Sunara_Pandian_1

”இடுக்கண் களைவதாம் நட்பு” என்று எழுதி வைத்த திருவள்ளுவர் அது தமிழ்ச் சினிமா வணிக தாரக மந்திரமாக மாறும் என்று கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் பாவம். ஆனால், எவ்வளவு உயரிய அறமாக இருந்தாலும் அதை விற்பனைச் சரக்காக மாற்றும் வல்லமை தமக்கு உண்டு என்பதைத் தமிழ்ச் சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். திருவள்ளுவரை திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவாக்கி கடுக்கனையும் களவாடிச் சென்றிருக்கிறார்கள். அவ்வளவு திறமைசாலிகள்.

சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் களவாடப்பட்ட ஒரு கடுக்கன் வேண்டி மட்டுமே இங்கே ”பிராது” கொடுக்க விரும்புகிறேன். நீதி கிடைக்குமா மை லார்ட்? பார்ப்போம்.

மிக வெளிப்படையாக தேவர் சாதி பெருமிதம் பேசும் படம். பலரும் அதைச் சுட்டிக் காட்டி விட்டார்கள். முதல் ஃப்ரேமில் இருந்து கடைசி ஃப்ரேம் வரையில் தேவர் சாதிப் பெருமிதம் பேசும் படம். சந்தேகமில்லை. அதன் பொருட்டே கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டிய படம். சந்தேகமில்லை. ஆனால், இத்திரைப்படம் நீதி குறித்துத் தரும் சித்திரம் என்ன?

நட்பு என்ற கடுக்காயைக் கொடுத்து, நீதி என்ற விலைமதிப்பற்ற கடுக்கன்னைக் (காதோடு சேர்த்து அறுத்து) களவாடிச் சென்றிருக்கிறது திரைப்படம். அது குறித்து கவனத்தைக் குவிப்பது மட்டுமே இவ்விமர்சனத்தின் நோக்கம்.

நீதி குறித்த மையமான கருத்தாக்கங்கள் இரண்டு: நியாயமாக நடந்து கொள்ளல் (Justice as fairness), பழி வாங்கல் (Justice as revenge). இவற்றின் நடைமுறை சாத்தியமான வடிவங்களாக முறையே மறுசீரமைத்தல் (restorative justice) இணையான தண்டனை (retributive justice) என்பவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழ்ச் சினிமாவைப் பொருத்தவரையில், கதாநாயக சுய உருவப் பெருக்கத்திற்கு பெருத்த அளவில் பொருந்தி இருந்தது நீதி என்பது பழிவாங்குதல் என்ற கருத்தாக்கமே. கதாநாயகன், சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டாலும் சரி, கோர்ட் சீன்களை வைத்து நீளமான வசனங்களைப் பேசினாலும் சரி, பழிவாங்கும் படலம் இறுதியில் நடந்தேறிவிடும்.

இதில் பாதிப்பிற்கு உள்ளானவர் கதாநாயகன் தரப்பாக, ஒரு குடும்பத்தின் (தனி மனிதர்களின்) இழப்பாக, அதற்கு நியாயம் தேடும் முயற்சியாக நீதியின் சித்தரிப்பு அமைந்திருக்கும். பாதிப்பிற்கு உள்ளான அந்தத் தனிமனிதர்களின் தரப்பில் கதாநாயகன் சட்டத்தின் (போலீஸ், நீதிமன்றம்) வழி முயற்சி செய்வார். அந்த முயற்சிகள் தோல்வி அடைந்தபின், தானே நேரடியாகக் களத்தில் இறங்கி பழி வாங்கிவிடுவார்.

தமிழ்ச் சினிமாவின் இந்த வழமையில், நீதியை நிலைநாட்டுவதில் முக்கிய கருவிகளாக இருக்கும் அரசின் அங்கங்கள், ஒவ்வொரு படியிலும் நுனியிலும் ஊழலால் பீடிக்கப்பட்டு செயலற்றுப் போனவையாக, அதனால் நீதியை வழங்க முடியாதவையாக சித்தரிக்கப் பெறும். என்றாலும், நீதி என்பது பழிவாங்குதல், அந்தப் பழிவாங்குதலை இடையீடு செய்து நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசின் அங்கங்களுக்கே உரியது என்ற இரண்டு கருத்தாக்கங்கள் உறைந்திருக்கும்.

சுந்தர பாண்டியன் இந்த இரண்டு கருத்தாக்கங்களில் இருந்தும் விலகிச் சென்றிருக்கிறது என்பது கவனத்திற்குக் கொண்டு வரப்படவேண்டிய புள்ளி.

ஆரம்பக் காட்சிகளிலேயே, பொட்டல் காடாகப் படர்ந்திருக்கும் கள்ளிக்காடே நீதியின் களன் என்பது நிலைநாட்டப்பட்டு விடுகிறது. வழமையான நீதிபரிபாலன அங்கங்களான போலிசோ நீதிமன்றமோ எட்டிப் பார்க்கவே முடியாத, மயான அமைதி படர்ந்திருக்கும், குரூரக் கொலை மட்டுமே தீர்ப்பாக வழங்கப்படும் களன்.

ஆதிக்க சாதிப் பெருமிதம் பேசும் திரைப்படங்களில் இருந்து சுந்தர பாண்டியன் நகர்ந்திருக்கும் மற்றுமொரு முக்கிய புள்ளி இது. பதினெட்டு பட்டி “பெரிய தலைக்கட்டுகளும்” கூடும் பஞ்சாயத்து, ஆலமரம், சொம்பு அதில் வழங்கப்படும் நீதி என்ற களனில் இருந்து கள்ளிக்காட்டிற்கு நீதிபரிபாலனக் களனை நகர்த்திச் சென்றிருக்கிறது.

திரைப்படத்தில் இரண்டு கொலைகள் நிகழ்கின்றன. ஒரு கொலைச் சதி இடம் பெறுகிறது.

முதல் கொலை திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே இடம் பெற்று விடுகிறது. தேவர் சாதியினரின் பெருமையை விவரித்துவிட்டு, அவர்களது வழமையான வாழ்வில் குறுக்கீடு செய்யும் பிறர் (பிற சாதியினர்- அவர்கள் ஆதிக்க சாதியினராக இருந்தாலும் சரி) எவராயினும் அவர்களுக்கு வழங்கப்படும் தீர்ப்பு குரூரக் கொலைத் தண்டனை என்பதைக் காட்டிவிட்டே படம் கதைக் களனிற்குள் நுழைகிறது. இங்கே தமது சாதியின் வழமையான வாழ்வில் குறுக்கீடு செய்வோருக்கு வழங்கப்படும் நீதி என்பது குரூரமான பழிவாங்குதல் என்பதை எந்தத் தயக்கமும் இல்லாமல் கூறிவிடுகிறது திரைப்படம்.

திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளும் அதே கள்ளிக்காட்டில். ஆரம்பக் காட்சிகளில் குரூரமாகக் கொலை செய்த இருவர் மீண்டும் வருகின்றனர். அவர்களை நோக்கி நீதியின் எந்த வடிவமும் எழுப்பபட்டிருக்காமல் முதல் காட்சியில் வரும் அதே குரூரத்தோடு திரையில் தோன்றுகின்றனர்.

இம்முறை கொலை நிகழவில்லை. ஆனால், கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. நாயகனைக் கொலை செய்வதற்கான முயற்சி நடைபெறுகிறது. நாயகன் அதிலிருந்து தப்பித்து அங்கேயே அப்போதே குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனையும் வழங்கி விடுகிறார். அவர் வழங்கும் தீர்ப்பு சாதி விலக்கல்.

குற்றம் இழைத்தவர்கள் அரசின் நீதி பரிபாலன அங்கங்கள் முன் நிறுத்தப்படுவது தவிர்க்கப்படுகிறது. அவர்கள் (அனேகமாக ஒருவர் பிற ஆதிக்க சாதியினராக இருக்கலாம்) சொந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் சொந்த சாதிய வழமைக்கு உட்பட்ட நீதியே வழங்கப்படுகிறது. ஊரின் பெரிய “தலைக்கட்டின்” ஒரே வாரிசு அவர்களோடு முற்றாக தொடர்பைத் துண்டித்துக் கொள்வதாக கூறப்படுகிறது. அவர் விலக்கி வைப்பது என்பது சாதி விலக்கம். சுய சாதி நீதியாக தண்டனை வழங்கப்படுகிறது.

இங்கு நீதி என்பது பழிவாங்குதல்தான் என்றாலும், அது சுய சாதிக்கு கேடு விளைவித்து விடாத, ஒட்டுமொத்த சமூகத்துடனான உறவில் தனது சாதியின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்கிற நீதியாக வழங்கப்படுகிறது.

Sundarapandiyan_2

இரண்டாவது கொலை, தற்செயலானது அல்லது திட்டமிடப்படாதது. கோபத்தில் நிகழும் கைக்கலப்பில் பேருந்தில் இருந்து தள்ளப்பட்டு பிற சாதியைச் சேர்ந்த இளைஞர் கொல்லப்படுவதாக நிகழ்கிறது. கொலையைச் செய்தது யார் என்ற உண்மை திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளிலேயே பார்வையாளர்களுக்குத் தெரியவருகிறது. அதுவும் நாயகனின் நெருங்கிய நண்பன் – சொந்த சாதிக்காரன்.

சொந்த சாதியைச் சேர்ந்தவன் என்பதாலும் நண்பன் என்பதாலும் நாயகன் அந்த உண்மையை அரசின் நீதி பரிபாலன அங்கமான போலீசிடமிருந்தும், நீதிமன்றத்திடம் இருந்தும் கதைக் களனில் வரும் தன் சொந்த சாதியினரிடம் இருந்துமே மறைத்து வைக்கிறார். ஆனால், கொலை செய்யப்பட்டவர் பிற சாதினரைச் சேர்ந்தவர் (தெலுங்கு பேசும் சாதியினர்) என்பதாலும், குற்றமிழைத்தவர் சொந்த சாதியைச் சேர்ந்தவராக இருப்பதாலும் நீதியை எவ்வாறு நிலை நாட்டுவது என்ற பிரச்சினை எழுகிறது.

இவ்விடத்திலும், அரசின் நீதி பரிபாலன அமைப்புகளிடம் முறையிடுவதாக கதைக் களன் நகரவில்லை. அதே நேரம், பழிவாங்குதல் என்பதாகவும் நீதி முன்னிறுத்தப்படுவதில்லை (எப்படி முடியும்! குற்றம் தன் பக்கம் இருக்கும்போது!) இரண்டு சாதியினரின் ”பெரிய தலைக்கட்டுகளுடன்” பேச்சுவார்த்தை - பஞ்சாயத்து நடக்கிறது. பாதிப்பிற்கு உள்ளான குடும்பத்தாருக்கு இழப்பீடு உறுதி செய்யப்படுகிறது. பிரச்சினை மேலும் வளராமல், பிற சாதியைச் சேர்ந்தவர்கள் நீதியைப் பழிவாங்கலாகத் தம் மீது பிரயோகம் செய்வது தடுக்கப்பட்டு, தமது சாதியினருக்கு இழப்புகள் நேர்ந்துவிடாமல் அரண் செய்யப்படுகிறது.

குற்றம் தன் சாதியின் தரப்பில் இருக்கும்போது வலியுறுத்தப்படுவது மறுசீரமைத்தல் வடிவிலான நீதி (restorative justice). ஆனால், அதுவும் முழுநிறைவான மறுசீரமைத்தல் அன்று.

மறுசீரமைத்தல் வடிவிலான நீதி என்பது, பாதிப்பிற்கு உள்ளான தரப்பிற்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில், அவர்கள் திருப்தி கொள்ளும் வகையில் இழப்பீடு செய்வதோடு நிறைவுபெற்றுவிடுவதில்லை. குற்றம் இழைத்தவர் தாம் இழைத்த குற்றத்திற்கு பொறுப்பேற்று தன்னை மறுசீரமைத்துக் கொள்வதற்கான வழிகளையும் முன்வைப்பதை உள்ளடக்கியது. மேலும், பாதிப்பிற்கு உள்ளான தரப்பே தனக்கான தகுந்த இழப்பீட்டைக் கோரும் முழு உரிமையை அங்கீகரிக்கும் வடிவிலான நீதி.

ஆனால், திரைப்படத்தில் பாதிப்பிற்கு உள்ளான (அந்த தனிக்குடும்பம் வாயடைத்துக் கிடக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க) தெலுங்கு பேசும் பிற சாதியைச் சேர்ந்தவர்களுக்கான இழப்பீட்டின் அளவையும் தன்மையையும் குற்றத்தை இழைத்த தேவர் சாதியைச் சேர்ந்தவரே முன்மொழிகிறார். தன் பலத்தையும் செல்வாக்கையும் நினைவுபடுத்தி, மேற்கொண்டு இரு தரப்பிலும் பாதிப்புகள் (தன் தரப்பிற்கு ஏற்படக்கூடாது என்பதுவே அவரது இலக்காக இருக்கிறது) நிகழக்கூடாது என்று அறிவுறுத்தி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான இழப்பீட்டை தானே நிர்ணயிக்கிறார். வேறு வழி இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

அடுத்து, குற்றத்தை இழைத்ததாகக் கருதப்படும் நாயகன் தன்னை திருத்திக் கொள்வது அதாவது மறுசீரமைத்துக் கொள்வது என்ற கேள்வியே எழுப்பப்டாமல் எளிதாகக் கடந்து சென்று விடுகிறார். குற்றத்தை இழைத்த நாயகனின் நண்பன் முற்றிலுமாக தப்பித்துக் கொள்கிறார். அதாவது, உண்மையான குற்றவாளி எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாது தப்பிக்க வைக்கப்படுகிறார். மொத்தத்தில் நீதி என்பது பழிவாங்கலாகவும் இல்லாமல் மறுசீரமைத்தலாகவும் இல்லாமல் அநீதியே நீதியாக வழங்கப்படுகிறது.

பிற சாதியினர் தன் சாதியின் வழமைக்குள் தலையிட்டால் பழிவாங்குதல் நீதி. தனது சாதிக்குள்ளேயே குற்றம் நிகழ்ந்தால் தனது சாதியின் ஒட்டு மொத்த நலனைக் கருத்தில் கொண்டு அளவான தண்டனையாக சாதி விலக்கம் செய்து வைத்தல். பிற சாதியினருடனான உறவில், தன் சாதியைச் சேர்ந்தவர் தரப்பில் குற்றம் இருந்தால், மறுசீரமைத்தல் என்ற வடிவிலான நீதியை – வடிவத்தில் மட்டும் எடுத்துக் கொண்டு, அளந்தெடுத்த வார்த்தைகளிலான மிரட்டலை விடுத்து சமச்சீரற்ற நீதியை – அநீதியைத் திணிப்பது.

சுந்தர பாண்டியன் தமிழ்ச் சமூகத்திற்கு கடைச் சரக்காக விரித்திருப்பது நட்பு என்ற போர்வையில் தேவர் சாதிப் பெருமையை மட்டுமன்று, தேவர் சாதி தனக்காக வகுத்துக் கொண்டிருக்கும் நீதியை.

தனது சாதியைத் தவிர்த்த பிற ஒட்டுமொத்த சமூகக் குழுமங்களுக்கும் அது வழங்குவது அநீதியை.

- வளர்மதி (http://vinaiyaanathogai.wordpress.com/)

Pin It