மடத்திலேயே தங்கியிருக்கலாமே? அரண்ய வீட்டில் தனியாக ஏன் இருக்கவேண்டும்?" என்றார்.

"அடிகளே! மன்னிக்க வேண்டும், பல்லவ சைனியத்தோடு நானும் வாதாபிக்குச் செல்கிறேன்..." என்று ஆயனர் கூறியது வாகீசருக்குப் பெரும் வியப்பை அளித்தது.

"இதென்ன, ஆயனரே? போர்க்களத்தின் பயங்கரங்களைப் பார்க்க ஆசை கொண்டிருக்கிறீர்களா? மனிதர்களின் இரத்தம் ஆறுபோல் ஓடுவதைப் பார்க்க விரும்புகிறீரா? வெட்டப்பட்டும் குத்தப்பட்டும் கால் வேறு, கை வேறு, தலை வேறாகக் கிடக்கும் சடலங்களைப் பார்க்கப் பிரியப்படுகிறீரா?" என்று பெருந்தகையார் வினவினார்.

ஆயனர் சிறிது வெட்கமடைந்தவராய், "இல்லை அடிகளே! அதற்காகவெல்லாம் நான் போகவில்லை. என் மகளைப் பார்த்து அழைத்து வரலாமே என்ற ஆசையினாலே தான் போகிறேன்" என்றார்.

இந்தச் சமயத்தில் மடத்தின் வாசற்புறத்திலிருந்து சில ஸ்திரீ புருஷர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவர்கள்தான். சேனாதிபதி பரஞ்சோதி, அவருடைய மனைவி உமையாள், நமசிவாய வைத்தியர், அவருடைய சகோதரி ஆகியவர்கள் உள்ளே வந்து நாவுக்கரசருக்கு நமஸ்கரித்தார்கள்.

எல்லாரும் உட்கார்ந்த பிறகு, நமசிவாய வைத்தியர், "சுவாமி விடைபெற்றுப் போக வந்தேன்" என்றார்.

"ஆகா! ஊருக்குத் திரும்பிப் போகிறீர்களா? எனக்குக் கூடத் திருவெண்காட்டு இறைவனைத் தரிசிக்க வேண்டுமென்றிருக்கிறது. மறுபடியும் சோழ நாட்டுக்கு யாத்திரை வரும்போது தங்கள் ஊருக்கு வருவேன்" என்றார் வாகீசர்.

"இல்லை, அடிகளே! நான் திருவெண்காட்டுக்குப் போகவில்லை, வடக்கே வாதாபி நகருக்குப் போகிறேன்."

"இது என்ன! காஞ்சி நகரிலே ஒருவருமே மிஞ்சமாட்டார்கள் போலிருக்கிறதே? ஆயனர்தாம் அவருடைய மகளை அழைத்து வருவதற்காகப் போகிறார். நீர் எதற்காகப் போகிறீர் வைத்தியரே?"

"வைத்தியம் செய்வதற்குத்தான் போகிறேன், சுவாமி! சைனியத்தோடு ஒரு பெரிய வைத்தியர் படையும் போகிறது. அதன் தலைவனாக நானும் போகிறேன். சளுக்கர்கள் தர்ம யுத்தம் அதர்மயுத்தம் என்ற வித்தியாசம் இன்றி யுத்தம் செய்கிறவர்கள். முனையில் விஷம் ஏற்றிய வாள்களையும் வேல்களையும் உபயோகிப்பவர்கள். நம் மகேந்திர சக்கரவர்த்தி மீது விஷக்கத்தி பாய்ந்த செய்தி தங்களுக்குத் தெரியுமே? சக்கரவர்த்திக்குச் சிகிச்சை செய்தபோது அந்த விஷத்துக்கு மாற்றுக் கண்டுபிடித்தேன். அதன் பயனாக, யுத்தத்துக்கு நானும் வரவேண்டுமென்று பல்லவ சேனாதிபதியின் கட்டளை பிறந்தது!" என்று கூறிய நமசிவாய வைத்தியர், சேனாதிபதி பரஞ்சோதியைப் பெருமையுடன் பார்த்தார்.

"ஆ! இந்தப் பிள்ளைதான் தேசமெல்லாம் பிரசித்தி பெற்ற பல்லவ சேனாதிபதியா?" என்று கூறித் திருநாவுக்கரசர் பரஞ்சோதியை உற்றுப் பார்த்தார்.

"இவனுடைய முகத்தில் சாத்விகக் களை விளங்குகிறதே? மகோந்நதமான சிவபக்திப் பெருஞ் செல்வத்துக்கு உரியவனாகக் காணப்படுகிறானே? இவன் ஏன் இந்த கொலைத் தொழிலில் பிரவேசித்தான்?" என்று வினவினார்.

இதைக் கேட்டதும் நமசிவாய வைத்தியரும் அவருடைய சகோதரியும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை புரிந்தார்கள். உமையாளும் தன் கணவனுடைய முகத்தைச் சிறிது நாணத்துடன் பார்த்துக் குறுநகை புரிந்தாள். பரஞ்சோதியின் முகத்திலும் புன்னகை தோன்றவில்லையென்று நாம் சொல்ல முடியாது.

"சுவாமி! தங்களுடைய திருமடத்தில் சேர்ந்து தமிழ்க்கல்வி கற்பதற்காகத்தான் இவனைப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் காஞ்சிக்கு அனுப்பினோம். விதியானது இவனை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்தது. இவனோடு என்னையும் சேர்த்துக் கட்டிப் போர்க்களத்திற்கு இழுக்கிறது" என்றார்.

நாவுக்கரசர் பரஞ்சோதியை இன்னொரு முறை உற்றுப் பார்த்துவிட்டு "இவனையா விதி இழுத்துச் செல்கிறது என்கிறீர்கள்! விதியையே மாற்றி அமைக்கக் கூடிய உறுதி படைத்தவன் என்று இவன் முகக் களை சொல்கிறதே?" என்றார்.

தளபதி பரஞ்சோதி அந்தக்கணமே எழுந்து திருநாவுக்கரசரின் அடிபணிந்து, "குருதேவரே! தங்களுடைய திருவாக்கை ஆசிமொழியாகக் கொள்கிறேன்!" என்று சொன்னார்.

பரஞ்சோதியின் தாயார் அப்போது எழுந்து நின்று வணக்கத்துடன், "சுவாமி! முன்னொரு சமயம் தாங்கள் திருவெண்காட்டுக்கு வந்திருந்தபோது இவள் தங்களை நமஸ்கரித்தாள். 'சீக்கிரம் விவாகம் ஆகவேண்டும்' என்று கூறினீர்கள். அதன்படியே விவாகம் நடந்தது" என்று சொல்லி நிறுத்தினாள்.

"என் வாக்குப் பலித்தது பற்றி மிகவும் சந்தோஷம், அம்மா!" என்றார் வாகீசப் பெருமான்.

"தங்களுடைய திருவாக்கிலே எது வந்தாலும் அது பலிக்கும். கருணை கூர்ந்து இவளுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்படி ஆசீர்வதிக்க வேண்டும்" என்று அந்த மூதாட்டி கூறினாள்.

திருநாவுக்கரசர் மலர்ந்த முகத்துடன் பரஞ்சோதியையும் உமையாளையும் பார்த்தார். "கதைகளிலும் காவியங்களிலும் பிரசித்தி பெறப்போகும் உத்தமமான புதல்வன் இவர்களுக்கு உதிப்பான்!" என்று அருள் புரிந்தார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com