Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
45. மகேந்திரர் அந்தரங்கம்

அன்றிரவு மகேந்திர பல்லவரும் அவருடைய பட்ட மகிஷி புவன மகாதேவியும் கண்ணுறங்கவேயில்லை. அரண்மனை மேல் மாடத்தில், வெள்ளி நட்சத்திரங்களை அள்ளித் தெளித்திருந்த வானவிதானத்தின் கீழ் அமர்ந்து, சென்ற காலத்தையும் வருங்காலத்தையும் பற்றி, அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"தேவி! என் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் இப்படி எனக்கு ஆசாபங்கம் உண்டாகுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. என்னுடைய கனவுகளெல்லாம் சிதைந்து போய்விட்டன. துரதிர்ஷ்டத்துக்கு உள்ளானவனை அவனுடைய அந்தரங்க சிநேகிதர்கள் கூடக் கைவிட்டு விடுவார்கள் என்று அரசியல் நீதி கூறுவது எவ்வளவு உண்மை! அதோ வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் முன்னேயெல்லாம் என்னைப் பார்த்து, 'மகேந்திரா! உன்னைப் போன்ற மேதாவி இந்தப் பூவுலகில் வேறு யார்? உன்னைப் போன்ற தர்மவான், குணபரன், சத்ருமல்லன், கலைப்பிரியன் வேறு யார்?' என்று புகழ்மாலை பாடுவது வழக்கம். இப்போது அதே நட்சத்திரங்கள், என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கேலிச் சிரிப்புச் சிரிக்கின்றன. 'மகேந்திரா! கர்வபங்கம் போதுமா? உன்னுடைய அகட விகட சாமர்த்தியங்கள் எல்லாம் விதியின் முன்னால் பொடிப் பொடியாகப் போனதைப் பார்த்தாயா?' என்று கேட்கின்றன..."

மகேந்திரருடைய உடம்பும் உள்ளமும் வெகுவாக நொந்திருந்தன என்பதைச் சக்கவர்த்தினி அறிந்தவளாதலால், அவர் மனத்தை மேலும் புண்படுத்த விரும்பவில்லை. ஆயினும் அவளை அறியாமல் இந்த வார்த்தைகள் வெளிவந்தன. "பிரபு! நாமாகச் செய்து கொள்ளும் காரியத்துக்கு விதி என்ன செய்யும்?"

இதைக் கேட்ட மகேந்திர பல்லவர் சோகப் புன்னகை புரிந்து, "மனிதர்களாகிய நாம் எவ்வளவு சாமர்த்தியமாகக் காரியம் செய்தாலும் விதி வந்து குறுக்கிட்டு எல்லாவற்றையும் கெடுத்து விடத்தான் செய்கிறது. என்னுடைய காரியங்களைக் கெடுப்பதற்கு விதியானது சிவகாமியின் ரூபத்தில் வந்தது!" என்றார்.

"ஆ! அந்த ஏழைப் பெண்ணின் மீது ஏன் பழியைப் போடுகிறீர்கள்? அவள் என்ன செய்வாள்?" என்று இரக்கம் ததும்பிய குரலில் கூறினாள் பல்லவர் தலைவி புவனமகாதேவி.

"பெண்ணுக்குப் பெண் பரிந்து பேசுகிறாய், அது நியாயந்தான். ஆனாலும், ஆயனர் மகளின் காரணமாகத்தான் என்னுடைய உத்தேசங்கள் எல்லாம் பாழாய்ப் போயின. சிவகாமியிடமிருந்து மாமல்லனைப் பிரித்து வைக்க நான் முயன்று வந்தேன். அதற்காக என்னவெல்லாமோ சூழ்ச்சிகளும் தந்திரங்களும் செய்தேன். நான் செய்த சூழ்ச்சிகளும் தந்திரங்களும் பயன்படாமல் போயின. விதிதான் கடைசியில் வெற்றி பெற்றது."

"விதியானது உங்களுடைய நோக்கத்தைத்தானே நிறைவேற்றி வைத்தது? அந்தப் பெண்ணிடமிருந்து மாமல்லனைப் பிரிப்பதற்குத் தாங்கள் எத்தனையோ ஏற்பாடுகள் செய்தீர்கள். விதி உங்கள் ஒத்தாசைக்கு வந்து அவளை வாதாபிக்கே கொண்டு போய்விட்டது. அப்படியிருக்க, அவளைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்கு நீங்கள் ஏன் பிரயத்தனம் செய்ய வேண்டும்? தங்களுடைய காரியம் எனக்கு விளங்கவில்லையே?" என்று புவனமகாதேவி உண்மையான திகைப்புடன் கேட்டாள்.

"அதைத்தான் அப்போதே சொன்னேன். பழைமையான பல்லவ குலத்திலே பிறந்ததற்குத் தண்டனை இது. சிவகாமியைத் திருப்பிக் கொண்டு வராவிட்டால் பல்லவ குலத்துக்கு என்றென்றைக்கும் மாறாத அவமானம் ஏற்படும். புலிகேசி காஞ்சிப் பல்லவனை முறியடித்துவிட்டு ஊர் திரும்பியதாகப் பெருமையடித்துக் கொள்வான். சிவகாமி வாதாபியில் இருக்கும் பட்சத்தில் புலிகேசியின் ஜம்பத்தையே உலகம் நம்பும்படி இருக்கும். சிவகாமியின் புகழ் ஏற்கெனவே இலங்கை முதல் கன்யாகுப்ஜம் வரையில் பரவியிருக்கிறது. மாமல்லபுரத்துச் சிற்பங்களையும், சிவகாமியின் நடனத்தையும் வந்து பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்று நானே ஹர்ஷவர்த்தனருக்கு ஓலை அனுப்பியிருந்தேன். அப்படிப்பட்ட சிவகாமி வாதாபியில் சிறை வைக்கப்பட்டிருந்தால் உலகம் என்ன நினைக்கும்? பல்லவ குலத்துக்கு அதைக் காட்டிலும் வேறு என்ன இழிவு வேண்டும்?"

"சுவாமி! தாங்கள் தலையில் அணியும் கிரீடத்தைச் சில சமயம் நான் கையிலே எடுத்துப் பார்த்திருக்கிறேன். அதனுடைய கனத்தை எண்ணி, 'இவ்வளவு பாரத்தை எப்படித்தான் சுமக்கிறீர்களோ!' என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த இரண்டு மூன்று வருஷத்திலேதான் எனக்குத் தெரிந்தது, தலையிலே அணியும் மணிமுடியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பாரத்தைத் தாங்கள் இருதயத்திலே தாங்க வேண்டியிருக்கிறதென்று. 'இராஜ்ய பாரம்' என்று உலக வழக்கிலே சொல்வது எவ்வளவு உண்மையான வார்த்தை?" என்று சக்கரவர்த்தினி உருக்கமான குரலில் கூறினாள்.

"ஒரு காலத்தில் அந்தப் பாரத்தை நான் வெகு உற்சாகத்துடன் தாங்கினேன். இப்போது அதுவே தாங்க முடியாத பெரும் பாரமாய் என் இருதயத்தை அமுக்குகிறது. தேவி! மூன்று வருஷத்துக்கு முன்பு வரையில் நான் ஆகாசக் கோட்டைகள் கட்டி வந்தேன். ஆம்; காஞ்சிக் கோட்டையை அலட்சியம் செய்து விட்டு ஆகாசக் கோட்டைகள் கட்டினேன். இந்தப் பூவுலகத்தைச் சொர்க்க பூமியாகச் செய்து விடலாம் என்று கருதினேன். என்னுடைய மூதாதையர்களையெல்லாம் மனத்திற்குள் நிந்தித்தேன். வீணாகச் சண்டை பூசல்களிலும் இரத்தக் களறிகளிலும் அவர்கள் காலத்தைக் கழித்தார்களே என்று வருத்தப்பட்டேன். மாமல்லபுரத்தில் எல்லாச் சமயங்களுக்கும் அழியாத கற்கோயில்கள் கட்டத் தொடங்கினேன். கோயில்கள் கட்டி முடிந்ததும் ஹர்ஷனையும் புலிகேசியையும் அழைக்க நினைத்திருந்தேன். இந்த ஆகாசக் கோட்டைகளையெல்லாம் அந்தச் சளுக்க அரக்கன் பொடிப் பொடியாக்கி விட்டான். அவன் தொண்டை மண்டலத்துக் கிராமங்களில் வைத்த தீ சீக்கிரத்தில் அணையப் போவதில்லை. பல்லவர் படை வாதாபிக்குப் போய்ப் புலிகேசியை முறியடித்தாலொழியப் பல்லவ குலத்துக்கு நேர்ந்த அவமானம் தீரப் போவதில்லை. இது என் காலத்தில் நிறைவேறாவிட்டால், மாமல்லனுடைய காலத்திலாவது நிறைவேறியாக வேண்டும்."

"பிரபு! என் வீர மகன் நிச்சயமாகத் தங்கள் மனோரதத்தை நிறைவேற்றுவான். பல்லவ குலத்துக்கு நேர்ந்த பழியைத் துடைப்பான்!" என்று புவனமகாதேவி பெருமிதத்துடன் கூறினாள்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com