Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை
17.விடுதலை

வியர்க்க விறுவிறுக்க மூச்சுவாங்கிக் கொண்டு வந்த சத்ருக்னனின் முகத்தை மூவிரண்டு கண்கள் இமையையும் அசைக்காமல் ஆவலுடன் உற்று நோக்கின.

ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு ஒரு கணநேரம் கூட கொடுக்காமல், "சத்ருக்னா! யாருக்கு என்ன செய்தி கொண்டு வந்தாய்?" என்று தேவி கேட்டாள்.

"தாயே! இங்குள்ள மூன்று பேருக்கும் செய்தி கொண்டு வந்திருக்கிறேன்" என்று கூறி மூவருக்கும் வணக்கம் செலுத்தினான் சத்ருக்னன்.

பின்னர், "தேவி! மகேந்திர பல்லவரின் முதல் செய்தி தங்களுக்குத்தான்! வீர பத்தினி என்னும் பெயருக்கு இதுகாறும் தாங்கள் உரிமை பெற்றது போல் வீரத்தாய் என்னும் பெயருக்கும் உரிமை பெற வேண்டிய காலம் இப்போது வந்து விட்டது என்று தங்களுக்குத் தெரியப்படுத்தச் சொன்னார். எட்டு மாதங்களுக்கு முன்பு அகமும் முகமும் மலர்ந்து பதியைப் போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தது போல் இன்று தங்களுடைய அருமைப் புதல்வரை அனுப்பி வைக்க வேண்டிய காலம் வந்து விட்டதாகத் தெரிவிக்கச் சொன்னார்!" என்றான் சத்ருக்னன்.

விவரிக்க முடியாத உணர்ச்சி வெள்ளம் உள்ளத்தில் பொங்க, தோள்கள் பூரித்து வீங்க, தேகமெல்லாம் சிலிர்க்க, மாமல்ல நரசிம்மர் அன்னையின் அருகில் பாய்ந்து சென்று அவளுடைய பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டார்.

"அம்மா! சக்கரவர்த்தியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் அல்லவா? அவர் எனக்கு அளித்த விடுதலையை நீங்களும் மனமுவந்து அளிப்பீர்கள் அல்லவா?" என்று கேட்டார் மாமல்லர்.

"பொறு, குழந்தாய்! செய்தியை முழுதும் கேட்போம்!" என்றாள் தேவி.

மாமல்லர் உடனே திரும்பி, "சத்ருக்னா! எனக்கு என்ன செய்தி கொண்டுவந்தாய்?" என்று கேட்டார்.

"நல்ல செய்திதான், பிரபு! தங்கள் மனத்திற்கு உகந்த செய்திதான். நன்றிகொன்ற பாதகனாக கங்கநாட்டு மன்னன் துர்விநீதன் சளுக்கப் புலிகேசிக்கு முன்னால் காஞ்சியை அடைந்து விட வேண்டுமென்ற துராசையினால் விரைந்து வந்து கொண்டிருக்கிறான். பல்லவ குலத்துக்குக் கங்கர் குலம் பட்டிருக்கும் நன்றிக் கடனையெல்லாம் மறந்துவிட்டு இந்தப் படுதுரோகமான காரியத்தில் அவன் இறங்கியிருக்கிறான். அந்தத் துர்விநீதனுக்குத் தக்க தண்டனையளிக்கும் பொறுப்பைத் தங்களுக்குச் சக்கரவர்த்தி அளித்திருக்கிறார். கழுக்குன்றத்திலுள்ள படையுடன் தாங்கள் புறப்பட்டுச் சென்று, துர்விநீதன் காஞ்சியை அணுகுவதற்கு முன்னால் அவனை முறியடிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்!"

மாமல்லர் ஆவேசம் வந்தவரைப் போல் சத்ருக்னனிடம் ஓடிச் சென்று அவனைத் தழுவிக்கொண்டு, "சத்ருக்னா! இவையெல்லாம் உண்மைதானே? நான் கனவு காணவில்லையே? நிஜமாகத்தானே சக்கரவர்த்தி என்னைக் கங்க நாட்டுப் படையுடன் போராடுவதற்குப் போகச் சொல்லியிருக்கிறார்?" என்று பரபரப்புடன் கேட்டார்.

"ஆம், பிரபு! இதெல்லாம் கனவல்ல, உண்மைதான். இதோ 'விடைவேல் விடுகு'ம் கொடுத்தனுப்பியிருக்கிறார்!" என்று சத்ருக்னன் ஓலை ஒன்றை அவரிடம் எடுத்துக் கொடுத்தான்.

பல்லவ குலத்தின் சின்னங்களாகிய விடை (ரிஷபம்)யும் வேலும் பொறித்த அந்த ஓலையை மாமல்லர் படிக்கும்போது அவர் முகத்தில் உற்சாகம் பொங்கிற்று. படித்து முடிக்கும் சமயத்தில் அவருடைய புருவங்கள் சிறிது நெறிந்தன.

நிமிர்ந்து பார்த்து, "சத்ருக்கனா! உன்னிடம் ஏதோ வாய்மொழியாகச் செய்தி அனுப்பியிருப்பதாகச் சக்கரவர்த்தி எழுதியிருக்கிறாரே, அது என்ன?" என்று கேட்டார்.

"ஆம், பிரபு! எத்தனையோ சாம்ராஜ்யக் கவலைகளுக்கிடையே பல்லவ நாட்டின் கலைச் செல்வத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் சக்கரவர்த்தியால் மறக்க முடியவில்லை. ஆயனச் சிற்பியாரும் அவர் மகளும் காஞ்சிக்கு வந்துவிட்டார்களா என்று என்னைக் கேட்டார். 'இல்லை' என்று நான் தெரிவித்தேன். தாங்கள் போர்க்களத்துக்குக் கிளம்புவதற்கு முன்னால் நேரில் ஆயனர் வீட்டுக்குச் சென்று அவர்களைக் காஞ்சிக்கு அனுப்பிவிட்டுப் போகவேண்டும் என்று தெரிவிக்கச் சொன்னார்."

மாமல்லரின் மகிழ்ச்சி பூரணமாயிற்று. யுத்தத்துக்குப் போவதற்கு முன்னால் சிவகாமியைப் பார்த்து விடை பெற்றுக்கொண்டு போக அவர் விரும்பினார். இப்போது தயக்கமின்றி ஆயனர் வீட்டுக்குப் போகச் சௌகரியம் ஏற்பட்டுவிட்டது. சிவகாமியின் விஷயத்தில் தம் மனநிலையை அறிந்துதான் சக்கரவர்த்தி அவ்விதம் செய்தியனுப்பியிருப்பாரோ என்று ஒரு கணம் அவருக்குத் தோன்றியது. ஆனால், அவருக்குத் தன் மனநிலை எப்படித் தெரிந்திருக்க முடியும்? ஆ! தம் அருமைத் தோழர் பரஞ்சோதிதான் சொல்லி அனுப்பியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தினால் பரஞ்சோதியின்மேல் அவருக்கிருந்த சிநேக உணர்ச்சி பன்மடங்கு பெருக, அருகேயிருந்த அவருடைய கரத்தைப் பற்றித் தம் நன்றியைத் தெரிவிப்பதற்கு அறிகுறியாக அழுத்திப் பிடித்தார்.

பரஞ்சோதியோ, மனக்குழப்பத்துடன் சத்ருக்னனைப் பார்த்து "ஐயா! எனக்கும் ஏதோ செய்தி இருப்பதாகச் சொன்னீரே! அது என்ன?" என்று கேட்டார்.

"லக்ஷ்மணன் இராமனைப் பின் தொடர்ந்தது போல் மாமல்லரைத் தொடர்ந்து உங்களைப் போகும்படி சொன்னார். காஞ்சிக்குச் சக்கரவர்த்தியே சீக்கிரத்தில் வந்து கோட்டைப் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார்."

"ஆஹா என் அருமைத் தோழரும் என்னுடன் வருகிறாரா?" என்று மாமல்லர் மேலும் பொங்கிய மகிழ்ச்சியுடன் பரஞ்சோதியைத் தழுவிக்கொண்டார். பிறகு, அன்னையை நெருங்கி அவருடைய பாதங்களில் நமஸ்கரித்து, "அம்மா! விடை கொடுங்கள்" என்றார்.

பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி கண்களில் அப்போது கண்ணீர் துளித்தது. "குழந்தாய்! வெற்றிமாலை சூடி க்ஷேமமாய்த் திரும்பி வா!" என்றார்.

மாமல்லர் எழுந்து நின்றார், ஏதோ சொல்ல எண்ணியவர் சிறிது தயங்கினார். "மாமல்லா! இன்னும் ஏதாவது சொல்ல வேணுமா?" என்று தேவி கேட்டார்.

"ஆம், அம்மா! ஆயனரையும் சிவகாமியையும் பற்றித் தந்தை சொல்லியனுப்பியதைக் கேட்டீர்களல்லவா?"

"கேட்டேன், நரசிம்மா! அதைப்பற்றி என்ன?"

"அவர்களைக் காஞ்சிக்கு அனுப்பிவிட்டு நான் போர்க்களம் போகிறேன், அம்மா."

"அப்படியே செய், குழந்தாய்!"

"சிவகாமி இங்கே இருக்கும்போது அவளைத் தாங்கள் மருமகளைப் போல் பார்த்துக்கொள்ள வேண்டும்!"

"மருமகளைப் போலவா? முடியவே முடியாது. அந்தத் தாயில்லாப் பெண்ணை என் சொந்த மகளைப் போலவே பார்த்துக் கொள்கிறேன், மாமல்லா!"

இதைக்கேட்ட மாமல்லர் புன்னகையுடன், "இல்லை அம்மா! மருமகளைப் போல் பார்த்துக் கொண்டால் போதும்!" என்றார்.

புவனமகா தேவியின் புருவங்கள் அப்போது நெறிந்தன. "ஏன் அப்படிச் சொல்கிறாய், குமாரா! மகளைப்போல் பார்த்துக் கொள்கிறேன் என்று நான் சொன்னதை ஏன் மறுக்கிறாய்? ஒரு வேளை..." என்று கூறிவிட்டுத் தேவி பரஞ்சோதியை நோக்கினாள். உடனே, அவளுடைய முகத்தில் மலர்ச்சி காணப்பட்டது. "ஓஹோ! புரிந்தது! ஆயனரிடம் சிற்பம் கற்க வந்த பரஞ்சோதி, ஆயனரின் மிகச் சிறந்த சிற்ப வடிவத்தையே கொள்ளை கொள்ளப் பார்க்கிறானா?" என்றார்.

மாமல்லர், பரஞ்சோதி இருவருடைய முகங்களும் அப்போது பெரிதும் வேதனையைக் காட்டின. "இருக்கட்டும், அம்மா! தாமதிக்க நேரம் இல்லை. நாங்கள் புறப்படவேண்டும் விடை கொடுங்கள்" என்றார் மாமல்லர்.

சத்ருக்னன் காஞ்சிக்கு வந்து இரண்டு நாழிகைக்குள்ளே, குமார சக்கரவர்த்தியும், தளபதி பரஞ்சோதியும் காஞ்சிக் கோட்டையின் வடக்கு வாசல் வழியாகப் புறப்பட்டார்கள். திருக்கழுக்குன்றம் சென்று அங்கிருந்து தற்காப்புப் படைகளை மறுநாள் அதிகாலையில் புறப்பட ஆயத்தமாகும்படிக் கட்டளையிட்டார்கள். அன்று மாலையே ஆயனரின் வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடவேண்டுமென்றும், மறுநாள் அதிகாலையில் சைனியத்துடன் தாங்களும் கிளம்பிவிட வேண்டுமென்றும் உத்தேசித்து, நரசிம்மரும் பரஞ்சோதியும் புரவிகள் மீதேறி, ஒரு சிறு குதிரைப் படை தங்களைப் பின்தொடர, விரைந்து சென்று ஆயனர் வீட்டை அடைந்தார்கள்.

போகும்போது, சிவகாமியிடம் இப்படி இப்படிப் பேச வேண்டும், இன்னின்ன சொல்லவேண்டும் என்பதாக மாமல்லர் எவ்வளவோ மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டு போனார்.

ஆனால் ஆயனரின் அரண்ய வீட்டை அடைந்தபோது, அவருடைய ஆகாசக் கோட்டைகள் எல்லாம் சிதறி விழுந்தன. வீட்டின் முன் கதவைப் பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டியிருந்தது! வீட்டிற்குள்ளேயும் வெளியிலும் பூரண நிசப்தம் குடிகொண்டிருந்தது!

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com