Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
17. சின்னக் கண்ணன்

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் பிரிந்திருந்த பிறகு, சிவகாமியும் கமலியும் சந்தித்த போது, அந்த இளம் பிராயத் தோழிகளுக்கு ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியை விவரிக்க முடியாது. ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டார்கள். ஒருவருடைய தலையை ஒருவர் தோளில் வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டார்கள்! விம்மி அழுதார்கள். திடீரென்று சிரித்தார்கள். ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டார்கள். உடனே வைது கொண்டார்கள். இருவரும் ஏக காலத்தில் பேச முயன்றார்கள். பிறகு இருவரும் சேர்ந்தாற்போல் மௌனமாயிருந்தார்கள்.

அந்த ஒன்றரை வருஷத்துக்குள் இருவருடைய வாழ்க்கையிலும் எத்தனை எத்தனையோ முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. அவற்றில் எதை முதலில் சொல்வது எதை அப்புறம் சொல்வது என்று நிர்ணயிக்க முடியாமல் தவித்தார்கள். அந்தப் பிரச்னையை அவர்களுக்காகச் சின்னக் கண்ணன் தீர்த்து வைத்தான்.

தொட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை, தான் விழித்துக் கொண்டு விட்டதை ஒரு கூச்சல் மூலம் தெரியப்படுத்தியதும், கமலி ஓடிப் போய்க் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தாள். சிவகாமி சின்னக் கண்ணனைக் கண்டதும் சற்று நேரம் திகைத்துப்போய், பார்த்தது பார்த்தபடி நின்றாள். வெளிப்படையில் அவள் ஸ்தம்பித்து நின்றாளே தவிர, அவளுடைய உடம்பின் ஒவ்வோர் அணுவும் அப்போது துடித்தது. அவளுடைய இதய அந்தரங்கத்தின் ஆழத்திலிருந்து இதுவரை அவளுக்கே தெரியாமல் மறைந்து கிடந்த ஏதோ ஓர் உணர்ச்சி பொங்கி வந்து, மளமளவென்று பெருகி, அவளையே முழுதும் மூழ்கடித்து விட்டது போலிருந்தது.

"ஏனடி இவ்விதம் ஜடமாக நிற்கிறாய்? சின்னக் கண்ணன் உன்னை என்ன செய்தான்? இவன் பேரில் உனக்கு என்ன கோபம்?" என்று கமலி கேட்டதும், சிவகாமி இந்தப் பூவுலகத்திற்கு வந்தாள்.

"கமலி! இவன் யாரடி? எங்கிருந்து வந்தான்? எப்போது, வந்தான்? என்னிடம் வருவானா?" என்று சிவகாமி குழறிக் குழறிப் பேசிக் கொண்டே இரண்டு கைகளையும் நீட்ட, குழந்தையும் சிவகாமியின் முகத்தைத் தன் அகன்ற கண்கள் இன்னும் அகலமாக விரியும்படி பார்த்துக் கொண்டே, அவளிடம் போவதற்காகக் கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டு பிரயத்தனப்பட்டது.

"உன்னிடம் வருவானா என்றா கேட்கிறாய்? அதற்குள் என்னவோ மாயப் பொடி போட்டுவிட்டாயே! கள்ளி மாமல்லருக்குப் போட்ட மாயப்பொடியில் கொஞ்சம் மிச்சம் இல்லாமல் போகுமா?" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே கமலி குழந்தையைச் சிவகாமியிடம் கொடுத்தாள்.

மாமல்லரைப் பற்றிக் குறிப்பிட்டது சிவகாமிக்குக் குதூகலத்தையும் நாணத்தையும் ஒருங்கே அளித்தது. அவள் குழந்தையைக் கையில் வாங்கி மூக்கும் விழியும் கன்னமும் கதுப்புமாயிருந்த அதன் முகத்தைப் பார்த்துக் கொண்டே, 'ஆமாண்டி அம்மா, ஆமாம்! நீ கண்ணனுக்குப் போட்ட மாயப் பொடியில் கொஞ்சம் மீத்துக் கொடுத்ததைத்தானே நான் மாமல்லருக்குப் போட்டேன்? பார்! அப்படியே அப்பாவின் முகத்தை உரித்து வைத்தது போலிருக்கிறது! கமலி! இவன் அப்பா எங்கே?" என்று கேட்க, கமலி, "இது என்ன கேள்வி? மாமல்லர் எங்கே இருக்கிறாரோ, அங்கேதான் இவன் அப்பா இருப்பார்!" என்றாள்.

"ஓஹோ! அப்படியானால் அண்ணனும் இன்று அரண்மனையில்தான் இருந்தாரா? சபையில் என்னுடைய நாட்டியத்தைப் பார்த்திருப்பார் அல்லவா? நீ ஏனடி வரவில்லை?" என்று சிவகாமி கேட்டதும் கமலி, "என்ன தங்கச்சி உளறுகிறாய்? உன் அண்ணனாவது நாட்டியம் பார்க்கவாவது? உனக்குத் தெரியாதா, என்ன? மாமல்லர் தான் தெற்கே பாண்டியனோடு சண்டை போடுவதற்குப் போயிருக்கிறாரே?" என்றாள்.

இதைக் கேட்டதும் சிவகாமிக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில், தன் மடியில் இருந்த குழந்தையைக் கூட மறந்துவிட்டு எழுந்தாள். குழந்தை தரையில் 'பொத்' என்று விழுந்து, 'வீர்' என்று கத்திற்று. கமலி அலறும் குரலில், "அடிப்பாவி! ஏனடி குழந்தையைக் கீழே போட்டாய்? நீ நாசமற்றுப்போக! உன்னைப் புலிகேசி கொண்டு போக!" என்றெல்லாம் திட்டிக் கொண்டே, சின்னக் கண்ணனை எடுத்து மார்போடு அணைத்து இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டே, "வேண்டாமடா, கண்ணே! வேண்டாமடா!" என்று சமாதானப்படுத்தினாள். குழந்தை மீண்டும் மீண்டும் வீரிட்டு அழுதவண்ணம் இருக்கவே, கமலி கோபம் கொண்டு"அடே வாயை மூடுகிறாயா? அல்லது புலிகேசியை வந்து உன்னைப் பிடித்துக் கொண்டுபோகச் சொல்லட்டுமா?" என்றாள். குழந்தை அதிகமாக அழுதால் இந்த மாதிரி புலிகேசியின் பெயரைச் சொல்லிப் பயமுறுத்துவது வழக்கமாயிருந்தது. அதனால் தான் சிவகாமியையும் மேற்கண்டவாறு சபித்தாள்.

குழந்தை ஒருவாறு அழுகையை நிறுத்தியதும் அதைக் கீழே விட்டு விட்டுக் கமலி சிவகாமியைப் பார்த்தாள். அவளுடைய திகைப்பைக் கவனித்துவிட்டு, "தங்கச்சி! மாமல்லர் பாண்டியனோடு யுத்தம் செய்யப் போயிருப்பது உனக்குத் தெரியாதா, என்ன?" என்று கேட்டாள்.

"தெரியாது, அக்கா!" என்று சிவகாமி உணர்ச்சி பொருந்திய கம்மிய குரலில் கூறினாள். தான் சபையில் நடனமாடியபோது மாமல்லர் எங்கேயோ மறைவான இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பார் என்று எண்ணியதை நினைத்து ஏமாற்றமடைந்தாள். ஆம்! கமலி சொல்வது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். மாமல்லர் மட்டும் இங்கு இருந்திருந்தால் அந்தக் காட்டுப் பூனையின் முன்னால் தன்னை ஆட்டம் ஆடச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருப்பாரா?

மாமல்லர் இல்லாத சமயத்தில் புலிகேசியின் முன்னால்தான் ஆடியதை நினைத்தபோது சிவகாமிக்கு இப்போது அசாத்திய வெட்கமாயிருந்தது. மகேந்திர பல்லவர் மீது கோபம் கோபமாய் வந்தது. மாமல்லர் இல்லாதபோது அவர் இல்லை என்கிற தைரியத்தினாலேயே சக்கரவர்த்தி தன்னைப் புலிகேசியின் முன்னால் ஆடச் சொல்லி அவமானப்படுத்தியிருக்கிறார்.

இத்தகைய குழப்பமான எண்ணங்கள் சிவகாமியின் உள்ளமாகிற ஆகாசத்தில் குமுறி எழுந்தன. திடீரென்று, மின்னலைப் போல் ஓர் எண்ணம் தோன்றிக் குழப்பமாகிற கரிய இருளைப் போக்கியது. அந்த மின்னல் ஒளியிலே அவள் கண்டு தெரிந்து கொண்ட விஷயம், தன்னைக் கெடுப்பதற்கு மகேந்திர பல்லவர் செய்த சூழ்ச்சி எவ்வளவு பயங்கரமானது என்பதுதான். அதாவது மாமல்லர் தெற்கே போகும் போது தன்னை மண்டபப்பட்டில் சந்திக்காதிருக்கும் பொருட்டே, தன்னை இங்கே சக்கரவர்த்தி வரவழைத்திருக்கிறார்! என்று அவள் முடிவு செய்தாள்.

சிவகாமியின் முகத் தோற்றத்தையும் அவளுடைய கண்களில் ஜொலித்த கோபக் கனலையும் கவனித்த கமலி சிறிது நேரம் தானும் வாயடைத்துப் போய் நின்றாள். அப்புறம் சமாளித்துக் கொண்டு "தங்கச்சி! இது என்ன கோபம்? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லையே! மாமல்லருக்கு யுத்தம் புதிதா? பாண்டியனை முறியடித்து விட்டு வெற்றி வீரராகத் திரும்பி வர போகிறார்! அதுவரையில்..." என்று கமலி சொல்லி வந்தபோது, "ஆ! போதும்! போதும்! வாதாபிப் புலிகேசியை ஜயித்து வாகை மாலை சூடியாகி விட்டது; பாண்டியனை ஜயிப்பதுதான் மிச்சம்! போடி, அக்கா, போ! இந்தப் பல்லவ குலத்தாரைப் போல் மானங்கெட்டவர்களை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை" என்றாள் சிவகாமி.

கமலிக்குத் தூக்கிவாரிப் போட்டது! 'இது என்ன இவள் இப்படிப் பேசுகிறாள்? சூரியனிடம் காதல் கொள்ளத் துணிந்த பனித்துளிக்கு ஒப்பிட்டுத் தன்னைத்தானே எத்தனையோ தடவை நொந்து கொண்ட சிவகாமிதானா இவள்? குமார பல்லவரின் ஒரு கடைக்கண் நோக்குக்காகத் தன் உயிரையே கொடுக்கச் சித்தமாயிருந்த சிவகாமிதானா இவள்?'

இப்படிக் கமலி எண்ணி வியந்து கொண்டிருக்கும்போதே, சிவகாமியினுடைய முகபாவம் மாறியது. கமலியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, "அக்கா! ஏதோ பிதற்றுகிறேன்; மன்னித்து விடு, எல்லாம் விவரமாகச் சொல்லு. மாமல்லர் எப்போது யுத்தத்துக்குப் போனார்? வாதாபிச் சக்கரவர்த்தி காஞ்சிக்கு வருவதற்கு முன்னாலா? அப்புறமா? அவருடன் அண்ணனைத் தவிர இன்னும் யார் யார் போயிருக்கிறார்கள்? எல்லாம் விவரமாகச் சொல்லு. போகும்போது அண்ணன் உன்னிடம் என்ன சொல்லிவிட்டுப் போனார்? என்னை இங்கே சக்கரவர்த்தி நாட்டியம் ஆட வரவழைக்கப் போவது அவர்களுக்குத் தெரியுமா? சொல்லு அக்கா! ஏன் மௌனமாயிருக்கிறாய்? என் பேரில் உனக்குக் கோபமா?" என்று கேள்விகளை மேலும் மேலும் அடுக்கிக் கொண்டே போனாள்.

அதன் பேரில் கமலியும் தனக்குத் தெரிந்த வரையில் கூறினாள். சிவகாமி நாட்டியமாடுவதற்காக வரப்போகும் செய்தி யுத்தத்துக்குப் போனவர்களுக்குத் தெரிந்திருக்கவே நியாயமில்லையென்றும், தனக்கே இன்றுதான் தெரியுமென்றும் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டு விட்டுச் சிவகாமி, "அக்கா! நீ ஒன்றும் தப்பாக நினைத்துக் கொள்ளாதே! உன்னை நான் பார்த்து எத்தனையோ நாளாயிற்று. உன்னோடு பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உன் குழந்தை இந்தக் கண்மணியோடு எத்தனை யுகம் கொஞ்சினாலும் எனக்கு ஆசை தீராது. ஆனாலும் இப்போது இங்கே இருப்பதற்கில்லை. மண்டபப்பட்டுக்கு உடனே புறப்பட்டுப் போக வேண்டும். அப்பாவிடம் இதோ சொல்லப் போகிறேன்!" என்றாள்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com