Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை
51. சக்கரவர்த்தி தூதன்

குமார சக்கரவர்த்தி சபையில் கூடியிருந்தவர்களை ஒரு தடவை கண்ணோட்டமாகப் பார்த்துவிட்டு, "உங்கள் அபிப்பிராயம் என்ன? எல்லோருக்கும் சம்மதம்தானே?" என்று கேட்டார்.

சபையில் எல்லாருடைய முகத்திலும் திகைப்பின் அறிகுறி காணப்பட்டது. சற்று நேரம் நிசப்தம் குடிகொண்டிருந்தது.

உண்மையென்னவென்றால், அங்கே கூடியிருந்தவர்கள் யாவரும் யுத்தம் சம்பந்தமாக அபிப்பிராயம் கூறுவதற்காக வரவில்லை. மகேந்திர சக்கரவர்த்தியின் விருப்பத்தையும் ஆக்ஞையையும் தெரிந்துகொள்வதற்காகவே அவர்கள் வந்திருந்தார்கள்.

ஒன்பது மாதத்துக்கு முன்னால் சக்கரவர்த்தி வடக்குப் போர்க்களம் சென்றபோது அவர்கள் மேற்படி கொள்கையே அனுஷ்டித்துச் சக்கரவர்த்திக்குச் சர்வாதிகாரம் அளித்தார்கள். இப்போதும் அதே உறுதியுடன்தான் சபையில் கூடியிருந்தார்கள்.

விஷயம் இப்படியிருக்க, மாமல்லர் திடீரென்று எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய அபாயகரமான காரியத்தைச் செய்யப் போவதாகச் சொல்லி, அதைப்பற்றி அபிப்பிராயமும் கேட்கவே, எல்லாரும் மனக் குழப்பத்தில் ஆழ்ந்து, இன்னது செய்வதென்று தெரியாமல் சும்மா இருக்கும்படி நேர்ந்தது.

மாமல்லர் எல்லாருடைய முகங்களையும் ஒரு தடவை கண்ணோட்டம் செலுத்திப் பார்த்துவிட்டு, "ஏன் எல்லாரும் மறுமொழி சொல்லாமலிருக்கிறீர்கள்? இது என்ன மௌனம்? உங்கள் முன்னிலையில் சொல்லத்தகாத வார்த்தைகள் ஏதேனும் சொல்லிவிட்டேனா? வீர பல்லவ குலத்துக்கு இழுக்குத் தரும் காரியம் எதையேனும் கூறினேனா?" என்று கம்பீரமாகக் கேட்டார்.

இன்னமும் அச்சபையில் மௌனம்தான் குடிகொண்டிருந்தது. பெரியதொரு தர்ம சங்கடத்தில் தாங்கள் அகப்பட்டுக் கொண்டிருப்பதாக ஒவ்வொருவரும் உணர்ந்து வாய் திறவாமல் இருந்தார்கள்.

"நல்லது, உங்களில் ஒருவரும் ஆட்சேபியாதபடியினால், என்னுடைய யோசனையை ஒப்புக்கொள்கிறீர்கள் என்று ஏற்படுகின்றது. சேனாதிபதி! அப்படித்தானே?" என்று மாமல்லர் சேனாதிபதி கலிப்பகையாரைக் குறிப்பாகப் பார்த்துக் கேட்டார்.

சேனாதிபதி கலிப்பகையார் எழுந்து, "குமார சக்கரவர்த்தியின் கட்டளை எதுவோ, அதன்படி நடக்க நான் கடமைப்பட்டவன். ஆனால், அது யுத்தமானது என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மாமல்லர் கூறுவது சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்துக்கு மாறானது. எவ்வளவோ தீர்க்காலோசனையின் பேரில் பல்லவேந்திரர் நமது சைனியத்தைக் கோட்டைக்குள்ளே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். மகேந்திர சக்கரவர்த்தி கோழை அல்ல. போருக்குப் பயந்தவர் அல்ல. சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்துக்கு மாறாக நாம் எதுவும் செய்வது உசிதமல்ல" என்றார்.

குமார சக்கரவர்த்தியின் முகத்தில் ஆத்திரம் கொதித்தது. "சேனாதிபதி! என்னுடைய வீரத் தந்தையைக் கோழை என்றோ பயந்தவர் என்றோ நான் சொன்னேனா? அதைக் காட்டிலும் என் நாவை அறுத்துக்கொள்வேன்! என் தந்தையின் யுத்த தந்திரம் வேறு. என்னுடைய யுத்த தந்திரம் வேறு. அவர் இல்லாதபோது என்னுடைய யுத்த தந்திரத்தை அனுசரிக்க எனக்குப் பாத்தியதை உண்டு. சேனாபதி! பல்லவ சைனியம் நாளைச் சூரியோதயத்திற்குள் யுத்த சந்நத்தமாகக் கிளம்ப ஆயத்தம் செய்யுங்கள்!"

சேனாபதி கலிப்பகையார், சற்றுத் தணிந்த குரலில், "பல்லவ குமாரரின் தந்திரம் யுத்த தந்திரம் அல்ல; தற்கொலைத் தந்திரம்! வாதாபி சைனியத்தில் ஐந்து லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். பல்லவ வீரர்கள் லட்சம் பேருக்கு மேல் இல்லை" என்றார்.

மாமல்லர் கண்களில் தீப்பொறி பறக்க விழித்துக் கூறினார்: "சேனாபதி! புள்ளலூர்ப் போர்க்களத்தில் பல்லவ வீரர் எத்தனை பேர், கங்கபாடி வீரர் எத்தனை பேர் என்பதை அறிவீரா? ஐம்பதினாயிரம் கங்க வீரர்களைப் புறங்காட்டி ஓடும்படி நமது பதினாயிரம் வீரர்கள் செய்யவில்லையா? போர்க்களத்தில் ஆட்களின் கணக்கா பெரிது? வெற்றியளிப்பது வீரமல்லவா? பல்லவ வீரன் ஒவ்வொருவனும் சளுக்க வீரர் ஒன்பது பேருக்கு ஈடானவன். கலிப்பகையாரே! இதைத் தாங்கள் இன்னும் அறிந்துகொள்ளவில்லையா?"

"வாதாபி சைனியத்தில் ஐந்து லட்சம் வீரர்கள் மட்டுமில்லை. பதினையாயிரம் போர் யானைகள் இருக்கின்றன!" என்றார் கலிப்பகையார்.

"இருந்தால் என்ன? நமது வீரத் தளபதி பரஞ்சோதியாரின் கை வேலுக்கு அஞ்சி மதம் பிடித்த யானை இந்தக் காஞ்சி நகரின் வீதிகளில் தறிகெட்டு ஓடியது நமது சேனாபதிக்குத் தெரியாது போலிருக்கிறது. தளபதி பரஞ்சோதியைப் போன்ற ஒரு லட்சம் வீர சிம்மங்கள் பல்லவ சைனியத்தில் இருக்கும்போது, புலிகேசியின் போர் யானைகளுக்கு நாம் ஏன் அஞ்சவேண்டும்?.."

விவாதம் இவ்விதம் முற்றிக்கொண்டிருப்பதைக் கண்ட முதல் மந்திரி சாரங்கதேவர் பெரிதும் கவலையடைந்தார். பெரியவர் எழுந்து நின்றதும் மாமல்லர் பேச்சை நிறுத்தினார்.

"ஒரு விஷயம் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். சக்கரவர்த்தி இன்னமும் வந்து சேர அவகாசம் இருக்கிறதல்லவா? இந்த விஷயம் கோட்டை வாசற்காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறதா? சக்கரவர்த்தி இன்றிரவு ஒருவேளை வந்தால் கோட்டைக் கதவைத் தாமதமின்றித் திறந்துவிடக் காவலர்கள் ஆயத்தமாகயிருக்கிறார்களா?" என்று முதன் மந்திரி வினவினார்.

அப்போது தளபதி பரஞ்சோதி, "ஆம்; அப்படித்தான் கட்டளையிட்டிருக்கிறேன். சக்கரவர்த்திப் பெருமான் ஒருவேளை தூதர்கள் மூலமாகச் செய்தி அனுப்பக்கூடுமென்று எதிர்பார்த்து அதற்கும் தக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்றார்.

தளபதி பரஞ்சோதி இவ்விதம் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே மண்டபத்தின் வாசற் காவலன் ஒருவன் விரைந்து உள்ளே வந்து, "சக்கரவர்த்தியிடமிருந்து தூதன் ஓலை கொண்டு வந்திருக்கிறான். சிங்க இலச்சினையுடன் வந்திருக்கிறான்!" என்று தெரிவித்தான்.

இதைக் கேட்ட மாமல்லர் திகைத்துப் போய் நின்றார். சபையில் இருந்த மற்றவர்கள் எல்லாரும், மிகவும் நெருக்கடியான சமயத்தில் தெய்வமே தங்களுடைய துணைக்கு வந்தது என்று எண்ணியவர்களாய் மனதிற்குள் உற்சாகமடைந்தார்கள்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com