நவம்பர் 7 - இது உலகில் முதன் முதலாய் ரசியாவில் கம்யூனிச புரட்சி வெற்றி பெற்ற நாள். இந்த உலக புரட்சி தினத்தில் தர்ம்புரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை வன்னிய சாதி வெறியர்கள் தீ வைத்துக் கொளுத்தி, கொண்டாடி இருக்கிறார்கள். நவ.7 என்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நத்தம் காலனி மக்கள் திருவிழாவாக கொண்டாடிய தினம். இந்த தினத்தை இந்த ஆண்டு வன்னிய சாதி வெறியர்கள் தமது திருவிழாவாகக் கொண்டாடியுள்ளனர்.

 இந்த சம்பவத்தை ஒட்டி இன்று வரை தமிழகம் முழுவதும் பலதரப்பிலும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன‌. இதன் மூலம் பாமக மற்றும் வன்னிய சங்கத்தின் செயல் திட்டம் வெற்றி பெற்றுள்ளதோடு ஆளும் வர்க்கங்களின் செயல் திட்டமும் இந்த சாதிவெறிக் கும்பல் மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

 வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்ற பிரச்சனையை கையில் எடுத்த பாமக ராமதாஸ், இதன் மூலம் தமது சாதியின் செல்வாக்குள்ள ஒரே தலைவராகவும், அமைப்பாகவும் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் செல்வாக்கு செலுத்தி வந்தார்.

 வன்னியர்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறியதும் தனது சாதிமக்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள தனது தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பதை முன்னிறுத்தினார்.

ramadoss_thirumavalavan_640

 வன்னியர்கள் தமது பிறவி எதிரியாகக் கருதும் தாழ்த்தப்பட்டவர்களோடு ராமதாஸ் அரசியல் ரீதியாக கூட்டுவைத்து ஆட்சியைப் பிடிப்பது என்ற தந்திரத்தைக் கையாண்டார். இதற்காக திருமாவளவன் கட்சியோடு தமிழ்த் தேசியம் என்ற பெயரில் ராமதாஸ் நாடகமாடினார். இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்த நாடகத்தை ராமதாசும், திருமாவளவனும் நடத்தினாலும் இதை இரு சாதி மக்களும் நம்பவில்லை, ஏற்கவில்லை. இதன் காரணமாக ராமதாசின் செல்வாக்கு வன்னிய சாதி மக்களிடம் வெகுவாக சரிந்தது. இந்தக் கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் மண்ணைக் கவ்வியது. இங்கு மட்டுமல்ல வட மாவட்டங்களில் எங்குமே தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்ற நிலை உருவானது.

 மேற்கண்ட நிலையோடு பண்ருட்டி வேல்முருகன் கட்சியிலிருந்து பிரிந்து கடலூர் மாவட்டத்தில் பெருமளவிலான வன்னிய சாதியினரை தனது ஆதரவாளராக மாற்றிவிட்டதும் ராமதாசுக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்தது.

இப்படிப்பட்ட சூழலில்தான் தான் ஏற்கனவே கடைபிடித்து வந்த தமிழ்த் தேசியம், தாழ்த்தப்பட்டவர்களோடு கூட்டணி என்ற தந்திரத்தை மாற்றிக் கொண்டு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதிகளின் கூட்டணி என்ற புதிய செயல் தந்திரத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளார்.

 அனைத்து ஆதிக்க சாதிகளின் வெறுப்புக்கும், ஆத்திரத்திற்கும் ஆளாகியுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை எதிர்ப்பது என்ற பெயரில் ஆதிக்க சாதிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

 இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிக்க சாதிகளின் கூட்டணி தமிழகத்தில் வன்கொடுமைகள் நிகழ்வுகள் நடப்பதற்குக் காரணமே தமது சாதிப்பெண்களை தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதால்தான் என்று புதிய விளக்கமளித்துள்ளனர். தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோர் வீடுகளை கொளுத்தியது, ஆதிக்க சாதிகளின் கூட்டணியை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றியது ஆகியவற்றின் மூலம் தமது செயல் திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைவைரையும் அன்றாடம் பேசவைக்கும் ஒன்றாக மாற்றியுள்ளார். இதன் மூலம் தமது சாதியினர் அனைவரின் கவனத்தையும் தன்னை நோக்கித் திருப்பி தான் நினைத்ததை சாதித்துள்ளார்.

 அதோடு மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயம், நெசவு ஆகியவற்றின் அழிவு, தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவற்றால் மக்களிடையே உருவாகியுள்ள வெறுப்பு, ஆத்திரம் ஆகியவற்றால் ஆளும் வர்க்கங்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

 இவ்விரு நெருக்கடிகளையும் திசைதிருப்பும் வழிமுறையை ராமதாஸ் கையாள்வதால் இது ஆளும் கும்பலின் ஆசியை மட்டுமல்ல ஆதரவையும் பெற்றுள்ளது. எனவே தற்போது ராமதாஸ் கையெடுத்துள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் விரிவாக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 எவரும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மேற்கண்ட நிகழ்வுகள் தொடரப்போவது தவிர்க்க வியலாத ஒன்றாக ஆகிவிட்ட பின்னர் இதனால் பாதிப்படையப்போகும் தாழ்த்தப்பட்ட மக்கள் தவிர்க்க வியலாமல் தம்மை தற்காத்துக்கொள்ள களத்தில் நிற்கப் போகிறார்கள். இதுதான் ஆதிக்க சாதிகளுக்கும் அத்தியாவசியத் தேவையாகும்.

 இது ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக தன்னை அறிவித்துக் கொள்ளும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகளுக்கும் தேவையாக உள்ளது.

 வன்னிய சாதி வெறிதான் பாமக அரசியலுக்கான அடித்தளம். இந்த சாதி வெறியை சார்ந்த செயல்பாடுகள் தான் தாழ்த்தப்பட்ட அமைப்புகளின் அரசியல் அடித்தளமாகும்.

 கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாமக தனது தலைமையில் வன்னிய சாதி வெறியை வெளிப்படையாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிக்காதது, விடுதலை சிறுத்தைகளின் அரசியல் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்துவிட்டது. எனவே இப்போதைய நிலை இவர்களுக்கும் ஆதாயம் தரக் கூடியதாகும். எப்போதுமே எந்த ஒரு தாழ்த்தப்பட்ட அமைப்பும் சாதி வெறிக்கு எதிரான, சாதி ஒழிப்புக்கான சுயமான, ஆக்கபூர்வ திட்டம் எதையும் கொண்டிருந்ததில்லை. இந்த அவலநிலை காரணமாக இந்த அமைப்புகளை ஆதிக்க சாதி வெறி அமைப்புகளின் நடவடிக்கைகள் மட்டுமே இயக்குகிறது.

 இதற்கு மிகச்சிறந்த உதாரணம் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புதான். இந்த அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானிப்பது பாமக தான்.

 80களில் இடஒதுக்கீடு என்ற பெயரில் பாமக, சேரிகளைக் கொளுத்தி, தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கிக் கொன்று, காயப்ப‌டுத்திய போது விடுதலைச் சிறுத்தைகள் அதற்கெதிராக செயலாற்றினர். பாமகவை எதிர்த்ததுடன், சில இடங்களில் திருப்பியும் தாக்கினர்.

 பின்னர் பாமக தனது தந்திரத்தை மாற்றிக் கொண்டு தமிழனவாதத்தின் அடிப்படையிலான தந்திரத்தைக் கையாண்டபோது அதையே தமது திட்டமாக திருமா பின்பற்றினார்.

 பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் மேல்மட்டத் தலைவர்கள் மத்தியில் மட்டுமே போலியான ஒப்புறவு நாடகம் நடைபெறுவதையும், இது இரு சாதி மக்களிடையே எவ்வித ஐக்கியத்தையும் உருவாக்கவில்லை, உருவாக்காது என்று ஜனநாயக வாதிகள் அனைவரும் சுட்டிக்காட்டியதையும் திருமா நிராகரித்து, தொடர்ந்து ராமதாசுக்கு வால்பிடித்தார்.

 இப்போது பாமக ராமதாஸ் ஆதிக்கசாதி கூட்டணித் தந்திரத்தை உருவாக்கி திருமாவை இப்போதும் தனக்கு வால்பிடிக்க வைத்துள்ளார். இந்நிலையில் பாமகவின் ஆதிக்கசாதி வெறியை எதிர்கொள்ள உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தோள் கொடுக்கவோ அவர்களுடன் கரம் கோர்க்கவோ, உதவவோ ஜனநாயக, புரட்சிகர சக்திகள் தமிழ்நாட்டில் உள்ளனவா என்பதை இனி பார்ப்போம்.

 ஆதிக்க சாதி வெறியை எதிர்த்த தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அவர்களோடு களத்தில் நிற்கவும் அமைப்பாக்கப்பட்ட ஜனநாயக சக்திகள் தமிழகத்தில் ஏறத்தாழ ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அமைப்பாக்கப்படாத தனிநபர்கள் தான் ஜனநாயக சத்திகளாக உள்ளனர். இவர்கள் அமைப்பாக்கப்படாததன் விளைவாக இவர்களின் ஆதரவு என்பது நடைமுறையற்றதாகவே உள்ளது. இவர்களால் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் ஆகியவற்றில் கட்டுரைகள், நேர்காணல் ஆகியவற்றின் மூலம் கருத்துரீதியாக மட்டுமே ஆதரவு வழங்க முடியும். எனவே இவைகளால் குறிப்பிடும்படியான பயன்கள் ஏதும் ஏற்படப் போவதில்லை. அடுத்து எஞ்சியிருப்பது புரட்சிகர அமைப்புகள் தான்.

 தமிழகத்தைப் பொருத்தவரை நக்சல்பரி புரட்சிகர அமைப்பு என்று தன்னை மகஇக குழும அமைப்புகள் கூறிக் கொள்கின்றன. தமிழகத்தில் இவைகள்தான் குறிப்பிட்ட அளவிற்கு அமைப்பாக செயல்படுகின்றன. குறிப்பிடும்படியான வேறு புரட்சிகர அமைப்புகளின், குழுக்களின் செயல்பாடுகள் ஏதுமில்லை.

 இப்படிப்பட்ட சூழலில் தான் தர்மபுரி தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்னிய சாதி வெறி தாக்குதலைக் கண்டித்து, பாமகவின் சாதி வெறியும், புரட்சிகர குழுக்களின் பிழைப்பு வாதமும் என்ற கட்டுரையை விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு கீற்று, விடுதலை ஆகிய இணைய தளங்களில் வெளியிட்டுள்ளார்.

dalith_colony_641

 அதில் ”பாமக வன்னியர்கள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மகஇக என கட்சி பேதம் இல்லாமல் ஒட்டுமொத்த வன்னியர்களும் இத்தாக்குதலில் கலந்து கொண்டு முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளனர்”, என்று மகஇக மீதும் ஒட்டுமொத்த நக்சல்பரி இயக்கங்கள் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 இக்குற்றச்சாட்டை மகஇகவின் இணைய தளமான வினவு மறுத்துள்ளதோடு அதற்கான ஆதாரங்கள் தருமாறு சவால்விட்டுள்ளது.

இந்த சவாலுக்கு பதிலளித்துள்ள வன்னி அரசு ”இது குறித்து நத்தம் சேரியைச் சேர்ந்த பொடா பழனிச்சாமி என்கிற தோழர் மற்றத் தோழர்களுடன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் புரட்சிகர இயக்கமான மஜஇக மாநிலச் செயலாளர் தமிழ்வாணன் அவர்களை சந்தித்து முறையிடுகிறார்கள். அவரோ தாக்குதல் நடத்துவது குறித்து எச்சரிகையும் செய்துவிட்டு விவசாய பிரச்சனை குறித்து அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் போய் தோழர் சித்தானந்தம் அவர்களை பாருங்கள், என்று நழுவிக் கொள்கிறார்.மஜஇக விலிருந்து (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) பிரிந்து மஜஇஅ (மக்கள் ஜனநாயக இளைஞர் அமைப்பு) என்கிற புதிய புரட்சிகர அமைப்பை நடத்தி வருகிறார் தோழர் சித்தானந்தம், இதே போல் மக்கள் யுத்தக் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பச்சியப்பன் அவர்களிடமும் முறையிடுகின்றனர். அவரும் சாக்குப்போக்கு சொல்லி கழன்று கொள்கிறார். நத்தம் சேரி தாக்குதலுக்கு தமைலமை தாங்கிய பாமகவை சேர்ந்த வி.சி மதியழகனின் உறவினர்கள்தான் இந்த சித்தானந்தமும், பச்சியப்பனும். இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வன்னியர் மக.இக.வைச் சேர்ந்தவர்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

 இதை மறுத்துள்ள வினவு, வன்னி அரசு குறிப்பிடும் அண்ணாநகர் என்பது முழுவதும் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி அங்கு வன்னியர்கள் யாரும் இல்லை; கிருஷ்ணன் என்பவரும் இல்லை; வன்னி அரசு பொய்மேல் பொய் சொல்வதாக கூறியுள்ளது. முதுபெரும் நக்சல்பரி இயக்கப் போராளியும், தற்போது விவிமுவில் செயல்படுபவருமான தோழர் ஆம்பள்ளி முனிராஜ் மூலம் வினவு வன்னி அரசுக்கு சவால் விட்டுள்ளது.

 மேலே கண்டவாறு வன்னி அரசுக்கும், வினவுக்கும் இடையே நடைபெற்றுள்ள காரசார விவாதங்களில் இருந்தும், நாங்கள் விசாரித்த வகையிலும் தாழ்த்தப்பட்டோர் மீதான நாயக்கன் கொட்டாய் வன்னிய சாதி வெறி தாக்குதலில் மகஇக அமைப்பிற்கும் அதன் குழும அமைப்பான விவமுவிற்கும் எந்தத்தொடர்பும் இல்லை.

ஏனென்றால் தர்மபுரி மாவட்டத்தில் மகஇக அமைப்பே இல்லை. இந்த மாவட்டத்தில் செயல்படும் அமைப்பான விவிமு தோழர்களில் 95% பிறப்பால் தாழ்த்தப்பட்ட தோழர்களே ஆவர். அதோடு இத்தோழர்கள் உணர்வுப்பூர்வமாகவே சாதி தீண்டாமைக்கு எதிராக போராடும் களப்போராளிகள்.

எனவே வன்னி அரசு, மகஇக அமைப்பு மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவரை மலம் தின்ன வைத்த ஆதிக்க சாதி வெறியர்களிடமும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை என்ற கிராமத்தில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை உயிரோடு எரித்துக் கொன்ற வன்னிய சாதி வெறியர்களிடமும் பேரம் பேசி தனது சொந்த சாதியின் நலனையே காட்டிக் கொடுத்த அப்பட்டமான பிழைப்புவாதிகளான விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் வன்னி அரசுகள், மகஇக மீது குற்றம் சாட்ட எந்த அருகதையும் இல்லாதவர்கள். இந்த லட்சணத்தில் அந்த அமைப்பின் மீது ஆதாரம் அற்ற பொய்க் குற்றச்சாட்டுகளை கூறுவது இவர்களுக்கு புதிதாக இழப்பு எதையுமே ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் இப்படியான பொய்க்குற்றச்சாட்டுகள் மகஇகவின் பிழைப்புவாதத்தை மூடி மறைக்கவும், அந்த அமைப்பின் மீது அனுதாபத்தை உருவாக்கவுமே பயன்படும்.

vinavu_300அதே நேரத்தில் மகஇக குழும அமைப்புகள் தமது பிழைப்புவாதத்திற்கு மார்க்சிய சித்தாந்தம், ஆதிக்க சாதிவெறி ஆகியவற்றைப் பயன்படுத்துவதை வன்னி அரசுகள் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவைகள் பலவீனமான வடிவத்தைக் கொண்டதல்ல. ஏனென்றால் இதை அந்த அமைப்புகளில் பல பத்தாண்டுகளாக செயல்படும் அதன் உறுப்பினர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மிக உயரிய நயவஞ்சக வடிவத்தைக் கொண்டதாகும்.

இவைகளை உரிய ஆதாரங்களுடன் நாங்கள் சூறாவளி இணையத்தில் அம்பலப்படுத்தியுள்ளோம். மகஇக குழுமத் தலைமையின் சீர்திருத்தவாதத்தை சமச்சீர்க் கல்வி விவகாரம், ராஜீவ் கொலைவழக்கு மூவர் தூக்கு விவகாரத்திலும், மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் சொத்துக்குவிப்பை நியாயப்படுத்திய விவகாரத்திலும், அதன் ஆதிக்க சாதி கண்ணோட்டத்தை, செயல்பாட்டை தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடும் போராட்டத்தை வன்னிய சாதியப் போராட்டமாக நடத்தியது, பள்ளி மாணவன் பாரத் படுகொலையை ஒரு சாதிக்குள் நடந்ததாக அறிவித்து ஒதுங்கிக் கொண்டது, சாதிக்கு ஏற்பத்தான் புத்தி இருக்கும் என்பதால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி தன்னை விட மேல்சாதிப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபரைக் கண்டிக்காமல் அவருக்கு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கொடுத்துள்ளது, சாதி மறுப்புத் தம்பதிகளுக்கு ஆலோசனை மட்டும் கொடுங்கள்; மேற்கொண்டு நேரடியாக உதவ வேண்டாம் என்று உத்தரவிட்டது ஆகியவற்றின் மூலம் வெளிப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளோம்.

 எமது மேற்கண்ட அம்பலப்படுத்துதல்களுக்கு மகஇக குழுமம் இதுவரை வாயே திறக்கவில்லை. அதற்கு மாறாக சென்னையில் உள்ள தனது கைத்தடி ஒன்றின் மூலம் கைப்பேசி வாயிலாக எமக்கு கொலை மிரட்டல் மட்டுமே விடுக்க முடிந்தது.

 பாமக அப்பட்டமான வன்னிய சாதி வெறியைக் கொண்டு பிழைப்பு நடத்தும் அமைப்பு என்பதும், விடுதலைச் சிறுத்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களால் திணிக்கப்படும் வன்கொடுமையைப் பயன்படுத்தி பிழைப்பு நடத்தும் அமைப்பு என்பதும் அனைவரும் அறிந்த வெளிப்படையான உண்மையாகும்.

 ஆனால் மகஇக குழுமத்தின் பிழைப்புவாதமோ அதிஉயர் நயவஞ்சக வடிவத்தைக் கொண்டதாகும். தனது பிழைப்புவாதத்திற்கு ஆதிக்க சாதி வெறியையும் பயன்படுத்துபவர்கள்தான் இவர்கள். இவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுவர்களில் மட்டுமே உதவ முடியும். தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் ஆதிக்க சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் நேரடியாக உதவ முடியாது. நடைமுறைப்படுத்த முடியாத ஆலோசனைகளை மட்டுமே சுவர்களின் மூலம் இவர்களால் தானமாக வழங்க முடியும். எனவே வன்னிய ஆதிக்க சாதி வெறித்தாக்குதலை எதிர்கொள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவவோ, அவர்களுடன் கரம் கோர்க்கவோ தமிழகத்தில் புரட்சிகர சக்திகளும் ஏதுமில்லை!

 ஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் தமது சொந்த பலத்தின் மூலம் மட்டுமே இப்போதைக்கு வன்னிய சாதிவெறித் தாக்குதலை எதிர்கொள்ள முடியும். இதன் காரணமாக பல்வேறு இழப்புகளை தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திப்பது என்பதும் தவிர்க்க வியலாத ஒன்றே ஆகும்!

(குறிப்பு: இக்கட்டுரையை எழுதியுள்ள நாங்கள், கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை மகஇக குழும அமைப்பில் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டவர்கள். கடந்த 10-ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அமைப்பின் தவறுகளுக்கு எதிராக தொடர்ந்து விடாப்பிடியாக போராடினோம். ஆனால் எந்த வகையிலும் தவறுகள் குறைந்தபாடில்லை. அதற்கு மாறாக அத்தவறுகள் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன. இனியும் இவர்களிடம் போராடிப் பயனில்லை என்பதால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறினோம். அன்றிலிருந்து அவர்களின் சமரச சீர்த்திருத்தவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் சூறாவளி இணையத்தின் வாயிலாக அம்பலப்படுத்தி வருகிறோம். எங்களது குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்களைக் கேட்டால், தருவதற்குத் தயாராகவே இருக்கிறோம்.)

தொடர்புடைய கட்டுரைகள்:

1. காயடிக்கும் கட்சி
     
2.
சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி

3 .சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1
 
4.
சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2

5 வினவின் ரசிகர்கள் யார்? தோழர் ரெட்மீரா அவர்களுக்கான எமது பதில்.

6. சமச்சீர்கல்வி முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -3

7. முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4

8. சமச்சீர்கல்வி: புஜ+புக+வினவு=கலவை சித்தாந்தம்

9. இன்னமும் இங்கதான் புடுங்கினுக்கிறாரா?

10. தவளை தன் வாயால் கெடும் ...!

11. அக்காவையும், தங்கச்சியையும் கட்டிக்கலாங்கிற, மகஇக காரன பார்த்தா கேளுங்க..
 
12.
ஆதிக்கச் சாதி கண்ணோட்டம்: பிடிபட்டது வினவு-ம.க.இ.க கும்பல்

- சூறாவளி. தொடர்புக்கு: 9842529188, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It