ஈழப்போராட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வட கிழக்குப் பகுதியில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் சூழலில் தமிழ் சிறு பத்திரிக்கைகளில் விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாடுகளை கடும் விமர்சனம் செய்து ஏராளமான கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த கட்டுரையாளர்கள் தங்களை மனித உரிமை ஆர்வலர்கள், சனநாயகவாதிகள் என இக்கட்டுரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டும் வருகின்றனர். விடுதலைப்புலிகளை விமர்சனம் செய்வதில் கட்டுரையாளர்களின் அரசியல், கருத்து சுதந்திரத்தை யாரும் தடுத்து விட முடியாது. ஆனால், இக்கட்டுரையாளர்கள் தங்களின் கட்டுரைகளில், போரில் ஈடுபடாத ஈழத்தமிழ் மக்கள் வதை முகாம்களில் துன்பப்படுவதையோ, இம்மக்களை பட்டினியிட்டும் நோய் மூலமும், குழந்தை பெற்றுக்கொள்ளும் சூழல்களை மறுத்தும் இராஜபக்சே அரசு தமிழ் இன அழித்தொழிப்பு மேற்கொள்வதைப் பற்றியோ, அரச வன்முறை குறித்தோ சிறுவிவாதத்தைக்கூட எழுப்புவதில்லை.

ஈழத்தமிழர்களின் இன்றைய துயரங்களுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற தனி மனிதனின் வன்மமே காரணம் எனும் தொனியில் எழுதப்படும் பல ‘அறிவு ஜீவிகளின்’ கட்டுரைகள் ‘தேசிய இன விடுதலைப் போராட்டம் தவறானது’ என்ற புள்ளியில் முடிவடைகின்றன.

ஜூன்-செப்டம்பர்-2009 புதுவிசை இதழில் அ.மார்க்ஸ் அவர்களின் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அக்கட்டுரையில் பொத்தம் பொதுவாக - கோவை நீலாம்பூரில் நடந்த இராணுவ வாகன தடுப்பு ஆர்ப்பாட்ட செய்தி பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் - 02.05.2009-ம் தேதி இலங்கை இராணுவத்திற்கு உதவ இந்திய இராணுவ வண்டிகள் செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்திய இராணுவ வாகனங்கள் தடுக்கப்பட்ட நிகழ்வினைக் குறிப்பிட்டு - பின் “தவறான செய்திகளின் அடிப்படையில் இப்படி நடந்து விட்டது” என நீதிமன்றங்களில் பிணை விடுதலைக்காக விண்ணப்பிக்கும்போது சிறைப்பட்டோர் வாக்குமூலம் அளிப்பது வேதனை காட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் இந்நிகழ்வில் பங்கெடுத்தவர்களின் தியாகம், அரசியல் மற்றும் உறுதித் தன்மை இவற்றை அவர் நையாண்டி செய்வதாகவே கருதத் தோன்றுகிறது. உண்மையில் இவ்வாறு போகின்ற போக்கில் ஏளனம் செய்யும் முன் தான் குறிப்பிடும் செய்தி உண்மையானதா என அ.மார்க்ஸ் சரிபார்க்கத் தவறி விட்டார்.

தமிழக மக்கள் மத்தியில் ஈழ மக்களின் உயிர்களை காக்க ஒட்டு மொத்தமான சனநாயகக் குரல்கள் எழுப்பப்பட்டன. இதன் தாக்கத்தால் தான் தமிழக அரசு தனது சட்டமன்றத்தில் இரண்டுமுறை இந்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய அரசோ தொடர்ந்து இராணுவ தொழில்நுட்ப உதவிகளை இலங்கை அரசுக்கு செய்து வந்தது. ஈரோடு, கோவை வழியாக இராணுவ டாங்கிகள் கொச்சிக்கு அனுப்பப்பட்டு கடல் வழியாக இலங்கைக்குச் செல்வதாக புகைப்படத்துடன் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனை தமிழக அரசோ, மத்திய அரசோ மறுக்கவில்லை. மேலும், இன்றுவரை இந்திய அரசு இராணுவ உதவி செய்ததை இலங்கை நன்றியுடன் நினைவு கூர்கின்றது. நமது நாட்டு இராணுவ அமைச்சரும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தக் கால கட்டத்தில் தான் 02.05.2009-ம் தேதி சேலம், கோவை வழியாக இந்திய இராணுவ வாகனங்கள் கொச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்தபோது, தன்னெழுச்சியாக இந்திய அரசின் தமிழர் விரோத மனப்பான்மையினை எதிர்க்கும் ஒரு அடையாள சனநாயகப்போராட்டமாக – அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்யவே கோவை நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே குடும்பம், குடும்பமாக பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிலர் இராணுவ வாகனத்திலிருந்த சில பெட்டிகளை சாலையில் தூக்கி வீசி எறிந்தனர். வாகன முகப்புக் கண்ணாடி மற்றும் விளக்கு உடைக்கப்பட்டது. ஒரு இராணுவ வாகனத்திலிருந்த கட்டில் மற்றும் மரச்சாமான் எரிக்கப்பட்டது. இது உடனடியாக அங்கிருந்த அமைப்பாளர்களான கு.ராமகிருஷ்ணன் போன்றோர்களால் தடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்குப் பின் கூட்டம் கலைந்து போய்விட்டது.

ஆனால், அதன் பின்பு, வெகுநேரம் கழித்து இராணுவ வீரர்கள் ஒரு வாகனத்தில் இரும்பு பைப்களுடன் வந்தார்கள். சம்பவ இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களைத் தாக்கினர். ஒரு பத்திரிக்கையாளருக்கு கை எலும்பு முறிந்து போனது. காவல்துறை தலையிட்டு பொது மக்களின் மீதான தாக்குதலைத் தடுத்தது. அதன் பின்பு, பெரியார் தி.க.செயலர் கு.இராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். பெரியார் தி.க.வினர், மறுமலர்ச்சி தி.மு.க.வினர் என பலர் கைது செய்யப்பட்டனர். அன்று இரவு 1 மணியளவில் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தைச் சேர்ந்த பொன்.சந்திரன் வீட்டிற்குச் சென்ற காவலர்கள் அவரின் மனைவியை விசாரிக்க வேண்டும் என்றனர். இரவில் ஆண் காவலர்கள் பெண்களை விசாரிப்பது ஏற்புடையதல்ல என்று சட்ட விதிகளை சுட்டிக்காட்டி வாதிட்டபோதும், அவர்கள் பொன்.சந்திரன் மற்றும் அவரின் மனைவி தனலட்சுமியைக் கைது செய்தனர். பின் முதல் தகவல் அறிக்கையில் மற்றும் பலர் என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு காவல்துறை ஈழ ஆதரவு பேசிய பலரை தேடியது. நீலாம்பூரில் வாகனம் தாக்கப்பட்ட இடத்தில் வேடிக்கை பார்த்த பிரபாகரன் என்ற ஒரு இளைஞரை அந்த பெயருக்காகவே கைது செய்தனர். அவர் மனைவி தன் கணவர் இந்நிகழ்வில் தொடர்பற்ற அப்பாவி என கோவை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்து வந்தார்.

ஈழ ஆதரவுக் கூட்டம் நடத்தியவர்கள் அதற்காக குரல் கொடுத்த பலர் தாங்கள் இவ்வழக்கில் சேர்க்கப்படலாம் என பயந்து தலைமறைவாயினர். அடக்குமுறை அதிகரித்தது. இரவுகளில் பெரும் கொள்ளையனைத் தேடுவது போல இவர்களின் வீட்டுக் கதவுகள் தட்டப்பட்டன.

இவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த காவல்துறை முயன்றது. ஒரு நண்பரின் மகள் பள்ளி மாணவி (இளவர்). அவரைக் கைது செய்ய ரேசன் கார்டை சரிபார்ப்பது போல உளவுப்பிரிவு காவல்துறை அவரின் வீட்டில் வேவு பார்தத்து. இதனையடுத்து பள்ளியில் படிக்கும் சிறுமியை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் அவர் தனது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தார். அவர் மூன்று மாதம் கழித்து திரும்பி வரும்போது காவல்துறை வீட்டு உரிமையாளரை மிரட்டி அவரின் வீட்டை வேறு ஒரு பூட்டு போட்டு பூட்டி வைத்திருந்தது என்பது மற்றுமொரு சோகம்.

வேலைக்குப் போக முடியாது; குடும்ப பொருளாதாரத்தை எதிர்நோக்க முடியாத காரணங்களினால் சிலரின் குடும்பங்கள் பெரும் உறவுச் சிக்கல்களை எதிர்கொண்டன. காவல்துறை மனரீதியாக பெரும் அச்சுறுத்தல்களை இவர்களுக்குக் கொடுத்தது. இந்த நிகழ்வினை ஒட்டி கைதானவர்கள் மீது தேச துரோகப்பிரிவு வழக்கு சேர்க்கப்பட்டது. பலர் அடக்குமுறையின் துயர் தாங்காது தாங்களாகவே காவல்துறையில் சரண் அடைந்தார்கள். கோவை குண்டு வெடிப்புக்குப் பின் காவல்துறை கோவையில் நடத்திய பெரிய மனித வேட்டையாக இது இருந்தது.

முதலில் கோவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிணை வேண்டி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்த பொன்.சந்திரன், தனலட்சுமி ஆகியோருக்கு நானும், பி.யூ.சி.எல் தலைவர் வி.சுரேஷ், அபுபக்கர், இரா.முருகவேள் ஆகியோரும் ஆஜரானோம். மற்றவர்களுக்கு வழக்குரைஞர் ப.பா.மோகன் வாதாடினார். எங்கள் சார்பாக வி.சுரேஷ் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தார். எங்கள் வாதத்தில் எங்கும் நாங்கள் தவறான குறுஞ்செய்திகளைப் பார்த்துப் போனதாக குறிப்பிடவில்லை. உண்மையில் எங்களின் வாதம் ஒரு அரசியல் வாதமாக மட்டுமே இருந்தது. தமிழக சட்டமன்றம் இயற்றிய ‘போர் உதவியை இலங்கைக்கு செய்யக்கூடாது’ என்ற தீர்மானத்திற்கும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கும் ஜெனிவா மாநாட்டு வரைவுக்கும் எதிராக இந்திய அரசின் செயல்பாடு அமைந்திருப்பதையும், சொந்த மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அதிகார வர்க்கம் செயல்படுவதையும் சுட்டிக் காட்டினோம். இந்திய பாராளுமன்றம் 1960-ம் ஆண்டு ஜெனிவா மாநாட்டு வரைவு சட்டம் என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர் குற்றம் போன்றவற்றிற்கு இந்தியாவில் யாரேனும் உதவினால் அது தண்டணைக்குரிய குற்றம் என்ற சட்ட விளக்கத்தையே முன் வைத்தோம். எங்களின் பிணை மனுக்களை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றத்திலும் இந்த அரசியல் வாதங்களே முன் வைக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதி ஒவ்வொரு இயக்கத்தின் சார்பிலும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யச் சொன்னார். இந்த உறுதிமொழிப் பத்திரத்திற்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை என மறுத்தோம். ஆனாலும், நீதிமன்றம் வலியுறுத்தியதற்கு இணங்க மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் அதன் மாநில செயலாளர் என்ற முறையில் நான் உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தேன். இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் எங்கேயும் தவறான குறுஞ்செய்தி அடிப்படையில் இப்படி நடந்து விட்டதாக குறிப்பிடவில்லை. நாங்கள், எங்களின் இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தோம்.

எனவே, ‘தவறான செய்தி அடிப்படையில் இப்படி நடந்து விட்டது’ என அ.மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை நாங்களோ, பெரியார் தி.க.வோ, மதிமுகவோ கொடுக்கவில்லை. அரச வன்முறை தலைவிரித்தாடும் போது தனது சிறு எதிர்ப்பின் மூலம் அதனை கேள்விக்குள்ளாக்குவதை சிவில் வீரம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் மதிக்கின்றனர். இத்தகைய சிவில் வீரத்தை வெளிப்படுத்திய நிகழ்வாக கோவை இரானுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அ.மார்க்ஸ் காணாமல் போனது விந்தையானது. உலகில் போருக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் நெடிய போராட்டத்தின் ஒரு தொடர்ச்சிதான் இந்த நிகழ்வும் ஆகும். இந்நிகழ்வை ஒட்டி கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது அரசு தாக்கல் செய்த தேச பாதுகாப்பு வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், யாரையும் இனி இவ்வழக்கில் கைது செய்து சிறைப்படுத்தத் தேவையில்லை என கு.இராமகிருஷ்ணன் (பெ.தி.க) பிணை மனுவின்போது கூறி “மற்றும் பலர்” என்ற அடிப்படையில் நினைத்தவர்களை எல்லாம் கைது செய்து சிறைப்படுத்தலாம் என்ற காவல்துறை அடக்குமுறைக்கும் தற்போது நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்நிகழ்வில் இராணுவ வாகனங்கள் இலங்கைக்குப் போகவில்லை என மறுத்து கட்டுரை எழுதும் அ.மார்க்சிடம் அதற்கான வலுவான ஆதரவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு பேசும் பொய்யை உண்மை என நம்பும் மனநிலை ஏற்புடையதல்ல. மத்திய அரசை எதிர்க்கும் நாம் நமது ஊரில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்கின்றோம். இதனை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகின்றோம். அதைப்போன்றுதான் இந்திய இராணுவத்திற்கு எதிராக கோவையில் ஈழ ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டமாகும். மக்கள் போராடத் தயாராக இருந்ததின் வெளிப்பாடே குறுஞ்செய்தி மூலம் அவர்கள் திரண்ட நிகழ்வு. எவர் கொடுத்த போதும் மக்களின் உணர்வுக்கு எதிரான செய்திகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றன. அடக்குமுறையை எதிர்கொண்டவர்களின் பாதிப்புக்களை - உண்மைகளை மனசாட்சியோடு உள்வாங்கியிருந்தாலே போகின்ற போக்கில் நையாண்டி செய்யும் குரூரம் நிகழ்ந்திருக்காது.

- ச.பாலமுருகன்,

பொதுச் செயலாளர்,

மக்கள் சிவில் உரிமைக்கழகம்,

தமிழ்நாடு மற்றும் புதுவை.

Pin It