Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 3
கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

22. "அது என்ன சத்தம்?"



ஓடையருகில் வந்ததும், படகில் வீற்றிருந்த அரசிளங்குமரி குந்தவைதான் என்பதை வந்தியத்தேவன் நன்கு தெரிந்து கொண்டான். ஆழ்வார்க்கடியான் அவ்விடத்தில் நிற்கவே, வந்தியத்தேவனும் தயங்கி நின்றான்.

"அப்பனே! ஏன் நிற்கிறாய்! இளைய பிராட்டி வெகு நேரமாய் உனக்காகக் காத்திருக்கிறார். படகில் ஏறியதும் 'இளவரசர் வந்து விட்டார்; பத்திரமாய் இருக்கிறார்' என்ற நல்ல சமாசாரத்தை முதலில் சொல்! உன்னுடைய வீரப் பிரதாபங்களை அளந்து கொண்டு வீண்பொழுது போக்காதே! நான் திரும்பிப் போகிறேன். பழையாறையில் இன்றைக்கு நாம் கலவரப் பிசாசை அவிழ்த்து விட்டுவிட்டோ ம். அதை மறுபடியும் பிடித்துக் கூண்டில் அடைக்க முடியுமா என்று பார்க்கிறேன். உன்னுடைய தடபுடல் சாகஸங்களினால் எத்தனை தொந்தரவுகள் நேரிடுகின்றன?" என்று ஆழ்வார்க்கடியான் சொல்லிவிட்டு, வந்தவழியாக விரைந்து திரும்பிச் சென்றான்.

வந்தியத்தேவன் மனத்தில் ஒரு பெரும் வியப்பு ஏற்பட்டது. இவன் எப்படி எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டிருக்கிறான்! இத்தனைக்கும் நம்மை ஒரு விவரமும் கேட்கவில்லை! வெறும் ஊகமா? அல்லது எல்லாம் அறிவானா? ஆண்டிகளில் பரம்பரை ஆண்டி என்றும், பஞ்சத்துக்கு ஆண்டி என்றும் இரண்டு வகை உண்டு; ஒற்றர்களிலும் அப்படி இரு வகை உண்டு போலும். நான் அவசரத்துக்கு ஒற்றன் ஆனேன்; ஆகையால் அடிக்கடி சங்கடத்தை வருவித்துக் கொள்கிறேன். இந்த வைஷ்ணவன், பரம்பரை ஒற்றன்போலும்; அதனால் ஒரு விதப் பரபரப்புமில்லாமல் சாவதானமாகத் தன் வேலையைச் செய்துவருகிறான். ஆனால் யாருக்காக இவன் வேலை செய்கிறான்? இவன் தன்னைப் பற்றிக் கூறியதெல்லாம் உண்மைதானா?

இவ்விதம் யோசித்துக்கொண்டே ஓடை நீர்க் கரைக்கு வந்த வந்தியத்தேவன், ஓடத்திலிருந்த இளவரசியின் முகத்தைப் பார்த்தான். ஆழ்வார்க்கடியானை மறந்தான். தான் போய்வந்த காரியத்தை மறந்தான். உலகத்தை மறந்தான் தன்னையுமே மறந்தான்.

ஆகா, இந்தப் பெண்ணின் முகம் தன்னைவிட்டுச் சிறிது நேரம் கூடப் பிரிந்திருக்கவில்லை. கனவிலும் நனவிலும், புயலிலும் மலையிலும், காட்டிலும் கடல் நடுவிலும் தன்னுடன் தொடர்ந்து வந்தது. ஆயினும் என்ன விந்தை! நேரில் பார்க்கும்போது இந்தப் பெண் முகத்தின் அழகு எதனால் அதிகப்பட்டுக் காண்கிறது! ஏன் தொண்டையை வந்து அடைக்கிறது! நெஞ்சில் ஏன் இந்தப் படபடப்பு?

சுய நினைவு இல்லாமலே வந்தியத்தேவன் தண்ணீரில் சில அடிகள் இறங்கிச் சென்று, ஓடத்தில் ஏறிக்கொண்டான். இளவரசி ஓடக்காரனைப் பார்த்துச் சமிக்ஞை செய்தாள், ஓடம் நகரத் தொடங்கியது. வந்தியத்தேவனுடைய உள்ளமும் ஊஞ்சலாடத் தொடங்கியது.

"நிமித்தக்காரா! இளவரசர்களுக்கு மட்டுந்தான் நீ நிமித்தம் சொல்வாயா? எனக்கும் சொல்வாயா? நிமித்தம் எப்படிச் சொல்வாய்? வானத்துக் கிரஹங்களையும், நட்சத்திரங்களையும் பார்த்துச் சொல்வாயா? அல்லது காக்கை, குருவிகளைப் பார்த்துச் சொல்வாயா? கை ரேகை பார்த்துச் சொல்வாயா?.. முகக்குறி பார்த்துத்தான் சொல்வாய் போலிருக்கிறது. இல்லாவிட்டால், ஏன் என் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? இப்படிச் செய்தாயானால் உயர்குலத்துப் பெண்கள் யாரும் உன்னிடம் நிமித்தம் கேட்க முன்வர மாட்டார்கள்!" என்று அரசிளங்குமரி கூறியது வந்தியத்தேவன் செவிகளில் இனிய கிண்கிணி நாதமாகக் கேட்டது.

"அம்மணி! நிமித்தம் பார்ப்பதற்காகத் தங்கள் முகத்தைப் பார்க்கவில்லை. எங்கேயோ, எப்போதோ பார்த்த முகம்போல் இருக்கிறதே என்று ஞாபகப்படுத்திக்கொள்ள முயன்றேன்..."

"தெரியும், தெரியும்! நீ மிக்க மறதிக்காரர் என்று எனக்குத் தெரியும். நான் ஞாபகப்படுத்துகிறேன். ஏறக்குறைய நாற்பது நாளைக்கு முன்னால், குடந்தை ஜோதிடர் வீட்டில் முதன் முதலாகப் பார்த்தீர். பிறகு, அன்றைக்கே அரசலாற்றங்கரையில் பார்த்தீர்."

"அம்மணி! நிறுத்துங்கள்! தங்கள் வார்த்தையை நான் நம்ப முடியவில்லை. நாற்பது நாளைக்கு முன்புதானா தங்களை முதன்முதலாகப் பார்த்தேன்! நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்கவில்லை? நூறு நூறு ஜென்மங்களில் நூறாயிரம் தடவை தங்களைப் பார்க்கவில்லையா? மலை அடிவாரத்தில் பார்க்கவில்லையா? குன்றின் உச்சியிலே பார்க்கவில்லையா? நீர்ச்சுனையின் ஓரத்தில் பார்க்கவில்லையா? அடர்ந்த காட்டின் மத்தியில் கொடும் புலியினால் துரத்தப்பட்டு ஓடி வந்த தங்களை நான் காப்பாற்றவில்லையா? வேல் எறிந்து அந்தப் புலியைக் கொல்லவில்லையா? அப்போது நான் காட்டில் வேட்டையாடித் திரிந்த வேடுவனாயிருந்தேன்! விதவிதமான வர்ணச் சிறகுகள் உள்ள அழகழகான கிளிகளை வலை போட்டுப் பிடித்துக் கொண்டுவந்து கொடுத்தேன். தாங்கள் அந்தக் கிளிகளை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு வானத்தில் பறக்க விட்டு விட்டுக் கலகலவென்று சிரித்தீர்கள். ஒரு சமயம் நான் மீன் பிடிக்கும் வலைஞனாயிருந்தேன். தூரதூரங்களிலுள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் சென்று, வெள்ளி மீன்கள், தங்க மீன்கள், மரகத மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்து கொடுத்தேன். அவற்றைத் தாங்கள் வாங்கிகொண்டு மறுபடியும் ஓடும் தண்ணீரில் விட்டு, அவை துள்ளி நீந்திச் செல்வதைப் பார்த்து மகிழ்ந்தீர்கள். தொலை தூரங்களிலுள்ள கடல்களுக்குச் சென்று கடலின் ஆழத்தில் மூச்சுப்பிடித்து முழுகி முத்துக்களையும், பவழங்களையும் சேகரித்துக் கொண்டு வந்து கொடுத்தேன். தாங்கள் அவற்றைக் கையினால் அளந்து பார்த்துவிட்டு, ஊரிலுள்ள சிறுவர் சிறுமிகளை அழைத்து அவர்களுடைய சின்னஞ்சிறு கைகளிலே முத்துக்களையும், பவழங்களையும் சொரிந்து அனுப்பினீர்கள். முந்நூறு வருஷங்கள் வளர்ந்த இலந்தை மரத்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையும் இலந்தைக் கனியைக் காத்திருந்து பறித்து வந்து, தங்களிடம் சமர்ப்பித்தேன். அதைத் தாங்கள் வளர்த்த நாகணவாய்ப் பறவைக்குக் கொடுத்து, அது கனியைக் கொத்திக் கொத்தித் தின்னுவதைப் பார்த்துக் களித்தீர்கள். தேவலோகத்துக்குப் போய் அங்குள்ள மந்தார மலர்களையும், முன் பொழிந்தேன். 'எங்கள் கொல்லை வேலியில் பூக்கும் முல்லை மலரின் அழகுக்கும் மணத்துக்கும் இவை ஈடாகுமா?' என்று சொல்லிவிட்டீர்கள். தேவேந்திரனிடமிருந்து அவன் அணியும் ஒப்பில்லா ரத்தின ஹாரத்தை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். 'ஒழுக்க மற்ற இந்திரன் அணிந்த மாலையை நான் கையினாலும் தொடுவேனா?' என்று சொல்லிவிட்டீர்கள். கைலாசத்துக்குச் சென்று, பார்வதி தேவியின் முன்னால் தவங்கிடந்து, தேவி பாதத்தில் அணியும் சிலம்பை வாங்கிக் கொண்டுவந்தேன். தங்கள் பாதங்களில் சூட்டி விடுவதாகச் சொன்னேன். 'ஐயையோ! ஜகன் மாதாவின் பொற்பாதச் சிலம்பு என் காலிலே படலாமா? என்ன அபசாரம்? திரும்பக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வா!' என்றீர்கள் போர்க்களத்துக்குச் சென்று அறுபத்துநாலு தேசங்களின் அரசர்களையும் வென்று, அவர்களுடைய மணிமகுடங்களையெல்லாம் சேகரித்துக் கொண்டு வந்து தங்கள் முன் காணிக்கை செலுத்தினேன். தாங்கள், அந்த மணிமகுடங்களைக் கால்களால் உதைத்துத் தள்ளினீர்கள். 'ஐயோ! தங்கள் மெல்லிய மலர்ப் பாதங்கள் நோகுமே?' என்று கவலைப் பட்டேன். இளவரசி! இவையெல்லாம் உண்மையா இல்லையா? அல்லது நாற்பது நாளைக்கு முன்பு முதன்முதலாகத் தங்களை நான் பார்த்தது தான் உண்மையா?" என்றான் வந்தியத்தேவன். அப்படியும் அவன் பேசி முடித்து விட்டதாகக் காணப்பட்டவில்லை.

"தேவி! இன்னொரு ஞாபகம் வருகிறது. ஒரு சமயம் வெள்ளி ஓடத்தில் நாம் ஏறி, தங்கப் பிடிப்போட்ட தந்தத் துடுப்புகளைப் பிடித்துக்கொண்டு, வானக் கடலில் வெண்ணிலா அலைகளைத் தள்ளிக்கொண்டு, பிரயாணம் செய்தோம்..." என்று ஆரம்பித்தான்.

"ஐயையோ! இந்த நிமித்தக்காரனுக்கு நன்றாய்ப் பைத்தியம் பிடித்துவிட்டது போலிருக்கிறது படகைத் திருப்பிக் கரைக்குக் கொண்டு போகவேண்டியதுதான்!" என்றாள் இளவரசி.

"இல்லை, தேவி, இல்லை! சற்று முன்னால் இந்த ஓடைக் கரைக்கு வந்துசேரும் வரையில் என் அறிவு தெளிவாகத்தானிருந்தது. இல்லாவிட்டால், இந்தப் பழையாறை நகருக்குள் பிரவேசிப்பதற்கு நான் உபாயம் கண்டுபிடித்திருக்க முடியுமா? மதுராந்தகத் தேவரிடம் நிமித்தக்காரன் என்று சொல்லி, அதை நம்பும்படியும் செய்து, அரண்மனைக்கு வந்திருக்க முடியுமா? வைத்தியர் மகனிடமிருந்துதான் அவ்வளவு எளிதில் தப்பி வந்திருக்க முடியுமா? இந்தப் படகில் ஏறித் தங்கள் திருமுகத்தைப் பார்த்தவுடனேதான், மது உண்டவனைப்போல் மதிமயங்கிப் போய்விட்டேன்!" என்று சொன்னான் வந்தியத்தேவன்.

"ஐயா, அப்படியானால் என் முகத்தைத் தாங்கள் பார்க்க வேண்டாம். இந்த ஓடையின் தெளிந்த நீரைப் பாரும். நீல வானத்தைப்பாரும், ஓடைக்கரையில் வானளாவி வளர்ந்திருக்கும் மரங்களைப் பாரும், அரண்மனை மாடங்களைப் பாரும், பளிங்குக்கல் படித்துறைகளைப் பாரும், இந்த ஓடையில் பூத்திருக்கும் ஆம்பல் மலர்களையும், செங்கழுநீர்ப் பூக்களையும் பாரும், அல்லது இந்தச் செவிட்டு ஓடக்காரனின் முகத்தையாவது சற்றே பாரும். அவ்விதம் பார்த்துக்கொண்டே தாங்கள் போன காரியம் என்ன ஆயிற்று; காயா, பழமா என்று சொல்லும். இளவரசரை அழைத்து வந்தீரா, சௌக்கியமா இருக்கிறாரா. எங்கே விட்டு வந்தீர், யாரிடம் விட்டு வந்தீர் என்று முதலில் தெரியப்படுத்தும், பிறகு, இங்கிருந்து புறப்பட்டு முதல் நடந்தவை எல்லாவற்றையும் சொல்லும்!" என்று இளவரசி கூறினாள்.

அதற்கு வந்தியத்தேவன், "தேவி! தங்களிடம் ஒப்புக் கொண்டு போன காரியத்தை வெற்றிகரமாக முடித்திரா விட்டால், தங்களிடம் திரும்பி வந்து என் முகத்தைக் காட்டியிருப்பேனா? இளவரசரை இலங்கையிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தேன். அதற்கேற்பட்ட ஆயிரம் இடையூறுகளையும் வெற்றிகொண்டு அழைத்து வந்தேன். இளவரசர் சுகமாயிருக்கிறார் என்று நான் சொல்லமுடியாது. நான் அவரை விட்டுப் பிரியும்போது அவருக்குக் கடுமையான சுரம். ஆனால் பத்திரமான கைகளில் அவரை ஒப்படைத்து வந்திருக்கிறேன். ஓடக்காரப் பெண் பூங்குழலியிடமும், பூக்காரச் சிறுவன் சேந்தன் அமுதனிடமும் இளவரசரை விட்டு வந்திருக்கிறேன். அவர்கள் இளவரசரைக் காப்பாற்றுவதற்காக நூறாயிரம் தடவை வேண்டுமென்றாலும் தங்கள் உயிரைக்கொடுக்கக்கூடியவர்கள்!" என்றான்.

அச்சமயம் தூரத்தில் பயங்கரமான, குழப்பமான, அநேகாயிரம் குரல்களின் ஒருமித்த ஓலம்போன்ற சத்தம் எழுந்தது. சத்தம் வந்த திசையை அரசிளங்குமரியும், வந்தியத்தேவனும் பயத்தோடும் கவலையோடும் நோக்கினார்கள்.

"அது என்ன ஆரவாரம்? கோபங்கொண்ட ஜனத்திரளின் கூக்குரல் போல் அல்லவா இருக்கிறது?"

"ஆம்; அப்படித்தான் தோன்றுகிறது!" என்றான் வந்தியத்தேவன்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com