Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

5. நடுக்கடலில்

வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயிற்றிலிருந்து குடல்கள் மேலெழும்பி அவன் மார்பை அடைத்தன. பிறகு இன்னும் மேலே கிளம்பி அவன் தொண்டையையும் அடைத்துக் கொண்டன. அவனுடைய தேகத்தில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. பழுக்கக் காய்ந்த ஒரு லட்சம் ஊசி முனைகள் அவன் தேகமெல்லாம் துளைத்தன - அத்தகைய பயங்கரக் காட்சி அவன் கண்முன்னே காணப்பட்டது.

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே பத்து, இருபது, நூறு அக்கினி குண்டங்கள் தோன்றின. அவற்றிலிருந்து புகை இல்லை; வெளிச்சமும் இல்லை; கீழே விறகு போட்டு எரித்து உண்டாகும் தீப்பிழம்புகளும் அல்ல. வெறும் நெருப்புப் பிண்டங்கள். பூமியிலிருந்து எப்படியோ எழுந்து அவை நின்றன. திடீரென்று அவற்றில் சில பிண்டங்கள் மறைந்தன. வேறு சில தீப்பிண்டங்கள் புதிதாக எழுந்து நின்றன.

ஒரு பிரம்மாண்டமான கரிய இருள் நிறங் கொண்ட ராட்சதன், தனியாகத் தலை ஒன்று இல்லாமல் வயிற்றிலேயே வாய்கொண்ட கபந்தனைப் போன்ற ராட்சதன். ஆனால் அவன் வயிற்றில் ஒரு வாய் அல்ல; அநேக வாய்கள். அந்த வாய்களை அவன் அடிக்கடி திறந்து மூடினான். திறக்கும்போது வயிற்றிலிருந்து தீயின் ஜ்வாலை வாய்களின் வழியாக வெளியே வந்தது. மூடும் போது மறைந்தது.

இந்தக் காட்சியைக் கண்ட வந்தியத்தேவனுடைய ஒவ்வொரு ரோமக்கால் வழியாகவும் அவனுடைய உடம்பின் ரத்தம் கசிவது போலிருந்தது. அப்படிப்பட்ட பீதி அவனை என்றைக்கும் ஆட்கொண்டதில்லை. பெரிய பழுவேட்டரையரின் பாதாள நிலவறையிலே கூட இல்லை. அவன் பின்னால் "ஹா ஹா ஹா!" என்ற ஒரு சிரிப்புக் கேட்டது திரும்பிப் பார்த்தான்.

பூங்குழலிதான்! வேறு ஒரு சந்தர்ப்பத்திலே யென்றால், அவளுடைய அந்தச் சிரிப்பே அவனுக்கு அளவிலாத பயங்கரத்தை உண்டாக்கியிருக்கும். இப்போது அதே சிரிப்பு தைரியத்தை அளித்தது. இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உள்ள பெண் ஒருத்தி அவன் பக்கத்தில் நிற்கிறாள் என்பது பெரும் அபாயத்தில் ஒரு பற்றுக்கோல் போல உதவியது. "பார்த்தாயா என் காதலர்களை?" என்று பூங்குழலி கேட்டாள்.

"இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகள்தான் என் காதலர்கள். இவர்களைப் பார்த்துச் சல்லாபம் செய்வதற்குத்தான் நள்ளிரவில் இந்த இடத்துக்கு நான் வருகிறேன்," என்றாள்.

இந்தப் பெண்ணுக்கு நன்றாகப் பித்துப் பிடித்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவளுடைய உதவியைக் கொண்டு இலங்கைக்குப் போகிறது நடக்கிற காரியமா? - இவ்வாறு வந்தியத்தேவன் எண்ணினான். அவனுடைய உள் மனத்திலிருந்து வேறு ஏதோ ஒரு எண்ணம் வெளிவரப் போராடிக் கொண்டிருந்தது. அது என்ன? இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பற்றிய ஏதோ ஒரு விஷயந்தான்.

"உன்னுடைய சிநேகிதன் சேந்தன்அமுதனால் இத்தகைய காதலர்களோடு போட்டியிட முடியுமா?" என்று பூங்குழலி கூறியது கிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம் அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது. ஆ! கடைசியில் ஒரு பெரிய போராட்டம்; மனதிற்குள்ளேதான் இதோ ஞாபகம் வந்துவிட்டது...

கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் தண்ணீர் வெகுகாலம் தேங்கி நின்று சதுப்பு நிலமானால், அத்தகைய இடங்களில் இரவில் இம்மாதிரி தோற்றங்கள் ஏற்படும். பூமிக்குள்ளேயிருந்து கந்தகம் கலந்த வாயு வெளியில் வரும் போது நெருப்புப் பிழம்பு வருவது போலிருக்கும். சில சமயம் நீடித்து நிற்கும். சில சமயம் குப்குப் என்று தோன்றி மறையும். இந்த இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, அறியாத மக்கள் பயப்படுவார்கள். கொள்ளிவாய்ப் பிசாசு என்று பயங்கரப் பெயர் கொடுத்துப் பீதி அடைவார்கள்...

இப்படிப் பெரியோர் சொல்லி அவன் கேள்விப்பட்டிருந்தது, ஞாபகத்துக்கு வந்தது. பிறகு அவனுடைய அறிவுக்கும் பயத்துக்கும் போர் நடந்தது. அறிவு வெற்றி பெற்றது. ஆனால் அதையெல்லாம் இச்சமயம் இந்தப் பிரமை பிடித்த பெண்ணிடம் சொல்லிப் பயனில்லை. எப்படியாவது அவளுக்கு நல்ல வார்த்தை சொல்லி அழைத்துக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.

"பெண்ணே! உன் காதலர்கள் எங்கும் போய்விடமாட்டார்கள் இங்கேதான் இருப்பார்கள். நாளைக்கும் அவர்களை வந்து பார்க்கலாம் அல்லவா? வீட்டுக்குப் போகலாம், வா!" என்றான்.

அதற்குப் பூங்குழலி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை; விம்மி அழத் தொடங்கினாள்.

'இது என்ன தொல்லை?' என்று வந்தியத்தேவன் எண்ணினான். பின்னர் சற்று நேரம் சும்மா இருந்தான்.

"பெண்ணே! நாம் போகலாமா?" என்று மீண்டும் கேட்டான்.

விம்மல் நிற்கவில்லை.

வந்தியத்தேவனுக்கு அலுத்துப் போய்விட்டது.

"சரி; உன் இஷ்டம் போல் செய்! எனக்குத் தூக்கம் வருகிறது. நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டு இறங்கத் தொடங்கினான்.

பூங்குழலி உடனே விம்மலை நிறுத்தினாள். மேட்டிலிருந்து இறங்கத் தொடங்கினாள். நாலே பாய்ச்சலில் வந்தியத்தேவனுக்கு முன்னால் கீழே போய் நின்றாள்.

வந்தியத்தேவன் ஓடிப்போய் அவளைப் பிடித்தான்.

இருவரும் கலங்கரை விளக்கை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

'இந்தப் பித்துப் பிடித்த பெண்ணை நம்பிப் படகில் ஏறுவதாவது? கடலைக் கடப்பதாவது? - ஆயினும் வேறு வழி இல்லையென்று தெரிகிறதே? ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்து கொள்ளப் பார்க்கலாமா?'

"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே! அதைப் பற்றி உன் கருத்து என்ன?" என்று பூங்குழலி கேட்டாள்.

"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்!" என்றான் வந்தியத்தேவன்.

"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும் என்று சொல்கிறார்களே!"

"அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள்."

"நீ என்ன சொல்லுகிறாய்?"

"நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்."

சற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.

பிறகு பூங்குழலி, "சக்கரவர்த்திக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்கிறார்களே, அது உண்மைதானே?" என்றாள்.

'இவள் அவ்வளவு பித்துக்குளிப் பெண் அல்ல' என்று வந்தியத்தேவன் எண்ணிக்கொண்டான். கொஞ்சம் அவனுக்கு நம்பிக்கை பிறந்தது.

"நானே என் கண்ணால் பார்த்தேன். சக்கரவர்த்தி படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். இரண்டு கால்களிலும் உணர்ச்சியே கிடையாது. ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. அவரைக் குணப்படுத்த மூலிகை கொண்டு வரத்தானே நான் வந்திருக்கிறேன். பெண்ணே! எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா?" என்று கேட்டான்.

அதற்கு மறுமொழி சொல்லாமல், "சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடிருக்க மாட்டார், சீக்கிரத்தில் இறந்துபோய் விடுவார் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?" என்று கேட்டாள் பூங்குழலி.

"நீ இச்சமயம் உதவி செய்யாவிட்டால் அப்படி நடந்தாலும் நடந்துவிடும். இலங்கையில் ஓர் அபூர்வ சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். அதைக் கொண்டு வந்தால் சக்கரவர்த்தி பிழைத்துக் கொள்வாராம். நீ படகு தள்ளிக்கொண்டு இலங்கைக்கு வருவாயா?"

"சக்கரவர்த்தி ஒருவேளை இறந்து போனால் அடுத்தபடி யார் பட்டத்துக்கு வருவார்கள்?" என்று பூங்குழலி கேட்டது வந்தியத்தேவனைத் தூக்கி வாரிப் போட்டது.

"பெண்ணே! எனக்கும், உனக்கும் அதைப்பற்றி என்ன? யார் பட்டத்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை?"

"ஏன் கவலை இல்லை? நீயும் நானும் இந்த ராஜ்யத்தின் பிரஜைகள் அல்லவா?"

'இந்தப் பெண் பித்துப் பிடித்தவளே அல்ல. இவளிடம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ள வேண்டும். இவளுடைய விசித்திரமான செயல்களுக்கு வேறு காரணம் இருக்க வேண்டும்.'

"ஏன் பேசாமலிருக்கிறாய்? அடுத்த பட்டத்துக்கு யார் வருவார்கள்?" என்று பூங்குழலி மீண்டும் கேட்டாள்.

"ஆதித்த கரிகாலருக்குத்தான் யுவராஜா பட்டம் கட்டியிருக்கிறது. அவர்தான் நியாயமாக அடுத்த பட்டத்துக்கு வர வேண்டும்."

"மதுராந்தகர், - அவருக்கு உரிமை ஒன்றுமில்லையா?"

"அவர்தான் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லி விட்டாரே?"

"முன்னே அப்படிச் சொன்னார்; இப்போது ராஜ்யம் வேண்டும் என்று சொல்கிறாராமே?"

"அவர் சொன்னால் போதுமா? பிரஜைகள் எல்லாரும் ஒப்புக்கொள்ள வேண்டாமா?"

"பெரிய மனிதர்கள் பலர் அவர் கட்சியில் இருக்கிறார்களாமே?"

"அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். இவ்வளவும் உன் காதுவரையில் வந்து எட்டியிருப்பதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது."

"சுந்தரசோழர் திடீரென்று இறந்துபோனால் என்ன ஆகும்?"

"தேசமெல்லாம் பெருங்குழப்பம் ஆகிவிடும். அதைத் தடுப்பதற்குத்தான் உன் உதவி இப்போது தேவையாயிருக்கிறது..."

"நான் என்ன உதவியைச் செய்ய முடியும்?"

"முன்னமேயே சொன்னேனே. நான் அவசரமாக மூலிகை கொண்டு வர இலங்கைத் தீவுக்குப் போக வேண்டும். அதற்கு நீ படகு வலித்துக் கொண்டு வரவேண்டும்."

"என்னை எதற்காக அழைக்கிறாய்? ஒரு பெண் பிள்ளையைப் படகு தள்ளும்படி கேட்க வெட்கமாயில்லையா?"

"வேறு யாரும் இல்லை என்று உன் தந்தை சொல்கிறார். உன் அண்ணன் கூட நேற்றுப் போய் விட்டானாமே?"

"அவன் போனால் என்ன? உனக்கு இரண்டு கைகள், உன்னோடு வந்தவனுக்கு இரண்டு கைகள் இல்லையா?"

"எங்களுக்குப் படகு வலிக்கத் தெரியாது..."

"படகு வலிப்பது என்ன மந்திர வித்தையா! துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது!"

"திசை தெரிய வேண்டும் அல்லவா? நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்...?"

"நடுக்கடலில் திசை தெரியவிட்டால் முழுகிச் சாகுங்கள்! அதற்கு நான் என்ன செய்யட்டும்!"

கலங்கரை விளக்கின் அருகில் அவர்கள் வந்து விட்டார்கள். வந்தியத்தேவனும் அத்துடன் பேச்சை நிறுத்தி விட விரும்பினான். மேலும் பேச்சை வளர்த்துப் பூங்குழலியின் மறுப்பை உறுதிப்படுத்திவிட அவன் விரும்பவில்லை. அவள் அவ்வளவு கண்டிப்பாக மறுமொழி சொன்ன போதிலும், அவளுடைய குரலும் பேச்சின் தோரணையும் அவனுடைய உள்ளத்தில் சிறியதொரு நம்பிக்கைச் சுடரை உண்டாக்கியிருந்தன.

இரண்டாம் முறை படுத்த பிறகு வெகு நேரம் வந்தியத் தேவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்களினால் அவனுடைய உள்ளம் வெகுவாகக் குழம்பிக் கொண்டிருந்தது. நாலாம் ஜாமத்தின் ஆரம்பத்திலேதான் தூங்கினான்.

தூக்கத்தில் வந்தியத்தேவன் கனவு கண்டான். பாய்மரம் விரித்த சிறிய படகில் பூங்குழலியும் அவனும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். நாலாபுறமும் கடல்; எங்கு நோக்கினாலும் ஜலம். இனிய பூங்காற்று; படகு அக்காற்றில் மிதப்பது போலப் போய்க் கொண்டிருந்தது. பூங்குழலியின் முகம் அழகே வடிவமாகப் பொலிந்தது. சுருண்ட மயிர் நெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்தது. சேலைத் தலைப்புப் பறந்தது. எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்பதெல்லாம் வந்தியத்தேவனுக்கு மறந்து போய்விட்டது. பூங்குழலியுடன் படகில் போவதற்காகவே இத்தனை நாள் பிரயாணம் செய்து வந்ததாகத் தோன்றியது. ஒன்றே ஒன்று குறைவாயிருந்தது. அது என்ன? அது என்ன? ஆ! பூங்குழலியின் பாட்டு! சேந்தன்அமுதன் சொல்லியிருந்தான் அல்லவா?

"பெண்ணே! உன் பவழ வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாட மாட்டாயா?" என்றான் வந்தியத்தேவன்.

"என்ன சொன்னாய்?" என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள். ஆகா! அந்தப் புன்னகை ஏழு உலகமும் பெறாதா?

"உன் கனிவாயைத் திறந்து ஒரு கீதம் இசைக்க மாட்டாயா என்றேன்."

"கீதம் இசைத்தால் எனக்கு என்ன தருவாய்?"

"உன் அருகில் வந்து உன் அழகிய கன்னத்தில்..."

பூங்குழலி உடனே தன் மடியிலிருந்து ஒரு கூரிய கத்தியை எடுத்துக்கொண்டாள். கத்தி பிடித்த கையை ஓங்கினாள்.

"இதோ பார்! அந்தப் பாய்மரத்துக்கு அப்பால் ஒரு அணுவளவு நீ வந்தாலும் உன்னை இந்தக் கத்தியால் குத்தி விடுவேன். கடல் மீன்கள் மிகப் பசியோடிருக்கின்றன!" என்றாள்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com