Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 5
கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

35. குரங்குப் பிடி

வந்தியத்தேவன் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். ஒரு நிமிட நேரம் காலடிச் சத்தம் கேட்பது போலிருந்தது. சட்டென்று அது நின்றது. மறுபடியும் கேட்டது. இப்போது அந்தச் சத்தம் பின்னோக்கிச் செல்வதுபோல் வரவரக் குறைந்தது.

"ஐயா! மேலே போகத்தான் வேண்டுமா? திரும்பிவிடுவது நல்லதல்லவா?" என்றாள் மணிமேகலை.

"இளவரசி! முன் வைத்த காலைப் பின் வைப்பது எனக்கு வழக்கமில்லை!" என்றான் வல்லவரையன்.

"பிடித்தால், குரங்குப் பிடிதான் என்று சொல்லுங்கள்!"

"முன்னொரு தடவை தங்கள் தோழி சந்திரமதி என்னைக் 'குரங்கு மூஞ்சி' என்று வர்ணித்தாள் அல்லவா? முகத்திற்கேற்பத்தானே பிடியும் இருக்கும்?"

இவ்விதம் சொல்லிக்கொண்டே வந்தியத்தேவன், இதுகாறும் மணிமேகலையின் பின்னால் வந்து கொண்டிருந்தவன், அவளைத் தாண்டிக்கொண்டு முன்னால் போக முயற்சித்தான். அதை மணிமேகலை தடுக்கப் பார்த்தாள்.

இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டார்கள். மணிமேகலையின் கையிலிருந்த விளக்கு தடால் என்று விழுந்தது. இரண்டு மூன்று படிகள் தடதடவென்று உருண்டு சென்று அணைந்துவிட்டது. பின்னர் அந்த மேடு பள்ளமான நடைபாதையில் காரிருள் சூழ்ந்தது.

"இளவரசி! இது என்ன இப்படிச் செய்தீர்கள்?" என்றான் வல்லவரையன்.

"தாங்கள் ஏன் என்னைத் தாண்டிக்கொண்டு முன்னால் போகப் பார்த்தீர்கள்?" என்றாள் மணிமேகலை.

"அபாயம் நேரும்போது முன்னால் பெண்களை விட்டுக் கொண்டு போகும் வழக்கம் எனக்கு இல்லை!" என்றான் வந்தியத்தேவன்.

"தங்களுக்கு எது எது வழக்கம், எது எது வழக்கமில்லை என்று ஒருமிக்க எனக்குத் தெரிவித்துவிட்டால் நலமாயிருக்கும். அதற்குத் தகுந்தபடி நானும் நடந்து கொள்வேன்."

"ஆகட்டும், அம்மணி! அவகாசம் கிடைக்கும்போது சொல்கிறேன்."

"இப்போது அவகாசம் இல்லாமல் என்ன? வாருங்கள், திரும்பி நந்தவனத்துக்குப் போகலாம். அங்கே சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு சொல்லுங்கள்."

"இருட்டில் வருவதற்குத் தங்களுக்குப் பயமாயிருந்தால் திரும்பிச் செல்லுங்கள்!..."

"தங்களைப் போன்ற வீரர் அருகில் இருக்கும்போது எனக்கு என்ன பயம்?"

"பின்னே வாருங்கள், போகலாம்! வழியில் நிற்பதில் என்ன பயன்?"

இவ்வாறு சொல்லிக் கொண்டே முன்னால் போகப் பார்த்த வந்தியத்தேவன் கால் தடுக்கி விழப் பார்த்தான். மணிமேகலை அவன் விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.

"ஐயா! இந்த வழியில் மேடு பள்ளங்கள் அதிகம். படிகள் எங்கே, சமபாதை எங்கே என்று இருட்டில் கண்டுபிடிக்க முடியாது. நான் இந்த வழியில் எத்தனையோ தடவை போயிருக்கிறேன். படிகள், திருப்பங்கள் உள்ள இடமெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆகையால், தாங்கள் எவ்வளவு சூராதி சூரராக இருந்தபோதிலும், என் கையைப் பிடித்துக்கொண்டு பின்னால் வருவது நல்லது. இல்லாவிட்டால், வேட்டை மண்டபம் போய்ச் சேர மாட்டீர்கள். வழியில் கால் ஓடிந்து விழுந்து கிடப்பீர்கள்!" என்றாள் மணிமேகலை.

"இளவரசி! தங்கள் கட்டளைப்படியே நடந்து கொள்கிறேன், வந்தனம்!" என்றான் வந்தியத்தேவன்.

இருட்டில் மணிமேகலை வல்லவரையனுடைய ஒரு கரத்தைப் பற்றிக்கொண்டாள். வந்தியத்தேவனுடைய கரம் ஜில்லிட்டிருந்ததைத் தெரிந்துகொண்டாள். 'இவர் பகைவர்களுக்கு அஞ்சாதவர்; சதிகாரர்களுக்கும் பயப்படாதவர்; இந்தப் பேதைப் பெண்ணின் கையைப் பிடிப்பதற்கு இவ்விதம் ஏன் பயப்படுகிறார்?' என்று அவள் உள்ளம் எண்ணமிட்டது.

சிறிது தூரம் இருவரும் மௌனமாகச் சென்றார்கள். வந்தியத்தேவன் அடிக்கடி தடுமாறி விழப் பார்த்தான். ஒவ்வொரு தடவையும் அவன் விழுந்துவிடாமலிருக்கும் பொருட்டு மணிமேகலை அவனுடைய கையை இறுக்கிப் பிடித்துக்கொள்ள வேண்டி நேர்ந்தது.

"நரகத்துக்குப்போகும் வழி இப்படித்தான் இருள் அடர்ந்திருக்கும்!" என்று சொன்னான் வந்தியத்தேவன்.

"ஓகோ! தாங்கள் நரகத்துக்குப் போய்விட்டு வந்திருக்கிறீர்கள்?" என்று மணிமேகலை கேட்டாள்.

"நான் நரகத்துக்கும் போனதில்லை; சொர்க்கத்துக்கும் போனதில்லை, பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்!"

"அவர்களுக்கு அவர்களுடைய பெரியோர்கள் சொல்லியிருப்பார்கள்!"

சில காலத்துக்கு முன்பு வரையில் நாலு பேருக்கு முன்னால் வருவதற்குக் கூடக் கூச்சப் பட்டுக்கொண்டிருந்த இந்தப் பெண், இவ்வளவு வாசாலகமுள்ளவள் ஆனது எப்படி என்று வந்தியத்தேவன் சிந்தித்துப் பார்த்தான்.

"நரகத்துக்குப் போகும் வழிதான் இருட்டாயிருக்கும்; சொர்க்கத்துக்குப் போகும் வழி எப்படியிருக்குமாம்?" என்றாள் மணிமேகலை.

"ஒரே ஜோதி மயமாயிருக்குமாம்; கோடி சூரியப் பிரகாசமாயிருக்குமாம்!"

"அப்படியானால் நரகத்துக்குப் போகும் வழிதான் எனக்குப் பிடிக்கும்! ஒரு சூரியனே கண்ணைக் கூசப் பண்ணுகிறது. கோடி சூரியனுடைய வெளிச்சம் கண்ணைக் குருடாக்கி விடுமே!" என்றாள் மணிமேகலை.

"நரகத்துக்குப் போகும் வழியாகப் போனால் முடிவில் நரகத்துக்குத்தானே போய்ச் சேரும்படியிருக்கும்?" என்றான் வல்லவரையன்.

"தங்களைப்போன்ற வீர புருஷரைத் தொடர்ந்து போனால், நரகப்பாதை வழியாகச் சொர்க்கத்துக்குப் போனாலும் போகலாம்!" என்றாள் மணிமேகலை.

"தங்களைப்போன்ற இளவரசியின் கையைப் பிடித்துக் கொண்டு போனால், நரகமே சொர்க்கம் ஆகிவிடும்!" என்றான் வந்தியத்தேவன்.

உடனே உதட்டைக் கடித்துக்கொண்டு "இப்படிச் சொல்லி விட்டோ மே? இந்தப் பெண் ஏதாவது தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறாளே?" என்று கவலை கொண்டான்.

"தங்களுடைய கரம் ஜில்லிட்டிருப்பதைப் பார்த்தால், தாங்கள் சொர்க்கத்துக்குப் போகிறவராக எண்ண இடமில்லை. கொலைக் களத்துக்குப் போகிறவரைப்போல் தங்கள் உடம்பு நடுங்குகிறது!" என்றாள் மணிமேகலை.

"இளவரசி! இந்த பிரயாணத்தின் முடிவில் எனக்குக் கொலைக்களந்தான் காத்திருக்கிறதோ, என்னமோ?"

"தாங்கள் தானே முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்? வேட்டை மண்டபத்தில் எத்தனை கொலைக்காரர்கள் இருக்கிறார்களோ என்னமோ?"

"அவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கட்டும்; அவர்களுக்கு நான் பயப்படவில்லை. தாங்களும் நானும் இப்படிக் கை கோத்துக்கொண்டு இருட்டில் போவதைக் கந்தமாறன் பார்த்துவிட்டால்... அதைப்பற்றித்தான் யோசனை செய்கிறேன்."

"ஐயோ! நான் உயிரோடிருக்கும் வரையில் என் தமையனால் தங்களுக்கு ஒரு கெடுதியும் நேராது. நான் காணும் கனவில் பாதி இப்போது உண்மையாக நடந்திருக்கிறது; இன்னும் பாதியும் ஒரு வேளை உண்மையானாலும் ஆகலாம். யார் கண்டது?" என்றாள் மணிமேகலை.

இந்தச் சமயத்தில் ஏதோ ஒரு கதவு பூட்டப்படும் சத்தத்தைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டுப் போய் நின்றார்கள்.

"வேட்டை மண்டபத்துக்குச் சமீபத்தில் வந்து விட்டோ ம்!" என்று மணிமேகலை மெல்லிய குரலில் கூறினாள்.

இதற்குள் சற்றுத் தூரத்தில் சிறிது வெளிச்சம் தெரிந்தது. வரவர அவ்வெளிச்சம் அதிகமானதுடன் அவர்களை நெருங்கி வந்ததாகத் தோன்றியது. மணிமேகலை வந்தியத்தேவனுடைய கரத்தை விட்டு விட்டுச் சற்று விலகி நின்றாள்.

அடுத்த நிமிஷத்தில், ஒரு கையில் தூக்கிப் பிடித்த விளக்குடன் இன்னொரு கையில் முறுக்கித் திருகிய வேலைப்பாடு அமைந்த கூரிய கத்தியுடன் இடும்பன்காரி அவர்களுக்கு எதிரே தோன்றினான்.

இவர்களைப் பார்த்ததும் அவன் அதிசயத்தினால் திகைத்துப் போனவனைப்போல் நின்றான். ஆனால் அவன் அவ்வாறு வேஷம் போடுகிறான் என்பது இருவருக்கும் தெரிந்து போயிற்று.

"அம்மா, ஐயா! இது என்ன? இந்த இருட்டில் இவ்விதம் தனியாகக் கிளம்பினீர்கள்? அடிமையிடம் சொன்னால் விளக்குப் பிடித்துக் கொண்டு வரமாட்டேனா? எங்கே புறப்பட்டீர்கள்?" என்று கேட்டான்.

"இடும்பன்காரி! மலையமான் படை எடுத்து வருவதாகச் செய்தி வந்திருக்கிறது அல்லவா? ஆகையால் மதில் வாசல்கள் சுரங்க வாசல்கள் எல்லாம் பத்திரமாய்ப் பூட்டியிருக்கிறதா என்று பார்ப்பதற்காக வல்லத்து இளவரசரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்!" என்றாள் மணிமேகலை.

"அதிசயமாயிருக்கிறது, தாயே! நானும் அதைத்தான் பார்த்துவிட்டு வருகிறேன்!" என்றான் இடும்பன்காரி.

"அப்படித்தான் நினைத்தேன், நாங்கள் வரும்போது கொண்டு வந்த விளக்கு வழியில் விழுந்து அணைந்து விட்டது. இங்கே கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. நீயாய்த்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி மேலே வந்தோம்."

"சின்ன எஜமான் பார்க்கச் சொன்னார்கள்; அதனால் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். சுரங்கப் பாதையெல்லாம் சரிவர அடைத்துத் தாளிட்டிருக்கிறது, திரும்பிப் போகலாமா தாயே!"

"உன் கையில் உள்ள விளக்கைக் கொடுத்துவிட்டு நீ போ! இந்த இளவரசருக்கு வேட்டை மண்டபத்திலிருந்து ஒரு வேலாயுதம் பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டுமாம். இவருடைய வேல் கொள்ளிடத்தில் போய்விட்டதாம். ஒரு வேளை யுத்தம் வந்தாலும் வரலாம் அல்லவா?..."

"ஆம், அம்மணி! யுத்தம் வந்தாலும் வரலாம். ஆகையால் வேற்று மனிதர்களை வேட்டை மண்டபத்துக்குள் அழைத்துப் போகாமலிருப்பதே நல்லது. தங்களுக்குத் தெரியாததா நான் ஒன்றும் சொல்லத் தேவையில்லை."

"அது உண்மைதான், காரி! ஆனால் இவர் வேற்று மனிதர் அல்ல. சின்ன எஜமானுக்கு உயிருக்கு உயிரான சிநேகிதர் ஆயிற்றே! இன்னும் ஏதேனும் புதிய உறவு ஏற்பட்டாலும் ஏற்படும். நீ விளக்கைக் கொடுத்துவிட்டுப் போ!" என்றாள் மணிமேகலை.

இடும்பன்காரி வேண்டா வெறுப்பாக விளக்கை இளவரசியிடம் கொடுத்துவிட்டுப் போனான். வந்தியத்தேவனும் மணிமேகலையும் மேலே நடந்து வேட்டை மண்டபத்தை அணுகிச் சென்றார்கள். எங்கிருந்தோ ஓர் ஆந்தையின் குரல் கேட்டது.

"இது என்ன? அரண்மனைக்குள்ளே ஆந்தை எப்படி வந்தது?" என்று மணிமேகலை வியப்புடன் கூறினாள்.

"ஒரு வேளை வேட்டை மண்டபத்துக்குள் இருக்கும் செத்த ஆந்தைக்கு உயிர் வந்துவிட்டதோ, என்னமோ? முன்னொரு சமயம் இளவரசியைப் பார்த்ததும் செத்த குரங்கு உயிர் பெறவில்லையா?" என்றான் வந்தியத்தேவன்.

வேட்டை மண்டபத்தின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. மணிமேகலை தான் கொண்டுவந்திருந்த சாவியைப் போட்டுப் பூட்டைத் திறந்தாள். பிறகு, கதவையும் இலேசாகத் திறந்தாள்.

இருவரும் உள்ளே பிரவேசித்தார்கள். முதலில் சிறிது நேரம் அவர்களைச் சுற்றிலும் செத்த யானைகள், கரடிகள், புலிகள், மான்கள், முதலைகள், பருந்துகள், ஆந்தைகள், - இவற்றின் பயங்கரமான உடல்கள் தான் தெரிந்தன.

விளக்கைத் தூக்கிப் பிடித்து நன்றாக உற்றுப் பார்த்தபோது, அந்தப் பிராணிகளுக்குப் பின்னால் பாதி மறைந்ததும் பாதி மறையாமலும் சில மனித உருவங்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

அப்போது அவர்கள் திறந்துகொண்டு வந்த வேட்டை மண்டபத்தின் கதவு படாரென்று சாத்தப்பட்டு விட்டது.

யார் அவ்வளவு பலமாகக் கதவைத் சாத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்ள வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அதே கணத்தில் அவன் பின்னாலிருந்து பலமாகப் பிடித்துத் தள்ளப்பட்டான். முன்னொரு சமயம் அவன் எந்த வாலில்லாக் குரங்கின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தானோ அந்தக் குரங்கின் முன்புறத்தில் போய் மோதிக் கொண்டான்.

இரண்டு கரங்கள் அவனைப் பலமாகப் பற்றிக் கொண்டன. 'குரங்குப் பிடி' எவ்வளவு வலிவுள்ளது என்பதை அப்போது தான் அவன் நன்றாக, அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டான். அவனுடைய அரையிலிருந்த, கத்தியை எடுக்கச் செய்த முயற்சி சிறிதும் பலிக்கவில்லை. அப்பால் இப்பால் அவனால் திரும்பவே முடியவில்லை.

குரங்கின் கைகள், அல்லது குரங்கின் கைகளோடு சேர்ந்து வந்த இரண்டு மனித கைகள், - அவனை அவ்வளவு பலமாகப் பிடித்துக் கொண்டன.

இன்னும் இரண்டு கைகள் அவனுடைய அரையிலிருந்த கத்தியை அவிழ்த்து எடுத்துக்கொண்டன.

"ஐயோ!" என்று பயங்கரமாக அலறிக்கொண்டு அவனருகில் ஓடி வந்த மணிமேகலையின் மார்பை நோக்கி அந்தக் கத்தி நீட்டப்பட்டது.

"சத்தம் போட வேண்டாம், சிறிது நேரம் சும்மா இருந்தால்,- நாங்கள் சொல்கிறபடி கேட்டால்,- உங்கள் இருவருடைய உயிருக்கும் அபாயம் இல்லை, சத்தம் போட்டீர்களானால் இருவரும் உயிர் இழக்க நேரிடும். முதலில், இந்த அதிகப்பிரசங்கி இளைஞன் இறந்து விழுவான்!" என்றது ஒரு குரல்.

அது ரவிதாஸனுடைய குரல் என்று வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.

"இளவரசி! சற்றுச் சும்மா இருங்கள்! இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள், என்னதான் சொல்லுகிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்!" என்று சொன்னான் வந்தியத்தேவன்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com