Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
30. "சிவகாமி எங்கே?"

ஆயனர் தமது பழைய சிற்ப வீட்டை அடைந்ததிலிருந்து நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தார். மலையிலிருந்து விழுந்ததினால் முறிந்து போயிருந்த அவருடைய வலது கால் சொல்ல முடியாத வலியையும் வேதனையையும் அவருக்குத் தந்து கொண்டிருந்தது. சிவகாமியை இழந்ததினால் அவருடைய உள்ளம் அளவில்லாத துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது.

மண்டபப்பட்டிலிருந்து ஆயனரும் சிவகாமியும் சக்கரவர்த்தி அனுப்பிய பல்லக்கில் அவசரமாகக் கிளம்பியபோது ஆயனரின் சகோதரியைப் பின்னால் சாவகாசமாக வண்டியில் வந்து சேரும்படி சொல்லியிருந்தார்கள். அதன்படியே அந்த அம்மாள் முக்கியமான வீட்டுப் பொருள்களுடன் ரதியையும் சுகரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு பழைய அரண்ய வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள். அந்த அம்மாள் அவ்விதம் முன்னாடியே வந்து சேர்ந்திருந்தபடியாலேயே ஆயனர் இன்னும் உயிரோடிருப்பது சாத்தியமாயிற்று.

அவருக்கு வேண்டிய சிகிச்சைகளையும் சிசுரூஷைகளையும் அந்த அம்மாள் மிக்க பக்தி சிரத்தையோடு செய்து அவரை உயிர் பிழைக்கப் பண்ணியிருந்தாள். ஆனாலும் அவள் அடிக்கடி கேட்டு வந்த ஒரு கேள்வியானது புண்ணிலே கோலெடுத்துக் குத்துவது போல் அவருடைய இருதயத்தை நோகச் செய்து கொண்டிருந்தது.

அந்தக் கேள்வி, "சிவகாமி எங்கே?" என்பதுதான்.

சோகக் கடலில் ஆழ்த்தும் மேற்படி கேள்வியை நிறுத்துவதற்காக ஆயனர் ஏதேதோ மறுமொழி சொல்லிப் பார்த்தார். அவையொன்றும் சிவகாமியின் அத்தைக்குப் பிடிபடவே இல்லை. எனவே அவள் கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை.

இது போதாதென்று ரதியும் சுகரும் அடிக்கடி ஆயனரிடம் வந்து முகத்தைத் தூக்கிக் கொண்டு நின்று சப்தமற்ற குரலில் தங்களுடைய மௌனக் கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆயனர் கடுமையான குரலில் அதட்டி அவர்களை அப்பால் போகும்படி செய்வார்.

சுகப்பிரம்மரிஷி இப்போதெல்லாம் அதிகமாகத் தம் குரலை வெளியில் காட்டுவதில்லை. சில சமயம் திடீரென்று நினைத்துக் கொண்டு பலமான கூக்குரல் போடுவார். அப்போது அவருடைய தொனி "சிவகாமி எங்கே?" என்று கேட்பதுபோலவே இருக்கும்.

அரண்ய வீட்டுச் சுற்றுப் பக்கமெல்லாம் ஏதோ பெரிய அல்லோலகல்லோலம் நடந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. திடீர் திடீரென்று காட்டிற்குள்ளும் அப்பாலும், சமீபத்திலும் தூரத்திலும் பலர் கூச்சலிட்டுக் கொண்டு ஓடும் சப்தம் கேட்கும். போர் முழக்கங்கள் கேட்கும், அழுகையும் புலம்பலும் சில சமயம் கேட்கும். இரவு நேரங்களில் சுற்றுமுற்றும் பார்த்தால் திரள் திரளாகப் புகையும் நெருப்புச் சுவாலையும் எழுவது தெரியும்.

அந்த வனத்தில் வசித்த பட்சிகளிடையே என்றும் காணாத மௌனம் சில சமயம் நிலவியது. திடீரென்று பல்லாயிரம் பட்சிகள் ஏககாலத்தில் கூச்சலிடும் சப்தம் கேட்டது.

ஒரு நாள் அந்த அரண்யத்துக்கு வெகு சமீபத்தில் எங்கேயோ ஒரு பெருஞ் சண்டை நடக்கிறதென்பதற்கு அறிகுறிகள் தெரிந்தன.

போர் முரசங்களின் பேரொலியும், போர் வீரர்களின் ஜய கோஷமும், குதிரைகளும் மனிதர்களும் நடமாடும் சத்தமும், ஆயுதங்கள் மோதும் ஓசையும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தன.

சாயங்காலம் திடீரென்று ஐந்தாறு வீரர்கள் மேலெல்லாம் இரத்தக் காயங்களுடன் "தண்ணீர்! தண்ணீர்!" என்று கூவிக் கொண்டு ஆயனர் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் பல்லவ வீரர்கள் தான் என்று தெரிந்து கொண்டதும், ஆயனர் தாம் படுத்திருந்த இடத்திலிருந்தே அவர்களை வரவேற்றுத் தம் அருகில் உட்காரச் சொல்லிச் சகோதரியைக் கொண்டு அவர்களுக்குத் தண்ணீரும் கொடுக்கச் செய்தார். பிறகு, அவர்கள் எங்கே எப்படிக் காயமடைந்தனர் என்பது பற்றி விசாரித்தார்.

"இதென்ன உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா?" என்று அவ்வீரர்கள் வியப்புடன் கேட்டனர்.

ஆயனர் அவர்களுக்குத் தமது முறிந்த காலைச் சுட்டிக்காட்டினார். வந்த வீரர்கள் அந்தக் காலையும் சுற்று முற்றும் உடைந்து கிடந்த சிலைகளையும் பார்த்துவிட்டு, "ஐயோ! சளுக்க ராட்சதர்கள் இந்த வீட்டுக்குள்ளும் புகுந்து இப்படியெல்லாம் அக்கிரமங்கள் செய்து விட்டார்களா?" என்று வருத்தப்பட்டார்கள்.

பிறகு அந்த வீரர்களில் ஒருவன், புலிகேசி காஞ்சியைவிட்டுப் போனதிலிருந்து அன்று மணிமங்கலத்துக்கருகில் நடந்த பயங்கரமான சண்டை வரையில் எல்லாம் விவரமாகச் சொன்னான். அவன் கூறியதின் சாராம்சமாவது:

புலிகேசி கோட்டையிலிருந்து வெளியேறியதும் தன்னுடைய சைனியத்தைச் சிறு சிறு படைகளாகப் பிரித்துப் பல்லவ நாட்டுக் கிராமங்களைக் கொளுத்தவும், ஜனங்களை இம்சிக்கவும், சிற்பங்களை நாசமாக்கவும், சிற்பிகளை அங்கஹீனம் செய்யவும் கட்டளையிட்டு அனுப்பினார். இதையறிந்த சக்கரவர்த்தி கோட்டைக்குள்ளிருந்த சொற்பப் படைகளுடன் வெளிக் கிளம்பினார். அன்று காலையில் மணிமங்கலம் என்னும் கிராமத்துக்கருகில் புலிகேசியின் படை வீரரும் பல்லவ வீரர்களும் கைகலந்தார்கள். புலிகேசியின் வீரர்கள் எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் அதிகம் ஆன போதிலும் மகேந்திர சக்கரவர்த்தியே நேரில் தலைமை வகித்தபடியால் காஞ்சி வீரர்கள் பிரமாதமான வீரப் போர் நடத்தினார்கள். எதிர்ப்பக்கத்தில் வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசியே தலைமை வகித்து நடத்தினார். இரு சக்கரவர்த்திகளும் போர்க்களத்தின் மத்தியில் நேருக்கு நேர் சந்தித்து வீரவாதம் செய்த பிறகு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள்.

பல்லவ சைனியம் ஏறக்குறையத் தோல்வியடைந்திருந்த நிலைமையில், சற்றுத் தூரத்தில் பெரிய குதிரைப் படை ஒன்று வரும் சத்தம் கேட்டது. ரிஷபக் கொடியைப் பார்த்ததும், "இதோ மாமல்லர் வந்துவிட்டார்!" என்ற கோஷம் கிளம்பியது. சற்று நேரத்துக்கெல்லாம் மாமல்லரின் குதிரை வீரர்கள் சளுக்கர் படை மேல் இடியைப் போல் விழுந்து தாக்கினார்கள்.

சளுக்க வீரர்கள் ஓட ஆரம்பித்தார்கள். அரக்கன் புலிகேசியும் ஓடிப்போனான். ஆனால் போகும்போது தன் கையிலிருந்த சிறிய கத்தி ஒன்றை மகேந்திரர் மீது குறிபார்த்து எறிந்து விட்டான். மகேந்திரர் பிரக்ஞை இழந்து தரையில் விழுந்தார்.

வாதாபி வீரர்கள் போர்க்களத்தை விட்டு ஓடிய பிறகு மாமல்லரும் பரஞ்சோதியும் மகேந்திர பல்லவர் விழுந்திருந்த இடத்துக்கு வந்தார்கள். அவருக்குத் தக்க சிகிச்சை செய்து காஞ்சிக்குப் பத்திரமாய் எடுத்துப் போகக் கட்டளையிட்டு விட்டு, புறமுதுகிட்டு ஓடிய வாதாபி வீரர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

மேற்படி விவரங்களைக் கூறிய பின்னர் காயமடைந்த பல்லவ வீரர்கள் காஞ்சியை நோக்கிச் சென்றார்கள். மகேந்திர பல்லவருக்கு மரண காயம் என்பதைக் கேட்டதில் ஆயனர் அளவற்ற துயரமடைந்தார்.

ஆனாலும் மாமல்லரும் பரஞ்சோதியும் சளுக்க வீரர்களைத் தொடர்ந்து போயிருக்கிறார்கள் என்னும் செய்தி அவருக்குச் சிறிது ஆறுதலையளித்தது. அவர்கள் சிவகாமியைச் சிறை மீட்டுக் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை அவருடைய உள்ளத்தில் உதயமாகியிருந்தது.

மணிமங்கலம் சண்டை நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆயனர் தினந்தோறும் ஏதேனும் நல்ல செய்தி வராதா என்று ஆவலுடன் காத்திருந்தார். வாசலில் ஏதேனும் சத்தம் கேட்டால் அவர் திடுக்கிடுவார். யாரோ செய்தியுடன் வருகிறார்கள் என்று பரபரப்புடன் எழுந்து உட்காருவார்.

இம்மாதிரி எத்தனையோ தடவை ஏமாற்றம் அடைந்த பிறகு கடைசியில் உண்மையாகவே இரண்டு குதிரைகள் அவர் வீட்டை நெருங்கி வரும் சத்தம் கேட்டது. வந்த குதிரைகள் வீட்டு வாசலில் நின்றன என்பது தெரிந்தது.

வாசற்படி வழியாக நுழைந்துவரப் போகிறவர்கள் யார் என்று கொட்டாத கண்களுடனும் துடிதுடித்த நெஞ்சுடனும் ஆயனர் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய ஆசை வீண் போகவில்லை. ஆம்! மாமல்லரும், பரஞ்சோதியும்தான் உள்ளே வந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் முதலிலே ஆயனருடைய முகத்தில் மகிழ்ச்சிக் களை படர்ந்தது. ஆனால் அவர்கள் நெருங்கி வரவர மகிழ்ச்சி குன்றியது.

மாமல்லரின் முகத்தில் தோன்றிய கேள்விக் குறியானது ஆயனருடைய உள்ளத்தில் சகிக்க முடியாத வேதனையை உண்டாக்கிற்று. மாமல்லர் வாய் திறந்து கேட்பதற்கு முன்னால் அவர் கேட்கப் போகும் கேள்வியைத் தாமே கேட்டுவிடத்தீர்மானித்தார் ஆயனர்.

அந்தச் சிற்ப மண்டபமும், வெளியிலிருந்த அரண்யமும் பிரதித்வனி செய்யும்படியான சோகம் நிறைந்த குரலில், "பிரபு! என் சிவகாமி எங்கே?" என்று அலறினார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com