Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

நான்காம் பாகம் : சிதைந்த கனவு
2. மானவன்மன்

திருக்கழுக்குன்றத்தைச் சுற்றிலும் விசாலமான பிரதேசத்தில் பல்லவ சைனியம் தண்டு இறங்கியிருந்தது. அந்தக் குன்றின் உச்சியில் வீற்றிருந்த சிவபெருமானாகட்டும், அந்தப் பெருமானைத் தினந்தோறும் வந்து வழிபட்டுப் பிரஸாதம் உண்டு சென்ற கழுகுகள் ஆகட்டும், அதற்கு முன்னால் அக்குன்றின் சாரலில் அம்மாதிரிக் காட்சியை எப்போதும் பார்த்திருக்க முடியாது. குன்றின் மேலேயிருந்து வடக்கே நோக்கினால் கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஒரே யானைகள் யானைகள், யானைகள்! உலகத்திலே இத்தனை யானைகள் இருக்க முடியாது! இவ்வளவு யானைகளும் ஒரே இடத்தில் வந்து சேர்ந்திருப்பதினால் பூமி நிலை பெயர்ந்து விடாதா என்றெல்லாம் பார்ப்பவர்கள் மனத்தில் சந்தேகத்தைக் கிளப்பும்படியாக எல்லையில்லாத தூரம் ஒரே யானை மயமாகக் காணப்பட்டது.

கிழக்கே திரும்பிப் பார்த்தால், உலகத்திலே குதிரைகளைத் தவிர வேறு ஜீவராசிகள் இல்லையென்று சொல்லத் தோன்றும். எல்லாம் உயர்ந்த ஜாதிக் குதிரைகள். அரபு நாட்டிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் கப்பலில் வந்து மாமல்லபுரம் துறைமுகத்தில் இறங்கியவை. வெள்ளை நிறத்தவை, சிவப்பு நிறத்தவை, பளபளப்பான கரிய நிறமுடையவை, சிவப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளி உள்ளவை. ஹா ஹா! அந்த அழகிய மிருகங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாமென்று தோன்றும். போர்க்களத்துக்குப் போகும் இந்தப் பதினாயிரக்கணக்கான குதிரைகளில் எவ்வளவு குதிரைகள் உயிரோடு திரும்பி வருமோ என்று நினைத்துப் பார்த்தால் கதிகலங்கும்.

தென்புறத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் குதிரைகள் பூட்டிய ரதங்களும், ரிஷபங்கள் பூட்டிய வண்டிகளும், பொதி சுமக்கும் மாடுகளும் ஒட்டகங்களும் கோவேறு கழுதைகளும் காணப்பட்டன. வண்டிகளிலே தானிய மூட்டைகளும் துணி மூட்டைகளும் கத்திகளும் கேடயங்களும் வாள்களும் வேல்களும் ஈட்டிகளும் சூலங்களும் வில்களும் அம்பறாத் தூணிகளும் இன்னும் விதவிதமான விசித்திர ஆயுதங்களும் பிரம்மாண்டமான வடக் கயிறுகளும் நூல் ஏணிகளும் கொக்கிகளும் அரிவாள்களும் மண்வெட்டிகளும் தீப்பந்தங்களும் தீவர்த்திகளும் அடுக்கப்பட்டிருந்தன. வண்டியில் ஏற்றப்படாமல் இன்னும் எத்தனையோ ஆயுதங்களும் மற்றக் கருவிகளும் மலைமலையாக ஆங்காங்கு கிடந்தன. ஓரிடத்தில் மலைபோலக் குவிந்திருந்த தாழங்குடைகளைப் பார்த்தால் அவற்றைக் கொண்டு பூமியின் மீது ஒரு சொட்டு மழை கூட விழாமல் வானத்தையே மூடி மறைத்து விடலாம் என்ற எண்ணம் உண்டாகும்.

மேற்கே திரும்பினால், அம்மம்மா! பூவுலகத்திலுள்ள மனிதர்கள் எல்லாம் இங்கே திரண்டு வந்திருக்கிறார்களா என்ன? அப்படிக் கணக்கிட முடியாத வீரர்கள் ஈ மொய்ப்பது போலத் தரையை மொய்த்துக் கொண்டு நின்றார்கள்! இராவணேசுவரனுடைய மூல பல சைனியம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கும் மகா சைனியத்திலே கூட வீரர்களின் எண்ணிக்கை இவ்வளவு இருந்திருக்குமா என்று சொல்ல முடியாது.

இவ்விதம் அந்த நாலு வகைப்பட்ட பல்லவ சைனியமும் தண்டு இறங்கியிருந்த பிரதேசம் முழுவதிலும் ஆங்காங்கு ரிஷபக் கொடிகள் வானளாவிப் பறந்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.

மேற்கூறிய சேனா சமுத்திரத்தை அணுகி, மாமல்ல நரசிம்ம சக்கரவர்த்தியானவர் ரதத்தில் வந்து கொண்டிருந்தார்.

அவரைத் தூரத்திலே பார்த்ததும், பூரண சந்திரனைக் கண்டு ஆஹ்லாதித்துப் பொங்கும் சமுத்திரத்தைப் போல அந்தச் சேனா சமுத்திரத்தில் மகத்தான ஆரவாரம் ஏற்பட்டது. சங்கங்களும் தாரைகளும் பேரிகைகளும் முரசுகளும் 'கடுமுகங்'களும் 'சமுத்திரகோஷங்'களும் சேர்ந்தாற்போல் முழங்கியபோது எழுந்த பேரொலியானது, நாற்றிசைகளிலும் பரவி, வான முகடு வரையில் சென்று, அங்கிருந்து கிளம்பி எதிரொலியோடு மோதி, கொந்தளிக்கும் கடலில் அலைகள் ஒன்றையொன்று தாக்கி உண்டாக்குவது போன்ற பேரமளியை உண்டாக்கியது. இன்னும் அந்த வீரர் பெருங்கூட்டத்தில் ஆயிரமாயிரம் வலிய குரல்களிலிருந்து, "மாமல்லர் வாழ்க!", "புலிகேசி வீழ்க!" "காஞ்சி உயர்க!", "வாதாபிக்கு நாசம்!" என்பன போன்ற கோஷங்கள் காது செவிடுபடும்படியான பெருமுழக்கமாக ஏகோபித்து எழுந்து, வானமும் பூமியும் அதிரும்படி செய்தன.

இப்படி ஆரவாரித்த மாபெரும் சைனியத்திலிருந்து தனியே பிரிந்து உயர்ந்த ஜாதிக் குதிரை மீது ஆரோகணித்திருந்த ஒரு கம்பீர புருஷன் சக்கரவர்த்தியின் ரதத்தை எதிர்கொள்வதற்காக முன்னோக்கிச் சென்றான். ரிஷபக் கொடி ஏந்திய வீரர் இருவர் அவனைத் தொடர்ந்து பின்னால் சென்றார்கள். அப்படி மாமல்லரை எதிர்கொள்வதற்காகச் சென்றவன்தான் மானவன்மன் என்னும் இலங்கை இளவரசன்.

இந்த மானவன்மனுடைய தந்தையும் மகேந்திர பல்லவரும் நண்பர்கள். மகேந்திர பல்லவரைப் போலவே மானவன்மனுடைய தந்தையும் கலைகள் வளர்ப்பதில் ஈடுபட்டு, அரசியலை அதிகமாய்க் கவனியாது விட்டிருந்தார். இதன் பலனாக அவர் இறந்ததும் மானவன்மன் சிம்மாசனம் ஏற இடங்கொடாமல் அட்டதத்தன் என்னும் சிற்றரசன் இராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டான். மானவன்மன் காஞ்சி மாமல்லருக்கு உதவி கோரித் தூது அனுப்பினான். அப்போதுதான் தொண்டை மண்டலத்தைப் பெரும் பஞ்சம் பீடித்திருந்தது. எனினும் மாமல்லர் ஒரு சிறு படையைக் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படை இலங்கையை அடையும் சமயத்தில் மானவன்மன் படுதோல்வியுற்றுக் காட்டில் ஒளிந்து கொண்டிருந்தான். மாமல்லர் அனுப்பிய சிறு படை அட்டதத்தனோடு போரிடுவதற்குப் போதாது என்று கண்ட மானவன்மன், பல்லவர் படையோடு தானும் கப்பலில் ஏறிக் காஞ்சிக்கு வந்து சேர்ந்தான்.

மகேந்திர பல்லவருடைய சிநேகிதரின் மகன் என்ற காரணத்தினால், மானவன்மன் மீது இயற்கையாகவே மாமல்லருக்கு அன்பு ஏற்பட்டது. அதோடு அயல்நாட்டிலிருந்து தம்மை நம்பி வந்து அடைக்கலம் புகுந்தவனாகையால் அன்போடு அனுதாபமும் சேர்ந்து, அழியாத சிநேகமாக முதிர்ச்சி அடைந்தது. வெகு சீக்கிரத்தில் இணை பிரியாத தோழர்கள் ஆனார்கள். மாமல்லர் பரஞ்சோதிக்குத் தமது இருதயத்தில் எந்த ஸ்தானத்தைக் கொடுக்க விரும்பினாரோ, அந்த ஸ்தானத்தை இப்போது மானவன்மன் ஆக்கிரமித்துக் கொண்டான்.

உண்மையில் மாமல்லருக்கும் பரஞ்சோதிக்கும் மனமொத்த அந்தரங்க சிநேகிதம் எப்போதும் ஏற்படவேயில்லை. ஏனெனில், பரஞ்சோதியின் உள்ளத்தில் மாமல்லர் புராதன சக்கரவர்த்தி குலத்தில் உதித்தவராகையால் தாம் அவரோடு சரி நிகர் சமானமாக முடியாது என்னும் எண்ணம் எப்போதும் இருந்து வந்தது.

அதோடு, ஒன்பது வருஷத்துக்கு முன்னால் வாதாபியிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து, சேனாதிபதி பரஞ்சோதி படையெடுப்புக்கு வேண்டிய ஆயத்தங்களில் முழுவதும் கவனத்தைச் செலுத்தியிருந்தார். ஊர் ஊராகச் சென்று வீரர்களைத் திரட்டுவதிலும், அவர்களுக்குப் போர்ப் பயிற்சி அளிப்பதிலும், அவர்களில் யானைப் படை, குதிரைப் படைகளுக்கு ஆட்களைப் பொறுக்கி அமைப்பதிலும், ஆயுதங்கள் சேகரிப்பதிலும் அவர் பரிபூரணமாய் ஈடுபட்டிருந்தார். மாமல்லரிடம் சிநேகித சல்லாபம் செய்வதற்கு அவருக்கு நேரமே இருப்பதில்லை. எனவே, மாமல்லருக்கு மனமொத்துப் பழகுவதற்கு வேறொருவர் தேவையாயிருந்தது. அந்தத் தேவையை இலங்கை இளவரசன் மானவன்மன் பூர்த்தி செய்வித்தான்.

மானவன்மன் இலங்கையிலிருந்து காஞ்சி வந்தவுடனே மாமல்லர் அவனுடைய உதவிக்காகப் பெரிய சைனியத்தை அனுப்பி வைப்பதாகக் கூறினார். ஆனால் அப்போது வாதாபி படையெடுப்புக்காகச் சைனியம் திரட்டப்பட்டு வந்ததை மானவன்மன் அறிந்ததும் அந்தச் சைனியத்தில் ஒரு பெரும் பகுதியைப் பிரித்துக் கொண்டு போக விரும்பவில்லையென்பதைத் தெரிவித்தான். வாதாபி யுத்தம் முடியும் வரையில் அங்கேயே தான் தங்குவதாகவும், பிறகு இலங்கைக்குப் போவதாகவும் சொன்னான்.

இதனால் மாமல்லர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அச்சமயம் இலங்கைக்குப் பெரிய சைனியம் அனுப்புவதற்குச் சேனாதிபதி பரஞ்சோதி ஆட்சேபிப்பார் என்ற பயம் மாமல்லருக்கு உள்ளுக்குள் இருந்தது. எனவே, மானவன்மன் இலங்கைப் படையெடுப்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னது நரசிம்மவர்மருக்கு மிக்க திருப்தியையளித்தது. மானவன்மனுடைய பெருந்தன்மையைப் பற்றியும், சுயநலமில்லாத உயர்ந்த குணத்தைப் பற்றியும் எல்லாரிடமும் சொல்லிச் சொல்லிப் பாராட்டினார்.

பின்னர், வாதாபிப் படையெடுப்புக்குரிய ஆயத்தங்களில் மானவன்மனும் பரிபூரணமாய் ஈடுபட்டான். முக்கியமாக யானைப் படைப் போரில் மானவன்மனுக்கு விசேஷ சாமர்த்தியம் இருந்தது. எனவே, யானைப் படைகளைப் போருக்குப் பயிற்சி செய்வதில் அவன் கவனத்தைச் செலுத்தினான்.

புலிகேசி முன்னம் படையெடுத்து வந்த போது, அவனுடைய பெரிய யானைப் படைதான் அவனுக்கு ஆரம்பத்தில் வெற்றி அளித்ததென்றும், யானைப் படை போதிய அளவில் இல்லாதபடியாலேயே மகேந்திர பல்லவர் பின்வாங்கவும் கோட்டைக்குள் ஒளியவும் நேர்ந்தது என்றும் பரஞ்சோதியும் மாமல்லரும் அறிந்திருந்தார்கள். எனவே, வாதாபிப் படையெடுப்புக்குப் பெரும் யானைப் படை சேகரிக்கத் தீர்மானித்து, சேர நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான யானைகள் தருவித்திருந்தார்கள். அந்த யானைகளைப் போருக்குப் பழக்குவதற்கு மானவன்மன் மிக்க உதவியாயிருந்தான்.

வாதாபிக்குப் படை கிளம்ப வேண்டிய தினம் நெருங்க நெருங்க, மானவன்மனுக்கும் மாமல்லருக்கும் ஒரு பெரும் வாக்குப் போர் நடக்கலாயிற்று. படையெடுப்புச் சேனையோடு தானும் வாதாபி வருவதற்கு மானவன்மன் மாமல்லரின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். மாமல்லரோ வேறு யோசனை செய்திருந்தார். அதிதியாக வந்து அடைக்கலம் புகுந்தவனைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போக அவருக்கு விருப்பம் இல்லை. அதோடு அவர் மனத்தில் இன்னொரு யோசனையும் இருந்தது. தாமும் பரஞ்சோதியும் வாதாபிக்குச் சென்ற பிறகு, காஞ்சி இராஜ்யத்தைக் கவனித்துக் கொள்ளவும் அவசியமான போது தளவாடச் சாமான்கள், உணவுப் பொருள்கள் முதலியவை சேர்த்துப் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கவும் திறமையுள்ள ஒருவர் காஞ்சியில் இருக்க வேண்டும். அதற்கு மானவன்மனை விடத் தகுந்தவர் வேறு யார்.

அன்றியும் மானவன்மனைக் காஞ்சியில் விட்டுப் போவதற்கு மாமல்லரின் இதய அந்தரங்கத்தில் மற்றொரு காரணமும் இருந்தது. வாழ்வு என்பது சதமல்ல. எந்த நிமிஷத்தில் யமன் எங்கே, எந்த ரூபத்தில் வருவான் என்று சொல்ல முடியாது. அதிலும் நெடுந்தூரத்திலுள்ள பகைவனைத் தாக்குவதற்குப் படையெடுத்துப் போகும்போது, எந்த இடத்தில் உயிருக்கு என்ன அபாயம் நேரும் என்று யாரால் நிர்ணயிக்க முடியும்? புலிகேசியைக் கொன்று, வாதாபியையும் நிர்மூலமாக்காமல் காஞ்சிக்குத் திரும்புவதில்லையென்று மாமல்லர் தம் மனத்திற்குள் சங்கல்பம் செய்து கொண்டிருந்தார். வெற்றி கிடைக்காவிட்டால் போர்க்களத்தில் உயிரைத் தியாகம் செய்யும்படியிருக்கும். அப்படி ஒருவேளை நேர்ந்தால் காஞ்சிப் பல்லவ இராஜ்யம் சின்னாபின்னமடையாமல் பார்த்துக் கொள்வதற்கும், குமாரன் மகேந்திரனைச் சிம்மாசனத்தில் ஏற்றி ஸ்திரப்படுத்துவதற்கும் யாராவது ஒரு திறமைசாலி வேண்டாமா? அந்தத் திறமைசாலி தம்முடைய நம்பிக்கைக்கு முழுதும் பாத்திரமானவனாயும் இருக்க வேண்டும்.

காஞ்சி இராஜ்யத்தையும் குமாரன் மகேந்திரனையும் நம்பி ஒப்படைத்து விட்டுப் போவதற்கு மானவன்மனைத் தவிர யாரும் இல்லை. தம் மைத்துனனாகிய ஜயந்தவர்ம பாண்டியனிடம் மாமல்லருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஜயந்தவர்மனுக்கு ஒரு காலத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆள வேண்டுமென்ற ஆசை இருந்ததென்பது மாமல்லருக்குத் தெரியும்.

பாண்டியனிடம் தமக்கு உள்ளுக்குள் இருந்த அவநம்பிக்கையை மாமல்லர் வெளியே காட்டிக் கொள்ளாமல் வாதாபி படையெடுப்புக்கு அவனுடைய உதவியைக் கோரினார். ஜயந்தவர்மனும் தன்னுடைய மகன் நெடுமாறனின் தலைமையில் ஒரு பெரிய சைனியத்தை அனுப்புவித்தான். அந்தச் சைனியந்தான் வராக நதிக்கரைக்கு அப்போது வந்திருந்தது. இப்படி மாமல்லர் பாண்டியனிடம் யுத்தத்துக்கு உதவி பெற்றாரெனினும், தம் ஆருயிர்த் தோழனான மானவன்மனிடமே முழு நம்பிக்கையும் வைத்து, அவனைக் காஞ்சியில் இருக்கச் சொல்லி விட்டுத் தாம் வாதாபி செல்வதென்று தீர்மானித்தார்.

மானவன்மனோ, பிடிவாதமாகத் தானும் வாதாபிக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான். மேற்படி விவாதம் அவர்களுக்குள் இன்னும் முடியாமலே இருந்தது.

மாமல்லர் ரதத்திலிருந்தும் மானவன்மன் குதிரை மீதிருந்தும் கீழே குதித்தார்கள். ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு மகிழ்ந்தார்கள். பிறகு மானவன்மன் ரதத்திலிருந்த ஆயனரைச் சுட்டிக்காட்டி, "அண்ணா! இந்தக் கிழவரை எதற்காக அழைத்து வந்தீர்கள். படையெடுக்கும் சைனியத்தைப் பார்த்துவிட்டுப் போவதற்கா? அல்லது ஒருவேளை யுத்தத்துக்கே அழைத்துப் போக உத்தேசமா?" என்று கேட்டான்.

அதற்கு மாமல்லர், "அதை ஏன் கேட்கிறாய், தம்பி! ஆயனக் கிழவர் எல்லார்க்கும் முன்னால் தாம் போருக்குப் போக வேண்டும் என்கிறார். அவருக்குப் போட்டியாகக் குமாரன் மகேந்திரன் தானும் யுத்தத்துக்குக் கிளம்புவேனென்கிறான். 'அண்ணா யுத்தத்துக்குப் போனால் நானும் போவேன்' என்கிறாள் குந்தவி. இதோடு போச்சா? நமது சாரதி கண்ணன் மகன் சின்னக் கண்ணன் இருக்கிறான் அல்லவா? அவன் நேற்றுக் கையிலே கத்தி எடுத்து கொண்டு தோட்டத்துக்குள் புகுந்து, 'சளுக்கர் தலையை இப்படித்தான் வெட்டுவேன்' என்று சொல்லிக் கொண்டே அநேகச் செடிகளை வெட்டித் தள்ளி விட்டானாம்!" என்றார்.

மானவன்மன் குறுக்கிட்டு, "ஆயனக் கிழவர், சின்னக் கண்ணன், குமார சக்கரவர்த்தி, குந்தவி தேவி ஆகிய வீரர்களைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போங்கள். என்னைப் போன்ற கையாலாகாதவர்களைக் காஞ்சியில் விட்டு விடுங்கள்!" என்றான்.

"அப்படியெல்லாம் உன்னைத் தனியாக விட்டு விட்டுப் போக மாட்டேன். மாமா காஞ்சியில் இருந்தால் தானும் இருப்பதாக மகேந்திரன் சொல்கிறான். மகேந்திரன் இருந்தால் தானும் இருப்பதாகக் குந்தவி சொல்கிறாள்" என்றார் மாமல்லர்.

உடனே மானவன்மன், குமார சக்கரவர்த்தியைத் தூக்கிக் கொண்டு, "நீ ஒரு குழந்தை! நானும் ஒரு குழந்தை, நாம் இரண்டு பேரும் காஞ்சியில் இருப்போம். மற்ற ஆண் பிள்ளைகள் எல்லாம் யுத்தத்துக்குப் போகட்டும்!" என்றான்.

அப்போது குந்தவி, "ஏன் மாமா! உங்கள் அப்பாவுக்கு நீங்கள் குழந்தைதானே?" என்று வெடுக்கென்று கேட்டாள்.

மானவன்மன் குமார மகேந்திரனைத் தரையில் விட்டு விட்டுக் குந்தவியின் முன்னால் வந்து கைகட்டி வாய் புதைத்து நின்று, "தேவி! தாங்கள் இருக்குமிடத்தில் யாரும் வாயைத் திறக்கக் கூடாதல்லவா? நான் பேசியது பிசகு! மன்னிக்க வேண்டும்!" என்று வேடிக்கையான பயபக்தியோடு சொல்லவும், ஆயனர் உள்பட அனைவரும் நகைத்தார்கள்.

அன்று சாயங்காலம் மாமல்லரும் மானவன்மனும் தனிமையில் சந்தித்த போது, "அண்ணா! உண்மையாகவே ஆயனரை வாதாபிக்கு அழைத்துப் போகப் போகிறீர்களா?" என்று கேட்டான்.

"ஆமாம், தம்பி! இரண்டு முக்கிய காரணங்களுக்காக அவரை அழைத்துப் போகிறேன். முதலாவது, நம் படை வீரர்கள் தூர தேசத்தில் இருக்கும் போது காலொடிந்த கிழவரைப் பார்த்தும் அவருடைய புதல்வியை நினைத்தும் மனஉறுதி கொள்வார்கள். அதோடு, யாருக்காக இத்தகைய பெருஞ்சேனை திரட்டிக் கொண்டு படையெடுத்துச் செல்கிறோமோ, அவளை ஒருவேளை உயிரோடு மீட்க முடிந்தால், உடனே யாரிடமாவது ஒப்புவித்தாக வேண்டுமல்லவா? அவளுடைய தந்தையிடமே ஒப்புவித்து விட்டால் நம் கவலையும் பொறுப்பும் விட்டது" என்றார் மாமல்லர்.

அப்போது அவர் விட்ட பெருமூச்சு மானவன்மனுடைய இருதயத்தில் பெரு வேதனையை உண்டாக்கியது.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com