தோழர்களே,
 
வணக்கம். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்துக்கு எதிராக இடிந்தகரை, கூடங்குளம் பகுதி மக்கள் ஆதரவுடன் 2011 ஆகஸ்ட் முதல் ஓர் உச்சமான போராட்டத்தை நாங்கள் தொடங்கி நடத்தி வருகிறோம். போராட்டம் தொடங்கி சுமார் மூன்று மாதங்கள் கழித்து உங்கள் இயக்கத்தைச் சார்ந்த ஒரு குழு இடிந்தகரைக்கு வந்து எங்களைச் சந்தித்தனர். உங்கள் இயக்கத்தைப் பற்றி, செயல்பாடுகள் பற்றி எங்களில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உங்கள் எண்ணங்களை, ஆலோசனைகளை நான் கவனமாகக் கேட்டேன், உங்களோடு ஒரு கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டேன்.
 
உங்களின் கொள்கைகளில், செயல்பாடுகளில் முழு உடன்பாடு இல்லையென்றாலும், நீங்கள் ஒரு மதவாத, சாதீய, பிற்போக்கு சக்தியல்ல என்பதன் அடிப்படையில் உங்களோடு தொடர்ந்து இணைப்பில் இருந்தேன். எங்கள் நிகழ்வுகளை உங்களுக்கு அறியத் தந்தேன். கூடங்குளம் போன்ற பிரச்சினைகள் ஓர் இயக்கத்துக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவுக்கோ மட்டுமே சொந்தமல்ல என்பதில் நானும், எங்கள் போராட்டக் குழுத் தோழர்களும் தெளிவாகவே இருந்து வருகிறோம். அந்த அடிப்படையில் உங்கள் இயக்கம் நடத்திய போராட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவாகவே செயல்பட்டோம். தூத்துக்குடியில் நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நானும், சில தோழர்களும் கலந்து கொண்டோம்.
 
பிப்ரவரி 11, 2012 அன்று கூடங்குளம் அணுமின் நிலைய முற்றுகைப் போராட்டம் ஒன்றை அறிவித்து, கூத்தங்குழி மக்களை சந்தித்து அந்தப் போராட்டத்துக்கு வரும்படி அழைத்தீர்கள். “உதயகுமார் சொன்னால்தான் வருவோம்” என்று அவர்கள் சொன்னதன் அடிப்படையில் ஒருநாள் இரவு இடிந்தகரைக்கு வந்து எங்களை சந்தித்து, கூத்தங்குழி மக்களை அனுப்பும்படி கேட்டுக் கொண்டீர்கள். ஏன் ஒரு குறிப்பிட்ட ஊர் மக்களை மட்டும் அழைக்கிறீர்கள், உங்களின் உண்மையான செயல் திட்டம் என்ன என்று விவாதித்த நாங்கள், இன்னொரு இயக்க நிகழ்வுக்கு நம் மக்களை அனுப்புவது சரியாக இருக்காது என்று தீர்மானித்தோம். இந்த நிலையில் கூடங்குளம் நண்பர்கள் ஒரு சிலரின் உதவியோடு எனக்கு எதிராக எங்கள் இயக்கத்துக்கு ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டீர்கள். கூடங்குளம் ஊருக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள தோழர்களிடம் நிறையப் பேசி அவர்களை மசிய வைக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நான், அந்த நிலையிலும் உங்களை உதாசீனப்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தேன்.
 
மார்ச் 19, 2012 அன்று தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கூடங்குளம், கூட்டப்புளி, செட்டிக்குளம் தோழர்களைக் கைது செய்தபோது, அவர்களைப் பிணையில் எடுப்பதற்கு உதவ முன் வந்தீர்கள். நெல்லையைச் சார்ந்த வேறு பல சார்பற்ற வழக்கறிஞர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்ததால், அவர்களையும் இணைத்துக் கொண்டு செயல்படும்படிக் கேட்டு, அந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தோம். தாங்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று அவர்கள் ஆதங்கப்பட்ட நிலையிலும், உங்களோடு தொடர்ந்து செயல்பட்டோம் நாங்கள். ஆனால் உங்களின் “புதிய ஜனநாயகம்” இதழின் மார்ச் 2012 தலையங்கத்தில் இப்படி எழுதினீர்கள்: “புலிகள் பிரபாகரனைப் போல ஜெ உதவியுடன் வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது.”
 
“ஜெ உதவியுடன் வெற்றி பெற முடியுமென்று” நான் எங்கேயும், எப்போதும் சொல்லவுமில்லை, அப்படி நம்பவுமில்லை, யாரையும் நம்பச் சொல்லவுமில்லை. தமிழக அரசியல் நிலை, யதார்த்தம், கட்சிகள், ஆளுமைகள் பற்றியெல்லாம் எனக்கு நன்றாகவேத் தெரியும். கூடங்குளம் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதாலும், மத்திய அரசையும், மாநில அரசையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராடுவது கடினமென்பதாலும், சில நடைமுறை தந்திரங்களைக் கைக்கொண்டோமே தவிர எங்களை, மக்கள் போராட்டத்தை யாரிடமும் நாங்கள் அடகு வைக்கவில்லை.
 
கைதான தோழர்களை பிணையில் எடுப்பதற்காக நாம் சேர்ந்து முயற்சிகள் மேற்கொண்டிருந்த நேரத்திலேயே, “கூடங்குளம் போராட்டத்தின் தலைமை சரியில்லை” என்ற கருத்தை ஏப்ரல் 21, 2012 அன்று திருநெல்வேலியில் நடந்த ஒரு கருத்தரங்கில் தெரிவித்தீர்கள். அதை ஒரு விமர்சனமாகக் கருதி உங்கள் மேல் கோபம் கொள்ளாமல், உங்கள் கருத்துரிமையாக எடுத்துக்கொண்டுக் கடந்து சென்றோம் நாங்கள்.
 
2012 மார்ச் மாதம் நானும், புஷ்பராயனும், இன்னும் சில தோழர்களும் நடத்திய காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தின் காரணமாக, எங்கள் மக்கள் குழுவோடு அரசு தரப்பு நடத்தியப் பேச்சுவார்த்தையில், கைதாகி சிறையில் இருப்பவர்கள் அனைவரையும் அரசு தரப்பில் எந்த ஆட்சேபணையும் இன்றி பிணையில் விடுவதற்கு முன்வந்தனர். அதற்கான செலவாக, உங்களுக்கு இடிந்தகரை மக்கள் ரூ.1,25,000 தந்தார்கள்; கூட்டப்புளி மக்கள் ரூ. 65,000 தந்தார்கள்; கூடங்குளம் நண்பர் ஒருவர் ரூ.5,000 தந்தார். மொத்தம் ரூ. 1,95,000 தந்தோம். இதில் ரூ. 69,267-க்கானச் செலவு விபரங்களை தெளிவாக, முறையாக எழுதி என்னிடம் தந்தீர்கள்; நான் அந்த ஆவணத்தின் ஒரு நகலை இடிந்தகரை நிதிக் குழுவிடம் கொடுத்துவிட்டு, முதல் படியை பத்திரமாக வைத்திருக்கிறேன்.
 
நானோ, எனது தோழர்களோ வெளியாரிடம் ம.க.இ.க. தோழர்கள் வழக்குச் செலவுகளுக்கு இவ்வளவு பணம் வாங்கினார்கள் என்றோ, இவ்வளவு செலவு ஆயிற்று என்றோ பேசியதே கிடையாது. அதற்கானத் தேவையும் எழவில்லை. ஆனால் நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் “ஒரு ரூபாய் கூட வாங்காமல், வழக்கு நடத்தினோம்” என்று ஒரு சுய விளம்பரத்தைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். இதைப் பற்றி சிலர் எங்களிடம் விசாரித்தபோதுதான், வழக்குச் செலவுகளுக்காக நாங்கள் ரூ. 1,95,000 கொடுத்தோம் என்று சொல்ல வேண்டியதாயிற்று. “எங்களுக்கான கட்டணம் எதுவும் வாங்கவில்லை, செலவுகளுக்கு மட்டும் காசு வாங்கினோம்” என்ற உண்மை விபரத்தை நீங்கள் சொல்லியிருக்கலாம்.
 
அக்டோபர் 9, 2013 அன்று இடிந்தகரைக்கு உங்கள் குழு ஒன்று வந்து, உங்களின் தாது மணல் போராட்டம் பற்றி சுமார் பத்து நிமிடம் என்னிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றீர்கள். அந்த மிகக் குறுகிய காலகட்டத்திலேயே உங்களில் ஒருவர் இடிந்தகரைக்கு வந்திருந்த ஜூனியர் விகடன் நிருபர், தம்பி மகா.தமிழ்ப்பிரபாகரனிடம் “இவர்களிடம் காசே வாங்காமல் நாங்கள் வழக்கு நடத்திக் கொடுத்தோம்” என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர் எங்களிடம் கேட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் உங்கள் சேவை பரப்புரையை நீங்கள் கைவிட்டபாடில்லை. இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே, இப்போது இந்த பணப் பிரச்சினை பற்றி இங்கே நான் குறிப்பிடுகிறேன். தயவு செய்து இனிமேல் “எங்களுக்கான கட்டணம் எதுவும் வாங்கவில்லை, வழக்குச் செலவுகளுக்கு மட்டும் ரூ. 1,95,000 வாங்கினோம்” என்ற உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் ‘காலத்தினாற் செய்த’ உதவியை இதுவரை நாங்கள் காசால் அளக்கவுமில்லை; உதவியை மறக்கவும் மாட்டோம். தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள பல வழக்கறிஞர்கள் உங்களுக்கும், எங்களுக்கும் பணம் ஏதும் பெறாமல் உதவியதையும் நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும் (அவர்களையும் இணைத்துக் கொண்டு, போராட்டத்தின் வழக்கறிஞர்கள் குழுவை ஒருங்கிணையுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டபோது, முதலில் இணக்கம் தெரிவித்த நீங்கள், பின்னர் ஏதோ காரணத்தால் பதிலேதும் சொல்லாமல் விலகிச் சென்ற கதையை எல்லாம் இங்கேப் பேசி பலனில்லாததால், விட்டுவிடுகிறேன்).
 
இந்த நிலையில் “புதிய ஜனநாயகம்” மே 2012 இதழில் “கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்” என்ற கட்டுரையில் அபாண்டமானக் குற்றச்சாட்டுக்களை அடுக்கினீர்கள்:

[1] “போராட்டங்களுக்கு அணிதிரண்ட மக்கள் மீது, அவர்களை வழிநடத்திய தலைமை மற்றும் முன்னணியாளர்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அம்மக்களைப் பற்றிய குறை மதிப்பீடு கொண்டிருந்தார்கள்.”
 
[2] “எத்தகைய எதிரிகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும் என்ற உண்மை அங்கு போராடும் மக்களிடம் சொல்லப்படவே இல்லை.”
 
[3] “கூடங்குளம் திட்டம், ஆட்சியாளர்கள், அமெரிக்க-ரஷ்யா முதலிய மேலைநாடுகள், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆகியோருக்கு எவ்வளவு முக்கியமானது; என்ன விலை கொடுத்தாவது, என்ன காரியம் செய்தாவது கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் எவ்வளவு மூர்க்கமாகவும் உறுதியாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற விவரம் போராடும் மக்களைச் சென்றடையவே இல்லை.”
 
[4] “பால்குடம் எடுப்பதும், பட்டினி கிடப்பதும் என்ற அமைதி வழியிலேயே, காந்திய வழியிலேயே போராடி வருவதாகத் திரும்பத் திரும்ப உதயக்குமார் முதலியவர்கள் மன்றாடினர்.”
 
[5] “குறைந்தபட்சம் சிங்கூர், நந்திகிராமம் போராட்டங்களுக்கு திரண்டதைப் போன்று பரவலான மக்கள் ஆதரவைத் திரட்டியிருக்க வேண்டும்.”
 
[6] “கூடங்குளம் போராட்ட முன்னணியாளர்கள் ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி சொன்னார்கள். இப்போது அவர்கள் நம்ப வைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப் புலம்புகிறார்கள். ஆக, மக்கள், மக்கள் மட்டுமே நம்பிக்கைக்குரிய மகத்தான சக்தி என்ற கொள்கையில் ஊன்றி நிற்கும்போதுதான் இலட்சியத்தை எட்டமுடியும் என்பது கூடங்குளம் போராட்டங்கள் நமக்குக் கற்றுத் தரும் படிப்பினை.”
 
எங்கள் மக்களைப் பற்றி எந்த மாதிரியான மதிப்பீடு நாங்கள் கொண்டிருக்கிறோம்; அவர்கள் எங்களை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்று எங்கள் மக்களிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே? எதற்காகப் போராடுகிறோம், யாரை எதிர்த்துப் போராடுகிறோம், அவர்களின் பலம் எத்தகையது என்றெல்லாம் உங்களுக்கு பாடமே எடுப்பார்களே எங்கள் மக்கள்? இடிந்தகரைக்கு வருகிற ஒவ்வொரு பத்திரிகையாளரும் இவை பற்றிய தகவல்களை எத்தனையோ முறை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்களே? மேலும் உங்களின் 37 வருட புரட்சி வரலாற்றில் எந்த பரவலான மக்கள் ஆதரவையும் எந்தப் பிரச்சினைக்கும் திரட்டாத நீங்கள், எங்களுக்கு மக்கள் சக்தி பற்றியும், போராட்ட முறை பற்றியும் வகுப்பு எடுப்பது நகைச்சுவையாக இருக்கிறது.
 
விசுவாமித்திரர் கோவிலுக்கு பால்குடம் எடுத்தது கூடங்குளத்தைச் சார்ந்த இந்து மக்களே தவிர, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமோ, போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்களோ அல்ல. நான் அந்த மக்களோடு விசுவாமித்திரர் கோவிலுக்குப் போனேன் அவர்களுடைய மத உணர்வுகளை அவமதிக்காமலிருப்பதற்காக; எங்கள் போராட்டம் எந்த ஒரு மதத்தையும் முன்னிறுத்துவது அல்ல என்று நிரூபிப்பதற்காக. மேலும் ‘பொருள் முதல்வாதம்’ மட்டுமே சமூக மாற்றத்துக்கான அடிப்படையாக முடியாது, மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவையும் முக்கியமானவை என்று நம்புகிறவன் நான்.
 
“ஜெயலலிதா போன்ற பிழைப்புவாதக் கழிசடைகளின் மீது நம்பிக்கை வைக்கும்படி” நான்/நாங்கள் சொன்னது போலவும், “அவர்கள் நம்பவைத்து வஞ்சகம் செய்து விட்டதாகப்” புலம்பியது போலவும் எழுதினீர்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எங்கள் எழுத்தோ, பேச்சோ ஏதாவது இருக்கிறதா உங்களிடம்? அல்லது இதுவும் ஓர் அடிப்படையற்ற புரட்சிகரக் குற்றச்சாட்டுதானா?
 
மேற்கண்ட கட்டுரையில் ஒரு சுவாரசியமான தகவலை குறிப்பிட்டிருக்கிறீர்கள்: “கூடங்குளத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள சென்னை மக்களிடம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர இயக்கங்கள் அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை எடுத்துச் சென்றபோது கூட முதலில் கடும் எதிர்ப்பையே கண்டார்கள். ஆனால், அவர்கள் பிரச்சார முயற்சியில் அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்தபோது, ஆதரவு தருபவர்களாக மக்கள் மாறினர்.” அற்புதமானப் புரட்சியாக இருக்கிறதே? இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்? “அணு சக்தி அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை” எப்படி எடுத்துச் சென்றீர்கள்? என்னென்ன நிகழ்வுகள், எங்கெங்கு, எத்தனை முறை, எப்படியெல்லாம் நடத்தினீர்கள்? எந்தவிதமான “கடும் எதிர்ப்பை” எதிர்கொண்டீர்கள்? “அழுந்தி நின்று இயக்கத்தைத் தொடர்ந்த” வித்தை பற்றியும் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்?
 
சிங்கூர், நந்திகிராமம் போல கூடங்குளம் போராட்டத்தை மாற்ற வேண்டும் என்று பல இடங்களில் உங்களில் சில தோழர்கள் பேசியிருக்கிறீர்கள். அப்படிப் பேசுவது, நம்புவது உங்கள் கருத்துரிமை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஒருமுறை உங்கள் கலைக்குழுவினர் இடிந்தகரை மேடையில் இதே கருத்தை வலியுறுத்திப் பாடினார்கள். இந்த வன்முறைக் கருத்துக்கு நான் உங்களிடம் எதிர்ப்பு தெரிவித்தபோது, “சும்மா ஒரு எழுச்சிக்காகவே அப்படிப் பாடினார்கள்” என்று விளக்கம் அளித்தீர்கள். உங்களின் புரட்சியையும், அதன் தீரத்தையும், உண்மைத் தன்மையையும் நான் அன்றைக்கு தெளிவாகப் புரிந்துகொண்டேன்.
 
கடந்த 2012 செப்டம்பர் மாதம் நாங்கள் கடலோரத்தில் நடத்திய அணுஉலை முற்றுகைப் போராட்டத்தின்போது முதல் நாளும், இரண்டாம் நாளும் பல்வேறு அமைப்பினர் பங்கு கொண்டதைப் போல நீங்களும் கலந்து கொண்டீர்கள். காவல்துறை தாக்குதலின்போது என்னையும், தோழர்கள் புஷ்பராயனையும், முகிலனையும் மக்கள் படகுகளில் ஏற்றி அப்புறப்படுத்தியபோது, மை.பா. நன்மாறன் (சேசுராசு), பங்குத்தந்தை செயக்குமார், மில்டன், கெபிஸ்டன் போன்றோர் இடிந்தகரையில் இருந்து போராட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டிய நிலை எழுந்தது. அவர்களுக்கு ஒத்தாசையாக நீங்களும் இருந்து உதவியதை எங்கள் மக்கள் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். பின்னர் நாம் நேரில் சந்தித்தபோது, நான் எனது நன்றியைத் தெரிவித்தேன்; அதை மேடையிலும் அறிவித்தேன். ஆனால் நீங்கள் உங்களை மட்டுமே முன்னிறுத்தி ஒரு மாற்று வரலாற்றையே வடித்திருந்தீர்கள் உங்கள் இணையதளத்திலும் (“கூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி – போராட்டத் தொகுப்பு” அக்டோபர் 8, 2012), உங்கள் இதழிலும் (புதிய ஜனநாயகம், அக்டோபர் 2012).
 
பின்னர் நீண்ட நாட்களாக எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தோம் நாம். இந்நிலையில் அக்டோபர் 18, 2013 அன்று மதியம் எங்கள் போராட்டத் தலைவியர் திருமதி. சுந்தரி, திருமதி. சேவியர் அம்மா போன்றோரின் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தாது மணற்கொள்ளை சம்பந்தமாக விண்ணப்பம் ஒன்றைக் கொடுக்க திருநெல்வேலிக்குச் சென்றிருந்தார்கள். நீங்களும் அதேப் பிரச்சினை சம்பந்தமாக ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குப் போயிருக்கிறீர்கள். உங்கள் புரட்சியை மட்டுமே நடத்துவதற்குப் பதிலாக, எங்கள் குழுவில் தலையிட்டு, வந்திருந்தப் போராளிகளில் ஒருசிலரைத் திசைதிருப்பி அங்கிருந்த பத்திரிகையாளர்களோடும், காவல்துறையினரோடும் மோதச் செய்து, அவர்களைக் கைது செய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறீர்கள். எங்கள் போராளிகளின் தெளிவான பார்வையால், புரிதலால், செயல்பாட்டால் அவர்கள் தங்களை காத்துக் கொண்டார்கள். அழையா விருந்தாளிகளாக நீங்கள் உள்ளே நுழைந்து, தலைவராக எத்தனித்தது, தவறாக வழிநடத்தியது கண்டிக்கத் தகுந்தது.
 
வழக்கம்போல உங்கள் இணைய தளத்தில் (“மணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை,” அக்டோபர் 21, 2013) வரலாறு ஒன்றை எழுதி, உலகுக்கே அணுசக்தியின் அழிவிலிருந்து உய்வடையும் வழி சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் போராளிப் பெண்களை “ஆட்சியர் அலுவலக கட்டிடத்தினுள் அழைத்துச் சென்று அமரச் செய்து கோஷங்கள் எழுப்பச் செய்தோம்” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். “நேற்று நடந்த போராட்டத்தில் ம.உ.பா.மைய வழக்குரைஞர்கள் மக்களுடன் உறுதியாக களத்தில் நின்றது, வழிகாட்டியது மற்றொருமுறை ம.உ.பா.மையம் மக்களுடன் உறுதியாக முன்னணியில் நிற்கும் என்ற நம்பிக்கையை இடிந்தகரை உள்ளிட்ட கடலோர மக்களுக்கு ஏற்படுத்துவதாக அமைந்தது” என்று நீங்கள் எழுதியிருப்பது உங்களைப் பற்றி உங்களுக்கே ஒருவித சந்தேகம் இருப்பது போலவே படுகிறது.
 
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை, தாதுமணற் கொள்ளை பிரச்சினை பற்றியெல்லாம் நன்கு அறிந்து வைத்திருக்கும் கடலோர மக்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து பரப்புரை செய்வது ஏன்? இந்தப் பிரச்சினைகள் பற்றி போதிய விழிப்புணர்வில்லாத உட்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் பரப்புரை செய்யலாமே? கடலோர ஊர்களிலுள்ள இளைஞர்களைப் பிடித்து, என்னைப்பற்றி, எங்கள் இயக்கத்தைப் பற்றி அவர்களிடம் தவறாகப் பேசி, மூளைச்சலவை செய்வது உண்மையிலேயே தேவைதானா? இக்கேள்விகளைக் கேட்பதற்காகத்தான் இக்கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.
 
நான் உங்களை இன்னும் தோழர்களாக, தோழமை இயக்கங்களாகத்தான் பார்க்கிறேன். ஆனால் ‘மக்களை நம்பாத, மதிக்காத, போராட்டம் நடத்தத் தெரியாத நீயும், புரட்சியாளர்களாகிய நாங்களும் எப்படி தோழர்களாக இயங்க முடியும்’ என்று நீங்கள் கேட்கலாம். என்னைப் பொறுத்தவரை, மக்களுக்காக, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் அனைவரும் தத்தம் அடிப்படைக் கொள்கைகளில், சித்தாந்தங்களில் சமரசமின்றி, ஒரு பொது வெளியை உருவாக்கி, ஒன்றாக நிற்பதும், சேர்ந்து உழைப்பதும் முக்கியம் என்று நினைக்கிறேன். அம்மாதிரியான இணக்கம் இயலாமற்போனால், நாகரிகமாகப் பிரிந்து தத்தம் வழிகளில் அந்த இலக்கை நோக்கி நடக்கலாம். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதும், குறை சொல்வதும், குற்றம் காண்பதும், தம்மை முன்னிலைப் படுத்துவதும், பிறரைப் பழிப்பதும் முதிர்ச்சியற்ற அணுகுமுறை என்றே நினைக்கிறேன். தமிழக அரசியலில், பொது வெளியில், இம்மாதிரியான நேர்மைக்கோ, நாகரிகத்திற்கோ, உரிமையோடு இடித்துரைக்கும் பண்புக்கோ மரியாதை கிடையாது என்பதையும் அறிவேன். “நடந்ததைக் கேட்டால், அடுத்தது பகைதான்” இங்கே.
 
உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அறிவோ, ஆற்றலோ, அனுபவமோ எனக்கு இல்லையென்றாலும், என்னுள் தோன்றும் ஓரிரு கருத்துக்களைச் சொல்வதற்கு தயவு செய்து என்னை அனுமதியுங்கள்.
 
[1] நீங்கள் அனைவருமே மக்கள் பிரச்சினைகளில் அக்கறையுள்ளவர்கள், மக்களுக்காக உழைக்கும் உத்வேகம் உடையவர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சொல்லில் முழு உண்மையைப் பேணி, செயலில் முழு நேர்மையைக் கைக்கொண்டால், உங்கள் பணி இன்னும் சிறக்கும்.
 
[2] நீங்கள் பிறரோடு ஒன்றிணைந்து நடத்தும் போராட்டத்தில் தவறுகள் நடந்தால் பிறரைப் பழிப்பதும், சமூக மாற்றங்கள் நடந்தால் உங்களின் வெற்றியாகக் கொண்டாடுவதும், உங்களையே உயர்த்திப் பிடித்துக் கொள்வதும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமாகவே கொள்ளப்படும்.
 
[3] காக்கைக் கூட்டில் முட்டையிடும் குயில் போல, அடுத்தவர் நடத்தும் போராட்டத்தில் நுழைந்து புரட்சி செய்யாதீர்கள். ஒரு தலைமையில் ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருந்தால், அவர்களுடன் நின்று உதவுங்கள், அல்லது விலகிச் செல்லுங்கள். போராடும் மக்களிடையே போய் புதிய புரட்சியாளர்களைத் தேடுவது, உள்ளேபோய் நின்று குழிபறிப்பது, குழு அமைப்பது, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது – இவையெல்லாம் நேர்மையான புரட்சியல்ல.
 
[4] “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்றியங்கும் ‘புரட்சி’ ஓர் அற்புதமான சொல், செயல். இது தமிழகத்தின் அரசியலிலும், மக்கள் இயக்கங்களிலும், சினிமாவிலும் படும்பாடு வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. நாமனைவருமாகச் சேர்ந்து இந்தச் சொல்லின், கோட்பாட்டின் மகத்துவத்தைக் காப்பாற்ற முயல்வோம். “கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் எவையென அறிவுமிலார்” நிறைந்து கிடக்கும் நம் நாட்டில், நம்மைப் போன்ற சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் சேர்ந்து நிற்பதும், தேர்ந்து செயலாற்றுவதும் புரட்சியின் அடிப்படைத் தேவை. காந்திப் பெருமகனார் சொன்னது போல, நாம் காண விரும்பும் மாற்றத்தை நாமே வாழத் துவங்குவதுதானே கற்றுணர்ந்த நமது கடமை.
 
- சுப.உதயகுமார், இடிந்தகரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It