Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 3
கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

6. பூங்குழலியின் திகில்


தாழைப் புதரின் மறைவில் பூங்குழலி மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றாள். மந்திரவாதியும், நந்தினியும் மெல்லிய குரலில் பேசிய போதிலும், அவர்களுடைய பேச்சு பெரும்பாலும் அவள் காதில் விழுந்தது.

இளவரசரைக் கடல் கொண்டது என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று நந்தினி கூறியதற்கு மந்திரவாதி "ராணி! என் பேச்சில் உங்களுக்கு எப்போதுமே நம்பிக்கையிருப்பதில்லை. எதனால் இப்போது அவநம்பிக்கைப் படுகிறீர்கள்?" என்று கேட்டான்.

"இளவரசரின் ஜாதக பலத்தைப் பற்றி நீ கேட்டதில்லையா? சற்று முன்னால்கூடக் குழகர் கோவில் பட்டர் அதைப் பற்றிச் சொன்னார்."

"பைத்தியக்காரத்தனம். கிரஹங்கள், நட்சத்திரங்களின் சக்தியைக் காட்டிலும் என்னுடைய மந்திரசக்தி வலியது. அமைதி குடி கொண்டிருந்த கடலில் நான் மந்திரம் ஜபித்துச் சுழற்காற்றை வருவித்தேன் என்பது தங்களுக்குத் தெரியுமா? முதலில் அந்தக் காஞ்சிநகர் ஒற்றனும் அதை நம்பவில்லை. பிற்பாடு கடலில் முழுகி உயிரை விடும்போது, கட்டாயம் நம்பியிருப்பான்!"

"அவன் கடலில் மூழ்கி இறந்ததை நீ பார்த்தாயா?"

"நான் பார்க்காவிட்டால் என்ன? அவன் இருந்த கப்பல் தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்தேன்."

"தீப்பிடித்த கப்பலிலிருந்து அவனைத் தப்புவிக்க இளவரசர் கடலில் குதித்துப் போனாராமே?"

"போனவர் திரும்பி வந்தாரா?"

"திரும்பிப் பல்லவனுடைய கப்பலுக்கு வரவில்லை..."

"பின்னே என்ன? இரண்டு பகைவர்களும் ஒரே நாளில் பலியாவதற்காகவே வந்தியத்தேவனை உயிரோடு விட்டுவிட்டு வந்தேன்."

"நீ என்னதான் சொன்னாலும், என் மனம் நம்பவில்லை. அவர்கள் இருவரும் இன்னும் உயிரோடிருப்பதாக என் மனத்திற்குள் ஏதோ சொல்லுகிறது. பூங்குழலியை உனக்குத் தெரியுமா?"

"நன்றாய்த் தெரியும். இலங்கையில் அவள் எங்களுக்குத் தொல்லையாயிருந்தாள். அவளும் சுழற்காற்றில் போயிருக்கலாம்."

"அதுதான் இல்லை. சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு படகு தூரத்தில் வந்தது. கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து ராக்கம்மாள் பார்த்தாளாம். திடீரென்று அது மறைந்து விட்டதாம். படகில் இரண்டு மூன்று பேர் இருந்ததாகத் தோன்றியதாம்."

"அப்படியானால் தாங்கள் கிழவரை அழைத்து கொண்டு உடனே நடையைக் கட்டுங்கள். நான் இருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்."

"நாங்கள் இருந்தால் என்ன?"

"கிழவர் இருந்தால் இளவரசருக்கு இராஜ மரியாதைகள் செய்து அழைத்துக்கொண்டு போகப் பார்ப்பார், காரியமெல்லாம் கெட்டுப் போகும்."

"மந்திரவாதி! நானும்தான் கேட்கிறேன். அவர்கள் இறக்க வேண்டிய அவசியம் என்ன? மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டிவிட எல்லாரும் சம்மதித்து விட்டால்..."

"அம்மணி! பெண்புத்தியைக் காட்டிவிட வேண்டாம். காஞ்சி ஒற்றனுக்கு நம் இரகசியம் எல்லாம் தெரியும். அவன் இளவரசரிடமும், சொல்லியிருப்பான். பொழுது விடிவதற்குள் நீங்கள் புறப்பட்டுச் சொல்லுங்கள். ராக்கம்மா! பூங்குழலி அவர்களை அழைத்து வந்தால் காட்டில் எங்கே வைத்திருப்பாள்?"

"மறைந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. அதுதான் அவளுடைய அந்தரங்க வாசஸ்தலம். காஞ்சி ஒற்றனை அதிலேதான் ஒரு பகல் முழுவதும் மறைத்து வைத்திருந்தாள். பிறகு அதை நான் கண்டுபிடித்தேன்."

"நல்லது; அந்த மறைந்த மண்டபம் இருக்குமிடம் எனக்கும் தெரியும். அங்கே போய்க் காத்திருக்கிறேன். ராணி! சக்கரவர்த்தி எப்படியிருக்கிறார்? ஏதாவது செய்தி உண்டா?"

"எந்தச் சக்கரவர்த்தியைப் பற்றிக் கேட்கிறாய்?"

"நோயாளி சுந்தர சோழனைச் 'சக்கரவர்த்தி' என்று இந்த வாய் ஒரு நாளும் சொல்லாது. நமது சக்கரவர்த்தியைப் பற்றித் தான் கேட்கிறேன்."

"சௌக்கியமாயிருப்பதாகப் பத்து நாளைக்கு முன்பு செய்தி கிடைத்தது. ஆகா! எத்தனை நாள் ஆயிற்றுப் பார்த்து...?"

"சரி,சரி! சீக்கிரம் புறப்படுங்கள். அந்த முட்டாள் பல்லவன் என்ன செய்யப் போகிறானாம்."

"அவனையும் தஞ்சைக்கு அழைத்துப் போகிறோம்."

"அவனிடம் ஜாக்கிரதையாயிருங்கள்."

"அவனைப் பற்றிக் கவலையில்லை. நான் காலால் இட்டதை அவன் தலையால் செய்யக் காத்திருக்கிறான்!"

"இருந்தாலும், ஜாக்கிரதையாயிருப்பது நல்லது. காஞ்சி ஒற்றன் வந்தியத்தேவனிடம் தாங்கள் கொஞ்சம் ஏமாந்து போனீர்கள் அல்லவா?"

"அது உண்மைதான்; அதனாலேயே அவனை உயிரோடு மறுபடியும் பார்க்க விரும்புகிறேன்."

"அந்த ஆசையை அடியோடு விட்டுவிடுங்கள், ராணி!"

இவ்வாறு பேசிக்கொண்டே, அவர்கள் அங்கிருந்து நகரத் தொடங்கினார்கள் என்று தெரிந்தது. பூங்குழலி தன்னை அவர்கள் பார்க்காத வண்ணம் இன்னும் நன்றாய்ப் புதரில் மறைந்து கொண்டாள். நல்ல வேளையாக, அவள் இருந்த பக்கம் அவர்கள் வரவில்லை. வேறு திசையாகச் சென்று விட்டார்கள்.

பூங்குழலி தற்செயலாக ஒட்டுக்கேட்ட விஷயங்கள் அவளுக்குப் பெருந்திகிலை உண்டு பண்ணிவிட்டன. பொன்னியின் செல்வரை எத்தனைவித அபாயங்கள் சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிய போது அவளுடைய கைகால்கள் நடுங்கின; கண்கள் இருண்டன; தொண்டை வறண்டது; உள்ளம் குழம்பியது. தான் விட்டுவிட்டு வந்த படகை உடனே போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலியதாக முன் நின்றது; படகை விட்டு வந்த திசையை நோக்கி விரைந்து சென்றாள்.

இளவரசர் கொடிய விஷ சுரத்தினால் பீடிக்கப்பட்டிருந்தார். அவரைச் சிறைப்படுத்திப் போவதற்குப் பழுவேட்டரையர் காத்திருந்தார். அவரைக் கொன்று விடுவதற்குக் கொலையாளிகள் காத்திருந்தனர். அவர்களுக்குத் துணையாக இந்தப் பெண்ணுருக் கொண்ட மோகினிப் பிசாசு இருந்தது. பார்த்திபேந்திரனும் அவளுடைய மாய வலையில் விழுந்து விட்டான். இளவரசரைத் தான் அழைத்துச் சென்று பத்திரமாய் வைத்திருக்கலாம் என்று எண்ணிய மறைந்த மண்டபம் கூட இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இவ்வளவு அபாயங்களிலிருந்தும் இளவரசரைப் பாதுகாக்கும் பொறுப்புத் தன் தலையில் சுமந்திருப்பதாகப் பூங்குழலி உணர்ந்தாள். ஆகையினாலேயே அவளுடைய மூளை குழம்பிற்று. இதுகாறும் அவளுடைய வாழ்நாளில் என்றுமில்லாத ஓர் அநுபவம் நேர்ந்தது. அதாவது காட்டில் வழி தவறி விட்டோ மோ என்ற பீதி உண்டாயிற்று.

'சுற்றிச் சுற்றிப் புறப்பட்ட இடத்துக்கே வந்து கொண்டிருக்கிறோமோ' என்ற எண்ணம் தோன்றியது. அப்படிச் சுற்றிவரும்போது இளவரசரின் எதிரிகள் யாரேனும் எதிர்ப்பட்டு விட்டால் என்ன செய்வது? அவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வது? எப்படி அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்வது?...

'இல்லை, இல்லை! சரியான வழியிலேதான் வந்திருக்கிறோம். இதோ கால்வாய் தெரிகிறது. படகை விட்டு வந்த இடம் அதோ அந்த மூலையில் இருக்கிறது.' பூங்குழலி அவ்விடத்தை நோக்கிப் பாய்ந்து ஓடினாள். அவளுடைய நெஞ்சு அடித்துக் கொள்ளாமல் நின்று விட்டது. ஏனெனில், அவள் விட்டிருந்த இடத்தில் படகைக் காணவில்லை! 'ஐயோ! படகு எங்கே போயிருக்கும்?'

'ஒருவேளை தான் இல்லாத சமயத்தில் பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கேயே வந்திருப்பார்களோ? வந்து இளவரசரையும் வந்தியத்தேவனையும் சிறைப்படுத்திக் கொண்டு போயிருப்பார்களோ? அப்படி நடந்திருந்தால் கூடப் பாதகமில்லை. அதை விடப் பயங்கரமான சம்பவம் நிகழ்ந்திருக்குமோ? வந்தியத்தேவன் இளவரசரைத் தூக்கிக் கொண்டு மறைந்த மண்டபத்தைத் தேடிப் போயிருப்பானோ? அப்படியானால் அங்கே கொலைஞர்கள் காத்திருப்பார்களே? அடடா! என்ன தவறு செய்து விட்டோ ம்?...'

அந்த மறைந்த மண்டபத்துக்கு உடனே போய்ப் பார்க்க வேண்டுமென்ற பரபரப்பு பூங்குழலியின் மனத்தில் குடி கொண்டது. காட்டு வழியில் ஓட்டம் பிடித்து ஓடினாள். மறுபடியும் அந்தப் பழைய சந்தேகம்: 'வழி தவறி விட்டோ மோ என்ற சந்தேகம். சுற்றிச் சுற்றி வருகிறோமோ என்ற மயக்கம்.'

'அது என்ன? ஐயோ! அது என்ன? ஏதோ காலடிச் சத்தம் போலிருக்கிறதே? யாரோ நம்மைத் தொடர்ந்து வருவது போலிருக்கிறதே? யாராயிருக்கும்? எதற்காக இருக்கும்? ஒரு வேளை அந்தப் பயங்கர மந்திரவாதி தானா? அப்படியானால் ஏன் பயப்படவேண்டும்? இடுப்பில் செருகியுள்ள கத்தியை எடுத்துக்கொண்டால் போயிற்று! யாராயிருந்தால்தான் என்ன? எதற்காக ஓட வேண்டும்?...'

'இல்லை, இல்லை! ஓட வேண்டியதுதான். இச்சமயம் யாருடனும் சண்டை பிடிக்கும் சமயம் அன்று. கையில் வலிவு இல்லை; கத்தியும் குறி தவறிப் போகும். உயிரை எப்பாடு பட்டாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நமக்கு இத்தருணம் ஏதேனும் நேர்ந்தால் இளவரசருடைய கதியாதாகும்? முன்னமே அந்த வந்தியத்தேவன் எச்சரித்தானே? உயிரைப் பத்திரமாய்க் காப்பாற்றிக் கொண்டு வருவதாகச் சொன்னோமே? அதை நிறைவேற்ற வேண்டியதுதான்?'

பூங்குழலி மேலும் மேலும் நெருக்கமான காட்டில் புகுந்து ஓடினாள். ஆனால் துரத்தி வந்தவன் மேலும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். பூங்குழலி போன வழியில் மரங்களிலிருந்த பட்சிகள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடின. வளைகளிலிருந்து நரிகள் கிளம்பி ஓடின. தூங்கிய காட்டுப் பன்றிகள் விழித்தெழுந்து விழுந்தடித்து ஓடின. மான் ஒன்று விர்ரென்று பாய்ந்து வந்து அவள் மேலேயே இடித்துப் புடைத்துக்கொண்டு ஓடியது. இவ்வளவுக்கும் மத்தியில் பின்னால் தொடர்ந்து வந்தவன் விட்டபாடாக இல்லை. அவனுடைய காலடிச் சத்தமும் அவன் ஓடியதால் பெருமூச்சு விடும் சத்தமும் கேட்டுக் கொண்டேயிருந்தன. பூங்குழலி ஓடிஓடிச் சலித்துப் போனாள். அந்தச் சலிப்பு அளவில்லாத கோபமாக மாறியது. வருகிறவன் யாராயிருந்தாலும் அவனை ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவு செய்தாள்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com