தர்மபுரி - நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி கிராமத்தில் கடந்த 07.11.2012 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் 1000த்திற்கும் மேற்பட்ட சாதி இந்து வன்கொடுமைக் கும்பல் கத்தி உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நாயக்கன்கொட்டாய் – நத்தம் காலனி தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதே போன்று அண்ணாநகர், கொண்டபட்டி காலனி, செங்கல்மேடு, மரவாடி ஆகிய பகுதிகளிலும் இவ்வன்கொடுமைக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 வீடுகள் சேதப்படுத்தப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டன. தலித் இளைஞர் இளவரசன் என்பவர் சாதி இந்துப் பெண் திவ்யா என்பவரைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டதற்காக, சாதி இந்து வன்கொடுமை கும்பல் இக்கொடிய வன்முறையில் ஈடுபட்டது.

                தலித்துகள் மீதான இக்கொடிய வன்கொடுமை மாநில அளவிலும் தேசிய அளவிலும் கவனம் பெற்றன. இவ்வன்கொடுமைக்குப் பிறகு சில சாதி இந்துக் கட்சிகள், இயக்கங்கள் தலித்துகளுக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக "தலித் இளைஞர்கள் சாதி இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு வாழாமல் துரத்தி விடுகின்றனர். பணம் கேட்டு மிரட்டியும் வருகின்றனர்" என்ற குற்றச்சாட்டுகளை சாதி இந்து இயக்கங்கள் பரப்பி வருகின்றன.

                இது உண்மையா? என்பதைக் கண்டறிய எமது எவிடன்ஸ் அமைப்பு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஜனவரி 2009 முதல் டிசம்பர் 2012 வரை 4 வருடங்களில் நடந்த சாதிமறுப்புத் திருமணம் குறித்த வழக்குகளின் விபரத்தை திரட்டியது.

             சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு கணவரால் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரம்

             கணவரின் குடும்ப உறுப்பினர்களால் சித்திரவதை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள்

             திருமணம் செய்த பின்னர் சேர்ந்து வாழ மறுத்து கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்

             திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள்

ஆகிய 4 வன்கொடுமை நிலைகளின் அடிப்படையில் இத்தகவல்கள் பெறப்பட்டன‌. இதனடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் சாதிமறுப்புத் திருமணம் குறித்து 94 வன்கொடுமை சம்பவங்கள் நடத்திருப்பது கண்டறியப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல்நிலையங்கள், குற்றஎண், குற்றப் பிரிவுகள், வழக்கின் தற்போதைய நிலை, குற்றவாளிகள் கைது விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் பெறப்பட்டன.

கோவை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தகவல்களைப் பெற முடியவில்லை (தகவல் கேட்டு 2 மாதம் ஆகியும் மேற்குறிப்பிட்ட 5 மாவட்டங்களிலிருந்து உரிய பதிலில்லை). பெறப்பட்ட 24 மாவட்டங்களில் கன்னியாகுமரி, அரியலூர், கரூர், நீலகிரி, சேலம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்று கண்டறிய முடிந்தது.

பாதிக்கப்பட்ட பெண்களின் சாதி விபரம்

                கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டிணம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களில் 94 பெண்கள் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு தங்களது கணவராலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றப்பட்ட ஆண்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தலித் பெண்கள் 77 (82 சதவீதம்) பேரும், சாதி இந்துப் பெண்கள் 17 (18 சதவீதம்) பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                சாதி இந்துப் பெண்களை சாதிமறுப்புத் திருமணம் மற்றும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட 17 சம்பவங்களில் 13 பேர் சாதி இந்துக்களே உள்ளனர். மற்ற 4 நபர்கள் தலித்துகளாக இருக்கின்றனர். ஆகவே 94 வழக்குகளில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு சாதி இந்து கணவராலும், ஏமாற்றப்பட்ட ஆண்களாலும் பாதிக்கப்பட்ட 96.4 சதவீத்தினர் தலித் பெண்கள். மற்ற 3.6 சதவீதத்தினர் இதர பெண்கள்.

                பாதிக்கப்பட்ட 94 பெண்களில் 77 பெண்கள் தலித் பெண்கள். இவற்றில் 42 பெண்கள் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 20 பெண்கள் பள்ளர் சமூகத்தையும், 13 பெண்கள் அருந்ததியர் சமூகத்தையும், 2 பெண்கள் இதர தலித் சமூகத்தையும் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

                இதனடிப்படையில் தமிழகத்தில் சாதிமறுப்புத் திருமணம் சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பறையர் சமூகத்துப் பெண்களின் எண்ணிக்கை 45 சதவீதம். பள்ளர் சமூகத்துப் பெண்களின் எண்ணிக்கை 21 சதவீதம். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் எண்ணிக்கை 14 சதவீதம்.

                இதே போன்று சாதிஇந்துக்கள் மற்றும் தலித்துகளால் பாதிக்கப்பட்ட 17 பெண்களில் 3 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், இருவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், கவுண்டர், பிறமலைக் கள்ளர், நாயுடு ஆகிய சமூகங்களைச் சேர்ந்த தலா ஒரு பெண்களும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்ட ஆண்களின் சாதி விபரம்

                பாதிக்கப்பட்ட 77 தலித் பெண்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கக்கூடிய சாதி இந்துக்களின் பட்டியல் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 23 பேர் (24 சதவீதம்) வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 8 பேர் (8.5 சதவீதம்) நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 8 பேர் (8.5 சதவீதம்) கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 6 பேர் (6.3 சதவீதம்) அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 6 பேர் (6.3 சதவீதம்) செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 4 பேர் பிறமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 3 பேர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், இதர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 19 பேரும் உள்ளனர்.

                சாதிமறுப்புத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட 17 சாதி இந்துப் பெண்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் சாதி விபரம். நான்கு பேர் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 3 பேர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், வன்னியர், அகமுடையார், நாடார், முதலியார் தலா ஒருவரும் உள்ளனர்.

வன்முறையின் வடிவங்கள்

                பாதிக்கப்பட்ட 77 தலித் பெண்களில் 4 பெண்கள் கணவரின் வன்முறையாலும், 5 பெண்கள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 7 பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் விரட்டியடிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளனர். மற்ற 62 (64.9 சதவீதம்) தலித் பெண்கள் சாதி இந்து ஆண்களால், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

                பாதிக்கப்பட்ட 17 சாதி இந்து பெண்களில் 13 பெண்கள் சாதி இந்து கணவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் கணவரின் வன்முறையாலும், 3 பேர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 8 பெண்கள் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சாதி இந்துப் பெண்களை பாதிப்பிற்குள்ளாக்கிய தலித் ஆண்களில் நான்கு வழக்குகளில் 2 கணவரின் வன்முறையாலும், 2 கணவரின் குடும்பத்தினராலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.     

சம்பவங்களின் பட்டியல் சில…

1.            தர்மபுரி பகுதியைச் சேர்ந்த தலித் பெண் எம்.தீபா. எம்.எஸ்.சி., பி.எட் படித்துள்ளார். தீபாவும், சாதி இந்துவான விஷ்ணுராம் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு விஷ்ணுராம் தீபாவை பல்வேறு விதங்களில் கொடுமை செய்துள்ளார். தீபாவோடு வாழ மறுத்தும் உள்ளார். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

2.            தர்மபுரி பகுதியைச் சேர்ந்த வேளாங்கன்னி என்கிற 16 வயது தலித் சிறுமியை சாதி இந்துவான நாகராஜ் என்பவர் காதலித்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு நாகராஜும் அவரது குடும்பத்தினரும் வேளாங்கன்னியை கட்டிப்போட்டு அடித்து சித்திரவதை செய்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு நிலுவையில் உள்ளது.

3.            ஈரோடு பகுதியைச் சேர்ந்த கஸ்தூரிதேவி என்கிற தலித் பெண்ணை, சாதி இந்துவான சோமசுந்தரம் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இச்சம்பவம் பிப்ரவரி 2010 மாதம் நடந்துள்ளது.

4.            கடலூர், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சிவசண்முகவள்ளி என்கிற தலித் பெண், அருள்முருகன் என்கிற சாதி இந்து இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு அருள்முருகனும், அவரது குடும்பத்தினரும் சிவசண்முகவள்ளியை சாதிய ரீதியாக இழிவாகப்பேசி அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இவ்வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

5.            கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தலித் பெண் ரூபா. நாகராஜ் என்கிற சாதி இந்து இளைஞரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பின்பு நாகராஜ், தலித் பெண் ரூபாவை கடுமையாக அடித்து சித்திரவதை செய்து வாழ மறுத்துள்ளார். இதுகுறித்த வழக்கு தேன்கனிக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகவல்கள் அனைத்தும் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் சாதிமறுப்புத் திருமணத்தாலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்முறையாலும் 80 சதவீதம் பாதிக்கப்படுவது தலித் பெண்கள்தான். ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 94 சம்பவங்களில் 95.2 சதவீதம் வன்முறையில் ஈடுபட்டிருப்பது சாதி இந்து ஆண்கள். 4.8 சதவீதம் வன்முறையில் ஈடுபட்டிருப்பது தலித் ஆண்கள். இதுதான் உண்மை நிலை.

                இதன் உண்மையைப் புரிந்து கொள்ளாமல், தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர்கள் சாதி இந்துப் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பணம் பறிக்கின்றனர் என்று கூறப்படுகிற குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

பல சாதிஇந்து இயக்கங்கள் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு தலித் இளைஞர்கள் சாதி இந்துப் பெண்களை ஏமாற்றிய வழக்கு 2500 உள்ளது என்றும், 1850 வழக்குகள் உள்ளன என்றும் போகிற போக்கில் புள்ளி விபரங்களை கூறிவருவது ஏற்புடையதல்ல. முதலில் இதுபோன்ற வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறைவாகவே உள்ளன. உலக பொது மனித உரிமை சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் தலித் பெண்கள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகளில் 5 சதவீதம் கூட வழக்காக பதிவு செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. இதிலிருந்து பார்க்கின்ற போது பல பாதிக்கப்பட்ட தலித் பெண்களின் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்பதும் புலப்படுகிறது.

தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு சாதி இந்து இயக்கங்களும், கட்சிகளும் சாதிய துவேசத்தை விஷப் பிரச்சாரமாக பரப்பி வருவதனால், தலித் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு தலித் பெண்கள் மீதான வன்முறைகளின் சில பட்டியலாக‌ இணைக்கப்பட்டுள்ளது)

பரிந்துரைகள்

1.            திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும்.

2.            திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தலித் பெண்களை ஏமாற்றி வருகிற சாதி இந்து கும்பல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5)ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.            வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 முறையாக நடைமுறைப்படுத்தப்படாததனால் தான் இதுபோன்ற வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தற்போதைய வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் பல குற்றவாளிகள் எளிதாக தப்பித்து வருகின்றனர். ஆகவே இந்த சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

4.            தலித்துகள் மீது வன்முறையில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்கிற சிறப்பு அம்சத்தை கடுமையாக்கி கட்டாய சிறைவைப்பு என்கிற அடிப்படையில் இதன் சிறப்பம்சத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

5.            சாதிமறுப்புத் திருமணத்தாலும் மற்ற வன்முறையாலும் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு நீடித்த, நிலைத்த மறுவாழ்வு திட்டங்களை கொண்டு வர அரசு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். மறுவாழ்வில் கல்வி, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, நிலம் போன்ற மேம்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

தர்மபுரி சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற கௌவரக் கொலைகளும், தலித் பெண்கள் மீதான தாக்குதல்களும்

1.            கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், சேத்தியாதோப்பு அருகில் உள்ள கிராமம் சென்னிநத்தம். இக்கிராமத்தில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட தலித் இளைஞர் கோபாலாகிருஷ்ணன் (20) த.பெ.மாயகிருஷ்ணன் என்பவ‌ரும் சாதி இந்து பெண் துர்கா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த துர்காவின் குடும்பத்தினர் கோபாலாகிருஷ்ணனை கடந்த 19.12.2012 அன்று படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருமுட்டம் காவல்நிலையத்தில் குற்றஎண்.326/2012 பிரிவுகள் 342, 364, 302 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2.            கடலுர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், பு.முட்லூர் அருகில் உள்ள கிராமம் சம்பந்தம் காலனி. இக்கிராமத்தில் வசித்து வருகிற தலித் பெண் சந்தியா சிதம்பரத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இப்பெண்ணை போட்டோ ஸ்டுடியோவின் உரிமையாளர் கடந்த 25.12.2012 அன்று பாலியல் வன்புணர்ச்சிக்கு முயற்சி செய்து கொலை செய்துள்ளார் என்று சந்தியாவின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

3.            திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஆழ்வார்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தபிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.முருகன் (39). தாழ்த்தப்பட்ட இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த முருகனின் 13 வயது மகள் பிரியா 17.01.2013 அன்று மாலை 6.30 மணியளவில் சாதி கிறிஸ்துவரான சினியன் என்கிற 50 வயது நபரால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்கார வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் குற்றஎண்.12/2013 பிரிவுகள் 448, 376, 511 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(10), 3(1)(11) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

4.            நாமக்கல் மாவட்டம், நல்லிப்பாளையம் அருகில் உள்ள கிராமம் பெரியஅய்யம்பாளையம். இக்கிராமத்தில் வசித்து வரும் 18 வயது தலித் பெண் கஸ்தூரியை கடந்த 30.12.2012 அன்று கிருஷ்ணன், குமார், சிவா ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நல்லிப்பாளையம் காவல்நிலையத்தில் குற்றஎண்.887/2012 பிரிவுகள் 366, 376 இ.த.ச. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

5.            கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள குணமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் தலித் பெண் சுகந்தி (21). கடந்த 24.12.2012 அன்று சுகந்தியும் அவரது உறவினர் பாக்கியராஜ் என்பவரும் விருத்தாசலம், மணிமுத்தாறு படித்துறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு 10க்கும் மேற்பட்ட சாதி இந்து வன்கொடுமைக் கும்பல் வந்துள்ளனர். அக்கும்பல் தலித் பெண் சுகந்தியின் ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். பாக்கியராஜ் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் குற்றஎண்.812/2012 பிரிவுகள் 147, 341, 506(2), 376 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(10), 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

6.            திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள கிராமம் மெதூர். இக்கிராமத்தில் வசித்து வருகிற சாதி இந்து பெண் நந்தினி (21) என்பவர் தலித் இளைஞர் பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தினியின் உறவினர்கள் கடந்த 17.01.2013 அன்று நந்தினியை கடுமையாக அடித்து சித்திரவதை செய்து அவரின் கழுத்தை அறுத்துள்ளனர். படுகாயமடைந்த நந்தினி சிகிச்சை எடுத்து வருகிறார். இச்சம்பவம் குறித்து கும்மிடிபூண்டி காவல்நிலையத்தில் குற்றஎண்.31/2013 பிரிவுகள் 341, 307 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

7.            வேலூர் அருகில் எரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசி. தலித் பெண் ரோசி, கந்தன் என்கிற சாதி இந்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கந்தனின் குடும்பத்தினரால் ரோசி கடந்த 15.12.2012 அன்று தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

8.            செஞ்சி, தும்பூர் காலனியைச் சேர்ந்த ரீட்டாராணி என்கிற தலித் பெண், மணிமாறன் என்கிற சாதி இந்துவை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தலித் பெண் ரீட்டாராணியை மணிமாறன் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதுகுறித்து செஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

9.            கடலூர் மாவட்டம், பென்னடம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்கிற தலித் பெண்ணை ஆடலரசன் என்கிற சாதி இந்து கடந்த 02.02.2013 அன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பென்னடம் காவல்நிலையத்தில் குற்றஎண்.50/13 பிரிவுகள் 376 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(12) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10.          பொன்னேரி பகுதியில் வசித்து வருகிற தலித் சிறுமி ரேவதி (15) என்பவரை 52 சாதி இந்து ஜெயசீலன் என்பவர் கடந்த 26.01.2013 அன்று கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். இதுகுறித்து சோழவரம் காவல்நிலையத்தில் குற்றஎண்.80/2013 பிரிவு 376 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(1)(10) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

11.          சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த 16 வயது தலித் சிறுமி இசக்கியம்மாள் என்பவரை சாதி இந்துவான ஞானதுரை என்பவர் கடந்த 27.01.2013 அன்று கடத்திச் சென்று கடுமையாக சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சி வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் பிரிவுகள் 366அ, 376 இ.தச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

12.          சேலத்தில் 16 வயது தலித் சிறுமி தீபா என்பவரை கடந்த 16.01.2013 அன்று இரண்டு சாதி இந்து வன்கொடுமை கும்பல் கட்டிப்போட்டு அடித்து சித்திரவதை செய்து கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் குற்றஎண்.134/2013 பிரிவுகள் 366அ, 376 இ.த.ச.வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

13.          திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ரஞ்சனி (16) என்பவரை சாதி இந்துவான சரவணன் என்பவர் அடித்து சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குற்றஎண்.3/2013 பிரிவு 366அ, 376 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

14.          திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தலித் பெண் இளையநிலா என்பவரும் அவரது காதலரும் பேசிக்கொண்டிருந்தபோது 18.12.2012 அன்று அப்பகுதியைச் சேர்ந்த சாதி இந்துக்கள் அவரது காதலனை கடுமையாக தாக்கி இளையநிலாவை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயற்சித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்நிலையத்தில் குற்றஎண்.1243/2012 பிரவுகள் 341, 294(b), 323, 365, 506(2) இ.த.ச தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(10), 3(1)(12) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

- ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ்

Pin It