Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
மே 2009
பேராண்டிகள் - குறும்படம்
சுப்ரபாரதிமணியன்

தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சனைகளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களில் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களுக்குள் பூதாகரமாகும்போது கைகொடுக்கவும் அவருக்கு இயல்பாகிறது. குழந்தை மனத்துடன் அவர்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது சாமான்யமல்ல; அந்த இயல்பான மனநிலையையும் பக்குவத்தையும் கொண்டவராய் அவர் இருப்பது படைப்பு நிலைக்கு வெகு சாதகமாகிறது. இந்த சாத்தியத்தை அவரின் முதல் குறும்படமான 'பூங்கா' முதல் விளிம்பு நிலையினரான ஊனமான குழந்தைகளின் பிரச்சி னைகளை முன் வைக்கிற "கை", குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பற்றிய கல்வி பற்றிய "பாலிபேக்" அவற்றிலும் காணமுடியும்.

"பூங்கா"வில் அன்பிற்காக ஏங்கும் பெண் குழந்தை பக்கத்து வீட்டு ஏழை பையனுடன் கொள்ளும் நட்பு அன்பிற்கு அடைக்கலமாகிறது. "இப்படிக்கு பேராண்டி" படத்தில் இந்தச் சிறுவர்கள் குடும்பங்களின் மூத்தோரான தாத்தா பாட்டிகள் இல்லாத வெறுமையை உணர்ந்து அவர்களை தேடிக் கண்டடைகிறார்கள். இந்த ஏக்கத்தை நமக்குள்ளும் ஆழ விதைத்து விடுகிறார். இது அவரின் கலைத்திறனின் வெற்றியாக இருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பள்ளிக் காவலாளி ஒரு சிறு செடி தன் பராமரிப்பில் இருந்து தவறிப் போவதை கவனிக்கிற போது துணுக்குகிறார். அதை முதுமையான கைவிரல்களால் நிலத்தைக் கீறி பதியமிட்டு நீர் ஊற்றவும் செய்கிறார். இந்தப் பரிவை தடுக்கி விழுந்து சாப்பாட்டு கேரியரை சிதறடித்து விடும் சிறுவனிடமும் காட்டுகிறார். பெரியோரின் நேசம் இப்படித்தான் படத்தில் அறிமுகமாகிறது. அது காவலாளி என்ற நிலையிலிருந்து தாத்தா பாட்டி பற்றின ஏக்கமாக விரிகிறது. அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்து பூதாகரமாக்கிக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி உலகில் தங்களுக்கான இடமில்லாதது பற்றி அழுகை இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதபடி சூழல் இருக்கிறது (ஆனால் தனிப்பயிற்சி எடுக்கும் ஆசிரியையின் மகள் தன் எதிர்ப்பை சுலபமாகக் காண்பிக்கிறாள். கட்டாய நடனத்தை எதிர்த்த காமிக்ஸ் வாசிப்பில் என்ன தவறு என்று எதிர் கேள்வி எழுப்புகிறாள். அவளுக்குள்ளும் தாத்தா பாட்டி இல்லாத ஏக்கத்தை காமிக்ஸ்க்குள் அடக்க வேண்டியிருக்கிறது.)

குழந்தைகள் இருவரின் ஏக்கம் பெற்றோர்களைத் தொற்றுகிறது. கனவுகளுக்குள் நிரம்பி அதிர்ச்சியடைகிறார்கள். குழந்தைகள் தாத்தா பாட்டி புகைப்பட தேடுதலில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இதன் முடிவாய் தாத்தா பாட்டிகளை கண்டடைகிறார்கள்.

தாத்தா பாட்டி பற்றின ஏக்கங்களே குழந்தைகளின் பார்வையிலிருந்து விரிகிற வேளையில், தாத்தா பாட்டியின் பார்வையோ, நோக்கிலிருந்தோ குழந்தைகள் மீதான பாசம் குறித்து இன்றும் சில நெகிழ்வுகளை இப்படம் உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும். அது சமச்சீராக பாச வெளியின் விஸ்தாரத்தை குடும்பமெங்கும் விதைத்து விளைந்திருப் பதைக் காட்டியிருக்கும்.

இப்படத்தின் குளோசப் காட்சிகள் பலமாக அமைந் திருக்கின்றன ஆனால் அழுகை காட்சிகளில் எல்லோரும் "நாடக நடிகர்களாகி" விடுகிறார்கள். பகல், இரவு, கனவு காட்சிகளிலும் ஒரே விதமான முகப்பூச்சு, உடை தரம், ஒளி யமைப்பு உறுத்துகிறது குழந்தைகளின் நுண்ணிய உணர்வு களின் மத்தியில் தனிபயிற்சி எடுக்கும் ஆசிரியை கணவனு டன் மாணவர்களை உட்கார வைத்தபடி தேநீர் அருந்தும் குரோமும் தென்படுகிறது. திரைப்படத்தளம் என்பது ஏற் படுத்தும் அழுத்தமான சுவடுகளை விரல்களை எண்ணுவ திலிருந்து எதிர்ப்புக் குரலுக்காக போராட்ட ஊர்வலம் என்ற தொலைக்காட்சி பிம்பம் 'தாத்தாபாட்டி வேணும்' என்று கோசமிட்டபடி ஊர்வலம் செல்லும் வரைக்கும் நீள் கிறது. இந்த வகை சாதாரண நிகழ்வுகளை யதார்த்த தளத் தின் சாதாரண இயல்பை மீறி திரைப்பட வடிவத்தில் அழுத் தமான காட்சிகளாக்குவதில் தாண்டவக்கோன் அவரின் பெரும் பான்மையான படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் (சமீபத் திய அவரின் சிறுகதையன்றிலும் இதை நுணுக்க மாக கவனிக்க முடிகிறது) வெறும் யதார்த்த தளம் மீறி சுவாரஸ்யப்படுத்தும் தன்மைக்கு இந்த வகை வெளிப்பாடு அவசியம். அந்த வகையில்தான் குழந்தை களின் குறும்புகள் கூட இடம் பிடிக்கின்றன. அழுகை என்பது குழந்தைகள் காதை மூடும் விபரீதமாகிறது. சித்தப்பா என்ற பணம் மற்றும் பொருள் குறித்த அக்கறை கொண்ட கதாபாத்திரம் கனவிலும் அதே போன்ற செய்கையை தான் வெளிப் படுத்துகிறது.

குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்து பற்றி அறிகிற தாத்தா மனநிலையும் பதட்டமும் ஊசியில் நூல் கோர்க்க முடியாத சிக்கலால் நுணுக்கமாகக் காட்டப்படுகிறது. அதிலிருக்கும் பதட்டம் அன்பு குறித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத எல்லோருக்கும் ஏற்படும் அதிர்ச்சிப் படிமமே இப்படத்தின் சாட்சிகளாகும். பள்ளிக் காவலாளி முதல் மருத்துவர் வரை பலரும் பகிர்ந்து கொள்ளும் அறிவுரைகள், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை குழந்தைகளுக்கான உலகில் அழுத்தம் விடயங்களாகி விடும் என்பதையும் கவனிக்க நேர்கிறது. தொழில் முறையற்ற நடிகர்களின் நடிப்புப் பயிற்சி பலவீனம் துருத்தித் தெரிகிறது. பலவீனத்தை உதற அவர்களும் முயற்சி செய்கிறார்கள். படத்தில் இழையோடும் சோகத்தை குழந்தைகளின் சேஷ்டைகளும் கதாபாத்திர உருவாக்க சுவாரஸ்யமும் தவிர்க்கச் செய்கின்றன. சோக இழையை தவிர்த்துக் காட்டும் முயற்சியாக படத்தின் எழுத்துக் காட்சியில் கதாபாத்திரங்கள் இயல்பாய் சிரித்து வெளிப்படுவது குடும்ப உறவுகளில் தென்படாத அன்பையும் நேசிப்பையும் நோக்கி எள்ளி நகையாடியே இருப்பதற்கான சாட்சிகளாகக் கூட கொள்ளலாம். குழந்தைகளின் உலகில் அவர்களுடன் நேசக்கரம் நீட்டும் முயற்சிகளில் தொடர்ந்து தாண்டவக்கோன் இயங்குவது படைப்புலகிற்கு வரப்பிரசாதம் தான். அன்பையும் பாசத்தையும் நெகிழ்வை யும் பகிர்ந்து கொள்வது அவரின் படைப்பின் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆதாரத்தை தன் படைப்புகளின் அடிநாதமாக அவர் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் தொடர்ந்த செயல்பாடுகளில் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இயங்குகிற கட்சி சார்ந்த செயல்பாடுகள், கலை இலக்கிய முயற்சிகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலிருந்து தொடங்கப்பட வேண்டிய செயல்களின் ஆதாரங்களை சுட்டிக் காட்டியபடியே இயங்குகிறார் அவர்.

(பேராண்டி, குறும்படம். இயக்கம் : தாண்டவக்கோன், திருப்பூர்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com