Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
3. உடன்படிக்கை

வாதாபிச் சக்கரவர்த்தியும் பாண்டிய மன்னனும் விரைவில் மனமொத்த சிநேகிதர்களாகி விட்டார்கள். ஜயந்தவர்மன் கொள்ளிடத்து வடகரைக்கு வந்து சில நாள் தன்னுடைய விருந்தாளியாயிருக்க வேண்டுமென்று புலிகேசி கேட்டுக் கொண்டான்.

அவ்விதமே ஜயந்தவர்மன் தன்னுடைய முக்கிய மந்திரி பிரதானிகளுடன் மறுநாள் கொள்ளிடத்தின் வடகரைக்கு வந்தான். புலிகேசி ஆடம்பர இராஜோபசாரங்களுடன் ஜயந்தவர்மனை வரவேற்றதுடன், தன்னுடைய நால்வகைப் படைகளையும் ஜயந்தவர்மனுக்குக் காட்டி அவன் பிரமிக்கும்படி செய்தான். தடபுடலான விருந்துக்குப் பிறகு, வாதாபியின் வில்லாளிகள், வாள் வீரர்கள், மல்லர்கள் முதலியோர் அந்தப் பேரரசர்களின் முன்னிலையில் தத்தம் திறமைகளைக் காட்டினார்கள்.

பிறகு வாதாபியின் அரண்மனைக் கவிஞர், சந்தர்ப்பத்துக்கேற்பத் தாம் புனைந்திருந்த புகழ்ச்சிக் கவிதைகளைப் பாடினார். கணக்கற்ற வெண் கொற்றக் குடைகளினாலும் வெண்சாமரங்களினாலும் அலையெறியும் திருப்பாற்கடலைப் போல் விளங்கிய வாதாபியின் சேனா சமுத்திரமானது துங்கபத்திரை நதிக்கரையிலிருந்து பொங்கித் தெற்கு நோக்கி வந்தது பற்றியும், அந்தச் சேனா சமுத்திரத்தைத் தூரத்தில் கண்டதுமே காஞ்சி மகேந்திர பல்லவன் நடுநடுங்கிப் போய்த் தனது சிறு குட்டையையொத்த படையுடன் காஞ்சிக் கோட்டைக்குள் ஒளிந்துகொண்டது பற்றியும், பிறகு வாதாபிச் சக்கரவர்த்தி அழகிய கயல் மீன்கள் துள்ளி விளையாடும் காவேரி நதியைக் காண ஆவல் கொண்டு தெற்கு நோக்கி வந்தது பற்றியும், காவேரிக் கரையிலே மதுரைப் பாண்டிய மன்னனைச் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தது பற்றியும், வாதாபியின் யானைகள் காவேரியில் வரிசையாக நின்று பாலம் அமைத்தபோது காவேரியின் நீரோட்டம் தடைப்பட்டு நின்றது பற்றியும், யானைகளின் மதநீர் நதியில் விழுந்ததனால் பிரவாகம் மேலும் பெருகிக் கரைகளை மோதியது பற்றியும் வர்ணித்திருந்த பாடல்களை வாதாபியின் இராஜகவி பாடியபோது, பாண்டியனும் மற்ற சிற்றரசர்களும் மது உண்டவர்களைப் போல் மதிமயங்கி நின்றார்கள்.

எல்லாம் முடிந்து, ஜயந்தவர்ம பாண்டியன் புலிகேசியிடம் விடைபெற வேண்டிய சமயம் வந்தபோது, "சத்யாச்ரயா! பல்லவனை முறியடித்துக் காஞ்சியைக் கைப்பற்றிய பிறகு, அப்படியே தாங்கள் திரும்பிப் போய்விடக் கூடாது. மதுரைக்கும் விஜயம் செய்து விட்டுப் போக வேண்டும்!" என்றான்.

அந்த நாளில் காஞ்சிக்கு அடுத்தபடியாகத் தென்னாட்டில் பிரசித்தமாக விளங்கிய மதுரைமா நகருக்கும் புலிகேசி வந்தால் பாண்டியர்களின் சீர் சிறப்புக்களையெல்லாம் காட்டி அவனைப் பிரமிக்கச் செய்யலாம் என்பது ஜயந்தவர்மனுடைய எண்ணம்.

அதைக் கேட்ட புலிகேசி ஒரு பெருமூச்சு விட்டான். "ஆம், எனக்கு மதுரையையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் வெகு காலமாக உண்டு. காஞ்சியைப் பற்றி எழுதிய பிக்ஷு மதுரையைப் பற்றியும் எழுதியிருந்தார். ஆனால்...." என்று புலிகேசி சொல்லி வரும்போதே பாண்டியன் குறுக்கிட்டு, "புத்த பிக்ஷுவைப் பற்றித் தங்களை நானே கேட்க வேண்டுமென்றிருந்தேன். அவர் எங்கே? தங்களுடன் அவர் இருப்பார் என்றல்லவா எண்ணினேன்?" என்றான்.

"பிக்ஷுவைப் பற்றித்தானே தகவல் ஒன்றும் தெரியவில்லை! அவரைப் பற்றி நானே தங்களிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். மதுரைக்கு வந்திருந்தார் அல்லவா? அங்கே என்ன நடந்தது? தங்களிடம் என்ன சொல்லிவிட்டுக் கிளம்பினார்? எங்கே போவதாகச் சொன்னார்?" என்று வாதாபி மன்னன் வினவினான்.

பிக்ஷு மதுரைக்கு வந்த சமயம் தன் தந்தை காலமானதும் அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் பிக்ஷு சிறைப்பட்டதும், தனக்கு முடிசூட்டு விழா நடந்த பிறகு பிக்ஷுவைத் தான் விடுதலை செய்ததும் ஆகிய விவரங்களைக் கூறிவிட்டு ஜயந்தவர்மன் மேலும் சொன்னதாவது: "பிக்ஷு விடுதலையான உடனேயே, வாதாபிச் சைனியம் காஞ்சியை அணுகி விட்டதா என்று அவர் என்னைக் கேட்டார். 'இல்லை! இன்னும் வடபெண்ணைக் கரையிலேதான் இருக்கிறது' என்று நான் தெரிவித்ததும் அவர் பெரிதும் ஆச்சரியமடைந்தார். என்னைச் சைனியத்துடன் கொள்ளிடக் கரைக்கு வந்திருக்கும்படி சொல்லிவிட்டு, தாம் முன்னாலே போவதாக அவர் கிளம்பினார். பின்னர், தங்களை வந்து அவர் சந்திக்கவே இல்லையா?"

"இல்லை; அதுதான் மிக்க அதிசயமாயிருக்கிறது. அந்த மூடன் துர்விநீதனால் இருவருக்கும் ஏதாவது நேர்ந்து விட்டதோ, என்னமோ? ஒன்றுமே தெரியவில்லை. பிக்ஷு இல்லாதது எனக்கு ஒரு கை இல்லாதது மாதிரி இருக்கிறது" என்றான் புலிகேசி.

இதற்குப் பாண்டியன், "ஆமாம்; ஒரு சில நாள் பழக்கத்திலேயே பிக்ஷுவிடம் எனக்கு மிக்க மதிப்பு ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்தக் கங்க நாட்டான் எதற்காக இப்படி அவசரமாகச் சென்று அகப்பட்டுக் கொண்டான்? பிக்ஷு என்னிடம் சொன்னது ஒன்று, துர்விநீதன் செய்தது வேறொன்றாகவல்லவா இருக்கிறது? ஒருவேளை மகேந்திர பல்லவன் தப்பி ஓட முயன்றால் நான் கொள்ளிடக் கரையில் நின்று தடுக்க வேண்டுமென்றும் துர்விநீதன் மேற்கு எல்லையில் நின்று தடுக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் பிக்ஷு சொன்னார். அப்படி இருக்க, துர்விநீதன் எதற்காக அவசரப்பட்டுக் காஞ்சியை நெருங்கினான்? அதனால் புள்ளலூரில் ஏதோ பிரமாத வெற்றியடைந்து விட்டதாகப் பல்லவன் பறையடித்துக் கொள்ள இடங்கொடுத்து விட்டானே? அதனாலேயல்லவா பல்லவ நாட்டு மக்களும் சோழ நாட்டுக் குடிகளும் கூட மிக்க கர்வம் கொண்டிருக்கிறார்கள்!" என்றான்.

"துர்விநீதன் விஷயம் பெரிய மர்மமாகத்தானிருக்கிறது! அவன் உயிரோடிருக்கிறானா, செத்துப்போய் விட்டானா என்று கூட நிச்சயமாகத் தெரியவில்லை. அவனைப்பற்றித் தெரிந்தால் பிக்ஷுவைப் பற்றியும் ஏதாவது விவரம் அறியலாம். ஆனால், இந்தத் தரித்திரம் பிடித்த பல்லவ நாட்டுக் கிராமங்களில் யாரை என்ன கேட்டாலும், 'எங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்கிறார்கள். ஒவ்வொரு சமயம் எனக்கு வருகிற கோபத்தில், பல்லவரின் ஆட்சிக்கு உட்பட்ட கிராமங்களிலே ஒரு வீடு, ஒரு கூரை மிச்சமில்லாமல் எல்லாவற்றையும் கொளுத்தி பஸ்மீகரம் செய்து விடலாமா என்று தோன்றுகிறது!" இவ்விதம் புலிகேசி கூறியபோது ஏற்கெனவே கோவைப் பழம்போல் சிவந்திருந்த அவனுடைய கண்களில் அக்னி ஜ்வாலை வீசிற்று.

"ஆமாம், ஆமாம், நானும் எல்லாம் கேள்விப்பட்டேன். ஏரிகளை எல்லாம் உடைத்துவிட்டு இந்த வருஷம் கோடைக் காலத்தில் சாகுபடியே செய்யாமல் பல்லவ நாட்டு மக்கள் இருந்து விட்டார்களாம். எந்தக் கிராமத்துக்குப் போனாலும் பஞ்சப் பாட்டுப் பாடுகிறார்களாம். தானியத்தை ஒளித்து வைத்துக் கொண்டு 'எங்களுக்கே சாப்பாடு இல்லை; பட்டினி கிடக்கிறோம்' என்று முறையிடுகிறார்களாம்! பொல்லாத ஜனங்கள்!" என்றான் பாண்டியன்.

"அவர்களுடைய பொல்லாத்தனத்தை அடக்க எனக்கு வழி தெரியும். ஒளித்து வைத்திருக்கும் தானியங்களை எடுத்துக் கொடுக்கும்படி செய்யவும் தெரியும். அதெல்லாம் இப்போது வேண்டாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்."

"இந்தச் சோழ நாட்டுத் திமிர் பிடித்த மக்களுக்கு நானும் ஒருநாள் பாடம் கற்பிக்க வேண்டும். காஞ்சிக் கோட்டை பிடி படட்டும் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... இருக்கட்டும்! துர்விநீதனைப் பற்றியல்லவா கேட்டுக் கொண்டிருந்தீர்கள்? என்னுடைய ஒற்றர்கள் ஏதோ சொன்னதாக ஞாபகம் இருக்கிறது. இதோ விசாரிக்கிறேன்" என்று ஜயந்தவர்மன் கூறி தன்னுடைய ஒற்றர் படைத் தலைவனை வரவழைத்துக் கேட்டான்.

ஒற்றர் தலைவன் கூறியதாவது: "நம்முடைய சைனியம் காவேரியைத் தாண்டிக் கொள்ளிடத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது, புள்ளலூர்ச் சண்டையைப் பற்றிய செய்தி வந்தது. உடனே சிலரை நான் அனுப்பி நிலைமையை விசாரித்து வரச் செய்தேன். புள்ளலூரில் தோல்வியடைந்து கங்கராஜா தெற்கு நோக்கி ஓடி வந்தாராம். அவரை மாமல்லர் துரத்தி வந்தாராம். திருப்பாற்கடல் என்னும் பெரிய ஏரி உடைத்துக் கொண்டு மாமல்லரைத் தடை செய்ததாம். இதனால் கங்கராஜா தென்பெண்ணைக்கு இக்கரை வந்து, பாடலிபுரத்துச் சமணர் பள்ளியில் ஒளிந்து கொண்டாராம். பிறகு என்ன நடந்ததென்று தெளிவாகத் தெரியவில்லை. திருக்கோவலூர்க் கோட்டத் தலைவன் சமணப் பள்ளியைத் தாக்கி இடித்துக் கங்க மகாராஜாவைச் சிறைப்பிடித்துக் கொண்டு போனதாகச் சில ஜனங்கள் பேசிக் கொண்டார்களாம். திருக்கோவலூருக்குத் தெற்கேயுள்ள மலைப் பிரதேசத்தில் சிறை வைத்திருப்பதாகவும் வதந்தியாம்."

பிறகு பேரரசர்கள் இருவரும் கலந்தாலோசித்துப் பின்வரும் திட்டத்தை வகுத்துக் கொண்டார்கள். புலிகேசி காஞ்சிக்குத் திரும்பிச் சென்று கோட்டை முற்றுகையை இன்னும் தீவிரமாய் நடத்த வேண்டியது. காஞ்சிக் கோட்டை பணிகிற வரையில் வாதாபிச் சைனியத்துக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பாண்டியன் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டியது.

கொள்ளிடத்தில் தண்ணீர் குறைந்ததும் பாண்டியன் தன் சைனியத்துடன் நதியைத் தாண்டி முன்னேறி வந்து தென்பெண்ணை நதி வரையில் கைப்பற்றிக் கொள்ள வேண்டியது. திருக்கோவலூர்க் கோட்டத் தலைவனைப் பிடித்துக் கடுமையாகத் தண்டிப்பதுடன், அங்குள்ள மலைப்பிரதேசத்தில் துர்விநீதன் சிறைப்பட்டிருந்தால், அவனை விடுதலை செய்து அனுப்பி வைக்க வேண்டியது.

இந்த உதவிகளையெல்லாம் பாண்டியன் செய்வதற்குக் கைம்மாறாகக் குமரி முனையிலிருந்து தென்பெண்ணை வரை உள்ள பிரதேசத்தின் மகா சக்கரவர்த்தியாக ஜயந்தவர்ம பாண்டியனை புலிகேசி அங்கீகரிக்க வேண்டியது.

மேற்கண்டவாறு இரு தரப்புக்கும் திருப்திகரமான உடன்படிக்கையைச் செய்து கொண்ட பிறகு, ஜயந்தவர்ம பாண்டியன் வாதாபிச் சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொண்டு பழையபடி கொள்ளிடத்தின் தென்கரை போய்ச் சேர்ந்தான்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com