Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
மே 2009
அஞ்சலி - சுகந்தி சுப்ரமணியன்
ஜெயமோகன்

இன்று காலை (பிப் 13) ஒரு குறுஞ்செய்தி வந்தது. சுகந்தி சுப்ரமணியன் இறந்து விட்டார். நண்பர் சுப்ரபாரதி மணியனின் மனைவி. தமிழின் ஆரம்பகால பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். நான் எழுத வந்த காலத்தில் 1988ல் சுகந்தியின் கவிதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன். பின்னர் 1992ல் அருண் மொழிக்கு திருப்பத்தூர் தபால் நிலையத்தில் வேலை கிடைத்த போது நாங்கள் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீட்டில் குடியமர்ந்தோம். சுப்ரபாரதி மணியன்தான் வீடு ஏற்பாடு செய் தார். அவர் அப்போது திருப்பத்தூர் தொலைபேசி நிலையத்தில் இள நிலைப் பொறியாளராக பணி யாற்றினார். 1992 கதா விருதுக்காக நாங்கள் இருவரும் தேர்வு செய்யப் பட்டிருந்தோம். அதிலிருந்து இருவரும் நண்பர்கள். சுப்ரபாரதி மணியனின் வீடு பக்கத்தில் தான்.

அங்கே சென்றபின்னர்தான் சுகந்தி சுப்ரமணியன் அறிமுக மானார். அப்போதே கடுமையான உளவியல் சிக்கல்கள் அவருக்கு இருந்தன. நிலைகொள்ளாத தன்மை, கட்டுக்கடங்காத நடவடிக் கைகள். அவரது உளவியல் பிரச்னைகள் பள்ளி நாட்களிலேயே ஆரம்பமாகி யிருந்தன. அவருடைய இளமைப் பருவம் பரிதாபகரமானது. தாயா ரால் புறக்கணிக்கப்பட்ட அவரை பாட்டிதான் வளர்த்தாள். வீட்டில் கறாரான கண்டிப்பு, வெளியே கேலி கிண்டல் என வளர்ந்த சுகந்திக்கு எப்போதுமே தாழ்வுணர்ச்சியும் மன அழுத்தமும் இருந்தது. மெல்ல மெல்ல அது வலுப்பெற்றது.

அவருக்கு இரு பெண்கள். இருவருமே அப்போது சிறுமிகள். சுகந்தியால் எந்த வேலையையும் செய்ய முடியாது. கேள்விப்பட்ட செய்திகள் எல்லாம் தன் வாழ்க்கை என்று நம்பக்கூடிய மனப்பதற்றம். நாள்கணக்கில் வெவ்வேறு வகையான கற்பனை யதார்த்தங்களில் கொந்தளித்துக் கொண்டிருப்பார். எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிப்பதே கஷ்டம். நாலைந்து குண்டர்கள் தன்னை தாக்கிவிட்டதாக ஒருநாள் போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் ஜீப்பில் வந்திறங்கினார். அப்படி பல நிகழ்ச்சிகள். அவரது கவிதையில் உள்ள உணர்வுகள் பெரும்பாலும் அவர் கற்பனையில் அனுபவித்தவை.

சுப்ரபாரதிமணியன் ஒவ்வொரு நாளும் அவரே காலையில் சமைத்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் செல்வார். மாலையில் மீண்டும் சமையல். குழந்தைகள் அருண்மொழியுடன் மிகவும் ஒட்டிக் கொண்டிருந்தன. சுகந்திக்கு தன்னை பிறர் அவமதிக்கிறார்கள் என்பது எப்போதுமுள்ள பிரேமை என்றால் கணவரோ பிறரோ தாக்கி விட்டார்கள் என்பது அதன் உச்சம். பலசமயங்களில் கட்டுப்படுத்த உடல்பலம் வேண்டும். இந்தியாவில் உளவியல் சிக்கல்களுக்கு மருந்துகள் இல்லை. காய்கறிபோல ஆக்கி தூங்க வைப்பது தவிர. ஒரு கட்டத்தில் மாத்திரை மூலம் இரவு பகலாக தூங்கிக்கொண்டிருக்கச் செய்யப்பட்டார்.

சுகந்தி ஒரு முறை அதிகமாக மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். மனச்சிக்கல் சற்றே அகலும் இடைவேளையில் கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளவில்லை என்ற கடுமையான குற்றவுணர்வு அவருக்கு எற்படும். வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் மீட்டோம். அந்த நாள் கொடூரமாக நினைவில் இருக்கிறது. அங்கிருந்த மருத்துவர்கள் பணம் கறப்பதிலேயே குறியாக இருந்தனர். அந்தக் குழந்தைகளை எப்போது எண்ணினாலும் வயிற்றைக் கலக்கும்.

வீட்டில் ஒருவருக்கு மனநிலைச் சிக்கல் என்றால் அந்த நிலையை அனுபவிப்பவருக்கே அதன் வலி தெரியும். நான் உடனிருந்து பார்த்த சுப்ரபாரதிமணியனின் வாழ்க்கை மிகக் கொடுமையானது. அந்த வாழ்க்கையிலும் சுப்ரபாரதிமணியன் ஓயாது வாசித்தார். எழுதினார். கனவு இதழ்கள் கொண்டுவந்தார். நாங்கள் அங்கே இருந்தபோதுதான் அசோகமித்திரன், சுந்தரராமசாமி இருவருக்கும் அறுபதாமாண்டு நினைவு மலர்கள் தயாரித்தோம். அந்தப் பணிகள் வழியாகவே அவர் தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கக்கூடும். பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு சுப்ரபாரதிமணியனின் தனிப்பட்ட முகம் தெரியாது. மிகவும் உள்ளடங்கிய, எதையுமே காட்டிக் கொள்ளாத மனிதர் அவர். நானறிந்த உண்மையான மனிதாபிமானம் கொண்ட சிலரில் ஒருவர். எழுத்துக்கு அப்பால்ல சமூக சேவையிலும் அவருக்கு தீவிரமான ஆர்வம் உண்டு.

ஹைதராபாத்தில் இருந்தபோது வெண்குஷ்ட நோயாளிகளுக்கு சிகிச்சசை அளிக்கும் ஆய்வுமையத்துடன் இணைந்து விரிவான அளவில் பணியாற்றியிருக்கிறார். வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட ஏழை பெண்களை அவர் தனியார் நிதியுதவி சேகரித்து ஹைதராபாத் கொண்டு வந்து சிகிச்சை செய்து மீட்டதை நான் அறிவேன். அந்தப் பெண்களில் பலர் அவரை நன்றியுடன் கைகூப்பி கண்ணீர் விடுவதை கண்டிருக்கிறேன். திருப்பூர் சென்றபின் சூழலியல் போராட்டங்களில் ஈடுபாடு கொண்டு அதைச் சார்ந்து செயலாற்றினார். அந்த ஆர்வம் காரணமாகவே அவரது இலக்கியப் பங்களிப்பு மட்டுப்பட்டது.

மனைவி மீது உண்மையான பிரியம் அவருக்கு இருந்தது. இல்லாவிட்டால் சுகந்தியை தாங்கிக் கொள்வது சாத்தியமாகியிருக்காது. சுகந்தி சிலகாலம் மனநல விடுதியிலும் இருக்க நேரிட்டது. ஆனால் அப்போதும் சுப்ரபாரதிமணியன் அவர் மீது கவனத்துடன் இருந்தார் என்பதே நான் கண்டது. பின்னர் இருமுறை சுகந்தியை சந்தித்திருக்கிறேன். மங்கிய புன்னகையுடன் இருந்தார். என்னை நினைவு கூறவில்லை. இந்த மரணம் அவருக்கு ஒரு விடுதலை என்றுதான் எண்ணுகிறேன்.

சுகந்தியை ஒரு மனச்சிகிழ்ச்சையாக கவிதை எழுத பழக்கினார் சுப்ரபாரதி மணியன். சுகந்தி குறிப்பிட்ட மனநிலையில் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுவார். நூற்றுக்கு இரண்டு கவிதைகளே கவித்துவ அம்சத்துடன் இருக்கும். பெரும்பாலானவைகள் மனப்பிரம்மைகள், முறையீடுகள். அவற்றில் சிலவற்றை சுப்ரபாரதிமணியன் கவிதை வடிவ ஒழுங்குக்குக் கொண்டுவந்து 1988ல் அன்னம் பிரசுரம் வழியாக பிரசுரித்தார். அவை சுகந்திக்கு ஓரளவு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தன. ஆனால் அது நீடிக்கவில்லை.

சுகந்தியின் கவிதைகளில் உணர்வுகள் மற்றும் சில அழகியல் மொழி வெளிப்பாடுகள் அவருடையவை என்றால் கவிதை வடிவம் வரியமைப்பு எல்லாமே சுப்ரபாரதிமணியனால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் உள்ள அசலான அக வெளிப்பாட்டை சுப்ரபாரதிமணியனின் உண்மையான வாசக மனம் அடையாளம் கண்டுகொண்டதனால்தான் அவை பிரசுரமாயின. அக்கவிதைகளில் பலவற்றில் வீட்டை தன்னைக் கொல்லும் எதிரியாகவே சுகந்தி சித்தரித்திருந்தார். அவை அச்சானபோது கற்பனை இல்லாத நம் வாசகச்சூழல் சுப்ரபாரதிமணியனையே ஒரு பெருங்கொடுமைக்காரராகச் சித்தரித்துக் கொண்டது. சுகந்தியின் மனச்சிக்கலுக்குக் காரணம் அவரே என்றுகூட நம்மவர்கள் வாசித்திருக்கிறார்கள்.

அதை நான் அவரிடம் பேசியிருக்கிறேன். இருக்கட்டும், இப்ப என்ன. அந்த வரிகளில் ஏதோ ஒரு உண்மை இருக்கு. அதுவும் ஒரு குரல்தானே. நம்மை யாருக்கு தெரியும்? என்றார் சுப்ரபாரதிமணியன். மனச்சிக்கல் நிலையில்தான் உண்மையான கவிதை வரமுடியும் என்ற எண்ணமும், அந்த நிலையில் அது தனியனுபவம் அல்லது பிறரது அனுபவங்களின் தொகுப்புதான் என்றும் அவருக்கு எண்ணம் இருந்தது. எப்படியானாலும் சுகந்தியின் கவிதைகளை இப்போது பார்க்கும்போது அர்த்தமுள்ள ஒன்றை சுப்ரபாரதிமணியன் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அற்த துயரம் நிறைந்த வாழ்க்கைக்கு இப்படியாவது ஒரு பொருள் உருவாகியிருக்கிறது.

சுகந்தியின் கவிதைகள் தமிழினி வெளியீடாக இப்போது கிடைக்கின்றன. (மீண்டெழுதலின் ரகசியம்) முதல் தொகுதிக்குப் பின்னர் மேலும் பல கவிதைகளை அவர் எழுதினார். ஆரம்பகாலக் கவிதைகளில் இருந்த கோர்வையான வெளிப்பாடு பின்னர் சாத்தியமாகவில்லை. சுகந்தியின் கவிதைகளில் துயருற்று நலிந்த ஓர் ஆத்மாவின் வாதைகள் எளிமையாக பதிவாகியிருக்கும். அக்காரணத்தால்தான் அவர் இன்னும் தமிழில் நினைவுகூரப்படுகிறார். மேலுலகம் என்று ஒன்று இருந்தால் நல்லதுதானே என்று எண்ணும் தருணம் இது. அங்காவது ஒருசிலநாள் மனதின் ஓயாத குதறல்கள் இல்லாமல் அவர் மகிழ்ந்திருக்கலாம்.

சுகந்திக்கு என் அஞ்சலி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com