சாதிக் கலவரங்கள் ஏதோ சில உணர்ச்சி வசப்படுகின்றவர்களால் ஏற்படுவது, ஆத்திரத்தால் அறிவிழப்பவர்களின் உடனடிச் செயல் என்கிற மழுப்பல்கள் எல்லாம் பொய் என நிரூபித்து இருக்கிறது தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் கலவரம். இத்தகைய கலவரங்கள் சாதி ஆதிக்கத்திற்கான வன்முறை அரசியல்; அதிகாரம் படைத்தவர்களின் ஆயுத ஒடுக்குமுறை என்பதை நெற்றியில் அறைந்து, பறைசாற்றி உள்ளது தர்மபுரி.

இப்பிரச்சினைக்குரிய சாதி மறுப்புத் திருமணம் நடந்து 40 நாட்கள் தாண்டி விட்டது. 40 நாட்களும் இடைவிடாது மணப்பெண்ணின் வன்னிய சமூகம் ஊர்க்கூட்டங்களை தொடர்ந்து நடத்தி உள்ளது. பெண்ணின் தந்தையும், தாயும் ஊர்க் கூட்டங்களில் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இத்தனை அவமானங்களையும் தாங்கிக் கொண்ட பெண்ணின் தந்தை நாகராசன், தான் சார்ந்த சாதி வெறியர்களிடம் தனது மகளும், மகளின் காதல் கணவனும் மாட்டி விடக்கூடாது; மாட்டினால் கொன்று விடுவார்களே என்கிற கவலையோடு இருந்து இருக்கிறார். இதைத்தான் அவரது மனைவியும் தனது மகளிடம் தொலைபேசியில் பேசும்போது தெரிவித்து இருக்கிறார்.

dharmapuri_attack_644

இப்படியான பாசத்திற்குரிய தந்தை நாகராசன் 40 நாட்களுக்குப் பிறகு அவமானம் தாங்காமல் தற்கொலை செய்யத் துணிந்தது ஏன்? இதில் உண்மை என்ன என்பதைப் பேச அவரது துணைவியார் சுதந்திரமாக இல்லை; சாதி வெறி உறவினர்களின் பிடியில் உள்ளார்.

நாகராசன் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் நேரம் மாலை 4.00 மணி. அடுத்த ஒரு மணி நேரமான மாலை 5.00 மணிக்கெல்லாம் மணமகனின் ஊருக்குள் கலவரப்படை புகுந்துவிட்டது. இதற்கு முன் ஊருக்கு வரும் முக்கிய சாலைகள் இரண்டின் நடுவே பெரிய மரங்கள் வெட்டப்பட்டு, தடை ஏற்படுத்தப்பட்டு விட்டது.

அடுத்தடுத்த கிராமங்களில் மொத்தம் 268-க்கும் மேலான வீடுகள் தாக்கி நொறுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு குண்டுகள். கிட்டத்தட்ட 400 பெட்ரோல் குண்டுகள் தயாரித்து பத்திரமாக கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றிற்கான பெட்ரோல் பாட்டில்கள், திரிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திற்குள் தயாராகிவிட்டதா?

தாக்குதலில் கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 3ல் 2 பகுதியினர் ஊரைச் சுற்றி பாதுகாவலாகவும், வெளி உதவிகள் வரமுடியாத தடை அரண்களாகவும் இருந்துள்ளனர். இவர்களே மரத்தை அறுத்து தடை ஏற்படுத்தியவர்கள். 15 வயதிற்கு மேல் 35 வயதிற்குள்ளான இவ்வளவு எண்ணிக்கையினர் ஒரே வன்னிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சுற்றுமுற்றிலும் அனைத்து கிராமங்களில் இருந்தும் அணிதிரட்டப்பட்டுள்ளனர். இது கூட ஒரு மணிநேரத்தில் சாத்தியமில்லை.

கலவரம் நீண்ட கால அவகாசத்தில் திட்டமிடப்பட்டது என்பதை அதன் ஒவ்வொரு அசைவும் வெளிப்படுத்துகிறது. தாக்குதல் நடவடிக்கையில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி பருவத்தினரே ஈடுபட்டுள்ளனர். இது போராட்டங்களில் பெண்களை முன்னிறுத்தி தாக்குதலில் இருந்து தப்பிக்கும் தந்திரத்தை ஒத்ததாகும். அது போல் உயிருக்கு சேதாரம் விளைவிக்காமல் உடமைகளை கொள்ளையடிப்பது, எரிப்பது, அழிப்பது போன்ற சூறையாடல்கள் மட்டுமே துல்லியமாக நடத்தப்பட்டுள்ளன. இது உயிரிழப்பால் வரும் வழக்கு, சிறை, தண்டனை போன்ற நெடுங்கால நெருக்கடிகளைத் தவிர்ப்பதாகும். நெடுங்கால நெருக்கடிகள் என்பது சம்பந்தப்பட்டவரை தொழில், வேலை முதலான பொருள் இழப்பு, மனஉளைச்சல், விரக்தி, சோர்வுக்கு உட்படுத்தும். இது இச்செயலுக்கு தூண்டிய அமைப்புக்கு அணிதிரட்டும் வாய்ப்பைப் பறிப்பதோடு, அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தும். ஆக இவ்வகை திட்டமிடல்கள் அனைத்தும் ஒரே அரசியல் கட்சியின் பின்னணியைத் தெரியப்படுத்துகிறது.

இவ்வாறு ஒரு வன்னிய ஓட்டுக்கட்சியான பாமக திட்டமிட்டு வழிநடத்த, பல்வேறு கிராமத்து வன்னிய இளைஞர்கள் களமிறங்க நடந்த கலவரம் இது. மாறாக பெண்ணின் தந்தை இறந்ததால் நேர்ந்த ஒரு மணிநேர உணர்ச்சி வசப்படலால் நடந்தது அல்ல. அதே போல் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர் இளவரசனும், ஆதிக்கச் சாதியைச் சார்ந்த திவ்யாவும் செய்து கொண்ட சாதி மறுப்புத் திருமணத்தால் மட்டுமே ஏற்பட்ட கலவரமும் அல்ல.

இது அடக்கப்பட்ட சாதி ஆதிக்கத்தை, அதனால் இழந்த சாதி அதிகாரத்தை மீட்டு நிலைநிறுத்துவதற்கான நீண்ட நாள் காத்திருப்பு. அதற்காக திட்டமிட்டு, நிறைவேற்றப்பட்ட வன்முறை வெறியாட்டம்.

கலவரத்தால் சூறையாடப்பட்ட நத்தம் கிராமம் எல்லோரும் அடையாளப்படுத்துவதைப்போல் தலித் கிராமமல்ல; அது தமிழகப் புரட்சியின் தலைநகரம். ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் யுத்தக்குழுவும், அதன் தொடர்ச்சியான மாவோயிஸ்ட் கட்சியுமே அங்கு மக்களின் பிரதிநிதி. தோழர் பாலனின் காலம் முதல் 2004 வரை கட்சி ஏற்ற இறக்கத்துடன் அங்கு செல்வாக்கு செலுத்தி வந்தது.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஊடாக கட்சி, கிராமம் முழுவதையும் ஒழுங்கமைத்தது. கட்சியே கிராமமாக, கிராமமே கட்சியாக பரிமாணித்தது. தங்கள் கிராமத்தின் மீதான சாதிய அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்தியதோடு, பிற கிராமங்களில் நடக்கும் அநீதிகளையும், நத்தம் கிராம மக்கள் தட்டிக் கேட்டனர்; தடுத்து நிறுத்தினர்.

அருகாமையில் ஒரு வன்னிய கிராமம். கிராமத்தின் பெரும்பான்மையான ஆண்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டனர். நக்சல்பாரி கட்சியாக இருந்த நத்தம், திருட்டில் ஈடுபடும் கிராமத்தினரை அறிவுறுத்தியது; எச்சரித்தது; கேட்காத நிலையில் தண்டித்தது. திருட்டில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை கழுத்தில் 'திருடன்' என்ற அறிவிப்புப் பலகை மாட்டி ஊரைச் சுற்றிவரச் செய்தது. மொத்தத்தில் நத்தம், சுற்றியுள்ள கிராமங்களை ஆட்சி செய்தது.

புரட்சியாளர்களாய், சமூகத்தின் புதிய மனிதர்களாய் நத்தம் கிராமத்தின் மக்கள் இருந்தனர். ஆனால் ஆதிக்க சாதிகளுக்கு அவர்கள் தலித்துகளாகவே தெரிந்தார்கள். புதுமைகள் மலருவதை பழமைவாதிகள் விரும்பவில்லை. வன்னியர் ஆதிக்க சக்திகளால் அதைப் பொறுக்கவே முடியவில்லை. ஆனாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் ஆயுதத்துடன் கட்சி இருந்தது. நத்தம் கிராமமும் ஆயுதபாணிகளைக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் 1990க்குப் பிந்தையப் பொருளாதார சீர்திருத்தம் தமிழகத்தை திருப்பிப் போட்டது. பொருளாதார சீர்திருத்தத்தின் துணை விளைவான ரியல் எஸ்டேட் கொள்ளைத் தொழிலும், கந்து வட்டிக் கொள்ளையும் நத்தம் கிராமத்தை ஆக்கிரமித்தது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோருக்கென வளர்ச்சி அடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆளும் வர்க்கக் கூட்டாளியாகியது. நாடெங்கும் பரவிய அதன் இடைத்தரகர்கள் நத்தத்திலும் தோன்றினர். அரசியல் பேரங்களுக்கு நத்தமும் பலியாகியது.

தமிழகத்தின் பொருளாதாரச் சீர்திருத்தமும், அதனால் ஏற்படும் மாற்றங்களும் அகில இந்தியக் கட்சியான‌ நத்தம் மக்களின் கட்சிக்குப் புரியவே இல்லை. அதன் வேலை முறையால் கட்சி புதிய இடங்களில் வளரவும் இல்லை; இருக்கும் இடத்தில் நிலைக்கவும் இல்லை. இந்நிலையில் ஊத்தங்கரையில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு கட்சியினர் கைதானார்கள். இதில் நத்தத்தில் இருந்த கட்சியினரும் பாதிக்கப்பட்டனர். ஊத்தங்கரை கைதுக்குப் பின்னால் கட்சியில் ஏற்பட்ட பிளவு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. மெல்ல மெல்ல கட்சி நத்தத்திலும் காணாமல் போனது.

ஒரு ரகசிய கட்சியின் பலவீனத்தை வெளியில் இருப்பவர்களால் உணர முடியவில்லை. அதனால் வன்னிய ஆதிக்கர்கள் வாளாட்டத் தொடங்கவில்லை. ஆனால் அண்மைக் காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் அவர்களுக்கு நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டன.

வட்டித் தொழிலும், ரியல் எஸ்டேட் மோசடியுமாக ஒரு சமூக விரோதி நத்தத்தில் தலையெடுத்தான். அவனது தவறான நடவடிக்கைகளுக்காக மக்கள் அவனை தண்டித்து கிராமத்தில் இருந்து அடித்து விரட்டினர். விரட்டப்பட்டவன் ஆதிக்க சக்திகளுக்கு நிலைமையை படம்போட்டுக் காட்டி விட்டான். ஆதிக்க சக்திகளுக்கு துணிவு வந்து விட்டது.

இழந்த தங்களது அதிகாரத்தை நிலைநாட்டுவதோடு, இத்தனை நாள் தங்களது ஆதிக்கத்தை தடுத்ததற்கும், தகாத செயலில் தாங்கள் ஈடுபட்டபோது தண்டித்ததற்கும் பழிவாங்கத் துடித்தனர். தக்க தருணத்திற்காக எதிர்பார்த்துக் கிடந்தனர். இளவரசனும் - திவ்யாவும் காதல் மணம் புரிந்தது, அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாறி விட்டது. திட்டமிட்டு பெருங்கலவரத்தை நடத்தி முடித்துள்ளனர்.

கட்சியை இழந்ததற்காக நத்தம் கிராம மக்கள் கண்ணீர் விடுகின்றனர். கலவரத்தால் அவர்கள் இழந்த பொருட்களின் மதிப்பும் அதிகமாகும். குருவி சேர்த்தது போல் சேர்த்த செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டது சோகம் தான். அந்த இழப்பை விட, கட்சியை இழந்ததை அவர்கள் பேரிழப்பாகக் கருதுகிறார்கள். தாங்கள் மீண்டும் அடிமைகளாக்கப்பட்டு விட்டோம் என்பதை அவர்களால் தாங்கவே முடியவில்லை. தங்களை மனிதனாக நிமிர்த்தி, நிறுத்திய கட்சியை இன்று ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறார்கள்.

appu_balan_statues_640

தோழர்கள் அப்பு, பாலன் நினைவுச் சின்னத்தில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு வாசகங்கள்:

நக்சல்பாரிகளே தேசபக்தர்கள்!
தமிழக அரசினால்
படுகொலை
செய்யப்பட்ட
புரட்சித் தியாகிகள்
தோழர் அப்பு -தோழர் பாலன் சிலைகள்

ஆனால் மக்களை இழந்து விட்டதாக கட்சி உணருகிறதா எனத் தெரியவில்லை. மக்களின் வேதனையை அவர்களின் கண்ணீரில் உணரலாம். கட்சியின் நிலையை அவர்களின் நிலைபாட்டில் மட்டுமே உணர முடியும்.

மாவோயிஸ்ட் கட்சி மட்டுமல்ல. தமிழகத்தின் புரட்சிகர கட்சிகள் அனைத்துமே எந்த பிரச்சனைகளில் இருந்தும் மக்களைப் பாதுகாக்கிற நிலையில் இல்லை. அதுவும் சாதிய சிக்கலை கையாள முடிவதில்லை.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராட, ஒடுக்கப்பட்ட மக்களிடம் மட்டுமே கட்சி கட்டினால் போதாது. அதற்கு ஆதிக்க சாதியில் உள்ள மக்களையும் அணிதிரட்ட வேண்டும். அப்படி அணி திரட்டப்படுகிற உயர்சாதி மக்கள் மூலம் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அவர்களிடையே விரல் விட்டு எண்ணுகிற அளவிலான தோழர்கள் என்கிற நிலையைத் தாண்டி குறைந்தபட்ச அமைப்பு பலம் பெற வேண்டும். இந்த நிலையில் தான் சாதிய வன்முறைகளை நிகழ்த்த ஆதிக்க சக்திகள் துணிகிறபோது அவர்களின் சொந்த சாதியில் உள்ள நமது அணிகள் மூலம் தடை ஏற்படுத்த முடியும். இப்படி இல்லாத நிலையில் சாதிக் கலவரங்கள் நடப்பதும், அதன் பிறகு என்ன செய்வதெனத் தெரியாமல் கட்சிகள் திகைப்பதுமான காட்சிகள் நத்தத்திலும் நடந்தது.

தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நாகராசுவின் உடலை வைத்துக் கொண்டுதான் கலவரம் நடத்தப்பட்டது. அதே உடலை மருத்துவப் பரிசோதனை முடித்து, அரசு கொடுக்கும்போது வாங்க முடியாதென மறுத்தனர் ஆதிக்கவாதிகள். அதன் மூலம் பதட்டம் நீடித்துக் கொண்டேயிருந்தது. சில இயக்கங்களின் பொறுப்பாளர்கள் அப்பகுதியின் மண்ணின் மைந்தர்கள். கூடுதலாக ஆதிக்க சாதி மக்களின் சமூக உறவினர். இவர்களால் ஆதிக்க சாதியினர் எவர் ஒருவரிடமும் பேச முடியவில்லை. நிலைமையை சீராக்க முடியவில்லை. இவர்கள் தங்கள் இயலாமையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்ற இயக்கத்தவர்களாலும் எதிர்த்தரப்பு மக்கள் எவரையும் சந்திக்க முடியவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் சட்டத்தின் மூலமே நிறைவேற்றுகிற‌ பணியில் இருந்தனர். ஓரிருவர் இருதரப்பு மக்கள் மூலமாக பிரச்சனையைத் தீர்ப்பதுதான் சரி என்றும், தற்போது ஆதிக்க சாதியில் உள்ள சனநாயக சக்திகள் யாரையாவது சந்திக்க முடியுமா எனவும் ஆசைப்பட்டனர். அதன் மூலம் உடலை வாங்கி அடக்கம் செய்யவும், பதட்டத்தைத் தணிக்கவும் விரும்பினர். சொந்த பலமில்லாத அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இவை எல்லாம் இயக்கங்களுக்கு உணர்த்துவது என்னவெனில் சாதியச் சிக்கலை கையாள்வதற்கு குறிப்பிட்ட பகுதியானாலும் சரி, நாடு முழுவதுமானலும் சரி அங்குள்ள அனைத்து மக்களிடமும் இயக்கம் செல்வாக்கு பெற்றிருக்க வேண்டும். அதே போல் சாதிக் கலவரங்களை தடுக்க வேண்டும் என்றால் ஆதிக்க‌சாதி மக்களை அணிதிரட்டி, சாதி எதிர்ப்புப் போரட்டங்களை நடத்த வேண்டும். இதை இயக்கங்கள் உணர்ந்தால் மக்களிடம் செல்வாக்கு பெறலாம்.

இயக்கங்களை விட அரசு தெளிவாக உள்ளது. அரசின் அரசியல் எவ்வளவு கூர்மை என்பதை நத்தம் நமக்கு உணர்த்தியது.

கலவரம் நடந்த நாய்க்கன் கொட்டாய் பகுதி மட்டுமல்ல, கலவரத்தால் பாதிக்கப்பட்ட நத்தம் கிராமமும் அல்ல, ஒட்டு மொத்த தருமபுரி மாவட்டம் முழுவதும் அரசின் கண்காணிப்பில் உள்ளது; உளவுத்துறையின் ஆதிக்கத்தின் கீழ்தான் உள்ளது. நீண்ட காலம் திட்டமிடப்பட்ட இக்கலவரம் அரசுக்கு முன்பே தெரியும். தெரிந்தும் இதை நடக்கட்டும் என விட்டுவிட்டது. இதன் மூலம் நக்சல்பாரிகளாக இருந்த நத்தம் கிராமத்து மக்களை அச்சத்தில் மூழ்கடிக்க நினைத்தது. எனவே கலவரம் முடியும் வரை அமைதியாக இருந்தது.

காரியம் முடிந்ததும் காவல்துறை குவிந்தது. கலவரத்தை நடத்தியவர்களில் சிலர் கைது செய்யப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் உடனடியாக அளிக்கப்படுகிறது. சட்டமும், காவலும் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் என அதிகாரிகள் மக்களிடம் உரையாற்றுகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பதில் தாக்குதல் நடத்தவோ, அரசுக்கு எதிராக போகவோ (இது புரட்சிகர இயக்கங்களில் சேரக் கூடாதென்ற பொருளில்) கூடாது என அன்பாக எச்சரிக்கப்படுகின்றனர்.

காவல்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் வன்னிய மக்களிடம் எதிர்நிலையை உருவாக்கினால், அதை சரி செய்வதற்கு அரசுக்கு அவகாசம் இருக்கிறது. அது தேவையான நேரத்தில் சில அதிகாரிகளின் இடமாற்றத்தைக் கொண்டு சாதித்து விட முடியும். ஆக சாதிக் கலவரங்கள் தடுக்க முடியாதது என்கிற நிலையையும், அதனால் ஒடுக்கப்பட்ட மக்கள் அடங்கி, ஒடுங்கித்தான் போக வேண்டும் என்கிற நிலையையும், பாதிக்கப்பட்டாலும் அரசுதான் பாதுகாவலன் என்கிற நிலையையும், ஆகவே அரசு எதிர்ப்பு-புரட்சி எல்லாம் கூடாது என்கிற நிலையையும் அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சாதி ஆதிக்கத்துக்கும் - சாதி ஒழிப்புக்குமான போராட்டத்தில் நாய்க்கன் கொட்டாய் பகுதிக்கு பல சிறப்பு நிலைமைகள் இருப்பதை நாம் உணர முடிகிறது. ஆனால் இந்த சிக்கல் நாடு தழுவியது. இனி இது தமிழகம் எங்கும் நிகழக்கூடும். அப்படி நிகழ வேண்டும் என்றே கொடிய எண்ணத்தை ஆதிக்க சாதி அமைப்புகள் மாநாடுகள் நடத்தி அறைகூவல் விடுகின்றன.

மதுரை மேலூரில் தேவர் பேரவை, கவுண்டர் பேரவை, வன்னியர் பேரவை என ஆதிக்க சாதிகள் அனைத்தும் கூடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை எதிர்த்தும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றின. இதை கோவையில் கொங்கு முன்னேற்றக் கழக மாநாடும் பின்பற்றியது. இங்கே சாதி மறுப்புத் திருமணம் புரிகிறவர்களைக் கொல்ல வேண்டுமென முழக்கங்கப்பட்டது. இதையே தஞ்சை செங்குட்டுவ வாண்டையார் என்ற சாதியத் தலைவனும் பத்திரிக்கையில் பகிரங்கமாக அறிவிக்கிறார். வன்னிய சாதியின் அனைத்துப் பிரிவு அமைப்புகளும் தீர்மானமாக நிறைவேற்றுகின்றன.

ஆக சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராகப் புனிதப் போர் நடத்தப் போவதாகவும், கௌரவக் கொலைகள் செய்வது தங்கள் சமூக கடமை எனவும் சாதி ஆதிக்க சக்திகள் அறிவிக்கின்றன. இன்று நத்தம், நாளை தமிழகத்தின் எந்த மூலையில் வேண்டுமானலும் என ஆதிக்க சாதியினரின் வெறியாட்டம் தொடரும்.

காரணம், பெற்றோர் செய்து வைக்கும் கட்டாயத் திருமணங்கள், திருமணத்துக்கான இயல்பான தேர்வு உரிமைக்கு எதிரானது. மனதுக்கேற்ற, உடலுக்கேற்ற, படிப்புக்கேற்ற, வாழ்க்கைக் கேற்ற என்கிற தகுதிகளை கட்டாயத் திருமணங்கள் வழங்கவில்லை. இன்றைய சமூக நிலைமைகள் ஆதிக்க சாதிகளின் பொருளாதார வளர்ச்சியை கூடுதலாக்கியுள்ளது. இதன் காரணமாக ஆதிக்க சாதிகளின் ஆண்கள் பள்ளிப் படிப்பை முடித்ததும் தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பெண்களை கல்லூரி, மேல் படிப்பு எனப் படிக்க வைக்கிறார்கள். எனவே ஆதிக்க சாதிகளில் அதிகமாகப் படித்தப் பெண்களும்- குறைந்த படிப்பு ஆண்களுமாக இளவயதினர் உள்ளனர். சாதியிலும், பணத்திலும் சமமானவர்கள் என்று இவர்களிடையே கட்டாயத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது. இதற்கு எதிராக தனக்குத் தகுதியானவரை ஒரு ஆணோ, பெண்ணோ தேர்வு செய்ய முனைவது இனி அதிகரிக்கத்தான் செய்யும்.

இது போலவே இன்றைய உலகமயமாக்கலும், உடன் விளைவான நகரமயமாக்கலும் கூட சுயத் தேர்வு திருமணங்களை – காதல் திருமணங்களையே முன்னிலைப்படுத்தும். பெரு நகரங்களின் கட்டுமானத் தொழில், பஞ்சாலை, ஆயத்த ஆடை நிறுவனங்கள், பெரு வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு துறைகளும் ஆண்கள், பெண்கள், படித்தவர், படிக்காதவர் என அனைவரையும் உள்வாங்குகிறது. ஒரு காலத்தில் படித்தவர்கள் தான் பட்டணம் போவார்கள் என்ற நிலைமாறி குடும்பம், குடும்பமாக கிராமங்களில் இருந்து நகரங்களில் குடியேறுவது அதிகரிக்கிறது. இது அனைத்து சாதியினரும் நெருங்கி - இணக்கமாக வாழும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. எனவே சாதிய கட்டாயத் திருமணங்களுக்கு மாறான சுயத்தேர்வு – காதல் திருமணங்கள் அதிகரிக்கும். இதுவே இயல்பானதும், முற்போக்கானதுமாகும்.

பழைய முறைகளை மீறுவதற்கும், மாற்றுவதற்கும் துணிச்சல் மிக்க முன்மாதிரிகள் எல்லாவற்றுக்கும் தேவைப்படும். அது காதல் மணம் புரிவோருக்கும் தேவைப்படும். அப்படி முன்மாதிரியாக இருக்கிற கலகப் பிரிவினரும் இன்று அதிகரித்துள்ளனர்.

dharmapuri_attack_645

அடிதடிக்கும் அஞ்சாத, சாதி-சமூக கட்டுப்பாட்டுக்குப் பணியாத, போலியான மண வாழ்க்கையை மதிக்காத கலகக்காரர்களையும் நகரமயமாக்கல் அதிகரிக்கச் செய்துள்ளது. கட்டுமானத் துறைக்கு தேவையான செங்கல் சூளைகளில், கல் குவாரிகளில், ஹாலோ ப்ளாக் நிறுவனங்களில் என இம்மக்களின் கூட்டம் கூடி வருகிறது. கோவை மாவட்டத்தில் தடாகம் முதல் ஆனைகட்டி வரையிலான 10 கி.மீ. தொடர்ச்சியான நிலப்பரப்பில் அமைந்துள்ள செங்கல் சூளைகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பணிபுரிகிறர்கள். தாலி, சாதி, மதம் என்ற எந்த பிற்போக்கையும் கருத்தில் கொள்ளாத இக்கலகக்காரார்களுக்கு ஒரு காலத்தில் திரையரங்குகள், உணவகங்கள், கொத்தடிமை தொழில்முறைகள் என குறுகிய வாய்ப்பே இருந்தது. இன்று இவர்களுக்கான சமூக வாய்ப்புகள் விரிவாகியுள்ளது. இவர்களிடம் சட்டம்-ஒழுங்கு எனும் அடக்குமுறைகள் கூட எளிதாக எடுபடாது. இவ‌ர்க‌ள் இய‌ல்பாக‌ வேற்று சாதி, வேற்று ம‌த‌த்த‌வ‌ரை ம‌ண‌ம் செய்துகொள்கிறார்கள்; ஒத்துவ‌ராத‌ ம‌ண‌வாழ்க்கையைத் துணிச்ச‌லாக‌த் தூக்கி வீசுகிறார்கள்; திரும‌ண‌ம் தொட‌ர்பாக‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைத்திருக்கும் அனைத்து விதிக‌ளையும் உடைத்தெறிகிறார்க‌ள்.

போலி வாழ்க்கை முறையை உடைக்கும் இவர்களின் துணிச்சல்தான் மற்றவர்களுக்கு முன்மாதிரி. அதே நேரத்தில் சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் படித்த – நாகரீக இளைஞர்கள் மிக முக்கியமான ஆதரவாகும். இந்த வாய்ப்புகள் இன்று பெருகியுள்ளன. எனவே சாதிய சமூகம், காதல் மூலமாக தொடர் கலகத்தை சந்திப்பது தவிர்க்க முடியாதது.

கூடவே சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் வன்முறையாளர்களுக்கும் தொடர் வாய்ப்பாக மாறும். காரணம் சாதி மறுப்புத் திருமணங்கள் ஆதிக்க சாதிகளின் சொத்தையும் பலவீனப்படுத்துகின்றன.

பெண்களின் நீண்ட காலப் போராட்டத்தின் மூலமாக கிடைத்த சொத்துரிமையும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கான சட்ட உரிமையும் ஆதிக்க சாதியின் நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்க மேல் தட்டுப் பிரிவினரின் சொத்தைப் பலவீனப்படுத்துகிறது. ஒரு மேல் சாதிப் பெண், சாதிமறுப்புத் திருமணம் புரிந்து ஒடுக்கப்பட்ட மணமகனோடு செல்லும் போது தனது சொத்தையும் பிரித்துக் கொண்டுப் போகும் சாத்தியம் இருப்பதால், இது மேல் சாதிப் பெண்ணின் குடும்ப ஆண்களை அச்சுறுத்துகிறது.

குடும்பச் சொத்து என்கிற போர்வையில், கார், பைக், கழுத்துச் சங்கிலி, கை வளையம், கடை, வியாபாரம் என சலுகை பெற்றுக் கொண்டிருக்கிற இளைஞர்களின் வெட்டி வாழ்க்கைமுறை கேள்விக்குள்ளாகிறது. இவர்களின் பொருளாதார வகையிலான கொடுக்கல் - வாங்கல் தடைப்படுகிறது. சாதி தாண்டிய கொடுக்கல் - வாங்கல் இவர்களுக்கு இன்னும் சாத்தியப்படவில்லை. என்னதான் ஒரே சாதியாக இருந்தாலும் கொடுக்கல் - வாங்கலுக்கு ஒருவரின் பொருளாதாரப் பின்புலமே நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. இந்நிலையில் சாதிமறுப்புத் திருமணத்தின் மூலம் ஒரு பெண் சொத்தைப் பிரித்துக் கொண்டுப் போகும் வாய்ப்பிருப்பதை, அப்பெண்ணின் குடும்பத்து ஆண்களால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. குறிப்பாக உடன் பிறந்தவர்கள், வீட்டின் மூத்த மாப்பிள்ளைகள், பங்காளிகள் என்ற இளவட்டங்களால் தாங்க முடிவதில்லை. இவர்களே எளிதாக கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ள். என‌வே இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் குடும்ப‌ப் பெண்க‌ள் சாதிம‌றுப்புத் திரும‌ண‌ம் செய்வ‌தை அனும‌திப்ப‌தே இல்லை.

இவர்கள்தான் சாதி ஆதிக்க சக்திகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இயல்பான பின்புலமாக அமைகிறார்கள். ஆதிக்கவாதிகளும், அரசியல்வாதிகளும் இவர்களை நன்கு பயன்படுத்துகின்றனர். பணபலமும், அதிகாரப் பலமும் கூட்டு சேர்ந்து அப்பாவி - ஏழை மக்களை ஆயுதங்களாக்குகின்றன.

எனவே சாதி மறுப்பு சுயத்தேர்வு திருமணங்கள் தவிர்க்க முடியாதது என்பதும், அது சமூக மாற்றத்தைக் கோருகிறது என்பதும் உண்மையே. அதே நேரத்தில் இத்திருமணங்கள் சாதி ஆதிக்க சக்திகளின் வன்முறை வெறியாட்டத்துக்கு சாதகமாக மாற்றப்படுகிறது என்பதும் உண்மையே.

இதைத் தடுப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்களிடம் மட்டுமே அமைப்பு கட்டி, புரட்சி பேசுவது போதாது. ஆதிக்க சாதி மக்களிடமும் அமைப்பு பலம் பெற வேண்டும். அம்மக்களிடம் சாதிய பிற்போக்குத் தனங்களுக்கும், வெறியாட்டத்துக்கும் எதிரான போராட்டங்களை கட்டவிழ்த்து விட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களிடமும், ஒடுக்குகிற பிரிவின் உழைக்கும் மக்களிடமும் ஒற்றுமைக்கான தளங்களை உருவாக்க வேண்டும். இதைத்தான் சாதியக் கலவரங்களின் படிப்பினை, புரட்சிகர சனநாயக இயக்கங்களுக்கு கடமையாகச் சொல்கிறது. மாறாக சட்ட பாதுகாப்புப் பணிகளை செய்து கொடுப்பதும், உண்மையறியும் சம்பிரதாய நடவடிக்கைகளை மேற்கொள்வதும், மீண்டும், மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் மட்டுமே அமைப்பு கட்ட முயற்சிப்பதுமான வேலைமுறைகள் மட்டும் எதையும் மாற்றிவிடப் போவதில்லை என்பதை வலியுறுத்துகிறது.

- குணா, தேசிய முன்னணி இதழ் குழு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It