உலகின் மக்கள் தொகையில் 500 நபர்களில் ஒருவருக்கு மூலம் தொந்தரவு உள்ளது. இருபது வயதிலிருந்து நாற்பது வயதுக்குட்பட்டோர்கள் ஓரளவு மெல்ல, மெல்ல மூலம் நோயாளியாக மாறி வருகிறார்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் அதனுடன் தொடர்பு கொண்ட மூலம் நண்பனைப் போல் தொடர்பு கொண்டு அவ்வப்போது எதிரியைப் போல் இடையூறு செய்கிறது.

உடலில் உள்ள ஒவ் வொரு செல்களுக்கும் (cells) உணவாக ஆக்ஸிஜ னைக் கொண்டு செல்லும் பணி தமனியின் (Arteries) பணியாகும். இது தலை முதல் கால் வரை பரவி உள்ளது. இருதயத்திலிருந்து இரத்தம் தமனி வழியாக செல்லும் போது ஆக்ஸிஜனையும், உயிர் சத்துக்களை யும் எடுத்துச் செல்லும் பாதையில் குறிப்பிட்ட இடம் சென்று வேதியியல் மாற்றம் நிகழ்ந்து சிரைகள் (Venis) மூலமாக கரியமில வாயுவை எடுத்து வரும். தமனி - சிரை இவை இரண் டையும் இணைக்கும் சிறு இரத்த நாளங்களுக்கு தந்துகி (Capillaries) என்று பெயர்.

தமனியின் உட்சுவர் தடிமனாக உறுதியாக இருக்கும். ஏனென்றால் இருதயத்திலிருந்து இரத்தம் வெகு அழுத்தமாக வெளியேறும்போது இரத்தத்தை தாங்கும் பொருட்டு இயற்கையாகவே இவ்வாறு அமைந்துள்ளது.

சிரையின் உட்புறச் சுவர் மென்மையானது. உறுதியற்றது. உடல் முழுவதும் சிரைகள் உள்ளது. சில நேரங்களில் சிரை நாளங்களில் இரத்தம் அதிகளவில் அழுத்தமாக வரும்போது இரத்தம் நகராமல் தேங்கி நிற்கும் போது சிரைநாளங்கள் தளர்ந்து விரிவடைவதால் அசுத்த இரத்த குழாய் புடைத்தல் ஏற்படுகிறது. (Varicosevin) மலக்குடல் பகுதியில் உள்ள சுருக்கு தசையின் உட்பக்கம் இருக்கக் கூடிய சிரைகள் புடைத்து வீங்குவதால் மலக்குடலில் மூலம் உருவாகிறது. இது உள்மூலம் எனப்படுகிறது. ஆசனவாய் பகுதியில் சிரைகள் புடைத்து வீங்கும் போது வெளிமூலம் உருவாகிறது. மனிதர்களுக்கு இம்மாதிரியான இரண்டு விதமான மூல நோய்களும் ஏற்படுகிறது.

காரணம் :-

சிரைகள் அதிகமுள்ள இடங்களில் சிரைகள் மீது அழுத்தம் ஏற்படுவதாலும், மலசிக்கல், அதிக உடல் எடை அல்லது உடல் பருமன், கர்ப்பகாலம், ஆகிய மூன்று நிலைகளிலும் ஆசனவாய் பகுதியிலுள்ள சிரைகள் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதாலும், மலம் கழிக்கும் உணர்ச்சி ஏற்படும் போது மலத்தை வெளியேற்றாமல் அடக்கி வைக்கும் போது சிரைகள் மீது அழுத்தம் அதிகரிப்பதாலும், கோடைகாலங்களில் உடலில் தேவைக் கேற்ப தண்ணீர் அருந்தாமையாலும், அதிக வியர்வையால் மலக்குடல், பெருங்குடல் பகுதியில் ஏற்படும் வறட்சியால் மலச்சிக்கல் ஏற்படுவதாலும், முக்கியமாக நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களையும், கீரை வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமையாலும் அடிக்கடி இறைச்சி விரும்பி அதிகளவு உண்பதாலும், எல்லா வகையான உணவு உட்கொள்ளும் போதெல்லாம் ஊறுகாயை ருசித்து உண்பதாலும்,

கர்ப்பகாலத்தில் 6, 7வது மாதத்தில் கர்ப்பப்பை விரிவடையும் போது மலக்குடல் அழுத்தப்படுவதால், அப்போது மலச்சிக்கல் தோன்றி சிரை நாளங்கள் புடைப்பதாலும், சிலரின் வாழ்க்கைச் சூழல், வேலைத் தன்மைகள் காரணமாக ஓய்வு பெறும்வரை உட்கார்ந்தே பணிபுரிபவர்கள், ஓட்டுனர்கள், அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், அதிக எடைகளை தனது சக்திக்கு மீறி தூக்குபவர்களுக்கு, சிரைகளில் அழுத்தம் உண்டாகி வீக்கம் ஏற்பட்டு மூலம் உருவாகிறது. இது மட்டுமல்லாமல் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, நாட்பட்ட தீராத இருமல் இதர வேறுசில நோய்களுடன் அஜீரணத்துடன் மலச்சிக்கலும் தோன்றுவதால் மூலம் நோய் உருவாகிறது. உடலுழைப்பு உடற்பயிற்சி இல்லாத மனிதர்கள் மூல நோயிலிருந்து தப்புவது சிரமம்.

உள்மூலம் :

ஆரம்ப நிலையில் மலம் கழிக்கும் போது லேசான வலியுடன் இறுக்கமான உணர்வு இருக்கும். மலக்குடலில் சிறிய உருண்டையாக வளர்ச்சி பெறும்போது முக்கி மலம் கழிக்கும் போது உருண்டை சதையானது மலக்குடலிருந்து வெளியே வரும்போது ஆசன வாயில் வலி அதிகமாகும். இதனால் ஆசன வாயிலிருந்து இரத்தம் வரும். ஆசனவாய்க்கு வெளிப்புறமாக வந்த உருண்டை சதையை விரல்களின் உதவியால் உள்ளே தள்ளிவிட வேண்டியதிருக்கும். உள்மூலம் முற்றிய நிலையில் ஆசனவாயின் உட்புறம் வீங்கியிருந்த வீக்கம் பெரியதாகி விட்டால் மலம் கழிக்கும்போது தாங்க முடியாத வலியும், இரத்தப் போக்கும் ஏற்படும். மூல வீக்கம் ஆசனவாய்க்கு வெளியே முழுமையாக வந்துவிட்டால் விரலை வைத்து உள்ளே தள்ளமுடியாது. இதில் ஒருவிதமான ஈரமான சவ்வுப்படலம் மூலக் கட்டியை மூடியிருக்கும். இந்நிலையில் ஆசன வாயில் புண் போன்ற வலியும், இரத்தக் கசிவும், ஈரப்பதமும் இருக்கும்.

வெளிமூலம் :

ஆரம்ப நிலையில் ஆசனவாய் துவாரத்தை சுற்றி பரவி இருக்கும் சிரைநாளங்களில் ஃ ஆயுத எழுத்து போன்ற மிளகு போன்ற வடிவத்தில் மூன்று சிறிய வீக்கமிருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது வலி இருக்கும். 2வது நிலையின் போது மிளகு வடிவில் இருந்த மூன்று வீக்கமும் வெளிப்பார்வைக்கு தெரியும்படி சற்று பெரிய வீக்கமாக காணப்படும் போது வலியும் வேதனையும் முன்பு இருந்ததை விட அதிகரிக்கும். மலம் கழிக்கும் போது மேலும் கடுமையாகும். மலம் கழிக்கும் நேரத்தில் வேதனையால் அலறுவார். மலங்கழிக்க வேண்டுமென்ற நினைப்பு வந்தாலே பயப்படுவார். வீக்கத்திலிருந்து ஒருவித நிறமற்ற திரவக்கசிவு ஏற்பட்டு ஆசனவாயில் நமைச்சல் ஏற்படும். இந்நிலையில் நோயாளி உட்காரவும், நிற்கவும் முடியாமல் சிரமப்படவேண்டியதிருக்கும். மேலும் வலியுடன் கூடிய ஒரு பந்தின் மீது உட்கார்ந்துள்ள உணர்வு ஏற்படும். ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் ஏற்படும்.

சிகிச்சைகள் :

ஆங்கில மருத்துவ முறையில் பொறுத்த வரையில் கிருமி கொல்லி மாத்திரைகளும், வீக்கத்தைக் குறைப்பதற்கான மாத்திரைகளும் மலச்சிக்கலை போக்கி வயிற்றுப்போக்கு ஏற்படுத்துகிற மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. இதன்பின்பும் பிரச்சனை தீரவில்லையெனில் அறுவை சிகிச்சை செய்து தற்காலிக நிவாரணம் வழங்கப்படுகின்றன.

ஹோமியோபதி மருத்துவமுறை மட்டுமே நோயாளியின் மன உணர்வுகள், உடல்வாகு, காரணம், பணியின்தன்மை, உணவுப் பழக்கம், நோயின் தீவிரத் தன்மையை பொறுத்தும், நோயறி குறிகளை மனதில் கொண்டும் சிகிச்சையளிக்கப்படுவதால் உடனடி நிவாரணமும் விரைவில் முழுநலமும் பெறலாம்.

மூல நோயாளிக்கு பயன்படும் ஹோமியோ மருந்துகள் சில ...

லா - உள்மூலம், இரத்தம் கொட்டும் ஆசன வாயிலிருந்து திராட்சை குலைபோல் வெளியே வரும். அதிகவலி, அரிப்பு, எரிச்சல் இருக்கும் குளிர்ந்த நீரினால் துயர்தணியும். இரவில் தூக்கம் கெடும் காற்று பிரியும்போது மலம் வெளியேறும்.

மூரியாடிக் ஆசிட்    - ஆசனவாயிலிருந்து திராட்சை கொத்து போன்ற மூலம் தொடமுடியாதபடி கடுமையான வலி, எரிச்சல், ஆசனவசாய் அரிப்பு குளிர்ந்த நீரினால் அதிகரிக்கும், வெந்நீரினால் தணியும் சிறுநீர் பிரியும்போது உணர்வின்றி மலமும் பிரியும்.

காலி.கார்ப்     - இரத்தப்போக்குடன் உள்ள உள் மூலம், பெரியளவில் வீங்கி இருக்கும் எரிச்சல் தொடமுடியாதபடி வலி கத்தியால் குத்துவது போன்ற வலி, நெருப்பு போல் எரிச்சல், குளிர்ந்த நீரில் உட்கார்ந்தால் தணியும். மலம் கழிக்கும் முன் ஒருமணி நேரத்திற்கு முன்பு ஆசனவாயில் குச்சியால் குத்துவது போன்ற வலி.

நக்ஸ்வாமிகா - இரத்தமூலம், இரத்தமில்லாத மூலம் இரண்டுக்கும் பயன்தரும். வயிறுவலியுடன் அடிக்கடி மலம் கழிக்க தூண்டும் உணர்ச்சி, போய் உட்கார்ந்தால் சிறிதளவு மலம் மட்டும் வெளியாகும்.

சல்பர் - வலியில்லாத மூலம்

ஹமாமெலிஸ் -     இரத்த மூலம் மலம் கழிக்கும்போது ஏராளமாக இரத்தம் வரும் மூலத்தில் எப்போதும் புண் போன்ற வலி, இரத்தம் அடர்த்தியாக கரு நிறத்தில் இருக்கும்.

அம்-கார்ப் - மலம் கழித்த பின் ஏற்படும் இரத்தப் பெருக்கு.

கோலின்சோனியா - உள்ளே இருந்து வெளியே தள்ளும் மூலம். மணலும், குச்சிகளும் மலக் குடலில் நிரம்பியுள்ள உணர்ச்சி, அதிகளவு இரத்தப்போக்கு இல்லாவிட்டாலும் விட்டு, விட்டு இரத்தப்போக்கு ஏற்படும். மிகக்கடுமையான மலச் சிக்கல். குறிப்பாக கர்ப்பகால மலச்சிக்கல், வறண்டமலம், ஆசனவாய் அரிப்பு, வயிற்று போக்கும் மலச்சிக்கலும் குறிப்பாக வயதானவர்களுக்கு மாறிமாறி வரும்.

எஸ்குலஸ் - மிக நாட்பட்ட மூலம். கோலின்சோனியா குணமாக்கி விட்டபின்பு இது உதவும்.

ப்ரோமியம்     - இரத்தம் இல்லாத மூலம், மலம் கழிக்கும் போதும், பின்பும் கடும் வலி, அந்த இடத்தில் நோயாளியின் உமிழ்நீரை தடவினால் வலி குறையும்.

ரட்டானியா - மூலம் உள்ளிருந்து பிதுங்கி வரும்போது வலி, எரிச்சல் கடுமையாக நீடிக்கும். பல மணிநேரம் இருக்கும். மலக்குடலில் கண்ணாடி துண்டுகளில் உட்கார்ந்த உணர்வு, குளிர்ந்த நீரை பயன்படுத்தினால் துயர் தணியும்.

நைட்ரிக் ஆசிட் - மிருதுவான மலத்தைக் கூட வெளியேற்றுவதற்கு முன்பும், பின்பும்      நீண்டநேரம் கடும்வலி, எரிச்சல், அதிக இரத்தப்போக்கு, ஒவ்வொருமுறை மலங்கழித்த பின்பும் பலவீனமாக உணர்தல், மூலம் வெளியேறும் சமயத்தில் ஆசனவாயில் வெடிப்புக்கள் ஏற்படுதல்.

புளோரிக் ஆசிட் - வெளிமூலத்திற்கு முக்கிய மருந்து. வேறுசில தீவிர மருந்துக் குறிகள் இருந்து குணமான பின் வீக்கம் மட்டும் இருத்தல்.

இக்னேஷியா - குத்தும் வலியுள்ள மூலம், மலம் கழித்தபின் வெளியே பிதுங்கிய சதையை உள்ளே தள்ள வேண்டிய நிலை. உட்கார்ந்தால், இருமினால் வலி அதிகரிக்கும்.

சிலிகா - ஈரக்கசிவும், அதிக வலியும் உள்ள மூலம். கடின மலம் வெளியே வந்து சிறிது மலம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். மலம் கழித்து வெகுநேரம் வலி இருக்கும்.

மூல நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ ஆலோசனைகள் :

இரத்தமூலத்திற்கு பசும்பால் கறந்தவுடன் மேலிருக்கும் நுரையை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து காலை, மாலை இருவேளை பருகினால் 3லிருந்து 7 நாட்களுக்குள் இரத்தப் போக்கு நிற்கும்.

நீண்ட நாள் இரத்த மூலத்திற்கு தயிரில் வெங்காயத்தை ஊறவைத்து தினம் இருவேளை சாப்பிட்டால் நல்லது.

எல்லா வகையான மூலத்திற்கும் தொட்டால் சிணுங்கி, செடி, இலை, தண்டு, வேர் இவைகளை கசாயமாக செய்து அருந்தலாம். வலி, வீக்கம் குறையும்.

எல்லா வகையான மூலத்திற்கும் கிரந்தநாயகம் இலையை பருப்புடன் சேர்த்து கூட்டுசெய்து சாப்பிட்டால் வலி, வீக்கம் இரத்தப்போக்கு தணியும்.

வெங்காய சாறுடன் நெய் அல்லது நாட்டுசர்க்கரை கலந்து பருகினால் விரைவில் குணம் பெறலாம்.

கொதிக்கும் நீரில் மாதுளம்பழ விதை சிலவற்றை போட்டு சிறிது நேரத்தில் இறக்கி தேநீர் போல் அருந்திவர விரைவில் குணம் பெறலாம்.

மூலம் வலி நீங்க சிறிதளவு பாலில் வாழைப்பழம் சேர்த்து கடைந்து ஜாம் போல் செய்து சாப்பிட்டு வர வலி நீங்கும்.

பாகற்காய் இலையை சாறெடுத்து மோருடன் கலந்து காலை, மாலை, பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.

வலியுள்ள இடத்தில் முருங்கை இலையை அரைத்து பூசலாம்.

மாங்கொட்டையிலிருக்கும் விதையை பவுடராக்கி இரண்டு ஸ்பூன் வீதம் தினம் இருவேளைதேன் கலந்து சாப்பிடலாம்

- Dr. க. வெள்ளைச்சாமி, RHMP, RSMP

விருதுநகர். Cell : 98947 48449

Pin It