Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை
13.சத்ருக்னன் வரலாறு

பாபாக்கினி நதிக்கரையில் பல்லவ சைனியத்தின் பாசறையில் ரிஷபக்கொடி கம்பீரமாகப் பறந்த கூடாரத்தின் உள்ளே மகேந்திர சக்கரவர்த்தி வீற்றிருந்தார். அவருக்கெதிரே சக்கரவர்த்தியின் அந்தரங்க ஒற்றனாகிய சத்ருக்னன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்தால் வெகு தூரம் பிரயாணம் செய்து வந்தவனாகக் காணப்பட்டான். உடம்பெல்லாம் சொட்டச் சொட்ட வியர்த்திருந்தது. எட்டு மாதத்திற்கு முன்னால் அவனைப் பார்த்ததற்கு இப்போது அடையாளம் கூடக் கண்டுபிடிக்க முடியாதபடி உருவம் மாறிப்போயிருந்தது.

சக்கரவர்த்தி, சத்ருக்னனை உற்றுப் பார்த்துவிட்டு, "யார் சத்ருக்னனா?" என்று கேட்டார்.

"அடியேன்தான், பல்லவேந்திரா!"

"ரொம்பவும் உருவம் மாறிப் போயிருக்கிறாய்."

"ஆமாம், பிரபு! சக்கரவர்த்தியின் சேவையில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும் என் தேகம் புஷ்டியடைகிறது!"

"இல்லை; மெலிந்திருக்கிறாய் என்று சொன்னேன். எட்டு மாதத்துக்கு முன்பு உன்னிடம் ஏதோ முக்கியமான காரியத்தை ஒப்படைத்ததாக ஞாபகம். என்ன காரியம் என்று நினைவிருக்கிறதா?" என்று மகேந்திரர் கேட்டார்.

சத்ருக்னன், "நன்றாக நினைவிருக்கிறது, பிரபு! வேறு நினைவே எனக்குக் கிடையாது!" என்றான்.

"மறந்தது நான்தான்; கொஞ்சம் ஞாபகப்படுத்து, பார்க்கலாம்!" என்றார் சக்கரவர்த்தி.

"பிக்ஷுவைப் பின் தொடரச் சொன்னீர்கள்."

"ஓஹோ! அப்புறம்?"

"ஆயனரைக் கவனிப்பதற்கு ஆள் போடச் சொன்னீர்கள்."

"அவ்வளவுதானா?"

"இன்னும் ஒரு கடினமான வேலையும் கொடுத்தீர்கள், பிரபு! குமார சக்கரவர்த்தியின் போக்குவரவுகளைக் கவனித்து வரும்படி கட்டளையிட்டீர்கள்!"

"ஆம்! ஆம்! ஞாபகத்துக்கு வருகிறது"

"ஏதேனும் முக்கியமான தகவல் கிடைத்தால், நம்பிக்கையான ஆள் மூலம் செய்தி அனுப்பச் சொன்னீர்கள். மிக முக்கியமான செய்தியாயிருந்தால் என்னையே நேரில் வரச் சொன்னீர்கள்."

"அப்படியானால், மிக முக்கியமான செய்தி இப்போது கொண்டு வந்திருக்கிறாய் போலிருக்கிறது."

"ஆம், பல்லவேந்திரா! வேறு யாரிடமும் அனுப்ப முடியாத செய்தி; அதனால்தான் நானே வந்தேன்."

"ஒவ்வொன்றாகச் சொல், பார்க்கலாம்!"

சத்ருக்னன் நாகநந்தியைத் தான் பின்தொடர்ந்தது பற்றி முதலில் சொன்னான். அந்த வரலாறு பின் வருமாறு:

நாகநந்தி பரஞ்சோதியிடம் ஓலை கொடுத்து அவனை நாகார்ஜுன மலைக்குப் போகும்படி அனுப்பிய பிற்பாடு, தெற்கே கிளம்பிப் போனார். சத்ருக்னனும் அவரைப் பின் தொடர்ந்து போனான். கெடில நதிக்கரையில் அடர்ந்த காடும் சிறிய குன்றுகளும் சூழ்ந்த ஓர் இடத்தில் கட்டியிருந்த புத்த விஹாரத்தை அடைந்து சில தினங்கள் தங்கினார். அங்கே இருந்த புத்த பிக்ஷுக்கள் சிலருக்கு ஏதேதோ செய்தி சொல்லி நாலாபுறமும் அனுப்பினார். அவர்களில் ஒருவர் உறையூருக்கும் இன்னொருவர் கங்கராஜ்யத்தின் தலைநகரான தலைக்காட்டுக்கும் சென்றதாகத் தெரிந்தது.

பிறகு, நாகநந்தி மறுபடியும் தெற்கு நோக்கிப் பிரயாணமானார். கொள்ளிடத்தையும் காவேரியையும் கடந்து நாகப்பட்டினம் சென்றார். அங்கேயிருந்து மதுரைக்குப் பிரயாணமானார். மதுரைக்கு நாகநந்தியும் சத்ருக்னனும் போன சமயம் மாறவர்ம பாண்டியன் கடும் நோய்வாய்ப்பட்டு 'இன்றைக்கோ நாளைக்கோ' என்றிருந்தான். அடுத்தபடி பட்டத்துக்கு வரவேண்டிய இளம் பாண்டியனுடைய கட்டளையினால் அயலூர்க்காரர் எல்லாரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

நாகநந்தியும் சத்ருக்னனும் ஒரே சிறையில் இருக்கும்படி நேர்ந்தது. அங்கே பிக்ஷுவுடன் சிநேகம் செய்து கொண்டான். இவர்கள் சிறையில் இருக்கும் போதே மாறவர்மன் காலமாகி சடையவர்மன் சிம்மாசனம் ஏறினான். பின்னர் இவர்களுக்கு விடுதலை கிடைத்தது. நாகநந்தி புதிய பாண்டியனைச் சந்தித்தார். அவர்களுக்குள் பல தினங்கள் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கிடையில் மாமல்லருக்குப் பெண் கொடுக்கும் விஷயமாகக் காஞ்சிக்குப் போன தூதர்கள் திரும்பி வந்தார்கள். மறுபடியும் சில நாள் நாகநந்திக்கும் சடையவர்மனுக்கும் சம்பாஷணை நடந்த பிறகு, பாண்டியன் நாடெங்கும் படை திரட்டும்படி கட்டளை பிறப்பித்தான்.

நாகநந்தி பிறகு மதுரையிலிருந்து கிளம்பி வடக்கு நோக்கிப் பிரயாணமானார். சத்ருக்னனும் அவரோடு புறப்பட்டான். வழியெல்லாம் புத்த பிக்ஷு பெரும் சிந்தனையில் ஆழ்ந்தவராய்க் காணப்பட்டார். காவேரியையும் கொள்ளிடத்தையும் தாண்டி அவர்கள் கெடில நதிக்கரையில் இருந்த புத்த விஹாரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இதற்குள்ளாகச் சத்ருக்னனுக்குப் புத்த பிக்ஷு தன்னை ஒற்றன் என்று தெரிந்து கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் உண்டாகியிருந்தது. அச்சமயம் அந்தப் புத்த விஹாரத்தில் ஏற்கெனவே காஞ்சி இராஜ விஹாரத்தில் இருந்த இளம் பிக்ஷு இருந்தான். அந்த இளம் பிக்ஷு சத்ருக்னனை வெறித்து வெறித்துப் பார்த்ததிலிருந்து சத்ருக்னனுடைய சந்தேகம் உறுதிப்பட்டது. எனவே, அன்று இளம் பிக்ஷு சத்ருக்னனுக்கு அளித்த உணவை அவன் உடனே சாப்பிடாமல் நதியின் வெள்ளத்தில் கொஞ்சம் போட்டுப் பார்த்தான். அதைச் சாப்பிட்ட மீன்கள் உடனே நீலநிறமாக மாறிச் செத்துத் தண்ணீரில் மிதந்ததைக் கண்டான். அன்று இரவு நாகநந்திக்கும் இளம் பிக்ஷுவுக்கும் தெரியாதபடி அந்தப் புத்த விஹாரத்தையும் அதை அடுத்திருந்த குன்றுகளையும் சுற்றிப் பார்த்தான்.

குன்றுகளில் குடைந்திருந்த இரகசியக் குகைகளுக்குள் பலவகைப் போர்க் கருவிகள் சேகரித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். குன்றுகளைச் சுற்றி வந்தபோது ஓர் இடத்தில் கேட்டவுடனே இருதயம் நின்று போகும்படியான அவ்வளவு பயங்கரமான சீறல் சத்தத்தைக் கேட்டான். ஆயிரம் நாக சர்ப்பங்கள் சீறுவது போன்ற அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க அவன் ஆனமட்டும் முயன்றும் முடியவில்லை.

மறுநாள் உதயத்தில் புத்த பிக்ஷு இந்த இரகசிய புத்த விஹாரத்திலிருந்து புறப்பட்டு, சமுத்திரம்போல் அலைமோதிக் கொண்டிருந்த திருப்பாற்கடல் என்னும் ஏரிக்கரை வழியாக வடக்கு நோக்கிச் சென்றார். அவர் அறியாதபடி அவரைப் பின் தொடர்ந்து சத்ருக்னனும் சென்றான். கடைசியில் ஆயனரின் அரண்ய வீட்டை நாகநந்தி அடிகள் அடைந்தார்.

தான் இல்லாதபோது ஆயனரைக் கவனித்துக் கொள்ளுவதற்காகக் குண்டோ தரன் என்பவனைச் சத்ருக்னன் விட்டுவிட்டுப் போயிருந்தான். அவன் ஆயனரிடம் சிற்பக் கலையும் சித்திரக் கலையும் கற்கும் சீடனாக அமர்ந்து ஆயனர் வீட்டிலே இருந்து வந்தான். குண்டோ ரதன் விசேஷமாகச் செய்தி ஒன்றும் சொல்லவில்லை. சாரதி கண்ணபிரானும் அவன் மனைவி கமலியும் சில முறை அங்கு வந்துவிட்டுப் போனதாக மட்டும் தெரிவித்தான்.

காஞ்சியில், நரசிம்மவர்மரின் போக்கு வரவுகளைக் கவனித்து வரும்படி, கண்ணபிரானுடைய தந்தையைச் சத்ருக்னன் ஏற்படுத்தியிருந்தான். நரசிம்மவர்மர் சக்கரவர்த்தியின் கட்டளையைப் பரிபூரணமாக நிறைவேற்றி வைத்ததாகத் தெரிய வந்தது. சென்ற எட்டு மாதத்தில் காஞ்சியை விட்டு மாமல்லர் வெளியே போகவேயில்லை. காஞ்சிக் கோட்டையை முற்றுகைக்கு ஆயத்தம் செய்வதிலேயே பெரும்பாலும் காலத்தைக் கழித்து வந்தாரென்று தெரிந்தது.

மேற்கூறிய விதம் சத்ருக்னன் தான் அறிந்து வந்த வரலாற்றையெல்லாம் கூறி முடித்த பிறகு, சக்கரவர்த்தி, "சத்ருக்னா! என்னுடைய கட்டளையை மிக நன்றாக நிறைவேற்றியிருக்கிறாய். செய்தி இவ்வளவுதானா? உன் முகத்தைப் பார்த்தால் இன்னும் ஏதோ முக்கிய சமாசாரம் இருப்பது போல் தோன்றுகிறதே!" என்று கூறினார்.

"ஆம் பிரபு! சில ஓலைகள் கிடைத்தன அவற்றைத் தங்களைத் தவிர யாரும் பார்க்கக் கூடாதென்று நேரில் கொண்டு வந்தேன்."

"ஓலையா? என்ன ஓலை?" என்று சக்கரவர்த்தி வியப்புடன் கேட்டுக்கொண்டே கரத்தை நீட்டினார்.

"பல்லவேந்திரா! ஒருவேளை நான் செய்தது குற்றமாயிருந்தால் மன்னிக்க வேண்டும்..." சக்கரவர்த்தி துள்ளி எழுந்து, "முட்டாளே! துர்விநீதனுக்குப் புலிகேசி அனுப்பிய ஓலையைத் தடுத்து நிறுத்தி விட்டாயா?" என்று கோப கர்ஜனை செய்தார்.

"இல்லை, பல்லவேந்திரா! மன்னிக்க வேண்டும் நான் சொல்லும் ஓலை யுத்தத்தைப் பற்றியதே அல்ல!"

"நல்லவேளை! எங்கே அப்படி ஏதாவது அசட்டுத்தனமாய்க் குறுக்கிட்டுக் காரியத்தைக் கெடுத்து விட்டாயோ என்று பயந்து போனேன். பின்னே எந்த ஓலையைச் சொல்லுகிறாய்?"

"பல்லவேந்திரா! நான் கொண்டு வந்திருப்பது காதல் ஓலை!"

'ஆ!' என்ற வியப்பொலியுடன் சக்கரவர்த்தி தமது பீடத்தில் அமர்ந்தார். அவருடைய புருவங்கள் நெறித்தன. நெற்றியில் சுருக்கங்கள் காணப்பட்டன.

"எங்கே? எடு, ஓலையைப் பார்க்கலாம்" என்றார்.

சத்ருக்னன் தலையிலிருந்து முண்டாசை எடுத்தான், அதற்குள்ளேயிருந்த ஓலைச் சுருள்கள் எட்டையும் எடுத்துத் தயக்கத்துடன் சக்கரவர்த்தியிடம் கொடுத்தான். மகேந்திரர் ஓலைகளை வாங்கிக் கொண்டார். சற்று நேரம் ஓலைகளைக் கையிலே வைத்துக்கொண்டு சிந்தனை செய்தார்.

பிறகு "சத்ருக்னா! இராஜ்யம் ஆளுவதைப் போல் கொடுமையான காரியம் வேறொன்றும் இல்லை. இராஜ்யத்தின் நன்மைக்காக நான் இந்த நீசத்தனமான காரியத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது! மாமல்லனுடைய குழந்தை உள்ளத்தைக் கீறிப் பார்க்கும் பயங்கரமான பாவத்தைச் செய்யப் போகிறேன்" என்றார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com