Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

46. பொங்கிய உள்ளம்


இளவரசர் யானையின் காதில் மந்திரம் ஓதினார், யானை படுத்தது. இருவரும் அவசரமாக அதன் முதுகிலிருந்து இறங்கினார்கள். கரைதட்டி மணலில் புதைந்திருந்த மரக்கலத்தின் அருகில் சென்று பார்த்தார்கள். அந்தக் கப்பலின் கதி பார்க்கப் பரிதாபமாயிருந்தது. பாய் மரங்கள் தாறுமாறாக உடைந்து கிடந்தன. ஒருவேளை அந்த உடைந்த கப்பலுக்குள்ளேயோ அல்லது அக்கம் பக்கத்திலோ யாராவது இருக்கக் கூடும் என்று சந்தேகித்தார்கள். இளவரசர் கையைத் தட்டிச் சத்தம் செய்தார். பூங்குழலி வாயைக் குவித்துக்கொண்டு கூவிப் பார்த்தாள் ஒன்றுக்கும் பதில் இல்லை. இருவரும் தண்ணீரில் இறங்கிச் சென்று கப்பலின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு ஏறினார்கள். கப்பலின் அடிப் பலகைகள் பிளந்து தண்ணீரும் மணலும் ஏராளமாக உள்ளே வந்திருந்தன. ஒருவேளை அதை நீரிலே தள்ளி விட்டுக் கடலில் செலுத்தலாமோ என்ற ஆசை நிராசையாயிற்று. அந்தக் கப்பலை அங்கிருந்து தண்ணீரில் நகர்த்துவது இயலாத காரியம். கரையில் இழுத்துப் போடுவதற்கு ஒரு யானை போதாது; பல யானைகளும் பல ஆட்களும் வேண்டும். அதைச் செப்பனிடப் பல மாதங்கள் மரக்கலத் தச்சர்கள் வேலை செய்தாக வேண்டும்.

சிதைந்து கிடந்த பாய்மரங்களிடையே சிக்கியிருந்த புலிக்கொடியை இளவரசர் எடுத்துப் பார்த்தார். அது அவருக்கு மிக்க மனவேதனையை அளித்தது என்று நன்றாய்த் தெரிந்தது.

"பூங்குழலி! நீ பார்த்த கப்பல்களில் ஒன்றுதானா இது?" என்று கேட்டார்.

"அப்படித்தான் தோன்றுகிறது. இன்னொரு கப்பல் அடியோடு முழுகித் தொலைந்து போய்விட்டது போலிருக்கிறது!" என்றாள் பூங்குழலி. அவளுடைய குரலில் குதூகலம் தொனித்தது.

"என்ன இவ்வளவு உற்சாகம்?" என்று இளவரசர் கேட்டார்.

"தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு போவதற்கு வந்த கப்பல்கள் முழுகித் தொலைந்து போனால் எனக்கு உற்சாகமாக இராதா?" என்றாள் பூங்குழலி.

"நீ உற்சாகப்படுவது தவறு, சமுத்திர குமாரி! ஏதோ விபரீதமாக நடந்து போயிருக்கிறது. புலிக்கொடி தாங்கிய மரக்கலத்துக்கு இந்தக் கதி நேர்ந்தது எனக்கு வேதனை அளிக்கிறது. இது எப்படி நேர்ந்தது என்றும் தெரியவில்லை. இதில் இருந்த வீரர்களும் மாலுமிகளும் என்ன ஆனார்கள்? அதை நினைத்தால் என் மனம் மேலும் குழம்புகிறது. இன்னொரு கப்பல் முழுகிப் போய் இருக்கவேண்டும் என்றா சொல்லுகிறாய்?"

"முழுகிப் போயிருக்கலாம் என்று சொல்கிறேன். முழுகிப் போயிருந்தால் ரொம்ப நல்லது."

"நல்லதில்லவேயில்லை, அப்படி ஒரு நாளும் இராது. இந்தக் கப்பலின் கதியைப் பார்த்துவிட்டு இன்னொரு கப்பல் அப்பால் நிறையத் தண்ணீர் உள்ள இடத்துக்குப் போயிருக்கலாம். இந்தக் கப்பல் ஏன் இவ்வளவு கரையருகில் வந்திருக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. சோழ நாட்டு மாலுமிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கப்பல் விட்டுப் பழக்கமுள்ள பரம்பரையில் வந்தவர்கள். அவர்கள் இத்தகைய தவறு ஏன் செய்தார்கள்? எப்படியும் இதிலிருந்தவர்கள் தப்பிப் பிழைத்திருக்க வேண்டும். ஒன்று மற்றக் கப்பலில் ஏறிப் போயிருக்க வேண்டும்! வா! போய்ப் பார்க்கலாம்!"

"எங்கே போய்ப் பார்ப்பது, இளவரசே! சூரியன் அஸ்தமித்து நாலாபுறமும் இருள் சூழ்ந்து வருகிறது!" என்றாள் பூங்குழலி.

"சமுத்திரகுமாரி! உன் படகை எங்கே விட்டு வந்தாய்?"

"என் படகு ஏறக்குறைய இந்த ஆற்றின் நடுமத்தியில் அல்லவா இருக்கிறது? யானை மீது வந்தபடியால், அதுவும் நீங்கள் யானையைச் செலுத்தியபடியால், இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டோ ம். படகில் ஏறியிருந்தால் நள்ளிரவுக்குத் தான் இங்கு வந்திருப்போம்."

"சரி! நன்றாக இருட்டுவதற்குள் இந்த நதிக்கரை யோரமாகப் போய்ப் பார்க்கலாம் வா! இங்குள்ள மரங்கள் கடல் நன்றாய்த் தெரியாமல் மறைக்கின்றன. ஒருவேளை இன்னொரு கப்பலைக் கடலில் சற்றுத் தூரத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம் அல்லவா?"

யானையை அங்கேயே விட்டு விட்டு இருவரும் நதிக்கரையோரமாகக் கடலை நோக்கிப் போனார்கள். சீக்கிரத்திலேயே கடற்கரை வந்துவிட்டது. கடலில் அமைதி குடிகொண்டிருந்தது. அலை என்பதற்கு அறிகுறியும் இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே பச்சை வர்ணத்தகடாகத் தோன்றியது. கடலின் பச்சை நிறமும் வானத்தின் மங்கிய நீல நிறமும் வெகுதூரத்திற்கு அப்பால் ஒன்றாய்க் கலந்தன.

மரக்கலமோ, படகோ ஒன்றும் தென்படவில்லை. ஒன்றிரண்டு பறவைகள் கடலிலிருந்து கரையை நோக்கிப் பறந்து வந்தன. அவ்வளவுதான்! சிறிது நேரம் அங்கே நின்று நாலாபுறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு "சரி! புகைந்த மரக்கலத்துக்குப் போகலாம்!" என்றார் இளவரசர்.

இருவரும் வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினார்கள்.

"பூங்குழலி! நீ எனக்குச் செய்த உதவியை என்றும் மறக்கமாட்டேன். ஆனால் இங்கே நாம் பிரிந்து விடவேண்டியதுதான்" என்றார் இளவரசர்.

பூங்குழலி மௌனமாயிருந்தாள். "நான் சொல்கிறது காதில் விழுந்ததா? அந்தப் புதைந்த கப்பலிலேயே நான் காத்திருக்கத் தீர்மானித்து விட்டேன். சேநாதிபதி முதலியவர்கள் எப்படியும் இந்த இடத்தைத் தேடிக் கொண்டு வந்து சேர்வார்கள். அவர்களுடன் கலந்தாலோசித்து மேலே செய்ய வேண்டியதைப் பற்றி முடிவு செய்வேன். ஆனால் உனக்கு இனி இங்கே வேலை இல்லை. உன் படகைத் தேடிப் பிடித்துப் போய்விடு. என் தந்தையைப் பற்றி நான் கூறியதை நினைவில் வைத்துக்கொள்..."

பூங்குழலி தயங்கி நின்றாள் அங்கிருந்த மரம் ஒன்றின் மீது சாய்ந்தாள். அதன் தாழ்ந்த கிளை ஒன்றை அவள் பிடித்துக் கொண்டாள்.

"என்ன சமுத்திரகுமாரி? என்ன?"

"ஒன்றுமில்லை, இளவரசே! இங்கே தங்களிடம் விடை பெற்றுக் கொள்கிறேன், போய் வாருங்கள்!"

"கோபமா, பூங்குழலி!"

"கோபமா? தங்களிடம் கோபங்கொள்ள இந்தப் பேதைக்கு என்ன அதிகாரம்? அவ்வளவு அகம்பாவம் நான் அடைந்து விடவில்லை."

"பின்னர் ஏன் திடீரென்று இங்கே நின்று விட்டாய்?"

"கோபம் இல்லை, ஐயா! களைப்புத்தான்! நான் உறங்கி இரண்டு நாள் ஆகிறது. இங்கேயே சற்றுப் படுத்திருந்து விட்டு என் படகைத் தேடிக் கொண்டு போகிறேன்."

அது பௌர்ணமிக்கு மறுநாள். ஆகையால் அச்சமயம் கீழைக்கடலில் சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தது. இரண்டொரு மங்கிய கிரணங்கள் பூங்குழலியின் முகத்திலும் விழுந்தன.

இளவரசர் அந்த முகத்தைப் பார்த்தார். அதில் குடிகொண்டிருந்த சோர்வையும் களைப்பையும் பார்த்தார். கண்கள் பஞ்சடைந்து இமைகள் தாமாக மூடிக்கொள்வதையும் பார்த்தார். சந்திரன் உதயமாகும்போது செந்தாமரை குவிதல் இயற்கைதான். ஆனால் பூங்குழலியின் முகத்தாமரை அப்போது குவிந்தது என்று மட்டும் சொல்வதற்கில்லை. அது வாடி வதங்கிச் சோர்ந்து போயிருந்தது.

"பெண்ணே! தூங்கி இரண்டு நாளாயிற்று என்றாயே? சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்று?" என்றார்..

"சாப்பிட்டும் இரண்டு நாளைக்கு மேல் ஆயிற்று தங்களுடன் இருந்த வரையில் பசியே தெரியவில்லை."

"என் மூடத்தனத்தை என்னவென்று சொல்வது? இன்று பகல் நாங்கள் எல்லாரும் வயிறு புடைக்க விருந்துண்டோ ம். 'நீ சாப்பிட்டாயா?' என்று கூடக் கேட்கத் தவறிவிட்டேன்! வா! பூங்குழலி! என்னுடன் அந்தப் புதைந்த கப்பலுக்கு வா! அதில் தானியங்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அந்தத் தானியங்களைத் திரட்டி இன்று இரவு கூட்டாஞ்சோறு சமைத்து உண்போம். சாப்பிட்ட பிறகு நீ உன் வழியே போகலாம்..."

"ஐயா! சாப்பிட்டால் உடனே அங்கேயே படுத்துத் தூங்கி விடுவேன். இப்போதே கண்ணைச் சுற்றுகிறது."

"அதனால் என்ன? நீ அந்தப் புதைந்த கப்பலில் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு! நானும் யானையும் கரையிலிருந்து காவல் காக்கிறோம். பொழுது விடிந்ததும் நீ உன் படகைத் தேடிப்போ!"

இவ்விதம் சொல்லி இளவரசர் பூங்குழலியின் கரத்தைப் பற்றி அவளைத் தாங்குவார் போல நடத்தி அழைத்துக் கொண்டு சென்றார். உண்மையிலேயே அவளுடைய கால்கள் தள்ளாடின என்பதைக் கண்டார். அந்தப் பெண்ணின் அன்புக்கு ஈரேழு உலகிலும் இணை ஏது என்று எண்ணியபோது அவருடைய கண்களில் கண்ணீர் துளித்தது.

புதைந்திருந்த கப்பலுக்கு அவர்கள் திரும்பி வந்து சேர்ந்த போது அக்கப்பலுக்குப் பின்னால் புகை கிளம்புவதைக் கண்டு திடுக்கிட்டார்கள். ஒருவேளை அந்தக் கப்பலைச் சேர்ந்தவர்கள் எங்கேயாவது போயிருந்து திரும்பி வந்திருக்கலாம் அல்லவா? திடீரென்று அவர்கள் முன்னால் தோன்றினால் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று நேரிடக் கூடும். ஆகையால் மெள்ள மெள்ளச் சத்தமிடாமல் சென்றார்கள். வெகு சமீபத்தில் அவர்கள் போன பிறகும் பேச்சுக்குரல் ஒன்றும் கேட்கவில்லை. மறைவில் இருப்பவர்கள் யார், அவர்கள் எத்தனை பேர் என்றும் தெரியவில்லை. வள்ளிக்கிழங்கு சுடும் மணம் மட்டும் கம்மென்று வந்தது. பூங்குழலியின் நிலையை இப்போது இளவரசர் நன்கு அறிந்திருந்தபடியால் அவளுடைய பசியைத் தீர்ப்பது முதல் காரியம் என்று கருதினார். ஆகையால் வந்தது வரட்டும் என்று கப்பலைச் சுற்றிக் கொண்டு அப்பால் சென்று பார்த்தார். அங்கே அடுப்பு மூட்டிச் சமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தது ஒரு பெண்மணி என்று தெரிந்தது. யார் அந்தப் பெண்மணி என்பதும் அடுத்த கணத்திலேயே தெரிந்து போயிற்று. அந்த மூதாட்டி இவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகத் தெரியவில்லை. இவர்களை எதிர்பார்த்தவளாகவே தோன்றியது. வாய்ப் பேச்சின் உதவியின்றி இவர்களை அம்மூதாட்டி வரவேற்றாள். சற்று நேரத்துக்கெல்லாம் அமுதும் படைத்தாள். பழையாறை அரண்மனையில் அருந்திய இராஜ போகமான விருந்துகளையெல்லாம் காட்டிலும் இம்மூதாட்டி அளித்த வரகரிசிச் சோறும் வள்ளிக்கிழங்கும் சுவை மிகுந்ததாக இளவரசருக்குத் தோன்றியது.

சாப்பிட்ட பிறகு மூன்று பேரும் கப்பலின் தளத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சந்திரன் இப்போது நன்றாக மேலே வந்திருந்தான். கப்பலின் தளத்திலிருந்து பார்த்தபோது கடலும் தொண்டைமானாறும் ஒன்றாகக் கலக்கும் இடமும் அதற்கு அப்பால் பரந்த கடலும் தெரிந்தன. முன்மாலை இருள்வேளையில் பச்சைத் தாமிரத் தகட்டைப்போல் தோன்றிய கடல் இப்போது பொன் வண்ண நிலாவின் கிரணங்களினால் ஒளி பெற்றுத் தங்கத் தகடாகத் திகழ்ந்தது.

அவர்கள் இரவில் திறந்த வெளியில் சுற்றிலும் நீர் சூழ்ந்த இடத்தில் இருந்த போதிலும் புழுக்கத்தினால் உடம்பு வியர்த்தது. காற்று என்பது லவலேசமும் இல்லை. இதைப்பற்றி இளவரசர் பூங்குழலியிடம் கூறியதை அந்த மூதாட்டி எப்படியோ தெரிந்து கொண்டாள். வானத்தில் சந்திரனைச் சுற்றி ஒரு சாம்பல் நிறவட்டம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினாள்.

"சந்திரனைச் சுற்றி வட்டமிட்டிருந்தால் புயலும் மழையும் வரும் என்பதற்கு அடையாளம்" என்று பூங்குழலி விளக்கிக் கூறினாள்.

"புயல் வருகிறபோது வரட்டும்; இப்போது கொஞ்சம் காற்று வந்தால் போதும்!" என்றார் இளவரசர். பிறகு அந்த மூதாட்டி எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் அங்கு வந்து சேர்ந்திருக்க முடியும் என்று தமது வியப்பைத் தெரிவித்தார்.

"என் அத்தைக்கு இது ஒரு பெரிய காரியம் அல்ல; இதைவிட அதிசயமான காரியங்களை அவர் செய்திருக்கிறார்!" என்றாள் பூங்குழலி.

"மேலும் தங்களிடம் அவருக்கு இருக்கும் அன்புக்கும் அளவே கிடையாது. அன்பின் சக்தியினால் எதைத்தான் சாதிக்க முடியாது?" என்றாள்.

இந்தப் பேச்சையும் அந்த மூதாட்டி எப்படியோ தெரிந்து கொண்டு பூங்குழலியின் முகத்தைத் திருப்பி ஒரு திக்கைச் சுட்டிக்காட்டினாள். அங்கே அவர்கள் ஏறிவந்த யானை நின்று கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் கம்பீரமான உயர்ந்த சாதிக்குதிரை ஒன்று நின்றதைக் கண்டு இருவரும் அதிசயித்தார்கள்.

"இந்தக் குதிரையின் மீது ஏறி இவர் வந்தாரா என்ன? இவருக்குக் குதிரை ஏறத்தெரியுமா?" என்று இளவரசர் வியப்புடன் கேட்டார்.

"அத்தைக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. குதிரை ஏற்றம், யானை ஏற்றம் எல்லாம் தெரியும். படகு வலிக்கத் தெரியும். சில சமயம் காற்றில் ஏறிப் பிரயாணம் செய்வாரோ என்று நினைக்கத் தோன்றும். அவ்வளவு சீக்கிரம் ஒரிடத்திலிருந்து இன்னோரிடம் வந்து விடுவார். எப்படி வந்திருக்க முடியும் என்று நமக்கு ஆச்சரியமாயிருக்கும்."

இளவரசர் அப்போது வேறொரு ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தார். கரையில் மேய்ந்துகொண்டிருந்த குதிரையின் கம்பீரத் தோற்றந்தான் அவருக்கு அத்தகைய வியப்பை உண்டாக்கியது.

"அரபு நாட்டில் வளரும் உயர்ந்த சாதிக் குதிரைகளில் மிக உயர்ந்த குதிரையல்லவா இது? எப்படி இங்கே வந்தது? எப்படி இந்த மூதாட்டிக்குக் கிடைத்தது?" என்று தமக்குத்தாமே சொல்லிக் கொண்டார்.

பூங்குழலி சமிக்ஞை பாஷையினால் இதைப்பற்றி ஊமை ராணியிடம் கேட்டாள்.(ஆம்; 'ஊமை ராணி' என்று இனி நாம் அந்த மூதாட்டியை அழைக்கலாம் அல்லவா?) 'யானை இறவு'த் துறைக்கு பக்கத்தில் இந்தக் குதிரை கடலிலிருந்து கரையேறியது என்றும், கரை ஏறியதும் தறிகெட்டுப் பிரமித்து நின்று கொண்டிருந்ததென்றும், ஊமைராணி அதை அன்புடன் தட்டிக் கொடுத்து வசப்படுத்தி அதன்மேல் ஏறிக்கொண்டு வந்ததாகவும் தெரியப்படுத்தினாள். இதைக்கேட்ட இளவரசரின் வியப்பு மேலும் அதிகமாயிற்று.

பேசிக் கொண்டிருக்கும்போதே பூங்குழலியின் கண்ணிமைகள் மூடிக்கொள்வதை இளவரசர் கவனித்தார். "முன்னமே தூக்கம் வருகிறது என்று சொன்னாய். நீ படுத்துக் கொள்!" என்றார். அப்படிச் சொன்னதுதான் தாமதம்; பூங்குழலி அவ்விடமிருந்து சற்று விலகிச் சென்று படுத்துப் பக்கத்தில் கிடந்த கப்பல் பாய் ஒன்றை எடுத்துப் போர்த்திக் கொண்டாள். படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் தூங்கிப் போனாள். அவள் மூச்சுவிட்ட தோரணையிலிருந்து அவள் தூங்கி விட்டாள் என்று தெரிந்தது.

ஆனால் தூக்கத்திலேயே அவளுடைய வாய் மெல்லிய குரலில் பாட்டு ஒன்றை முணுமுணுத்தது.

"அலை கடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல் தான் பொங்குவதேன்?"

ஆகா! இதே பாட்டை வந்தியத்தேவன் நேற்று அடிக்கடி முனகிக் கொண்டிருந்தான்! இவளிடந்தான் கற்றுக்கொண்டான் போலும். மற்றொரு சமயம் சமுத்திரகுமாரி விழித்துக்கொண்டிருக்கும்போது பாட்டு முழுவதையும் பாடச் சொல்லிக் கேட்க வேண்டும் என்று இளவரசர் எண்ணினார். உடனே ஊமை ராணியிடம் அவர் கவனம் சென்றது. ஆகா! எல்லாருக்குந்தான் சில சமயம் அகக்கடல் பொங்குகிறது! நெஞ்சகம் விம்முகிறது! ஆனாலும் வாய்ந்திறந்து தன் உணர்ச்சிகளை என்றும் வெளியிட முடியாத இந்த மூதாட்டியின் உள்ளக் கொந்தளிப்புக்கு உவமானம் ஏது? எத்தனை ஆசாபாசங்கள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துயரங்கள், எவ்வளவு கோபதாப ஆத்திரங்கள் எல்லாவற்றையும் இவள் தன் உள்ளத்திலேயே அடக்கி வைத்திருக்கிறாள்! எத்தனை காலமாக அடக்கி வைத்திருக்கிறாள்!

ஊமை ராணி இடம் பெயர்ந்து இளவரசரின் அருகில் வந்து அமர்ந்தாள். அவருடைய தலைமயிரை அன்புடன் கோதிவிட்டாள். அவருடைய இரண்டு கன்னங்களையும் பூவைத் தொடுவது போல் தன் வலிய வைரமேறிய கரங்களினால் மிருதுவாகத் தொட்டுப்பார்த்தாள். இளவரசருக்குச் சற்று நேரம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிறகு அந்த மூதாட்டியின் பாதங்களைத் தொட்டுத் தம் கண்ணில் ஒற்றிக் கொண்டார். அவள் அந்தக் கரங்களைப் பிடித்துத் தன் முகத்தில் வைத்துக் கொண்டாள். இளவரசருடைய கரங்கள் விரைவில் அந்தப் பெண்ணரசியின் கண்ணில் பெருகிய நீரால் நனைந்து ஈரமாயின.

ஊமை ராணி சமிக்ஞையினால் இளவரசரையும் படுத்து உறங்கச் சொன்னாள். தான் காவல் இருப்பதாகவும் கவலையின்றித் தூங்கும்படியும் சொன்னாள். இளவரசருக்குத் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. ஆயினும் அவளைத் திருப்தி செய்வதற்காகப் படுத்தார். படுத்து வெகுநேரம் வரையில் அவர் உள்ளக் கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. பிறகு வெளியில் சிறிது குளிர்ந்த காற்று வந்தது. உடல் குளிரவே உள்ளம் குவிந்தது; இலேசாக உறக்கமும் வந்தது.

ஆனால் உறக்கத்திலும் இளவரசரின் மனம் அமைதியுறவில்லை. பற்பல விசித்திரமான கனவுகள் கண்டார். அரபு நாட்டுச் சிறந்த குதிரை ஒன்றின் மீது ஏறி வானவெளியில் பிரயாணம் செய்தார். மேகமண்டலங்களைக் கடந்து வானுலகில் புகுந்தார். அங்கே தேவேந்திரன் அவரை ஐராவதத்தில் ஏற்றி அழைத்துச் சென்றான். தன்னுடைய இரத்தினச் சிங்கானத்தில் அவரை உட்காரச் சொன்னான். "ஓ! இது எனக்கு வேண்டாம், இந்தச் சிங்காதனத்தில் என் பெரிய தாயார் ஊமை ராணியை ஏற்றி வைக்க விரும்புகிறேன்" என்று இளவரசர் சொன்னார். தேவேந்திரன் சிரித்து, "அவள் இங்கே வரட்டும் பிறகு பார்க்கலாம்" என்றான். தேவேந்திரன் இளவரசருக்குத் தேவாமிர்தத்தைக் கொடுத்துப் பருகச் சொன்னான். இளவரசர் அருந்திப் பார்த்துவிட்டு, "ஓ! இது காவேரித் தண்ணீர்போல் அவ்வளவு நன்றாயில்லையே?" என்றார். தேவேந்திரன் இளவரசரை அந்தப்புரத்துக்கு அழைத்துப் போனார். அங்கே தேவ மகளிர் பலர் இருந்தார்கள். இந்திராணி இளவரசரைப் பார்த்து, "இந்தப் பெண்களுக்குள்ளே அழகில் சிறந்தவள் யாரோ அவளை நீர் மணந்து கொள்ளலாம்" என்றாள். இளவரசர் பார்த்துவிட்டு, "இவர்களில் யாரும் பூங்குழலியின் அழகுக்கு அருகிலும் வரமாட்டார்கள்" என்றார். திடீரென்று இந்திராணி இளைய பிராட்டியாக மாறினாள். "அருள்மொழி! என் வானதியை மறந்துவிட்டாயா?" என்று கேட்டாள்.

இளவரசர், 'அக்கா! அக்கா! எத்தனை நாளைக்கு என்னை நீ அடிமையாக வைத்திருக்கப் போகிறாய்? உன்னுடைய அன்பின் சிறையைக் காட்டிலும் பழுவேட்டரையரின் பாதாளச் சிறைமேல்! என்னை விடுதலை செய்! இல்லாவிட்டால் விராட ராஜனுடைய புதல்வன் உத்தர குமாரனைப் போல் என்னை அரண்மனையிலேயே இருக்கச் செய்து விடு. ஆடல் பாடல்களில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். இளைய பிராட்டி குந்தவை தன் பவழச் செவ்விதழ்களில் காந்தள் மலரையொத்த விரலை வைத்து அவரை வியப்புடன் நோக்கினாள். "அருள்மொழி! நீ ஏன் இப்படி மாறிப் போய்விட்டாய்? யார் உன் மனத்தைக் கெடுத்தார்கள்? ஆம், தம்பி! அன்பு என்பது ஓர் அடிமைத்தனம்தான். அதற்கு நீ கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்" என்றாள். "இல்லை அக்கா, இல்லை! நீ சொல்வது தவறு. அடிமைத்தனம் இல்லாத அன்பு உண்டு. உனக்கு அதைக் காட்டட்டுமா? இதோ கூப்பிடுகிறேன் பார்!... பூங்குழலி! பூங்குழலி! இங்கே வா!" என்று கூவினார்.

பலபலவென்று பொழுது விடியும் சமயத்தில் பூங்குழலி குதிரையின் காலடிச்சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். ஊமை ராணி குதிரை மேல் ஏறிப் புறப்படுவதைப் பார்த்தாள். அவளைத் தடுப்பதற்காக எழுந்து ஓடினாள். அவள் கப்பலிலிருந்து இறங்கிக் கரைக்குச் செல்வதற்கு முன்னால் குதிரை பறந்து சென்றுவிட்டது.

உதய நேரம் மிக்க மனோகரமாயிருந்தது. பூங்குழலியின் உள்ளத்தில் என்றுமில்லாத உற்சாகம் ததும்பியது. அங்கிருந்தபடியே கப்பலின் மேல் தளத்தைப் பார்த்தாள். இளவரசர் தூங்கிக் கொண்டிருந்தார். பூங்குழலி நதிக்கரையோரமாகப் பறவைகளின் இனிய கானத்தை கேட்டுக் கொண்டு நடந்தாள். ஒரு மரத்தின் வளைந்த கிளையில் ஒரு பெரிய ராட்சசக் கிளி உட்கார்ந்திருந்தது. பூங்குழலியைக் கண்டு அது அஞ்சவில்லை. "எங்கே வந்தாய்?" என்று கேட்பதுபோல் அவளை உற்றுப் பார்த்தது.

"கிளித்தோழி! இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் இளவரசர் இங்கிருந்து போய்விடுவார். பிறகு எனக்கு நீதான் துணை. என்னோடு பேசுவாய் அல்லவா?" என்று பூங்குழலி கேட்டாள்.

அச்சமயம் "பூங்குழலி! பூங்குழலி!" என்ற குரல் கேட்டது முதலில் கிளிதான் பேசுகிறது என்று நினைத்தாள். இல்லை; குரல் கப்பலிலிருந்து வருகிறது என்று உணர்ந்தாள். இளவரசர் அழைக்கிறார் என்று அறிந்து குதித்தோடினாள். ஆனால் கப்பல் மேலேறிப் பார்த்தபோது இளவரசர் இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தார். பூங்குழலி அவர் அருகில் சென்ற போது அவருடைய வாய் மீண்டும் "பூங்குழலி!" என்று முணுமுணுத்தது. உடல் புளகாங்கிதம் கொண்ட அப்பெண் இளவரசரின் அருகில் சென்று அவருடைய நெற்றியைத் தொட்டு எழுப்பினாள்.

இளவரசர் உறக்கமும், கனவும் கலைந்து எழுந்தார். கீழ்த்திசையில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். பூங்குழலியின் முகம் மலர்ந்த செந்தாமரையைப் போல் பிரகாசித்தது. "என்னை அழைத்தீர்களே, எதற்கு?" என்று கேட்டாள்.

"உன் பெயரைச் சொல்லி அழைத்தேனா என்ன? தூக்கத்தில் ஏதோ பேசியிருப்பேன். நீ நேற்றிரவு தூங்கிக் கொண்டே பாடினாயே! நான் தூக்கத்தில் பேசக்கூடாதா?" என்றார்.

இளவரசர் குதித்து எழுந்தார். "ஓகோ! இத்தனை நேரமா தூங்கிவிட்டேன்! பெரியம்மா எங்கே?" என்று கேட்டுச் சுற்று முற்றும் பார்த்தார். அந்த மூதாட்டி அதிகாலையில் குதிரை ஏறிப் போய்விட்டதைச் சமுத்திரகுமாரி கூறினாள்.

"நல்ல காரியம் செய்தாள்! சமுத்திரகுமாரி! உன் களைப்புத் தீர்ந்து விட்டதாகக் காண்கிறது. நீயும் இனி விடை பெற்றுக் கொள்ளலாம். என் நண்பர்கள் வரும் வரையில் நான் இங்கேயே இருக்க வேண்டும். அதுவரை இந்தக் கப்பலைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன்" என்றார்.

பூங்குழலி, "அதோ! அதோ!" என்று சுட்டிக்காட்டினாள். அவள் காட்டிய திசையை இளவரசர் நோக்கினார். கடலில் வெகு தூரத்தில் ஒரு பெரிய மரக்கலம் தெரிந்தது. கடற்கரையோரமாக ஒரு சிறிய படகு வருவதும் தெரிந்தது. படகிலே ஐந்தாறு பேர் இருந்தார்கள்.

"ஆகா! இப்போது எல்லா விவரங்களும் தெரிந்து போய் விடும்!" என்றார் இளவரசர்.

தாம் அங்கிருப்பது தெரியாமல் ஒருவேளை படகு கடற்கரையோடு போய்விடலாம் என்று இளவரசர் அஞ்சினார். ஆகையால் உடனே புதைந்த கப்பலிலிருந்து கீழிறங்கி நதிக்கரையோரமாகக் கடற்கரையை நோக்கிச் சென்றார். பூங்குழலி அவரைத் தொடர்ந்து சென்றாள். யானையும் அவர்களைப் பின் தொடர்ந்து அசைந்தாடிக் கொண்டு சென்றது.

கடற்கரையில் போய் நின்றார்கள். மரக்கலம் அவர்களை விட்டுத் தூரத் தூரப் போய்க்கொண்டிருந்தது. படகு அவர்களை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. முதலில் பின்னால் ஒதுங்கி நின்ற பூங்குழலி ஆர்வங்காரணமாகச் சிறிது நேரத்துக்குள் முன்னால் வந்து விட்டாள்.

இளவரசருடைய மனக் கவலைகளுக்கிடையே பூங்குழலியின் ஆர்வம் அவருக்குக் களிப்பை ஊட்டியது. அவர் முகத்தில் குறுநகை ததும்பியது.

அவர் மனக் கவலை கொள்ளக் காரணங்களும் நிறைய இருந்தன. தூரத்திலே போய்க் கொண்டிருந்த கப்பலில் தாமும் போயிருக்க வேண்டும் என்றும் அது தன்னை விட்டுவிட்டுத் தூரதூரப் போய்க் கொண்டிருந்ததாகவும் அவருக்குத் தோன்றியது. அதுமட்டும் அன்று; கிட்ட நெருங்கி வந்து கொண்டிருந்த படகிலே ஒரு ஆள் குறைவாயிருந்ததாகக் காணப்பட்டது. இருக்கவேண்டிய ஒருவர் அதில் இல்லை. ஆம்; அதோ சேநாதிபதி இருக்கிறார்; திருமலையப்பர் இருக்கிறார். உடன் வந்து வீரர்கள் இருக்கிறார்கள்; படகோட்டிகள் இருக்கிறார்கள். ஆனால் அந்த வாணர் குலத்து வாலிபனை மட்டும் காணோம். வல்லத்தரையன் எங்கே? அந்த உற்சாக புருஷன், அஸகாயசூரன், அஞ்சா நெஞ்சம் படைத்த தீரன், இளையபிராட்டி அனுப்பி வைத்த அந்தரங்கத் தூதன் எங்கே?... இரண்டு நாள்தான் பழகியிருந்த போதிலும் இளவரசருக்கு நெடுநாள் பழக்கப்பட்ட நண்பன் போல் அவன் ஆகியிருந்தான். அவனுடைய குணாதிசயங்கள் அவ்வளவாக இளவரசருடைய மனத்தைக் கவர்ந்திருந்தன. அவனைப் படகில் காணாததும் அரிதில் கிடைத்த பாக்கியத்தை இழந்ததுபோல் இளவரசருக்கு வேதனை உண்டாயிற்று.

படகு இன்னும் நெருங்கிக் கரையோரம் வந்ததும் சேநாதிபதி முதலியவர்கள் தாவிக் கரையில் குதித்தார்கள். சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி ஓடிவந்து இளவரசரைக் கட்டிக் கொண்டார்.

"ஐயா! நல்ல காரியம் செய்தீர்கள்; எங்களை இப்படிச் கதிகலங்க அடிக்கலாமா!... யானையின் மதம் எப்படி அடங்கிற்று? இந்தப் பொல்லாத யானை இப்போது எவ்வளவு சாதுவாக நின்று கொண்டிருக்கிறது!... இளவரசே! எப்போது இங்கே வந்து சேர்ந்தீர்கள்? பழுவேட்டரையர்களின் கப்பல்களைப் பார்த்தீர்களா? அவை எங்கே?" என்று கொடும்பாளூர் பெரிய வேளார் கேள்விமாரி பொழிந்தார்.

"சேநாதிபதி! எங்கள் கதையைப் பின்னால் சொல்கிறேன். வந்தியத்தேவர் எங்கே? சொல்லுங்கள்!" என்றார்.

"அந்தத் துடுக்குக்காரப் பிள்ளை அதோ போகிற கப்பலில் போகிறான்!" என்று சேநாதிபதி தூரத்தில் போய்க் கொண்டிருந்த கப்பலைக் காட்டினார்.

"ஏன்? ஏன்? அது யாருடைய கப்பல்? அதில் ஏன் வந்தியத்தேவர் போகிறார்?" இளவரசர் கேட்டார்.

"ஐயா! எனக்குப் புத்தி ஒரே கலக்கமாயிருக்கிறது. இந்த வைஷ்ணவனைக் கேளுங்கள்! இவனுக்கு உங்கள் சமாசாரத்துடன் அந்த வாலிபன் சுபாவமும் தெரிந்திருக்கிறது!" என்றார்.

இளவரசர் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "திருமலை! வந்தியத்தேவர் ஏன் அக்கப்பலில் போகிறார்? தெரிந்தால் சீக்கிரம் சொல்லுங்கள்!" என்றார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com