Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 3
கல்கியின் பொன்னியின் செல்வன்

மூன்றாம் பாகம் : கொலை வாள்

11. கொல்லுப்பட்டறை


வந்தியத்தேவன் குதிரையைத் தட்டி விட்டான். பழையாறையைக் குறியாக வைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பழையாறையிலிருந்து வந்த பாதை ஒருவாறு ஞாபகம் இருந்தபடியால் யாரையும் வழிகூடக் கேளாமல் உத்தேசமாகத் திசை பார்த்துக் கொண்டு சென்றான். முதலில் கொஞ்ச தூரம் காட்டுப் பாதை வழியே சென்றான். குதிரை இதனால் மிகவும் கஷ்டப்பட்டுப் போனதை அறிந்தான். வல்லவரையனுக்கும் களைப்பு அதிகமாகவே இருந்தது. அவன் சிறிது நேரமாவது அயர்ந்து தூங்கிப் பல தினங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது கண்ணை மூடிக்கொண்டு ஆடி விழுந்ததைத் தவிர நிம்மதியாக ஓரிடத்தில் படுத்துத் தூங்கினோம் என்பது கிடையாது. பழையாறைக்குப் போய் இளவரசியிடம் செய்தியைச் சொல்லிவிட்டால், அப்புறம் அவனுடைய பொறுப்புத் தீர்ந்தது; நிம்மதியாகத் தூங்கலாம். வெகு நேரம் தூங்கலாம்; ஏன், சென்று போன தினங்களுக்கும் சேர்த்து நாள் கணக்கில் தூங்க வேண்டும் என்று திட்டமிட்டான்.

இளவரசி குந்தவையிடம், "தாங்கள் கூறிய பணியை நிறைவேற்றிவிட்டேன்" என்று சொல்லும்போது தனக்கு ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை அவன் எண்ணிப் பார்த்தான். தேவியின் முகம் அதைக்கேட்டு எவ்வண்ணம் மலர்ந்து பொலியும் என்பதையும் நினைத்தான். அந்த நினைவு அவனுக்கு ரோமாஞ்சனம் உண்டு பண்ணியது.

இன்னொரு விஷயமும் அவனுக்கு நினைவு வந்தது. காஞ்சியிலிருந்து புறப்பட்டதிலிருந்து எத்தனை பொய்யும் புனை சுருட்டும் அவன் சொல்லியிருக்கிறான்? அவசியம் நேரிட்டதனால்தான் கூறினான். ஆயினும் அதையெல்லாம் நினைக்கும்போது அவனுக்கு உள்ளமும் உடலும் குன்றிப் போயின. இளவரசர் அருள்மொழிவர்மரோடு சிறிது காலம் பழகியதனால் அவனுடைய மனப்போக்கே மாறிப் போயிருந்தது. இராஜரீக காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்குச் சாணக்கிய தந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று அவன் கருதியிருந்தான். அத்தகைய இராஜரீக தந்திரங்களின் மூலமாக அவனுடைய முன்னோர்கள் இழந்துவிட்ட ராஜ்யத்தைத் திரும்பிப் பெறலாம் என்ற ஆசையும் அவனுக்கு இருந்தது. அந்த எண்ணமெல்லாம் இப்போது மாறிவிட்டது. இளவரசர் அருள்மொழிவர்மரின் நேர்மையையும், சத்திய தீரத்தையும் பார்த்த பிறகு அவனுக்குப் பொய் புனை சுருட்டுகளில் வெறுப்பே உண்டாகிவிட்டது. அவரைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு மந்திரவாதியின் காது கேட்க நேற்றிரவு அவன் கூறிய பொய்யையும் எண்ணிக் கொண்டான். அதனால் ஏதாவது விபரீதம் நேராமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தபோது அவன் நெஞ்சு துணுக்கமுற்றது. அதை வேறு யாராவது கேட்டிருந்தால்? ஒருவேளை குந்தவை தேவியிடமே யாரேனும் சொல்லி வைத்தால்? இளைய பிராட்டி நம்பிவிட மாட்டாள்! ஆயினும் எவ்வளவு பெரிய ஆபத்து?

இனி, இவ்வாறெல்லாம் இல்லாததைப் புனைந்து கூறுவதையே விட்டுவிடவேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும்; அதனால் கஷ்டம் வந்தால் சமாளிக்க வேண்டும். அந்த வீர வைஷ்ணவனைப் போன்றவர்களும், ரவிதாசனைப் போன்றவர்களும் ஒற்றர் வேலை செய்யட்டும். நமக்கு என்னத்திற்கு அந்தத் தொல்லை? வாளின் துணை கொண்டு நமக்குக் கிடைக்கும் வெற்றி கிடைக்கட்டும். அதுவே போதும், அதனால் உயிரை இழந்தாலும் சரிதான். தந்திர மந்திரங்களையெல்லாம் இனிவிட்டுவிட வேண்டியதுதான்.

இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே சென்றதில் குதிரையின் வேகம் தடைப்பட்டதை அவன் சிறிது நேரம் கவனிக்கவில்லை. ஏன், குதிரை மீதிலிருந்து சிந்தனை செய்து கொண்டே போனதில் கொஞ்சம் கண்ணயர்ந்தும் விட்டான். குதிரை ஓரிடத்தில் தடுமாறிக் குனிந்தபோது அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். குதிரை தனது முன்னங்கால் ஒன்றைத் தரையில் ஊன்றி வைக்க முடியாமல் தத்தளித்தது தெரிந்தது. உடனே கீழே இறங்கினான், குதிரையைத் தட்டிக் கொடுத்து விட்டு ஊனமடைந்ததாகத் தோன்றிய முன்னங்காலை எடுத்துப் பார்த்தான். அதன் அடிப்புறத்தில் ஒரு சிறிய கூறிய கல் பொத்துக்கொண்டிருந்தது. அதை லாவகமாக எடுத்து எறிந்தான். நல்லவேளை; பெரிய காயம் ஒன்றும் படவில்லை. மறுபடியும் குதிரையைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி விட்டு அதன் முதுகின்மீது ஏறிக் கொண்டான். கப்பலில் அரபு நாட்டார் பேசிக் கொண்டது நினைவு வந்தது:

"தமிழ் நாட்டார் கொடூரமானவர்கள்; அறிவும் இல்லாதவர்கள்! குதிரைகளின் குளம்புக்குக் கவசம் அடிக்காமல் வெறுங்காலினால் ஓடச் செய்கிறார்கள். அப்படி ஓடும் குதிரைகள் எத்தனை நாள் உயிரோடிருக்கும்?"

இதை நினைத்துக்கொண்டே வந்தியத்தேவன் குதிரையை ஓட்டினான். வீரர்கள் போர்களத்துக்குப் போகும்போது மார்பிலே கவசம் தரிப்பார்கள். குதிரைக் குளம்புக்கு இரும்புக் கவசம் போடுவது அதிசயமான காரியந்தான். ஆயினும் அம்மாதிரி வேறு தேசங்களில் செய்வதுண்டு என்று முன்னமே கேள்விப்பட்டிருந்தான். முதன்முதலாக எதிர்ப்படும் கொல்லுப்பட்டறையில் இதைப்பற்றிக் கேட்க வேண்டியதுதான். முடியுமானால் இந்தக் குதிரையின் குளம்புக்கே கவசம் அடித்துப் பார்க்கலாம். இல்லாவிடில், இது பழையாறை வரை போய்ச் சேர்வதே கடினம். நடுவில் இது விழுந்துவிட்டால் வேறு குதிரை சம்பாதிக்க வேண்டும். எப்படிச் சம்பாதிப்பது? யாரிடமாவது திருடத்தான் வேண்டும்! சீச்சீ! அந்த நினைவே வந்தியத்தேவனுக்கு வெட்கத்தை உண்டாக்கியது.

காட்டுப் பாதையிலிருந்து உத்தேசமாகக் குதிரையைத் திசை மாற்றிவிட்டுக் கொண்டு போய் வந்தியத்தேவன் இராஜபாட்டையை அடைந்தான். வந்தது வரட்டும்; இனிமேல் இராஜபாட்டை வழியாகத் தான் போகவேண்டும். தன்னைத் தெரிந்தவர்கள் யாரும் இந்தப் பக்கத்தில் இருக்க முடியாது. பழுவேட்டரையர் பரிவாரங்கள் பின்னாலேதான் வரும். மந்திரவாதியும் அப்படித்தான். ஆகையால் அபாயம் ஒன்றுமில்லை. மேலும், இராஜபாட்டையோடு போனால் கொல்லுப் பட்டறை எங்கேயாவது இருக்கும். அதில் குதிரைக் குளம்புக்கு இரும்புக் கவசம் போட முடியுமா என்று பார்க்கலாம்.

வந்தியத்தேவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. சிறிது தூரம் சென்றதும், ஒரு கிராமம் தென்பட்டது. கிராமத்தில் ஏதோ ஒருவிதக் கிளர்ச்சி ஏற்பட்டிருந்ததாகத் தோன்றியது. ஒரு பக்கத்தில் வீதிகளிலும், வீடுகளிலும் தோரணங்கள் கட்டி அலங்கரித்திருந்தார்கள். ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் இந்தப் பக்கமாய் வரப்போகிறார் என்று அறிந்து இப்படி ஊரை அலங்காரம் செய்திருக்கலாம். பழுவேட்டரையரும், அவர் பரிவாரமும் வருவதற்குள் தான் வெகுதூரம் போய்விடலாம் என்பது நிச்சயம்.

மற்றொரு பக்கத்தில் கிராமத்து ஜனங்கள் - ஸ்திரீகள், புருஷர்கள், வயோதிகர்கள், சிறுவர் சிறுமிகள் அனைவரும் அங்கங்கே கும்பல் கும்பலாக நின்று கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். விஷயம் என்னவாயிருக்குமென்று அவனால் ஊகிக்க முடியவில்லை. அவர்களில் சிலர் குதிரையில் வருகிறவனைக் கண்டதும் அவனை நிறுத்தும் எண்ணத்தோடு அருகில் வந்தார்கள். வந்தியத்தேவன் அதற்கு இடங்கொடாமல் குதிரையைத் தட்டி விட்டுக் கொண்டு மேலே போனான். வீண் வம்புகளில் அகப்பட்டுக் கொள்ள அவன் இஷ்டப்படவில்லை.

கிராமத்தைத் தாண்டியதும் சாலை ஓரத்தில் கொல்லுப் பட்டறை ஒன்று இருக்கக் கண்டான். அதைக் கடந்து மேலே செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. குதிரையை நிறுத்திவிட்டுப் பட்டறைக்குள் சென்றான்.

பட்டறைக்குள் கொல்லன் ஒருவன் வேலை செய்து கொண்டிருக்கக் கண்டான். ஒரு சிறுவன் துருத்து ஊதிக் கொண்டிருந்தான். வந்தியத்தேவன் உள்ளே பிரவேசித்த அதே சமயத்தில் இன்னொரு மனிதன் பின்பக்கமாக மறைந்ததாகவும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் இதிலெல்லாம் அவன் கவனம் சொல்லவில்லை. கொல்லன் கையில் வைத்துக் கொண்டிருந்த வாள் அவனுடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தது. அது ஓர் அபூர்வமான வாள். பட்டறையில் வைத்துக் கொல்லன் அதைச் செப்பனிட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அதன் ஒரு பகுதி பளபளவென்று வெள்ளியைப் போலப் பிரகாசித்தது. இன்னொரு பகுதி நெருப்பிலிருந்து அப்போது தான் எடுக்கப்பட்டிருந்த படியால் தங்க நிறச் செந்தழல் பிழம்பைப்போல் ஜொலித்தது.

"வாள் என்றால் இதுவல்லவா வாள்!" என்று வந்தியத்தேவன் தன் மனத்திற்குள் எண்ணி வியந்தான்.


முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com