Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 5
கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

25. கோட்டை வாசலில்


மந்திராலோசனை நடந்த இடத்திலிருந்து வெளிவந்த பூதிவிக்கிரம கேசரி, அங்கேயிருந்த குதிரை மேல் தாவி ஏறினார். தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி விரைந்து சென்றார். அதே சமயத்தில் யானை ஒன்று வடக்கு வாசலை நெருங்கி வந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். யானையின் மேல் யானைப்பாகன் ஒருவனும், இரண்டு ஸ்திரீகளும் இருந்தார்கள். யானைப்பாகன் தன் கையில் வைத்திருந்த கொம்பை வாயில் வைத்துச் சிறிது நேரம் முழக்கினான். பின்னர் 'கிறீச்' என்று உச்ச ஸ்தாயியில் ஒலித்த குரலில், கணீர் என்றும் தெளிவாகவும் அவன் கூறியதாவது:- "ஈழத்துப்பட்ட பராந்தகன் சிறிய வேளாரின் செல்வப் புதல்வி, கொடும்பாளூர்ப் பெரிய வேளார் சேநாதிபதி பூதிவிக்கரம கேசரியின் வளர்ப்புக் குமாரி, பழையாறை இளைய பிராட்டி குந்தவை தேவியின் அருமைத் தோழியரான வானதி தேவியார் வருகிறார்! பராக்! பராக்! வழி விடுங்கள்!"

கோட்டை வாசலுக்குச் சமீபத்தில் அகழிக் கரையை அடைந்ததும் அவன் மறுபடியும் ஒரு முறை கொம்பை வாயில் வைத்து ஊதினான். அதன் எதிரொலி நிற்பதற்குள்ளே மறுபடியும் அவன் முன்போன்ற கிறீச்சுக் குரலில் கூறியதாவது:- "கொடும்பாளூர் இளவரசி வானதி தேவியார் இளைய பிராட்டியிடமிருந்து சக்கரவர்த்திக்குச் செய்தி கொண்டு வருகிறார். பெரிய பழுவேட்டரையரிடமிருந்து சின்னப் பழுவேட்டரையருக்கு முக்கியமான செய்தி கொண்டுவருகிறார்! கோட்டைக் கதவைத் திறவுங்கள்! பராக்! பராக்! கொடும்பாளூர் இளவரசிக்கும், அவருடைய தோழி பூங்குழலி அம்மைக்கும் உடனே வழி விடுங்கள்! கோட்டைக் கதவைத் திறந்து விடுங்கள்!"

இவ்வாறு யானைப்பாகன் கூவியதைக் கேட்டுச் சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி அடைந்த வியப்பு இவ்வளவு என்று சொல்ல முடியாது. அந்த யானைப்பாகன் குரலை எங்கேயோ, எப்போதோ கேட்டது போலிருக்கிறதே? அவன் யார்? யானைப்பாகன் யாராயிருந்தால் என்ன? யானை மேல் இருப்பது வானதிதானா என்பதையல்லவா முதலில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்? அவள் கோட்டைக்குள் போகாமல் தடுத்து நிறுத்த வேண்டுமே? வானதியாயிருந்தால் மிக்க நல்லதாய்ப் போயிற்று! இந்தச் சிக்கல்கள் எல்லாம் தீரும் வரையில் குழந்தை நம்மிடத்தில் இருப்பதே நல்லது...! இவ்வாறு எண்ணிக் கொண்டே சேனாதிபதி குதிரையைத் தட்டி விட்டுக்கொண்டு போய் யானையின் சமீபத்தை அடைந்தார். அவர் பின்னொடு விரைந்து வந்த வீரர்களில் ஒரு வீரன் தீவர்த்தி கொண்டு வந்தான். அதன் வெளிச்சத்தில் யானை மீதிருந்தவர்களைப் பார்த்தபோது பெண்கள் இருவரும் சிறிய வேளாரின் புதல்வி வானதியும், பூங்குழலியுந்தான் என்று தெரிய வந்தது.

"குழந்தாய்! வானதி!" என்று அவர் ஏதோ சொல்வதற்குள் யானைப்பாகன் மறுபடியும் கொம்பு ஊதத் தொடங்கினான். அவனை எப்படி நிறுத்தச் செய்வது? நல்ல வேளையாக இதற்குள் யானைமேலிருந்த பெண்கள் தங்களை நெருங்கி வந்த குதிரை மேல் இருப்பவர் யார் என்று உற்றுப் பார்த்தார்கள். உடனே, வானதி, யானைப்பாகனிடம் ஏதோ சொல்லி அவன் கொம்பு முழக்கத்தை நிறுத்திவிட்டு, "பெரியப்பா! தாங்கள்தானா? நான் கேள்விப்பட்டது உண்மைதான்!" என்றாள்.

"ஆம், குழந்தாய்! நான்தான். ஆனால் இது என்ன விசித்திரம்? செய்தி கொண்டு வருவதற்கு நீதானா அகப்பட்டாய்? இளையபிராட்டிக்கு வேறு யாரும் அகப்படாமலா போய் விட்டார்கள்! அதிலும் இப்பேர்ப்பட்ட நிலைமையில்!" என்றார் சேனாதிபதி.

"ஆம், பெரியப்பா! இப்பேர்ப்பட்ட நிலைமையாயிருப்பதினாலேதான் என்னைச் செய்தி கொண்டு போக அனுப்பினார். தாங்கள் சைன்யத்துடன் வந்து தஞ்சைக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டிருப்பதாகச் செய்தி கிடைத்தது. வேறு யாரையாவது அனுப்பினால் ஒருவேளை தங்கள் படை வீரர்கள் தடுத்து நிறுத்திவிடக்கூடும். தாங்கள் அநுமதித்தாலும், கோட்டைக்குள்ளே இருப்பவர்கள் கதவைத் திறந்துவிட மறுத்துவிடலாம். என்னை அனுப்பி வைத்தால் இரண்டு காரியத்துக்கும் அனுகூலமாயிருக்கலாம் என்று அனுப்பியுள்ளார்கள். துணைக்குப் பூங்குழலியையும் அனுப்பினார்கள்..."

"ஆமாம், ஆமாம்! இந்த ஓடக்காரப் பெண் வெகு கெட்டிக்காரி. அது முன்னமே எனக்குத் தெரிந்த விஷயந்தான். ஆனால் நீ அப்படி என்ன செய்தி கொண்டு வந்தாய்? இரவுக்கிரவே தூது அனுப்ப வேண்டிய அவ்வளவு அவசரமான செய்தி என்ன?"

"அவசரமான செய்திதான், பெரியப்பா! பொன்னியின் செல்வரைப் பற்றிச் சக்கரவர்த்திக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறேன்."

"ஆகா! பொன்னியின் செல்வரைப் பற்றியா? அவரைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?"

"ஏன்? எவ்வளவோ தெரியும். அவர் வீராதி, வீரர், சூராதி சூரர், காவேரியில் அமுங்காதவர், கடலில் விழுந்தாலும் முழுகாதவர், அண்டினோரைக் கைவிடாதவர், ஆபத்தில் உதவி செய்தவர்களிடம் நன்றி மறவாதவர், அன்னை தந்தையிடம் பக்தி உள்ளவர், தமக்கையார் சொல்லைத் தட்டாதவர், இராஜ்யத்தில் ஆசையில்லாதவர்..."

"போதும்! போதும்! அதையெல்லாம் நான் கேட்கவில்லை. இளவரசர் சௌக்கியமாயிருக்கிறாரா? இப்போது அவர் எங்கேயிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா?"

"சௌக்கியமாக இருக்கிறார், பெரியப்பா! இப்போது எங்கேயிருக்கிறார் என்றும் தெரியும். ஆனால் அதைத் தங்களிடம் கூற முடியாது!"

"என்ன? சொல்ல முடியாதா? என்னிடம் கூடவா சொல்ல முடியாது? நீதானா பேசுகிறாய், வானதி?"

"ஆம், பெரியப்பா! நான்தான் பேசுகிறேன். இளவரசர் இருக்குமிடத்தை ஒருவரிடமும் சொல்வதில்லையென்று வாக்களித்திருக்கிறேன்."

சேநாதிபதி பூதிவிக்கிரமகேசரிக்கு ஆக்கிரோஷம் பொங்கி ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. "பெண்ணே! இளைய பிராட்டியிடம் அனுப்பினால் உன்னை நல்ல முறையில் வளர்ப்பாள் என்று நம்பினேன். இவ்வளவு பிடிவாதக்காரியாக வளர்த்து விட்டாளே? போதும், போதும்! நீ பழையாறையில் இருந்தது போதும். கீழே இறங்கு! உன்னைக் கொடும்பாளூருக்கு அனுப்பிவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்" என்றார்.

"பெரியப்பா! எனக்கும் இந்தத் தஞ்சாவூர் மண்ணை மிதிக்கவே இஷ்டமில்லை. ஆகையினால்தான் யானை மேல் ஏறி உட்கார்ந்திருக்கிறேன். இந்த யானைக்கு அடிக்கடி மதம் பிடித்து விடுகிறது. இன்று காலையில் ஒருவனைத் தூக்கி எறிந்துவிட்டது. ஆகையினால், அருகில் ரொம்ப நெருங்கி வராதீர்கள். நான் கொண்டு வந்திருக்கும் செய்திகளைச் சொன்ன பிறகு நானே தங்களிடம் வந்து விடுகிறேன். என்னைக் கொடும்பாளூருக்கு அனுப்பினாலும் அனுப்பி விடுங்கள். இப்போது மட்டும் என்னைத் தடுத்து நிறுத்தாதீர்கள்!" என்றாள் வானதி.

பூதி விக்கிரமகேசரி சிறிது யோசித்துவிட்டு, "சரி, மகளே! நான் உன்னைத் தடுத்து நிறுத்தாமல் விட்டு விடுகிறேன். கோட்டைக் கதவு திறக்காவிட்டால் என்ன செய்வாய்?" என்றார்.

"பெரியப்பா! நீங்கள் இவ்வளவு பெரிய படைகளுடன் வந்திருக்கிறீர்களே? எதற்காக? கோட்டைக் கதவு திறக்காவிட்டால், உங்கள் படைகளை ஏவிக் கதவை உடைத்துத் திறந்து விடச் செய்யுங்கள்!" என்றாள் வானதி.

பூதி விக்கிரமகேசரி இதைக் கேட்டுப் பெருமிதம் அடைந்தார். "மகளே! கொடும்பாளூர்க் கோமகள் பேச வேண்டியவாறு பேசினாய். அவசியம் ஏற்பட்டால் அவ்விதமே செய்வேன். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படாது. இளைய பிராட்டியிடமிருந்து சக்கரவர்த்திக்குச் செய்தி கொண்டு வந்திருக்கும் உன்னைத் தடுத்து நிறுத்த இந்தச் சின்னப் பழுவேட்டரையன் யார்? அவ்விதம் அவன் ஒருநாளும் செய்ய மாட்டான். ஆனால் எனக்காகவும் சின்னப் பழுவேட்டரையனிடம் ஒரு செய்தியைச் சொல்! நீ கோட்டைக்குள் இருக்கும்போது உனக்கு ஏதாவது சிறிய தீங்கு நேர்ந்தாலும் அவனுடைய குலத்தைப் பூண்டோ டு அழித்து விடுவேன் என்று சொல்! நானும் என்னுடைய துணைவர்களும் சக்கரவர்த்தியை நேரில் பார்த்து அவருடைய விருப்பத்தை அவருடைய வாய்மொழியாகத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறோம் என்றும் சொல்! நாளைப் பகல் பொழுது போவதற்குள் சக்கரவர்த்தியை நாங்கள் தரிசிக்க அவன் வகை செய்யாவிட்டால், கோட்டையைத் தாக்கத் தொடங்கி விடுவோம் என்று தெரியப்படுத்து!" என்றார்.

"அப்படியே ஆகட்டும், பெரியப்பா!" என்றாள் வானதி.

மறுபடியும் யானைப்பாகன் கொம்பு முழக்கினான். "கொடும்பாளூர் இளவரசிக்கு வழிவிடுங்கள்! கோட்டைக் கதவைத் திறந்து விடுங்கள்!" என்று கூவினான்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com