உருப்படி என்ற கீர்த்தனை வடிவம்

இசைத்துறையின் சீரியவடிவாக இன்று அரங்கிசையில் பாடப்பட்டு வரும் உருப்படி (கீர்த்தனை) வடிவம், பண்டையபாணர் - நாட்டார் இசையின் மறுவடிவமே. கீர்த்தனைகள் யாவும் பக்தி என்ற ஒற்றைத்தளத்தில் நம் இசையை நிறுத்தி இருப்பது உண்மையே. ஆயினும் நம் இசையின் அனைத்து இனிமைக் கூறுகளையும் கீர்த்தனை வடிவம் தனதாக்கிக் கொண்டுள்ளது. செவ்வியல்காரர்கள் காலங்காலமாகச் செய்யும் கைங்கரியம் இது.

கி.பி.5-ம் நூற்றாண்டு முதல் இந்த 20-ம் நூற்றாண்டு வரை கூட பக்தி இலக்கியங்கள், பாடல்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இந்தப் பக்தி பிராமணியப் பக்திவடிவுதான். ஆயினும் இந்தப் பக்தியினூடாக வளர்ந்த நம் இசையையும் புறந்தள்ளி விடக்கூடாது. களையை நீக்க வேண்டி பயிரையும் நீக்கிவிடக்கூடாது.

கீர்த்தனைகள் பாடிய பெரியோர்கள் யாவரும் முழுக்கமுழுக்க இறைவனையே பாடி இருக்கிறார்கள். இதற்கொரு காரணம் அவர்கள் வாழ்ந்த காலச் சூழல் அப்படி. தமிழில் முத்துத்தாண்டவர் தொடங்கி, ஊத்துக்காடு, வள்ளலார், பாரதி என்று ஒரு பெரிய பாரம்பரியமே கீர்த்தனை வடிவில் பாடியுள்ளது. அந்த மாபெரும் இசைப் பாரம்பரியத்தையும்,அவர்களது பங்களிப்பையும், மறைக்கப்பட்ட அதன் பல்வேறு பரிணாமங்களையும் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்வதே இத்தொடர்.

தமிழின் முதன்மை இலக்கியங்களான சங்கப் பாடல்களில் குறுந்தொகைப் பாடல்களைக் குறும்பாடல்கள் எனவும் பத்துப் பாட்டை நெடும்பாடல்கள் எனவும் வகைமைப் படுத்துகிறோம். தனித்தனிச் செய்யுள் என்ற நிலையிலிருந்து தொடர்நிலைச் செய்யுள் என்ற காப்பிய இலக்கியங்கள் பின்னர் உருவாகியுள்ளன. பிறகு சிற்றிலக்கியங்கள் மலர்கின்றன. அவைகளில் குறம், குறவஞ்சி, பள்ளு என நாடக இலக்கியங்களாக இசையை நோக்கி நகர்வு பெற்ற இசை வடிவங்களைப் பார்க்கிறோம்.

தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் என பக்தி இலக்கிய தோற்றங்களையும், சித்தர் பாடல்களையும், அருணகிரியாரின் திருப்புகழ் என பக்தி இலக்கிய மலர்ச்சியும் தமிழ் இலக்கிய உலகில் நிலை கொண்டதை அறிகிறோம். கி.பி.15 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் கீர்த்தனை என்ற இலக்கிய வடிவுக் காலம் தொடங்குகிறது.ஒரு மொழியில் அது வழங்கும் சமூகத்தில், ஒரு இலக்கிய வடிவத்திலிருந்து மற்றோர் இலக்கிய வடிவம் தோற்றம் கொள்வது ஏன் என்பதற்கு சரியான விளக்கத்தை நம்மால் அளிக்க இயலாது.

உலகத் தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.501 - 900) என்ற நூலில் (பக்-6) முனைவர். சோ.ந.கந்தசாமி இவ்வாறு கூறுகிறார்: ‘‘ஒருமரபு எங்ஙனம் அழிந்தது என்பதையும் அதே நேரத்தில் மற்றொரு புதுமரபு எங்ஙனம் தோற்றம் பெற்றது என்பதையும் விளக்குதல் வேண்டும். இந்த மரபு மாற்றம் ஒரு கால கட்டத்தில் ஏன் விளைந்தது என்பது எளிதில் தீர்க்க முடியாத சிக்கலாகும். இலக்கிய வரலாற்றில் நிரம்பி வழிதல் அல்லது முழுவதும் பயன்படுத்தப் பெறுதல் முற்றிய நிலையில் புதுவதாக இலக்கிய விதி எழுதல் தேவையாகிறது. கவிதை எழுதும் உத்திகளை மிகுதியாகப் பயன்படுத்தியதால் சலித்துப் போதலும், வாசகர்கள் புதியனவற்றிற்கு ஏங்கி நிற்றலும் இலக்கியப் போக்கில் மாற்றம் விளைய ஏதுவாக அமைகின்றன.’’

புதிய புதிய யாப்பு வடிவங்கள் என்ற மாற்றத்திலும் இதே நிலையைப் பார்க்கலாம். ‘‘வீரயுகத்தில் வாழ்ந்த ஆற்றல் மிக்க அரசர்கள், மறவர்கள் ஆற்றிய தீரச் செயல்கள், அருஞ்சாதனைகள், மானம், காதல், பெரும்புகழ் முதலியவற்றைப் பாணர்கள் தலைமுறை தலைமுறையாகப் பாடிவந்த பாடல்களின் வளர்நிலையே பின்னர் காப்பிய வடிவம் பெறுவதற்கு அடிப்படை ஆயிற்று... குடிசைகள், பொழுது போக்கிடங்கள் முதலிய எளிய இடங்களையும் எட்டிய இப்பாணர் பாடல்கள் மீண்டும் புலவர்களால் அரசவைக்குக் கொண்டு செல்லப் பெற்றுப் புதுப்பொலிவும், செயற்கைப் பண்பாடும் மெருகும் ஆடம்பரமும் அலங்காரமும் விரிவும் பெற்று வண்ணமும் வடிவமும் வாய்த்து காவிய உருக்கொண்டன ‘‘ (மேற்படி பக்.64)

நமது முதல் நூல் தொல்காப்பியம் நூற்பா வடிவில் அமைந்தது. சங்கப்பாடல்கள் ஆசிரியப்பா, வஞ்சி வடிவம் தாங்கியுள்ளன. பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் வெண்பா வடிவத்தில் மலர்ந்துள்ளன. சங்க நூல்களில் இறுதியாக மலர்ந்த கலிப்பா வடிவம் கொண்டு கலித்தொகை தோன்றியுள்ளது. இக்கலிப்பா, ஒத்தாழிசைக்கலி, கொச்சக ஒருபோகு, உறள்கலி எனப் பல்வேறு வடிவம் கொண்டு வளர்ந்துள்ளது. கலிப்பாவில் மலர்ந்த தாழிசை பின்னர் ஒரு பா இனம் ஆயிற்று.

விருத்தம், துறை என்ற புதிய பா இன வடிவங்கள் தோற்றம் பெறுகின்றன. பண்டைய பா வகைகளான ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சி, கலியுடன் புதிய பா இனங்களை தாழிசை துறை விருத்தம் இவைகள் உறழ்ந்து ஆசிரிய விருத்தம், கலிவெண்பா, கட்டளைக்கலித்துறை, வஞ்சி விருத்தம் போன்று பல்வேறு புதிய புதிய பா வடிவங்கள் தோன்றி மலர்ந்தன. பின்னர் சிந்து வகைப் பா வடிவங்கள் தாளத்தில் அமைந்த சந்தப் பாடல்களாக உருப் பெறுகின்றன. இது பண்டைய பாணர் மரபின் இசை, புதிய இசைப்பாடல் வகைகளாக மீட்டுருவம் பெற்ற அடையாளங்கள்.

பா வகையும், பா இனமும் சேர்ந்த கலிவிருத்தமும், கலிவெண்பாவும், இசைப் பாடலாக தாளத்தில் அமைந்த சந்தக்கலி விருத்தமாக, சந்தக்கலி வெண்பாவாக அருணகிரியாரில் உருவம் கொள்கின்றன. இவ்வாறு ஈராயிரமாண்டு இலக்கிய வரலாற்றில் பல்வேறு பா வடிவங்கள் காலத்திற்குக் காலம் புதிது புதிதாகத் தோன்றி வளர்ந்துள்ளதை அறிகிறோம். பண்டைப்பாணர் இசை மரபுடன், புலவரின் யாப்பு மரபும் கலந்து, கலிப்பாவின் வகையுடன் ஓர் புதிய பா வடிவம் தோன்றுவதை நாம் பார்க்கிறோம். அதுவே கீர்த்தனை வடிவம். உரு, உருப்படி என்ற தமிழ்ப் பாடல் வகைப் பெயரே, கீர்த்தனை என்ற புதிய பெயரைப் பெற்றுள்ளது.

சிலப்பதிகாரத்தில், ‘‘கன்று குணிலா’’, ‘‘பாம்புகயிறா’’ ‘‘கொல்லையம் சாரல்’’ என்று தொடங்கும் ஆய்ச்சியர் குரவைப் பாடல்களை ‘ஒரு பொருள் மேல் மூன்றடுக்கு வந்தது’ என்பார்கள். ‘மூன்று தாழிசைகள் பெற்று வந்தது’ என்று கூறும் மரபும் உண்டு. இவ்வாறு இசைப்பாடல் மரபில் மூன்றாக வந்தது, கலித் தொகையில் தாழிசை என்று பெயர் பெறுகிறது. தாழிசைக்கு, இடைநிலைப் பாட்டு என்ற பெயருமுண்டு. இன்று இதற்கு ‘சரணம்’ என்று பெயர் தந்துள்ளோம். தெருக்கூத்தில், மேடை நாடக பாடலின் தொடக்கம் எடுப்பாக இருக்க மேல் தானத்தில் (மேல்ஸ்தாயி) பாடியதால் பாடல் தொடக்கத்தை ‘எடுப்பு’ என்றோம். பின்பு இந்த நிலை மாறி, பல்லவியை சமன்தானத்தில் அமைத்து, அனுபல்லவியை மேல்தானத்தில் பாடத் தொடங்கினோம். இருப்பினும் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு (பல்லவி, அனுபல்லவி, சரணம்) என்று பெயர் தந்தோம்.

தனிச்சொல், கூன், அடை, தனிநிலை, அடிநிலைக்கிளவி, தொங்கல் என்றெல்லாம் இலக்கியங்களில் பயின்றுவரும் தனிச்சொல்லை இசையில் விட்டிசைக்க, இசை அழகு பெற பயன் படுத்திக் கொண்டோம். (இன்று விட்டிசை, விஸ்ராந்தி என்று பெயர் பெற்றுள்ளது) இத் தனிச்சொல் நொண்டிச் சிந்து என்ற நாட்டார் வடிவில் ஏற்கனவே நாம் பயன்படுத்தியது. இன்னும் நாட்டார் இசைப் பாடல்களில் அமைந்த அணிகளான எதுகை, மோனை, இயைபு முரண் மற்றும் முடுகு (அராகம், வண்ணகம், அடுக்கியல்) அம்போதரங்கம் (எண்), கொண்டு மாட்டு முதலிய உறுப்புகளால் அழகு செய்துள்ளோம். இவ்வாறான அணிகளையும், உறுப்புகளையும் பெற்று பண்டைய கலிப்பாவின் உருமலர்ச்சியான கொச்சக ஒருபோகு என்ற இசைப்பாடல் வடிவமே, உருப்படி என்ற கீர்த்தனை ஆகியுள்ளது.

எந்த இலக்கிய வடிவமும், கலைவடிவமும் ‘சுயம்பு’ அல்ல. அதாவது இலக்கியத்தில், கலையில் எந்த ஒரு புதியவடிவமும் சுயம்பு அல்ல. மரபு என்பது காலங்காலமாக வழங்கிவருவது; தொடர்ந்து வருவது.
எந்தப் புதிய வடிவத்திலும், அதன் பழைய வேர் இருக்கும். மலர்கள் புதிது புதிதாகப் பூக்கலாம்; ஆனால் ஆணிவேர் பழையதுதான். நாட்டார் மரபான, பண்டைப்பாணர் மரபின் இசைப்பாடலின் அனைத்து அழகுகளையும், சாரத்தையும், வடிவத்தையும் எடுத்துக்கொண்டு இன்று செவ்வியல் வடிவாகக் கூறப்படும் உருப்படி என்ற கீர்த்தனை, 15 ஆம் நூற்றாண்டு தொடக்கமுதல், இசையில் புதிய ஓர் இடத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டதைப் பார்க்கிறோம்.
கீதம், கிருதி, கீர்த்தனை, தரு, பதம், தானவர்ணம், பதவர்ணம், கவுத்துவம், தோடயம், அலாரிப்பு, சப்தம், சாவளி, தில்லானா, கட்டியம், இலாவணி (இரு சொல் அலங்காரம் - சிங்கன் சிங்கி வினா விடை வடிவம் - பண்டைய உறள்கலி) சதிசுரம், சுரசதி என்றெல்லாம் பல்வேறு வடிவ மாற்றம் பெற்று அரங்கிசையில், தமிழர் ஆடலில் தனிப்பெரும் இடம் பெற்று விளங்கிவருகிறது.

செவ்வியல் வடிவம் என்று மேல் தட்டு வர்க்கத்தாரால் பெயர் சூட்டப்பட்டாலும், கீர்த்தனையும், அதன் பிரிவுகளும் பண்டைய பாணரின் இசைப்பாடலின் - நாட்டார் வடிவின், மறுவடிவாக்கமே. தமிழிசையின் தனிமரபான ஆளத்தி (ஆலாபனை), எடுப்பு பாடல் (பல்லவி பாடல்) தாளம் பாடல்(அச்சாளத்தி), சுரம்பாடல் என்று நம் இசையின் எல்லாக் கூறுகளையும் கீர்த்தனை பாடுவதில் நாம் அமைத்துக் கொண்டதால், கீர்த்தனை பாடுவது நம் இசையில் தனிப் பெரும் சிறப்பைக் கொண்டதாக மலர்ந்துள்ளது.

தெலுங்கு, வடமொழிக் கீர்த்தனைகளும் வங்கமொழி, கன்னடக் கீர்த்தனைகளும் ஆதிக்கம் கொண்ட காலத்தில் தமிழில் கீர்த்தனைபாடி, தமிழிசையைக் காத்த பெரியோர்கள் பலர் தமிழகத்தில் உருவானார்கள். அவர்களால் தமிழ் இசைப்பாடுதுறை வளம் பெற்றது. இவ்வாறு பண்டைப்பாணர் இசை - நாட்டார் இசை, புலவர் மரபில் கீர்த்தனை வடிவாக புதிய தோற்றம் கொண்டு தமிழிசையின் பாடுதுறையை கி.பி. 15ஆம் நூற்றாண்டு முதல் இன்றைய காலம் வரை வளப்படுத்தி வருகிறது.

Pin It