முன்னுரை:

                புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2013இல் ஈழம் : மாணவர் எழுச்சியில் ஒளிந்து கொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்! என்று ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஒன்று : தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் மீதான விமர்சனம், இரண்டு : தனித் தமிழீழத்துக்கான மாணவர்களின் மீதான விமர்சனம், மூன்று : இலங்கை ஈழப் பிரச்சினைக்கு புதிய ஜனநாயகம் முன் வைக்கும் தீர்வுகள், நான்கு : புலிகள் மீதான விமர்சனம் ஆகியவற்றை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். மேலும் மாணவர் போராட்டத்தின் திசைவழி குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் முன்வைக்கும் தீர்வுகளையும் எடுத்துக் காட்டியுள்ளேன்.

                தன் தீர்வு உரிமை (சுய நிர்ணய உரிமை) என்பது கோட்பாட்டுச் சிக்கல் என்பதால் புதிய ஜனநாயகம் விமர்சனங்களையும் தாண்டி அரசியல் களத்தில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தன் தீர்வு உரிமைக்குத் தொடர்புடைய சில வரலாற்று விவரங்களைக் கொடுத்துள்ளேன். பல்வேறு முழக்கங்களுடன் செயல்படும் மாணவர்களை ஒரே முழக்கத்தின் கீழ் அணிதிரட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் இதனை எழுதியுள்ளேன். மாணவர்கள் அனைவரும் ஒரே அணியாக நின்று போராடினால் வெற்றி நமக்கே!

உலகின் இன்றைய நிலைமை :

                19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு என்பது அறிவியல் பாய்ச்சலில் முன்னேறியதைக் குறிப்பதாகும். உயிரியலில் ஒரு செல் உயிர் கண்டுப்பிடிப்பும், டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடும், இயற்பியலில் ஆற்றல் மாறாக் கோட்பாடும், ஐன்ஸ்டீன் கோட்பாடும், அணுப்பற்றிய கொள்கைகளும், முக்கிய பங்காற்றின. இதே காலத்தில்தான் சமூகவியலில் மார்க்ஸ், ஏங்கென்ஸ் இருவரும் முதலாளித்துவ சமுதாயத்தில் நின்று அதன் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும் ஆய்வு செய்து சமூகத்தின் இயக்க விதிகளைக் கண்டறிந்தனர். முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறிய நிலையில் மார்க்சியத்தை லெனின் வளர்த்தெடுத்தார்.

                இரண்டாவது உலகப்போருக்குப் பின் ஏகாதிபத்தியங்கள் எந்த ஒரு நாட்டையும், தேசத்தையும் நேரடிக் காலனிகளாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்த இயலவில்லை. ஏனெனில் மக்கள் எளிதில் அடையாளம் கண்டு விரட்டி அடிக்கின்றனர். ஆகையினால் இன்று தந்திரமாக ஏகாதிபத்தியங்கள் அமெரிக்காவின் தலைமையில் தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்ற போர்வையில் காலனி (மறுகாலனி) ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே பழைய காலனி ஆதிக்கமானாலும் மறுகாலனி ஆதிக்கமானாலும் வடிவம் மாறியுள்ளதே தவிர அதன் உள்ளடக்கம் என்பது ஏகாதிபத்தியச் சுரண்டல்தான். எனவே உலக நிலைமை என்பது லெனின் வாழ்ந்த போதும் இன்றும் ஏகாதிபத்திய நிலைமையே. எனவே தேசிய இனப் பிரச்சனையில் லெனின் ஆய்வுரைகள் இன்றும் முக்கியத்துவமுடையவையே.

அரசியல், இராணுவ மூலயுத்திகள் வகுப்பது குறித்து புதிய ஜனநாயகத்தின் குழப்பம் :

                புதிய ஜனநாயகம் தன்னை ஒரு மார்க்சிய லெனினிய அரசியல் ஏடு எனக் கூறிக் கொள்கிறது. அது தனது கட்சியின் பெயரை இன்றும் CPI(ML) SOC அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) மாநில அமைப்புக் கமிட்டி தமிழ்நாடு எனத்தான் வைத்துள்ளது. இந்திய ஆளும் வர்க்கம் தேசிய இனங்களின் தேசியத் தகுதியை மறுத்து மாநிலம் அல்லது பிராந்தியம் என கொச்சைப்படுத்துகிறது என்கிறோம். இந்த ஆய்வு புதிய ஜனநாயகத்திற்கும் பொருந்தும். தமிழ்த் தேசியத்தை மாநிலம் எனக் குறுக்கிக் காட்டும் ஆளும் வர்க்கத்திற்கும் புதிய ஜனநாயகத்திற்கும் என்ன வேறுபாடு. புதிய ஜனநாயகம் தைரியமாகச் சொல்லட்டும். தனது கட்சிப் பெயரிலே மாநில அமைப்புக் கமிட்டி என்றுதான் பெயர் வைத்துள்ளது.

                தனித் தமிழ்த் தேசிய விடுதலைக் குறித்து புதிய ஜனநாயகம் ஆதரவு தோழர்களிடம் பேசினால் தனித் தமிழ்நாடு சாத்தியமில்லை, இந்திய இராணுவம் வலிமை மிக்கது என்பார்கள். ஒரு கட்சியின் அரசியல் மூலஉத்தி (அரசியல் யுத்த தந்திரம்) அல்லது அரசியல் வழி என்பது அந்த நாட்டின் அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்து பெறப்படுகிறது. இராணுவ நிலைமைகளை ஆய்வு செய்து அரசியல் முடிவு பெறப்படுவதில்லை என்கிற அற்ப அறிவுகூட புதிய ஜனநாயகத்திற்கு இல்லை. ஏனெனில் தனித்தமிழ்நாடு என்ற அரசியல் தமிழக மக்களை கவ்வி உலக நிலைமைகளில் இந்திய நிலைமைகளில் மாற்றம் வந்து ஆயுதப் போராட்டம் இல்லாமலே தனித்தமிழ்நாடு அடைவதற்கான வழிகூட ஒரு வேளை ஏற்படலாம். அதனால் ஆயுதப் போராட்டம் தேவை இல்லை என நான் வாதிடவில்லை. அரசியல் மூலயுத்தி வகுக்க இராணுவ நிலைமைகளைக் கணக்கிடக் கூடாது என்பதற்காக அந்த வாதத்தினை முன் வைக்கிறேன். ஒரு அரசியல் மூலயுத்தி (தனித்தமிழ்நாடு) வகுத்தப் பின் அதனை அடைவதற்கான வழிவகைகளை நாம் கண்டறிய வேண்டும். அப்போதுதான் எதிரியின் இராணுவ நிலைமைகளை ஆய்வு செய்து இராணுவ மூலயுத்தி (இராணுவ யுத்த தந்திரம்) வகுக்க வேண்டும். புதிய ஜனநாயகம் அதன் வழிகாட்டுதலிலுள்ள அதன் அமைப்புகள் திட்டமிட்டே தனது அணிகளின் கேள்விகளுக்கு கோட்பாட்டுத் தளத்திலிருந்து பதில் சொல்லாமல் அரசியல் மூலவுத்தியையும், இராணுவ மூலவுத்தியையும் போட்டு குழப்பி அவர்களை காயடிக்கிறது. ஒரு தேசிய இனத்தின் பிரிவினை மூன்று நிலைமைகளில் மட்டுமே மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனினால் எதிர்க்கப்பட்டன.

1.            ஒரு தேசிய இனம் பிரிந்து போய் அது ஒரு பிற்போக்கு பெரும் வல்லரசுக்கு உதவும் பட்சத்தில்

2.            ஒரு தேசிய இனம் பிரிவதை முன்னிட்டு உலகப்போர் தோன்றினால்

3.            பல்தேசிய இனநாட்டில் ஒடுக்கும் தேசிய இனத்தில் பலம் வாய்ந்த தொழிலாளர் வர்க்க கட்சி புரட்சியை முன்னெடுக்கும் நிலையில் அது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை அங்கீகரித்துப் போராடும் நிலையில்.

                மேற்கண்ட நிலைமைகள்தான் ஒரு தேசிய இனம் பிரிந்து போவதை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதற்கான மார்க்சியக் கோட்பாடு. இதைப்பற்றி புதிய ஜனநாயகத்திற்கு ஆனா, ஆவன்னா கூட தெரியாது. தெரிந்தால் சொல்லட்டும்.

                கட்சியின் அணிகளுக்கு இந்திய இராணுவ பூச்சாண்டிக் காட்டி தனித் தமிழ்நாட்டை மறுக்கும் புதிய ஜனநாயகம் அறிந்து கொள்ள வரலாற்றிலிருந்து பார்ப்போம். ரஷியா ஒரு இராணுவ ஏகாதிபத்தியமாக இருந்த போதுதான் போலாந்து பிரிந்து போவதை மார்க்ஸ் ஆதரித்தார். வல்லமை பொருந்திய இங்கிலாந்திலிருந்து (இன்றுவரை சாத்தியமில்லாத) அயர்லாந்து பிரிந்து போவதை மார்க்ஸ் ஆதரித்தார். ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்து போவதை லெனின் ஆதரித்தார். இந்தோ சைனா என்பது வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய தேசிய இனங்களைக் கொண்டதாகும். அதனை உலகின் மிகப் பெரும் ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மேலும் பல ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமித்திருந்தபோதுதான் தனி வியட்நாம் விடுதலைப் போராட்டத்தை கோ.சி.மின் துணிச்சலுடன் முன்னெடுத்தார். அப்படி தேசிய இனங்கள் தனி அரசுக்காக விடுதலைக் கேட்டுப் போராடியதை இராணுவ பூச்சாண்டி காட்டி மார்க்சிய அறிஞர்கள் பயமுறுத்தவில்லை.

                புதிய ஜனநாயகம் மட்டும்தான் அரசியல் மூலவுத்தி வகுக்க இராணுவ நிலைமைகளை கணக்கிட வேண்டுமென மார்க்சியத்திற்கு புதிய விளக்கத்தை கண்டுபிடித்து கட்சி அணிகளுக்கு போதித்து வருகிறது.

                ஒடுக்கும் தேசிய இனத்தில் புரட்சி நடைபெற வேண்டுமானால் ஒடுக்கப்படும் தேசிய இனம் விடுதலை பெற வேண்டும் என்று மார்க்ஸ் பிற்காலத்தில் முடிவுக்கு வந்தார். இங்கிலாந்து அயர்லாந்தை அடிமைப்படுத்தி இருப்பது குறித்து மார்க்ஸ் தொடக்கத்தில் என்ன கருத்து கொண்டிருந்தார். பிறகு எப்படி அதனை மறு ஆய்வு செய்தார் என ரோசாலுக்சம் பர்க்குக்கு லெனின் கீழ்கண்டவாறு தலைப்பிட்டு எழுதுவார். “கற்பனாவாதி கார்ல்மார்சும் காரியவாதி ரோசாலுக்சம்பர்கும்”! இப்படி ஏன் தலைப்பிட்டார் என புதிய ஜனநாயகத்திற்கோ அதன் இந்தியப் புரட்சி கூட்டாளிகளுக்கோ உறுதியாக தெரியாது. மார்க்சிய ஆய்வு முறை என்பது பகுப்பதும் தொகுப்பதும் அதன் தனித் தன்மைகளையும், பொதுத் தன்மைகளையும் கண்டறிவதும் தர்க்கம் செய்வதும் எதார்த்தத்துடன் ஒப்பிடுவதும் போன்ற முறைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அப்படித்தான் கம்யூனிச சமுதாயம் என்ற இலட்சியத்துக்கு மார்க்ஸ் வந்தடைந்தார். அப்படித்தான் அயர்லாந்து பிரச்சனைக்கு அக நிலையாகத் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தார்.

இங்கிலாந்து முதலாளித்துவப் புரட்சி (ஜனநாயகப் புரட்சி) நடைபெற்று முழுமுதலாளித்துவமாக வளர்ச்சி அடைந்திருந்தது. அது அயர்லாந்தை அடிமைப் படுத்தியிருந்தது. அயர்லாந்து தனது அடிமைத் தனத்திற்கு எதிராகப் போராடியது. மார்க்ஸ் தொடக்கத்தில் கருதினார். இங்கிலாந்து முதலாளித்துவமாக வளர்ச்சி அடைந்து உள்ளது. அதில் தொழிலாளி வர்க்கம் தோன்றி வளர்ந்து வருகிறது. தொழிலாளி வர்க்கம் சோசலிசப் புரட்சி நடத்தும். அப்படி இங்கிலாந்துப் புரட்சியின் மூலமாக அயர்லாந்துக்கு விடுதலை கிடைக்கும் எனக் கருதினார். ஆனால் அவர் எண்ணியவாறு நடக்கவில்லை. அயர்லாந்து விடுதலைப் போராட்டம் முன்னிலைக்கு வந்தது. எனவே மார்க்ஸ் தனது ஆய்வை மறுபரிசீலனைக்கு உட்படுத்தினார். இங்கிலாந்தில் உள்ள முதலாளி வர்க்கம் அயர்லாந்தை அடிமைப்படுத்திச் சுரண்டி தனது தொழிலாளி வர்க்கத்தை பிரபுகுலத் தொழிலாளி வரக்கமாக மாற்றி உள்ளதையும் அத்தொழிலாளி வர்க்கம் ஊட்டம் பெற்று போராட்ட குணமின்றி இருப்பதையும் பார்த்தார். எனவே இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம் புரட்சி நடத்த வேண்டுமானால் தனது சொந்த நலனுக்காக அயர்லாந்தை விட்டுத் தொலைய வேண்டும் என்றார். அந்த ஆய்வில்தான் மார்க்சும், ஏஙகெல்சும் புகழ்பெற்ற வாசகத்தை நமக்கு தந்தனர். “பிற தேசிய இனங்களை ஒடுக்குகின்ற எந்த ஒரு தேசிய இனமும் சுதந்திரமாயிருக்க முடியாது” இதுதான் மார்க்சியம் நமக்கு கற்றுத் தந்தது.

                காரியவாதி ரோசாலுக்சம்பர்க் என்று ஏன் தலைப்பிட்டார். (இது நமது வாதத்திற்கு தேவை இல்லை என்ற போதிலும் வரலாற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்) ரோசாலுக்சம்பர்க் ஒரு போலந்து பெண்மணி. அனைத்து தேசத் தொழிலாளர் இயக்கத்தின் முன்னணி தலைவி. இரண்டாவது அகிலத்தின் இடதுசாரித் தலைவர்களில் ஒருவர். போலந்தில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர். போலந்து தொழிலாளர் வர்க்கத்தில் நிலவிய முதலாளித்துவ தேசியவாதத்தை எதிர்த்து போராடி வந்தவர். மார்க்ஸ் காலத்திலிருந்தே ரஷ்யாவிலிருந்து போலந்து பிரிந்து போவதற்கு போராடி வந்துள்ளது. லெனின் காலத்தில் ரஷிய கம்யூனிஸ்ட் கட்சி பலமாகவும் அது புரட்சியை முன்னெடுக்கும் நிலையிலும் இருந்தது. இந்நிலையிலும் போலந்து முதலாளிகளின் தலைமையில் பிரிந்து போவதற்காகப் போராடியது. போலந்தில் புரட்சி நடந்து அது ரஷியாவுடன் சேர்ந்து சோசலிசம், கம்யூனிசம் நோக்கி போக வேண்டுமென ரோசாலுக்சம்பர்க் உந்தப்பட்டு தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை அங்கீகரித்தால் போலந்து பிரிந்து போய்விடும் என்ற அச்சத்தில் தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை எதிர்த்து லெனினுடன் வாதிடுவார். அதனால்தான் காரியவாதி ரோசாலுக்சம்பர்க் என்று தலைப்பிட்டார். ரோசாலுக்சம்பர்க் அஞ்சியபடியே லெனின் இருந்தபோதே ரஷியாவிலிருந்து போலந்து முதலாளிகளின் தலைமையில் பிரிந்து போனது. இந்த வரலாற்றுப் பின்புலத்திலிருந்து புதிய ஜனநாயகம் முன்வைக்கும் வாதங்களைப் பார்ப்போம்.

புலி ஆதரவாளர்கள் மீதான புதிய ஜனநாயகம் முன்வைக்கும் விமர்சனங்களும் அதற்கான பதிலும் :

                தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதனை முன்னெடுத்து வந்த புலிகளையும் ஆதரிப்பதில் தமிழகத்தில் இரு பிரிவினர் உள்ளனர். ஒன்று. தனித் தமிழ்த் தேசிய விடுதலைப் பணியை முன்வைத்து அதனூடாக புலிகளையும் உலகம் முழுவதும் நடைபெறும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களையும், சமத்துவத்திற்கான போராட்டங்களையும் ஆதரிப்பவர்கள். இரண்டு. இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டு அப்பணியினூடாக புலிகளை ஆதரிப்பவர்கள். இப்படி தமிழகத்தில் இருபிரிவினர் இருப்பது புதிய ஜனநாயகத்திற்குத் தெரியும். பின் எதற்கு ஒரே பிரிவினராக புலி ஆதரவாளர்கள் என எல்லோரையும் ஒரு வளையத்திற்குள் கொண்டு வருகிறது? இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்டு புலிகளை ஆதரிப்பவர்கள் செய்யும் சந்தர்ப்பவாத தவறுகளை தனித் தமிழ்த் தேசிய விடுதலையை முன்வைத்தவர்கள் மீது ஏற்றிக் கூறுவதற்கு ஒரு வாய்ப்பாக புதிய ஜனநாயகம் பயன்படுத்தி கொள்கிறது.

                தனித் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்வைத்துள்ள பல்வேறு அமைப்புகள் எப்போவதாவது இந்தியாவையோ, தமிழக அரசையோ அல்லது காங்கிரஸ், பி.ஜே.பி, கருணாநிதி, ஜெயலலிதாவையோ நம்பச் சொன்னதுண்டா? புதிய ஜனநாயகம் பட்டியலிடும். விமர்சனங்களைப் பொதுவாக வைக்க கூடாது, குறிப்பாக வைக்க வேண்டும். தமிழ்த் தேசிய விடுதலையை முன்வைக்காத சில தமிழ் அமைப்புகள் தனி மனிதர்களுக்கு வேண்டுமானால் புதிய ஜனநாயகம் கூறும் விமர்சனங்கள் பொருந்தும். இந்த வேறுபாட்டை அவர்கள் அணிகள் தெரிந்துக் கொள்ளக் கூடாது என புதிய ஜனநாயகம் பயப்படுகிறது. தான் மட்டும் சரியாக இருப்பதாக தம்பட்டம் அடிக்கிறது. காமாலை பிடித்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியுமாம், அதுபோல.

தனித் தமிழீழத்துக்கான மாணவர் போராட்டத்தைக் கண்டு பீதியடையும் புதிய ஜனநாயகம் :

                தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்ற பெயரில் மாணவர்கள் புதிய ஜனநாயகத்தைவிடத் தெளிவான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வந்தனர். இலங்கையில் நடந்தது வெறும் மனித உரிமை மீறல் அல்ல. இனப்படுகொலை என அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், சர்வதேச விசாரணையும் பொது வாக்கெடுப்புமே தனித் தமிழ் ஈழத்துக்கான தீர்வு என்றும் அதற்குத் துணை செய்யும் வகையில் இந்திய அரசு, தமிழக அரசு செய்ய வேண்டியது குறித்தும் மாணவர் அமைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளன.

                புதிய ஜனநாயகம் கூறுகிறது “சில மாணவர் குழுக்களின் தலைமை புலிகளும் புலி ஆதரவாளர்களும் செய்த அதே வகையிலான தவறுகளைச் செய்கின்றன. இப்போது முன்வைக்கப்படும் இரண்டு கோரிக்கைகளை (இராசபட்சே போர்க்குற்றவாளி, பொது வாக்கெடுப்பு) எவ்வாறு எந்த வழிகளில் நிறைவேற்ற முடியும் என்பதை ஆழமாக பார்க்க மறுக்கின்றனர். இரண்டு கோரிக்கைகளில் ஒன்றான “பொதுவாக்கெடுப்பு” என்பதைத் தமது குறுங்குழுவாத அகநிலைப் பார்வையைத் திணித்தும் திரித்தும் வியாக்கியானம் செய்து மாற்றி அமைத்துக் கொண்டு ஈழ ஆதரவு சக்திகளைப் பிளவுபடுத்தும் முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்களும் புலி விசுவாசிகளைப் போலவே “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என்பதாக மாற்றி அமைத்து ஈழ ஆதரவாளர்களைப் பிளவுபடுத்தவும் செய்கிறார்கள்”….

                “பொதுவாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை இவ்வாறு திரிப்பது, “பொது வாக்கெடுப்பு”க்கான உரிமையை பெறுவதற்கு முன்பே மாற்றுக் கருத்துக்கான உரிமையை மறுக்கும் சர்வாதிகரமாகும்”….

                “தனித் தமிழீழத்தை ஏற்கிறீர்களா, இல்லையா? இப்போதே சொல்லுங்கள், சொல்லாவிட்டால் ஈழத்துத் துரோகளாவீர்கள் என்று கையை முறுக்கிக் கருத்துத் திணிப்பு செய்வதன் பொருள் என்ன? தனித் தமிழீழந்தான் ஒரே முடிவு என்றால் அப்புறம் எதற்குப் பொது வாக்கெடுப்பு?” இவை புதிய ஜனநாயகம் முன்வைத்தவை.

                தேசிய இனப் பிரச்சனையில் மார்க்ஸ், லெனின் என்ன நிலைபாடு கொண்டிருந்தார்கள் என மார்க்சிய - லெனினிய அரசியல் ஏடான புதிய ஜனநாயகத்திற்கு தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது தெரிந்தே குழப்ப வேண்டும். இதில் எது உண்மை எனப் பார்ப்போம்.

                தன் தீர்வு உரிமை என்பது ஒரு தேசிய இனம் தனது அரசியல், பொருளியல், பண்பாட்டைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையாகும். வேறொரு வகையில் கூறினால் ஒரு தேசிய இனம் தனது தலைவிதியைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை ஆகும். இது ஒரு தேசிய இனத்தின் மிகப்பெரும் ஜனநாயக உரிமை ஆகும். இதன் பொருள் ஒரு தேசிய இனம் பிற தேசிய இனங்களுடன் அவ்வுரிமையுடன் சேர்ந்தோ தனித்தோ வாழலாம். தனது அரசியல், பொருளியல், பண்பாட்டை முற்போக்காவோ பிற்போக்காவோ அமைத்துக் கொள்ள முழு உரிமை படைத்தாகும். இது தேசிய இனங்களின் வளர்ச்சி விதிகளை கணக்கில் கொண்டும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் மார்க்சால் 1896 இல் முன்வைக்கப்பட்டது. இதற்கு விரிவான ஆய்வுக் கட்டுரைகளை லெனின் வெளியிட்டார். பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருப்பது போல உலகிலுள்ள அனைத்து தேசிய இனங்களுக்கு தன் தீர்வு உரிமை உண்டு.

                தேசிய இனத் தன்தீர்வு உரிமை என்பது பொதுவான கோட்பாடாகும். குறிப்பான நிலைமைகளில் தேசிய இனங்கள் பிரிவது தொடர்பாக பிரச்சினை எழும்போது சேர்ந்து வாழுங்கள் அல்லது பிரிந்து செல்லுங்கள் என முழுநேரப் புரட்சியாளர்களாகிய நாம் கூற வேண்டும். நமக்குத்தான் தேசிய, சர்வதேசிய நிலைமைகள் தெரியும் என்ற அர்த்தத்தில் கருத்து ரீதியாக நாம் கூறுவதற்கு முழு ஜனநாயக உரிமை படைத்தவர்களாவோம். அதே நேரத்தில் பிரிந்து போவதா அல்லது சேர்ந்து வாழ்வதா என செயல்படுத்தும் உரிமை அந்தந்த தேசிய இன மக்களுக்கு மட்டுமேதான் உண்டு. அந்த அடிப்படையில்தான் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்து போவதையும், ரஷ்யாவிலிருந்து போலந்து பிரிந்து போவதையும் மார்க்ஸ் ஆதரித்தார். அதே நேரத்தில் செக்மக்கள், தென் ஸ்லாவியர்களின் பிரிவினையை எதிர்த்தார். இதே அடிப்படையில்தான் போலந்து பிரிந்து போவதை எதிர்த்த லெனின் நார்வே பிரிந்து போவதை ஆதரித்தார். ஆனால் செயல்படுத்தியவர்கள் அந்தந்த தேசிய இன மக்களே. ஆக தேசிய இனம் பிரிந்து போவதா அல்லது சேர்ந்து வாழ்வதா என்பது குறித்து நாம் முன்கூட்டியே முடிவு செய்துதான் கூற வேண்டும்.

“தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு” என மாணவர்கள் முடிவு செய்து கூறுவதை சர்வாதிகாரம் என புதிய ஜனநாயகம்தான் கூறுகிறதே தவிர மார்க்சோ, லெனினோ கூறவில்லை. தேசிய இனப்பிரச்சனையில் சேர்ந்து வாழ்வதா பிரிந்து போவதா என்பதில் ஏதேனும் ஒரு முடிவில்தான் மார்க்சும், லெனினும் செயல்பட்டார்கள். அப்படி இல்லை என்று புதிய ஜனநாயகம் தைரியமாக எழுதட்டும். அதே நேரத்தில் எங்கள் முடிவைத்தான் நீங்கள் செயல்படுத்த வேண்டும் என அந்தந்த தேசிய இன மக்களின் செயலைத் தடுப்பதுதான் சர்வாதிகாரமாகும். புதிய ஜனநாயகப் புரட்சி என்ற முடிவை புதிய ஜனநாயகம் ஏடு மக்களிடம் திணிக்கிறது என யாரேனும் கூற முடியுமா? இது சர்வாதிகாரமன்று. புதிய ஜனநாயகத்தின் ஜனநாயகம். பாட்டாளி வர்க்கம் குறித்து லெனின் கூறுவார், பாட்டாளி வர்க்கம் மக்களுக்கு தலைவனாகவும் போதகனாகவும் இருக்க வேண்டும், மேலும் வரலாற்றில் உணர்வு பூர்வமான பாத்திரமாற்ற வேண்டுமே தவிர தன்னியல்பாக செயல்படக் கூடாது என்பார். இதன் பொருள் எல்லாவற்றிலும் அறிவியல் பூர்வமான முடிவுகளுடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு வால்பிடிக்க கூடாது என்பதே. அறிவியல் பூர்வமாக என்பது உணர்வு பூர்வமானதையும், மக்களே முடிவு செய்வார்கள் என்பது தன்னியல்பானதையும் குறிக்கும். ஆக தேசிய இனம் பிரிவது அல்லது சேர்ந்து இருப்பது குறித்து புதிய ஜனநாயம் தன்னியல்பை முன்வைக்கிறது.

                அடுத்து “பொது வாக்கெடுப்பு” என்ற பொது முழக்கத்தை மாணவர்கள் “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என குறிப்பானதாக மாற்றியுள்ளார்கள். இதன் மூலம் மாணவர்களும், புலி ஆதரவாளர்களும் ஒன்றிணைகின்றனர். இதில் எங்கே ஈழ ஆதரவாளர்களை மாணவர்கள் பிளவு படுத்துகிறார்கள்? மாணவர்களின் முழக்கம் சரி. ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் தனி ஈழம்தான் சரி என்கிறோம். ஈழ மக்களின் துரோகிகள்தான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு, ஈழம் சாத்தியமில்லை என்கின்றனர். புதிய ஜனநாயகத்தின் கவலை மாணவர்கள் தனி ஈழம் தேவை என்ற அரசியலை முன்னெடுத்து செல்வதுதான். அதனால்தான் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழவிரும்பும் மக்களின் கருத்தைப் பறிப்பதாகப் பதறுகிறது, சர்வாதிகாரம் என்கிறது.

                தமிழீழத்துக்கான மாணவர்கள் போராட்டத்தைக் கண்டு ஆத்திரப்படும் புதிய ஜனநாயம் வாசகர்களை முட்டாள்களாக மனதில் கொண்டு எழுதுகிறது “பொது வாக்கெடுப்பு” உரிமையைப் பெற்ற பிறகு நடைமுறைக்கு வரக்கூடியதே தன்னுரிமை. வாக்கெடுப்புக்கு முன்னே முடிவைச் சொல்ல வேண்டுமென்றால், அப்புறம் எதற்கு அக்கோரிக்கை, போராட்டம் எல்லாம்? அதுவும் இந்த உரிமை உலகத் தமிழர் அனைவருக்குமான உரிமை அல்ல. ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்துக்குள்ள இந்த உரிமையை, புலம் பெயர்த்து பல்வேறு நாடுகளிலும் அகதிகளாகவோ, குடியுரிமை பெற்றவர்களாகவோ வாழ்கின்ற மக்கள், தம் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்கான உரிமையை இங்குள்ள தமிழர்கள் எப்படித் தம் கையில் எடுத்துக் கொள்ள முடியும்? அந்த உரிமையை யார் கொடுத்தது? இதற்கும் இந்திய பெரியண்ணன் தனத்துக்கும் என்ன வேறுபாடு?” என்று.

                புதிய ஜனநாயகம் எப்படி அலறுகிறது, துடிக்கிறது எனப் படிப்பவர் புரிந்துக் கொள்ள முடியும். ஈழத்தமிழர்கள் சேர்ந்து வாழுங்கள் அல்லது பிரிந்து போங்கள் என்று கூற இவ்வுரிமை உலகத் தமிழர்களுக்கு மட்டும் இல்லை. உலகிலுள்ள மனிதர்கள் அனைவருக்கும் இவ்வுரிமை உண்டு. சேர்ந்து வாழலாமா? கூடாதா? என முடிவு செய்யும் உரிமை மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு, புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு உண்டு. போலந்து, அயர்லாந்து பிரிந்து போக வேண்டும் எனக் கூறும் ஜெர்மானிய மார்க்சுக்கும் ஏங்கெல்சுக்கும் இவ்வுரிமையை யார் கொடுத்தது? நார்வே பிரிந்து போனதை தொழிலாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் எனக் கூறும் ரஷியரான லெனினுக்கும், ஜார்ஜியரான ஸ்டாலினுக்கும் இப்படிக் கூறும் உரிமையை யார் கொடுத்தது? இப்படி கருத்து கூற எல்லோருக்கும் உரிமை உண்டு. அதனைக் கேட்கும் அயர்லாந்துக்காரர்கள், போலந்துக்காரர்கள், நார்வேக்காரர்கள் செயல்படுத்தலாம், செயல்படுத்தாமலும் போகலாம். இதனைத்தான் நாம் இதுவரையிலும் ஜனநாயகம் எனக் கடைபிடித்து வருகிறோம். அதே போல ஈழம் தனியாக மலர வேண்டும் என உலகத் தமிழர்களுக்கு கருத்து கூற முழு உரிமை உண்டு. உலகத் தமிழர்கள் கூறுவதை சீர்தூக்கி பார்த்து சேர்ந்து வாழ்வதா? பிரிந்து போவதா? என செயல்படுத்தும் உரிமை (வாக்களிக்கும் உரிமை) ஈழத்தமிழர்களுக்கு, புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாகவோ, குடியுரிமை பெற்றவர்களாகவோ வாழ்கின்ற ஈழத் தமிழர்களுக்கு உண்டு. ஈழத் தமிழர்கள் எப்படி வாழவேண்டும் எனக் கருத்துக் கூற உலகத் தமிழர்களுக்கு உரிமை இல்லை எனக் கூறும் புதிய ஜனநாயகம்தான் தமிழர்களிடம் சர்வாதிகரமாக நடந்து கொள்கிறது.

                எங்களுக்கும் இந்தியப் பெரியண்ணன்தனத்துக்கும் என்ன வேறுபாடு என்றால்? நாங்கள் ஈழமக்கள் எப்படி வாழ வேண்டும் என்று மட்டும் கூறுகிறோம். ஈழமக்கள் செயல்படுத்தும் உரிமையில் தலையிடவில்லை. இந்தியா தலையிடுகிறது. சிங்களப் பேரினவாதிகளுடன் சேர்ந்து தொப்புள்குடி உறவுகளைக் கொன்றொழித்தது, ஆயுதம் கொடுத்தது, ரேடார் கொடுத்தது, பயிற்சி கொடுத்தது, ஆள் கொடுத்தது, இவ்வாறெல்லாம் தலையிட்டது, தலையிடுகிறது. இந்தியா கருத்து கூற முழு உரிமை உண்டு. இந்தியாவின் கருத்து சரியா? தவறா? எனக் கருத்து கூற எந்த ஒரு மனிதனுக்கும் உரிமை உண்டு. சொர்க்கத்திற்கு வழிகாட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. ஆனால் உள்ளே அடித்து விரட்டிச் செல்ல யாருக்கும் உரிமை இல்லை. முடிவு செய்து கருத்துக் கூறும் உரிமையையே சர்வாதிகாரம் என்றால் யாருமே முன்கூட்டியே முடிவு செய்து கருத்து கூற இயலாது, முடிவெடுக்க இயலாது.

                தேசிய இனங்களுக்குத தன்தீர்வு உரிமை உண்டு என்பதால்தான் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்து என்கிறோம். பொது வாக்கெடுப்புக்கு பிறகுதான் தன்தீர்வு உரிமை வருவதாக புதிய ஜனநாயகம் குழப்புகிறது அல்லது குழம்பிப்போய் உள்ளது. ரஷ்ய ஒன்றியத்தில் தேசிய இனங்களுக்குத் தன்தீர்வு உரிமை இருந்ததால்தான் அவை பிரிந்து போயின. புதிய ஜனநாயகம் குழப்புவதற்கு காரணம் உண்டு. அதற்கு தன்தீர்வு, தன்தீர்வு உரிமைக்கு பொருள் தெரியாமல் தானும் குழம்புவதுடன் மற்றவர்களையும் குழப்பமடையச் செய்கிறது. தன்தீர்வு செயல்படுத்துவது, தன்தீர்வு உரிமை என்பது செயல்படுத்துவதற்கான உரிமையாகும். இக்குழப்பம் தன்தீர்வு உரிமையை புதிய ஜனநாயகம் தன்னுரிமை என தவறாக அழைப்பதால் வருவதாகும்.

                தன்தீர்வு உரிமையை ஆதரிக்க வேண்டும் என லெனின் வாதிட்ட போது ரஷ்யாவிலும் புதிய ஜனநாயகம் போன்ற முட்டாள் பேர்வழிகள் இருக்கத்தான் செய்தார்கள். ரஷ்யாவிலிருந்து போலந்து தோழர்கள் பிரிந்துப் போகக் கூடாது என்பதற்காக அவ்வுரிமையை எதிர்த்து வாக்களிப்பதா? தோழர் லெனின் கூறுகின்றார் என்பதற்காக ஆதரித்து வாக்களிப்பதா? என்று லெனினிடம் கேட்டார்கள். லெனினுக்கே உரிய கிண்டல் பாணியில் கூறினார் தேசிய இனங்களுக்குத் தன்தீர்வு உரிமை வேண்டுமா? வேண்டாமா? என்பதற்குத்தான் வாக்கே ஒழிய பிரிந்து போவதா? வேண்டாமா? என்பதற்கு இல்லை. பிரிந்து போவதா? வேண்டாமா? என்பதை போலந்துக்காரர்கள் அவர்களுடைய பாராளுமன்றத்தில் முடிவு செய்து கொள்வார்கள் என்பார். தன்தீர்வு உரிமைக்கு பொருள் தெரியாமல் புதிய ஜனநாயகம் தன்னைத்தானே குழப்பிக் கொள்கிறது.

                தமிழகத்தில் இன்று எழுந்துள்ள மாணவர் போராட்டத்தைத் தமிழ்ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் வரவேற்று எழுதினர் “இனம் காக்க மாணவர் போராட்டம்” என தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் வரவேற்றது. “தமிழக மாணவர்கள் பார்வைக்கு ஈழத்துக்காக இனி நாம் செய்ய வேண்டியது என்ன?” என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மாணவர்களின் போராட்டத் திசை வழியைகாட்டி, இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் என்றார். புதிய ஜனநாயகம் மட்டும்தான் “ஈழம் : மாணவர் எழுச்சியில் ஒளிந்துக் கொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்” எனத் தலைப்பிட்டு எழுதியது. இப்படித் தலைப்பிட்டு புதிய ஜனநாயகம் எழுதுவதன் நோக்கம் மாணவர் போராட்டம் ஈழ ஆதரவாளர்களுடனும், புலி ஆதரவாளர்களுடனும் இணைந்து விடக்கூடாது என்பதே.

இலங்கை - ஈழம் புதிய ஜனநாயகத்தின் தீர்வு குறித்து

                புதிய ஜனநாயகம் எழுதுகிறது “இராசபக்சே மீது போரக் குற்ற விசாரணை ஈழத்தில் பொது வாக்கெடுப்பு ஆகிய இரண்டையும் நிறைவேற்றுவதில் பாரிய அக்கறை கொண்டவர்கள் பின்வரும் உண்மைகளில் கவனம் செலுத்த வேண்டும், இவ்விரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்ற வேண்டுமானால், ஒன்று. சர்வதேச சமூகம் எனப்படும் உலக நாடுகள் இலங்கைக்கு வெளியிலிருந்து சிங்கள இனவெறி, கொலைவெறி பாசிச ராஜபக்சே கும்பலின் அதிகாரக் கோரப் பிடியிலிருந்து இலங்கையையும் ஈழத் தமிழர்களையும் மீட்க வேண்டும். ஈழத்தில் ஒரு பொது வாக்கெடுப்பை ஏற்கும் ஜனநாயக அரசை இலங்கையில் நிறுவி இதைச் செய்ய வேண்டும் அல்லது உள்நாட்டிலேயே சிங்கள இனவெறி, கொலைவெறி பாசிச ராஜபக்சே கும்பலைக் கொன்றொழிக்க வேண்டும். ஒருவேளை இது நிறைவேறினாலும் ஈழத் தமிழினத்தின் தன்னுரிமையையும் ஏற்கும் ஜனநாயக அரசு இலங்கையில் அமைய வேண்டும் இல்லையென்றால் அவ்வாறான அரசு அமைவதற்கான புரட்சி இலங்கையில் நடைபெற வேண்டும்”…

                “ஆக இராசபட்சே மீது போர்க் குற்றவாளி ஈழத்தில் பொது வாக்கெடுப்பு ஆகிய இரண்டையும் நிறைவேற்ற வேண்டுமானால் இலங்கையில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது தவிர்க்கவியலாத அவசியம்”

                மேலே கூறிய தீர்வுகள் அனைத்தும் சத்தியமாக புதிய ஜனநாயகம் கூறிய ஜோதிடமே. ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ள நம் மக்கள் கணவன் மனைவிக்கு அல்லது குடும்பத்தில் ஏதேனும் சிக்கல் என்றால் ஜோதிடனை நாடிச் செல்வார்கள். தட்சிணையை வாங்கிக் கொண்டு பெயர், வயது கேட்பான் ஜோதிடன். இதிலிருந்து சில யூகங்களுக்கு வந்து விடுவான். ஜோதிடனும் சிலவற்றை உளறிக் கொண்டே இருப்பான். ஜோதிடனை பார்க்கச் சென்றவர்களுக்கு ஒன்றுமே விளங்காது. இவர்களது முகத்தைப் பார்த்த ஜோதிடன் சிலவற்றைப் போட்டு வாங்கி நோக்கத்தைப் பிடித்து விடுவான். ஒருவேளை போனவர்கள் மகளுக்கும் மருமகனுக்கும் நேரம் சரியாக இருக்கா என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டாலும் சரி. இல்லை! இல்லை! ஏழரை நாட்டு சனியன் பிடித்துள்ளது. எனவே அதுவரைக்கும் பிரிந்து வாழ வேண்டும் இல்லாவிட்டால் பரிகாரம் தேட வேண்டும் என்பான். கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பனா என்றானாம். இலங்கையில் ஈழத்தில் இதுவரையிலும் என்ன நடந்தது என்று புதிய ஜனநாயகம் உட்பட எல்லோருக்கும் தெரியும். அங்கே போர்க்குற்றம் மட்டுமல்ல, இனப்படுகொலையும் நடந்தேறியுள்ளது. ஆக உடனடியாக அங்கே செய்ய வேண்டியது என்ன என்பதுதான் நம்முடன் உள்ள ஒரே கேள்வி! அதற்கு புதிய ஜனநாயகம் நேரடியாக பதில் சொல்லி உள்ளதா?

                அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்பது போலத் தீர்வுகளை முன் வைக்கிறது. இதில்வேறு சில மாணவ அமைப்புகளின் தலைமை குறுங்குழுவாக அகநிலைப் பார்வையுடன் இருப்பதாகக் குறைபட்டுக் கொள்கிறது. இலங்கை ஈழப்பிரச்சனை தீர புதிய ஜனநாயகம் முன் வைத்துள்ள இரண்டு முன்மொழிவுகளையும் பரிசீலிப்போம். முதலாவதாக உலகநாடுகள் ராசபட்சேவிடமிருந்து இலங்கையையும் ஈழத்தமிழர்களையும் மீட்க வேண்டும். இலங்கையில் ஈழத்தில் பொது வாக்கெடுப்பை ஏற்கும் சனநாயக அரசு அமைய வேண்டும் என்றது புதிய ஜனநாயகம்.

                அப்படி ஒரு நிலைமை உண்டா இல்லையா என புதிய ஜனநாயகமே ஆராய்ந்து சொல்ல வேண்டும். அதுதான் பொறுப்பான செயல். அப்படி எந்த முயற்சியும் புதிய ஜனநாயகம் செய்யவில்லை. ஜோதிடம் போல யூகமாகச் சொல்கிறது. புதிய ஜனநாயகமே தனது யூகத்தை தானே மறுக்கும் வகையில் கீழ்கண்டவாறு எழுதி முரண்படுகிறது.

                “ஆனால் போர்க்குற்றங்களில் பங்காளியான இந்தியா எத்தகைய நிலைமையிலும் இவ்விரண்டு கோரிக்கைகளையும் ஏற்கப் போவதில்லை. புலிகளை ஒழித்துக் கட்டுவதென்று 2006ல் கூடிப்பேசி முடிவெடுத்து ஈழப்போரில் ராசபட்சேவுக்குத் துணை நின்ற அமெரிக்கத் தலைமையிலான 20 உலக நாடுகளும் இவற்றை ஏற்கப்போவதில்லை.” ஆக முதலாவதாக புதிய ஜனநாயகம் கூறிய முன்மொழிவுகள் நடைபெறப் போவதில்லை என புதிய ஜனநாயகமே கூறுகிறது.

                புதிய ஜனநாயகத்தின் இரண்டாவது முன்மொழிவுகளைப் பரிசீலிப்போம். உள்நாட்டிலேயே ராசபட்சே கும்பல் கொன்றொழிக்கப்பட வேண்டும். பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கக் கூடிய ஜனநாயக அரசு இலங்கையில் அமைய வேண்டும். இல்லை என்றால் அவ்வாறான அரசு அமைவதற்கான புரட்சி இலங்கையில் ஏற்பட வேண்டும் என்கிறது புதிய ஜனநாயகம்.

                அப்படிப்பட்ட வாய்ப்பு உண்டு என்றோ இல்லை என்றோ புதிய ஜனநாயகம் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. நாம் உட்படுத்துவோம். இன்றைய நிலையில் இலங்கையில் தமிழீழ மக்களின் தன்தீர்வு உரிமையை அங்கீகரித்துள்ள எந்த கட்சியும் இல்லை. இடதுசாரிக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் ஜெ.வி.பி கூட பேரினவாதக் கட்சியே. வேண்டுமானால் புதிய ஜனநாயகம் இதை மறுக்கட்டும். ஆளும் வர்கக் கட்சிகளுக்கிடையிலான போட்டியில் ஒருவேளை ராசபட்சே கும்பல் கொன்றொழிக்கப் பட்டாலும் அல்லது அக்கும்பல் சிறைபிடிக்கப்பட்டாலும் ஈழ மக்களின் தன்தீர்வு உரிமையை சிங்களப் பேரினவாதிகளும் புத்த பிட்சுகளும் ஏற்கப் போவதில்லை. ஈழத்தின் தன்தீர்வு உரிமையை அங்கீகரித்து இலங்கையில் உடனடியாகப் புரட்சி நடத்தும் நிலையில் தொழிலாளி வர்க்கக் கட்சி இல்லை. இந்நிலையில் உடனடியாக இலங்கையில் புரட்சிக்கான நிலைமைகள் இல்லை. இதே உலக அரசியல் சூழலில் தமிழீழம் விடுதலை பெறாமல் இலங்கையில் புரட்சி நடைபெறப் போவதில்லை. தனது சொந்த வர்க்க நலனுக்காக வேண்டி இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் வெற்றி பெறவேண்டுமானால் அயர்லாந்து விடுதலை பெறுவதை மார்க்ஸ் முன் நிபந்தனையாக வைத்தது இலங்கைக்கும் பொருந்தும். எனவே புதிய ஜனநாயகம் கூறும் இரண்டாவது யோசனையும் நடைபெறப் போவதில்லை. ஏனெனில் புதிய ஜனநாயகத்தின் இரண்டு முடிவுகளும் உலக, இலங்கை, ஈழ நிலைமைகளிலிருந்து பெறப்பட்டவை அல்ல. அது விரும்பித் தன் அகநிலை நோக்கில் முன் வைத்தனவாகும்.

                பின் எதற்கு இப்படிப்பட்ட யோசனைகளை புதிய ஜனநாயகம் முன் வைக்கிறது? அது மார்க்சிய வேடம் தரித்து வலம் வருகிறது அல்லவா? தனது கடையைக் காப்பாற்ற வேண்டுமல்லவா? தனது வாடிக்கையாளர்களை வைத்துக் கொள்ள வேண்டுமல்லவா? தனது அணிகளும், வாடிக்கையாளர்களும் போய்விட்டால் இந்தியப் புரட்சி என்ற சரக்கை யாரிடம் விற்பது? அதுதான் இப்படிப்பட்ட யோசனைகள் அதனைப் பிடித்து ஆட்டுகின்றன.

                ஈழ வரைபடத்தைக் காட்டி ஈழ மக்களின் வாழ்வுரிமையை சிங்களப் பேரினவாதத்தின் தயவில் நிறுத்துகிறது புதிய ஜனநாயகம். உலகில் ஈழ மக்களை விட மக்கள் தொகை குறைவாகக் கொண்ட தேசங்கள் பல தனி தேசங்களாக உள்ளன. அவற்றினை ஏகாதிபத்தியங்கள் விழுங்கி விட்டன அல்லது தனக்கு கீழ் மறுகாலனியாக்கியுள்ளன. இந்தியாவில் ஒளிக்கீற்றாய் எழுந்து வரும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமும் இந்திய ஆளும் வர்க்கத்தை வீழ்த்தி ஒடுக்கப்பட்ட தேசமான ஈழத்திற்குக் கரம் நீட்டும். அப்போது இந்திய தேசியமும் சிங்கள பேரினவாதிகளும் வீழ்வர்.

மேலும் சில

                புதிய ஜனநாயகம் கடைசியாக “ஆகவே எல்லா காலத்திலும் எல்லா நிலையிலும் ஒரே தீர்வு என்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாது” எனக் கூறுகிறது. இந்த வாய்ப்பாடு ஒப்பிப்பதற்கு அல்ல. திறமையாக குறிப்பான நிலைமையில் கையாளுவதற்கே. தேசிய இனப் பிரச்சனையில் எந்த நிலையில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது புதிய ஜனநாயகத்திற்கே தெரியாது. ஏனெனில் அதைப் பற்றிய குறிப்புகள் இதுவரையிலும் புதிய ஜனநாயகத்தின் கட்டுரைகளிலோ அல்லது கட்சி ஆவணங்களிலோ நான் பார்த்ததில்லை. ஆனால் கிளிப்பிள்ளைப்போல் எல்லா நிலையிலும் எல்லா காலத்திலும் ஒரே தீர்வு என்பது பொருந்தாது எனப் பேசும் இது குழந்தைக்குக் கூட தெரியும். புதிய ஜனநாயகம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக லெனின் பேசும் போது குறிப்பிடுவார், ஒரு தேசிய இனம் பிரிந்து போவதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்கிற போது எந்த முடிவு வர்க்கப் போராட்டத்திற்கான சிறந்த நிலைமைகளை உருவாக்கும் எனப் பார்க்க வேண்டும் என்பார். ஒரு தேசிய இனம் பிரிந்து போவதின் மூலமாக வர்க்கப் போராட்டத்திற்கான சிறந்த நிலைமைகள் தோன்றும் என்றால், பிரிந்து போவதை ஆதரிக்க வேண்டும். சேர்ந்து இருப்பதன் மூலம் வர்க்கப் போராட்டத்திற்கான நிலைமைகள் தோன்றும் என்றால், பிரிந்து போவதை எதிர்க்க வேண்டும். இதைதத்தான் கீழ்கண்டவாறு தொகுத்து முன்பகுதியில் காட்டினேன். ஒரு தேசிய இனம் பிரிந்து போவதை மூன்று நிலைமைகளில் எதிர்க்க வேண்டும் என்று.

1.            ஒரு தேசிய இனம் பிரிந்து போய் அது ஒரு பிற்போக்கு பெரும் வல்லரசுக்கு உதவும் பட்சத்தில்

2.            ஒரு தேசிய இனம் பிரிவதை முன்னிட்டு உலகப்போர் தோன்றினால்

3.            பல்தேசிய இனநாட்டில் ஒடுக்கும் தேசிய இனத்தில் பலம் வாய்ந்த தொழிலாளர் வர்க்க கட்சி புரட்சியை முன்னெடுக்கும் நிலையில் அது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை அங்கீகரித்துப் போராடும் நிலையில்.

மற்ற எல்லா நிலைமையிலும் பிரிவினைக்கு ஆதரவு தரவேண்டும் அல்லது தலைமை தாங்க வேண்டும். இப்படி நிலைமைகளை பிரித்தறிகிற அறிவு, ஆற்றல், துணிச்சல் புதிய ஜனநாயகத்திற்கு உண்டா? இருந்தால் கூறட்டும். இல்லாவிட்டால் மேற்கண்ட முடிவுகள் தவறு எனக் காட்டட்டும்.

                புலி ஆதரவாளர்கள் அனைவரையும் ஒரு வளையத்திற்குள் வைத்து புதிய ஜனநாயகம் எழுதுகிறது “ஈழப் பிரச்சனைக்காக இந்திய அரசை எதிர்த்துப் போராடுவதும், அதன் பொருட்டு பிறவிடுதலை இயக்கங்கள் மற்றும் மக்களின் ஆதரவை திரட்டுவதும் ஈழ விடுதலைப் போர் வெற்றி பெற அவசியமானது என்பதை எப்போதும் புலி ஆதரவாளர்கள் ஏற்றதில்லை”…

                … “இந்திரா - இராஜிவ், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா, வாஜ்பாய் - அத்வானியையும் இந்திய அரசையும், இராணுவத்தையும் புலி ஆதரவாளர்கள் நம்பினார்கள். புலி பிரபாகரனே இம்மாதிரியான அணுகுமுறையைத்தான் கொண்டிருந்தார்”

                இவையிரண்டும் புலி ஆதரவாளர்கள் மீதும், புலிகள் மீதும் வைக்கப்பட்டுள்ள முதன்மையான குற்றச்சாட்டுகள்.

                2006 பிப்ரவரியில் தோழர் தியாகு தென்கீழ் வானத்தில் தமிழீழ செம்மீன் என்று சிறு வெளியீடு கொண்டுவந்தார்;. ஆதிக்க முக்கூட்டு அல்லது அச்சு என்ற சிறுதலைப்பிட்டு அவர் எழுதினார்: “கொழும்பிலும் தில்லியிலும் அமெரிக்க தூதர்கள் விடுத்த எச்சரிக்கைகளும், பன்னாட்டு அணுவாற்றல் முகமையில் இந்திய அரசு அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு ஆதரவாக கை தூக்கி இருப்பதும் - முன்னிகழ்ந்த பலவற்றோடும் சேர்த்து - தெற்காசியாவில் ஒரு ஆதிக்க முக்கூட்டு அல்லது அச்சினை வெளிப்படுத்தியுள்ளன. இந்த அச்சில்

                1. அமெரிக்க வல்லாதிக்க அரசு, 2. இந்தியப் பார்ப்பனிய அரசு, 3. சிங்களப் பேரினவாத அரசு ஆகியவை கைகோர்த்துள்ளது. இந்த மூன்று அரசுகளும் தமிழீழ மக்களின் விடுதலைப் போரை ஒழித்துக்கட்ட முனைந்துள்ளன என்ற வரலாற்று உண்மையை உள்வாங்காமல், தமிழீழ விடுதலைக்கு துணை நிற்கவோ, தமிழீழ மக்களைப் பாதுகாக்கவோ முடியாது”

                இந்த மூன்று அரசுகளைப் பற்றியும் தமிழத் தேசிய விடுதலை இயக்கத்தின் நிலைபாடு என்ன என்று படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

                பிரபாகரனுக்கும் பழைய புலிப் போராளிக்கும் இந்தியாவைப் பற்றியோ, கருணாநிதி, எம்.ஜி.ஆர் பற்றியோ அல்லது ஜெயலலிதாவைப் பற்றியோ புதிய ஜனநாயகம் கூறுவது போல எந்த மயக்கமும் இல்லை. யாழ்ப்பானத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கருணாநிதி, எம்.ஜி.ஆர் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கையில் பிரபாகரன், இப்படிச் சொன்னார் : “தமிழக அரசுக்கு இறைமை கிடையாது என்பதை அறிவோம். முதலமைச்சர் தாமாக எங்களுக்குத் துணை செய்ய அதிகாரம் இல்லை என்பதையும் நன்கு உணர்ந்துள்ளோம் என்றாலும், தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதாகவே நம்புகிறோம்.”

                ஐயா, பழ.நெடுமாறன், 1985 அக்டோபரில் தமிழீழம் எங்கும் பயணம் செய்து “போர் முனையில் புலிளுடன்” என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலில் புலிப்படையில் இளம் வீரர்களுடன் உரையாடியதுப் பற்றி நெடுமாறன் எழுதுகிறார் “தமிழீழத்தில் விடுதலைக்கான போராட்டம் என்று மட்டும் அவர்கள் தங்கள் போராட்டத்தைக் கருதவில்லை. தென்னாசியாப் பகுதியில் ஏகாதிபத்தியங்களின் காலடிச் சுவடே இல்லாமல் அழிக்கும் போராட்டமாகவும், இந்தப் பகுதிக்கான சோசலிசப் புரட்சிக்கு வித்திடும் போராட்டமாகவும் அவர்கள் தங்கள் போராட்டத்தைக் கருதுவதுக் கண்டு பெருமிதம் அடைந்தேன்.”

                தென்கீழ் வானத்தில் தமிழீழச் செம்மீன் என்ற சிறு வெளியிட்டில் தோழர் தியாகு எழுதினார் “இலத்தின் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளும் கவனிக்கத் தவறவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான கா.வே.பாலகுமாரன் சொல்கிறார் “கியூபா புரட்சி நடந்தது 1959 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே அந்தப் புரட்சியை நசுக்குவதற்கு இராணுவ ரீதியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன… அந்த படையெடுப்பு தோற்றது. பிறகு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு பல்வேறு வகையிலே சொல்லப்பட முடியாத தாக்குதல்களை மேற்கொண்டு 40 வருட காலமாக உலகத்திலேயே மிக நீண்ட பொருளாதார தடையில் சிக்கிய கியூபா நாடு, இன்று மெல்ல மெல்ல தலை நிமிர்ந்து வருகிறது…”

                “கியூபா எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது. நாளை நாங்கள் விடுதலை பெற்றாலும் கூட தொடக்கத்திலேயே எங்களுக்கு இப்படிப்பட்ட தடைகள் வரக்கூடும் இவற்றைத் தாண்டுவதற்காக வெறும் ஆர்வம் மாத்திரம் அல்லாமல், ஆக்கப் பூர்வமாகச் செயல்படக் கூடிய அணியே உலகத்தில் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய செய்தியாக இருக்கிறது…”

                ஆக புலித் தலைவர்கள் உலக, இந்திய, தமிழக நிலைமைகளையும் அதன் தன்மைகளையும் அறிந்தே வைத்திருந்தனர். இந்திய தமிழக அரசுகளைப் பற்றியும், மக்களைப் பற்றியும் உலகத்தில் இருந்து வரும் நட்பு சக்திகளைப் பற்றியும் அறிந்தே இருந்தனர். அதே நேரத்தில் இந்தியாவைப் பற்றி கூறும் போது இராஜ தந்திர ரீதியாக நட்பாக பேசி வந்தாலும், நடைமுறையில் இந்தியாவை அவர்கள் நம்பவில்லை. புலித் தலைவர்களின் புரிதலுக்கும், ஈழ மக்களின் புரிதலுக்கும் இன்று வரையிலும் பெரிய வேறுபாடு நிலவுவது உண்மைதான்.

                எனவே புதிய ஜனநாயகம், புலி ஆதரவாளர்களைப் பற்றியும், புலிகளைப் பற்றியும் போகிற போக்கில் பொதுவாக விமர்சனம் செய்யாமல், குறிப்பாக பொறுப்புணர்வுடன் விமர்சனம் செய்ய வேண்டும். அதுதான் மற்றவர்கள் கற்றுக் கொள்வதற்கு உதவும்.

தனித் தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்டம் வெல்க!

                மாணவர் போராட்டத்தின் திசைவழிக் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு காட்டிய வழியை நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

                “தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றீர்கள். போராட்டத்தின் முதற்கட்டம் முடிந்து அடுத்த கட்டம் குறித்து சிந்தித்து கலந்தாய்வு செய்து வரும் உங்கள் பார்வைக்கு சில முன் மொழிவுகளை அன்புரிமையோடு படைக்கிறோம்.

                ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் சென்ற 2012 மார்ச்சில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்த போதே, இது தமிழர்களுக்கு எதிரான தீர்மானம்?, இனக் கொலைக் குற்றவாளியான சிங்கள ராசபட்சே கும்பல் தப்பித்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கும் தீர்மானம் என்று எமது இயக்கத்தின் சார்பில் எச்சரித்தோம். எங்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், தமிழகத்தின் அரசியல் கட்சிகளும், சில பல ஈழ ஆதரவு அமைப்புகளும் கூட அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சேர்ந்திசைப் பாடின.

                இந்த முறை மாணவர்களாகிய நீங்கள் சில அரசியல் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல், உள்ளது உள்ளபடி அமெரிக்கத் தீர்மானத்தின் உள்ளடகத்தையும், உண்மை நோக்கத்தையும், சரியாக எடுத்துக்காட்டிப் போராடியதால், தமிழினம் விழித்துக் கொண்டது.

                இனக்கொலையை இனக்கொலை என்றுதான் சொல்ல வேண்டும். அதை மறைக்க மனித உரிமை மீறல் போன்ற சொற்களை யார் பயன்படுத்தினாலும் ஏற்க மாட்டோம், ஏமாற மாட்டோம் டப்ளின் தீர்பாயம், ஐ.ந மூவல்லுநர் குழு அறிக்கை, லண்டன் சேனல் - 4 வெளியிட்ட ஆவணப்படங்கள்… இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு இராசபட்சேயின் செல்லப்பிள்ளையான படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கன ஆணையத்தின் (டுடுசுஊ) அறிக்கையை வலியுறுத்துவதும், ஆதரவு, எதிர்ப்பு என்று சினுங்குவதும், உலகின் கண்ணில் மண்ணைத்தூவும் வேலை என்பதை உரக்கச் சொல்லுவோம்.

உலகத் தமிழர்களின் கோரிக்கைகளும், நம் கோரிக்கைகளும் ஒன்றே.

1.            இராசபட்சேயின் சிங்கள அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு இழைத்த இனக்கொலைக் குறித்து தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு (Independent International Investigation) தேவை

2.            ஈழ மக்கள் மீது தொடரந்து இழைக்கப்பட்டு வரும் இனக்கொலையை தடுத்து நிறுத்த பன்னாட்டு பாதுகாப்பு பொறியமைவு (International Protective Mechanism) தேவை.

3.            தமிழீழத்தின் இறைமையை (Sovereignty) மீட்டெடுக்கும் வகையில் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழந்து வரும் ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்புத் தேவை.

                இந்த கோரிக்கைகளுக்கானப் போராட்டத்தை ஐ.ந. மனித உரிமை மன்றத்தை மையப்படுத்தி நடத்தினோம். இனி என்ன செய்வது? மனித உரிமை மன்றம் அடுத்த முறை கூடட்டும் என்று நாம் காத்திருக்க முடியாது. இராசபட்சே கும்பலை மென்மேலும் தனிமைப் படுத்துவதன் மூலம் தமிழீழ மக்கள் போராடுவதற்கான வெளியை உருவாக்கி விரிவாக்குவததான் நம் போராட்டத்தின் நோக்கமும், விளைவும் என்பதை மறந்து விடக் கூடாது. உலக அரங்கில் என்றாலும், உள்நாட்டில் என்றாலும், இந்த விளைவை நோக்கியே நம் போராட்டங்கள் அமைய வேண்டும்.

                இனக்கொலைக் குற்றம் புரிந்த சிங்கள அரசை அனைத்து நாடுகளும் அனைத்து மக்களும் புறக்கணிக்கும் படி செய்வோம். பொருளியல், அரசியல், பண்பாடு, கலைத்துறை, விளையாட்டு , சுற்றுலா… என்று எந்த துறையையும் விட்டு வைக்காமல், சிங்களத்தைப் புறக்கணிக்கும் இயக்கத்தை வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்வோம்.

             காமன் வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்தக் கூடாது. நடந்தால் இந்தியா கலந்துக் கொள்ளக் கூடாது.

             இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சிங்களர் எவரும் விளையாடக் கூடாது.

             தமிழகத் திரைத்துறையினர் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது.

             கலைஞர்கள், எழுத்தாளர்கள் இலங்கையில் நடைபெறும் எந்த நிகழ்விலும் கலந்துக் கொள்ளக் கூடாது.

             இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் இயற்றிய தீர்மானத்திற்கு தமிழக அரசும், இந்திய அரசும் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

             தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடலடி கம்பி வழியாக மின்சாரம் அனுப்பும் இந்தியா - இலங்கை மின் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நீக்கம் செய்ய வேண்டும்.

             இலங்கையில் நடந்தது தமிழின படுகொலையே என்று இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்ட மன்றத்திலும் தீர்மானம் இயற்ற வேண்டும்.

                இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவாக அனைத்து மாணவர்களையும், பொது மக்களையும், அனைத்து இயக்கங்களையும், அனைத்து ஆதரவாளர்களையும் திரட்டுவதற்குப் பொருத்தமான போராட்ட வடிவங்களை நீங்களே முடிவு செய்யுங்கள்.

                அதேபோது நம் கோரிக்கைகள் அனைத்திற்கும் மையமாக இருக்க வேண்டிய முழக்கம்.

இறுதியாக

                புதிய ஜனநாயகம் புரட்சிகர முகாமில் உள்ளதா? அல்லது எதிர் புரட்சிக்கர முகாமில் உள்ளதா? எனப் பார்ப்போம். புதிய ஜனநாயகம், தன்னை ஈழ ஆதரவு அமைப்பு போல் காட்டி பாசாங்கு செய்கிறது. தமிழக மாணவர்களுக்கு உடனடி, நீண்ட கால கோரிக்கைகள் எதுவும் புதிய ஜனநாயகம் முன்வைக்கவில்லை. அது தனது காலை ஆகாயத்தில் வைத்து நடந்துக் கொண்டு கற்பனாவாதத் திட்டங்களை மாணவர்களுக்கு முன் மொழிகிறது. அத்திட்டத்தைக் கூட அதனால் தன் முரண்பாடு இல்லாமல், முன்வைக்க முடியவில்லை. கருணாநிதி தமிழ் ஈழம் மலந்தால் மகிழ்வார். ஆனால் அதற்காக போராடி மடியும் புலிகiளை ஏற்றுக் கொள்ள மாட்டார். அதேபோல புதிய ஜனநாயகம் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கும். அற்காகப் போராடும் புலிகளை பாசிஸ்டுகள் என அவதூறு கூறும். சரி, தவறை பிரித்து அறிவதற்கான சக்தியற்ற குழப்பவாதிகளின் கூடாரமே புதிய ஜனநாயகம். மார்க்சியம் என்பது சமுதாயத்திற்கான மருத்துவச்சி. ஆனால் புதிய ஜனநாயகம் போலி மருத்துவச்சி. தனி ஈழத்தை குறுகிய இனவாதமாக இராசபட்சே கும்பலும், பிரிவினைவாதமாக காங்கிரஸ், பி.ஜே.பி, சி.பி.ஐ.(எம்) கும்பலும், பயங்கரவாதமாக அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளும் ஓலமிடுகின்றனர். இக்கும்பலுடன் சேர்ந்து புதிய ஜனநாயகமும் தனி ஈழம் என்ற தீர்வு சர்வாதிகாரம், குறுங்குழுவாதம், அகநிலைக் கண்ணோட்டம் என ஓலமிடுகிறது. இவர்கள் அனைவரும் மூண்டெலும் தமிழக மாணவர்களாலும், மக்களாலும் இருக்கும் இடம் தெரியாமல், துடைத்தெரியப்படுவார்கள்.

-    பாரி, அமைப்புக்குழு உறுப்பினர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் (தொடர்புக்கு : 9715417170, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It