குழந்தையைப் படுக்கையில் வைத்து
தின்று முடித்த பாம்பு மெல்ல நகர்ந்து செல்கிறது
பாம்புகள் காடுகளை நிறைத்துவிட
காடுகள் மழையை நிறைத்துவிட
மழை இரவை நிறைத்துவிடுகிது.
உன்னைப் பிரிந்த சூரியன் எழும்பியிராத
கறுப்புக் காலையின் நாள்
மீண்டும் வருகிறது
கடைசியாய் அருந்திய தேனீர்
நீ ஊட்டிய கேக்
தீர்ந்து பசியெக்க தொடங்கிய நாள் வருகிறது
நீ என்னைப் பெற்றதும்
நான் உன்னைப் பிரிந்ததுமான நாள்
மெல்ல மெல்ல வந்துவிடுகிறது.
நீ எனது புத்தகங்களை விட்டுச்சென்றிருக்கையில்
நனைந்தழிந்த புகைப்படங்களின் குறையில்
எனது முகம் தேடுகிறாய்.
முதலைகள் ஊர்களுக்குள் புகுந்தன
குளங்கள் வற்றிவிட
ட்ராங்கிகள் நீந்துகின்றன
ஒவ்வொரு ஊரும் நகரும் வீழ்கிற பொழுது
உன்னைப்பிரிந்த வலியெடுக்கிறது.
குளங்களை படைகள்
குடித்து விட்டு எறிகிற எறிகனைகள் விழும்
மரங்களின் கீழே
உன்னை தின்பதற்காய்
அலையும் பாம்புகளை கண்டேன்.
தூக்கமும் கண்களும்
மழையில் தொலைந்து விடுகிறது
குழந்தைகளை பாம்புகள் இழுத்துச்செல்வதாய்
இறுக அணைத்துக்கொள்கையில்
மழை தாய்மாரை இழுத்துச் செல்கிறது.
மரங்களின் வேர்களினிடையே
உன்னோடு பொறுத்துவிடுகிற
எனது புகைப்படங்களில் பாம்புகள் அசைகின்றன
சமையல் பாத்திரங்களில் பசி நிரம்பியிருந்தது.
முதலைகள் மாமரத்தை தின்றுவிட
மழை வீட்டை தின்றுவிடுகிறது
படைகள் கிராமத்தை தின்று விடுகின்றனர்
முழுக் குழந்தைகளையும் தின்பதற்காய்
சருகுகளினிடையே பாம்புகள் காத்திருக்கின்றன.
உன்னைப்பிரிந்து வந்த எனது பிறந்தநாள்
தாங்கமுடியாத
தோல்வியையும் அவலத்தையும் நிறைத்து
மழையில் நனைந்த
அடுப்புக்கற்களினிடையில் கிடக்கிறது.
---------------------------------------------------------------------------
24.10.2008 அம்மாவைப் பிரிந்த எனது பிறந்தநாளை நினைவு கூர்ந்து
- தீபச்செல்வன் (
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
)
| நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க... |
கீற்று இணையதளத்திற்கு படைப்புகளை அனுப்ப இங்கே அழுத்தவும். வேறு எந்த இணையதளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான பின்னூட்டங்கள் குறித்து editor@keetru.com-க்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும். br> br> |
Comments (0)
Joomla components by Compojoom
| < முன் | அடுத்தது > |
|---|








