Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruSivakamiyin SabathamPart 2
கல்கியின் சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம் : காஞ்சி முற்றுகை
11. "பயங்கொள்ளிப் பல்லவன்"

சிவகாமி நிருத்தம் ஆடியபோது சுய உணர்வுடன் இருந்தவர் ஒருவர் நல்ல வேளையாக அங்கே இருந்தார். அவர் பிக்ஷு நாகநந்திதான் என்று சொல்ல வேண்டியதில்லை.

"போதும், ஆயனரே! ஆட்டத்தை நிறுத்துங்கள். இனிமேல் ஆடினால் சிவகாமியும் தாங்கமாட்டாள்; உலகமும் தாங்காது" என்ற நாகநந்தியின் வார்த்தைகளைக் கேட்டு ஆயனர் சுயபிரக்ஞை அடைந்து தாளம் போடுவதை நிறுத்த, சிவகாமியும் ஆட்டத்தை நிறுத்தினாள்.

புத்த பிக்ஷு கூறினார்: "ஆயனரே! நீர் எத்தகைய துரோகம் செய்து கொண்டிருக்கிறீர்? இப்படிப்பட்ட தெய்வீகமான கலையை இந்த நடுக்காட்டிலே ஒளித்து வைத்துக் கொண்டிருக்கலாமா? உலோபி ஒருவன் தனக்குக் கிடைத்த மதிப்பில்லாத இரத்தினத்தைப் பெட்டிக்குள்ளே பூட்டி வைத்திருப்பது போல அல்லவா இருக்கிறது நீர் செய்யும் காரியம்! தீபத்தை ஏற்றி நடுக் கூடத்தில் வைக்க வேண்டும். அப்படியின்றி மூலை முடுக்கிலே வைத்துத் துணியைப் போட்டு மூடினால், தீபம் அணைந்து போவதுடன், துணியும் அல்லவா எரிந்து போகும்? உலகம் பார்த்துப் பிரமிக்கும்படியான கலைச் செல்வம் உமது குமாரியிடம் இருக்கிறது.

அதைப் பார்த்து ஆனந்திக்க உலகமும் காத்திருக்கிறது. நான் சொல்கிறதைச் சற்றுச் செவி கொடுத்துக் கேளுங்கள். என்னுடன் கிளம்பிவாருங்கள் தில்லைப்பதிக்குப் போவோம். அங்கே பரமசிவனுக்குப் போட்டியாகப் பார்வதி ஆடியது போல் சிவகாமியும் ஆடட்டும். ஆனால் பார்வதியைப் போல் சிவகாமி நடனப் போட்டியில் தோற்கமாட்டாள். எடுத்த எடுப்பிலேயே நடராஜர் தோற்றுப் போவார். அவருடைய தூக்கிய திருவடியைப் பூமியின் மேல் வைத்து இளைப்பாறுவார்.

தில்லையிலிருந்து நாகைப்பட்டினத்துக்குப் போகலாம். நாகைப்பட்டினத்திலே புத்த பிக்ஷுக்களின் மகா சங்கம் கூடப் போகிறது. இந்தக் கூட்டத்துக்காகக் கன்யாகுப்ஜத்திலிருந்தும், காசியிலிருந்தும் கயையிலிருந்தும், கடல்களுக்கப்பாலுள்ள சாவகத் தீவிலிருந்தும், சீனதேசத்திலிருந்தும் பௌத்தர்கள் வருகிறார்கள். உலகத்தின் நாலா பக்கங்களிலிருந்தும், சிற்பக் கலைஞர்களும், இசை வல்லார்களும், நடன சாஸ்திர மேதைகளும் நாகைப்பட்டினத்தில் கூடுகிறார்கள்.

அந்த மகா சங்கத்திலே உங்கள் புதல்வி நடனம் ஆடட்டும். அவளுடைய புகழும் அவளைப் பெற்ற உம்முடைய புகழும் உலகமெல்லாம் பரவட்டும். நாகைப்பட்டினத்திலிருந்து உறையூருக்குப் போவோம். உறையூர்ச் சோழர்கள் இன்று தாழ்வடைந்து பல்லவர்களுக்குக் கப்பம் செலுத்தும் சிற்றரசர்களாக இருக்கிறார்கள். இருந்தாலும் பூர்வீகப் பெருமையுடையவர்கள். கலைகளில் அபாரப் பற்று உடையவர்கள். பார்த்திபன் என்னும் சோழ இராஜகுமாரன் அங்கே இருக்கிறான், சித்திரக் கலையில் தேர்ந்தவன். சிவகாமியின் நடனத்தைப் பார்த்தால் அவனுடைய ஆனந்தத்துக்கு அளவே இராது. பின்னர் அங்கிருந்து கிளம்புவோம், சித்தர் வாசமலையின் சித்திர விசித்திரங்களைச் சிவகாமிக்குக் காட்டிவிட்டு மதுரை மாநகருக்குச் செல்வோம். அங்கே மாரவர்ம பாண்டியன் சமீபத்திலேதான் காலமாகி, அவன் மகன் சடையவர்மன் பட்டத்துக்கு வந்திருக்கிறான்.

சடையவர்மன் மகா ரசிகன். ஆஹா! சடையவர்ம பாண்டியன் மட்டும் சிவகாமியின் நடனத்தைப் பார்த்துவிட்டால், உங்களை இந்த அரண்ய வீட்டிலே இப்படி நிர்க்கதியாக விட்டிருப்பானா? மதுரை நகரிலுள்ள மாடமாளிகைக்குள்ளே மிக உன்னதமான மாளிகை எதுவோ, அதிலே அல்லவா உங்கள் இருவரையும் வைத்துப் போற்றுவான்?..."

இவ்விதமாக நாகநந்தி பேசி வருகையில் ஆயனரும் சிவகாமியும் பாம்பாட்டியின் மகுட வாத்தியத்திலே மயங்கிப் படமெடுத்தாடும் சர்ப்பத்தைப் போல், அவருடைய மொழிகளைக் கேட்டு வந்தார்கள்.

கடைசியில், "என்ன சொல்கிறீர், ஆயனரே?" என்று நாகநந்தி கூறி நிறுத்தியபோது, ஆயனருக்கு உண்மையில் இன்னது சொல்வதென்றே தோன்றவில்லை. அவருடைய மனதில், "சக்கரவர்த்தியின் கட்டளைக்கும் நாகநந்தியின் யோசனைக்கும் வெகு பொருத்தமாயிருக்கிறதே!" என்ற எண்ணம் தோன்றிக் கொண்டிருந்தது. இருந்தாலும் காரணம் தெரியாத ஒருவிதத் தயக்கமும் உண்டாயிற்று. எனவே, "நான் என்ன சொல்வது? சிவகாமியைத்தான் கேட்க வேண்டும்" என்று சொல்லி, சிவகாமியை நோக்கினார்.

சிவகாமிக்கோ, சிதம்பரத்தையும் நாகைப்பட்டினத்தையும் உறையூரையும் மதுரையையும் பற்றிக் கேட்டபோது, அங்கெல்லாம் அவள் போவது போலவும், பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னே ஆடுவது போலவும் அவர்களுடைய பாராட்டுதலைப் பெற்று மகிழ்வது போலவும் மனக் கண்முன்னால் தோன்றிக் கொண்டே வந்தது. ஆனால் அவள் மனத்திலும் ஒரு தடை, இன்னதென்று விளங்காத ஏதோ ஒரு சந்தேகம் குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தது.

எனவே, ஆயனர் மேற்கண்டவாறு கேட்டதும் சிவகாமி சற்று யோசித்து, "எனக்கு என்ன தெரியும், அப்பா? உங்களுக்கு எது உசிதமாகத் தோன்றுகிறதோ, அப்படிச் செய்யுங்கள்" என்றாள்.

அப்போது நாகநந்தி, "ஆமாம் ஆயனரே, உம்முடைய காலம் எவ்விதம் போய்க் கொண்டிருக்கிறது? இங்கே புதிய நடனச்சிலை எதையும் காணோமே? நான் கடைசி முறையாக வந்துபோன பிறகு, புதிதாக ஒரு சிலைகூட அமைக்கப்படவில்லையா?" என்றார்.

ஆயனர் ஏக்கம் நிறைந்த குரலில், "இல்லை; கல்லுளியைக் கையினால் தொட்டு வெகு காலமாயிற்று" என்றார்.

"ஏன் அப்படி? சிற்பக் கலை என்ன பாவத்தைச் செய்தது? தென்தேசத்தின் ஒப்பற்ற மகா சிற்பி எதற்காகக் கல்லுளியைக் கையினால் தொடாமலிருக்க வேண்டும்?" என்று பிக்ஷு கேட்டார்.

சிவகாமி அப்போது குறுக்கிட்டு, "எல்லாம் உங்களால் வந்த வினைதான், அடிகளே! அஜந்தா வர்ண இரகசியத்தைக் கண்டுபிடிப்பதில் அப்பா முனைந்திருக்கிறார். தினம் தினம் விதவிதமான பச்சிலைகளைத் தேடிக்கொண்டு வருவதும் அரைப்பதுந்தான் ஏழு மாதமாய் அப்பா செய்யும் வேலை" என்றாள்.

"ஆகா! வீண் வேலை! நான்தான் எப்படியும் உங்களுக்கு அதை அறிந்து சொல்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேனே?"

ஆயனர் சிறிது பரபரப்புடன், "வாக்குக் கொடுத்தது உண்மைதான் ஆனால், அதை நிறைவேற்றுவதாகக் காணோமே? நீங்கள் ஓலை கொடுத்தனுப்பியதுதான் உபயோகப்படவில்லையே! அந்தப் பிள்ளையாண்டான் இப்போது சைனியத்தில் சேர்ந்து பெரிய தளபதியாகி விட்டான். தெரியுமோ இல்லையோ?" என்றார்.

"அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன் நேற்றைக்குத் தான் அவன் காஞ்சிக்கு வந்தானாமே?"

"ஆம்! இன்று காலை அந்தப் பிள்ளையே இங்கே வந்திருந்தான். காஞ்சிக் கோட்டைக் காவலுக்காக அவனைச் சக்கரவர்த்தி அனுப்பி வைத்திருக்கிறாராம். அடேயப்பா! எட்டு மாதத்திற்குள் அவனிடம் எவ்வளவு வித்தியாசம்? அடக்க ஒடுக்கத்துடனும் நாணம் அச்சத்துடனும் அன்றைக்கு உங்களுடன் வந்தானே அந்தப் பரஞ்சோதி எங்கே? இன்று காலை தளபதியாக வந்த பரஞ்சோதி எங்கே? என்ன அகம்பாவம்? என்ன கர்வம்!"

"அப்பா, அவரிடம் அகம்பாவம் ஒன்றுமில்லையே! தங்களிடம் எவ்வளவோ பயபக்தியுடன் தானே நடந்து கொண்டார்? சக்கரவர்த்தியின் கட்டளையைக்கூட எவ்வளவு தயக்கத்துடன் கூறினார்?" என்று சிவகாமி குறுக்கிட்டுச் சொன்னாள்.

"ஆயனரே சக்கரவர்த்தியின் கட்டளை என்ன? நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று புத்த பிக்ஷு கேட்டார்.

"எங்களை இந்த வீட்டைவிட்டுப் போகச் சொல்லிக் கட்டளை! எப்படியிருக்கிறது கதை? இந்த மகேந்திர பல்லவர் ஒரு காலத்தில் சிற்பக் கலையில் எவ்வளவு பற்று உடையவராயிருந்தார்? அவரைப்பற்றி நான் என்னவெல்லாம் எண்ணியிருந்தேன்?" என்று ஆயனர் எதையோ பறிகொடுத்து விட்ட குரலில் கூறினார்.

"நானும் உங்கள் சக்கரவர்த்தியைப் பற்றி என்னவெல்லாமோ எண்ணியிருந்தேன். அவருடைய சாமர்த்தியம் இப்போதுதான் தெரிகிறது. உங்கள் சக்கரவர்த்தி எப்பேர்ப்பட்ட காரியத்தைச் சாதித்திருக்கிறார் தெரியுமா, ஆயனரே? பல்லவ சைனியத்தில் ஐம்பதாயிரம் வீரர்களுக்கு மேலே இருக்கமாட்டார்கள். இந்த அற்பச் சைனியத்தை வைத்துக் கொண்டு கடல் போன்ற வாதாபி சைனியத்தை எட்டு மாதத்துக்கு மேலே வடபெண்ணைக் கரையிலேயே நிறுத்தி வைத்திருந்தார்! மகேந்திர பல்லவர் வெகு கெட்டிக்காரர், ஆயனரே! வெகு கெட்டிக்காரர்! இருக்கட்டும்! பரஞ்சோதி தான் போன காரியத்தைப் பற்றி என்ன சொன்னான்? ஓலையை என்ன செய்தானாம்? அதைப் பற்றி நீங்கள் ஒன்றும் கேட்கவில்லையா?" என்று புத்த பிக்ஷு வினவினார்.

"கேட்காமல் என்ன? பாவம் அந்த பிள்ளைக்கு வழியிலே பெரிய விபத்து நேர்ந்து விட்டதாம். சளுக்க வீரர்கள் அவனைப் பிடித்துக்கொண்டு விட்டார்களாம். எப்படியோ பையன் சளுக்க வீரர்களிடமிருந்து தப்பித்து வந்து விட்டானாம். நல்ல வேளையாகச் சிறை பிடிக்கப்பட்டதும் ஓலையை மலைப் பள்ளத்தாக்கில் ஓடிய அருவியிலே எறிந்து விட்டானாம்! புத்திசாலிப் பையன்!"

"புத்திசாலி! அதோடு அதிர்ஷ்டசாலி முதன் முதலில் சாலை ஓரத்தில் அவன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த போது பார்த்தவுடனேயே இவன் மிக அதிர்ஷ்டசாலியாவான் என்று எனக்குத் தெரிந்து போயிற்று. ஆனால், நான் அவனுக்கு எதிர்பார்த்த அதிர்ஷ்டம் வேறு! ஆஹா, என்ன தவறு செய்துவிட்டேன்!" என்று நாகநந்தி கூறி இலேசாக ஒரு பெருமூச்சு விட்டார்.

"அடிகளே! பரஞ்சோதிக்கு இப்போது அதிர்ஷ்டம் ஒன்றும் குறைவாகப் போய்விடவில்லையே?"

"உங்களுக்கு தெரியாது, ஆயனரே! இன்னும் எவ்வளவோ பெரிய அதிர்ஷ்டம் அவனுக்கு வருவதற்கிருந்தது ஏதோ ஒரு கிரகம் வந்து குறுக்கிட்டிருக்கிறது..."

"நல்லவேளை; இவ்வளவு அதிர்ஷ்டத்தோடேயே நிற்கட்டும். இன்னும் அதிகமானால், பையனுக்குத் தலை கால் தெரியாமல் போய்விடும்!" என்றார் ஆயனர்.

அஜந்தா வர்ண இரகசியத்தை அறிந்து கொள்ளாமல் வந்ததில் பரஞ்சோதியின் மேல் அவருக்கு மிக்க வெறுப்பு உண்டாகியிருந்தது.

சிவகாமி குறுக்கிட்டு, "அப்பா! அப்பா! ஒரு செய்தி கேட்டீர்களா? மகேந்திர சக்கரவர்த்தி ஒருவேளை பல்லவ இராஜ்யம் மாமல்லருக்கு இல்லையென்று சொல்லிவிட்டுப் பரஞ்சோதிக்குக் கொடுத்தாலும் கொடுத்து விடுவாராம். ஜனங்கள் அப்படி பேசிக் கொள்வதாகச் சாரதி கண்ணபிரான் சொன்னார்" என்று கூறிவிட்டுக் கன்னங்கள் குழியக் 'கலகல' என்று சிரித்தாள்.

"யார், கண்ணபிரானா! அவன் கிடக்கிறான் பைத்தியக்காரன்! இப்படித்தான் ஏதாவது உளறுவான்" என்றார் ஆயனர்.

அப்போது நாகநந்தி, "இல்லை, ஆயனரே, இல்லை. சாரதி கண்ணபிரான் சொன்னது அப்படி ஒன்றும் உளறல் இல்லை. அவன் சொன்னபடி நடந்தால், அதில் எனக்கு வியப்பு இராது. காஞ்சி சிங்காதனத்தில் பயங்கொள்ளிப் பல்லவனை வைத்துப் பட்டம் கட்டுவதைக் காட்டிலும் பரஞ்சோதிக்கு ராஜ்யத்தைக் கொடுப்பதே வீரமகேந்திர பல்லவருக்கு உகப்பாயிருக்கும்" என்றார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com