Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
8. யோக மண்டபம்

நீண்ட காலத்திற்குப் பிறகு நாம் மறுபடியும் கண்ணபிரானுடைய வீட்டுக்குள் பிரவேசிக்கும் போது, அங்கே 'குவா குவா' என்ற சப்தத்தைக் கேட்டுத் திடுக்கிடுகிறோம்.

வாசற்படியில் சிறிது தயங்கி நின்று விட்டு உள்ளே சென்றோமானால், அஸ்தமன வேளையின் மங்கிய வெளிச்சத்தில் அங்கே ஓர் அபூர்வமான காட்சியைக் காண்கிறோம்.

விபூதி ருத்ராட்சமணிந்து கனிந்த சிவப்பழமாய்த் தோற்றமளித்த ஒரு சைவப் பெரியார் நிற்கிறார். அவருடைய நீட்டிய இரு கரங்களிலும் ஒரு பச்சைக் குழந்தை - ஆறு மாதத்துக் குழந்தை காணப்படுகிறது - மூக்கும் முழியுமாக வெண்ணெய் தின்ற கண்ணனைப் போல் கிண்ணென்றிருந்த அந்தக் குழந்தைதான் 'குவா குவா' என்று அழுகிறது. அந்தச் சைவப் பெரியாருக்கு எதிரில் கண்ணபிரானும், கமலியும் நின்று புன்னகை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பெரியவர், குழந்தையைக் கமலியின் கைகளில் விட்டு விடப் பார்க்கிறார். கமலி குழந்தையை வாங்கிக் கொள்ள மறுத்துப் பின்வாங்குகிறாள். "நான் என்ன செய்வேன்? பாட்டனைக் கண்டால் பேரனுக்கு அவ்வளவு ஆசை, என்னிடம் வர மாட்டேனென்கிறான்" என்று சொல்கிறாள் கமலி. இதையெல்லாம் பார்த்துக் கண்ணபிரான் சந்தோஷப்பட்டுக் கொண்டே நிற்கிறான்.

குழந்தை 'குவா குவா' என்று கத்திக் கொண்டே காலையும் கையையும் உதைத்துக் கொள்கிறது. கிழவர்..."கமலி! உன்னுடைய பொல்லாத்தனம் உன் குழந்தையிடமும் இருக்கிறது!" என்கிறார்.

அச்சமயம், வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து அதாவது அரண்மனைத் தோட்டத்திலிருந்து மணி அடிக்கும் சப்தம் கேட்கிறது. பெரியவர் அதைக் கேட்டதும் அதிக பரபரப்பை அடைகிறார். அப்பால் இப்பால் பார்க்கிறார், குழந்தையைத் திடீரென்று தரையில் விட்டு விட்டுத் தோட்டத்தைப் பார்க்க ஓட்டம் பிடிக்கிறார்.

கமலி தன் கண்களில் தீப்பொறி பறக்க, "பார்த்தாயா, உன் தகப்பன் சாமர்த்தியத்தை? பச்சைக் குழந்தையைத் தரையிலே போட்டு விட்டு ஓட எப்படித்தான் மனம் வந்ததோ?" என்றாள்.

"கமலி! அப்பாவின் பேரில் குற்றம் இல்லை. நாதப் பிரம்மம் நேரிலே வந்து கூப்பிடும் போது அவர் என்ன செய்வார்?"

"நாதப் பிரம்மமும் ஆச்சு! நாசமாய்ப் போனதும் ஆச்சு! வெறும் ஆஷாடபூதி. அவ்வளவு வைராக்கிய புருஷராயிருந்தால், காட்டுக்குத் தபசு செய்யப் போவதுதானே? அரண்மனைத் தோட்டத்தில் சிங்கார மண்டபத்தில் என்ன வேலை? சமாதி கட்டிக் கொள்ள இங்கேதானா இடம் அகப்பட்டது? அது போகட்டும், என் பொல்லாத்தனமெல்லாம் என் குழந்தைக்கும் வந்திருக்கிறதாமே! கிழவரின் வாய்த் துடுக்கைப் பார்த்தாயா? இவருடைய மகன் மட்டும் ரொம்பச் சாதுவாம்! பார்! நான் போய் விடுகிறேன். என் தங்கை சிவகாமியைப் பார்க்க வேண்டுமென்று எனக்குக் கூட ஆசையாய் இருக்கிறது. கோட்டைக் கதவு திறந்ததும் இந்தப் பொல்லாத பிள்ளையையும் அழைத்துக் கொண்டு போய் விடுகிறேன்! இந்த அரண்மனைச் சிறையில் யார் இருப்பார்கள்?"

இப்படி கமலி மூச்சு விடாமல் பேசிக் கொண்டே தரையில் கிடந்த குழந்தையை எடுக்கப் போனாள். கண்ணனும் அதே சமயத்தில் குழந்தையை எடுப்பதற்காகக் கீழே குனிந்தான். இருவருடைய தலைகளும் மோதிக் கொண்டன. "இந்தப் பொல்லாதவனை நீ ஒன்றும் எடுக்க வேண்டாம்!" என்றாள் கமலி. "அப்படித்தான் எடுப்பேன்; நீ என்ன சொல்கிறது?" என்றான் கண்ணன். இப்படி இவர்கள் குழந்தையைத் தரையிலிருந்து யார் எடுப்பது என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே, வாசலில் குதிரைச் சப்தம் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் யாரோ உள்ளே வந்தார்கள். யார் என்று திரும்பிப் பார்த்த கண்ணபிரானும் கமலியும் அப்படியே பார்த்தது பார்த்தபடி பிரமித்து நின்றார்கள்.

ஏனெனில், அவ்விதம் திடீரென்று வந்தவர் சாஷாத், மகேந்திர பல்லவ சக்கரவர்த்திதான்!

"ஓஹோ! இங்கேயும் ஒரு யுத்தமா? நாட்டிலே யுத்தம் நின்று விடும் போல் இருக்கிறது. ஆனால், உங்கள் வீட்டு யுத்தம் மட்டும் நிற்கவே நிற்காது போலிருக்கிறதே!" என்று சக்கரவர்த்தி கூறியதும் தம்பதிகள் இருவரும் பெரிதும் வெட்கமடைந்து மறுமொழி சொல்ல முடியாமல் நின்றார்கள்.

பிறகு மகேந்திர பல்லவர், "கமலி! உன் குழந்தை சௌக்கியமாயிருக்கிறதா?" என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து குழந்தையின் முகத்தைப் பார்த்து விட்டு, "கண்ணனை அப்படியே உரித்து வைத்திருக்கிறது! சின்னக் கண்ணன் என்றே பெயர் வைத்து விடலாம். மாமல்லனுக்கும் கலியாணமாகி இந்த மாதிரி ஒரு குழந்தை பிறந்தால், அரண்மனை கலகலவென்று இருக்கும். அரண்மனையில் குழந்தை அழுகைச் சப்தம் கேட்டு வெகுகாலம் ஆயிற்று!" என்று தமக்குத் தாமே பேசிக் கொள்கிறவர் போல் சொல்லி விட்டு, "கண்ணா உன் தகப்பனார் எங்கே?" என்று கேட்டார்.

"இப்போதுதான் வசந்த மண்டபத்துக்குப் போனார், பிரபு!" என்றான் கண்ணன்.

"ஆ! மகரிஷி யோக சாதனைக்குப் போய் விட்டாரா!" என்று மகேந்திரர் கேட்டபோது, கமலி இலேசாகச் சிரித்தாள்.

"கமலி சிரிக்கிறாள்! உங்களைப் போல் இளம் வயதாயிருப்பவர்களுக்கு யோகம், சமாதி என்றால் சிரிப்பாய்த்தான் இருக்கும். வயதாகி உலகத்தில் விரக்தி ஏற்பட்டால் அப்புறம் நீங்களும் போகும் வழிக்குக் கதி தேடலாமென்று யோசிப்பீர்கள். போகட்டும்; உங்களுடைய யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துங்கள். நான் யோகியைப் பார்த்து விட்டுப் போகிறேன்" என்று சொல்லிக் கொல்லைப்பக்கம் நோக்கிச் சென்றவர், வாசற்படியண்டை சற்று நின்று, "கமலி! உன் சிநேகிதி சிவகாமியைக் கூடிய சீக்கிரத்தில் நீ பார்க்கலாம்!" என்று கூறி விட்டு மேலே நடந்தார்.

சக்கரவர்த்தி மறைந்ததும், கமலி, "கண்ணா! இதென்ன சக்கரவர்த்தி திடீரென்று வந்து நம் மானத்தை வாங்கி விட்டார்! சிவகாமி கூடிய சீக்கிரம் வருவாள் என்று அவர் சொன்னதைக் கேட்டாயா, கண்ணா? யுத்தம் சீக்கிரத்தில் முடிந்து விடப் போகிறதா? சளுக்கர்கள் தோற்று ஓடிப் போய் விட்டார்களா?" என்று ஏதேதோ கேட்டாள்.

அந்தக் கேள்விகளையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதவனாய்க் கண்ணபிரான் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவன், சட்டென்று யோசனையை நிறுத்தி, "கமலி! கொஞ்ச நாளாகவே எனக்கு ஒரு மாதிரி சந்தேகம் இருந்தது. அது இன்றைக்கு ஊர்ஜிதமாயிற்று!" என்றான்.

"என் பேரில் சந்தேகம் வந்து விட்டதா? அது என்ன சந்தேகம்?"

"உன் பேரில் எனக்கு யாதொரு சந்தேகமும் இல்லை. சந்தேகம் என் தகப்பனார் பேரில்தான். அவர் ஏதோ யோகம், தியானம் நாதப்பிரம்ம உபாசனை என்றெல்லாம் சொல்லிக் கொண்டு நந்தவன மண்டபத்துக்குப் போய் இரவு பகலாய் உட்கார்ந்திருக்கிறாரே, அதில் ஏதோ அந்தரங்கம் இருக்க வேண்டுமென்று சந்தேகித்தேன். அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று இன்று."

"என்ன சந்தேகம்? எப்படி ஊர்ஜிதமாயிற்று?"

"கிட்ட வா, சொல்கிறேன். ரொம்ப ரொம்ப அந்தரங்கமான விஷயம். இந்தப் பயலின் காதிலே கூட விழக் கூடாது! கமலி, அப்பாவின் யோக மண்டபத்தில் ஒரு சுரங்க வழி இருக்கிறது. அது கோட்டைக்கு வெளியே போகிறது. சக்கரவர்த்தியின் ஒற்றர்கள் அதன் வழியாக அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பார்த்தாயா? இந்தப் பயல் நான் சொல்வதை எப்படி ஒற்றுக் கேட்டுக் கொண்டிருக்கிறான்...!" என்று கண்ணபிரான் சொல்லிக் குழந்தையின் கன்னத்தை இலேசாகக் கிள்ள, குழந்தை வீர் என்று கத்த ஆரம்பிக்க, கமலி கண்ணபிரானைச் சண்டை பிடிக்க, கண்ணபிரான், 'அவனும் என் கன்னத்தை வேணுமானால் கிள்ளட்டும்!' என்று கூற, கமலி குழந்தையைப் பார்த்து, 'என் கண்ணே!' என்று அதற்கு முத்தம் கொடுக்கப் போக, குறுக்கே கண்ணபிரான் கன்னத்தை நீட்ட, கமலி அவனைச் சண்டை பிடிக்க, இப்படி ஏகப் பூசலாகி விட்டது.

இதற்கிடையில் மகேந்திர சக்கரவர்த்தி அரண்மனைத் தோட்டத்திற்குள் புகுந்து வசந்த மண்டபத்துக்குச் சென்றார். காலடிச் சப்தத்தைக் கேட்டதும், சிவனடியாராக விளங்கிய அசுவபாலர் வெளியில் தலையை நீட்டி, "பிரபு, தாங்கள்தானே. நல்ல சமயத்தில் வந்தீர்கள்; இப்போதுதான் மணி அடித்தது!" என்று கூறி, மண்டபத்தின் நடுமத்தியில் இருந்த சிவலிங்கத்தை அப்பால் நகர்த்தவும், சிவலிங்கம் இருந்த இடத்தில் ஒரு பள்ளமும் அதற்குள் மங்கிய இலேசான வெளிச்சமும் தெரிந்தன. சில விநாடிகளுக்கெல்லாம் அந்தப் பள்ளத்திலிருந்து சத்ருக்னனுடைய தலை எழுந்தது. பிறகு சத்ருக்னனின் முழு உருவமும் வெளியில் வந்தது.

"சத்ருக்னா? உனக்காகக் காத்திருந்து காத்திருந்து போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஏன் இவ்வளவு தாமதம்? போன காரியம் என்ன? காயா? பழமா?" என்று மகேந்திர பல்லவர் கேட்டார்.

"பல்லவேந்திரர் எடுத்த காரியம் ஏதாவது காயாவது உண்டா? பழந்தான். சுவாமி! எல்லாம் தாங்கள் போட்ட திட்டப்படியே நடந்தது. வேங்கித் தூதனுடன் போன சளுக்க வீரர்களிடம் குண்டோதரன் அகப்பட்டுக் கொண்டான். இருவரும் கொள்ளிடக் கரையில் புலிகேசியின் முன்னிலைக்குக் கொண்டு போகப்பட்டார்கள்."

"குண்டோ தரனை அப்புறம் பார்த்தாயா? அல்லது அவனிடமிருந்து ஏதேனும் செய்தி உண்டா?"

"அதுதான் இல்லை; அவனுக்காகத்தான் இத்தனை நேரம் காத்துப் பார்த்தேன். புலிகேசி மகா மூர்க்கன் என்று கேள்வியாச்சே, சுவாமி! குண்டோ தரனுடைய கதி என்ன ஆயிற்றோ என்று சிறிது கவலையாயிருக்கிறது."

"குண்டோ தரனுக்கு ஒன்றும் நேர்ந்திராது, சத்ருக்னா!"

"எப்படிச் சொல்லுகிறீர்கள்? பிரபு?"

"நம்முடைய யுக்தி நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மகத்தான பலனை அளித்துவிட்டது. கேள், சத்ருக்னா! புலிகேசி சமாதானத் தூது அனுப்பியிருக்கிறான்! இந்த நேரம் அவனுடைய தூதர்கள் என் மறு மொழிக்காகத் தெற்குக் கோட்டை வாசலில் காத்திருக்கிறார்கள். நான் உன்னைச் சந்தித்து விட்டுப் பிறகு முடிவாக மறுமொழி சொல்லலாம் என்றெண்ணி அவசரமாக இங்கே வந்தேன்."

"பிரபு! புலிகேசியை நம்பலாமா? மகா வஞ்சகன் என்று சொல்லுகிறார்களே?" என்றான் சத்ருக்னன்.

"அவநம்பிக்கை கொள்வதற்கு இடமே இல்லை, சத்ருக்னா! ஆனாலும், குண்டோதரன் திரும்பி வந்தால் அவனைச் சில விஷயம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன்."

இவ்விதம் மகேந்திரர் சொல்லிக் கொண்டிருந்தபோதே சத்ருக்னன் எந்தப் பள்ளத்திலேயிருந்து வெளிவந்தானோ, அந்தப் பள்ளத்திற்குள் இருமல் சப்தம் கேட்டது. பேசிக்கொண்டிருந்த இருவரும் திடுக்கிட்டார்கள். அடுத்த வினாடி அந்தப் பள்ளத்தில் குண்டோ தரனுடைய தலை தெரியவே, அளவிறந்த வியப்போடு ஓரளவு அமைதியும் அடைந்தார்கள்.

"குண்டோ தரா! உனக்கு நூறு ஆயுசு! இப்போதுதான் உன்னைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நீ எப்படித் திடீரென்று முளைத்தாய்?" என்று சக்கரவர்த்தி கேட்க, "பிரபு! தாங்கள் அடிக்கடி 'சத்ருக்னரைப் பின்பற்றி நட! சத்ருக்னரைப் பின்பற்றி நட!' என்று சொல்லுவீர்களே, அது மிகக் கடினமான காரியம். இந்த இருட்டுச் சுரங்க வழியில் இவரைப் பின்பற்ற முயன்று நான் ஓடோ டி வந்தும் இவரைப் பிடிக்க முடியவில்லை!" என்றான் குண்டோதரன்.

"உன் வேடிக்கையெல்லாம் அப்புறம் ஆகட்டும்; நீ போன இடத்தில் என்ன நடந்ததென்று விவரமாகச் சொல்லு" என்று மகேந்திர சக்கரவர்த்தி கேட்க, குண்டோ தரனும், நாம் முன்னமே அறிந்த அவன் வரலாற்றை விவரமாக கூறி முடித்தான்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com