Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 3
கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்
10. வாக்கு யுத்தம்

மந்திரி மண்டலத்தாரின் ஒருமுகமான அபிப்பிராயத்தை முதன் மந்திரி சாரங்கதேவ பட்டர் கூறி முடித்ததும் மகேந்திர சக்கரவர்த்தி சபையோரை ஒரு தடவை சுற்றி வளைத்துப் பார்த்தார். மாமல்லரும் பரஞ்சோதியும் இருந்த இடத்தை மட்டும் நோக்காமல் அவருடைய கண்ணோட்டத்தை முடித்து விட்டு, "சபையோர்களே! உங்களுடைய அபிப்பிராயத்தை முன்கூட்டியே எதிர்பார்த்து..." என்று ஆரம்பித்தார். சிங்காசனத்தில் நிலைத்து உட்கார முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த மாமல்லர் அப்போது துள்ளி எழுந்து, "பல்லவேந்திரா! சாதுக்களும், சமாதானப் பிரியர்களும், இராஜ தந்திரிகளும், தீர்க்கதரிசிகளும் வீற்றிருக்கும் இந்த மகா சபையில் அடியேனும் ஒரு வார்த்தை சொல்லலாமா?" என்று கேட்டார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் சீறலுடன் நெருப்பைக் கக்கிக் கொண்டு வரும் அக்னியாஸ்திரத்தைப் போல் அந்தச் சபையில் இருந்தவர்களின் செவியில் பாய்ந்தது.

மாமல்லருடைய அக்னியாஸ்திரங்களை, மகேந்திரர் வருணாஸ்திரத்தைப் பிரயோகித்து அடக்க முயன்றார். "மாமல்லா! இதென்ன இப்படிக் கேட்கிறாய்? பல்லவ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்துக்கு உரிமை பூண்ட குமார சக்கரவர்த்தியல்லவா நீ? சாம்ராஜ்யத்தின் மந்திராலோசனை சபையில் கலந்து கொள்ள உனக்கு இல்லாத பாத்தியதை வேறு யாருக்கு உண்டு? உன் மனத்தில் தோன்றுகிறது என்னவோ, அதைத் தாராளமாகச் சொல்! ஆனால், நான் உன்னுடைய தந்தையாகையாலும், இச்சபையில் உள்ளவர்களெல்லாம் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியவர்களாதலாலும் எங்களையெல்லாம் அவமதித்துப் பேசும் உரிமையை நீ கோர மாட்டாயென்று கருதுகிறேன்..."

அப்போது சபையில் ஏற்பட்ட குறுநகைப்பின் ஒலி மாமல்லர் காதில் விழவும் அவர் தம் கண்களில் தீ எழுமாறு சபையைச் சுற்றிப் பார்த்து விட்டுத் தந்தையை இடைமறித்துக் கூறினார்.

"தந்தையே! தங்களையாவது இங்குள்ள பெரியவர்களையாவது அவமதிக்கும் எண்ணம் எனக்குக் கொஞ்சங்கூட இல்லை. பல்லவ குலத்தையும் பல்லவ இராஜ்யத்தையும் உலகம் என்றென்றைக்கும் அவமதிக்காமல் இருக்க வேண்டுமே என்றுதான் கவலைப்படுகிறேன். வாழையடி வாழையாக தொண்டைமான் இளந்திரையன் காலத்திலிருந்து வந்த வீர பல்லவ குலத்தின் பெருமையைக் குறித்துத் தாங்கள் அடிக்கடி சொல்லியிருக்கிறீர்கள். பல்லவ குலத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இதற்கு முன்னால் இவ்விதமெல்லாம் செய்ததுண்டா? போர்க்களத்தில் எதிரியின் படைகளுக்குப் புறங்காட்டிப் பின் வாங்கி வந்ததுண்டா? பகைவர்களின் படையெடுப்புக்குப் பயந்து, கோட்டைக்குள்ளே ஒளிந்து கொண்டதுண்டா? கடைசியாக இப்போது, பல்லவ நாட்டுக்குள் படையெடுத்து வரத்துணிந்த பாதகனுடன் சமாதானம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்லுகிறீர்கள். பல்லவேந்திரா! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாளைக்கு உலகிலெல்லாம் என்ன பேச்சு ஏற்படும்? 'வாதாபிச் சக்கரவர்த்தி படையெடுத்து வந்த போது பல்லவ சக்கரவர்த்தி பயந்து கோட்டைக்குள் புகுந்து கொண்டார். கடைசியில் சரணாகதி அடைந்து சமாதானம் செய்து கொண்டார்' என்றுதானே உலகத்தார் சொல்லுவார்கள். புலிகேசி சமாதானத்தை வேண்டித் தூது அனுப்பினான் என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். பாண்டியனும் சோழனும் சேரனும் களப்பாளனும் பல்லவர்களைப் பார்த்து நகையாடுவார்கள். புள்ளலூரில் புறங்காட்டி ஓடிய கங்க நாட்டான் மறுபடியும் துள்ளி எழுவான். உலகம் உள்ளவரைக்கும் பல்லவ குலத்துக்கு ஏற்பட்ட இந்தப் பழி மறையாது."

இப்படி மாமல்லர் கேட்போரின் மான உணர்ச்சியைத் தூண்டும் வீரமுள்ள வார்த்தைகளைப் பேசிக் கொண்டு வந்த போது, சபையிலே கலகலப்பு ஏற்பட்டது. மாமல்லருடைய வார்த்தைகளில் உண்மை இருக்கிறது என்பதை ஆமோதித்து ஒருவரோடொருவர் கசமுசவென்று பேசிக் கொண்டார்கள்.

இந்த நிலைமையைத் தமது கூரிய கழுகுக் கண்களின் ஓரப் பார்வையினால் தெரிந்து கொண்ட மகேந்திர சக்கரவர்த்தி, மாமல்லருடைய பேச்சில் நடுவே குறுக்கிட்டார்.

"மகனே! உலகம் நீ நினைப்பது போல் அவ்வளவு பைத்தியக்கார உலகம் அல்ல. மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு முட்டாள்களும் அல்ல. அப்படியே இருந்த போதிலும், அதற்காக நானும் மூடத்தனமான காரியத்தைச் செய்ய முடியாது. அவசியமில்லாத போது யுத்தம் நடத்த முடியாது. இலட்சக்கணக்கான வீரர்களின் உயிரை வீண் வீம்புக்காகப் பலிகொடுக்க முடியாது. காரணமில்லாமல் நாட்டின் பிரஜைகளைச் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு உள்ளாக்க முடியாது. மாமல்லா! இந்தப் பல்லவ சிம்மாசனத்தில் நான் ஏறியபொழுது, இந்த மணிமகுடம் என் தலையில் சூட்டப்பட்ட அன்று, இச்செங்கோலை முதன் முதலாக என்னுடைய கரத்தில் ஏந்திய உடனே, இந்த நாட்டு மக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாப்பேன்; அவர்களுக்குக் கஷ்டம் எதுவும் வராமல் தடுப்பேன் என்று நாடறியச் சபதம் செய்தேன். வெறும் வீம்புக்காகவோ, உலகத்தில் மூடர்கள் ஏதேனும் சொல்லுவார்களே என்பதற்காகவோ அந்தச் சபதத்தை நான் கைவிட முடியாது!" என்று கம்பீரமான குரலில் தலை நிமிர்ந்து கூறினார். ஆனால், மாமல்லருடைய அம்பறாத்தூணியில் இன்னும் சில பாணங்கள் மிச்சமிருந்தன.

"தந்தையே! இந்தப் பல்லவ நாட்டுப் பிரஜைகளைப் பற்றித்தான் தாங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம். தெய்வாதீனமான காரணத்தினால் ஏழு மாதத்துக்கு முன்னால் ஒரு சிறு கிராமத்தில் நான் மூன்று தினங்கள் வசிக்க நேர்ந்தது. அப்போது அந்தக் கிராமத்து ஜனங்கள் பேசிக் கொண்டதை என் இரு செவிகளாலும் கேட்டேன். இந்தப் பல்லவ இராஜ்யத்தின் பிரஜைகள் சுத்த வீரர்கள் என்றும், மானத்துக்காக உயிரையும் உடைமைகளையும் திருணமாக மதிக்கிறவர்கள் என்றும் அறிந்தேன். புள்ளலூர்ச் சண்டையைப் பற்றியும், அதில் நாம் அடைந்த வெற்றியைக் குறித்தும், பல்லவ நாட்டு மக்கள் எப்பேர்ப்பட்ட குதூகலம் அடைந்தார்கள், தெரியுமா? நாம் வீர சைனியத்துடன் இந்தக் காஞ்சிக் கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளப் போகிறோம் என்ற வதந்தியை அவர்களால் நம்ப முடியவில்லை. பல்லவேந்திரா! என் காதினால் கேட்ட வார்த்தையைச் சொல்லுகிறேன். மண்டபப்பட்டுக் கிராமத்து ஜனங்கள் என்ன பேசிக் கொண்டார்கள் தெரியுமா? 'மாமல்லனைப் போன்ற புத்திரனையும், பரஞ்சோதியைப் போன்ற தளபதியையும் படைத்த மகேந்திர சக்கரவர்த்தி புலிகேசிக்குப் பயந்து எதற்காகக் கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளப் போகிறார்? ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டார்' என்று பேசிக் கொண்டார்கள். புலிகேசி காஞ்சிக் கோட்டைக்கருகில் வந்ததும் பல்லவ சைனியம் வாதாபிச் சைனியத்துடன் வீரப் போர் புரியுமென்று நம் பிரஜைகள் எதிர்பார்த்தார்கள். அவர்களை நாம் அடியோடு ஏமாறும்படி செய்து விட்டோ ம். இப்போதாவது அவர்களுடைய நம்பிக்கையை மெய்ப்படுத்த எனக்குக் கட்டளையிடுங்கள். இந்தக் கோட்டைக்குள்ளே ஓர் இலட்சம் பல்லவ வீரர்கள் எப்போது போர் வருமென்று துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நகரின் மாபெரும் கொல்லர்கள் ஒன்றரை வருஷமாகச் செய்து குவித்திருக்கும் வாட்களும் வேல்களும், 'தாகம் தாகம்' என்று தவித்துக் கொண்டிருக்கின்றன. இதோ என் உயிர்த் தோழர் பரஞ்சோதியும் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார். தந்தையே! சைனியத்தை நடத்திக் கொண்டு போகக் கட்டளையிடுங்கள். வாதாபி சைனியத்தை நிர்மூலம் செய்ய இந்த க்ஷணமே ஆக்ஞை இடுங்கள்!"

மகேந்திர பல்லவர் உணர்ச்சி மிகுதியினால் பேச முடியாமல் தத்தளித்தார். தமது அருமைக் குமாரனுடைய வீராவேச மொழிகளைக் கேட்டு அவருடைய கல் நெஞ்சமும் கனிந்து விட்டதாக ஒரு கணம் தோன்றியது. எனினும், மறுகணமே அவர் பல்லைக் கடித்துக் கொண்டு முகத்தையும் கடுமையாக வைத்துக்கொண்டு சொன்னார்: "குழந்தாய்! சுத்த வீரன் சொல்லக்கூடிய வார்த்தைகளை நீ பேசினாய். அதைக் குறித்து எனக்குச் சந்தோஷந்தான். ஆனாலும், உன் யோசனையை நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. பல்லவ நாட்டு வீரக் குடிமக்களின் அபிப்பிராயத்தைப் பற்றிச் சொன்னாய். அதைப் பற்றியும் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் பிரஜைகளின் அபிப்பிராயம் எப்போதும் சரியான அபிப்பிராயமாயிராது. முன் யோசனையின்றி, உணர்ச்சி வேகத்தினால் பிரஜைகள் சொல்லும் பேச்சைக் கேட்டு அது காரணமாக இந்த நாட்டு மக்களுக்கும், அவர்களுடைய வருங்காலச் சந்ததிகளுக்கும் எல்லையற்ற கஷ்ட நஷ்டங்களை நான் உண்டாக்கப் போவதில்லை!"

இவ்விதம் மாமல்லரைப் பார்த்துச் சொன்னவர், சபையோரின் பக்கம் திரும்பி, "சபையோர்களே! உங்களுடைய சம்மதத்தை எதிர்பார்த்து நான் வாதாபிச் சக்கரவர்த்திக்கு முன்னமேயே மறுமொழி அனுப்பிவிட்டேன். அவருடைய சமாதானத் தூதை ஏற்றுக் கொள்வதாகவும் அவரைக் காஞ்சிமாநகருக்குள் நமது விருந்தினராக வரவேற்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்வதாகவும் ஓலை எழுதி அனுப்பிவிட்டேன். அவ்விதம் நான் கொடுத்துவிட்ட வாக்கை இனி என்னால் மீற முடியாது!" என்றார்.

மாமல்லர் அப்போது முன்னைவிட அதிகப் பரபரப்புடனே, "அப்பா! இது என்ன? பல்லவ வம்சத்தின் கொடிய சத்ருவை நமது தலைநகரத்தில் வரவேற்பதா? புலிகேசிக்கு உபசாரமா? யுத்தத்தை நிறுத்திச் சமாதானம் செய்து கொள்வதோடாவது நிறுத்திக் கொள்ளுங்கள். வாதாபிப் படை இந்த நாட்டை விட்டு ஒழியும் வரையில் நாம் கோட்டைக்குள்ளேயே வேணுமானாலும் ஒளிந்து கொண்டிருப்போம். ஆனால், வஞ்சகப் புலிகேசியுடன் நமக்குச் சிநேகம் வேண்டாம். வைஜயந்திப் பட்டணத்துக்கு நெருப்பு வைத்த பெரும் பாதகன் இந்தப் புண்ணிய நகரத்துக்குள்ளே காலடி வைக்க வேண்டாம்" என்று அலறினார்.

"முடியாது, மாமல்லா! பல்லவ குலத்தினர் ஒரு தடவை கொடுத்த வாக்கை மீறுவது வழக்கமில்லை. புலிகேசியை நான் வரவேற்றேயாக வேண்டும்" என்றார் மகேந்திரர்.

இதைக் கேட்ட மாமல்லர் இரண்டு அடி முன்னால் பாய்ந்து வந்தபோது சபையோர் ஒருகணம் திடுக்கிட்டுப் போய் விட்டார்கள். தந்தையைத் தாக்குவதற்கே அவர் பாய்கிறாரோ என்றுகூடச் சிலர் பயந்து போனார்கள். அவ்விதமான விபரீதம் ஒன்றும் நேரவில்லை. சக்கரவர்த்தியின் அருகில் வந்து கைகூப்பிக் கொண்டு, "தந்தையே! வாதாபிச் சக்கரவர்த்தியைத் தாங்கள் வரவேற்றேயாக வேண்டுமானால், எனக்கு ஒரு வரம் கொடுங்கள். புலிகேசியும் நானும் ஏககாலத்தில் இந்த நகருக்குள்ளே இருக்க முடியாது. புலிகேசி உள்ளே வரும் போது நான் வெளியே போய் விடுவதற்கு அனுமதி கொடுங்கள்!" என்றார் மாமல்லர்.

"நானும் அப்படித்தான் யோசித்து வைத்திருக்கிறேன். குமாரா! வாதாபிச் சக்கரவர்த்தி வரும்போது உன்னை வெளியே அனுப்பி விடுவதாகத்தான் உத்தேசித்திருக்கிறேன். அதற்கு வேறோர் அவசியமும் ஏற்பட்டிருக்கிறது" என்றார் சக்கரவர்த்தி.

இச்சமயத்தில் தளபதி பரஞ்சோதி ஓர் அடி முன்னால் வந்து, "பிரபு! எனக்கும் குமாரச் சக்கரவர்த்தியுடன் வெளியேற அனுமதி தரவேண்டும்" என்று கேட்க, மகேந்திரர் கூறினார்:

"ஆஹா! அப்படியே! இராமன் போகும் இடத்துக்கு லக்ஷ்மணனும் தொடர்ந்து போக வேண்டியது நியாயந்தானே! நீங்கள் இருவரும், நம் சைனியத்திலே சிறந்த முப்பதினாயிரம் வீரர்களைப் பொறுக்கிக் கொண்டு ஆயத்தமாகுங்கள். வடநாட்டுச் சளுக்க சைனியம் படையெடுத்த சமயம் பார்த்துக் கோழைத்தனமாகவும், திருட்டுத்தனமாகவும் பல்லவ இராஜ்யத்துக்குள் பிரவேசித்த தென்பாண்டிய நாட்டானுக்கு அவசியம் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் சீக்கிரமாகவே புறப்பட ஆயத்தமாகுங்கள்!"

சக்கரவர்த்தியின் கடைசி மொழிகள் மாமல்லருடைய கோபத்தைத் தணித்து ஓரளவு உற்சாகத்தை அளித்ததோடு, மந்திர மண்டலத்தாரை ஒரே ஆச்சரியக் கடலில் ஆழ்த்தி விட்டன.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com