Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை
48. மகேந்திர பல்லவர் தோல்வி

சிவகாமி வெகுண்ட கண்களுடன் அந்த நாகப் பிடி அமைந்த கத்தியைப் பார்த்தாள். குரல் நடுங்க, நாத் தழு தழுக்க விசித்திரசித்தரைப் பார்த்துக் கூறினாள்: "பல்லவேந்திரா! எந்தப் பாவியின் கரம் இந்த விஷக் கத்தியைப் பிடித்து மாமல்லருடைய முதுகில் செலுத்த யத்தனித்தது? கிருபை கூர்ந்து அதைச் சொல்லுங்கள். என்னால் இது நேர்ந்ததாயிருக்கும் பட்சத்தில்..." என்று மேலும் அவள் பேசுவதற்குள் சக்கரவர்த்தி குறுக்கிட்டார்!

"ஆத்திரப்பட்டுச் சபதம் ஒன்றும் செய்யவேண்டாம். சிவகாமி! இந்தப் பெரும் அபாயம் உன்னால் நேர்ந்ததுதான், ஆனால், நீ அறியாமல் நேர்ந்தது. இந்தக் கத்தி யாருடையதாயிருக்கும் என்று உனக்கு ஒன்றும் தெரியவில்லையா?" என்று கேட்டார்.

"இம்மாதிரி கத்தியை நான் பார்த்ததேயில்லை, பிரபு!"

"பெயரிலேயே பாம்பையுடைய மனிதர் ஒருவரை உனக்குத் தெரியாதா, அம்மா?"

"நாகநந்தியடிகளா?" என்று சிவகாமி கேட்டபோது, அவளுடைய குரலில் வியப்பும் பயமும் ததும்பின.

"ஆம்! அவரேதான்!"

"ஐயோ! அவர் எதற்காக மாமல்லரைக் கொல்ல முயல வேண்டும்? நம்ப முடியவில்லையே?"

"ஏன் நம்ப முடியவில்லை! இதைவிட அதிசயமான பயங்கரத் துவேஷங்களைப் பற்றி நீ கேட்டதில்லையா?"

"நாகநந்தி எதற்காக மாமல்லரைத் துவேஷிக்கிறார்? ஐயோ! காவித் துணி தரித்த புத்த பிக்ஷுவா இவ்விதம் ...."

"சிவகாமி! புத்த பிக்ஷுவாயிருந்தாலென்ன? யாராயிருந்தால் என்ன? ஸ்திரீ சௌந்தரியத்தினால் புத்த பிக்ஷுவின் மனம் கெட்டுப் போகாதா? விசுவாமித்திரருடைய கடுந்தவத்தையே மேனகையின் சௌந்தரியம் கலைத்து விட்டதே! புத்த சங்கங்கள் சீர் கெட்டுப் போயிருக்கும் இந்த நாளில் இது என்ன அதிசயம்?"

"என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! நாகநந்தி எதற்காக மாமல்லரைக் கொல்லப் பார்த்தார்?"

"உன்னுடைய சௌந்தரியமாகிய விஷம் பிக்ஷுவின் தலைக் கேறியதனால்தான், அம்மா! வேறு என்ன இருக்க முடியும்? புத்த பிக்ஷுவின் கடின உள்ளத்தையும் உன் மேனி அழகு கவர்ந்தது. மாமல்லருடைய குழந்தை இருதயத்தையும் கவர்ந்தது. ஆனால், நீ உனது தூய உள்ளத்தை மாமல்லனுக்கே கொடுத்தாய். பிக்ஷுவின் துவேஷத்துக்கு அதுதான் காரணம். இந்தப் பாறையில் நீயும் மாமல்லனும் நேற்று இரவு பேசிக்கொண்டிருந்தபோது, இதே பாறைக்குப் பின்னால் புத்த பிக்ஷு கையில் இந்த விஷக் கத்தியுடன் ஒளிந்திருந்தார். கிராமத்துக்கருகில் உள்ள கோயில் வரையில் உங்களைப் பின் தொடர்ந்து வந்தார். கடவுளின் அருளும் குண்டோதரனுடைய சர்வ ஜாக்கிரதையும் சேர்ந்துதான் மாமல்லனுடைய உயிரைக் காப்பாற்றின.."

"குண்டோ தரனா காப்பாற்றினான்? எப்படி, பிரபு?"

"உங்களுக்கும் பிக்ஷுவுக்கும் தெரியாமல் குண்டோ தரன் உங்களைப் பின் தொடர்ந்து வந்தான். பிக்ஷு கோயில் மதில் மேல் ஏறிக் குதித்தபோது இந்தக் கத்தி தவறிக் கீழே விழுந்தது. அதை அவன் எடுத்துக்கொண்டான். பிக்ஷுவை நள்ளிரவில் கோயில் மடைப்பள்ளியில் விட்டுக் கதவை தாழிட்டுக் கொண்டு வந்து எங்களிடம் எல்லா விவரங்களையும் சொன்னான். நாங்கள் வந்து பார்ப்பதற்குள் பிக்ஷு மடைப்பள்ளியிலிருந்து மாயமாகி விட்டார்."

இவ்விதம் மகேந்திர பல்லவர் சொல்லியபோது சிவகாமியின் முகத்தில் அவ்வப்போது ஏற்பட்ட அதிசயமான மாறுதல்களையெல்லாம் அவர் கவனியாமல் இல்லை. உண்மையில் நாகநந்தியைப் பற்றி பேச்சு வந்ததிலிருந்து, சிவகாமியின் பாதி மனம் இங்கேயும் பாதி மனம் மடத்திலேயும் இருந்தது. மடத்து உள் அறையில் தூண் மறைவில் நாகநந்தி நின்ற தோற்றம் அவள் மனக்கண்முன் வந்து கொண்டேயிருந்தது. இன்னும் அந்தப் பாதக பிக்ஷு அங்கேயே இருப்பாரா! இருந்தால், சக்கரவர்த்தியின் கையிலுள்ள கத்தியை வாங்கிக் கொண்டுபோய் அவரைத் தன் கையாலேயே கொன்றுவிட வேண்டும் என்று சிவகாமிக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.

"பல்லவேந்திரா! அப்பா எங்கே? நான் உடனே மடத்துக்குப் போக வேண்டும்!" என்றாள் சிவகாமி.

"தாயே! என் கோரிக்கையை இன்னும் நீ கேட்கவே இல்லையே? நான் கோரி வந்த வரத்தைக் கொடுக்கவில்லையே?"

"இப்படியெல்லாம் பேசி ஏன் என்னை வதைக்கிறீர்கள்! சிற்பியின் மகளுக்குக் கட்டளையிடுங்கள்!"

"கட்டளை இல்லை, அம்மா! உன்னிடம் வரந்தான் கோருகிறேன். அதுவும் எனக்காக கோரவில்லை. பல்லவ சாம்ராஜ்யத்திற்காகக் கோருகிறேன். இந்த சாம்ராஜ்யத்தைப் பெரும் விபத்திலிருந்து காப்பாற்றும் சக்தி இப்போது உன் கையில் இருக்கிறது."

"நான் என்ன செய்ய வேண்டும்?"

"மாமல்லனுக்கு ஓலை எழுதித் தரவேண்டும்!"

"என்ன ஓலை?" என்று சிவகாமி கேட்டாள்.

"மாமல்லனை நீ விடுதலை செய்வதாக எழுதவேண்டும். உன்னை மறந்துவிடும்படி எழுதவேண்டும்."

"பிரபு! இந்த ஏழைப் பெண்ணை ஏன் இப்படிச் சோதனை செய்கிறீர்கள்? மாமல்லரையாவது நான் விடுதலை செய்யவாவது? என்னை மறக்கும்படி அவருக்கு நான் எப்படி எழுதுவேன்? நான் சம்மதித்தாலும் இந்தக் கை சம்மதியாது, சுவாமி!"

"சிவகாமி! காஞ்சிக்கு மூன்று காத தூரத்தில் வாதாபியின் படைகள் வந்திருக்கின்றன. ஆயினும் நான் இங்கே உன்னுடன் வாதாடிக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்தே என்னுடைய கோரிக்கை முக்கியமானதென்று உனக்குத் தெரியவில்லையா? உண்மையை இன்னும் பட்டவர்த்தனமாய்ச் சொல்கிறேன், கேள்! வாதாபியின் சமுத்திரம் போன்ற சைனியங்களை எதிர்த்து நிற்பதற்கு வேண்டிய படைபலம் இப்போது பல்லவ இராஜ்யத்துக்கு இல்லை. இந்த நிலைமையில் தெற்கேயிருந்து பாண்டியனுடைய பெரும்படையும் பல்லவ இராஜ்யத்தைத் தாக்க வருகிறது. நீ மனம் வைத்து என் கோரிக்கையை நிறைவேற்றினால், பாண்டிய சைனியம் பல்லவ சைனியத்துடன் சேர்ந்துவிடும். இரண்டும் சேர்ந்தால் வாதாபிப் படைகளை வெற்றி கொள்ளலாம். சிவகாமி! பல்லவ இராஜ்யத்துக்கு இந்த மகத்தான உதவியை நீ செய்வாயா?"

"எனக்கும் பாண்டியர் படையெடுப்புக்கும் என்ன சம்பந்தம் பிரபு! பல்லவ இராஜ்யத்துக்கு இந்த ஏழைச் சிற்பியின் மகள் என்ன உதவியைச் செய்யமுடியும்?"

"உன் மனத்தைப் புண்படுத்த வேண்டாம் என்று பார்த்தால் நீ விடமாட்டேன் என்கிறாய். சிவகாமி! பாண்டிய இராஜகுமாரியை மாமல்லனுக்குக் கலியாணம் செய்து கொள்ளுமாறு தூது அனுப்பினார்கள். அதற்கு மாமல்லன் இணங்காதபடியால் பாண்டியனுடைய சைனியம் நம்மீது படையெடுத்து வருகிறது. கலியாணம் செய்து கொள்வதாகச் சம்மதம் தெரிவிக்க வேண்டியதுதான். உடனே பாண்டிய சைனியம் நம்முடன் சேர்ந்துவிடும். நீ மாமல்லனுக்கு விடுதலை கொடுத்தால், அவனை இதற்கு இணங்கச் செய்வேன் என்ன சொல்கிறாய், தாயே! பல்லவ இராஜ்யத்துக்கு உயிர்ப்பிச்சை அளிப்பாயா?" என்று மகேந்திரர் இறைஞ்சினார்.

சிவகாமி பூமியில் சட்டென்று உட்கார்ந்து, "மாட்டேன், மாட்டேன்! என்னால் முடியாது!" என்று அலறினாள்.

பின்னர் விம்மிக்கொண்டே, "பல்லவேந்திரா! உங்களுடைய கையிலுள்ள விஷக் கத்தியை என் மார்பிலே பாய்ச்சிக் கொன்றுவிடுங்கள். தங்கள் குமாரருக்கு விடுதலை கிடைத்துவிடும். பல்லவ இராஜ்யமும் காப்பாற்றப்படும். ஒரு பெரிய இராஜ்யத்தைக் காப்பதற்காக ஓர் அபலைப் பெண்ணைக் கொன்றால் என்ன? கத்தியை எடுங்கள் பிரபு! தங்களுக்கு தைரியம் இல்லாவிட்டால் கத்தியை இங்கே கொடுங்கள் நானே என் மார்பில் செலுத்திக் கொள்கிறேன்!" என்றாள்.

"சிவகாமி! நீ ஜயித்தாய்! நான் தோற்றேன்" என்றார் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி.

பாறையடியில் மேலே கூறிய சம்பாஷணை நடந்து ஒரு நாழிகைக்குப் பிறகு சிவகாமியும் ஆயனரும் மண்டபப்பட்டுக் கிராமத்தை அடைந்தார்கள்.

மடத்து வாசலை அணுகியதும் சிவகாமி மிகவும் பரபரப்புடன் முதலில் பிரவேசித்து அறைக்குள்ளே சென்று பார்த்தாள். தூண் மறைவில் பிக்ஷுவைக் காணவில்லை. மடத்திற்குள் வேறு எங்கேயும் அவரைக் காணவில்லை.

ஏதோ ஒரு சந்தேகம் உதிக்கவே, அவசரமாகச் சென்று தனது ஆடை ஆபரணப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். கையினால் பல முறை துழாவிப் பார்த்தாள். ஆடை ஆபரணங்களையெல்லாம் எடுத்து உதறிப் பார்த்தாள். எப்படிப் பார்த்தும் சக்கரவர்த்தி கொடுத்த சிங்க முத்திரையுள்ள இலச்சினையைக் காணவில்லை!

அதே சமயத்தில் வராக நதிக்கு அக்கரையில் ரதசாரதி கண்ணபிரானிடம் புத்த பிக்ஷு மேற்படி சிங்க இலச்சினையைக் காட்டிக் கொண்டிருந்தார். காட்டி, தன்னை அவனுடைய ரதத்தில் காஞ்சி மாநகருக்கு விரைவாக அழைத்துப் போகும்படி கட்டளையிட்டார். கண்ணபிரான் தயக்கத்துடன் அந்தக் கட்டளையை ஒப்புக்கொண்டு பிக்ஷுவை ரதத்தில் ஏறும்படி கூறினான்.

இதையெல்லாம் சற்றுத் தூரத்தில் மரங்களில் மறைவில் நின்று சக்கரவர்த்தியும் சத்ருக்னனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சத்ருக்னன் பாய்ந்து சென்று கண்ணபிரானைத் தடுப்பதற்கு யத்தனித்தபோது சக்கரவர்த்தி அவனுக்குச் சமிக்ஞை செய்து நிறுத்தினார்.

புத்த பிக்ஷு ரதத்தில் ஏறுவதையும், கண்ணபிரான் வேண்டா வெறுப்பாக ரதத்தின் குதிரைகளைத் தட்டிவிடுவதையும், வீரர்கள் ரதத்தைப் பின் தொடர்ந்து செல்வதையும் அவ்விருவரும் பார்த்துக் கொண்டு சும்மா நின்றார்கள்.

சத்ருக்னனுடைய முகத்தில் கோபம் கொதித்தது. சக்கரவர்த்தியின் முகத்திலோ புன்னகை தவழ்ந்தது.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com