Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
33. இருள் சூழ்ந்தது

மாமல்லர் அன்று ஆயனரின் அரண்ய வீட்டிலிருந்து புறப்பட்டுக் காஞ்சி நகரை நோக்கிச் சென்றபோது உச்சி நேரம். நிர்மலமான நீல ஆகாயத்தில் புரட்டாசி மாதத்துச் சூரியன் தலைக்கு மேலே தகதகவென்று பிரகாசித்துக் கொண்டிருந்தான். ஆயினும் மாமல்ல நரசிம்மருக்கு அப்போது வானமும் பூமியும் இருள் சூழ்ந்திருந்ததாகத் தோன்றியது. அமாவாசை நள்ளிரவில் நாலாபுறமும் வானத்தில் கன்னங்கரிய மேகங்கள் திரண்டிருந்தாற் போன்ற அந்தகாரம் அவர் உள்ளத்தைக் கவிந்து கொண்டிருந்தது. ஒரு சின்னஞ்சிறு நட்சத்திரத்தின் மினுக் மினுக் என்னும் ஒளிக் கிரணத்தைக் கூட அந்தக் காரிருளில் அவர் காணவில்லை.

ஆனால் திடீர் திடீர் என்று சில சமயம் பேரிடி முழக்கத்துடன் கூடிய மின்னல்கள் கீழ்வான முகட்டிலிருந்து மேல்வான முகடு வரையில் அந்தகாரத்தைக் கிழித்துக் கொண்டு பாய்ந்த மின்னல்கள் - கண்ணைப் பறித்து மண்டையைப் பிளக்கும் பயங்கரத் தீட்சண்ய ஒளி மின்னல்கள் மாமல்லருடைய உள்ளமாகிற வானத்தில் தோன்றத்தான் செய்தன. அந்த மின்னல் ஒளியெல்லாம் ஆயிரமாயிரம் கூரிய வாள்களும் வேல்களும் போர்க்களத்தில் ஒன்றோடொன்று உராயும் போது சுடர்விட்டு ஒளிர்ந்து மறையும் மின்னல்களாகவே அவருடைய அகக்காட்சியில் தோற்றமளித்தன.

சிவகாமி அடியோடு நஷ்டமாகிவிட்டதாகவே மாமல்லர் எண்ணினார். சளுக்கரால் சிறைப்பட்டுச் சிவகாமி உயிர் வாழ்ந்திருப்பாள் என்று அவரால் கற்பனை செய்யவே முடியவில்லை.

சிறைப்பட்டுச் சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் பிராணனை விட்டுத்தான் இருக்க வேண்டும். கேவலம் மற்றச் சாமான்யப் பெண்களைப் போல் அவள் சத்ருக்கள் வசம் சிக்கிக் கொண்ட பிறகு உயிரை வைத்துக் கொண்டிருப்பாளா? மானத்தைக் காட்டிலும் பிராணனே பெரிது என்று எண்ணும் ஈனத்தனம் சிவகாமியிடம் இருக்க முடியுமா? தன்னுடைய வாழ்க்கையிலிருந்தும், இந்தப் பூலோகத்திலிருந்தும் அந்தத் தெய்வீக ஒளிச்சுடர் முடிவாக மறைந்தே போய் விட்டது. அத்தகைய தெய்வீக சௌந்தர்யத்துக்கும் கலைத்திறனுக்கும் மேன்மைக் குணத்துக்கும் இந்த உலகம் தகுதியற்றது. தானும் தகுதியற்றவன்!

இரண்டு தந்தைகளுமாய்ச் சேர்ந்து சிவகாமியின் உயிருக்கு இறுதி தேடி விட்டார்கள். தன்னுடைய வாழ்வுக்கும் உலை வைத்து விட்டார்கள். ஆனபோதிலும், அவர்கள் மீது மாமல்லர் அதிகமாகக் கோபங்கொள்ள முடியவில்லை. மகளைப் பிரிந்த துயரத்தினால் ஆயனர் ஏறக்குறையச் சித்தப் பிரமை கொண்ட நிலையில் இருக்கிறார். கால் முறிந்து எழுந்து நிற்கவும் முடியாமல் கிடந்த இடத்திலேயே கிடக்கிறார். அவர் மேல் எப்படிக் கோபம் கொள்வது? அல்லது, போர்க்களத்திலே படுகாயம் அடைந்து யமனுடன் போராடிக் கொண்டிருக்கும் மகேந்திர பல்லவரிடந்தான் எவ்விதம் கோபம் கொள்ள முடியும்?

சிவகாமி இல்லாத உலகத்திலே தாம் உயிர் வாழ்வது என்னும் எண்ணத்தை மாமல்லரால் சகிக்கவே முடியவில்லை. எனினும், சில காலம் எப்படியும் பல்லைக் கடித்துக் கொண்டு ஜீவித்திருக்கத்தான் வேண்டும். நராதமர்களும், நம்பிக்கைத் துரோகிகளும், மனித உருக்கொண்ட ராட்சதர்களுமான வாதாபி சளுக்கர்களைப் பழி வாங்குவதற்காகத்தான்! இதுவரையில் இந்த உலகமானது கண்டும் கேட்டுமிராத முறையிலே பழி வாங்க வேண்டும்! சளுக்கர் தொண்டை நாட்டில் செய்திருக்கும் அக்கிரமங்களுக்கு ஒன்றுக்குப் பத்து மடங்காக அவர்களுக்குச் செய்ய வேண்டும். சளுக்க நாட்டில் இரத்த ஆறுகள் ஓட வேண்டும். அப்படிப் பெருகி ஓடும் செங்குருதி நதிகளில், பற்றி எரியும் பட்டணங்களின் மீது கிளம்பும் அக்கினி ஜுவாலைகள் பிரதிபலிக்க வேண்டும்! அந்த அரக்கர்களின் நாட்டிலே அப்போது எழும் புலம்பல் ஒலியானது தலைமுறை தலைமுறையாகக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்!

இவ்விதம் பழி வாங்குவதைப் பற்றி எண்ணிய போதெல்லாம் மாமல்லருக்குச் சிறிது உற்சாகம் உண்டாயிற்று. அடுத்த கணத்தில், "சிவகாமி இவ்வுலகில் இப்போதில்லை. அவளை இனிமேல் பார்க்கவே முடியாது" என்ற எண்ணம் தோன்றியது. உற்சாகம் பறந்து போய்ச் சோர்வு குடிகொண்டது. உடம்பின் நரம்புகள் தளர்ந்து சகல நாடிகளும் ஒடுங்கிக் குதிரையின் கடிவாளங்கள் கையிலிருந்து நழுவும்படியான நிலைமையை அடைந்தார்.

அந்த மனச் சோர்வைப் போக்கிக் கொள்வதற்காக மாமல்லர் பழைய ஞாபகங்களில் தம்முடைய மனத்தைச் செலுத்த முயன்றார்.

சென்ற மூன்று நாலு வருஷங்களில் சிவகாமிக்கும் தமக்கும் ஏற்பட்டிருந்த தொடர்பை நினைத்த போது மாமல்லரின் இருதய அடிவாரத்திலிருந்து பந்து போன்ற ஒரு பொருள் கிளம்பி மேலே சென்று தொண்டையை அடைத்துக் கொண்டது போலிருந்தது. கண்களின் வழியாகக் கண்ணீர் வருவதற்குரிய மார்க்கங்களையும், அது அடைத்துக் கொண்டு திக்குமுக்காடச் செய்தது.

ஆஹா! உலகத்தில் அன்பு என்றும், காதல் என்றும், பிரேமை என்றும் சொல்கிறார்களே! சிவகாமிக்கும் தமக்கும் ஏற்பட்டிருந்த மனத் தொடர்பைக் குறிப்பிடுவதற்கு இவையெல்லாம் எவ்வளவு தகுதியற்ற வார்த்தைகள்?

தளபதி பரஞ்சோதியும் அந்தத் திருவெண்காட்டு மங்கையும் கொண்டுள்ள தொடர்பைக்கூட அன்பு, காதல், பிரேமை என்றுதான் உலகம் சொல்கிறது. ஆனால் பரஞ்சோதியின் அனுபவத்துக்கும் தம்முடைய அனுபவத்துக்கும் எத்தனை வித்தியாசம்?

பரஞ்சோதி சேர்ந்தாற்போல் பல தினங்கள் உமையாளைப் பற்றி நினைப்பது கூட இல்லை என்பதை மாமல்லர் அறிந்திருந்தார். ஆனால் அவருடைய உள்ளத்திலேயிருந்து ஒரு கணநேரமாவது சிவகாமி அப்பாற்பட்டதுண்டா? கேணியில் உள்ள தண்ணீரை இறைத்துவிட்டால், அடியில் உள்ள நீர் ஊற்றிலிருந்து குபு குபுவென்று தண்ணீர், மேலே வருமல்லவா? அதே மாதிரியாக மாமல்லரின் இருதயமாகிய ஊற்றிலிருந்து சிவகாமியின் உருவம் இடைவிடாமல் மேலே வந்து கொண்டிருந்தது. ஆயிரமாயிரம் சிவகாமிகள் நெஞ்சின் ஆழத்திலிருந்து கிளம்பி மேலே மேலே வந்து மறைந்து போய்க் கொண்டேயிருப்பார்கள்.

முகத்தில் புன்னகை பூத்த சிவகாமி, கலீரென்று சிரிக்கும் சிவகாமி, புருவம் நெரித்த சிவகாமி சோகம் கொண்ட சிவகாமி பயத்துடன் வெருண்டு பார்க்கும் சிவகாமி, கண்களைப் பாதி மூடி ஆனந்த பரவசத்திலிருக்கும் சிவகாமி, வம்புச் சண்டைக்கு இழுக்கும் விளையாட்டுக் கோபங் கொண்ட சிவகாமி இப்படியாக எத்தனை எத்தனையோ சிவகாமிகள் மாமல்லரின் உள்ளத்தில் உதயமாகிக் கொண்டேயிருப்பார்கள்.

தாய் தந்தையரோடு பேசிக் கொண்டிருக்கும் போதும், இராஜரீக விவரங்களை மிக்க கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும், புரவியின் மீது அதிவேகமாகப் போய்க் கொண்டிருக்கும் போதும் இராஜ சபையில் வீற்றிருந்து ஆடல் பாடல் விநோதங்களைக் கண்டு கேட்டுக் களித்துக் கொண்டிருக்கும் போதும், போர்க்களத்தில் வாள்களும் வேல்களும் நாலாபுறமும் ஒளி வீசி ஒலி செய்ய எதிரி சைனியங்களுடன் வீரப்போர் புரிந்து அவர்களை விரட்டியடிக்கும் போதும் எப்படியோ மாமல்லரின் உள்ளத்தின் அடிவாரத்தில் சிவகாமியின் நினைவு மட்டும் இருந்து கொண்டுதானிருக்கும்.

பகல் வேளையில் பல்வேறு காரியங்களில் ஈடுபட்டிருக்கும் சமயங்களிலேதான் இப்படியென்றால், இரவு நேரங்களில் சொல்ல வேண்டியதில்லை. காஞ்சி நகரில் அரண்மனையில் தங்கும் நாட்களில் இரவு போஜனம் முடிந்து தாம் தன்னந்தனியாகப் படுக்கைக்குப் போகும் நேரத்தை எப்போதும் மாமல்லர் ஆவலுடன் எதிர் நோக்குவது வழக்கம். ஏனெனில் சிவகாமியைப் பற்றிய நினைவுகளிலேயே அவருடைய உள்ளத்தைப் பூரணமாக ஈடுபடுத்தலாமல்லவா? கருவண்டையொத்த அவளுடைய கண்களையும், அந்தக் கண்களின் கருவிழிகளைச் சுழற்றி அவள் பொய்க் கோபத்துடன் தன்னைப் பார்க்கும் தோற்றத்தையும் நினைத்து நினைத்துப் போதை கொள்ளலாமல்லவா?

இப்படி நெடுநேரம் சிவகாமியைப் பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்த பிறகு கடைசியில் கண்களை மூடித் தூங்கினால், தூக்கத்திலும் அவளைப் பற்றிய கனவுதான். எத்தனை விதவிதமான கனவுகள்? அந்தக் கனவுகளில் எத்தனை ஆனந்தங்கள்? எத்தனை துக்கங்கள்? எத்தனை அபாயங்கள்? எத்தனை ஏமாற்றங்கள்?

கனவுகளிலே என்னவெல்லாமோ ஆபத்துக்கள் சிவகாமிக்கு ஏற்பட்டதும், அவற்றிலிருந்து அவளைத் தப்புவிக்கத் தாம் முயன்றதும், சில சமயம் அவளைத் தப்புவிப்பதற்கு முன்னாலே கனவு கலைந்து எழுந்து, மீதி இரவெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததும், மறு நாள் விரைந்து சென்று சிவகாமிக்கு அபாயம் ஒன்றுமில்லை என்று தெரிந்துகொண்டு ஆறுதல் அடைந்ததும், மாமல்லருக்கு இப்போது நினைவுக்கு வந்தன. அந்தப் பயங்கரமான கனவுகள் இப்போது மெய்யாகி விட்டன! உண்மையாகவே ஆபத்து வந்த சமயத்தில் தான் அருகிலிருந்து அவளைக் காப்பாற்ற முடியாமற் போய்விட்டது.

அந்தப் பேதையின் உள்ளத்தில் இப்படி ஒரு பெரிய ஆபத்துத் தனக்கு வரப்போகிறது என்பது எப்படியோ தோன்றியிருக்க வேண்டும். இதன் காரணமாகத் தான் அவள் தன்னிடம் அடிக்கடி "என்னை மறக்க மாட்டீர்கள் அல்லவா?" என்றும், "என்னைக் கைவிடமாட்டீர்கள் அல்லவா?" என்றும் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்போதெல்லாம், "இதென்ன அர்த்தமில்லாத கேள்வி?" என்று மாமல்லர் அலட்சியமாகத் திருப்பிக் கேட்பது வழக்கம். உண்மையில் அது எவ்வளவு அர்த்த புஷ்டியுள்ள கேள்வி!

சிவகாமி! என் கண்ணே! உன்னை மறக்க மாட்டேன்! இந்த ஜன்மத்தில் உன்னை மறக்க மாட்டேன்! எந்த ஜன்மத்திலும் மறக்கமாட்டேன். உன்னை என்னிடமிருந்து பிரித்த பாதகர் மேல் முதலில் பழி வாங்குவேன்! அதற்குப் பிறகு உன்னைத் தேடிக் கொண்டு வருவேன். யமன் உலகத்துக்கு உன்னைத் தொடர்ந்து வந்து தர்ம ராஜாவிடம், "எங்கே என் சிவகாமி?" என்று கேட்பேன். சொர்க்க லோகத்திற்குச் சென்று தேவேந்திரனிடம், "என் சிவகாமி எங்கே? ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகிய நாலு பேர் உங்கள் உலகில் இருக்கிறார்கள். எனக்கோ சிவகாமி ஒருத்திதான் இருக்கிறாள்! அவளைக் கொடுத்து விடுங்கள்!" என்று கேட்பேன்.

சிவகாமி! சொர்க்க லோகத்தில் நீ இல்லாவிட்டால் அதோடு உன்னை விட்டு விட மாட்டேன்! பிரம்மலோகம், வைகுண்டம், கைலாசம் ஆகிய உலகங்களில் எங்கே நீ இருந்தாலும் உன்னை என்னிடமிருந்து பிரிக்க முடியாது! வருகிறேன், சிவகாமி வருகிறேன்! கூடிய விரைவில் நீ இருக்குமிடம் வருகிறேன்!

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com