Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 1
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

16. அருள்மொழிவர்மர்

இன்றைக்குச் சுமார் 980 ஆண்டுகளுக்கு முன்னால் (1950ல் எழுதப்பட்டது) கோ இராசகேசரி வர்மர் பராந்தக சுந்தர சோழ மன்னர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கிவந்தார். நம் கதை நடக்கும் காலத்துக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் சிங்காசனம் ஏறினார். சென்ற நூறாண்டுகளாகச் சோழர்களின் கை நாளுக்கு நாள் வலுத்து வந்தது. சோழ சாம்ராஜ்யம் நாலாத் திசைகளிலும் பரவி வந்தது. எனினும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்த சமயத்தில் தெற்கேயும் வடக்கேயும் விரோதிகள் வலுப் பெற்றிருந்தார்கள். சுந்தர சோழருக்கு முன்னால் அரசு புரிந்த கண்டராதித்தர் சிவபக்தியில் திளைத்துச் 'சிவஞான கண்டராதித்தர்' என்று புகழ் பெற்றவர். அவர் இராஜ்யத்தை விஸ்தரிப்பதில் அவ்வளவாகச் சிரத்தை கொள்ளவில்லை. கண்டராதித்தருக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த அவருடைய சகோதரர் அரிஞ்சயர் ஓர் ஆண்டு காலந்தான் சிம்மாசனத்தில் இருந்தார். அவர் தொண்டை நாட்டிலுள்ள 'ஆற்றூரில் துஞ்சிய' பின்னர், அவருடைய புதல்வர் பராந்தக சோழர் தஞ்சைச் சிம்மாசனம் ஏறினார்.

பேரரசர் ஒருவருக்கு இருக்க வேண்டிய எல்லாச் சிறந்த அம்சங்களும் சுந்தரசோழ சக்கரவர்த்தியிடம் பொருந்தியிருந்தன. போர் ஆற்றல் மிக்க சுந்தரசோழர் தம் ஆட்சியின் ஆரம்பத்திலேயே தென் திசைக்குப் படையெடுத்துச் சென்றார். சேவூர் என்னுமிடத்தில் சோழ சைன்யத்துக்கும் பாண்டிய சைன்யத்துக்கும் பெரும் போர் நடைபெற்றது. அச்சமயம் மதுரை மன்னனாயிருந்த வீரபாண்டியனுக்குத் துணை செய்வதற்காகச் சிங்கள நாட்டு அரசன் மகிந்தன் ஒரு பெரிய சேனையை அனுப்பியிருந்தான். சோழர்களின் மாபெரும் வீர சைன்யம் பாண்டியர்களுடைய சேனையையும் சிங்கள நாட்டுப் படையையும் சேவூரில் முறியடித்தது. வீரபாண்டியன் படையிழந்து, முடியிழந்து, துணையிழந்து, உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு போர்க்களத்திலிருந்து ஓடித் தப்பித்தான். பாலை நிலப் பகுதியொன்றின் நடுவில் இருந்த மலைக்குகையில் ஒளிந்து கொண்டு காலங்கழிக்கலானான்.

சேவூர்ப் போரில் ஈழத்துப் படை அநேகமாக நிர்மூலமாகி விட்டது. எஞ்சிய வீரர்கள் சிலர் போர்க்களத்தில் புகழையும் வீரத்தையும் உதிர்த்துவிட்டு, உயிரை மட்டும் கைகொண்டு ஈழ நாட்டுக்கு ஓடிச் சென்றார்கள்.

இவ்விதம் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் நடக்கும் போர்களில் சிங்கள மன்னர்கள் தலையிட்டுப் பாண்டியர்க்கு உதவிப் படை அனுப்புவது சில காலமாக வழக்கமாய்ப் போயிருந்தது. இந்த வழக்கத்தை அடியோடு ஒழித்து விடச் சுந்தரசோழ சக்கரவர்த்தி விரும்பினார். ஆகையினால் சோழ சைன்யம் ஒன்றை இலங்கைக்கு அனுப்பிச் சிங்கள மன்னர்களுக்குப் புத்தி கற்பிக்க எண்ணினார். கொடும்பாளூர்ச் சிற்றரசர் குடும்பத்தைச் சேர்ந்த பராந்தகன் சிறிய வேளான் என்னும் தளபதியின் தலைமையில் ஒரு பெரும் படையைச் சிங்களத்துக்கு அனுப்பினார். துரதிர்ஷ்டவசமாக சோழர் படை சிங்களத்துக்கு ஒரே தடவையில் போய்ச் சேரவில்லை. அதற்குத் தேவையான கப்பல் வசதிகள் இல்லை. முதல் தடவை சென்ற சேனை முன்யோசனையின்றித் துணிந்து முன்னேறத் தொடங்கியது. மகிந்தரராஜனுடைய தளபதி ஸேனா என்பவனின் தலைமையில் சிங்களப்படை எதிர்பாராத விதத்தில் வந்து சோழப் படையின் பகுதியை வளைத்துக் கொண்டது. பயங்கரமான பெரும் போர் நடந்தது. அதில் சோழ சேனாதிபதியான பராந்தகன் சிறிய வேளான் தன் வீரப்புகழை நிலைநிறுத்திவிட்டு இன்னுயிரைத் துறந்தான்! 'ஈழத்துப் பட்ட பராந்தகன் சிறிய வேளான்' என்று சரித்திரக் கல்வெட்டுக்களில் பெயர் பெற்றான்.

இந்தச் செய்தியானது பாலைவனத்தில் மலைக் குகையில் ஒளிந்து கொண்டிருந்த வீரபாண்டியனுக்கு எட்டியது அம் மன்னன் மீண்டும் துணிவு கொண்டு வெளிவந்தான். மறுபடியும் பெருஞ்சேனை திரட்டிப் போரிட்டான். இம்முறை பாண்டிய சேனை அதோகதி அடைந்ததுடன், வீரபாண்டியனும் உயிர் துறக்க நேர்ந்தது. இந்தப் போரில் சுந்தரசோழரின் முதற் குமாரர் ஆதித்த கரிகாலர் முன்னணியில் நின்று பராக்கிரமச் செயல்கள் புரிந்தார்; 'வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டத்தையும் அடைந்தார்.

எனினும், சிங்கள மன்னன் மகிந்தனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்ற விருப்பம் சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு மட்டுமல்ல, சோழ நாட்டுத் தளபதிகள், சாமந்தகர்கள், சேனாவீரர்கள் எல்லாருடைய மனத்திலும் குடிக்கொண்டிருந்தது. படையெடுத்துச் செல்ல ஒரு பெரிய சைன்யமும் ஆயத்தமாயிற்று. அதற்குத் தலைமை வகித்துச் செல்வது யார் என்னும் கேள்வி எழுந்தது. சுந்தரசோழரின் மூத்த புதல்வர் - பட்டத்து இளவரசராகிய ஆதித்த கரிகாலர், அச்சமயம் வடதிசைக்குச் சென்றிருந்தார். திருமுனைப்பாடி நாட்டிலும் தொண்டை மண்டலத்திலும் சில நாளாக ஆதிக்கம் செலுத்தி வந்த இரட்டை மண்டலப் படைகளை (ராஷ்டிர கூடர்களை) முறியடித்து விரட்டி விட்டுப் புராதனமான காஞ்சி நகரைத் தமது வாசஸ்தலமாகச் செய்து கொண்டிருந்தார். மேலும் வடதிசையில் படையெடுத்துச் செல்லுவதற்கு ஆயத்தமும் செய்து கொண்டிருந்தார்.

இந்நிலைமையில், ஈழமண்டலப் படைக்குத் தலைமை வகித்துச் செல்லச் சோழநாட்டின் மற்றத் தளபதிகளுக்குள்ளே பெரும்போட்டி ஏற்பட்டது. போட்டியிலிருந்து பொறாமையும் புறங்கூறலும் எழுந்தன. பழந்தமிழ்நாட்டில் போருக்குப் போகாமல் தப்பித்துக் கொள்ள விரும்பியவரைக் காண்பது மிக அருமை. போர்க்களத்துக்குச் செல்வது யார் என்பதிலேதான் போட்டி உண்டாகும். அதிலிருந்து சில சமயம் பொறாமையும் விரோதமும் வளருவதுண்டு.

ஈழநாட்டுக்குச் சென்று மகிந்தனைப் பழிக்குப் பழி வாங்கிச் சோழரின் வீரப்புகழை நிலை நாட்டுவது யார் என்பது பற்றி இச்சமயம் சோழ நாட்டுத் தலைவர்களிடையிலே போட்டி மூண்டது. இந்தப் போட்டியை அடியோடு நீக்கி அனைவரையும் சமாதனப்படுத்தும்படியாகச் சுந்தர சோழ மன்னரின் இளம் புதல்வர் அருள்மொழிவர்மர் முன்வந்தார்.

"அப்பா! பழையாறை அரண்மனையில் அத்தைகளுக்கும் பாட்டிகளுக்குமிடையில் இத்தனை நாள் நான் செல்லப் பிள்ளையாக வளர்ந்தது போதும். ஈழப் போருக்குத் தலைமை வகித்து நடத்த நானே இலங்கை சென்று வருகிறேன்!" என்றார் இளங்கோ அருள்மொழிவர்மர்.

அருள்மொழிவர்மருக்கு அப்போது பிராயம் பத்தொன்பதுதான். அவர் சுந்தரசோழரின் கடைக்குட்டிச் செல்வப் புதல்வர்; பழையாறை அரண்மனைகளில் வாழ்ந்த ராணிமார்களுக்கெல்லாம் செல்லக் குழந்தை; சோழ நாட்டுக்கே அவர் செல்லப் பிள்ளை.

சுந்தர சோழ மன்னர் நல்ல அழகிய தோற்றம் வாய்ந்தவர். அவருடைய தந்தை அரிஞ்சயர், சோழ குலத்துக்கு எதிரிகளாக இருந்த வைதும்பராயர் வம்சத்துப் பெண்ணாகிய கலியாணியை அவளுடைய மேனி அழகைக் கண்டு மோகித்து மணந்து கொண்டார். அரிஞ்சயருக்கும் கலியாணிக்கும் பிறந்த சுந்தரசோழருக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் பராந்தகர். அவருடைய தோற்றத்தின் வனப்பைப் கண்டு நாட்டாரும் நகரத்தாரும் "சுந்தரசோழர்" என்று அவரை அழைத்து வந்தார்கள். அதுவே அனைவரும் வழங்கும் பெயராயிற்று.

அத்தகையருக்குப் பிறந்த குழந்தைகள் எல்லோருமே அழகில் மிக்கவர்கள்தான். ஆனால் கடைசியில் பிறந்த அருள்மொழிவர்மர் அழகில் அனைவரையும் மிஞ்சி விட்டார். அவருடைய முகத்தில் பொலிந்த அழகு, மனித குலத்துக்கு உரியதாக மட்டும் இல்லை; தெய்வீகத்தன்மை பொருந்தியதாக இருந்தது. அவர் குழந்தையாக இருந்தபோது சோழ வம்சத்து ராணிமார்கள் அவரை முத்தமிட்டு முத்தமிட்டுக் கன்னம் கனியச் செய்து விடுவார்கள். எல்லாரிலும் அதிகமாக அவரிடம் வாஞ்சையுடனிருந்தவள் அவருடைய தமக்கையாகிய குந்தவை. அருள்மொழிக்கு இரண்டு பிராயந்தான் மூத்தவளான போதிலும் தம்பியை வளர்க்கும் பொறுப்பு தன் தலை மேலேயே சுமந்திருப்பதாகக் குந்தவைப் பிராட்டி எண்ணியிருந்தாள். குந்தவையிடம் அருள்மொழியும் அதற்கிணையான வாஞ்சை வைத்திருந்தார். தமக்கை இட்ட கோட்டைத் தம்பி தாண்டுவது கிடையாது. இளைய பிராட்டி ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்; அதற்கு மாறாகப் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்து வந்து சொன்னாலும் அருள்மொழிவர்மர் பொருட்படுத்த மாட்டார். தமக்கையின் வாக்கே தம்பிக்குத் தெய்வத்தின் வாக்காயிருந்தது.

தம்பியின் முகத்தைத் தமக்கை அடிக்கடி உற்று நோக்குவாள். விழித்துக்கொண்டிருக்கும்போது மட்டுமல்லாமல் அவர் தூங்கும் போது கூட நாழிகைக் கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பாள். "இந்தப் பிள்ளையிடம் ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறது! அதை வெளிப்படுத்திப் பிரகாசிக்கச் செய்ய வேண்டியது என் பொறுப்பு!" என்று எண்ணமிடுவாள். தம்பி தூங்கும்போது அவனுடைய உள்ளங் கைகளை அடிக்கடி எடுத்துப் பார்ப்பாள். அந்தக் கைகளில் உள்ள ரேகைகள் சங்கு சக்கர வடிவமாக அவளுக்குத் தோன்றும். "ஆகா! உலகத்தை ஒரு குடை நிழலில் புரந்திடப் பிறந்தவன் அல்லவோ இவன்!" என்று சிந்தனை செய்வாள். ஆனால், சோழ சிங்காதனத்தில் இவன் ஏறுவான் என்று எண்ணுவதற்கே இடமிருக்கவில்லை. இவனுக்கு மூத்தவர்கள் பட்டத்துக்கு உரியவர்கள் இரண்டு பேர் இருந்தார்கள். பின், இவனுக்கு எங்கிருந்து ராஜ்யம் வரப்போகிறது! எந்தச் சிம்மாசனத்தில் இவன் ஏறப்போகிறான்? கடவுள் சித்தம் எப்படியோ, யார் கண்டது? உலகம் மிக்க விசாலமானது. எத்தனையோ தேசங்கள், எத்தனையோ ராஜ்யங்கள் இந்நிலவுலகில் இருக்கின்றன. புஜபல பராக்கிரமத்தினால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாடு சென்று சிங்காதனம் ஏறி ராஜ்யம் ஆண்டவர்களைப் பற்றிக் கவிதைகளிலும் காவியங்களிலும் நாம் கேட்டதில்லையா? கங்கை நதி பாயும் வங்க நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட இளவரசன் படகிலேறி இலங்கைக்குச் சென்று அரசு புரியவில்லையா? ஆயிரம் வருஷமாக அந்தச் சிங்கள ராஜ வம்சம் நிலைத்து நிற்கவில்லையா?

இவ்விதமாகக் குந்தவைப் பிராட்டி ஓயாது சிந்தித்து வந்தாள். கடைசியாக, இலங்கைக்கு அனுப்பும் சைன்யத்துக்கு யார் தளபதியாகப் போவது என்பது பற்றி விவாதம் எழுந்தபோது அதற்குரியவன் அருள்மொழிதான் என்ற முடிவுக்கு வந்தாள்.

"தம்பி, அருள்மொழி! உன்னை ஒரு கணம் பிரிந்திருப்பதென்றாலும் எனக்கு எத்தனையோ கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆயினும் நானே உன்னைப் போகச் சொல்ல வேண்டிய சமயம் வந்துவிட்டது. இலங்கைப் படையின் தலைவனாக நீதான் போக வேண்டும்!" என்றாள்.

இளவரசர் குதூகலத்துடன் இதற்குச் சம்மதித்தார். அரண்மனை வாழ்விலிருந்தும் அந்தப்புர மாதரசிகளின் அரவணைப்பிலிருந்தும் எப்போது தப்புவோம் என்று அருள்மொழிவர்மரின் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. அருமைத் தமக்கையே இப்போது போகச் சொல்லிவிட்டாள்! இனி என்ன தடை?

குந்தவை தேவி மனம் வைத்து விட்டால் சோழ சாம்ராஜ்யத்தில் நடவாத காரியம் ஒன்றுமே கிடையாது!

இளங்கோ அருள்மொழிவர்மர் தென் திசைச் சோழ சைன்யத்தின் மாதண்ட நாயகர் ஆனார். இலங்கைக்கும் போனார். அங்கே படைத் தலைமை வகித்துச் சில காலம் போர் நடத்தினார். ஆனால், போர் எளிதில் முடிகிறதாயில்லை. அவர் போர் நடத்திய முறைக்கும் மற்றவர்களின் போர் முறைக்கும் வித்தியாசம் இருந்தது. தாய் நாட்டிலிருந்து அவர் வேண்டியபடியெல்லாம் தளவாடங்களும் சாமக் கிரியைகளும் சரியாக வந்து சேரவில்லை. ஆகையால் இடையில் ஒரு தடவை தாய்நாட்டுக்கு வந்திருந்தார். தந்தையிடம் சொல்லித் தம் விருப்பத்தின்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டார். மறுபடியும் ஈழத்துக்குச் செல்ல ஆயத்தமானார்.

அருமைத் தம்பியைப் போர் முகத்துக்கு அனுப்புவதற்குக் குந்தவை தேவி பழையாறையின் பிரதான மாளிகையில் மங்கள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தாள். அருள்மொழித்தேவர் புறப்பட்ட போது அரண்மனை முற்றத்தில் வெற்றி முரசுகள் முழங்கின; சங்கங்கள் ஆர்ப்பரித்தன; சிறுபறைகள் ஒலித்தன; வாழ்த்து கோஷங்கள் வானை அளாவின.

சோழ குலத்துத் தாய்மார்கள் அனைவரும் அரண்மனையின் செல்லக் குழந்தைக்கு ஆசி கூறி, நெற்றியில் மந்திரித்த திருநீற்றை இட்டு, திருஷ்டி கழித்து வழி அனுப்பினார்கள்.

அரண்மனை வாசலின் முகப்பில், அருள்மொழிவர்மர் வீதி வாசற்படியில் இறங்கவேண்டிய இடத்தில், குந்தவை தேவியின் தோழிப் பெண்கள் கைகளில் தீபமேற்றிய தங்கத் தட்டுகளை ஏந்திக் கொண்டு நின்றார்கள். தோழிப் பெண்கள் என்றால், சாமான்யப்பட்டவர்களா? தென்னாட்டிலுள்ள புகழ் பெற்ற சிற்றரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பழையாறை அரண்மனையில் செம்பியன் மாதேவிக்குப் பணிவிடை செய்வதையும் குந்தவை பிராட்டிக்குத் தோழியாக இருப்பதையும் பெறற்கரும் பாக்கியமாகக் கருதி வந்திருந்தவர்கள். அவர்களிலே கொடும்பாளூர்ச் சிறிய வேளானின் புதல்வி வானதியும் இருந்தாள். இளவரசர் சற்றுத் தூரத்தில் வருவதைப் பார்த்ததும், அந்தப் பெண்கள் எல்லோருமே மனக்கிளர்ச்சி அடைந்தார்கள். இளவரசர் அருகில் வந்ததும் கையில் ஏந்திய தட்டுகளைச் சுற்றி ஆலாத்தி எடுத்தார்கள். அப்போது வானதியின் மேனி முழுதும் திடீரென்று நடுங்கிற்று. கையிலிருந்த தட்டு தவறிக் கீழே விழுந்து 'டணார்' என்ற சத்தத்தை உண்டாக்கியது. "அடடா! இது என்ன அபசகுனம்!" என்ற எண்ணம் எல்லாருடைய மனத்திலும் உண்டாயிற்று. ஆனால் தட்டு கீழே விழுந்த பிறகும் திரி மட்டும் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அனைவரும் நிம்மதி அடைந்தார்கள். 'இது மிக நல்ல சகுனம்' என்றே முதியவர்கள் உறுதி கூறினார்கள்.

எவ்விதக் காரணமும் இன்றிப் பீதியும் கலக்கமும் அடைந்து தட்டை நழுவவிட்ட பெண்ணைப் பார்த்துப் புன்னகை புரிந்துவிட்டு இளங்கோ அருள்மொழிவர்மர் மேலே சென்றார். அவர் அப்பால் சென்றதும் வானதியும் மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்து விட்டாள். 'ஆகா! இப்பேர்ப்பட்ட தவறு செய்து விட்டோ மே' என்ற எண்ணமே வானதியை அவ்வாறு மூர்ச்சையடைந்து விழும்படிச் செய்து விட்டது. குந்தவையின் கட்டளையின் பேரில் அவளை மற்றப் பெண்கள் தூக்கிச் சென்று ஓர் அறையில் மேடையில் கிடத்தினார்கள். குந்தவைப் பிராட்டி தம் சகோதரர் புறப்படுவதைப் பார்ப்பதற்குக் கூட நில்லாமல் உள்ளே சென்று வானதிக்கு மூர்ச்சை தெளிவிக்க முயன்றாள். வாசலில் நின்றபடியே வானதி சுருண்டு விழுந்ததைப் பார்த்துவிட்ட அருள்மொழிவர்மர் தாம் குதிரை மீது ஏறுவதற்கு முன்னால், "விழுந்த பெண்ணுக்கு எப்படியிருக்கிறது? மயக்கம் தெளிந்ததா?" என்று விசாரித்துவர ஆள் அனுப்பினார். விசாரிக்க வந்தவனிடம் குந்தவை தேவி, "இளவரசரை இங்கே சிறிது வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லு!" என்று திருப்பிச் சொல்லி அனுப்பினாள். தமக்கையின் சொல்லை என்றும் தட்டியறியாத இளவரசர் அவ்விதமே மீண்டும் அரண்மனைக்குள் வந்தார். வானதியைத் தம் தமக்கை மார்பின் மீது சாத்திக்கொண்டு மூர்ச்சை தெளிவிக்க முயன்று கொண்டிருந்த காட்சி அவருடைய மனத்தை உருக்கியது.

"அக்கா! இந்தப் பெண் யார்? இவள் பெயர் என்ன?" என்று இளங்கோ கேட்டார்.

"கொடும்பாளூர்ச் சிறிய வேளாரின் மகள்; இவள் பெயர் வானதி. கொஞ்சம் பயந்த சுபாவமுடையவள்!" என்றாள் குந்தவை.

"ஆகா! இப்போது இவள் மூர்ச்சையாகி விழுந்ததின் காரணம் தெரிந்தது. இந்தப் பெண்ணின் தந்தைதானே இலங்கை சென்று மீண்டும் வராமல் போர்க்களத்தில் மாண்டார்? அதை நினைத்துக் கொண்டாள் போலிருக்கிறது!" என்றார் இளவரசர்.

"இருக்கலாம். ஆனால் இவளைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்! நான் பார்த்துக்கொள்கிறேன்! இலங்கை சென்று விரைவில் வெற்றி வீரனாகத் திரும்பி வா! அடிக்கடி எனக்குச் செய்தி அனுப்பிக் கொண்டிரு!" என்றாள் இளைய பிராட்டி.

"ஆகட்டும்; இங்கே ஏதாவது விஷயம் நிகழ்ந்தாலும் எனக்குச் செய்தி அனுப்புங்கள்!" என்றார் இளங்கோ.

இச்சமயத்தில், இளவரசரின் இனிய குரலின் மகிமையினால்தானோ என்னவோ, வானதிக்கு மூர்ச்சை தெளிந்து நினைவு வரத் தொடங்கியது அவளுடைய கண்கள் முதலில் இலேசாகத் திறந்தன. எதிரில் இளவரசரைப் பார்த்ததும் கண்கள் அகன்று விரிந்தன. பின்னர் முகமும் மலர்ந்தது. அவளது பவழச் செவ்வாயில் தோன்றிய புன்னகையினால் கன்னங்கள் குழிந்தன.

உணர்வு வந்ததும் நாணமும் கூட வந்தது. சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். பின்னால் திருப்பிப் பார்த்தாள். தன்னை இளையபிராட்டி தாங்கிக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டு வெட்கினாள். நடந்ததெல்லாம் ஒரு கணத்தில் நினைவு வந்தது.

"அக்கா! இந்த மாதிரி செய்துவிட்டேனே?" என்று கண்களில் நீர் மல்கக் கூறினாள்.

இதற்குக் குந்தவை மறுமொழி சொல்வதற்குள் இளவரசர், "அதற்காக நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். வானதி! தவறுவது யாருக்கும் நேரிடுகிறதுதான். மேலும் உனக்கு அவ்விதம் நேருவதற்கு முக்கியக் காரணமும் இருக்கிறது. அதைத்தான் இளைய பிராட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!" என்றார்.

வானதிக்குத் தான் காண்பது உண்மையா, கேட்பது மெய்யா என்ற சந்தேகம் வந்துவிட்டது. பெண்களைச் சாதாரணமாக ஏறிட்டுப் பார்க்காமலே போகும் வழக்கமுடைய இளவரசரா என்னுடன் பேசுகிறார்? எனக்கு ஆறுதல்மொழி கூறித் தேற்றுகிறார்? என் பாக்கியத்தை என்னவென்று சொல்வது? ஆகா! உடம்பு புல்லரிக்கிறதே! மறுபடியும் மயக்கம் வந்துவிடும் போலிருக்கிறதே!...

இளவரசர், அக்கா! சேனைகள் காத்திருக்கின்றன. நான் போய் வருகிறேன். நீங்கள் எனக்குச் செய்தி அனுப்பும் போது இந்தப் பெண்ணுக்கு உடம்பு எப்படியிருக்கிறது என்றும் சொல்லி அனுப்புங்கள். தாய் தகப்பனில்லாத இப் பெண்ணை நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

இவற்றையெல்லாம் குந்தவைதேவியின் மற்றத் தோழிப் பெண்கள் மேல் மாடங்களிலிருந்து பலகணிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்தார்கள். அவர்களுடைய உள்ளங்களில் பொறாமைத் தீ கொழுந்துவிட ஆரம்பித்தது.

அன்றுமுதல் குந்தவைப் பிராட்டி வானதியிடம் தனி அன்பு காட்டத் தொடங்கினாள். இணைபிரியாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தாள். தான் கற்றிருந்த கல்வியையும் கலைகளையும் அவளுக்கும் கற்பித்தாள். எங்கே போனாலும் அவளைத் தவறாமல் கூட அழைத்துச் சென்றாள். அரண்மனை நந்தவனத்துக்கு வானதியை அடிக்கடி அழைத்துச் சென்று குந்தவைதேவி அவளிடம் அந்தரங்கம் பேசினாள். தன் இளைய சகோதரனுடைய வருங்கால மேன்மையைக் குறித்துத் தான் கண்டு வந்த கனவுகளையெல்லாம் அவளிடமும் சொன்னாள். அதையெல்லாம் வானதியும் சிரத்தையுடன் கேட்டாள்.

மேலே கூறிய நிகழ்ச்சிக்குப் பிறகு, வானதி இன்னும் நாலைந்து தடவை உணர்வு இழந்து மூர்ச்சையடைந்தாள். அப்போதெல்லாம் குந்தவைப் பிராட்டி அவளுக்குத் தக்க சிகிச்சை செய்து திரும்ப உணர்வு வருவித்தாள். மூர்ச்சை தெளியும்போது வானதி விம்மி விம்மி அழுது கொண்டே எழுந்திருப்பாள்.

"என்னடி, அசடே! எதற்காக இப்படி அழுகிறாய்!" என்று குந்தவை கேட்பாள்.

"தெரியவில்லையே, அக்கா! மன்னியுங்கள்!" என்பாள் வானதி.

குந்தவை அவளைக் கட்டிக்கொண்டு உச்சி முகந்து ஆறுதல் கூறுவாள்.

இவையெல்லாம் மற்றப் பெண்களுக்கு மேலும் மேலும் பொறாமையை வளர்த்துக் கொண்டிருந்தன.

எனவே, குந்தவையும், வானதியும் ரதம் ஏறிக் குடந்தை சோதிடரின் வீட்டுக்குப் போனபிறகு அப்பெண்கள் மேற்கூறியவாறெல்லாம் பேசிக் கொண்டது இயல்பேயல்லவா?

முந்தைய அத்தியாயம் அடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com