Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 5
கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

64. "உண்மையைச் சொல்!"

ஆழ்வார்க்கடியானை வந்தியத்தேவன் கட்டிப்போட்ட படகு ஆற்றோட்டத்தோடு சிறிது தூரம் மிதந்து சென்று கரையிலே ஒதுங்கியது. ஆற்று வெள்ளத்தில் தள்ளப்பட்ட வீரர்கள் இருவரும் தட்டுத்தடுமாறிக் கரை சேர்ந்து அந்தப் படகு ஒதுங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஆழ்வார்க்கடியான் படகிலிருந்து இறங்கவில்லை. அவன் படகிலே கட்டுப்பட்ட மாதிரியே இருந்துகொண்டு மற்றவர்களை மறைவில் இருக்கும்படி சொன்னான்.

உண்மையென்னவென்றால், வந்தியத்தேவனும் கருத்திருமனும் தப்பித்துப் போய்விட வேண்டுமென்பதே ஆழ்வார்க்கடியானுடைய நோக்கமாயிருந்தது. முதல் மந்திரியின் விருப்பமும் அதுவே என்பதை அவன் தெரிந்து கொண்டிருந்தான். அவ்விருவரும் அச்சமயம் தஞ்சையில் இருப்பதால், பழைய சம்பவங்கள் பலவற்றைக் குறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டியதாக ஏற்படும். வந்தியத்தேவனை குற்றமற்றவன் என்பதுபற்றி முதன்மந்திரிக்கும், ஆழ்வார்க்கடியானுக்கும் சந்தேகமே இல்லை. ஆயினும் அவன் மீது விசாரணை நடத்துவதனாலேயே பல சங்கடங்கள் ஏற்படும். பலர் மனவருத்தம் அடையும்படி நேரிடும். அந்தப் பேச்சு மக்களின் காதுக்கு எட்டும்படி செய்வதே கேடாக முடியும். அருள்மொழிவர்மர் ஓர் அருமை நண்பனை இழக்கவும் சோழ ராஜ்யம் ஒரு சிறந்த வீர ராஜதந்திரியை இழக்கவும் நேரிடும். வந்தியத்தேவனைப் பற்றிக் குந்தவையின் மனோ நிலையையும் மணிமேகலையின் வெளிப்படையான ஆர்வத்தையும் முதன்மந்திரி அறிந்திருந்தார். எல்லாவற்றையும் உத்தேசித்துதான் வந்தியத்தேவன் தப்பி ஓடுவதற்கு உதவி செய்வதே அச்சமயம் உசிதமானது என்று தீர்மானித்தார்.

சேந்தன் அமுதனுடைய நந்தவனத்தில் குதிரைகளைக் கண்டுபிடித்த பிறகு வந்தியத்தேவனும், கருத்திருமனும் இந்த வடவாற்றின் கரையோடுதான் பிரயாணம் செய்வார்கள் என்று திருமலை நம்பி எதிர்பார்த்தான். கருத்திருமன் கூறியதுபோல் அந்த ஆற்றங்கரையோடு சென்றால், பாமணி நதியில் அது கலக்கும் இடம் வரையில் போகலாம். கோடிக்கரை வழியில் பாதி தூரம் சென்றாகிவிடும். ஆகவே அந்த வழியிலேதான் அவர்கள் வருவார்கள். போகும்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி, வந்தியத்தேவனிடம் ஒரு செய்தி சொல்லி அனுப்ப வேண்டுமென்று ஆழ்வார்க்கடியான் எண்ணிக் கொண்டு அங்கு காத்திருந்தான்.

அவன் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கொஞ்சம் நேரம் அதிகமாக ஆகிவிட்டது. "நாம் எண்ணியது தவறு; வேறு வழி போயிருக்கவேண்டும்; அல்லது ஏதேனும் எதிர்பாராதது நேர்ந்திருக்க வேண்டும்" என்று தீர்மானித்துத் திருமலை படகிலிருந்து கரையில் இறங்க எத்தனித்தபோது, தூரத்தில் குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டது. எனவே, மறுபடியும் கட்டிப் போடப்பட்டவனைப் போல் கிடந்தான்.

குதிரைகள் நெருங்கி வந்ததும், "ஓகோ! யார் அங்கே? கொஞ்சம் நில்லுங்கள்! என்னைக் கட்டவிழ்த்து விட்டுப் போங்கள்!" என்று கூவினான்.

ஆயினும் குதிரைகள் நிற்காமல் சென்றன. முதலில் வந்த குதிரையின் மேல் இருந்தவன் கருத்திருமன்தான் என்பதைக் கண்டான். எனவே, இரண்டாவது குதிரை நெருங்கியபோது " வந்தியத்தேவா! வந்தியத்தேவா! கொஞ்சம் நில்லு!" என்று பெரும் கூச்சலிட்டான்.

இரண்டாவது குதிரையும் நிற்காமல் போயிற்று. அப்போது அதன் மேலிருந்தவனை ஆழ்வார்க்கடியான் பார்த்தான். கரை காணாத அதிசயத்தில் ஆழ்ந்தான். "என் கண்களில் ஏதோ கோளாறு இருக்கிறது; என் அறிவு மோசம் செய்கிறது" என்றான்.

அவனைக் கடந்து அப்பால் சென்ற குதிரைகள் சிறிது தூரம் போன பிறகு நின்றன. ஒரு குதிரை மட்டும் திரும்பி வந்தது. அதன் மேலிருந்து கருத்திருமன் இறங்கினான். படகின் அருகில் வந்தான்.

"பாவம்! இன்னுமா கட்டுப்பட்டிருக்கிறாய்? எங்களுக்கு எவ்வளவோ பெரிய உதவி செய்தாய்! அதற்குப் பிரதியாக உன்னைக் கட்டவிழ்த்துவிட்டாவது போகிறேன். ஆனால் உன் தந்திரம் எதையும் என்னிடம் காட்டாதே!" என்று சொல்லிக் கொண்டே அவன் குனிந்தபோது, திருமலை திடீரென்று கரையில் பாய்ந்து அவன் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டான்.

இதைச் சிறிதும் எதிர்பாராத கருத்திருமன் சிறிது நேரம் திகைத்துச் செயலிழந்து கிடந்தான். பிறகு, "ஐயோ, அப்பா! என்னை விட்டு விடு! உனக்குப் புண்ணியம் உண்டு. நல்லது செய்ய வந்தவனுக்கு இப்படி நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா? அதோ, உன் சிநேகிதன் வந்தியத்தேவன் காத்திருக்கிறான். ஆம்; அவன் உன்னைத் தன் அருமை நண்பன் என்று பாராட்டிக் கொண்டிருக்கிறான். இங்கு வந்து உன் காரியத்தைப் பார்த்தால் என்ன நினைப்பான்? நீ உயிரோடு தப்ப முடியாது! என்னை விட்டு விடு, அப்பனே! விட்டு விடு!" என்று பரிதாபமாகப் புலம்பினான்.

ஆழ்வார்க்கடியான் "அடே! எவ்வளவு துணிச்சலாகப் பொய் சொல்லுகிறாய்! அந்தக் குதிரையின் மேல் இருப்பவன் யார்? உண்மையைச் சொல்லு! சொன்னால் விட்டு விடுகிறேன் இல்லாவிட்டால் அடுத்த நிமிஷம் உன் உயிர் உடம்பில் இராது!" என்றான்.

"ஆம், ஆம்! பொய்தான் சொன்னேன். உன்னை ஏமாற்ற முடியாதுதான். அந்தக் குதிரையில் இருப்பவன் வந்தியத்தேவன் அல்ல. இளவரசர் மதுராந்தகர். என்னை விட்டுவிடு! அவரிடம் உனக்கு வேண்டிய பரிசுகள் வாங்கித் தருவேன்!"

"சரி, சரி! பரிசுகள் இருக்கட்டும்! வந்தியத்தேவன் எங்கே?"

"அந்த நந்தவனக் குடிசையில் குதிரையிலிருந்து இறங்கிப் போனான். அப்புறம் அவனைக் காணவில்லை."

"நீங்கள் எங்கே போகிறீர்கள்?"

"வந்தியத்தேவனுடன் நான் போக உத்தேசித்த இடத்துக்குத் தான்."

"அதாவது இலங்கைத் தீவுக்கு."

"ஆமாம்!"

"மதுராந்தர் எதற்காக இலங்கைக்கு வருகிறார்?"

"எனக்கு என்ன தெரியும்? அவரைக் கேள்! என்னுடன் வருகிறேன் என்று கிளம்பி வருகிறார்."

ஆழ்வார்க்கடியான் கருத்திருமனுடைய நெஞ்சை ஒரு அமுக்கு அமுக்கி, "உண்மையைச் சொல்! மதுராந்தகன் யாருடைய மகன்?" என்று கேட்டான்.

"இது என்ன கேள்வி? செம்பியன் மாதேவியின்... இல்லை, இல்லை நெஞ்சை அமுக்காதே! என் உயிர் போய்விடும்! ஊமை மந்தாகினியின் மகன்."

"மதுராந்தகனின் தகப்பன் யார்? உண்மையைச் சொல்! இல்லாவிட்டால் உயிரோடு தப்ப மாட்டாய்!"

கருத்திருமன் இதற்குப் பதில் மிக மெல்லிய குரலில் சொன்னான்.

"நல்லது; பிழைத்தாய்! கடைசியாக இன்னும் ஒன்றுமட்டும் சொல்லி விடு! சேந்தன் அமுதன் யாருடைய மகன்?"

"என்னை ஏன் கேட்கிறாய்? நீதான் முன்னமே தெரிந்து கொண்டாயே?"

"கண்டராதித்தர் - செம்பியன் மாதேவியின் மகன்தானே?"

"ஆமாம்; ஆனால் அவன் இன்று உயிரோடிருப்பதற்கு நான் தான் காரணம். செவிடும், ஊமையுமாகிய வாணி அந்தக் குழந்தை செத்துப் போய்விட்டதென்று எண்ணிப் புதைக்கப் பார்த்தாள். குழந்தை அழும் குரலைக் கேட்டு நான் காப்பாற்றினேன். அதற்காகவாவது என்னை இப்போது உயிரோடு விட்டுவிடு!"

"உண்மையில், அதற்காகவேதான் உன்னை இப்போது உயிரோடு விடுகிறேன்!" என்று சொல்லிவிட்டு ஆழ்வார்க்கடியான் எழுந்தான்.

கருத்திருமன் பாய்ந்து ஓடிக் குதிரையின் மீது ஏறிக் கொண்டான். இரண்டு குதிரைகளும் அந்த மழைக்கால இருட்டில் ஆற்றங்கரையோடு பாய்ந்து சென்றன.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com