Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 2
கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

31. "ஏலேல சிங்கன்" கூத்து


வனத்தின் மத்தியில் உலர்ந்த குளத்தைச் சுற்றி மரங்கள் வளைவு வரிசையாக வளர்ந்து அதனால் இடைவெளி ஏற்பட்டிருந்த இடத்தில் சுமார் ஆயிரம் சோழ வீரர்கள் தாவடி போட்டிருந்தார்கள். அவர்களுடைய சாப்பாட்டுக்காகப் பெரிய பெரிய கல்லடுப்புகளில் ஜுவாலை வீசிய நெருப்பின் பேரில் பிரம்மாண்டமான தவலைகளில் கூட்டாஞ்சோறு பொங்கிக் கொண்டிருந்தது. சட்டிகளிலும், அண்டாக்களிலும் வெஞ்சனங்கள் வெந்துகொண்டிருந்தன. இவற்றிலிருந்து எழுந்த நறுமணம் அந்த வீரர்கள் நாவில் ஜலம் சுரக்கச் செய்தது. சோறு பொங்கி முடியும் வரையில் பொழுது போவதற்காக அவர்கள் ஆடல் பாடல் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். இச்சமயத்தில் அவர்களுடைய உள்ளங்கவர்ந்த அரசிளங்குமாரரும் வந்து விடவே, அவ்வீரர்களின் குதூகலம் அளவு கடந்ததாயிற்று. அந்த எல்லைக் காவல் படையின் தளபதி மிகவும் சிரமப்பட்டு அவர்களுக்குள்ளே ஒழுங்கை நிலை நாட்டினார். எல்லோரையும் அமைதியுடன் பாதிமதியின் வடிவமான வட்டத்தில் வரிசையாக உட்காரும்படி செய்தார்.

பெரியதொரு ராட்சத மரத்தை வெட்டித் தள்ளி அதன் அடிப்பகுதியை மட்டும் பூமிக்கு மேலே சிறிது நீட்டிக்கொண்டிருக்கும்படி விட்டிருந்தார்கள். இளவரசர் வந்து அந்த அடிமரத்துச் சிம்மாசனத்தின்மீது அமர்ந்தார். இப்போது அவர் யானைப் பாகன்போல் உடை தரித்திருக்கவில்லை. தலையில் பொற்கிரீடமும், புஜங்களில் வாகு வலயங்களும், மார்பில் முத்து மாலைகளும் அணிந்து, அரையில் பட்டுப்பீதாம்பரம் தரித்து அமர்ந்திருந்தார். அவரைச்சுற்றி எல்லைக்காவல் தளபதியும், வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் உட்கார்ந்திருந்தார்கள்.

இளவரசரை மகிழ்விப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த ஏலேல சிங்கன் சரித்திரக்கூத்து ஆரம்பமாயிற்று. இந்தச் சமயம் சோழ வீரர்கள் இலங்கையில் பெரும் பகுதியைப் பிடித்திருந்ததுபோல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தடவை தமிழ் வீரர்கள் ஈழநாட்டைக் கைப்பற்றியிருந்தார்கள். அப்போது அத்தமிழ் வீரர்களின் தலைவனாக விளங்கியவன் ஏலேல சிங்கன். அவனால் துரத்தப்பட்டு இலங்கை அரசன் சில காலம் மலைநாட்டில் போய் ஒளிந்திருந்தான். அவனுடைய புதல்வனின் பெயர் துஷ்டகமனு. இவன் பொல்லாத வீரன். இலங்கையைத் திரும்பவும் ஏலேல சிங்கனிடமிருந்து கைப்பற்ற வேண்டுமென்று நெடுங்காலம் கனவு கண்டான். அவ்வீரன் சிறு பிள்ளையாயிருந்தபோது ஒருநாள் படுக்கையில் கையையும் காலையும் மடக்கி ஒடுக்கி வைத்துக் கொண்டு படுத்திருந்தான். அவனுடைய அன்னை, "குழந்தாய்! ஏன் இப்படி உன்னை நீயே குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறாய்? தாராளமாய்க் காலையும் கையையும் நீட்டி விட்டுப் படுத்துக்கொள்வதுதானே!" என்றாள். அப்போது துஷ்டகமனு, "தாயே! என்னை ஒரு பக்கத்தில் தமிழ் வீரர்கள் நெருக்குகிறார்கள். மற்றொரு பக்கத்தில் கடல் நெருக்குகிறது நான் என்ன செய்வேன்? அதனாலேயே உடம்பைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறேன்!" என்றான். இத்தகைய வீரன் காளைப் பருவம் அடைந்தபோது படை திரட்டிக் கொண்டு போன படைகள் சின்னாபின்னமாகிச் சிதறி ஓடிவிட்டன. அப்போது துஷ்டகமனு ஒரு யுக்தி செய்தான். ஏலேல சிங்கன் இருக்குமிடம் சென்று நேருக்கு நேர் நின்று, "அரசே! தங்களுடைய பெரிய சைன்யத்துக்கு முன்னால் என்னுடைய சிறிய படை சிதறி ஓடிவிட்டது. நான் ஒருவனே மிஞ்சியிருக்கிறேன். தாங்கள் சுத்த வீரர் குலத்தில் பிறந்தவர். ஆதலின் என்னுடன் தனித்து நின்று துவந்த யுத்தம் செய்யும்படி அழைக்கிறேன் நம்மில் வெற்றி அடைபவருக்கு இந்த இலங்கா ராஜ்யம் உரியதாகட்டும்; மற்றவருக்கு வீரசொர்க்கம் கிடைக்கட்டும்!" என்று சொன்னான்.

துஷ்டகமனுவின் அத்தகைய துணிச்சலையும் வீரத்தையும் ஏலேல சிங்கன் மிக வியந்தான். ஆகையால் அவனுடன் தனித்து நின்று போர் செய்ய ஒப்புக்கொண்டான். இடையில் வந்து குறுக்கிட வேண்டாம் என்று தன் வீரர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டான். துவந்த யுத்தம் ஆரம்பமாயிற்று. இந்தச் செய்தியை அறிந்து சிதறி ஓடிய துஷ்டகமனுவின் வீரர்களும் திரும்பி வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நெடுநேரம் போர் நடந்தது. துஷ்டகமனுவோ தன் பிறப்புரிமையைப் பெறும் பொருட்டு ஆத்திரத்துடன் சண்டையிட்டான். ஏலேல சிங்கன் அந்த இளைஞனிடம் அனுதாபம் கொண்டிருந்தபடியால் பூரண வலியையும் உபயோகித்துப் போர் செய்யவில்லை. ஆகையால் ஏலேல சிங்கன் இறந்தான். துஷ்டகமனு முடிசூடியதும், ஏலேல சிங்கன் இறந்த இடத்தில் அவனுக்குப் பள்ளிப்படைக் கோயில் எழுப்பி அவனது வீரத்தையும் தயாளத்தையும் போற்றினான்.

இந்த அரிய சரித்திர நிகழ்ச்சியைச் சோழ வீரர்கள் இளங்கோ அருள்மொழிவர்மரின் முன்னிலையில் நடனக் கூத்தாக நடித்துக் காட்டினார்கள். ஆடலும் பாடலும் அமர்க்களப்பட்டன. ஏலேல சிங்கன் உயிர் துறந்து விழுந்த இடத்தில் நடித்த வீரன் உண்மையிலேயே செத்து விழுந்து விட்டானா என்று தோன்றும்படி அவ்வளவு தத்ரூபமாக நடித்தான். பார்த்துக் கொண்டிருந்த இளவரசரும் மற்ற வீரர்களும் அடிக்கடி 'ஆஹா' காரம் செய்து குதூகலித்தார்கள்.

நாடகம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு முறை இளவரசர் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "திருமலை! தம்பளைக் குகைக் கோயிலில் துஷ்டகமனுவுக்கும், ஏலேல சிங்கனுக்கும் நடந்த போர்க் காட்சியை அழியாத வர்ணச் சித்திரமாக வரைந்திருக்கிறதே, அந்தச் சித்திரத்தை நீங்கள் பார்த்தீர்களா?" என்று கேட்டார்.

"இல்லை, ஐயா! தம்பளை வீதிகளில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோதே தங்களைப் பார்த்துவிட்டேன். குகைக் கோயிலுக்குள் போக நேரமில்லை" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"ஆகா! அந்தக் குகைக் கோயில்களிலே உள்ள சிற்பங்களையும் அவசியம் பார்க்க வேண்டும்! திருமலை நம் செந்தமிழ் நாட்டில் எவ்வளவோ சிற்ப சித்திரங்கள் இருக்கின்றன. அவற்றைக் காட்டிலும் மகத்தான அற்புதங்கள் இந்த இலங்கைத் தீவில் இருக்கின்றன" என்றார் இளவரசர்.

"இளவரசே! இந்த நாட்டிலுள்ள சிற்ப சித்திரங்கள் எங்கும் போய் விடமாட்டா! எப்போது வேணுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் தங்களைப் பார்ப்பது அப்படியல்லவே? நல்ல சமயத்தில் நாங்கள் வந்ததினால் அல்லவோ பார்க்க முடிந்தது? எங்களுக்கு முன்னாலேயே இங்கு வந்த பார்த்திபேந்திர பல்லவன், தங்களைத் தேடிவிட்டு 'இங்கே இல்லை' என்று திரும்பிப் போய்க் கொண்டிருந்தான். வழியில் அவனை நாங்கள் பார்த்தோம்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"ஆம்; என் தமையனாரின் அருமை நண்பர் வந்து தேடிவிட்டுப் போனதாகத் தளபதிகூடச் சொன்னார். அவர் எதற்காக வந்திருப்பார் என்று உன்னால் ஊகித்துச் சொல்ல முடியுமா?"

"நிச்சயமாகவே சொல்ல முடியும். தங்களைக் காஞ்சிக்கு அழைத்து வரும்படியாக ஆதித்த கரிகாலர் அவரை அனுப்பி வைத்திருக்கிறார்."

"அடடே! உனக்குத் தெரிந்திருக்கிறதே! இதோ உன் சிநேகிதன் இவ்வளவு பத்திரமாக கொண்டுவந்து ஒப்புவித்தானே, இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்றும் உனக்குத் தெரியும் போலிருக்கிறது?"

"தங்களை உடனே பழையாறைக்கு வந்து சேரும்படி தங்கள் தமக்கையார் எழுதியிருக்கிறார்கள். இளவரசே! குந்தவை தேவி அந்தரங்கமாக இந்த ஓலையை எழுதி நம் வாணர்குல வீரரிடம் கொடுத்தபோது பக்கத்திலிருந்த கொடி வீட்டில் மறைந்திருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்..."

திருமலைக்குப் பின்னாலிருந்த வந்தியத்தேவன் அவனுடைய முதுகில் அழுத்தமாகக் கிள்ளினான்.

ஆழ்வார்க்கடியான் தன் முதுகில் ஓங்கி அறைந்து, "இது பொல்லாத காடு; இரவு நேரத்திலே கூட வண்டு கடிக்கிறது!" என்றான்.

இளவரசர் சற்றுக் கோபத்துடன், "சேச்சே! இது என்ன வேலை? என் அருமைத் தமக்கையார் பேரிலேயே நீ உன் திறமையைக் காட்டத் தொடங்கிவிட்டாயா?" என்றார்.

"அதை நான் பார்த்திருந்தபடியினால்தான் இவனை இவ்வளவு பத்திரமாக இங்கே கொண்டுவந்து சேர்த்தேன். இளவரசே! இவனை வழியிலெங்கும் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளாதபடி காப்பாற்றிக் கொண்டு வருவதற்கு நான் பட்ட பாட்டைப் புத்தபகவானே அறிவார். அநுராதபுரத்தின் வழியாக வந்திருந்தால் இவன் நிச்சயமாக இங்கு வந்து சேர்ந்திருக்க மாட்டான். வழியில் யாருடனாவது சண்டை பிடித்துச் செத்திருப்பான். அதனாலே காட்டு வழியாக அழைத்து வந்தேன். அங்கேயும் இவன் ஒரு மதயானையுடன் சண்டை பிடிக்கப் பார்த்தான். என்னுடைய கைத்தடியால் அந்த மதயானையைச் சம்ஹரித்து இவனைத் தங்களிடம் பத்திரமாய்க் கொண்டு வந்தேன்!" என்றான்.

"ஓஹோ! அப்படியானால் இவனைப் பத்திரமாகக் கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பதற்காகவே நீ இலங்கைக்கு வந்தாயா, என்ன?"

"இல்லை, ஐயா! என் பங்குக்கு நானும் தங்களுக்கு ஒரு செய்திகொண்டு வந்திருக்கிறேன்."

"அது என்ன? சீக்கிரம் சொல்!" என்றார் இளவரசர்.

"முதன் மந்திரி அநிருத்தர் தாங்கள் இலங்கையிலேயே இன்னும் சிறிது காலம் இருப்பது உசிதம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்."

"இப்படி மூன்று மூத்தவர்கள் மூன்று விதமாகச் செய்தி அனுப்பினால் நான் எதையென்று கேட்பது?" என்றார் அருள்மொழிவர்மர்.

இச்சமயத்தில் வந்தியத்தேவன் குறுக்கிட்டு, "இளவரசே! மன்னிக்கவேண்டும்! தாங்கள் கேட்க வேண்டியது தங்கள் தமக்கையாரின் வார்த்தையைத்தான்!" என்றான்.

"ஏன் அவ்விதம் சொல்லுகிறீர்?"

"ஏனெனில், தங்கள் தமக்கையின் வார்த்தைக்கே மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று தங்கள் இருதயம் தங்களுக்குச் சொல்கிறது. அப்படித் தாங்கள் அவர் வார்த்தையைக் கேட்காவிட்டாலும், நான் கேட்டே தீர வேண்டும். தங்களை எப்படியும் அழைத்துக் கொண்டு வரும்படியாக இளைய பிராட்டி எனக்குப் பணித்திருக்கிறார்!" என்றான் வந்தியத்தேவன்.

இளவரசர் வந்தியத்தேவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "இத்தகைய ஒரு வீரத்தோழன் கிடைக்க வேண்டுமேயென்று எத்தனையோ நாளாக நான் தவம் செய்துகொண்டிருந்தேன்!" என்றார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com