Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூலை 2009

மாவோயிஸ்ட்டுக்குத் தடை: இடதுசாரிகளின் வலதுசாரி முகம்
கி.வெங்கட்ராமன்

மேற்கு வங்க இடது முன்னணி அரசும், காங்கிரசுக் கூட்டணியின் இந்திய அரசும் இணைந்து ஒருவகை உள்நாட்டுப் போரை மாவோயிஸ்டுகளுக்குஎதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளன. மாவோயிஸ்ட் கட்சியை இந்திய அரசு தடைசெய்துள்ளது. கடந்த 22.06.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யை ‘பயங்கரவாத அமைப்பு’ என அறிவித்துள்ளது. இந்த அமைப்பையும் சேர்த்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத அமைப்பு என பட்டியலிடப்பட்டுள்ள இயக்கங்களின் எண்ணிக்கை 35 ஆகிறது.

மக்கள் போர் அமைப்பும், மாவோயிஸ்ட் மையமும் இணைந்து 2004 அக்டோபரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)யை உருவாக்கின. மேற்கண்ட இரு அமைப்புகளும் ஏற்கெனவே பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டவை. இவை இரண்டும் இணைந்து உருவான மாவோயிஸ்ட் கட்சி இப்போது தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளம் மேற்கு மிதுனாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் கட்சி நடத்தி வரும் போராட்டங்களே இத்தடை ஆணைக்கு உடனடிக் காரணமாக சொல்லப்படுகிறது. இந்த ஆணையின் காரணமாக மாவோயிஸ்ட் கட்சியும் , அதன் சார்பு அமைப்புகளும் இந்தியா முழுவதும் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப் படுகின்றன. அவ்வமைப்பினர் வேட்டையாடப்படுகின்றனர். மேற்கு வங்காள மாநிலத்தில் மிதுனாப்பூர், புருலியா, பாங்குரா மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் இடையே மாவோயிஸ்ட் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளாகவே செல்வாக்குப் பெற்று வருகிறது. தொடக்கத்திலிருந்து மேற்கு வங்காள இடது சாரி அரசின் பல்வேறு அடக்குமுறைகளைத் தாங்கியே இக்கட்சி வளர்ந்து வருகிறது. தொடர்ந்து புறக்கணிப்புக்கும், காவல்துறை அடக்குமுறைக்கும் ஆளான இப்பழங்குடி மக்கள் மேற்கு மிதுனாப்பூர் மாவட்டத்தில் லால்கார், தரம்பூர், சிஜுவா, ஜார்கிராம் போன்ற பகுதிகளில் “காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் குழு” என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த ஏழு மாதங்களாக தொடர்ப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை புறக்கணிப்பு, ஆளுங்கட்சி புறக்கணிப்பு என்ற போராட்ட வடிவங்களை இம்மக்கள் மேற்கொண்டுள்ளனர். காவல்துறையினருக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பதில்லை என்ற முடிவில் இம்மக்கள் உறுதியாக இருக்கின்றனர். மக்கள் செல்லும் பேருந்துகளில் காவல்துறையினர் ஏறினால் அவர்களை இறக்கிவிடுவது, காவல்துறை வாகனங்கள் பழுதானால் அதை நீக்க உதவி செய்ய மறுப்பது, காவல்துறையினருக்கு உணவோ, நீரோ, நெருப்போ தராமல் புறக்கணிப்பது என்று இப்போராட்டம் நாள் ஆக ஆக தீவிரம் பெற்று வந்தது. இதேபோன்ற நிலை ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்களுக்கும் நேர்ந்தது. மேற்கு வங்காள அரசின் கடும் அடக்குமுறையும் பொய்ப் பிரச்சாரமும் பழங்குடி மக்களின் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. இவ்வியக்கத்திற்கு மாவோயிஸ்ட்டுகள் தலைமை தாங்கினாலும் இது பெருந்திரள் மக்களின் போராட்டமாக அனைவரையும் உள்ளடக்கி விரிவு பெற்றது.

நாடாளுமன்றத்தேர்தல் நெருங்க, நெருங்க இப்போராட்டத்தில் மம்;தாபானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர்அதிகமாக பங்கேற்கத் தொடங்கினர். மேற்கு வங்காள காங்கிரஸ்கட்சியின் மறைமுக ஆதரவும் இதற்கு இருந்தது. ஆயினும் இதனை வைத்து இப்போராட்டத்தை திரிணமுல் காங்கிரசின் தூண்டுதலால் நடக்கும் கலவரமாக சித்தரிக்க முடியாது. தேர்தல் முடிந்து தில்லியில் அமைச்சரான பிறகு மம்தா பானர்ஜியின் அணுகுமுறை மாறியது- இப்போராட்டத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க ஆட்சிக்கு நெருக்கடி தருவதில்தான் அவரது கவனம் இருந்ததே தவிர, அம்மக்கள் பற்றி அவர் அக்கறை காட்டவில்லை.

மாவோயிஸ்ட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்றும், மிதுனாபூர், புரூலியா மாவட்டங்களைக் கலவரப்பகுதியாக அறிவித்து, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மம்தா கூக்குரலிட்டார்.எனவே இப்போராட்டத்தை மம்தாபானர்ஜி தூண்டுவதாகச் சொல்வது பொருந்தாப் பொய்யாகும். மேற்கு வங்காள இடதுசாரி அரசின் கொள்கைகளும், நடைமுறையும் ஒரு மாற்றுப்பாதையை காட்டுவதாகவோ மாற்று அரசியல் பண்பாட்டை நிலைநிறுத்துவதாகவோ இல்லை.

ஒடுக்கப்பட்ட பழங்குடியினர் மாவோயிஸ்ட்டுகள் பக்கம் திரள்வதற்கு இது முக்கிய காரணமாக அமைகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரிக்கூட்டணி மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்கிறது. முதலாளிய - நிலக்கிழமை தில்லி ஆட்சிக்கு மாற்றுப்பாதை காட்டும் ஆட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்தியா முழுவதும் இது குறித்து தம்பட்டம் அடித்தாலும் உண்மையில் ஒரு மாற்றுப்பாதை காட்டும் ஆட்சியாக அது இல்லை. காங்கிரஸ் கட்சியின் பிற்போக்கு கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் எதிராக எந்தவித உருப்படியான முற்போக்கு மாற்றையும் மேற்கு வங்க ஆட்சி முன்வைத்ததில்லை. பிறர் பின்பற்றத்தக்க முற்போக்குத் திட்டங்கள் எதையும் இவ்வாட்சி முன்மொழிந்தது இல்லை.

நிலவும்முதலாளிய அரசமைப்பை “உள்ளிருந்தே உடைப்பது” ;என்று அறிவித்துக் கொண்டு மார்க்சி;ஸ்ட் கட்சியினர் மாநில ஆட்சியில் பங்கு பெற்றனர். ஆனால் உள்ளிருந்து உலுத்துப் போயிருப்பது இவர்கள்தான். காங்கிரஸ் ஆட்சியைப் பின்பற்றியே இவர்களது தொழிற்கொள்கையும், பொருளியல் கொள்கையும் அமைந்தது. 1977-ல் ஆட்சிக்கு வந்த புதிதில் ‘கெரோ’ என்ற முற்றுகைப்போராட்டம் உள்ளிட்டு உழைப்பாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு துணைபுரிந்த அந்த ஆட்சி நாள் செல்ல செல்ல காங்கிரசைப் போலவே கொடும் ஒடுக்குமுறை ஆட்சியாக மாறியது.

சிங்கூரில் டாட்டாவுக்கு சேவை செய்யவும், நந்திக்கிராமில் பன்னாட்டு நிறுவனத்திற்கு பாதம் தாங்கியும், புத்ததேவ் நடத்திய துப்பாக்கி முனை தர்பார் இவர்களின் உண்மை முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. நம்மூர் கழகங்களைப் போலவே கட்சிக்காரர்களின் பேட்டையாக காவல்நிலையங்கள் மாற்றப்பட்டன. அரசு அலுவலகங்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டத்தலைவர்களின் ஆளுகைக்குட்பட்டவையாக மாறின. ஊழல் மலிந்தது. இந்திய அரசுக்கு மாற்றான போராட்டத்தளமாக மாநில ஆட்சியைப் பயன்படுத்தப்போவதாக சொன்னவர்கள் பிற மாநில அரசாங்கங்களைப் போல கூடுதல் அதிகாரம் கேட்பதற்கு கூட முன்வரவில்லை. மாநிலங்களுக்கு இருக்கிற கணிசமான ஒரே வரி வருமானம் வணிகவரிதான். அதையும் மறுக்க மதிப்புக்கூட்டு வரி (வாட்) கொண்டுவர முனைந்தது இந்திய அரசு.

அதற்கு இரு கை நீட்டி வரவேற்ற ஆட்சி மேற்குவங்க இடதுசாரி ஆட்சி. அதுமட்டுமின்றி ‘வாட்’ வரிவிதிப்பிற்கு வழிமுறை வகுத்த குழுவின் தலைவராக மேற்கு வங்க நிதியமைச்சரே பணியாற்றினார். உலகமயக் கொள்ளைத் திட்டங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்போது முணு முணுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தாங்கள் ஆளும் மேற்கு வங்காளத்தில் அத்திட்டங்களை எந்தத் தயக்கமும் இன்றி செயல்படுத்தினர். பன்னாட்டு நிறுவனங்களுக்காக உழவர்களை அவர்களது நிலங் களிலிருந்தும், வாழிடங்களிலிருந்தும் வெளியேற்றினர். இவற்றின் காரணமாக மக்களிடமிருந்து மார்க்சிஸ்ட் கட்சியும், பிற இடதுசாரிகளும் தனிமைப்பட்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில்மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் சந்தித்த சரிவு இதற்குச் சான்று. அடித்தட்டு மக்களைத் திரட்டித் தொடர்ந்து போராடி வரும் மாவோயிஸ்டுகள் இச்சூழலில் செல்வாக்கு பெறுவது இயல்பானதே. இது தங்களது பிற்போக்கு கொள்கை மற்றும் மக்கள் விரோத நடைமுறையின் காரணமாக உருவான சூழல் என ஏற்று திருத்திக்கொள்வதற்கு மாறாக புத்ததேவ் ஆட்சி பழங்குடியினர் மீது கொடும் அடக்குமுறையை ஏவியது. மாவோயிஸ்ட் கட்சியை தடை செய்வதற்கு புத்ததேவ் சம்மதம் தெரிவித்தார். ஆனால் அவரது மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்காளச் செயலாளர் பிமன் போசும், அனைத்திந்தியப் பொதுச்செயலாளர் பிரகா‘; காரத்தும் இத்தடையாணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே நேரம் அக்கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் எச்சூரி ‘மாவோயிஸ்ட் கட்சியை இந்திய அரசு தடைசெய்திருப்பது தவிர்க்க முடியாத செயல்’;. என்று நியாயப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி , தேர்தல் அரசியலுக்கு வெளியே புரட்சி நடத்தப்போவதாக சொன்னவர்கள,தேர்தல் கட்சியாக விரைவிலேயே தேய்ந்து போனார்கள்; பதவி அரசியலுக்கேப் பழகிப் போனார்கள். இதன் காரணமாக ஒரு நாடாளுமன்றத்தேர்தல் தோல்விக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் கலகலத்துப்போயிருக்கிறார்கள். குழுச்சண்டைகள் தீவிரம்பெற்றுள்ளன. மாவோயிஸ்ட் தடை குறித்த அணுகுமுறையிலும் இது வெளிப்படுகிறது.

ஆந்திரா தொடங்கி ஒரிசா , பீகார், ஜார்கண்டு மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களில் மலையக பழங்குடியினரிடையே மாவோயிஸ்ட் கட்சி பெருந்திரள் ஆதரவோடு வளர்ந்திருக்கிறது. நீண்ட நெடிய போராட்ட மரபோடு பல்வேறு அர்ப்பணிப்புகள் செய்து இக்கட்சி இம்மக்களிடையே வளர்ந்திருக்கிறது.

ஆயினும் “;நாங்கள் வலுவாக உள்ள பகுதிகளையொட்டிய கிராமங்களிலும் , நகரங்களிலும் உள்ள உழைக்கும் மக்களையும், மாணவர்களையும் கூட உரிய அளவு திரட்ட முடியவில்லை. அரசு நிர்வாகம் செயல்படுவது எங்கள் பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளதே தவிர மாற்று நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ முடியவில்லை” என்று மாவோயிஸ்ட் கட்சியின் ஆந்திர செயலாளர் தோழர் இராமகிருஷ்ணா 2004-ல் அறிவித்த நிலை இன்றும் நீடிக்கிறது.

லால்கார் பகுதியில் பழங்குடி மக்களைத்திரட்டும்போது அவர்களது ஒல்ச்சிக்க்கி மொழிக்கு உரிய இடமும், அம்மக்களுக்கு நி;ர்வாக அதிகாரமும் பெறப்போவதாக சொல்லியே மாவோயிஸ்ட்டுகள் காலூன்றினர். இந்தியாவின் பெரும்பகுதிகளில் பழங்குடியினரின் பொருளியல், சமூக நலன்களை பாதுகாக்கும் போராட்டத்தின் ஊடாகவே மாவோயிஸ்டுகள அவர்களி;டையே வளர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இப்பழங்குடியினகிராமங்களையொட்டிய சமவெளிப்பகுதி மக்களின் தேசிய இன உரிமைப் போராட்டத்தோடு தங்களது போராட்டங்களை இணைக்காததன் விளைவாக இவ்வளவு நீண்ட தியாகத்திற்குப்பிறகும் மாற்று அரசுக்குரிய தொடக்க நிலையைக்கூட மாவோயிஸ்டுகளால் எட்ட முடியவில்லை. (விரிவிற்கு காண்க:- தமிழர் கண்N;ணோட்ட்டம் 2004நவம்பர் இதழ்).

நாடாளுமன்ற சகதிக்குள் ஆழ்ந்துபோய் மார்க்சிஸ்ட்டுகள் தேய்ந்து வருகின்றனர். தேசிய இன போராட்டத்தில் மையங்கொள்ளாததால் மாவோயிஸ்டுகளின் தியாகம் தெளிவான அரசியல் விளைவை ஏற்படுத்தாமல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆயினும், இந்திய அரசின் தடை மாவோயிஸ்டுகளை ஒன்றும் செய்துவிட முடியாது. ஏற்கெனவே அக்கட்சியினர் நடைமுறையில் காவல்துறையின் தடைகளுக்கு இடையில்தான் இயங்கிவருகின்றனர். இப்போது மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவின் கோரிக்கையை ஏற்று ஆயுதங்களைக் கீழேபோட முடியாது; லால்கார் பகுதியில் மோதல் நிறுத்தத்திற்கு மட்டுமே தாங்கள் தயார் என மாவோயிஸ்ட் கட்சியின் மையக்குழு உறுதிபடக் கூறிவிட்டது.தடையை எதிர்கொள்வோம் எனவும் அறிவித்துள்ளது.

ஆனால் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்ற பெயரால் மாற்று அரசியலுக்கு குரல் கொடுக்கிற அனைத்து ஜனநாயக சக்திகளையும் அடக்குவதற்கே இந்த தடையாணை பயன்படும்.திரைப்பட நடிகர், இயக்குநர் அபர்னாசென் மற்றும் சில எழுத்தாளர்கள் மீது ‘தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்தார்கள’;. என மேற்கு வங்க அரசு பொய் வழக்குத்தொடுப்பதே இதற்கு ஒரு சான்று. லால்கார் பகுதியில் என்ன நடக்கிறது என்று நேரில் கண்டறிய சென்றுவந்ததே அபர்னாசென் செய்த ‘குற்றம்’; ஆகும்.

இந்திய அரசு மாவோயிஸ்ட் கட்சியின் மீது விதித்துள்ள தடையை உடனடியாகக் கைவிட வேண்டும். மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும். காவல்துறை அடக்குமுறையை கைவிடவேண்டும். மாவோயிஸ்ட் கட்சி மீதான தடையை எதிர்த்தும், மேற்கு வங்கஅரசின் அடக்குமுறையை எதிர்த்தும் அனைத்து சனநாயக சக்திகளும் வலுவாக்குரல் எழுப்ப வேண்டும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com