Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 1
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்
6. நடுநிசிக் கூட்டம்

குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் கூறினான்.

பழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார்; தான் தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான். இந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்; அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச் செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது.

சிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்களுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து அக்காலத்தில் வழங்கப்பட்டது. அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச் சொல்லும் மரபும் இருந்தது.

அந்த நாளில் சிற்றரசர்கள் என்றால் பிறப்பினால் மட்டுமே 'அரசர்' பட்டம் பெற்று அரண்மனைச் சுகபோகங்களில் திளைத்து வாழ்ந்திருப்பவர்கள் அல்ல. போர்க்களத்தில் முன்னணியில் நின்று போரிடச் சித்தமாயுள்ள வீராதி வீரர்கள் தாம் தங்கள் அரசுரிமையை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒவ்வொருவரும் பற்பல போர்க்களங்களில் போரிட்டுப் புகழுடன் காயங்களையும் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்று அத்தனை பேரும் பழையாறைச் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். சிலர் சோழப் பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வந்தார்கள்.

இவ்வளவு முக்கியமான சோழ சாம்ராஜ்யப் பிரமுகர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் பார்த்தது பற்றி வல்லவரையன் நியாயமாக உவகை கொண்டிருக்க வேண்டும். ஆயினும் அவனுடைய உள்ளத்தில் உவகை ஏற்படவில்லை.

"இவ்வளவு பேரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள்?" என்ற எண்ணம் அவனுக்கு அடிக்கடி தோன்றியது. ஏதேதோ தெளிவில்லாத ஐயங்கள் அவன் உள்ளத்தில் தோன்றி அலைத்தன.

மனத்தில் இத்தகைய குழப்பத்துடனேயே வல்லவரையன் தனக்கென்று கந்தமாறன் சித்தப்படுத்திக் கொடுத்திருந்த தனி இடத்தில் படுக்கச் சென்றான். விருந்தினர் பலர் வந்திருந்தபடியால் வல்லவரையனுக்கு அம்மாபெரும் மாளிகையின் மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த திறந்த மண்டபமே படுப்பதற்குக் கிடைத்தது.

"நீ மிகவும் களைத்திருக்கிறாய்; ஆகையினால் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு, மற்ற விருந்தாளிகளைக் கவனித்து விட்டு நான் உன் பக்கமே வந்து படுத்துக்கொள்கிறேன்" என்று கந்தமாறன் சொல்லிவிட்டுப் போனான்

* * * * *

படுத்தவுடனே வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டுவந்தது. மிக விரைவில் நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள். ஆனாலும் என்ன பயன்? மனம் என்பது ஒன்று இருக்கிறதே, அதை நித்திரா தேவியினால் கூடக் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. உடல் அசைவற்றுக் கிடந்தாலும், கண்கள் மூடியிருந்தாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்துகிடக்கும் எண்ணங்கள் கனவாகப் பரிணமிக்கின்றன. பொருளில்லாத அறிவுக்குப் பொருத்தமில்லாத, பற்பல நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் அந்தக் கனவு லோகத்தில் ஏற்படுகின்றன்.

எங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது. ஒரு நரி, பத்து நரியாகி, நூறு நரியாகி, ஏகமாக ஊளையிட்டன! ஊளையிட்டுக் கொண்டே வந்தியத்தேவனை நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தன. காரிருளில் அந்த நரிகளின் கண்கள் சிறிய சிறிய நெருப்புத் தணல்களைப்போல் ஜொலித்துக் கொண்டு அவனை அணுகி வந்தன.

மறுபக்கம் திரும்பி ஓடித் தப்பிக்கலாம் என்று வந்தியத்தேவன் பார்த்தான். அவன் பார்த்த மறுதிசையில் பத்து, நூறு, ஆயிரம் நாய்கள் ஒரே மந்தையாகக் குரைத்துக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தன. அந்த வேட்டை நாய்களின் கண்கள் அனல் பொறிகளைப் போல் ஜொலித்தன.

நரிகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டால் தன்னுடைய கதி என்னவாகும் என்று எண்ணி வந்தியத்தேவன் நடுநடுங்கினான். நல்லவேளை, எதிரே ஒரு கோயில் தெரிந்தது. ஓட்டமாக ஓடித் திறந்திருந்த கோயிலுக்குள் புகுந்து வாசற்கதவையும் தாளிட்டான். திரும்பிப் பார்த்தால், அது காளி கோயில் என்பது தெரிந்தது. அகோரமாக வாயைத் திறந்து கொண்டிருந்த காளிமாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து பூசாரி ஒருவன் வெளிக்கிளம்பி வந்தான். அவன் கையில் ஒரு பயங்கரமான வெட்டரிவாள் இருந்தது. "வந்தாயா? வா!" என்று சொல்லிக் கொண்டு பூசாரி அருகில் நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தான்.

"நீ பிறந்த அரச குலத்தின் வரலாறு என்ன? எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர் அரசு புரிகின்றனர்? உண்மையைச் சொல்" என்று பூசாரி கேட்டான்.

"வாணர்குலத்து வல்லவரையர் முந்நூறு ஆண்டுகள் அரசு புரிந்தவர்; என் தந்தையின் காலத்தில் வைதும்பராயர்களால் அரசை இழந்தோம்" என்றான் வந்தியத்தேவன்.

"அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல! ஓடிப்போ!" என்றான் பூசாரி.

திடீரென்று காளிமாதாவின் இடத்தில் கண்ணபெருமான் காட்சி அளித்தான். கண்ணன் சந்நிதியில் இரண்டு பெண்கள் கையில் பூமாலையுடன் ஆண்டாள் பாசுரம் பாடிக்கொண்டு வந்து நடனம் ஆடினார்கள். இதை வல்லவரையன் பார்த்துப் பரவசமடைந்திருக்கையில், அவனுக்குப் பின்புறத்தில், "கண்டோ ம், கண்டோ ம், கண்டோ ம், கண்ணுக்கினியன கண்டோ ம்" என்ற பாடலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பாடியவன் ஆழ்வார்க்கடியான் நம்பிதான். இல்லை! ஆழ்வார்க்கடியானுடைய தலை பாடியது! அந்தத் தலை மட்டும் பலி பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்காமல் வல்லவரையன் திரும்பினான்; தூணில் முட்டிக்கொண்டான். கனவு கலைந்தது. கண்கள் திறந்தன. ஆனால் கனவையும் நனவையும் ஒன்றாய்ப் பிணைத்த ஒரு காட்சியை அவன் காண நேர்ந்தது.

அவன் படுத்திருந்த இடத்துக்கு நேர் எதிர்ப்புறத்தில் கடம்பூர் மாளிகைச் சுற்று மதிலின் மேலே ஒரு தலை தெரிந்தது. அது, அந்த ஆழ்வார்க்கடியான் நம்பியின் தலைதான். இந்தத் தடவை அது கனவல்ல, வெறும் பிரமையும் அல்லவென்பது நிச்சயம். ஏனெனில், எத்தனை நேரம் பார்த்தாலும் அந்தத்தலை அங்கேயே இருந்தது. அது வெறும் தலை மட்டுமல்ல, தலைக்குப் பின்னாலே உடம்பு இருக்கிறது என்பதையும் எளிதில் ஊகிக்கக் கூடியதாயிருந்தது. ஏனெனில், ஆழ்வார்க்கடியானுடைய கைகள் அந்த மதில் ஓரத்தின் விளிம்பைப் பிடித்துக்கொண்டிருந்தன். அதோடு, அவன் வெகு கவனமாக மதிலுக்குக் கீழே உட்புறத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் அவ்வளவு கவனமாக அங்கே என்னத்தைப் பார்க்கிறான்!... இதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்க வேண்டும். ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது. ஏதோ துஷ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான். அவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய தன் கடமையல்லவா? தனக்கு அன்புடன் ஒரு வேளை அன்னம் அளித்தவர்களின் வீட்டுக்கு நேரக்கூடிய தீங்கைத் தடுக்காமல் தான் சும்மா படுத்துக்கொண்டிருப்பதா?

வல்லவரையன் துள்ளி எழுந்தான். பக்கத்தில் கழற்றி வைத்திருந்த உறையுடன் சேர்ந்த கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். ஆழ்வார்க்கடியானுடைய தலை காணப்பட்ட திக்கை நோக்கி நடந்தான்.

மாளிகை மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் அல்லவா வல்லவரையன் படுத்திருந்தான்? அங்கிருந்து புறப்பட்டு மதில் சுவரை நோக்கி நடந்தபோது மேல்மாடத்தை அலங்கரித்த மண்டபச் சிகரங்கள், மேடைகள், விமான ஸ்தூபிகள் தூண்கள் ஆகியவற்றைக் கடந்தும், தாண்டியும், சுற்றி வளைத்தும் நடக்கவேண்டியதாயிருந்தது. சற்று தூரம் அவ்விதம் நடந்த பிறகு, திடீரென்று எங்கிருந்தோ பேச்சுக்குரல் வந்ததைக் கேட்டு வல்லவரையன் தயங்கி நின்றான். அங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு, தூணின் மறைவில் நின்றபடி எட்டிப் பார்த்தான். கீழே குறுகலான முற்றம் ஒன்றில், மூன்று பக்கமும் நெடுஞ்சுவர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் பத்துப் பன்னிரண்டுபேர் உட்கார்ந்திருந்தார்கள். பாதி மதியின் வெளிச்சத்தை நெடுஞ்சுவர்கள் மறைத்தன. ஆனால் ஒரு சுவரில் பதித்திருந்த இரும்பு அகல் விளக்கில் எரிந்த தீபம் கொஞ்சம் வெளிச்சம் தந்தது.

அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அன்று இரவு விருந்தின் போது அவன் பார்த்த பிரமுகர்கள்தான்; சிற்றரசர்களும் சோழ சாம்ராஜ்ய அதிகாரிகளுந்தான். அவர்கள் ஏதோ மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கவே நள்ளிரவு நேரத்தில் அங்கே கூடியிருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைத்தான் ஆழ்வார்க்கடியான் மதில் சுவர் மீதிலிருந்து அவ்வளவு கூர்மையாகக் கவனித்துக்கொண்டு வருகிறான். அவன் இருக்குமிடத்திலிருந்து கீழே கூடிப் பேசுகிறவர்களை ஒருவாறு பார்க்க முடியும்; அவர்களுடைய பேச்சை நன்றாய்க் கேட்க முடியும். ஆனால் கீழேயுள்ளவர்கள் ஆழ்வார்க்கடியானைப் பார்க்க முடியாது. அந்த இடத்தில் மாளிகைச் சுவர்களும் மதில் சுவர்களும் அவ்வாறு அமைந்திருந்தன. அத்தகைய இடத்தை ஆழ்வார்க்கடியான் எப்படியோ கண்டுபிடித்துக் கொண்டு வந்திருக்கிறான்! கெட்டிக்காரன் தான்; சந்தேகமில்லை. ஆனால் அவனுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வந்தியத்தேவனிடம் பலிக்காது! அந்த வேஷதாரி வைஷ்ணவனைக் கைப்பிடியாகப் பிடித்துக்கொண்டு வந்து... ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ளவர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதில் சுவரை அணுக முடியாது. அப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கலாம். "இன்றைக்கு நாள் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை!" என்று சம்புவரையர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லோரும் ஏதோ முக்கிய காரியமாகக் கலந்தாலோசிப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தெளிவு. அப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன்பேரில் சந்தேகப்பட்டுவிடலாம் அல்லவா? ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வெளிப்புறம் குதித்து ஓடிவிடுவான். ஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும். "படுத்திருந்தவன் இங்கு எதற்காக வந்தாய்?" என்றால் என்ன விடை சொல்லுவது? கந்தமாறனின் நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவே முடியும். ஆகா! அதோ கந்தமாறன் இந்தக் கூட்டத்தின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். அவனும் இந்த கூட்டத்தாரின் ஆலோசனையில் கலந்து கொண்டிருக்கிறான் போலும்! காலையில் கந்தமாறனைக் கேட்டால் எல்லாம் தெரிந்துவிடுகிறது.

அச்சமயம் அக்கூட்டத்தாருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மூடு பல்லக்கு வந்தியத்தேவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. ஆ! இந்தப் பல்லக்கு பழுவேட்டரையருடன் அவருடைய யானையைத் தொடர்ந்து வந்த பல்லக்கு அல்லவா! அதற்குள்ளேயிருந்த பெண், ஒரு கணம் திரையை நீக்கி வெளியே பார்த்த பெண், இப்போது இந்த மாளிகையில் எந்தப் பகுதியில் இருக்கிறாளோ? அந்தப்புரத்துக்குக் கூட அவளை இந்தக் கிழவர் அனுப்பவில்லையாமே? கொஞ்சம் வயதானவர்கள் இளம் பெண்களை மணந்துகொண்டாலே இந்தச் சங்கடந்தான். சந்தேகம் அவர்கள் பிராணனை வாங்குகிறது. ஒரு நிமிஷம் கூட தங்களுடைய இளம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஒருவேளை, இப்போது கூட இந்தப் பல்லக்கிலேயே பழுவேட்டரையருடைய இளம் மனைவி இருக்கிறாளோ, என்னமோ, ஆகா! இந்த வீராதி வீரரின் தலைவிதியைப் பார்! இந்த வயதில் ஓர் இளம்பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டு அவளுக்கு அடிமையாகித் தவிக்கிறார்! அப்படியொன்றும் அவள் ரதியோ, மேனகையோ, ரம்பையோ இல்லை! வந்தியத்தேவன் ஒரு கணம் அவளைப் பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சியை அவன் மறக்கவில்லை. அத்தகையவளிடம் இந்த வீரப் பழுவேட்டரையருக்கு என்ன மோகமோ தெரியவில்லை. அதைவிட அதிசயமானது ஆழ்வார்க்கடியானது பைத்தியம். இந்தப் பல்லக்கு இங்கே வைக்கப்பட்டிருப்பதினாலேதான் அவனும் சுவர் மேல் காத்திருக்கிறான் போலும்! ஆனால் அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவோ என்னமோ, நமக்கு என்ன தெரியும்? அவள் ஒரு வேளை அவனுடைய சகோதரியாயிருக்கலாம் அல்லது காதலியாகவும் இருக்கலாம். பழுவேட்டரையர் பலவந்தமாக அவளைக் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம்! அவ்வாறு அவர் செய்யக்கூடியவர்தான். அதனால் அவளைப் பார்த்துப் பேச ஒரு சந்தர்ப்பத்தை ஆழ்வார்க்கடியான் எதிர்பார்த்து இப்படியெல்லாம் அலைகிறான் போலும்! அதைப்பற்றி நமக்கு என்ன வந்தது? பேசாமல் போய்ப் படுத்துத் தூங்கலாம்.

இப்படி அந்த இளைஞன் முடிவு செய்த சமயத்தில், கீழே நடந்த பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடுவதைக் கேட்டான். உடனே சற்றுக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

"உம்முடைய குமாரனுடைய சிநேகிதன் என்று ஒரு பிள்ளை வந்திருந்தானே? அவன் எங்கே படுத்திருக்கிறான்? நம்முடைய பேச்சு எதுவும் அவனுடைய காதில் விழுந்து விடக் கூடாது. அவன் வடதிசை மாதண்ட நாயகரின் கீழ் பணிம் செய்யும் ஆள் என்பது நினைவிருக்க வேண்டும். நம்முடைய திட்டம் உறுதிப்பட்டு நிறைவேறும் காலம் வருவதற்குள் வேறு யாருக்கும் இதைப் பற்றித் தெரியக்கூடாது. அந்தப் பிள்ளைக்கு ஏதாவது கொஞ்சம் தகவல் தெரிந்துவிட்டது என்ற சந்தேகமிருந்தால் கூட அவனை இந்தக் கோட்டையிலிருந்து வெளியே அனுப்பக்கூடாது ஒரேயடியாக அவனை வேலை தீர்த்து விடுவது உசிதமாயிருக்கும்..."

இதைக் கேட்ட வந்தியத்தேவனுக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். ஆனாலும் அந்த இடத்தை விட்டு அவன் நகரவேயில்லை. அவர்களுடைய பேச்சை முழுதும் கேட்டேவிடுவது என்று உறுதி செய்துகொண்டான்.

வடதிசை மாதண்ட நாயகர் யார்? சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர். அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர். அவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம்? அவருக்குத் தெரியக்கூடாத விஷயம் இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்?

அச்சமயம் கந்தமாறன் தன் சிநேகிதனுக்குப் பரிந்து பேசியது வல்லவரையனின் காதில் விழுந்தது.

"மேல்மாடத்து மூலை மண்டபத்தில் வந்தியத்தேவன் படுத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். இந்தக் கூட்டத்தின் பேச்சு அவன் காதில் விழப் போவதில்லை. தனக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் அவன் தலையிடுகிறவனும் அல்ல. அப்படியே அவன் ஏதாவது தெரிந்து கொண்டாலும், அதனால் உங்கள் யோசனைக்கு பாதகம் ஒன்றும் நேராது; அதற்கு நான் பொறுப்பு!" என்றான் கந்தமாறன்.

"உனக்கு அவனிடம் அவ்வளவு நம்பிக்கை இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களில் யாருக்கும் அவனை முன்பின் தெரியாது. ஆகையினால்தான் எச்சரிக்கை செய்தேன். நாம் இப்போது பேசப் போகிறதோ, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் உரிமை பற்றிய விஷயம். அஜாக்கிரதை காரணமாக ஒரு வார்த்தை வெளியில் போனாலும் அதனால் பயங்கரமான விபரீதங்கள் ஏற்படலாம். இது உங்கள் எல்லாருக்குமே நினைவிருக்க வேண்டும்!" என்றார் பழுவேட்டரையர்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com