Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை
53. பாரவி இட்ட தீ

மகேந்திர சக்கரவர்த்தி சபா மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தபோது அவ்விடத்தில் ஏற்பட்ட ஆரவாரத்தையும் கோலாகலத்தையும் சொல்லி முடியாது. சற்று நேரம் வரையில் ஒரே ஜயகோஷமும் எதிரொலியுமாயிருந்தது.

மாமல்லர் பாய்ந்து சென்று மகேந்திர பல்லவரைத் தழுவிக் கொண்டார். மந்திரிகளும் அமைச்சர்களும் கோட்டத் தலைவர்களும் சம்பிரதாய மரியாதைகளை மறந்தவர்களாய் சக்கரவர்த்தியைச் சூழ்ந்து கொண்டார்கள். ஏககாலத்தில் பலர் பேச முயன்றார்கள்.

தளபதி பரஞ்சோதி மட்டும் சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக நின்றார். அவருடைய கண்களிலே வெட்கத்தின் அறிகுறி காணப்பட்டது. "நான்கூட ஏமாந்து போனேனல்லவா? சக்கரவர்த்தியைப் பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும், இவர் பகைவர்களால் சிறைப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பி விட்டேனல்லவா?" என்ற எண்ணத்தினால் அவ்வீர வாலிபர் வெட்கமடைந்தார் போலும்!

ஆரவாரம் சற்று அடங்கியதும், மகேந்திர சக்கரவர்த்தி சபையோரைச் சுற்றி வளைத்துப் பார்த்து, "ஏது, எல்லாரும் ஒரே குதூகலமாயிருக்கிறீர்கள்? உங்களுடைய உற்சாகத்தைப் பார்த்தால், யுத்தத்திலேயே ஜயித்துவிட்டது மாதிரி தோன்றுகிறதே? நமது கோட்டைத் தளபதி மட்டும் சிறிது வாட்டமடைந்து காணப்படுகிறார்!" என்றபோது எல்லாருடைய கண்களும் பரஞ்சோதியை நோக்க, அவருடைய வெட்கம் இன்னும் அதிகமாயிற்று.

முதன் மந்திரி சாரங்கதேவர், "பல்லவேந்திரா! தாங்கள் வருவதற்கு ஒரு வினாடி நேரத்துக்கு முன்னால்தான், நம் சைனியத்தைக் கோட்டைக்கு வெளியே கொண்டுபோய்ப் புலிகேசியுடன் போர் நடத்துவதாக நாங்கள் இங்கே தீர்மானித்திருந்தோம். தங்களுடைய வரவினால் அதற்கு இடமில்லாமற் போய்விட்டதே என்று நமது கோட்டைத் தளபதிக்கு வருத்தமாயிருக்கலாம்!" என்றார்.

"என்ன? என்ன? நம்முடைய சைனியத்தைக் கோட்டைக்கு வெளியே கொண்டு போவதாக உத்தேசமா? இந்த அபூர்வமான யோசனையை யார் செய்தது? சேனாபதி! எப்படி என்னுடைய கட்டளையை மீறத் துணிந்தீர்? உமக்குக்கூட என்னிடம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா?" என்று பல்லவேந்திரர் சிம்ம கர்ஜனை போன்ற குரலில் கேட்க, சேனாபதி கலிப்பகையார் தாழ்ந்த குரலில், "பிரபு! தாங்கள் பகைவர்களால் சிறைப்பட்டிருப்பதைக் கேட்டபிறகு நாங்கள் எப்படிக் கோட்டைக்குள்ளே, பதுங்கிக் கொண்டிருக்கமுடியும்? தங்களை விடுவிக்க முடியாத பல்லவ சைனியம் இருந்தென்ன, இல்லாமற் போயென்ன?" என்றார்.

"ஆகா! நான் பகைவர்களால் சிறைப்பட்டிருந்தேனா? இது என்ன கதை?" என்று சக்கரவர்த்தி கேட்டபோது, அங்கே கூடியிருந்தவர்களின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

முதன் மந்திரி சாரங்கதேவர், சற்று முன்னால் சக்கரவர்த்தியின் தூதன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்ததையும், அவன் கூறிய அதிசயமான செய்தியையும், அதன்மேல் தாங்கள் தீர்மானித்ததையும் சுருக்கமாகக் கூறினார்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "ஆகா! நாகநந்தியடிகள் நான் நினைத்ததற்கு மேலே கெட்டிக்காரராயிருக்கிறார். சற்று நேரம் தாமதித்து வந்திருந்தேனானால் காரியம் அடியோடு கெட்டுப் போயிருக்குமே!" என்றார் மகேந்திர சக்கரவர்த்தி.

"பிரபு! அப்படியானால், அந்தத் தூதன் கூறியது பொய்யா? தாங்கள் பகைவர்களிடம் சிறைப்படவில்லையா?" என்று சேனாபதி கலிப்பகையார் கேட்க மகேந்திரர் கூறினார்: "அது பொய்தான், நான் பகைவர்களிடம் சிறைப்படவில்லை. அப்படி நான் சிறைப்பட்டிருந்தாலும் என்னை விடுவிப்பதற்காக நீங்கள் படை திரட்டிக்கொண்டு புறப்பட்டிருக்க வேண்டியதில்லை. என்னை விடுவித்துக் கொள்ள எனக்குத் தெரியும். முன்பின் தெரியாத தூதனுடைய வார்த்தையை அவ்வளவுக்கு நீங்கள் நம்பி விட்டீர்களே? நாகநந்தி நமது எதிரியின் ஒற்றன் என்பதை மாமல்லனாவது பரஞ்சோதியாவது உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா?"

"பிரபு! தாங்கள் சிறைப்பட்டீர்கள் என்ற செய்தி என்னுடைய அறிவைக் குழப்பிவிட்டது. பல்லவ குமாரரும் மனம் கலங்கிப்போய் விட்டார்" என்றார் பரஞ்சோதி.

"அவன் ஒற்றனா? அப்படியானால் சிங்க இலச்சினை அவனிடம் எப்படி வந்தது?" என்று முதல் அமைச்சர் கேட்டார்.

"நான்தான் அவனிடம் கொடுத்தேன். இந்த அதிசாமர்த்தியசாலியான ஒற்றனைக் கைப்பிடியாய்ப் பிடிப்பதற்காகவே நான் வடக்குப் போர் முனையிலிருந்து தெற்கே போயிருந்தேன்..."

"பிரபு! எதிரியின் ஒற்றனிடம் சிங்க இலச்சினை ஏன் கொடுத்தீர்கள்? கொடுத்தபோது அவன் ஒற்றன் என்று தெரியாதா?"

"ஒன்பது மாதத்துக்கு முன்னாலேயே தெரியும். நமது கோட்டைத் தளபதி காஞ்சிக்கு வந்த அன்றே அந்தச் சந்தேகம் என் மனத்தில் உதித்தது. வாதாபி ஒற்றர்கள் பல்லவ ராஜ்யமெங்கும் பௌத்த சங்கங்களின் மூலமாக வேலை செய்து வருவதை அறிந்தேன். அவர்களையெல்லாம் பிடிப்பதற்காக இத்தனை நாளும் நாகநந்தியை வெளியில் விட்டிருந்தேன். கோட்டை முற்றுகை தொடங்குவதற்குள் நாகநந்தியை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு தெற்கே போனேன். கடைசியாக, மண்டபப்பட்டுக் கிராமத்தில் கண்டுபிடித்தேன்."

"என்ன, மண்டபப்பட்டிலா?" என்று மாமல்லர் தூக்கி வாரிப் போட்டவராகக் கேட்டார்.

"ஆமாம், மாமல்லா! மண்டபப்பட்டிலேதான் அங்கே நமது ஆயனரையும் சிவகாமியையும்கூடப் பார்த்தேன். அவர்களைப் பெரும் வெள்ளத்திலிருந்து நீ காப்பாற்றியது பற்றிச் சொன்னார்கள். இருவரும் சந்தோஷமாயிருக்கிறார்கள். ஆயனர் அங்கே மலைக்கோயில் அமைக்கும் பணியில் ஈடுபடுவதற்குத் தக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். நாகநந்தியைத் தேடிக்கொண்டு மண்டபப்பட்டுக்குப் போனதில் இந்த ஒரு நன்மையும் ஏற்பட்டது.."

ஆயனரும் சிவகாமியும் எதிரிகளின் ஒற்றர்கள் என்று நாகநந்தி கூறிய விஷங்கலந்த வார்த்தைகளினால் புண்பட்டிருந்த மாமல்லரின் உள்ளம் இதைக் கேட்டுக் குதூகலித்தது. அவருடைய மனத்தில் பொங்கிய உற்சாகம் முகமலர்ச்சியாகப் பரிணமித்தது.

"பிரபு! ஒற்றனைச் சிறைப்படுத்தியாகிவிட்டதா?" என்று சேனாதிபதி கலிப்பகை கவலை தோய்ந்த குரலில் கேட்டார்.

அவருக்குப் போர்க்களத்தில் யுத்தம் செய்யும் முறைதான் தெரியுமே தவிர, இந்த மாதிரி ஒற்றர் தந்திரங்களெல்லாம் தலை வேதனை அளித்தன.

"ஆம், சேனாதிபதி! வாதாபியின் மிகவும் கெட்டிக்காரனான ஒற்றனைச் சிறைப்படுத்தியாகிவிட்டது. பாதி யுத்தத்தை நாம் ஜயித்துவிட்டதுபோலத்தான்!" என்றார் சக்கரவர்த்தி.

உடனே மாமல்லர், தந்தையிடம் துள்ளி வந்து வணக்கத்துடன் கைகூப்பி நின்று, "பல்லவேந்திரா! பாதி யுத்தத்தைத் தாங்கள் ஜயித்தாகிவிட்டது. மற்றப் பாதி யுத்தத்தை ஜயிக்க எனக்கு அனுமதி கொடுங்கள். நமது வீர பல்லவ சைனியத்தை நடத்திக்கொண்டு போய் வாதாபி அரக்கர் சைனியத்தை அடியோடு அழித்து நிர்மூலம் செய்ய அனுமதி கொடுங்கள். என் அருமைத் தோழர் பரஞ்சோதியையும் என்னுடன் அனுப்பி வையுங்கள்!" என்றார்.

அப்போது மகேந்திரபல்லவர் மாமல்லரைத் தழுவிக் கொண்டு "குழந்தாய்! உன்னுடைய வீரத்தை மெச்சுகிறேன். ஆனால், கொஞ்சம் நான் சொல்லுவதைக் கேள்!" என்று கூறிவிட்டு, சபையோர்களைப் பார்த்து, "மந்திரிகளே! அமைச்சர்களே! கோட்டைத் தலைவர்களே! எல்லாரும் சற்றுச் செவி கொடுத்துக் கேளுங்கள். இந்த யுத்தத்திற்கு ஆதிமூலமான காரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன். பிறகு, உங்களுடைய விருப்பம் என்ன என்பதை எனக்குத் தெரிவியுங்கள்" என்றார்.

நிசப்தம் நிலவிய மந்திராலோசனை சபையைப் பார்த்து மகேந்திரபல்லவர் மேலும் கூறியதாவது: "நான் இளம் பிள்ளையாயிருந்தபோது யுத்தம் என்னும் எண்ணமே இல்லாதவனாயிருந்தேன். என் தந்தை சிம்ம விஷ்ணுவின் வீரப்புகழ் தென்னாடெங்கும் பரவியிருந்தது. நான் பிறப்பதற்கு முன்னாலேயே என் தந்தை கீழைச் சோழ நாட்டைப் பல்லவ ராஜ்யத்துடன் சேர்த்துக்கொண்டார். உறையூர்ச் சோழர்களை அடக்கிக் கப்பம் கட்டச் செய்தார். பாண்டியர்களையும் கர்வபங்கம் செய்தார். மேற்கே கங்கரும் வடமேற்கே கதம்பரும் சிம்மவிஷ்ணு மகாராஜாவிடம் பயபக்தி கொண்ட நண்பர்களாயிருந்தார்கள். வடக்கே வேங்கி நாட்டரசனோ எனக்குத் தாய்மாமன். ஆகவே, யுத்தம் என்ற நினைவே இல்லாமல் நான் வளர்ந்து வந்தேன். சித்திரம், சிற்பம், கவிதை சங்கீதம், நடனம் ஆகிய கலைகளில் ஈடுபட்டுக் காலம் கழித்தேன். எந்தெந்த தேசத்தில் என்னென்ன கலை சிறந்து விளங்கியது என்று அறிந்து, அந்தக் கலையில் வல்லாரைத் தருவித்து இந்தப் பல்லவ நாட்டிலும் அக்கலையை வளர்க்க முயன்றேன்.

இப்படியிருக்கும்போது, கங்கமன்னன் துர்விநீதனுடைய சபையில் பாரவியென்னும் வடமொழிக் கவி ஒருவர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர் வடக்கே அசலபுரத்தில் இருந்தவர். வாதாபி இராஜகுமாரர்களின் சிநேகிதர். புலிகேசியும் அவனுடைய சகோதரர்களும் சிற்றப்பனுக்கு பயந்து காட்டிலே ஒளிந்திருந்தபோது பாரவியும் அவர்களோடு கொஞ்சகாலம் அலைந்து திரிந்தார். பிறகு அவர் கங்கநாட்டு மன்னனுடைய சபையைத் தேடி வந்தார். துர்விநீதனுடைய மகளைப் புலிகேசியின் தம்பி விஷ்ணுவர்த்தனுக்கு மணம் பேசி முடித்து, அதன் மூலம் புலிகேசிக்குப் பலம் தேடிக் கொடுப்பதற்காக அவர் வந்தார்.

துர்விநீதன் என்னுடைய தந்தைக்குப் பெரிதும் கடமைப்பட்டவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால், கங்கபாடியில் நடக்கும் காரியங்கள் எல்லாம் அவ்வப்போது காஞ்சிக்குத் தெரிந்து கொண்டிருந்தன. பாரவி அங்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், அவரைக் காஞ்சிக்கு வரவழைக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். என் தந்தையும் அவ்விதமே துர்விநீதனுக்குச் செய்தி அனுப்பினார். அதன்பேரில் பாரவி இங்கு வந்தார். வந்தவர் காஞ்சி சுந்தரியின்மேல் மோகம் கொண்டு விட்டார்! இந்தக் காஞ்சி நகரின் திருக்கோயில்களும் இராஜவீதிகளும் பூந்தோட்டங்களும் பாரவியை அடியோடு கவர்ந்து விட்டன. புலிகேசி வாதாபி சிம்மாசனத்தில் ஏறிய பிறகு, அவனும் அவன் தம்பி விஷ்ணுவர்த்தனனும் பாரவிக்கு ஓலைமேல் ஓலையாக விடுவித்துக் கொண்டிருந்தார்கள். வாதாபிக்கு திரும்பி வந்துவிடும்படியாகத்தான். ஆனால் பாரவி அதற்கெல்லாம் இணங்கவில்லை. காஞ்சியை விட்டுப்போவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. புலிகேசியின் ஓலைகளுக்கெல்லாம் பாரவி தம்மால் வரமுடியாதென்று மறு ஓலை அனுப்பினார். அவற்றில் காஞ்சி நகரைப் பற்றி வர்ணணைகள் செய்தார். அந்த ஓலைகளில் ஒன்றிலேதான்,

புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு
நாரிஷு ரம்பா நகரேஷு காஞ்சி

என்ற சுலோகத்தை அவர் எழுதினார். இதையெல்லாம் அப்போது படிக்கையில் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருந்தது. ஆனால், அப்போது அந்த பாரவி கவி மூட்டிய தீதான் இப்போது இந்தப் பெரும் யுத்தமாக மூண்டிருக்கிறது. புலிகேசி பாரவிக்கு எழுதிய ஓலை ஒன்றில், 'என்றைக்காவது ஒரு நாள் நான் காஞ்சி நகருக்கு வருவேன்; உம்முடைய வர்ணனையெல்லாம் உண்மைதானா என்று பார்ப்பேன் என்று எழுதியிருந்தான். அதுவும் எனக்குப் பெருமையாயிருந்தது. அப்போது, வாதாபி சக்கரவர்த்தி காஞ்சிக்கு வரும்போது அவருக்குப் பிரமாதமான வரவேற்பு நடத்த வேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஆனால், சபையோர்களே! நான் நினைத்ததற்கு மாறாக இப்போது கோட்டைக் கதவுகளைச் சாத்தி வாதாபி சக்கரவர்த்தியை வெளியில் நிறுத்த வேண்டியிருக்கிறது..."

இத்தனை நேரமும் சபையோர் அனைவரையும் போல ஆவலுடன் மகேந்திரர் கூறிய வரலாற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மாமல்லர் குறுக்கிட்டு, "பல்லவேந்திரா! எதற்காக நம் கோட்டைக் கதவுகளைச் சாத்தித் தாளிடவேண்டும்? வேல்களையும் வாள்களையும் கொண்டு புலிகேசியை ஏன் வரவேற்கக்கூடாது?" என்றார்.

"ஆம்; வரவேற்கத்தான் போகிறோம். நமது கோட்டைச் சுவர்களின் மீது பல்லவ வீரர்கள் நின்று, வாள்களாலும் வேல்களாலும் சளுக்கர்களை வரவேற்பார்கள். வரவேற்று நமது அகழிகளிலுள்ள முதலைகளுக்கு விருந்தளிப்பார்கள்! நான் சொல்ல ஆரம்பித்ததை முழுதும் சொல்லிவிடுகிறேன். அந்த அரக்கன் புலிகேசி நமது காஞ்சி சுந்தரியின் மேல் எத்தகைய மோகம் கொண்டிருக்கிறான் என்பதை நேரில் நானே பார்த்தேன். ஆகா! காஞ்சியின் சௌந்தரியத்தை நான் வர்ணிக்க ஆரம்பித்ததும், அவனுடைய கண்கள் எப்படி ஜொலித்தன தெரியுமா...?"

"இதென்ன? புலிகேசியைத் தாங்கள் நேரில் பார்த்தீர்களா? எங்கே? எப்போது?" என்று சாரங்கதேவர் கேட்டார்.

"வடபெண்ணை நதிக்கரையில் சளுக்கர் படைக்கு நடுவில் அவனை நான் பார்த்தேன்" என்று மகேந்திரர் கூறியதும், சபையில் பெரும் வியப்புக்கு அறிகுறியான 'ஹாஹாகாரம்' எழுந்தது.

"பிரபு! இப்படியெல்லாம் தங்களை அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்ளலாமா? இந்தப் பெரிய பல்லவ சாம்ராஜ்யம் தங்கள் ஒருவரையே நம்பியிருக்கிறதே!" என்றார் முதல் அமைச்சர்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com