Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruPonniyin SelvanPart 1
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

13. வளர்பிறைச் சந்திரன்


இளவரசிகளின் ரதம் கண்ணுக்கு மறைந்தபிறகு, சோதிடர் வந்தியத்தேவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தம்முடைய பீடத்தில் அமர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்த அவ்வாலிபனையும் உட்காரச் சொன்னார். அவனை ஏற இறங்கப் பார்த்தார்.

"தம்பி! நீ யார்? எங்கே வந்தாய்?" என்று கேட்டார். வந்தியத்தேவன் சிரித்தான்.

"என்னப்பா, சிரிக்கிறாய்?"

"இல்லை, தாங்கள் இவ்வளவு பிரபலமான சோதிடர், என்னைக் கேள்வி கேட்கிறீர்களே? நான் யார், எதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று சோதிடத்திலேயே பார்த்துக் கொள்ளக் கூடாதா?"

"ஓகோ! அதற்கென்ன? பார்த்துக்கொள்கிறேன். ஆனால் எனக்கு நானே ஜோசியம் பார்த்துக் கொண்டால், தட்சிணை யார் கொடுப்பார்கள் என்று தான் யோசிக்கிறேன்."

வந்தியத்தேவன் புன்னகை செய்துவிட்டு, "சோதிடரே! இப்போது இங்கே வந்துவிட்டுப் போனார்களே? அவர்கள் யார்?" என்று கேட்டான்.

"ஓ! அவர்களா? நீ யாரைப் பற்றிக் கேட்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. நீ என் சீடனைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது இங்கே இருந்தார்களே, அவர்களைப் பற்றித்தான் கேட்கிறாய், இல்லையா? ரதத்தில் ஏறிக்கொண்டு, பின்னால் புழுதியைக் கிளப்பி விட்டுக் கொண்டு போனார்களே? அவர்களைப் பற்றித் தானே?" என்று குடந்தை சோதிடர் சுற்றி வளைத்துக் கேட்டார்.

"ஆமாம், ஆமாம்! அவர்களைப் பற்றித்தான் கேட்டேன்..."

"நன்றாகக் கேள். கேட்க வேண்டாம் என்று யார் சொன்னது? அவர்கள் இரண்டு பேரும் இரண்டு பெண்மணிகள்!"

"அது எனக்கே தெரிந்து போய்விட்டது. சோதிடரே! நான் குருடன் இல்லை. ஆண்களையும் பெண்களையும் நான் வித்தியாசம் கண்டுபிடித்து விடுவேன். பெண் வேடம் பூண்ட ஆணாயிருந்தால் கூட எனக்குத் தெரிந்து போய்விடும்."

"பின்னே என்ன கேட்கிறாய்?"

"பெண்கள் என்றால், அவர்கள் இன்னார், இன்ன ஜாதி..."

"ஓகோ! அதையா கேட்கிறாய்! பெண்களில் பத்மினி, சித்தினி, காந்தர்வி, வித்யாதரி என்பதாக நாலு ஜாதிகள் உண்டு. உனக்குச் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் கொஞ்சம் பயிற்சி இருக்கும் போலிருக்கிறது. அந்த நாலு ஜாதிகளில் இவர்கள் பத்மினி, காந்தர்வி ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்."

"கடவுளே!..."

"ஏன்? அப்பனே!"

"கடவுளை நான் கூப்பிட்டல், நீங்கள் 'ஏன்?' என்று கேட்கிறீர்களே?"

"அதில் என்ன பிசகு? கடவுள் சர்வாந்தர்யாமி என்று நீ கேட்டதில்லையா? பெரியவர்களுடைய சகவாசம் உனக்கு அவ்வளவாக கிடையாது போலிருக்கிறது! எனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான். உனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான். நீ இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாயே, அந்த என் சீடனுக்குள்ளே இருப்பவரும் கடவுள்தான்..."

"போதும், போதும், நிறுத்துங்கள்."

"இத்தனை நேரம் பேசச் சொன்னதும் கடவுள்தான்; இப்போது நிறுத்தச் சொல்வதும் கடவுள்தான்!"

"சோதிடரே! இப்போது இங்கேயிருந்து போனார்களே, அந்தப் பெண்கள் யார், எந்த ஊர், என்ன குலம், என்ன பெயர் - என்று கேட்டேன், சுற்றி வளைக்காமல் மறுமொழி சொன்னால்..."

"சொன்னால் எனக்கு நீ என்ன தருவாய் அப்பனே!"

"என் வந்தனத்தைத் தருவேன்."

"உன் வந்தனத்தை நீயே வைத்துக்கொள். ஏதாவது பொன்தானம் கொடுப்பதாயிருந்தால் சொல்லு!"

"பொன்தானம் கொடுத்தால் நிச்சயமாகச் சொல்லுவீர்களா?"

"அதுவும் சொல்லக்கூடியதாயிருந்தால்தான் சொல்லுவேன்! தம்பி! இதைக் கேள். சோதிடன் வீட்டுக்குப் பலரும் வந்து போவார்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லக் கூடாது. இப்போது போனவர்களைப் பற்றி உன்னிடம் சொல்ல மாட்டேன். உன்னைப் பற்றி வேறு யாராவது கேட்டால் அவர்களுக்கும் உன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேன்."

"ஆகா! ஆழ்வார்க்கடியான் நம்பி தங்களைப் பற்றிச் சொன்னது முற்றும் உண்மைதான்."

"ஆழ்வார்க்கடியாரா? அவர் யார் அப்படி ஒருவர்?"

"தங்களுக்குத் தெரியாதா, என்ன, ரொம்பவும் தங்களைத் தெரிந்தவர்போல் பேசினாரே? ஆழ்வார்க்கடியான் நம்பி என்று கேட்டதேயில்லையா?"

"ஒருவேளை ஆளைத் தெரிந்திருக்கும்; பெயர் ஞாபகம் இராது. கொஞ்சம் அடையாளம் சொல்லு, பார்க்கலாம்!"

"கட்டையாயும் குட்டையாயும் இருப்பார். முன் குடுமி வைத்திருப்பார். இளந் தொந்தியில் வேட்டியை இறுக்கிக் கட்டியிருப்பார். சந்தனத்தைக் குழைத்து உடம்பெல்லாம் கீழிருந்து மேலாக இட்டிருப்பார். சைவர்களைக் கண்டால் சண்டைக்குப் போவார். அத்வைதிகளைக் கண்டால் தடியைத் தூக்குவார். சற்றுமுன்னால் 'நீயும் கடவுள், நானும் கடவுள்' என்றீர்களே, இதை ஆழ்வார்க்கடியான் கேட்டிருந்தால் 'கடவுளை கடவுள் தாக்குகிறது!" என்று சொல்லித் தடியினால் அடிக்க வருவார்..."

"தம்பி! நீ சொல்லுவதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் திருமலையப்பனைப் பற்றிச் சொல்லுகிறாய் போலிருக்கிறது..."

"அவருக்கு அப்படி வெவ்வேறு பெயர்கள் உண்டா?"

"ஊருக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்வார் அந்த வீர வைஷ்ணவர்."

"ஆளுக்குத் தகுந்த வேஷமும் போடுவாராக்கும்!"

"ஆகா! சமயத்துக்குத் தகுந்த வேஷமும் போடுவார்."

"சொல்லுவதில் கொஞ்சம் கற்பனையும் பொய்யும் கலந்திருக்குமோ?"

"முக்காலே மூன்றரை வீசம் பொய்யும் கற்பனையும் இருக்கும். அரை வீசம் உண்மையும் இருக்கலாம்."

"ரொம்பப் பொல்லாத மனிதர் என்று சொல்லுங்கள்!"

"அப்படியும் சொல்லிவிட முடியாது. நல்லவர்க்கு நல்லவர்; பொல்லாதவர்க்குப் பொல்லாதவர்."

"அவருடைய பேச்சை நம்பி ஒன்றும் செய்ய முடியாது."

"நம்புவதும் நம்பாததும் அந்தந்தப் பேச்சைப் பொறுத்திருக்கிறது..."

"உதாரணமாக, தங்களிடம் போய்ச் சோதிடம் கேட்டால் நல்லபடி சொல்லுவீர்கள் என்று அவர் கூறியது..."

"அவர் பேச்சில் அரை வீசம் உண்மையும் இருக்கும் என்றேனே, அந்த அரை வீசத்தில் அது சேர்ந்தது."

"அப்படியானால் எனக்கு ஏதாவது ஆருடம் சொல்லுங்கள். நேரமாகிவிட்டது. எனக்குப் போகவேண்டும், ஐயா"

"அப்படி அவசரமாக எங்கே போகவேண்டும், ஐயா"

"அதையும் தாங்கள் சோதிடத்தில் பார்த்துச் சொல்லக் கூடாதா? எங்கே போகவேண்டும். எங்கே போகக் கூடாது. போனால் காரியம் சித்தியாகுமா என்பதைப் பற்றியெல்லாந்தான் தங்களைக் கேட்க வந்தேன்."

"சோதிடம், ஆருடம் சொல்வதற்கும் ஏதாவது ஆதாரம் வேண்டும் அப்பனே! ஜாதகம் வேண்டும்; ஜாதகம் இல்லாவிடில், பிறந்தநாள், நட்சத்திரமாவது தெரியவேண்டும்; அதுவும் தெரியாவிடில், ஊரும் பேருமாவது சொல்லவேண்டும்."

"என் பெயர் வந்தியத்தேவன்!"

"ஆகா! வாணர் குலத்தவனா?"

"ஆமாம்."

"வல்லவரையன் வந்தியத்தேவனா?"

"அவனேதான்"

"அப்படிச் சொல்லு, தம்பி! முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? உன் ஜாதகம் கூட என்னிடம் இருந்ததே! தேடிப் பார்த்தால் கிடைக்கும்."

"ஓஹோ! அது எப்படி?"

"என்னைப் போன்ற சோதிடர்களுக்கு வேறு என்ன வேலை? பெரிய வம்சத்தில் பிறந்த பிள்ளைகள் - பெண்கள் இவர்களுடைய ஜாதகங்களையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்வோம்."

"நான் அப்படியொன்றும் பெரிய வம்சத்தில் பிறந்தவன் அல்லவே..."

"நன்றாகச் சொன்னாய்! உன்னுடைய குலம் எப்பேர்ப்பட்ட குலம்! வாணர் குலத்தைப் பற்றிக் கவிவாணர்கள் எவ்வளவு கவிகளையெல்லாம் பாடியிருக்கிறார்கள்! ஒருவேளை நீ கேட்டிருக்க மாட்டாய்."

"ஒரு கவிதையைத்தான் சொல்லுங்களேன், கேட்கலாம்."

சோதிடர் உடனே பின்வரும் பாடலைச் சொன்னார்:

"வாணன் புகழுரையா வாயுண்டோ மாகதர்கோன்
வாணன் பெயரெழுதா மார்புண்டோ - வாணன்
கொடி தாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ
அடிதாங்கி நில்லா அரசு!"

சோதிடர் இசைப்புலவர் அல்லவென்பது அவர் பாடும்போது வெளியாயிற்று. ஆயினும் பாடலைப் பண்ணில் அமைத்து மிக விளக்கமாகவும் உருக்கமாகவும் பாடினார்.

"கவி எப்படியிருக்கிறது?" என்று கேட்டார்.

"கவி காதுக்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய கொடியை ஏதாவது ஒரு மாட்டின் கொம்பில் நானே கட்டி விட்டால்தான் உண்டு. அரசமரத்துக் கிளைமேல் ஏறி நின்றால் தான் அரசு என் அடியைத் தாங்கும். அது கூடச் சந்தேகம்தான். கனம் தாங்காமல் கிளை முறிந்து என்னையும் கீழே தள்ளினாலும் தள்ளும்!" என்றான் வந்தியத்தேவன்.

"இன்றைக்கு உன் நிலைமை இப்படி; நாளைக்கு எப்படியிருக்கும் என்று யார் கண்டது?" என்றார் சோதிடர்.

"தாங்கள் கண்டிருப்பீர்கள் என்று எண்ணியல்லவா வந்தேன்?" என்றான் வல்லவரையன்.

"நான் என்னத்தைக் கண்டேன், தம்பி! எல்லாரையும்போல் நானும் அற்ப ஆயுள் படைத்த மனிதன் தானே? ஆனால் கிரகங்களும் நட்சத்திரங்களும் வருங்கால நிகழ்ச்சிகளைச் சொல்லுகின்றன. அவை சொல்லுவதை நான் சிறிது கண்டறிந்து கேட்பவர்களுக்குச் சொல்கிறேன். அவ்வளவுதான்!"

"கிரஹங்களும் நட்சத்திரங்களும் என் விஷயத்தில் என்ன சொல்கின்றன, சோதிடரே?"

"நீ நாளுக்கு நாள் உயர்வாய் என்று சொல்லுகின்றன."

"சரியாக போச்சு! இப்போதுள்ள உயரமே அதிகமாயிருக்கிறது. உங்கள் வீட்டில் நுழையும்போது குனிய வேண்டியிருக்கிறது! இன்னும் உயர்ந்து என்ன செய்வது? இப்படியெல்லாம் பொதுவாகச் சொல்லாமல் குறிப்பாக ஏதாவது சொல்லுங்கள்."

"நீ ஏதாவது குறிப்பாகக் கேட்டால், நானும் குறிப்பாகச் சொல்லுவேன்."

"நான் தஞ்சாவூருக்குப் போகிற காரியம் கைகூடுமா? சொல்லுங்கள்."

"நீ தஞ்சாவூருக்கு உன் சொந்த காரியமாகப் போகிறதானால் போகிற காரியம் கைகூடும். இப்போது உனக்கு ஜயக்கிரகங்கள் உச்சமாயிருக்கின்றன. பிறருடைய காரியமாகப் போவதாயிருந்தால், அந்த மனிதர்களுடைய ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லவேண்டும்!"

வந்தியத்தேவன் தலையை ஆட்டிக் கொண்டு மூக்கின் மேல் விரலை வைத்து, "சோதிடரே! தங்களைப் போன்ற சாமர்த்தியசாலியை நான் பார்த்ததேயில்லை!" என்றான்.

"முகஸ்துதி செய்யாதே, தம்பி!" என்றார் சோதிடர்.

"இருக்கட்டும். கேட்க வேண்டியதைத் தெளிவாகவே கேட்டுவிடுகிறேன். தஞ்சாவூரில் சக்கரவர்த்தியைத் தரிசிக்க விரும்புகிறேன், அது சாத்தியமாகுமா?"

"என்னைவிடப் பெரிய சோதிடர்கள் இருவர் தஞ்சாவூரில் இருக்கிறார்கள். அவர்களைத் தான் கேட்க வேண்டும்."

"அவர்கள் யார்?"

"பெரிய பழுவேட்டரையர் ஒருவர்; சின்ன பழுவேட்டரையர் ஒருவர்."

"சக்கரவர்த்தியின் உடல்நிலை மிக மோசமாகியிருப்பதாகச் சொல்கிறார்களே? அது உண்மையா?"

"யாராவது ஏதாவது சொல்லுவார்கள்! சொல்லுவதற்கு என்ன? அதையெல்லாம் நம்பாதே! வெளியிலும் சொல்லாதே!"

"சக்கரவர்த்திக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அடுத்த பட்டம் யாருக்கு என்று சொல்ல முடியுமா?"

"அடுத்த பட்டம் உனக்குமில்லை; எனக்குமில்லை; நாம் ஏன் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்?"

"அந்த மட்டில் தப்பிப் பிழைத்தோம்!" என்றான் வந்தியத்தேவன்.

"உண்மைதான், தம்பி! பட்டத்துக்குப் பாத்தியதை என்பது சாதாரண விஷயம் அல்ல; மிக்க அபாயகரமான் விஷயம் இல்லையா!"

"ஜோசியரே! தற்சமயம் காஞ்சியில் இருக்கிறாரே, இளவரசர் ஆதித்த கரிகாலர்."

"இருக்கிறார். அவருடைய சார்பாகத்தானே நீ வந்திருக்கிறாய்!"

"கடைசியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள்; சந்தோஷம் அவருடைய யோகம் எப்படி இருக்கிறது."

"ஜாதகம் கைவசம் இல்லை, தம்பி! பார்த்துத்தான் சொல்ல வேண்டும்."

"மதுராந்தகரின் யோகம் எப்படி?"

"அவருடையது விசித்திரமான ஜாதகம் பெண்களின் ஜாதகத்தை ஒத்தது. எப்போதும் பிறருடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருப்பது..."

"இப்போதுகூடச் சோழ நாட்டில் பெண்ணரசு நடைபெறுவதாகச் சொல்கிறார்களே? அல்லி ராஜ்யத்தைவிட மோசம் என்கிறார்களே?"

"எங்கே அப்படிச் சொல்லுகிறார்கள்?"

"கொள்ளிடத்துக்கு வடக்கே சொல்லுகிறார்கள்?"

"பெரிய பழுவேட்டரையர் புதிதாக மணம் புரிந்துகொண்ட இளைய ராணியின் ஆதிக்கத்தைப்பற்றிச் சொல்கிறார்கள் போலிருக்கிறது."

"நான் கேள்விப்பட்டது வேறு."

"என்ன கேள்விப்பட்டாய்?"

"சக்கரவர்த்தியின் திருக்குமாரி குந்தவைப் பிராட்டிதான் அவ்விதம் பெண்ணரசு செலுத்துவதாகச் சொல்கிறார்கள்!"

சோதிடர் சற்றே வந்தியத்தேவன் முகத்தை உற்றுப் பார்த்தார். சற்று முன் அந்த வீட்டிலிருந்து சென்றது குந்தவை தேவி என்று தெரிந்து கொண்டுதான் அவ்விதம் கேட்கிறானோ என்று முகத்திலிருந்து அறிய முயன்றார். ஆனால் அதற்கு அறிகுறி ஒன்றும் தெரியவில்லை.

"சுத்த தவறு, தம்பி! சுந்தர சோழ சக்கரவர்த்தி தஞ்சையில் இருக்கிறார். குந்தவை பிராட்டி பழையாறையில் இருக்கிறார். மேலும்..."

"மேலும் என்ன? ஏன் நிறுத்திவிட்டீர்கள்?"

"பகலில் பக்கம் பார்த்துப் பேச வேண்டும்; இரவில் அதுவும் பேசக் கூடாது. ஆனாலும் உன்னிடம் சொன்னால் பாதகமில்லை. இப்போது சக்கரவர்த்திக்கு அதிகாரம் ஏது? எல்லா அதிகாரங்களையும் பழுவேட்டரையர்கள் அல்லவா செலுத்துகிறார்கள்!"

இப்படி சொல்லிவிட்டுச் சோதிடர் வந்தியத்தேவனுடைய முகத்தை மறுபடியும் ஒரு தடவை கவனமாகப் பார்த்தார்.

"ஜோசியரே! நான் பழுவேட்டரையரின் ஒற்றன் அல்ல. அப்படிச் சந்தேகப்பட வேண்டாம். சற்று முன்னால் ராஜ்யங்களும் ராஜவம்சங்களும் நிலைத்து நில்லாமையைப் பற்றிச் சொன்னீர்கள். நான் பிறந்த வாணர் குலத்தையே உதாரணமாகச் சொன்னீர்கள். தயவுசெய்து உண்மையைச் சொல்லுங்கள். சோழ வம்சத்தின் வருங்காலம் எப்படியிருக்கும்?"

"உண்மையைச் சொல்கிறேன்; சந்தேகம் சிறிதுமின்றிச் சொல்கிறேன். ஆனி மாதக் கடைசியில் காவேரியிலும் காவேரியின் கிளை நதிகளிலும் புதுவெள்ளம் வரும். அப்போது அது நாளுக்கு நாள் பெருகப்போகும் புது வெள்ளம் என்பது காவேரி தீரத்தில் உள்ளவர்களுக்கு நன்றாய்த் தெரியும். ஆவணி, புரட்டாசி வரையிலும் வெள்ளம் பெருகிக் கொண்டுதானிருக்கும். கார்த்திகை மார்கழியில் வெள்ளம் வடிய ஆரம்பிக்கும். இது வடிகிற வெள்ளம் என்பதும் காவேரிக் கரையில் உள்ளவர்களுக்குத் தெரிந்து போகும். சோழ சாம்ராஜ்யம் இப்போது நாளுக்கு நாள் பெருகும் புதுவெள்ளத்தை ஒத்திருக்கிறது. இன்னும் பலநூறு வருஷம் இது பெருகிப் பரவிக் கொண்டேயிருக்கும். சோழப் பேரரசு இப்போது வளர்பிறைச் சந்திரனாக இருந்து வருகிறது. பௌர்ணமிக்கும் இன்னும் பல நாள் இருக்கிறது. ஆகையால் மேலும் மேலும் சோழ மகாராஜ்யம் வளர்ந்து கொண்டேயிருக்கும்..."

"இத்தனை நேரம் தங்களுட்ன் பேசியதற்கு இந்த ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். வந்தனம், இன்னும் ஒரு விஷயம் மட்டும் முடியுமானால் சொல்லுங்கள். எனக்கு கப்பல் ஏறிக் கடற் பிரயாணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ரொம்ப நாளாக இருக்கிறது..."

"அந்த விருப்பம் நிச்சயமாகக் கைகூடும். நீ சகடயோகக்காரன். உன் காலில் சக்கரம் இருப்பது போலவே ஓயாமல் சுற்றிக் கொண்டிருப்பாய். நடந்து போவாய்; குதிரை ஏறிப் போவாய்; யானை மேல் போவாய்; கப்பல் ஏறியும் போவாய்; சீக்கிரமாகவே உனக்குக் கடற் பிரயாணம் செய்யும் யோகம் இருக்கிறது."

"ஐயா! தென் திசைப் படையின் சேனாபதி, தற்சமயம் ஈழத்திலே யுத்தம் நடத்தும் இளவரசர், அருள்மொழிவர்மரைப் பற்றித் தாங்கள் சொல்லக்கூடுமா? கிரஹங்களும் நட்சத்திரங்களும் அவரைப் பற்றி என்ன சொல்லுகின்றன?"

"தம்பி! கப்பலில் பிரயாணம் செய்வோர் திசையறிவதற்கு ஒரு காந்தக் கருவியை உபயோகிக்கிறார்கள். கலங்கரை விளங்கங்களும் உபயோகப்படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம்விட, நடுக்கடலில் கப்பல் விடும் மாலுமிகளுக்கு உறுதுணையாயிருப்பது எது தெரியுமா? வடதிசையில் அடிவானத்தில் உள்ள துருவ நட்சத்திரந்தான். மற்ற நட்சத்திரங்கள், -கிரஹங்கள் எல்லாம் இடம் பெயர்ந்து போய் கொண்டேயிருக்கும். ஸப்தரிஷி மண்டலமும் திசைமாறிப் பிரயாணம் செய்யும். ஆனால் துருவ நட்சத்திரம் மட்டும் இடத்தைவிட்டு அசையாமல் இருந்த இடத்திலேயே இருக்கும். அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்றவர் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் கடைக்குட்டிப் புதல்வரான இளவரசர் அருள்மொழிவர்மர். எதற்கும் நிலைகலங்காத திட சித்தமுடையவர். தியாகம், ஒழுக்கம் முதலிய குணங்களில் போலவே வீரபௌருஷத்திலும் சிறந்தவர். கல்வியறிவைப் போலவே உலக அறிவும் படைத்தவர். பார்த்தாலே பசி தீரும் என்று சொல்லக் கூடிய பால் வடியும் களைமுகம் படைத்தவர். அதிர்ஷ்ட தேவதையின் செல்வப் புதல்வர். மாலுமிகள் துருவ நட்சத்திரத்தைக் குறி கொள்வது போல், வாழ்க்கைக் கடலில் இறங்கும் உன் போன்ற வாலிபர்கள் அருள்மொழிவர்மரைக் குறியாக வைத்துக் கொள்வது மிக்க பலன் அளிக்கும்."

"அப்பப்பா! இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றி எவ்வளவெல்லாம் சொல்கிறீர்கள்? காதலனை காதலி வர்ணிப்பது போல் அல்லவா வர்ணிக்கிறீர்கள்?"

"தம்பி! காவிரி தீரத்திலுள்ள யாரைக் கேட்டாலும் என்னைப் போலத்தான் சொல்வார்கள்."

"மிக்க வந்தனம், சோதிடரே! சமயம் நேர்ந்தால் உங்கள் புத்திமதியின்படியே நடப்பேன்."

"உன்னுடைய அதிர்ஷ்டக் கிரகமும் உச்சத்துக்கு வந்திருக்கிறது என்று அறிந்துதான் சொன்னேன்."

"போய் வருகிறேன் சோதிடரே. என் மனமார்ந்த வந்தனத்துடன் என்னால் இயன்ற பொன் தனமும் கொஞ்சம் சமர்ப்பிக்கிறேன். தயவு செய்து பெற்றுக் கொள்ளவேணும்."

இவ்விதம் கூறி, ஐந்து கழஞ்சு பொன் நாணயங்களை வந்தியத்தேவன் சமர்ப்பித்தான்.

"வாணர் குலத்தின் கொடைத்தன்மை இன்னமும் பட்டுப்போகவில்லை!" என்று சொல்லிக்கொண்டு சோதிடர் பொன்னை எடுத்துக் கொண்டார்.

முந்தைய அத்தியாயம்அத்தியாய வரிசைஅடுத்த அத்தியாயம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com